Thursday, January 31, 2019

புத்தர் சிலையுடைப்பு - வெடிபொருள் மீட்பு சந்தேக நபர்களை ஆஜர் படுத்திய பொலிஸார், தீவிரவாதத்திற்கான ஆரம்பம் என்கின்றனர். .

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் படிமுறைகள் அடங்கிய முக்கிய ஆவணமொன்று மீட்கப்ப்ட்டுள்ளது. புத்தளம், வணாத்துவில்லு – லக்டோ ஹவுஸ் தென்னந்தோப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டு எவ்வாறு இந்த குண்டுகளைத் தயாரிக்கலாமெனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணாவுக்கு அறிவித்தது. நேற்றைய தினம் குறித்தவழக்கு விசாரணைக்கு வந்தபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 2 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க, வணாத்துவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், இரசாயனங்களை நீதிமன்றில் ஒப்படைத்து இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது நீதிவான் முன்னிலையில் விசாரணைகளின் நிலைமையை அறிவித்த கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன, இந்த சிலை உடைப்பு விவகாரம் இன, மதவாதத்தை தூண்டி இலங்கையில் மற்றொரு யுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் ஆரம்பம் என்பது விசாரணைகளில் தெளிவாவதாகக் கூறினார்.

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி.யால் வணாத்துவில்லுவில் வைத்து கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்கள் தவிர ஏனைய 11 பேரும் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். விசாரணையாளர்கள் சார்பில் கேகாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓ.பி. அமரபந்து, தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன, மாவனெல்லை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள உள்ளிட்டோரும் சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் டயஸும் ஆஜராகினர்.

சந்தேக நபர்கள் சார்பில், வெளி மாவட்டம் ஒன்றிலிருந்து வருகைதந்த சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்த நிலையில், மாவனெல்லை நீதிமன்றில் கடமையாற்றும் அனைத்து சட்டத்தரணிகளும் (நேற்று மன்றில் இருந்தோர்) விசாரணையாளர்களுக்கு கூடுதல் பலமாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜராவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் முதலில் கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அபேரத்ன, உதவிப் பொலிஸ் பரிசோதகரின் நெறிப்படுத்தலில் மேலதிக விசாரணை நிலைமைகளை தெளிவுபடுத்தினார். அதன்படி, கேகாலை தீர்க்கப்படாத குற்றவிசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட சான்றுகள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

‘ கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இவ்வழக்கின் 10 ஆவது சந்தேக நபரான மொஹமட் இப்ராஹீம் என்பவரின் (இப்ராஹீம் மெளலவி) பொறுப்பிலிருந்த, சிலை உடைப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் அவரிடமிருந்து ஹுவாவி ரக தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டது. அவை கைப்பற்றப்பட்ட வீட்டுச் சோதனையின் போது சிக்கிய வெடிமருந்தென சந்தேகிக்கப்படும் தூள், அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப அனுமதி கோருகின்றோம். (அனுமதி வழங்கப்பட்டது). அதேநேரம் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட எயார் ரைபிள் தொடர்பில் மேலதிக விசாரணை நடக்கின்றது. இந்நிலையில் இன்று முதல் இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை நாம் பூரணமாக சி.ஐ.டி.யிஒடம் ஒப்படைக்கின்றோம் என்றார்.

இதனையடுத்து சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க மன்றுக்கு விசாரணை நிலமையை விளக்கினார்.

“இதுவரை நாம், இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் மாவனெல்லை, கேகாலை பொலிஸாருக்கு உதவியாகவே விசாரணைகளை முன்னெடுத்தோம். இன்று முதல் குற்றவியல் சட்டக் கோவையின் 125 ஆம் அத்தியாயத்துக்கமைய அந்த விசாரணைகளை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கின்றோம்.

முதலில் நாம் இந்த விவகாரத்தில் தற்போதும் தேடபப்டும் பிரதான சந்தேக நபர்கள் இருவரை (சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா) தேடி விசாரித்தோம். இதன்போது சி.ஐ.டி.யினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வணாத்துவில்லு பொலிஸ் பிரிவின் லக்டோ ஹவுஸ் எனும் இடத்தில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள்ளிருந்து நாம் பெருமளவு வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றுடன் 4 சந்தேக நபர்களைக் கைது செய்தோம்.

அந்த இடம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு இடம் என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது நாம் நைட்ரேட், சிட்றிக் அமிலம், டெடனேட்டர்கள் என பல அடையாளம் காணப்பட்ட பொருட்களை மீட்டோம்.

(மீட்கப்ப்ட்ட அத்தனை பொருட்கள்யும் சி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் டயஸினால் தனியான ஜீப் வண்டியில் நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன், அதன் மாதிரிகள் சிறு பெட்டியொன்றில் அடைக்கப்பட்டு நீதிவானிடம் முன்வைக்கப்பட்டது)

வணாத்துவில்லுவில் நான்கு சந்தேக நபர்களையும் வெடிபொருட்களுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6(1) ஆம் ஷரத்தின் கீழ் கைது செய்ததுடன், அவர்களுக்கு எதிராக அச்சட்டத்தின் 9(1) ஆம் ஷரத்தின் கீழ் தடுப்புக்காவல் அனுமதி பெற்று விசாரித்து வருகின்றோம்.

இதில் இந்த சிலை உடைப்பு விவகாரமானது, இலங்கை முழுவதுமுள்ள புத்திசாலித்தனம் மற்றும் திறமைமிக்க இளைஞர்களை இணைத்து திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தற்சமயம் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றோம்.

எமது தடுப்பிலுள்ள நான்கு சந்தேக நபர்கள் உட்பட பலரின் ( சி.ஐ.டி. பொறுப்பிலுள்ள நால்வருடன், 9,10,11 ஆம் சந்தேக நபர்களின்) வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, அதற்கான அனுமதியையும் அவர்களது தொலைபேசி அழைப்புக்கள் குறித்த பகுப்பாய்வுக்கான அனுமதியையும் வழங்குமாறு கோருகின்றோம். (அனுமதி வழங்கப்பட்டது).

அதன்படி இவ்வழக்கில் வழக்குப் பொருட்களாக 40 பொருட்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவை தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெறவும், டெடனேட்டர் தொடர்பில் மட்டும் அதனை அழிக்க கேகாலை அதிரடிப்படை கட்டளைத் தளபதிக்கு உத்தரவிடுமாறும் குற்றவியல் சட்டத்தின் 124 ஆம் அத்தியாயத்துக்கு அமையக் கோருகின்றோம் (உத்தரவளிக்கப்பட்டது).

இந்த விவகாரத்தில் நாம் முன்னெடுக்கும் விசாரணைகளில் தற்போது எமது தடுப்பிலுள்ள 12 ஆவது சந்தேக நபரிடமிருந்து ஓர் ஆவணத்தை நாம் மீட்டுள்ளோம். அந்த ஆவணத்தில் லக்டோ ஹவுஸ் தோட்டத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள், இரசாயனங்களைக் கொண்டு எவ்வாறு குண்டொன்றினை உருவாக்குவது, தயாரிப்பது என்பது குறித்த பூரண வழிகாட்டல் குறிப்புக்கள் இருக்கின்றன. அதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடக்கின்றன” என்றார்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, “இங்கு கூண்டிலுள்ள சந்தேக நபர்கள் எவரும் இக்குற்றத்துடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் சமய வகுப்புக்களுக்கு சென்றமை உண்மை. தற்போது தேடபப்டும் சந்தேக நபர்கள் இருவரின் சமய வகுப்புக்களில் கலந்துகொண்டமை எனும் ஒரே காரணத்துக்காக அவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.

எனவே, தேடபப்டும் இருவரையும் விரைவில் கைது செய்து, இங்குள்ளவர்கள் நிரபராதிகள் என்பதை வெளிப்படுத்தவும். எயார் ரைபிள்களை பயன்படுத்தவோ வைத்திருக்கவோ அனுமதி தேவையில்லை. எனவே அதனை உடன் வைத்திருந்தமை குற்றமாகாது” என கூறினார்.

சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க சி.ஐ.டி. கடும் எதிர்ப்பு வெளியிட்டது.

சந்தேக நபர்களின் சட்டத்தரணி முன்வைத்த கருத்துக்களை பொலிசார் மறுத்தனர்.

சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்கவும், கேகாலை தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்னவும் மாறி மாறி அச்சட்டத்தரணியின் வாதத்துக்கு எதிரான விசாரணைத் தகவல்களை முன்வைத்தனர்.

“சந்தேக நபர்களிடம் 7 எயார் ரைபிள் ரக துப்பாக்கிகள் இருந்துள்ளன. அவற்றில் நான்கே வணாத்துவில்லுவில் வைத்து கைப்பற்றப்பட்டன. மற்ற ஒன்று 10 ஆவது சந்தேக நபரின் பொறுப்பிலிருந்து சிக்கியது. இன்னும் இரு எயார் ரைபிள்கள் தேடப்படும் சந்தேக நபர்களின் பொறுப்பிலிருக்க வேண்டுமென நம்புகின்றோம்.

இவர்கள் சமய வகுப்புக்களில் கலந்துகொள்ளவில்லை. இது திட்டமிட்ட ஒரு குழு. இவர்களில் இருவர் வீதம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புத்தர் சிலைகள், உருவச் சிலைகளை தகர்க்க நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நோக்கம் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இன, மத மோதல்களை உருவாக்குவது மட்டுமே. இவை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வணாத்துவில்லு தோட்டம் பயிற்சி நிலையமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எயார் ரைபிள்களை பயன்படுத்த அனுமதி தேவை இல்லை. எனினும் இங்கு தெளிவாக அவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தெல்கஹகொட பள்ளிவாசல் செயலாளர் உள்ளிட்ட மூவரின் வாக்குமூலங்களில் மிகத் தெளிவாக 10 ஆவது சந்தேக நபர் தொடர்பில் கூறியுள்ளனர். இன, மத முறுகலை தூண்டி, இலங்கையில் யுத்தமொன்றினை பிரகடனம் செய்யும் வகையில் அவரது போதனைகள் இருந்ததாக அவ்வாக்குமூலங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்கள் சமய வகுப்புக்கள் எனக் கூறும் அந்த வகுப்புக்களில் தான், ரீ 56 ரக துப்பாக்கிகள் கழற்றி , பூட்டி எவ்வாறு பயன்படுத்துவது என்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எயார் ரைபிள்கள், இலக்குகள் தொடர்பில் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

10 ஆவது சந்தேக நபரின் வீட்டிலிருந்து, இக்குழு தொடர்புகொள்ளப் பயன்படுத்திய வோக்கி டோக்கிகள் இரண்டு மீட்கப்பட்ட நிலையில் அதுகுறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த திட்டமிட்ட குழு எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த திட்டம் தீட்டியவர்கள். இங்குள்ள ஒவ்வொரு சந்தேக நபர்களுக்கும் ஒவ்வொரு புனை பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனூடாகவே அவர்களுக்குள் தொடர்பாடல்கள் இடம்பெற்றுள்ளன” என்றனர்.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் உபுல் ராஜகருணா, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அவர்களை எதிர்வரும் பெப்ரவரி 13 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் அன்றைய தினம் 90 நாள் காவலிலுள்ள நான்கு சந்தேக நபர்களையும் மேற்பார்வைக்காக மன்றில் ஆஜர்படுத்தவும் உத்தர்விட்டார்.

( மாவனெல்லை நீதிமன்றிலிருந்து MFM பஸீர்).

Read more...

மண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.

மண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் கசிப்பு , கஞ்சா , சட்டவிரோ மதுபாணம் மற்றும் போதைப் பொருட்களை விற்றுவருதாகவும், இதற்கு கிராம மக்கள் பெரும் எதிர்ப்பினை காண்பிக்கின்றபோதும் அவர்களால் அவ்வியாபாரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை எனத் தெரியவருகின்றது.

இவ்வாறு கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அவளால் வியாபாத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடிவதற்கான காரணம், மண்டுர் கோட்டைமுனை கிராம உத்தியோகித்தர் ஆனந்தன் என்பவன் வசந்தி என்பவளுக்கு தொடர்ந்து ஒத்தாசை புரிந்துவருவதே என மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இவ்விடயம் தொடர்பில் பிரதேச நலன்விரும்பிகள் தொடர்ச்சியாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களுடாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தங்களது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வருகின்றனர்.

மேற்படி சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தினால் கிராமத்திலுள்ள பல இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கிராமத்தின் ஒழுக்க மற்றும் சமூகக்கட்டமைப்புகள் தொடர்பாக அக்கறையுடன் செயற்படவேண்டிய கிராம சேவை உத்தியோகித்தர் சட்டவிரோ செயற்பாட்டுக்கு பொறுப்புணர்சியற்று உதவுகின்றார் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும் மாவட்ட செயலாளர் உதயகுமார் குறித்த கிராம சேவை உத்தியோகித்தருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் வசந்திக்கு எதிராகவும் மாவட்ட செயலர் உதயகுமார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தி நிற்கின்றனர்.

Read more...

கோட்டாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு, பெப்ரவரியில் - மேல் நீதிமன்றம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிக்கு எதிரான வழக்கை, விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான தீர்ப்பை, எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி அறிவிக்க கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிர்க்கி எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தலைமை நீதிபதி சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த வழக்கை விசாரிக்க கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று, பிரதிவாதிகள் தரப்பில் எதிர்ப்பு வாதங்கள் வௌியிடப்பட்டன.

இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இரண்டு தரப்பும் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை கருத்தில் கொண்டு, பெப்ரவரி 11ம் திகதி விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான தீர்ப்பை மேல்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

Read more...

கல்முனை நீதிமன்றினால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உட்பட பொருட்கள் 2ம் திகதி ஏல விற்பனையில்..

நீதிமன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவையும், உரிமை கோரப்படாதவையுமான ஒரு தொகை பொருட்கள் எதிர்வரும் 02 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

இப்பொருட்கள் தொடர்பான விபரக் கோவை நீதிமன்ற அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கு உரிமை கோருபவர்கள் எவராவது இருந்தால் ஏல விற்பனை தொடங்குவதற்கு முன்னர் அவர்களின் உரிமை கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்முனை நீதிவான் ஐ.என். ரிஸ்வான் கோரியுள்ளார்.

ஏல விற்பனை தொடங்குவதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னதாக நீதிமன்ற பதிவாளரின் அனுமதியுடன் பொதுமக்கள் எவரேனும் பொருட்களை பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொருட்களை விலை வைத்து வாங்குவோர் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் உடனடியாக பணத்தை செலுத்தி உரிய பொருட்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளார்கள்.

சகல கொடுப்பனவுகளும் பணமாகவே செலுத்தப்பட வேண்டும் என்றும் காசோலைகள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என்றும் விலைகள் ஒவ்வாத பட்சத்தில் எந்த பொருளையும் விற்பனையில் இருந்து மீள பெற நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்றும் அறிய தரப்பட்டு உள்ளது.

14 வழக்குகளோடு சம்பந்தப்பட்டு பகிரங்க ஏல விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இப்பொருட்களில் கையடக்க தொலைபேசி, சைக்கிள்கள், தங்க நகைகள் ஆகியனவும் அடங்குகின்றன.

(எஸ்.அஷ்ரப்கான்).

Read more...

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இவ்வாண்டில் கையெழுத்தாகும்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் உள்ள இலங்கையின் தூதரகத்தை மேற்கோளிட்டு China Daily இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதரகத்தின் தகவலின் படி, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை உருவாக்கும் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகள் 2017 மார்ச் மாதம் முடிவடைந்து விட்டன.

இந்த நிலையில் உடன்படிக்கை இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீன சந்தையில் அதன் ஏற்றுமதிகளை விரிவுபடுத்த மிகவும் ஆர்வமாக இலங்கை உள்ளது என, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்தார்.

அத்துடன் சீனாவின் சர்வதேச இறக்குமதியாளர் எக்ஸ்போ சீன சந்தையில் நுழைவதற்கு, அதன் தயாரிப்புகளுக்கான ஒரு முக்கியமான தளமாக இலங்கை கருதுகிறது என்றும், எக்ஸ்போ மூலம் நாட்டிற்கு அதிக வாய்ப்புகளை கொண்டு வரும் எனவும் அவர் கூறினார்.

Read more...

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக, மண்டையன் குழுத் தலைவர் நீலிக்கண்ணீர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக, தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரென, வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வெள்ளவத்தை பகுதிகளிலும் வீடுகளில் உள்ளோரின் தகவல்களை பொலிஸார் சேகரித்த போது அதற்கு அமைச்சர் மனோகணேசன் எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸார் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என கோரியதை அடுத்து, அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

எனினும் தற்போது கோப்பாய் பொலிஸாரினால் பொது மக்களின் குடும்ப உறவினர்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டு வருகின்றன. அவ்வாறு தகவல்களை கோருவதற்கான காரணங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்ச நிலைமையை போக்க முடியும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் வடக்கிலே கொலை, கொள்ளை, கற்பழிப்புக்க இடம்பெற்று வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோர் பொலிஸாரின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்துவதன் ஊடாக சமூக விரோதிகளை ஊக்குவித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நிற்கின்றனர்.

Read more...

ஆயுர்வேத வைத்தியம் என்ற பெயரில் விபச்சாரம். திருமைலையில் இளைஞர்கள் எதிர்ப்பார்பாட்டம்

திருகோணமலையில் தமிழர் கிராமத்தை காப்பாற்ற தற்போது தமிழ் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் பண்பாடு கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் அளவு பணம் படைத்த வர்க்கத்தினால் உடற்பிடிப்பு நிலையம் எனப்படும் ஆயுள்வேத மசாச் நிலையங்கள் எனும் பெயரில் அலஸ்தோட்டமும் அதை சூழவுள்ள கடற்கரை கிராமங்களில் இயங்கி வருகின்றது.

இதன் மூலம் பல விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. இதை இப்படியே பார்த்துக் கொண்டிருப்பதால் தமது கிராமத்தின் பண்பாடு கலாச்சாரத்தை மற்றையவர் எள்ளி நகையாட வேண்டி வரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

இன்று விடுமுறை நாள் இல்லாத போதும், ஆதங்கத்துடன் தமது கடமைகளை புறக்கணித்து கிராமத்தை காப்பாற்ற, ஆர்ப்பாட்டத்தில் தமிழின பற்று இளைஞர் அமைப்புகள்,மகளிர் அமைப்புகள்,பாடசாலை மாணவர்கள்,விளையாட்டு கழகங்கள்,ஆலய தலைவர்கள் ,இராவண சேனைஅமைப்புகள் என்பன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ் கிராமம் ஒன்றில் புதிதாக மாற்றினத்தவர் குடியேறி காணிகளை அபகரித்தால் தான் ஒரு கிராமம் பறிபோகிறது என யோசிக்கலாம்.

ஆனால் உண்மையிலே காணிகளை பிடிப்பதை விட ஒரு இனத்தின் பண்பாட்டை ,கலாச்சாரம் ,சமூக கட்டமைப்பை சீர்குலைத்தாலே போதும் ஒரு தமிழர் ஊர் பறிபோகின்றது என கருதலாம்.

இப்படி கைங்கரியான செயற்பாடுகள் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட அலஸ்தோட்டம் எனும் அழகிய கடற்கரை கிராமத்தில் பதிவாகி வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது...

“இன்றைய உடல் பிடிப்பு நிலையம், நாளைய எயிட்ஸ் போன்ற பாலியல் நோயின் ஆரம்பம்”

சட்டவிரோத,சட்டபூர்வமான உடல்பிடிப்பு நிலையங்கள் எமது அலஸ்தோட்ட கிராமத்திற்கு தேவையா???

உடல்பிடிப்பு நிலையங்களால் அலஸ்தோட்டத்தில் தமிழின கலாச்சார சீரழிவு இடம்பெறுவது உப்புவெளி பிரதேச சபை கண்களுக்கு தெரியவில்லையா?,?

உங்களுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் கிராமமா கிடைத்தது???

''உப்புவெளி பிரதேச சபையே எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்று. உடல் பிடிப்பு நிலையம் எமக்கு வேண்டாம்'',என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Read more...

நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு, எதிராக மேன்முறையீடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான படைபுலனாய்வு பிரிவினரை காப்பாற்ற இலங்கை அரசாங்கம் தீவிரமாக முயற்ச்சித்து வருவதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான படை புலனாய்வு பிரிவினரை விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து, ரவிராஜின் மனைவியால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று நீதிபதிகளான, தீபாலி விஜேசுந்தர, அச்சல வெங்கபுலி ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டிஆராச்சி சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், சட்டத்தரணி ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்கு தனக்கு 2 மாதங்கள் கால அவகாசம் பெற்றுத்தர வேண்டுமென, பிரதிவாதியான பிரசாத் நீதிமன்றில் தெரியப்படுத்தினார்.

இதற்கமைய மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி எடுப்பதற்கு திகதி குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை ரவிராஜ் கொலை வழக்குக்கு அமைய, பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை ஜூரி சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்தமை சட்டத்துக்கு மாறான செயலென நடராஜா ரவிராஜின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுபரிசீலனை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த வழக்கின் பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்றத்தின் ஜூரி சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்து விடுதலை செய்யப்பட்டவர்களை குற்றவாளிகளாக அறிவிக்குமாறு, மனுதாரரான கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியான சஷிகலா ரவிராஜினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு மட்டும் மாதமொன்றுக்கு வழங்கிய கொடுப்பனவு!

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவைத் தலைவர், பிரதி அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்காக மாதமொன்றிற்கு சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் அடங்கலாக சுமார் 34 இலட்சத்து 898 ரூபாய் மாதமொன்றுக்கு செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக வடக்கு மாகாண பேரவை செயலகத்திடமிருந்து இது குறித்த தகவலை வழங்கியுள்ளது. எனினும் முதலமைச்சர் உள்ளடங்கலாக அமைச்சர் வாரியத்தில் அங்கம் வகித்த 5 உறுப்பினர்களின் சம்பள விபரங்களை வெளியிட மாகாண பேரவைச் செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் அமைச்சுக்கள் ஊடாகவே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாக தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண அவைத் தலைவருக்கான சம்பள கொடுப்பனவாக 63 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.

அவைத் தலைவருக்கான உபசரணை கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாயும், எரிபொருள் கொடுப்பனவாக 10 ஆயிரத்து 1 ரூபாவும், வாடகைப் பணமாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவைத் தலைவருக்கு மாதமொன்றிற்கு ஒரு இலட்சத்து 501 ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.

வடக்கு மாகாண பிரதி அவைத் தலைவரின் மாதச் சம்பளமாக 31 ஆயிரத்து 750 ரூபாவும், உபசரனை படியாக ஆயிரம் ரூபாவும் எரிபொருள் படியாக 4 ஆயிரத்து ஒரு ரூபாவும் வழங்கப்பட்டது.

அதேபோன்று எதிர்க்கட்சி தலைவரது மாதச் சம்பளமாக 31 ஆயிரத்து 750 ரூபாயும், உபசரணை படியாக ஆயிரம் ரூபாயும், வாகனப் படியாக 40 ஆயிரம் ரூபாயும் எரிபொருள் படியாக 3 ஆயிரத்து ஒரு ரூபாயும் செலவு செய்யப்பட்டது.

உறுப்பினர்களது மாதச் சம்பளமாக 27 ஆயிரத்து 145 ரூபாயும், அவர்களது உபசரணைக்காக 500 ரூபாவும், வாகனப் படியாக 18 ஆயிரம் ரூபாயும், தொலைப்பேசி படியாக 25 ஆயிரம் ரூபாயும், அலுவலகபடியாக 50 ஆயிரம் ரூபாயும், எரிபொருள்படியாக 10 ஆயிரம் ரூபாயும், சாரதிப்படியாக 3 ஆயிரத்து 750 ரூபாயும், குழு கூட்டப்படி ஒன்றுக்கானது ஆயிரத்து 250 ரூபாயும், காகிதப்படி ஆயிரத்து 250 ரூபாயுமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மாகாண சபையின் அமர்வொன்றிக்கு 38 உறுப்பினர்களுக்குமாக 47 ஆயிரத்து 500 ரூபாயும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 16 உறுப்பினர்களின் பிரயாணப் படியாக ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாயும், வன்னித் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களின் பிரயாணப்படியாக ஒருவருக்கு 7 ஆயிரம் ரூபாய் வீதம் 98 ஆயிரம் ரூபாயும் செலவளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நால்வரது சம்பளக் கொடுப்பனவு, சபை அமர்வுக்கு வருகைக்கான கொடுப்பனவு என்பன தொடர்பாகவும் தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக மாகாண பேரவைச் செயலகத்திடம் கோரப்பட்டது.

எனினும் முதலமைச்சர், அமைச்சர்களது தகவல்களினை வழங்குவதற்கு வடக்கு மாகாண பேரவைச் செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Read more...

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகல்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான மனு மீதான விசாரணையிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணத்தினால் அவ் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமருக்கு எதிரான வழக்கு விசாரணைகளிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளதால்,அந்த இடத்திற்கு வேறொரு நீதிபதிகள் குழாம் முன்னின்று இந்த வலக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதனால், அவரால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தெரிவித்து, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல, பிரதமருக்கு எதிரான மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை சார்ஜன்ட கைது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் சிறைச்சாலையினுள் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்டபோது, வாயிலிலுள்ள சிறைக்காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சார்ஜன்ட் மீது சந்தேகம் கொண்ட வாயில் காவலர்கள் மேற்கொண்ட உடல் பரிசோதனையின்போது, 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சார்ஜன்டின் பொருட்கள் உள்ள பெட்டியை சிறைச்சாலை அலுவலகத்தில் சோதனை செய்த அதிகாரிகள் 85 ரூபா பணத்தையும் 2 தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சார்ஜன்ட பொரளை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்துரைத்துள்ள சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரல : இவ்வாறு சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களது பதவி நிலைகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையினுள் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதுடன் நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்கள் சிறைச்சாலையினுள் இருந்தவாறே இயக்கப்படுகின்றது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறான சட்டவிரோத செயல்கள் சிறைச்சாலை உத்தியோகித்தர்களின் பூணர ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் பலத்துவரும் நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

Read more...

கிளிநொச்சியில், போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக, உளநல மருத்துவர் ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில், விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று விசேட இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே, உளநல மருத்துவர் ஜெயராஜா இதனை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்புறப் பாடசாலைகள் சிலவற்றிற்கு அண்மையில் போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

சில மாணவர்கள் வகுப்பறையிலேயே போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றமையும் தெரிய வந்துள்ளது.

கஞ்சா மற்றும் ஏனைய போதையை ஏற்படுத்தம் ஒரு வகையான பாக்கு போன்றவற்றின் பாவனையும் மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளும் மௌனமாகவே உள்ளனர். மாணவர்கள் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டால், பல்கலைக்கழ அனுமதியில் பாரிய தாக்கம் ஏற்படும். எனவே மாணவர்கள் இவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என உளநல மருத்துவர் ஜெயராஜா மேலும் குறிப்பிட்டார்.

Read more...

தேசிய தினத்தில் வழங்கப்படும் பொது மன்னிப்பில் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்வதாக அத்துரலிய ரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் ஞானசார தேரரை, எதிர்வரும் தேசிய தினத்தன்று ஜனாதிபதியினால் வழங்கப்படும் சிறைக் கைதிகளுக்கான பொது மன்னிப்பின் போது இணைத்துக் கொள்ளுமாறும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ௮ ம் திகதி
தீர்ப்பு அளித்திருந்தது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட ன.

இந்தக் குற்றச்சாட்டுகளிற்கு அமைய 19 வருட கால சிறைத்தண்டனையை விதித்த நீதிமன்றம், அதனை 6 வருடங்களில் கழிக்க வேண்டுமென நிபந்தனையளித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்குள் அத்துமீறி பிரவேசித்தமை, நீதிமன்ற செயற்பாடுகளில் முறையற்ற ரீதியில் தலையீடு செய்தமை, முறைப்பாட்டை வழிநடத்திய அரச சிரேஷ்ட சட்டத்தரணியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Read more...

தகுதியில்லாதவருக்கு நியமனம் - தொடரும் சுங்க அதிகாரிகள் போராட்டம்

இலங்கை சுங்கப் பிரிவின் மேற்கொண்டிருந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக இலங்கை சுங்க சேவையிலே அல்லது அரச நிர்வாக சேவை தகுதியோ இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை மாற்றும் வரையில் தொடர்ந்து பேராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் விபுல மினுவன்பிட்டிய மேலும் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான பொதிசேவை மற்றும் ஏற்றுமதி சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளில் இருந்தும் சுங்க ஊழியர்கள் விலகியுள்ளனர்.

ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமால் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Read more...

அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கை பெப்ரவரியில்.

எழும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்படும் காபன் பரிசோதனை அறிக்கை, பெப்ரவரி மாதம் 3ஆம் வாரமளவில் மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காணமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் சதொச வளாகத்தன் புதை குழியில் இருந்து அண்மையில் மீட்டேடுத்த 6 மனித எச்சங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த மனித எச்சங்களின் மாதிரிகள் கதிரியக்க காபன் பரிசோதனை ஊடாக கால நிர்ணயம் செய்யப்படவுள்ளன. இந்த பண்களை அமெரிக்காவின் பீட்டா நிறுவனம் மேற்கொள்கின்றது.

பீட்டா வழங்கும் அறிக்கையின் பிரகாரம் குறித்த மனிதப் படுகொலைகள் எந்த காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டவை என்பதை அறிய முடியுமென அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 300 மனித எச்சங்கள் மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 27 எச்சங்கள் சிறுவர்களின் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்றும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நாட்டின் அரசியல் கொள்கை அடிக்கடி மாற்றமடைவது கவலைக்குரியது - சபாநாயகர்

புதிதாகப் பிறக்கும் சந்ததிகளும் தவறான அரசியல் கொள்கை மற்றும் அரசியல் தீர்வுகளின் பாதிப்புக்களைச் சந்திக்க நேர்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஆதங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தேசிய வர்த்தக சபையின் 60 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது சபாநாயர் மேற்படி தெரிவித்தார்.

சரியான தொலைநோக்குடன் நாட்டைச் சரியான பாதையில் இட்டுச் செல்லவேண்டிய காலம், தோன்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் கொள்கை அடிக்கடி மாற்றமடைவது கவலைக்குரிய விடயமாகும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஒரு பொதுவான இணக்கப்பாடு எங்களிடம் இல்லை என்றும் சபாநாயகர் இதன்போது கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, நாட்டின் பூகோள அமைவையும், மனித வளங்களையும் சரியாக இனங்கண்டு செயற்படுவது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமாகும் என குறிப்பிட்டார். அரசியல் கொள்கைகளை வகுக்கும் போது மனித வளங்களை மேம்படுத்துவதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதன் போது வலியுறுத்தினார்.

Read more...

கடல் பயணங்களை மேற்கொள்வோர் கவனம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண கடற்பரப்புகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை வேகத்திலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையும் காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உருவாகும் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் அதேநேரம் கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

ஆகவே கடலில் பயணம் செய்வோரும் மீன் பிடித் தொழில் ஈடுபடுவோரும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.


Read more...

யோஷித ராஜபக்ஷவின் வழக்கை 29 ஆம் திகதிக்கு விசாரிக்க தீர்மானம்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டியான டேசி போரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை கல்கிஸ்ஸ பிரதான நீதவான் மொஹமட் மிஹால் பிற்போட்டுளார். தெஹிவளை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக வழக்கு நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை எப்.சி.ஐ.டி. பிரிவினர் தாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றைய விசாரணையின்போது மன்றில் யோஷித ராஜபக்ஷ மற்றும் டேசி போரஸ்ட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன்போது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், மிலேனியம் சிட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சந்தேகநபர்களின் பெயரில் இருந்த கூட்டுக்கணக்கு சம்பந்தமாக அதன் பணிப்பாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும், அது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மே மாதம் 29ம் திகதிக்கு விசாரிக்க கல்கிஸ்ஸ பிரதான நீதவான மொஹமட் மிஹால் உத்தரவு பிறப்பித்தார்.


Read more...

பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நொச்சியாகம, ஜயகம நீர்விநியோக செயற் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெரிய வெங்காய செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்யும் பெரிய வெங்காய இறக்குமதிக்கு தடை வித்திப்பதன் ஊடாக விவசாயிகள் பாரிய அளவில் வெங்காய செய்கையில் ஈடுபவர்கள் என்றும் அவர் கூறினார். இதனால் பெரிய வெங்காய விவசாயிகள் நன்மை அடைவார்கள்.

அத்துடன், பாசிப்பயறு, கௌபி போன்ற ஏனைய தானியங்களை இறக்குமதி செய்வதற்கும் எதிர்காலத்தில் வரையறை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் பி.ஹரிசன் இதன் போது குறிப்பிட்டார். இதனிடையே பெரிய வெங்காய செய்கையிலிருந்து விவசாயிகள் விலகும் நிலை உருவாகியுள்ளதாக கடந்த வருடத்தில் வியசாயிகள் கவலை தெரிவித்திருந்தார்கள். அப்போது பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலை வழங்கப்படவில்லை என்று குறித்த விவசாயிகள் கவலை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

வரட்சி மற்றும் மழையுடனான வானிலை, பெரிய வெங்காய இறக்குமதி, செய்கைக்கான செலவு ஆகிய காரணிகளால் விவசாயிகள் பெரும் சிரமத்தை பருவம் தோறும் எதிர்கொள்கின்றார்கள். அத்துடன் கடந்த போகத்தில் செய்கையிடப்பட்ட பெரிய வெங்காயத்தின் தொகை, இரு மடங்காக குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தமையும் நினைவு கூறத்தக்கது. ஆகவே பெரிய வெங்காய செய்கையுடன் தொடர்புபட்ட காரணிகளில் விவசாய அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

Read more...

எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து கழிவகற்றல் திட்டமா? - புத்தளம் – அறுவைக்காடு மக்கள் கொந்தளிப்பு

புத்தளம் – அறுவைக்காடு பகுதி மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளபட்டு வந்த நிலமாக இருந்த நிலையில் குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவகற்றல் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். புத்தளம் அறுவைக்காடு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டித்து பலதரப்பட்ட வழிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன.

சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் அகற்றிய பின்னர் கைவிடப்பட்டுள்ள குழிகள் நிறைந்த பகுதியிலேயே புத்தளம் – அறுவைக்காடு காணியில் கழிவகற்றல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பகுதியை சூழவுள்ள சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் பல வருடங்களாக மக்கள் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மக்களது நலன் கருதி கடந்த
2015 ஆம் ஆண்டு குறித்த காணியில் இரண்டு ஏக்கர் வீதம் மர முந்திரிகை செய்கையில் ஈடுபட்ட மக்களுக்கு இந்த காணி பகிர்ந்தளிக்கப்பட்டு, காணிக்கான அனுமதிப்பத்திரம் அப்போதைய வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இந்த காணியை கழிவகற்றல் திட்டத்திற்காக தற்போதைய வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் வழங்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். அங்கிருந்த மரமுந்திரிகைகள் அழிக்கப்பட்டு தற்போது யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு மாத காலமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமது நிலை உள்ளதாக குறித்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக பல்வேறுபட்டவர்களுக்கு தெரிய படுத்தியும் அவர்கள் இன்னும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார். இதனிடையே மக்களின் ஆதரவோடு கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுப்போம் எனவும், பிற்காலத்தில் மக்களுக்கு இன்னல்கள் வருமாயின் மக்களின் நலனுக்கான பொறுப்பினை அமைச்சு ஏற்கும் எனுவும் பாட்டளி சம்பிக்க றணவக்கவின் பிரதானி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம், கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,
மக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள் என பலரும் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்ககளை முன்னெடுத்து இருந்தார்கள். பல்வேறுபட்டவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்ககளின் போது கொழும்பு குப்பை புத்தளத்துக்கு வேண்டாம், குப்பைகளால் சூழலை மாசுபடுத்தாதே, உயிர் கொல்லும் கொடிய நோய்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்போம் போன்ற பல்வேறுபட்ட வாசகங்களை மக்கள் முழங்கி இருந்தார்கள்.

Read more...

Wednesday, January 30, 2019

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விலங்கு மாட்டியது ஊழல் மோசடி பிரிவு.

கைது செய்து வைத்திருந்த லொறி ஒன்றை விடுவிப்பதற்காக 25000 ரூபாவை லஞ்சமாக பெற்றபோது, ஊழல் மோசடித் தடுப்பு பிரிவினரால் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சட்டவிரோ மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நேற்று கைது செய்யச் சென்ற பொலிஸார், மண் அகழும் மோசடிக்காரர்கள் தப்பியோடிய நிலையில் குறித்த லொறியினை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கெடுத்து சென்று தடுத்து வைத்திருந்தனர். லொறியை விடுவிப்பதற்காக உரிமையாளர் சென்றபோது, அதனை விடுவிப்பதற்காக 25000 பேரம்பேசிய பொறுப்பதிகாரி அதனை பெற்றுக்கொள்ளும்போது வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

இன்று மாலை 5.35 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த தொகை வழங்கப்பட்டபோது, பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொறுப்பதிகாரிக்கு விலங்கு மாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சவேந்திர சில்வா குறித்த அனைத்து பிரம்மிக்க வைக்கும் ஆவணங்களும் தற்போது கைவசம் உள்ளன - ஜஸ்மின் சூக்கா

பல்வேறு யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மக்களால் எதிர்க்கப்படும் ஒருவராவார். எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு, உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் தற்போது தெளிவாக உள்ளன.

இந்த ஆவணம் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

எனது குழுவினர் பல வருடங்களாகச் சேகரித்த பிரமிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவு ஆதாரங்கள்m இந்த ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரியாக சவேந்திர சில்வா தொடர்ந்தும் நீடிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை. எனவே சவேந்திர சில்வா உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என ஜஸ்மின் சூக்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும் ஒருவர் சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படும்வரை நிரபராதி என்று உலக சட்டம் சொல்கின்றது. இந்நிலையில் ஐ.நா வின் உண்மை மற்றும் நீதிக்கான பணிப்பாளர் குறிப்பிட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

சவேந்திர சில்வா மக்களால் வெறுக்கப்படுகின்றார் என்று ஐ.நா எழுந்தமானமாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலுள்ள 80 வீதத்திற்கு மேலான மக்களால் சவேந்திர சில்வா ஒரு யுத்த கதாநாயகனாக பார்க்கப்படுகின்ற நிலையே இலங்கையில் காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இலங்கையின் இராணுவக் கட்டமைப்பினுள் யாரை நியமிக்கவேண்டும் என்பது அந்த இராணுவத்தின் கடமை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஐ.நா விற்குள்ள உரிமை யாதென்ற கேள்வி இங்கு எழுகின்றது.

Read more...

கடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.

தமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றுக்குமே அரசாங்கம் வரி அறிவிக்கிறது. இவ்வாறு பெறப்படுகின்ற வரிகளில் இருந்தே அரசாங்கத்தை நடத்துகின்றோம்.

இலங்கையில் யாரிடமாவது என்ன வகையான தொழில் வேண்டும் என்று கேட்டால், அரச தொழில் வேண்டும் என்று தான் சொல்லுகின்றனர்.ஏனென்றால் வேலை செய்யத் தேவையில்லை .ஆனால் சம்பளம் கிடைக்கும்.

அரச பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும் போதே காலை 9.30 ஆகி விடுகிறது. அதன்பின்னர் மெதுவாக தேநீர் அருந்தி, பத்திரிகை பார்த்து,செய்ய வேண்டிய தனிப்பட்ட வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டுத் தான், 9.30 க்கு தத்தமது வேலைகளை அரச பணியாளர்கள் ஆரம்பிக்கின்றனர்.

வேலையை தொடங்கிய பிறகு அவர்களின் போனிலிருந்து ‘டொக் டொக்’ என்று சத்தம் வரும். உடனே அதனை எடுத்து ‘மேசேஜ்’ அனுப்பத் தொடங்குவர். பிறகு ‘ஃபேஸ்புக்’ பார்க்கத் தொடங்குவர்.

அரச சேவையாளர்கள் ஒரு மணி நேரமாவது ஒழுங்காக வேலை செய்கின்றார்களா? என்று நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நான் நினைக்கின்றேன், இரு மணிநேரம் கூட அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. வேலை செய்பவர்கள் கடமையை விட்டுச் செல்லும் வரை வேலை செய்கின்றனர். வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமலேயே ‘ஐஸ்’ அடித்துவிட்டுச் செல்கின்றனர்.

எனவே, யாராவது அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தினால் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகித்ததாக எனக்கு முறைப்பாடு கிடைத்தால், அவரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டுத் தான், அந்த அலுவலர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துவேன்.

இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே உங்களை நியமித்துள்ளோம். மக்களுக்கான சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே, எனது எதிர்பார்ப்பாகும், என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறினார்.

Read more...

மட்டக்களப்பில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்!

மட்டக்களப்பில் இன்றைய தினம், விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமே இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, எகெட் ஹரித்தாஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற ஒன்றியங்களின் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காணாமல் போனோருக்கான சங்கம்ம் பொதுமக்கள் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பயங்கரவாத எதிப்புச்சட்டம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், அது தொடர்பான நிலைமைகளை அறிந்து கொள்ளவும் அதற்கு எதிரான அழுத்தங்களை வழங்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தீர்வின்றி நீண்டு வரும் குளவிக் கொட்டு பிரச்சினை - இன்று ஒருவர் பலி.

தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவனும், மனைவியும் தங்களது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, அவர்களை குளவி கொட்டியுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட கணவனும், மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி சுப்பிரமணியம் என்ற 72 வயதானவரே, இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக மலையக பகுதிகளில் குளவி கொட்டுக்கு இலக்காகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன. எனினும் இந்த பிரச்சனைக்கு இதுவரை எந்தவித தீர்வையும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை.

இதேவேளை கடந்த தினத்தில், பண்டாரவளை - எல்ல - பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், குளவி கொட்டுக்கு இலக்கான 70 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், அருகிலுள்ள குளவி கூடொன்று கலைந்து, மாணவர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் தெமோதர மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இது போன்ற பல சம்பவங்கள், மலையக பகுதிகளில் அதிகமாக பரவி வருகின்றன. இந்த குளவிக் கொட்டால், அதிகமாக பெருந்தோட்ட தொழிலாளர்களே பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களுடன் சேர்த்து, பாடசாலை மாணவர்கள், வழிப்போக்கர்கள் என அனைவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
இந்த சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது, எமது வேண்டுகோளாகும்.

Read more...

ஏழாயிரம் லீற்றர் சட்டவிரோத எதனோல் கிளிநொச்சியில் அழிப்பு!

கிளிநொச்சியில், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சுமார் ஏழாயிரம் லீட்டர் எதனோல் அடங்கிய கொள்கலன்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதவானின் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக நீதிமன்றப் பதிவாளர் மற்றும் அதிரடிப் படையினர், பொலிஸார் , மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில், சுமார் 330 சட்டவிரோத எதனோல் கொள்கலன்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்கலன்கள் அனைத்தும் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வைத்து அழிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த 24ம் திகதி விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தவிருந்த 7000 ஆயிரம் லீற்றர் எதனோல் அடங்கிய சுமார் 330 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன.

இவற்றின் பெறுமதி இரண்டரைக் கோடி இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இக்குற்றச் செயலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த இருவரையும் 31ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே குறித்த எதனோல் அடங்கிய கொள்கலன்கள், இன்று அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read more...

கிண்ணியாவில் மேற்கொள்ளாட்ட கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு இராஜாங்க அமைச்சர் கண்டனம்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கடற்படையினர் மீதான தாக்குதலை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன வன்மையாக கண்டித்துள்ளார்.

மாலி தாக்குதலில் உயிரிழந்த இரு இராணுவ வீரர்களில் ஒருவர் பொலனறுவையை சேர்ந்தவராவார். அவரது பூதவுடல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி பொலனறுவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். அதனை தொடர்ந்து கிண்ணியா தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது. எனினும் தற்போது பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் தலையீட்டுடன் கிண்ணியாவில் இருந்த பதற்றம் தணிந்துள்ளது.

ஆனால், கடற்படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கே கடற்படையினர் அங்கு சென்றிருந்தனர். மாறாக பிரதேச மக்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கு அல்ல.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான தகவலையடுத்தே கடற்படையினர் அங்கு சென்றுள்ளனர். ஆனால், இருவர் அச்சத்தில் கடலுக்குள் பாய்ந்ததை தொடர்ந்தே, மக்களும் பதற்றமடைந்துள்ளனர்.

கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வின்போது அங்கு சென்ற கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த இருவர் அச்சத்தில் கடலில் குதித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாலியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் உடலத்தை தற்போது இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

அண்ணனையும்,தம்பியையும் மூட்டிவிட்ட குமார வெல்கம.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்து விடும் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் கோட்டாபய ராஜபக்ச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி மேல் இலங்கையின் ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியற்றவராகி விட்டார். பொருத்தமான – வெற்றியை உறுதி செய்யக்கூடிய – நாட்டு மக்களின் மனதை வெல்லக்கூடிய ஒருவரை, ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச களமிறக்கினால் மட்டுமே, அவருக்கு வெற்றி கிடைக்கும்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், தமது சகோதரருமான கோட்டாபய ராஜபக்சவை களமிறக்க, மஹிந்த ராஜபக்ச, முடிவெடுத்துள்ளார் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உண்மையில் கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் களமிறங்கினால், அவர் படு தோல்வியைச் சந்திப்பார். தமிழ் – முஸ்லிம் மக்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள மக்களிலும் 60 வீதமானோர் அவரை எதிர்ப்பார்கள்.

எனவே, மஹிந்த ராஜபக்ச, தனது முடிவை மாற்றியமைக்க வேண்டும். இல்லையேல் மஹிந்தவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்து விடும்.

ராஜபக்ச குடும்பத்தில் மஹிந்தவே நல்லவரும், நேர்மையானவருமாவார். ஏனையவர்கள் ஊழல்,மோசடிகள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர்கள். இப்படியானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் முழு நாடும் கொதிப்படையும்.

மஹிந்தவின் நல்ல குணத்துக்கு அவர் தான் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும். ஆனால், நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல பங்காளிக் கட்சிகளும் ஒன்று கூடி பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

...............................

Read more...

இலங்கையின் குற்றவாளிகள் பட்டியலில், 608 சிறுவர்கள் இடம்பிடித்துள்ளனர். - குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு.

இலங்கையின் குற்றவாளிகள் பட்டியலில் 608 சிறுவர்கள் இடம்பிடித்துள்ளதாக, குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பட்டியலில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கியுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸ் தகவல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொலை, கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் அடக்கிய ஐ.ஆர்.சி. பட்டியல் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் 13 சிறுமிகளும் அடங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு வருடத்திலும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் மேலதிகமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 100 சிறுவர்கள் உள்ளடக்கப்படுவதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 11 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இந்த பிரிவினர் சைக்கிள், மடிக்கணினி, கணினி திருட்டு போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஐ.ஆர்.சி பட்டியலில் 1200 பெண்கள் உட்பட்ட 43,000 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக பொலிஸ்மா அதிபர் புஜித ஜயசுந்தரவின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் இவர்கள் பாரிய குற்றங்களை புரிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வீட்டுச் சூழல் பிள்ளைகளு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. வீட்டு வறுமை நிலை, வீட்டில் போதியளவு மேற்பார்வையின்மை, மகிழ்ச்சியற்ற மனநிலையுடைய பெற்றோர், தந்தை மது போதைவஸ்து பாவிப்பவராயிருத்தல் போன்ற காரணங்களால் சிறுவர்கள் மன இறுக்கம், உணர்ச்சி வசப்படல் போன்றவற்றிற்கு ஆளாகி உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குவதால் சில வேளைகளில் மன அதிர்ச்சிக்கு உட்பட்டு அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் கூடுதலாக சிறுவர்கள் பாதிக்கப்பட்ட தவறுகளையே செய்ய முற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள்.

மன உளைச்சல் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு சிறுவர்கள் மத்தியில் உடல் ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் ஏற்படும் வித்தியாசமான வெளிப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என முன்னணி ஆய்வு ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில் சிறுவர்கள் எதிர் கொள்கின்ற உள, சமூக பிரச்சினைகளை குறைப்பதற்கு அவர்களை குடும்பச் சூழலிலும் , சமுதாயத்திலும் வைத்துப் பராமரிக்கப்படுவது மிகப் பிரதானமானது. அத்துடன் சிறுவர்களுடன் பணியாற்றுபவர்கள் சுகாதார , பாரம்பரிய , சமய, கல்வி சார் அமைப்புக்கள் மற்றும் அரச , அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சட்ட ரீதியாக செயற்படுகின்ற வேளையில் சிறுவர்களை பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்பதுடன், சிறுவர்கள் குற்றமிழைப்பதும் தடுக்கப்படும் என்பதே உண்மையாகும்.

Read more...

கடற்படையினருக்கு பயந்து நீரில் குதித்த மண் கொள்ளையர்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை மடக்கும் நோக்கில் கடற்படையினர் சென்றபோது நேற்று நீரில் குதித்த இருவர் காணமல் போயிருந்தனர். இவர்கள் இருவரம் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவரை தேடும் பணியில், விசேட அதிரடிப் படையினரும் பிரதேச மக்களும் இணைந்து நேற்றிரவு முதல் ஈடுபட்ட நிலையிலேயே, கிண்ணியா பகுதியில் வைத்து, குறித்த இளைஞரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சிலரைக் கண்ட கடற்படையினர், நேற்று பகல் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதன்போது துப்பாக்கி சூட்டின் அச்சத்தில் மூவர் தப்பியோடினர். அப்போது ஒரு இளைஞனை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர். இருவர் கடலில் குதித்த நிலையில், ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர், இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது குறித்த பிரதேசத்தில் இருந்த மக்கள், கடற்படையினரை நோக்கி, கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதலால் காயமடைந்த 12 கடற்படையினர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை திருகோணமலை – கிண்ணியா பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைய அடுத்து, அங்கு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினருடன், பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டதால் அங்கு தீவிர நிலை ஏற்பட்டது.

இதேவேளை, பொதுமக்களின் கல்வீச்சில் காயமடைந்த 12 கடற்படையினர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

அரசாங்கத்தை, அரச தரப்பே எதிர்க்கும் அவலம் - பலம் பெற்று வரும் எதிரணி.

தற்போது அரசாங்கத்தை, அரச தரப்பிலுள்ளவர்களே எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானத்தை அடுத்து, இந்த நிலைமை தீவிரமாகியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனை சீர்குலைக்கும் கூட்டு ஒப்பந்தத்தை ஒழிக்க வேண்டும் என, தேசிய ஒருமைப்பாடு,அரச கருமை மொழிகள்,இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குவானை பரியோவான் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மனோ கணேசன், இதனை கூறினார்.

இதேவேளை கூட்டு ஒப்பந்தம் மூலமாக, பெருந்தோட்ட மக்களுக்கு மீண்டும் ஒருமுறை துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை பாதித்துள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம், ஒருபோதும் அனுமதித்திருக்க கூடாது என அவர் கூறினார்.

அத்துடன் இப்போதைய அரசாங்கத்தில் தொடர்வதா? அல்லது விலகுவதா? என்பது குறித்து, தமது தரப்பு கலந்துரையாடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அரசியல் பீடம் கூடும் போது, இது குறித்து தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

இதனிடையே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நியாயமாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தோட்ட நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுவது பொய்யான விடயமாகும். குறித்த நிறுவனங்களுக்கு போதிய இலாபம் கிடைக்கின்றது.

இதனை அவர்கள் மறைத்து பொய்யான கணக்குகளைக் காண்பித்து தொடர்ந்தும் தோட்ட மக்களை அந்த நிறுவனங்கள் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.

தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான விடயம் நாட்டில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசங்கத்தில் இணைந்துள்ள சில தமிழ்க் கட்சிகளும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மு கா வுக்கு முடிவுகட்ட மு கா வே முயற்சியா? வை எல் எஸ் ஹமீட்

தற்போதைய யாப்பின் படி பாராளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி கருதுகிறாரோ அவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார். அவருக்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை. எதிர்க்கட்சி விரும்பினால் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். அது சாதாரண பெரும்பான்மையால் ( சமூகமளித்திருப்பவர்களில் பாதியும் ஒன்றும் ) நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியிழப்பார்; என்பது எல்லோருக்கும் தெரியும்.

புதிய நகல்யாப்பிலும் இதேமுறைதான் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது; ஆனால் சிறிய வித்தியாசம். அதாவது அவ்வாறு பிரதமர் நியமிக்கப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். அதில் அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தோல்வியடைந்தால் பாராளுமன்றம் புதிய பிரதமரைத் தெரிவு செய்யும். ஆனால் ஒரு கட்சி 50% இற்குமேல் ஆசனங்களைப்பெற்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லை . இதில் பிரச்சினை ஏதும் இல்லை.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தற்போது தேவை சாதாரண பெரும்பான்மை. அதாவது 100பேர் சமூகமளித்தால் 51 பேர். நகல் யாப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற 113 தேவை. ( சரத்து 89) ( அதாவது புதிய தேர்தல் முறையில் மொத்தம் 233. தேவை 117). சிறுபான்மைக் கட்சிகளுக்கு முன்னயதைவிட சற்று அனுகூலம் குறைவு. ஆனாலும் பெரிய பிரச்சினை இல்லை. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும்போது பெரும்பாலும் எல்லோரும் சமூகமளித்திருப்பார்கள்.

இங்குதான் மு கா பெரும் ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கின்றது.

அதாவது, இந்த ஏற்பாட்டை ( சரத்து 89 ஐ) ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரை நீக்குவதற்கு 2/3 ஐத் தேவையாக்க வேண்டும்; என்று வழிநடாத்தல் குழுவுக்கு மு கா பிரேரித்திருக்கின்றது. ( இது நிபுணர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது) ஆளுங்கட்சிக்கே பெரும்பாலும் 2/3 பெறுவது கஷ்டம். எதிர்க்கட்சியால் பெறமுடியுமா?

இன்று ஆட்சிசெய்வதற்கு 113 தேவை. தற்போதைய தேர்தல்முறையின்கீழ் பெரும்பாலும் 113 பெறுவது சிரமம் என்பதனால்தான் சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவைப்படுகிறது. அதை வைத்துத்தான் சாதிக்கத்தெரிந்த சிறுபான்மைக்கட்சிகள் சாதிக்கின்றன. உதாரணம் த தே கூ.

இவர்களின் பிரேரணையின்படி பிரதமராவதற்கு 113ஐப் பெறாவிட்டால் சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவை. பிரதமராகிவிட்டால் அதன்பின் ஆட்சியைத் தொடருவதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் தயவு தேவையேயில்லை. ஏனெனில் ஒன்று, இரண்டு சிறுபான்மைக் கட்சிகள் அரசிலிருந்து விலகினாலும் எதிர்க்கட்சி 2/3 பெறாது. அதன்பொருள் ஒருவர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவரை அசைக்கமுடியாது.

சற்று சிந்தித்துப்பாருங்கள். தற்போது தேவை சாதாரண பெரும்பான்மை. நாளை எதிர்க்கட்சி ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் த தே கூ நடுநிலை வகித்தால் கூட ஆட்சி கவிழலாம். அல்லது இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மாறி வாக்களித்தாலும்/ நடுநிலை வகித்தாலும் கவிழலாம். சுக்கான் நமது கையில் இருக்கின்றது. அதைப் பாவிக்கத்தெரியாமல் இருப்பது நமது பலவீனம். அது வேறுவிடயம்.

புதிய முறையில் நடுநிலை வகித்தால் கவிழாது. எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

இவர்களின் பிரேரணையின் படி நடுநிலை வகித்தாலும் கவிழ்க்க முடியாது, எதிர்த்து வாக்களித்தாலும் கவிழ்க்க முடியாது.

சிந்தித்துப்பாருங்கள். நாளை மஹிந்தவுடன் இணைந்து நமது 12 பேரும் வாக்களித்தாலும் 150 வருமா? த தே கூ ம் சேர்ந்து வாக்களித்தாலும் 150 வராது. இதன்பொருள் என்ன?

ஏற்கனவே முட்டுக்கொடுத்தும் எதையும் சாதிக்கவில்லை. இப்பொழுது பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டதும் எட்டி உதைத்தாலும் கை கட்டி வாய்பொத்தி ஓரத்தில் போய்க் குந்தவேண்டியதுதான் அமைச்சுப் பதவிக்காக. சமூகத்திற்காக அரசை எதிர்த்துப்பேசினால் சிலவேளை அந்த நிலைமை வரலாம். அப்பொழுது அமைச்சு, ராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சு என மூச்சுவிடுபவர்கள் ஒவ்வொருவராக வேலி பாய்வார்கள். அதன்பின் கட்சியை மூடவேண்டியதுதான்.

இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியில் இருந்து குரல்கொடுக்க மட்டும்தான் முடியும். தமிழர்களை ஆயுதப்போராட்டத்திற்குள் தள்ளியதே வெறும் நூறுவீத முரண்பாட்டு அரசியல்தான்.

சுருங்கக்கூறின் பிரதமராகும்வரை நாம் தேவைப்படுவோம். அதுவும் இந்தத் தேர்தல்முறை இருந்தால்தான். அதன்பின் நாம் தேவையில்லை. நாம் செல்லாக்காசு.

இந்தப் பிரேரணையை மு கா ஏன் முன்வைத்தது? இனி மு கா தேவையில்லை. ஐ தே கட்சியுடன் சங்கமமாகிவிடுவோம்; என்றா?

அல்லது; பலம் இருந்தும் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. அந்தப்பலம் எதற்கு என்பதற்காகவா? அடிமைகளாகவே இருந்துவிட்டுப் போவோம் என்பதற்காகவா? அல்லது புரியாத்தனமா? அல்லது வேறு ஏதும் பின்னணியா? புரியவில்லை.

அங்கத்தவர்களே! ஆதரவாளர்களே! இது ஏன் என்றாவது உங்கள் தலைமையிடம் கேள்வியெழுப்புவீர்களா?


Read more...

நீதித்துறையின் செயற்பாட்டிற்கு பாராட்டு பெற்ற இலங்கை

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரைமப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவுக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவக்குடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும், ஜேர்மனுக்கும் இடையிலான சட்டத்துறைசார்ந்த ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிக்கும் வேலைத்திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறை உட்பட ஏனைய துறைகளுக்காக ஜேர்மன் வழங்கும் ஒத்துழைப்புக்களையும் அமைச்சர் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார். நீதித்துறையின் சுதந்திரத்தையும், சட்டவாட்சியையும் உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை ஜேர்மன் தூதுவர் இதன் போது பாராட்டினார்.

Read more...

இலங்கையின் தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளமாட்டார் - கமல் பத்மசிறி

இலங்கையின் தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டாரென உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி அறிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் நாட்டின் பல முக்கிய பதவிகளை வகித்த, வகித்துக்கொண்டு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Read more...

மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒரே தினத்தில் தேர்தல் - ஜனாதிபதி விசேட பிரேரணை

நாட்டின் அனைத்து மாகாணங்களின் தேர்தல்களையும் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒரே தினத்தில் நடாத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் விசேட பிரேரணையாக இது நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மற்றும் நிறைவடையவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்துமாறும், இத்தேர்தல்களை பழைய முறைப்படி நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதியின் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி முன்வைத்த விசேட பிரேரணை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read more...

அமெரிக்காவின் போர் முகாம் ஒன்றை நாட்டில் அமைக்கும் திட்டம் இலங்கையிடம் இல்லை

இலங்கையில் போர் முகாம் ஒன்றை அமைக்கும் எந்தவொரு திட்டத்திலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன மறுப்பு தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையானது பல நாடுகளுடன் பாதுகாப்பு அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவற்றில் கைச்சாத்திட்டிருப்பினும் அமெரிக்காவுடன் இதுவரையில் எவ்வித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

வரலாற்று முக்கியத்துவம் மிகு இடங்களை சேதமாக்குபவர்களுக்கு எதிராக, சட்டத்தில் மாற்றம்

வரலாற்று முக்கியத்துவம் மிகு இடங்கள், தொல்பொருள் பெறுமதி கொண்ட பகுதியில் சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது என்று, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் இடங்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உள்ள சட்டதிட்டங்கள் போதுமானதாகவில்லை. இது தொடர்பான குற்றங்களை செய்பவர்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி, தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும் முக்கிய விடயம் என்றும் அவர் கூறினார்.

Read more...

பதவி விலகுவது தீர்வல்ல - மஹிந்த ராஜபக்ச

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகுவதன் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் தான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பதில் வழங்கிய போது எதிரிகட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

மஹிந்த தேசப்பிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் தேர்தலை நடாத்துவதற்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதன் ஊடாக பிரச்சினை தீரப் போவதில்லை. புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரையில், பழைய சட்டம் நடைமுறையில் இருக்கும். இதனால், பழைய முறைமைப்படி தேர்தலை நடாத்த வேண்டும். அதற்கான அதிகாரம் மஹிந்த தேசப்பிரியவிடம் உள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

மன்னார் சதொச வளாகத்தில் அகழ்வுப்பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

மன்னார் சதொச வளாகத்தில் உள்ள மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. முன்னதாக அங்கிருந்து மீட்கப்பட்ட 6 மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு ஆய்விற்காக சமர்பிக்க சென்றமையால், கடந்த 21 ஆம் திகதி அன்று புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த 25 ஆம் திகதி குறித்த மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனையை பீட்டா முன்னெடுக்க உள்ளது. தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. காபன் பரிசேதனை முடிவுகள் எதிர்வரும் 3 வாரங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 300 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 27 மனித எச்சங்கள் சிறார்களினது என்று அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

Tuesday, January 29, 2019

நஷ்டயீடு வழங்கப்படும் என உறுதியளித்தவர்கள், இப்போது மௌனம் காத்து வருகின்றனர். - பெருந்தோட்ட விவசாயிகள்.

மழை வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவில் அழிவடைந்த நெற்செய்கைக்கு நஷ்டயீடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடன்களை பெற்று தமது விவசாயத்தை முன்னெடுத்த மக்கள் தற்போது பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட ஒன்பதாயிரத்து 679 ஏக்கர் நெற்செய்கை வெள்ளத்தினால் அழிவடைந்தது.

அத்துடன் ஒலுமடு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், துணுக்காய் பாண்டியன்குளம், புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, குமுழமுனை கமக்கார அமைப்பின் கீழான 8 ஆயிரத்து 531 ஏக்கர் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள சோளப்பயிர்செய்கையில், பாதிப்பை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவின் தாக்கம், தற்போது வாழைத்தோட்டங்களையும் விட்டுவைக்கவில்லை.

இதனை அடுத்து விவசாயிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படைப்புழுவின் தாக்கம் விரைவில் மரக்கறிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாய அமைச்சு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையின் அரசியல் தாக்கத்தினால், ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்துள்ள ஊழல் எதிர்ப்பு பொறிமுறை!

இலங்கையில் ஏற்பட்ட பல அரசியல் தாக்கங்களினால் 2018ஆம் ஆண்டில் தெளிவானதொரு அரசியல் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கெதிரான உலகளாவிய கூட்டமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி, 180 நாடுகளில் இலங்கை 89வது இடத்திலும் தென்னாசியாவில் 3வது இடத்திலும் உள்ளது. இது உலகளாவிய தரப்படுத்தலில் 25வது இடத்திலுள்ள பூட்டான் மற்றும் 78ஆவது இடத்திலுள்ள இந்தியா ஆகிய நாடுகளையும் விட பின்தங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஊழலுக்கெதிராக செயற்படுவதாக உறுதியளித்த போதிலும், ஊழலுக்கெதிரான செயற்பாடுகளில் ஓர் தளம்பல் நிலையிலேயே உள்ளது. இது 2013ம் ஆண்டிலிருந்து CPI சுட்டியில் 36 ற்கும் 38ற்கும் இடைப்பட்ட தளம்பல் நிலையையே காட்டுகிறது.

இதேவேளை TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர 2018ம் ஆண்டின் CPI பற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பொதுத்துறையில் ஊழல் அதுபற்றி கையாளக்கூடிய சட்ட பொறிமுறை உரிய நேரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான, விருப்பு அல்லது செயன்முறை என்பவை இலங்கையைப் பொறுத்தவரை பின்னடைவையே காட்டுகிறது.

சகல பொது அதிகார சபைகளும் பக்கச்சார்பின்றியும் சுதந்திரமாகவும் செயற்பட வேண்டியது அவசியம். சட்டத்தைப் பயன்படுத்தும் போது பக்கச்சார்பாகவோ அரசியல் நோக்குடனோ செயற்படின், அது ஊழலுக்கெதிரான பொறிமுறைக்கும் நீதி முறை கட்டமைப்புக்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர கூறினார்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் குறிப்பிட்டதன்படி, ஒரு நாட்டில் நிலவுகின்ற ஊழல் மட்டத்திற்கும், அந்நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்திற்குமிடையில் தொடர்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முழுமையான ஜனநாயகமுள்ள நாடுகள் அண்ணளவாக 75 புள்ளிகளை CPI யில் பெற்றதுடன், ஓரளவு ஜனநாயகம் உள்ள நாடுகள் அண்ணளவாக 49 புள்ளிகளையு,ம் கலப்பு முறையை கொண்ட நாடுகள் 35 புள்ளிகளையும், எதேச்சாதிகாரமான ஆட்சியுள்ள நாடுகள் 30க்கு குறைவாகவும் பெற்று CPI யில் இடம்பெற்றுள்ளது.

CPI பெறுபேறானது இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு சரிந்து போகும் ஜனநாயகம் மற்றும் கலப்பு ஆட்சிக்கான போக்கை காட்டுகிறது.

ஊழலுக்கெதிராக செயற்படுவதற்கும் உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சகல அரசாங்கங்களையும் பின்வருமாறு கோரியுள்ளது.

01 - அரசியல் ரீதியிலான அதிகாரத்திலிருந்து நடுநிலையாக செயற்படுவதற்காக நிறுவன ரீதியான வலுவூட்டலும், அச்சுறுத்தலின்றி செயற்படுத்துவதையும் உத்தரவாதப்படுத்தல்.

02 - ஊழலுக்கெதிரான சட்டம் அதன் பயன்பாடு நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் உள்ள இடைவெளியை நீக்குதல்.
குறிப்பாக உள்ளூர் மட்டத்தில் அரசியல் செயற்பாடுகள் மற்றும் அரசாங்க செலவீனங்களை கண்காணிக்கும் சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டல்.

03 - சுதந்திரமான ஊடங்களுக்கு ஆதரவளித்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் அல்லது தொந்தரவு இல்லாமல் பணியாற்றும் நிலையை உறுதிப்படுத்தல்.

Read more...

இராணுவம் அகற்றப்பட்டால் மட்டுமே, தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் உருவாகும் - ஐ.நா.

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் போதே, தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியும் என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிபுணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் போது மனித உரிமைகள் பின்பற்றப்பட்டதா? என்பது தொடர்பில் ஆராய்ந்து தயாரித்த அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்காக பென் எமர்ஷன் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கையின் படி, இலங்கையில் விரைவாக பயங்கரவாதம் நீக்கப்பட்டு அதற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற புதிய சட்டம் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டவையாக காணப்பட வேண்டும என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் தண்டனைகள் குறித்த பொறிமுறையொன்று அவசியமாகும்.

அதே போன்று சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அந்த வகையில் வடக்கிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்..ஆகையால் பாதுகாப்பு துறை முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம் என பென் எமர்ஷன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com