Showing posts with label varatharajan.perumal. Show all posts
Showing posts with label varatharajan.perumal. Show all posts

Sunday, November 26, 2023

ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024-.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே நிதிஅமைச்சர் என்ற வகையில் 2024ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட இதே நாட்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு உரியவை. கௌரவ ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தான் ஜனாதிபதியாக வந்து விட வேண்டும் என்ற விருப்பதிலேயே தனது அனைத்து அரசியல் நகர்வுகளையும் மேற் கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிச்ததே. அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டமும் அதன் ஒரு பிரதானமான பாகமே என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதித் தேர்தல் நோக்கி பரந்துபட்ட மக்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு அவர் இங்கு சில அறிவிப்புகளை – ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளபோதிலும், அவருடைய விருப்பங்களையும் மீறிய வகையில் இருக்கும் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டே அவற்றை தன்னுடைய இலக்கில் அவர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் அவர் மேற்கொண்டுள்ளவைகள் மிகச் சிலவே.

1) அரச ஊழியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று இளைப்பாறுபவர்களாக சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர் இவர்களையும் இவர்களது குடும்ப அங்கத்தவர்களாக உள்ள வாக்காளர்களையும் தனது வாக்கு வங்கியாக உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன், சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு ரூபா 10000 சம்பள உயர்வாக அறிவித்துள்ளார். அதேபோல ஓய்வு பெற்றுள்ளோருக்கு ரூபா 5000 உயர்த்தியுள்ளார்.

2) நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையின் காரணமாக அதிகரித்த வறுமையின் காரணமாக அரசாங்கம் அஸ்வேசும (ASWESUMA) என்னும் விசேட உதவித் திட்டத்தை தொடங்கியது. அதன் கீழ் வெவ்வேறு வகைப்பட்ட சுமார் 17 லட்சம் பேருக்கு ரூபா 2000 தொடக்கம் ரூபா 5000 வரை மாதாந்த கொடுப்பனவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமான வறுமை நிலையில் உள்ளோரென கிட்டத்தட்ட 60000 பேருக்கு ரூபா 15000 வழங்கி வருகிறது. இப்போது ஜனாதிபதி ரணில் அவர்கள் மேற்குறிப்பிட்ட ஒவ்வொருவருக்குமான மாதாந்த கொடுப்பனவை ரூபா 2500 ஆல் உயர்த்தியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி நாட்டு வாக்காளர்களில் சுமார் 37 லட்சம் பேருக்கு ருபா 2500 தொடக்கம் 15000 ரூபா வரை மாதாந்த முன் கொடுப்பனவுகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். இந்த அதிகரிப்புக்காக 2024ம் ஆண்டு சுமார் 20000 கோடி ருபாக்கள் செலவிடப்பட உள்ளன. இது தேர்தல் தந்திர ஒதுக்கீடா அல்லது நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடு செய்வதற்காகவே மக்களுக்கு இந்த ஒதுக்கீடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அரசியல் பொருளாதார அறிவுடையோரால் பகுத்தறிய முடியும்.

சுதந்திரமடைந்த காலம் தொட்டு, குறிப்பாக 1977ம் ஆண்டு தொடக்கம் அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் ஒவ்வொன்றும் மேற்கொண்ட தப்பான பொருளாதார நிர்வாகம் காரணமாக நாட்டின் பிரதானமான பொருளாதார அமசங்கள் ஒவ்வொன்றிலும் பெருகி வந்த நெருக்கடிகள் 2022ம் ஆண்டு ஒரு பெரும் அரசியல் நெருக்கடியாக – பரந்துபட்ட மக்கள் எழுச்சியாக – அறகலய கிளர்ச்சியாக வெடித்தது. நாட்டின் பொருளாதாரம் வங்கிரோத்தானது - அந்நிய நாடுகள் முன்னால் மண்டியிட வேண்டிய நிலைக்கு உள்ளானது. இதையெல்லாம் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கா வெற்றி கொண்டு விட்டார் - நாட்டை நெருக்கடிகளிலிருச்து மீட்டு முன்னேற்றப்பாதையில் செலுத்தி விட்டார் என்றெல்லாம் அவர் பற்றி கூறப்படுகிறது – அவ்வாறு அவரது அரசாங்க சார்பானவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறு கூறுவது – கருதுவது சரியானதல்ல என்பதை இந்த வரவு செலவுத் திட்டம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தொடர்ந்து கடனில் மூழ்கும் நாடு
கணக்கு விடும் விக்கிரம சிங்கன்

2022ம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத வங்கிரோத்து நாடென இலங்கையை அரசாங்கம் அறிவித்த நாளிலிருந்து இன்று வரை வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடனின் எந்தவொரு பகுதியும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டுக் கடன்கள் மட்டும் இலங்கையில் தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 65 சதவீதத்துக்கு மேலாகி உள்ளது. உள்நாட்டுக் கடன்களையும் சேர்த்தால் அது 140 சதவீதத்தை அண்மிக்கிறது. 2024ம் ஆண்டுக்கு அரசாங்கம் வட்டியாக கட்ட வேண்டிய தொகை மட்டும் இரண்டு லட்சத்து அறுநூற்று ஐம்பது கோடி (2650 பில்லியன்கள்) ரூபாக்கள். இது 2024ம் ஆண்டில் கிடைக்குமென அரசாங்கத்தின் திட்டமிடப்பட்டுள்ள மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகும். இவ்வாறு வட்டி கட்டும் வீதாசாரம் வருடாவருடம் வேகமாக அதிகரித்துச் செல்கிறதே தவிர குறைவதாக இல்லை.

அபிவிருத்திக்கு மூலதனமில்லை
அலங்காரத்துக்கு அமைச்சர்கள்


2024ம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி ருபாக்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க அரசாங்கம் மேலும் சுமார் 2 லட்சத்து எண்ணூற்று ஐம்பது கோடி (2850 பில்லியன்) ருபாக்களை கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அனுபவத்தைக் கணக்கிலெடுத்தால், இந்த கடன் வாங்கல் குறைந்த பட்சம் மேலும் 10 சதவீதத்தால் அதிகரிக்கும். அல்லது அரசாங்கம் அபிவிருத்தக்கென ஒதுக்கியுள்ள மூலதன செலவுகளையே திட்டமிட்ட தொகையிலிருந்து குறைக்க வேண்டும். இரண்டாவதே பெரும்பாலும் நடக்கும். ஆக் அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகள் எதுவுமின்றி அரசாங்கம் வெறுமனே 1) அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கூலிகள் கொடுத்தல்,
2) கடன்களுக்கு வட்டி கட்டுதல், மற்றும்
3) சமூக பொருளாதார உதவிகள் என வழங்கப்படும் மான்யங்கள் மற்றும் கொடைகள் கொடுத்தல் என்பவற்றோடு காலத்தை ஓட்டுவதே 2024ம் ஆண்டில் அரசாங்கம்.

அரசாங்க வருமானத்தை திட்டமிடப்பட்டுள்ள அளவுக்கு அரசாங்கத்தால் திரட்ட முடியாது என வரவு செவலவுத் திட்டம் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே பொருளாதார அறிஞர்கள் கூறி விட்டனர். கடந்த ஆண்டு ஜனாதிபதி திட்டமிட்ட வருமானத்தில் சுமார் 15 சதவீதம் குறைவாகவே திரட்ட முடிந்தது. இந்த வருடமும் அதே அளவு வீதாசாரம் குறைவாகவே அரச வருமானம் அமையும் என்பது நிச்சயமே. அதை ஈடு கட்ட அரசாங்கத்தினால் உள்நாட்டிலிருந்தும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி மேலதிகமாக கடன் வாங்க எந்த வாய்ப்பும் இல்லை. ஒரே வழி செலவுகளைளக் குறைப்பதுதான். நடைமுறைச் செலவுகளைப் பொறுத்த வரையில் இதற்கு மேல் குறைக்க முடியாது. மிகக் கட்டாயமான செலவுகளையே அறிவித்துள்ளது. ஆக, அரசாங்கத்தால் கை வைக்கப்பட உள்ள ஒரே இடம் அபிவிருத்திகளுக்கான மூலதனங்களே.

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தமது அமைச்சின் மூலம் சாதிக்கப் போவதாக எதனையும் எத்தனையும் சொல்லலாம். அவர்கள் எவருக்கும் திறைசேரியிலிருந்து மூலதனச்செலவுகளுக்காக வெறும் கண்துடைப்புக்காக மிகச் சிறு தொகைகளே கொடுக்கப்படும். பெரும்பாலும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அமைச்சுக்களையே கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான அமைச்சுகளின் 2024ம் ஆண்டுக்குரிய நடைமுறைச் செலவுகளுக்கான ஒதுக்கீடுகள் கூட குறைக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

வயிற்றைக் கட்டி வாழ மக்கள்
தேர்தல் பந்தயத்தில் ஜனாதிபதி

சரவதேச நாணய நிதியம் நான்கு ஆண்டுகளில் 3000 மில்லியன் டாலர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தது. 2023ம் ஆண்டு குறைந்த பட்டம் 1000 பில்லியன் அமெரிக்க டொலராவது கிடைக்கும் என அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 300 மில்லியனோடு நிறுத்தப்பட்டு விட்டது. ஏனெனில் அரசாங்கத்துக்கு அவை விதித்த கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 2024ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கணிசமான தொகை உதவியைப் பெறுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் வழி வகுக்க மாட்டாது என்பது இப்போதே தெரிகிறது. இறக்குமதி தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் இறக்குமதி செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்து, ஏற்றுமதி வருமானத்தை மட்டும் வைத்து இறக்குமதிச் செலவுகளை சமாளிக்கும் வகையாக வெளிநாட்டு வர்த்தக நிதி நிர்வாக முறையையே இந்த அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.

2021ம் ஆண்டு இறுதியோடு ஒப்பிட்டால், அனைத்து பொருட்களினதம் விலைகள் 100 தொடக்கம் 150 சதவீதம் அதிகரித்தாகவே உள்ளது. இப்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பெறுமதி கூட்டு (VAT வரியினை அரசாங்கம் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அறிவித்துள்ளது. இது சந்தையில் அனைத்து பண்டங்களினதும் விலைகளை 20 சதவீதம் அதிகரிக்கும். ஏனெனில் பெறுமதி கூட்டு வரியானது விற்பனையாளர்களினூடாக நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வரியாகும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில் நாட்டில் மாதாந்த சம்பள அடிப்படையில் ஊதியம் பெறும் ஊழியர்களில் எவரது வருமானமும் 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த வகையில் ரூ.2500, ரூ.5000, ரூ.10000 என மேலாதிகமாக வழங்கப் போவதான அறிவிப்பு வெறும் தம்மாத்துண்டு அளவான வருமான அதிகரிப்பே.

நாட்டு மக்களின் வாங்கும் திறனைக் குறைத்து, இறக்குமதி குறைப்பால் மற்றும் தடையால் நாட்டின் உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் குறைவாக சந்தைகளில் பண்டங்களின் வழங்கலில் (நிரம்பலில்) ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு பொருளாதார நிர்வாகமாக கடைப்பிடிக்கும் தந்திரம் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அணுகுமுறையாக ஆகிவிட்டது. மக்களும் அதனை சர்வசாதாரணமாக கடந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

தமது கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பான காலத்தை இரண்டு ஆண்டுகள் பின்தள்ளிப் போட ஒத்துக் கொண்டு நாடுகள் மீண்டும் தமது கடனை திருப்பித் தரும்படி கேட்க அடுத்த ஆண்டு தொடங்குவார்கள். அதற்கிடையில் நாட்டின் எந்தெந்த நிலப்பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படப் போகின்றன என்பது தெரியவில்லை. அதற்கிடையில் அடுத்த தடைவை தேர்தல் மூலம் தான் ஜனாதிபதியாக வந்து விட்டால் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் எனவுள்ள ஜனாதிபதியின் திட்டம்தான் இந்த வரவு செலவுத் திட்டமோ! விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

அ. வரதராஜா பெருமாள்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
17 – 11 – 2023

Read more...

Sunday, November 20, 2022

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics): பகுதி – 2 அ. வரதராஜா பெருமாள்

மக்களை தாமாகவே மூச்சடக்கி வாழ நாசூக்காக பழக்கி விட்டார்.

5. இருப்பதையும் கிடைப்பதையும் வைத்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என பரந்துபட்ட பொதுமக்கள் அவர்களாகவே இதுதான் விதியென ஏற்றுகொண்டு மூச்சுக் காட்டாமல் சீவிக்கும் நிலைமைக்கு பொது மக்களை கொண்டு போய் நிறுத்தியுள்ள சாதனையை ஜனாதிபதி ரணிலின் ஆட்சி படிப்படியாக, வெற்றிகரமாக சாதித்துள்ளது.

கொரோணா காரணமாக அடுத்தடுத்து அமுலாக்கப்பட்ட ஊரடங்குகள், போக்குவரத்துத் தடைகள், கொரோணாப் பரவல் தொடர்பாக மக்களிடையே நிலவிய அச்சங்கள் என்பன காரணமாக 2020ம் ஆண்டே மக்கள் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே தம்மை பழக்கப்படுத்திக் கொண்டனர், மேலும்,

(1) இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் நாடு முழுவதுவும் இரவு பகலென்றில்லாது நாட்கணக்கணக்கில் கியூ வரிசைகளில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமை, இவற்றால் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்கு மூன்று மடங்கு என திடீரென உயர்ந்தமை,

(2) உற்பத்திகளின் வீழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்ட வேலையின்மைகளால் மக்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி,

(3) மக்கள் பொருட்களை வாங்குகின்ற பொருளாதார சக்தி தொடர்பில் மக்களின் வருமானத்தினுடைய மெய்யான பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என எல்லாம் சேர்ந்து இப்போதைக்கு மிக அத்தியாவசியமான பொருட்களைத் தவிர ஏனையவற்றை வாங்குவதை மக்கள் தாமாகவே குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் இதனை இப்போது தமது வாழ்க்கையின் இயல்பான ஒரு விடயமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

அதன் மூலம், 200க்கு மேற்பட்ட வகையான பல்லாயிரக் கணக்கான பொருட்களுக்கு ஜனாதிபதி தடை விதித்த போதிலும், மிக அத்தியாவசியமான பொருட்களின், இறக்குமதியை அரைவாசியாக்கியுள்ள போதிலும், அவற்றின் விளைவாக வேலையில்லாமைகள் அதிகரித்திருக்கின்ற போதிலும், முன்னர் 100 ரூபாவுக்கு வாங்கிய பொருட்களை ,இப்போது 250 அல்லது 300 ரூபா கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், இதனால் அரசாங்கத்தைக் குறித்து பரந்துபட்ட மக்கள் மத்தியில் உள்ளுர ஆத்திரமும் வெறுப்பும், விரக்தியும் நிலவுகிற போதிலும், இவையெதுவும் அரசுக்கெதிரான எழுச்சியாக மாறி விடாத ஒரு நிலைமையைப் பராமரிப்பதில் ஜனாதிபதி ரணில் ஒரு சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

– ‘கிடைத்தால் முயல் போனால் எறிந்த கற்கள் தானே’

6. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்த கடனுதவி கிடைப்பது இந்த ஆண்டுக்குள் சாத்தியமாகாது என ஏற்கனவே நாடுகளின் பொருளாதாரம் தெரிந்தவர்கள் கூறி விட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் அதில் மிகுந்த அனுபவம் பெற்றவர். அவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடாதது மிகவும் பிழையானது என கோத்தாபய ஜனாதிபதியாக ,இருந்த போது குற்றம் சாட்டியோர் பலர். இந்தியா, யப்பான் மற்றும் மேலைத் தேச நாடுகளும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவும் தாம் தொடர்ந்து ,இலங்கைக்கு உதவி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முதலில் சர்வ தேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற வேண்டும் என வலியுறுத்தின.

ரணில் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் அடிக்கடி கடன் வாங்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கிற நவதாராளவாதியே. இப்போது அதனிடம் போகவில்லை எல்லாருமாகச் சேர்ந்து தன்னைப் போக வைத்துவிட்டார்கள் என்பது போல அந்த நிதியத்துடன் ஊடாடுகிறார்.

கடன் கிடைத்தால் அது அவரது சாதனையாகும், கிடைக்கவில்லையென்றால் அதற்கு அவர் பொறுப்பாளியாக மாட்டார்.

இந்தா கடன் வரப் போகிறது…. பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிந்து விட்டன: அடுத்த மாதத்துக்குள் கிடைக்கும்: இந்த வருடத்துக்குள் கிடைக்கும் என காலத்தை மிகக் கெட்டித் தனமாகவே கடத்தி தனது ஆட்சிக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சற்றுக் காலம் தாழ்த்தித் தன்னும் அந்த நிதியம் உதவி தந்தாலும் அந்தத் தொகை அரசின் தேவைக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ போட்ட மாதிரியே இருக்கும். ஆனாலும் அவர் உலக நாடுகளிடமிருந்தும், உலக நிறுவனங்களிடமிருந்தும் சளைக்காமல் முயற்சிக்கிறார். நாடுகளெல்லாம் தன்னை அடுத்தடுத்து அழைக்கின்றன என்பது போல நாடு நாடாக தொடர் பயணங்களை மேற் கொள்கிறார். நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்படுத்த நமது ஜனாதிபதி எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என மக்கள் கருதும் வகையாக செயற்பட்டு மக்கள் மத்தியில் ஓர் அனுதாப அலையையும் ஏற்படுத்துகிறார். இது அவருக்கு அடுத்த தேர்தலுக்கு நன்கு பயன்படும்.

காற்றைக் கையால் பிடித்து போத்தலில் அடைத்து விற்கிறார் 7. இந்த ஆண்டு கிடைத்த வெளிநாட்டு உதவிகளெல்லாம் பெரும்பாலும் கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது கிடைத்தவையும் அவர் காலத்தில் தரப்படுவதாக உறுதி செய்யப்பட்டவையுமே.

ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆகிய பின்னர் மருந்துக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், உரத்துக்குமென அவ்வப்போது சில நாடுகள் வழங்கும் சிறுசிறு உதவிகளைத் தவிர குறிப்பிடத்தக்க எந்த உதவியும் இன்னமும் எந்தவொரு நாட்டிடமிருந்தோ அல்லது எந்தவொரு சர்வதேச நிறுவனத்திடமிருந்தோ கிடைக்கவில்லை.

கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதே வெளிநாடுகளுக்கான கடன்கள் தொடர்பில் இலங்கை தன்னைத் தானே வங்கிரோத்து நாடு என அறிவித்துக் கொண்டது. ஆனால், வெளிநாடுகளுக்கான மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கடன்களில் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான அந்நியச் செலாவணி தொடர்பான சுமையிலிருந்து தப்பித்திருக்கும் வாய்ப்பாக ஜனாதிபதி ரணில் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லையென்றால் இவர் 2015க்கும் 2019க்கும் இடையில் ஆட்சியில் இருந்த போது அம்பாந்தோட்டையில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பையும், கொழும்பில் கடலை நிரப்பி நிலமாக்கியதில் அரைவாசி நிலப்பரப்பையும் சீனாவுக்கு எழுதிக் கொடுத்த மாதிரி இந்நேரம் இவர் இலங்கையில் இன்னும் பல இடங்களை நாடுகளின் கடனுக்குப் பதிலாக எழுதிக் கொடுத்திருப்பார்.

இப்போதைக்கு ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதி செலவுக்கும் இடையில் ஏற்படுகின்ற பாதகமான வர்த்தக நிலுவையை எவ்வளவுக்குக் குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்கும் ஒரு காட்சியைப் படமாக்குவது மட்டுமே தன் வேலை என பதட்டமின்றி செயற்படுகிறார்.

போராட்டங்களில்லாத நாடே முன்னேறுமாம் 8. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அதற்காக அரசாங்கம் மிகவும் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என அமைச்சர்களும், அரச உயர் அதிகாரிகளும் அடிக்கடி கூறி வருகின்றனர்.

அதேவேளை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலேயே – மேற்கொள்ள நிதி எதுவும் இல்லாமலேயே அவ்வப்போது தங்கள் தங்கள் அமைச்சுக்கு உட்பட்ட விடயங்களில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் அறிக்கை விடுகிறார்கள்.

அறகலய போன்ற போராட்டங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் போராட்டங்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் அதன் விளைவாக ஏற்படும் அரசியல் உறுதியின்மையின் காரணமாக நாடுகளோ சர்வதேச நிறுவனங்களோ இலங்கைக்கு உதவமாட்டா எனவும் பிரச்சாரங்கள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடைந்து விடுமோ என ஓர் அச்ச மனோநிலையை மக்கள் மத்தியில் வளர்த்து விடுகின்ற கடமை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிகிறது.

ஏதோ அறகலயக்காரர்களினதும் தொழிற் சங்கங்களினதும் போராட்டங்களால்த்தான் நாடு இன்றைய அளவுக்கு குட்டிச் சுவராகப் போனது என அரச பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கின்றன.

உண்மையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளமெதுவும் பொருட்களின் விலையேற்றத்துக்கு உரிய விதமாக உயர்த்தப்படவில்லை. சம்பளங்களின் மெய்யான பெறுமதி 200 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்து விட்டது. தனியார் நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் நிலைமையும் அதுவே.

பெரும் நிறுவனங்கள் அனைத்தும் கொரோணா தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை முன்னரை விட அதிகமாகவே லாபம் சம்பாதிப்பதை அந்த நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளே குறிப்பிடுகின்றன.

ஆனால் அவ்வாறான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. அதேவேளை ரணில் அவர்களின் ஆட்சியில் இதுவரை எந்தவொரு போராட்டமும் அரச ஊழியர்கள் பக்கத்திலிருந்து எழவில்லை.

அவ்வாறு எதுவும் எழுந்து விடாதபடி ஒரு பயக்கெடுதியான நிலையை அரசாங்கம் தனது அனைத்து யந்திரங்களையும் பயன்படுத்தி பராமரிக்கிறது. தாங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சமுற ஆக்கிவிட்டது ,இந்த ஆட்சி.

(பகுதி 3ல் தொடரும்)

.

Read more...

Tuesday, November 15, 2022

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 1 அ. வரதராஜா பெருமாள்

இலங்கையின் பொருளாதாரத்தின் குறைபாடுகளை - பலயீனங்களை தீவிரப்படுத்தி பெரும் நெருக்கடியாக வெடிக்கப்பண்ணியது 2009ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பயங்கரவாத மனிதவெடி குண்டு தாக்குதல்களும், துட்டகைமுனுவின் வாரிசு தானே என நினைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்த கோத்தாபய ராஜபக்சாவின் அரசியல் பொருளாதார செயற்பாடுகளுமே என்பதில் சந்தேகமில்லை.

அதன் விளைவாக கனன்றெழுந்த 'அறகலய' இயக்கம் ராஜபக்சாக்களை அதிகாரக் கதிரைகளில் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியது. அவர்களால் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்ட அதி உத்தம ரணில் விக்கிரமசிங்கா அவர்கள், அவரது அமைச்சர்களும் அரசின் அதிகாரிகளும் அவருக்கு ஒத்துழைத்தால் இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடிகளிலிருந்து மீட்டுவிடுவார் என்று கூறப்பட்டது. அவருக்கு மேலைத்தேச நாடுகளின் அனுசரணை உள்ளது, இந்திய அரசாங்கமும் அவருக்கு உதவும், சீனா அவருக்கு தலையிடி கொடுக்காது, எனவே அவர் இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்பதனை சாதித்து விடுவார் என்றே பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் அவர்கள் சில நாட்களுக்குள்ளேயே ஆட்சி அதிகாரத்தை உறுதியாக பற்றிக் கொண்டார். கோத்தாபய அவர்கள் தான் எதேச்சாரியாக ஆள வேண்டும் என்ற விருப்பத்தில் உருவாக்கிய 20வது அரசியல் யாப்புத் திருத்தம் ரணில் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. 21வது அரசியல் யாப்பு திருத்தம் மீண்டும் 'அரசியல் சபை' உருவாக்கப்பட்டதனால் முக்கியமான அரச நிர்வாக ஆணைக்குழுக்களான:
தேர்தல் ஆணைக்குழு,
பொதுச் சேவைகள் ஆணைக்குழு,
நீதிச் சேவை ஆணைக்குழு,
தேசிய பொலிஸ் ஆணைக்குழு,
கணக்காய்வு ஆணைக்குழு,
மனித உரிமைகள் ஆணைக்குழு,
லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு,
தேசிய கொள்முதல் ஆணைக்குழு,
நிதி ஆணைக்குழு மற்றும் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழு
போன்றவற்றை நியமிப்பது தொடர்பிலும், சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் நியமனம் தொடர்பிலும் அரசியல் யாப்பின் 20வது திருத்தத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் ஜனாதிபதிக்குரியதாக இருந்த தனியுரிமை இங்கு இல்லாதாக்கப்பட்டிருக்கிறது.

இப்பொழுது அந்த நியமனங்களை அரசியல் யாப்பு சபையின் முன்மொழிவின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். எனினும் அதைத் தவிர ஜனாதிபதி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவர்களை விட ரணில் அவர்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவராகவே உள்ளார். இப்போதுள்ள நிலைமையின்படி அவராக விரும்பினாலொளிய 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முதல் யாராலும் வேறுவகையில் அவரை ஜனாதிபதி பதவியிருந்து கீழிறக்க முடியாது.

கடந்த ஜூலை மாதம் 12ந் திகதி அவர் ஜனாதிபதியானார். இப்போது அவரது சாதனைகளைப் பட்டியலிட்டுப் பார்ப்பது பயனுடையதாகும். அது யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல அடுத்து வரும் ஆண்டுகள் எப்படியிருக்கப் போகின்றன என்பதற்கான கட்டியம் கூறுவன.

அறகலயக்காரர்களை அடக்கிவிட்டார்
முப்படைகளை வசியப்படுத்திக் கொண்டார்


1. என்னதான் நிலைமை ஏற்பட்டாலும் மீண்டும் அறகலய எழுச்சி தனது ஆட்சிக்கு எதிராக தலையெடுத்து விடாது செய்வதற்கான ஏற்பாடுகளை அதிரடியாக நிறைவேற்றியது மட்டுமல்லாது, அது தொடர்பாக முப்படைகளும், அனைத்து பொலிஸ் மற்றும் உளவு அமைப்புகளும் விரும்பியபடி செயற்பட தாராளமாக விசேட அதிகாரங்களை வழங்கி, ராஜபக்சாக்களை விடவும் மேலாக தனது சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அறகலய எழுச்சியை ஒழுங்குபடுத்தியவர்கள், அதில் முன்னின்று செயற்பட்டவர்களை, அதில் பெரும்பாலும் குறிப்பாக இளைஞர்களையும் மாணவர்களையும், ஒரு சில நாட்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கில் சிறைகளுக்குள் போட்டு விட்டார். அதில் சிலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கட்டாக்காலித் தனமாக விரிவடைந்து கொண்டிருக்கும் போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் விற்பனைகள், கூலிக்கு கொலைகளையும் வன்முறைத் தாக்குதல்களையும் மேற் கொள்ளும் சமூக விரோதக் குழுக்கள், அரசின் கட்டமைப்பு முழுவதுவும் பரவியிருக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத முப்படைகளும் பொலிஸ் அமைப்புகளும், வன்முறையற்றரீதியில் தங்கள் வெறுப்பையும் விரக்தியையும் வெளிப்படுத்திய அறகலயகாரர்களை தேடி துரத்திப் பிடிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயற்படுகின்றன. அந்த அளவுக்கு முப்படைகளும் பொலிஸ் அமைப்புகளும் தன் மீது விருப்பமும் விசுவாசமும் கொண்டிருக்கும் நிலைமையை ஜனாதிபதி ரணில் நிலைநாட்டியிருக்கிறார். அவர் முக்கிய அரச கட்டமைப்புகள் அனைத்தையும் தனக்கு வசமாக இயக்குவதில் ராஜபக்சாக்களையும் விட கெட்டிக்காரன் என்பதனை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

வீதிகளில் காத்திருந்த மக்களை
வீடுகளில் காத்திருக்க வைத்து விட்டார்


2. இரவும் பகலும் என பல நாட்களாக பொதுமக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் சமையல் வாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும், டீசலுக்கும் பெற்றோலுக்கும் என காத்து நிற்க வேண்டிய நிலைமை தொடர்வது தனது ஆட்சிக்கும் ஆபத்து என்பதனால், அதனை மிகத் தந்திரமான முறையில் மடை மாற்றி விட்டார். அதனது அர்த்தம் அந்தப் பொருட்கள் தாராளமாக பொதுமக்களால் வாங்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி விட்டார் என்பதல்ல. நவீன தொழில் நுட்ப முறையான கியூ. ஆர்.குறியீட்டு முறையினைப் பயன்படுத்தி பொது மக்களை மேற்குறிப்பிட்ட பொருட்களை அவர்களுக்கு கிடைக்கும் நாள் வரை அவரவரது வீட்டிலேயே காத்திருக்க வைக்கும் மாற்று ஏற்பாடொன்றினை நடைமுறையாக்கி விட்டார். அவரவருக்கு அந்தப் பண்டங்கள் கிடைக்கும் நாட்களை மட்டுமல்ல, அவரவருக்கு அந்தப் பண்டங்கள் எந்த அளவில் கிடைக்கும் என்பதை அரச அதிகாரமே நிர்ணயிப்பதன் மூலம் பற்றாக்குறையாக இருந்தாலும் பொது மக்கள் பொறுமையாக இருந்து கிடைப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய ஒரு பங்கீட்டு முறையை நடைமுறையாக்கி விட்டார்.

கட்சிகளை வசப்படுத்திக் கொண்டார்

3. தனது அதிகார மற்றும் அரசியல் தேவைகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் கோருவதை நடைமுறையாக்குவதற்கும் வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும், தனது திட்டங்களை எதிர்ப்புகள் பெரிதாக இன்றி நடைமுறைப்படுத்துவதற்கும் ராஜபக்சாக்களின் கட்சிக்காரர்கள் மற்றும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களிடம் இருந்து மட்டுமல்லாது, முஸ்லிம்கள், வடக்கு-கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் கட்சிகளைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்களிடமிருந்தும் தேவையான ஆதரவை பெற்றுக் கொள்கின்ற கலையில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

ராஜபக்சாக்களை குளிரப் பண்ணி விட்டார்

4. அறகலயக் காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் தன்னை ஜனாதிபதி ஆக்கிய ராஜபக்சாக்சாக்கள் அறகலயக்காரர்கள் மீது கொண்டிருக்கும் பழி வாங்கும் உணர்வுகளுக்குதீனி போட்டது மட்டுமல்லாது, நாட்டில் அரசியல் உறுதித்தன்மையை நிலைநாட்டி விட்டார் என்ற புகழையும் பெற்றுள்ளார். பேரினவாதிகள், மத மேலாதிக்கவாதிகள், ஊழல் மோசடிக்காரர்கள், அரச அதிகார பிரபுக்கள், கொள்ளைலாபம் அடித்துக் கொண்டிருந்த முதலாளிகள், அரச அதிகாரத்தில் உள்ளவர்களோடு ஒட்டி நின்று சட்ட விரோதமாக திடீர் கோடீஸ்வரர்களாகி பெரும் சொத்துக்களை குவித்துக் கொண்டவர்கள், இயற்கைவள கொள்ளையர்கள் போன்ற வகையினர் அனைவரும், அறகலய எழுச்சியால் தங்களின் அதிகாரமும் சொத்தும் சுகமும் என வசதியாக இருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு எங்கே சிதறிப் போய்விடுமோ என அச்சம் கொண்டு ஆடிப் போயிருந்தார்கள்.

ஆனால் அவர்களெல்லாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக அவரவர் செய்து கொண்டிருந்த தேச விரோத, சமூக விரோத, மக்கள் விரோத செயல்களையெல்லாம் தொடர்ந்து செய்யக் கூடியதான கட்டமைப்பு எந்த வகையிலும் மாற்றமடையா வகையில் மீள உறுதிப்படுத்திய பெருமையும் அவருக்கே உரியது.

பகுதி 2ல் தொடரும்.....

Read more...

Sunday, March 13, 2022

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்.

“தேசியம்”, “தாயகம்”, “சுயநிர்ணயஉரிமை” என்பவற்றை ஏற்காதவர்களெல்லாம் துரோகிகள், ஒட்டுக் குழுக்கள் எனகடந்த 35 ஆண்டுகளாக பட்டமளித்து துள்ளிக் குதிப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்ததோடு, 13வது திருத்தத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனுமில்லை. அது தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு உரியவகையில் அதில் எந்தவித அதிகாரமும் இல்லை” எனவும், “13வது திருத்தத்தின் மூலம் அமைந்த மாகாணசபையை ஏற்கமாட்டோம், அனுமதிக்கமாட்டோம், தும்புக் கட்டையாலும் தொடமாட்டோம்” எனவும், “13வது திருத்தமும் அதன் மூலமான மாகாணசபையும் தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆக்கிரமிப்பு இந்தியாவால் தமிழர்கள் மீதுதிணிக்கப்பட்டஒன்று” எனவும், மேடை மேடையாக முழக்கங்கள் இட்டும், பத்திரிகைகளில் தலையகங்களாக வரும் வகைகளில் அறிக்கைகள் விட்டும் “எவடம் எவடம் புளியடிபுளியடி என தமது தேர்தல் அரசியல் தளத்தில் தமிழ் மக்களை அழைத்துச் சென்றவர்கள் இப்போது:-

13வது திருத்தத்தை இல்லாமற் செய்வதற்கோ அல்லது அதனை கரைத்து விடுவதற்கோ இடமளித்துவிடக் கூடாது என்கிறார்கள்.

13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நிறைவேற்ற வைப்பதற்கும், மாகாணசபையை தற்போதுள்ள அரசாங்கம் இல்லாமற் செய்துவிடாமல் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் துணை மிகவும் அவசியமானது என்கிறார்கள். அதற்கு இந்தியாவுடன் நட்பை – நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் – எவ்வகையிலும் தொடர்ந்து பேணவேண்டும் என்கிறார்கள்.

இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்கிறார்கள். இந்தியாவை மீறி வேறு எந்த நாடும் தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வரமாட்டாது என்கிறார்கள். 13வதில் இருக்கின்ற காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபை செயற்படுத்தியிருந்தால் ஜனநாயக வழிகளில் போராட்டங்களை நடத்தி அதற்கும் மேலாக அதிகாரங்களை கோரி பெற்றிருக்க முடியுமாம்.

மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் அதற்கு உள்ள குறைந்த பட்ச அதிகாரங்களைப் பாவித்து அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மட்டுப்படுத்தலாம், மேலும் அடிப்படையான பொருளாதாரத் துறைகளில் ஓரளவு அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்று தமது அறிக்கைகள் மூலம் 13வது திருத்தத்தினதும் மாகாண சபை முறையினதும் பயன்பாடுகளையும் அவசியத்தையும் அடுத்தடுத்து அடுக்கிறார்கள்.

இவற்றை உணர்வதற்கு இவர்களுக்கு 35 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றதா? இவர்கள் 35 ஆண்டுகளை வீணடித்து கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தெரிந்தே தவறவிட்டவர்கள். 5 ஆண்டுகள் மிகப் பெரும்பான்மையாகக் கொண்டவர்களாக மாகாணசபையின் ஆட்சியை வைத்திருந்தவர்கள். அது மட்டுமல்லாது 5 ஆண்டுகள் நல்லாட்சி என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தையே தமது செல்வாக்கின் கீழ் வைத்திருந்தவர்கள்.

அந்தவேளை, தமிழர்களுக்கான அரசியற் தீர்வைப் பெறுவதற்கு இந்தியா தேவையில்லை என்றவாறாக வீறாப்பு காட்டி செயற்பட்டவர்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத பெரும் சாதனைகளை நிகழ்த்துபவர்கள் போல கூச்சநாச்சமின்றி புலிகேசி வடிவேலு மாதிரி வேடம் கட்டி நாடகங்கள் நடத்திவிட்டு இப்போது ஒன்றும் தெரியாத பாப்பாக்களை ஊரார் ஏமாற்றிவிட்டார்கள் என்பதாகபாவனைகாட்டுகிறார்கள்.

35 ஆண்டுகளாககைகளுக்குஎட்டிய தூரத்தில் இருந்தஉண்மைகள் இப்போதுதானா இவர்கள் கண்ணுக்கும் அறிவுக்கும் பட்டிருக்கிறது? இவற்றை இவர்கள் இப்போது கூறுவதைப் பார்க்கையில் கோமாளிகள் வேடிக்கைகாட்டுகிறார்கள் என்றுகருதுவதா? இவர்களது இப்போதையபேச்சுக்களையும் அறிக்கைகளையும் பார்க்கையில் மீண்டும் தமதுவாக்குவேட்டைக்கு மக்கள் இன்றையநிலையில் விழுங்கக் கூடிய இரைகளை தமது பிரச்சாரத் தூண்டில்களில் கோர்த்திருத்திருக்கிறார்கள் என்றஎண்ணமே தூக்கலாகநிற்கின்றது.

இவர்களின் வேடிக்கையான நாடகங்களைப் பார்க்கையில் இன உணர்ச்சி உசுப்பேத்தலால் தமது மூளை கரள் கட்டிகல்லாகிப் போதலும் தெரியாத அப்பாவித் தமிழ்ச் சனத்தைநினைக்கையில் தான் “கடவுளாலும் இவர்களைக் காப்பாற்றமுடியாது” என்று வேதனைப்படவேண்டியுள்ளது. தமிழர்கள் மத்தியிலுள்ள சமூகப் பெரியவர்களும், படித்ததமிழ்ப் பிரமுகர்களும், தமிழ்ப் பத்திரிகைகளும் இந்தவாக்குவேட்டைஅரசியல் நடத்தும் போலித் தேசியக்காரர்களைப் பற்றி என்னதான் அவ்வப்போதுவிமர்சித்தாலும், அவர்களையே தமிழ் மக்களின் தகுதிவாய்ந்த அரசியற் பிரதிநிதிகளாகவும் தவிர்க்கமுடியாத தலைவர்களாகவும் தொடர்ந்து தூக்கிநிறுத்திவிடுகிறார்கள். மாற்று இல்லை என்பார்கள், ஆனால் மாற்றுக்கள் இங்குவேரூன்றுவதற்குக் கூட விடுவதில்லையே, பின்னர் எப்படிஅவைதலையெடுக்கமுடியும்.

இவைஒருபுறமிருக்க, இப்போது இந்தியாவைநோக்கிபாமாலைகள் சூட்டும் தமிழ்த் தேசியங்கள் அண்மைக்காலம் வரை – “இந்தியா ஓர் ஆக்கிரமிப்புநாடு”: “இந்தியா தனது நலன்களுக்காகதமிழர்களின் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டஒருநாடு”

இந்திய இராணுவத்தை அனுப்பிதமிழ்ப் பெண்களைக் கற்பழித்து பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைப் படுகொலைசெய்தஒருநாடு”

புலிகள் தமிழீழ விடுதலையை சாதித்துக் கொண்டிருந்தவேளையில் இலங்கை அரசுக்கு உதவிசெய்து தமிழர்களின் போராட்டத்தை அழித்த ஒருநாடு”

என தமது உள்ளுர் மக்கள் மன்றங்களில் குற்றச் சாட்டுப் பத்திரங்களை வாசித்துவந்தவர்கள் – தமதுபத்திரிகைகளில் கட்டுரை கட்டுரையாக எழுதவைத்து வெளியிட்டவர்கள்; – தமக்கிடையிலானகலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் கொந்தளித்தவர்கள் – முகநூல்களில் தொடர்ந்து அடுக்கிவந்தவர்கள்;. – “இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடு என்ற எண்ணத்தை தமிழ் மக்கள் மனங்களில் பதிவுசெய்யும் எண்ணம் கொண்டவிளம்பரப் பலகைகள் யாழ்ப்பாணத்துவீதிகளின் பலசந்திகளில் இன்னமும் உள்ளன. அப்போது இந்தியஆமிக்காரன் விருந்துகளுக்கு அழைத்தபோதுமட்டுமல்ல இந்த “தமிழ்த் தேசிய” சிற்பிகள் இப்போது இந்திய தூதுவராலயம் அவரகளது கொண்டாங்களுக்கு அழைக்கிறபோதும் முழங்காலில் ஓடிப்போய் முன் வரிசைகளில் அமர்ந்துகொள்கிறார்கள். இன்னமும் இவர்கள் இரட்டைமுகமும் இரண்டுகுணமும் கொண்டவினோதங்கள்.

இப்போது:- இந்தியா தொப்புள்குடிஉறவு கொண்ட தாய்நாடாம். இந்தியாவுக்கு சிங்களவர்கள் நண்பர்களாக இருக்கமாட்டார்களாம் – தமிழர்கள் தான் உண்மையான நண்பர்களாக இருப்பார்களாம்; இந்தியாவின் தேசியநலன்கள்மீது தமிழர்கள் தான் எப்போதும் அக்கறையாக இருப்பார்களாம்.

எனவே, 1987ம் ஆண்டுகைச் சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவற்றை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளைமேற் கொள்வதோடு, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் மாகாணசபைத் தேர்தல்களைஉடனடியாகநடத்துவதற்கும் இந்தியஅரசாங்கம் அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டுமாம். அது இந்தியாவின் வரலாற்றுக் கடமையும் பொறுப்புமாம்.

விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல இவர்களின் வெங்காயவீறாப்புகள் வேற. தாங்கள் சொல்கிறபடி இந்தியா தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையாக செயற்பட்டால், இவர்கள் சீனாவிடமிருந்து இந்தியாவின் தேசியபாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையெல்லாம் நிறுத்திவிடுவார்களாம். இவர்கள்தானாம் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடுமற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கேடயங்களாம். கேட்பவன் கேணையனாக இருந்தால் இவர்கள் எருமைக் கடாவின் கொம்பிலிருந்தும் நெய் வடித்துவிடுவதாககதையளந்துவிடுவார்கள். பாவம் தமிழ் மக்கள்.

“இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் முழுமையாக, இந்தியா அன்று அளித்த வாக்குதிகளை அர்த்தமுள்ளவைகளாக ஆக்கும் வகையில், நிறைவேற்றுவதை இந்திய அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும். அது இந்தியாவின் வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் ஆகும்” என்று கூறுவதற்கும் இந்தியாவை நோக்கி கேட்பதற்கும், இந்தியா இலங்கை அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்தபோது, அதுபற்றி எவ்வளவுதான் சந்தேகமும் விமர்சனங்களும் இருந்தபோதிலும், அதனைஏற்று, இந்தியாவின் நட்புதேவை – இந்தியாவின் உதவிதேவை – இந்தியாவின் உறவுதேவை என்ற ுதாங்கள் எதிர் நோக்கிய இழிவுபடுத்தல்களை, அவமானங்களை, ஆபத்துக்களை, இழப்புகளை, துரோகிப் பட்டங்களைபொருட்படுத்தாது, செயற்பட்டவர்களுக்கே உரிமையுண்டு. இந்தபோலித் தேசியங்களுக்கு எங்கே இருந்து அந்த உரிமைவருகின்றது.

ஓ! தோட்டக்காட்டான் – வடக்கத்தையான் மேட்டுக்குடி யாழ்ப்பாணத்தானின் வீட்டுவேலைக்காரன் என்ற எண்ணத்தில் இருந்துதான் அதுவருகிறதோ! தங்களது வீட்டுவேலைகளை தங்களுக்கு ஏற்றபடி தாங்கள் சொல்லுகிறநேரத்தில் இந்தியா செய்யவேண்டும் என்றநினைப்பில் இப்போதும் மிதக்கிறார்கள் போலிருக்கின்றது!

ஈழநாடு பத்திரிகைக்காக வரதராஜ பெருமாளால் எழுதப்பட்டது.

Read more...

Wednesday, February 16, 2022

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதம் – 1)

வடகிழக்கின் அரசியல் நிலைமை தொடர்பாக பேசுகின்ற அனைவரும் உச்சரிக்கின்ற எண்ணாக 13 டும் அதனூடாக கிடைக்கக்கூடிய அதிகராப்பரவலாக்கலும் அமைந்துள்ளது. குறித்த 13ம் திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் உள்ளது? அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான சாத்திப்பாடுகள் என்ன? தடைகற்களை தூக்கியெறியும் வழிமுறைகள் உண்டா? என இணைந்த வடகிழக்கும் முதலும் இறுதியுமான முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர் கடிதம் ஒன்றை மக்களுக்கு எழுதியிருந்தார்.

13ம் திருத்தச்சட்டத்தினூடாக நிறுவப்பட்டுள்ள மாகாண சபைகளின் அதிகார ஆழ-அகலம் தொடர்பான அலசலை கொண்டுள்ள அவரது மக்களுடனான தொடர் உரையாடல் கடிதத்தை காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம்..

வடக்கு மாகாண சபை ஒன்றே இப்போதைக்கு அனைத்துமாகாண சபைகளுக்குமான அதிகாரப் பகிர்வு விடயத்தை காத்திரமாக நகர்த்திச் செல்லக் கூடிய ஒரு அமைப்பாக இருக்கும்.

நாங்கள் பெருந்தொகையான தமிழர்களால் மாகாண சபையை ஏற்றதற்காக துரோகிகளாக பார்க்கப்பட்டோம்.

எங்களை பொதுமக்களில் எவர் ஆதரித்தாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் – நாங்கள் யாரையும் தேடிப் போய்ச் சந்தித்தாலும் அவர்களும்கொல்லப்பட்டார்கள்.

கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லாமல் பிடிவாதமாக இருக்கின்றது என்பதிலும்; மாகாண சபைகளுக்கு போதிய அளவு அதிகாரங்களை வழங்கவில்லை என்பதிலும் எனக்கு மறுப்புக் கருத்துக்கள் எதுவுமில்லை. இருப்பினும், கொழும்பு அரசாங்கத்தின் தயவில் தங்கி இருக்காமல், நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வமாக இப்போதுள்ள மாகாணசபை பயனுடையதாக அமைவதற்கு ஏதாவது முயற்சித்துப் பார்க்க வாய்ப்பு உள்ளதா? அல்லது இல்லவே இல்லையா? 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களுக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் பயனுள்ளவற்றை சுயமாகச் செய்வதற்கு ஏதாவது அதிகாரங்கள் மற்றும் வாய்ப்புக்கள் உள்ளனவா இல்லையா? என்பனவற்றை கேள்விக்கு உள்ளாக்கி விடை காண முற்படுவதே இங்கு எனது நோக்கமாகும்.

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

1987ல் இந்திய சமாதான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட 13வது திருத்த அரசியல் யாப்பின் காரணமாக 1988 ல் மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்து 2013ம் ஆண்டோடு இருபத்தியய்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இது சம்பந்தமாக பல கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் உள்ளன. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு மக்களால்தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன. 2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நாள் தொடக்கம் எப்போது வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரும்என்ற கேள்வியோடு அதனை எதிர்பார்த்திருந்தோம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கைகளைமுன்வைக்க வேண்டுமென 2010ம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் 2012ம் ஆண்டுக்கிடையில் இலங்கையில் நான் சந்தித்ததமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத்தவர்கள் மற்றும் தமிழ்த் தலைவர்களிடம் அதன் முக்கியத்துவத்தைவலியுறுத்தினேன். இந்தியாவிலும் அதே கருத்தை பல்வேறு மட்டத்திலும் வலியுறுத்தி வந்தேன்.

தெற்கில் எப்போதும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் கட்சியே மாகாணங்களிலும் ஆட்சிக்கு வருவது இதுவரைவழமையாக உள்ளது. 2007ம் ஆண்டு கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று திரு பிள்ளையான் அவர்களின்தலைமையில் ஆட்சி அமைந்த போதும் அது அரசியல் யாப்பு ரீதியில் அதற்குரிய அதிகாரங்களோடு செயற்படமுடியாமற் போன காரணங்களும் நெருக்கடிகளும் அங்கு இருந்தன. எனவே வடக்கு மாகாண சபை ஒன்றே இப்போதைக்கு அனைத்துமாகாண சபைகளுக்குமான அதிகாரப் பகிர்வு விடயத்தை காத்திரமாக நகர்த்திச் செல்லக் கூடிய ஒரு அமைப்பாக இருக்கும் என நம்பியதே அதற்குக் காரணம்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் நிலைமை ஆரம்பித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் தேர்தல்விஞ்ஞாபனம் ஆகியவற்றைப் பார்த்த போது இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வேதாளம் மீண்டும்முருங்கை மரத்தில் ஏறப் போகிறதோ எதிர்ப்பு அரசியல் மட்டும்தான் இங்கே எப்போதும் முன்னணி வகிக்கப் போகிறதோ ஆளும் அரசியலிலும் தமிழர்களுக்கு உரித்தான பங்குண்டு என்பது எக்காலத்தும் நிறுவப் படாதுபோகுமோ என்ற சந்தேகமே எழுந்தது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேர்தலின் போது தமது வாக்குவேட்டைக்கான அரசியலை நடத்தினாலும்கூட அது மாகாண ஆட்சிக்கு வந்ததும் நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட முடியும் – செயற்படமுயற்சிக்கும் என்ற எதிர்பார்க்கையும் என்னிடம் பல்வேறு சந்தேகங்கள் மத்திலும் இருந்தது. அதிலும் குறிப்பாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவங்களும் கொண்ட திரு விக்கினேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாக்குகளைப் பெற்றவர். உட்கட்சி எதிர்ப்புக்களையும் மீறி அவர் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற போது தனக்கு சரியெனப்பட்டதை செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள் முரண்பாடுகள், வெளிநாட்டுப் புலி ஆதரவாளர்களின் நெருக்குதல்கள் யாழ்ப்பாண மையத் தளங்களில் நிலவும் சிங்கள விரோத மற்றும் அரச விரோத அரசியலின் செல்வாக்கு போன்றனவற்றின் காரணமாக அவர் பல சிக்கலை எதிர்நோக்குவார் என்ற கணிப்புகளின் மத்தியிலும் சம்பந்தர், சுமந்திரன் போன்றோரின் ஆதரவுடன் திரு விக்கினேஸ்வரன் அதிகாரப் பகிர்வு விடயங்களை யதார்த்தபூர்வமாக நகர்த்துவார் என்ற எதிர்பார்க்கையும் அதைச் செய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் உடையவர் என்றநம்பிக்கையும் எனக்குள் இருந்தன.

அவர் தனக்குத் துணையாக தமிழர்கள் மத்தியில் இருக்கும் அனுபவங்கள் நிறைந்த நிர்வாகிகளின் துணையைத் திரட்டிக்கொள்வார் – இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான அனைத்து இன சட்ட வல்லுனர்களினதும் துணையைப் பெற்றுக்கொள்வார் – இலங்கையின் அனைத்துக் கட்சிகளிலும்; உள்ள அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவானவர்களின் அணைவைத்திரட்டிக் கொள்வார் – தமது கூட்டமைப்புக்காரர்களின் மத்தியில் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திவேலைத்திட்டங்கள் தொடர்பான யதார்த்த அணுகுமுறைகளைப் புரிய வைத்து தம்மோடு முன்கொண்டு செல்வார் என்றநம்பிக்கைகளும்; என்னுள் பல வகைப்பட்ட சந்தேகங்களுக்கு இடையேயும் நடமாடிக்கொண்டிருந்தன.

1988ல் நாங்கள் வடக்கு கிழக்கு மாகாண சபைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வேளையில் அந்தக் காலத்தில் எங்களுக்கு இருந்த தற்றுணிபுகளையும், சாதித்தே ஆக வேண்டும் என்ற ஓர்மத்தையும் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை.

அன்றைக்கு நாங்கள் பெருந்தொகையான தமிழர்களால் மாகாண சபையை ஏற்றதற்காக துரோகிகளாக பார்க்கப்பட்டோம்.

நாங்கள் எதிர்நோக்கிய பயங்கரவாத எதிர்ப்புகள் உயிர் ஆபத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எங்களுக்கு உள்நாட்டிலும்தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் இருந்த அளவுக்கு ஆதரவுகள் இருக்கவில்லை.

சோவியத் யூனியன் அன்றைக்கு உயிரோடு இருந்த உலக சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவுடன் நாம் மாகாணசபையை நடத்தியதால் வெள்ளைக்கார மேலைத்தேச நாடுகளின் ஊடகங்களும் அவற்றின் பல நிறுவனங்களும் எங்களுக்கு எதிராகவே செயற்பட்டன. எங்களைவிட மிகப் பல மடங்கு அதிகமான இந்திய ஆதரவு இவர்களுக்கு உண்டு. மேலும் பொருளாதார பலம் வாய்ந்த மேலைத்தேச நாடுகளின் ஆதரவும் இவர்களுக்கு உண்டு.

மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய நிலைமையை எமது அன்றைய நிலைமைகளோடு பொருத்திப்பார்த்தால் திரு விக்கினேஸ்வரன் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பல பத்து மடங்கு ஆதரவுத்தளங்களை எங்கும் கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகச்சிறிய அளவு நெருக்கடிகளே சிரமங்களே இவர்களுக்கு உண்டு.

எங்களுடைய நிலைமையோ முற்றமுழுதாக வேறாக இருந்தது. அன்று எங்களை பொதுமக்களில் எவர் ஆதரித்தாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் – நாங்கள் யாரையும் தேடிப் போய்ச் சந்தித்தாலும் அவர்களும்கொல்லப்பட்டார்கள்.

அவ்வப்போது இவர்களின் பொதுக் கூட்டங்களில் புகுந்து குழப்பம் விளைவித்தல், இருட்டில் வீட்டு யன்னல்களுக்கு கல்எறிதல், சாணியடித்தல், எஞ்சின் ஒயில் அடித்தல் ஆக மிஞ்சிப் போனால் இரண்டு நாட்கள் ஆஸ்ப்பத்திரியில் படுத்தால் சரியாகிவிடும் கணக்கில் புறமுதுகில் தடியடி நடத்திவிட்டு ஓடிவிடுதல் என நடத்தும்நாடகங்களைத் தவிர சரீரரீதியான ஆபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு கிடையாது.

அதேவேளை இவர்களுக்கு அரச படையினரே உத்தியோக பூர்வமான பாதுகாப்பையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அரசபடைகளின் குழப்ப நாடகங்கள் உண்மையில் இவர்களுக்கு சர்வதேச புகழையும் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அரசியற் செல்வாக்கையும் குவித்துக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டவையோ என்று சந்தேகம் கொள்ளும் வகையாகவே சம்பவங்கள் உள்ளன. இவ்வாறாக பல சாதகமான வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதுவும் திரு விக்கினேஸ்வரன் அவர்களை முதலமைச்சராகக் கொண்டுள்ள நிலையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக சாதனைகளை நகர்த்துவார்கள் அதற்கான அரசியலை ஆக்கபூர்வமாக முன்னோக்கி உருட்டுவார்கள் என நான் எதிர்பார்த்ததில் தவறேதும் இருக்க முடியாது.

வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. எங்களுக்குக் கிடைத்ததோ ஆறு மாதங்கள் மட்டும்தான். அதற்குப் பிறகு பிரபாகரனுக்கும் பிரேமதாசாவுக்கம் இடையே அரசியற் தந்திரோபாய தேன்நிலவு தொடங்கியதால் அதற்கு மேல் எல்லாமே தடைப்படத் தொடங்கி விட்டன. அந்த ஓராண்டுகளில் நாம் செய்தவைகள் இன்றும் பேசப்படும் பொருளாக உள்ளன.

நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டதாக கவலைப்பட்டோரை இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும் கண்டிருக்கின்றேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கே ஆறு மாதங்களில் இவ்வளவு தூரம் சமாதானமான பாதுகாப்பான சூழல் இருந்தும் வடக்கு மாகாண சபை இதுவரை நிறைவேற்றியிருப்பவை என்னென்ன என்ற கேள்வி எழுகின்றது. மாகாணசபையின் அதிகாரம் மற்றும் நிர்வாகத்துக்கு நேரடியாகச் சம்பந்தமில்லாத சில தீர்மானங்கள் மற்றும் 2013ம் ஆண்டுக்காக அரசு வழங்கிய நிதியை ஆளுநர் செலவழிப்பதற்கான சட்ட அங்கீகாரம் வழங்கியது என்பவற்றைத் தவிர வேறெதனையும் செய்ததாக என்னால் அறிய முடியவில்லை.

அரசாங்கம் நிதி எதுவும் தரவில்லை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகின்றது. கொழும்பு அரசாங்கம் ஒதுக்கிய 1700 கோடி ரூபாயில் 500 கோடி ரூபா மூலதன செலவுகளுக்கு உரியது. ஒதுக்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எந்தெந்த திட்டங்களுக்காக அவை ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களின் நிறைவேற்று நிலைகள் இப்போது என்ன நிலையில் உள்ளன என்பதற்கான திட்ட நிறைவேற்று மதிப்பு அறிக்கையை யாரும் பார்த்ததாகவும் என்னால் அறிய முடியவில்லை. நான் தூரத்திலே உள்ளவன் என்பதால் என்னால் அறிய முடியாமல் இருக்கவும் கூடும். மாகாண சபையின் இணையத் தளமாவது அனைத்து தகவல்களையும் தாங்க வேண்டும்.

மாகாண அமைச்சர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக என்னசெய்கிறார்கள். ஒரு சாதாரண அரசசார்பற்ற தொண்டு நிறுவன அளவுக்காயினும் அவர்களால் ஏதாவது செய்யப்படுகின்றனவா?

இவற்றிற்கு விடையாக ஆளுநர் எந்த அதிகாரங்களையும் அமைச்சர்களுக்குத் தரவில்லை எனவும் அரசாங்கம் அமைச்சுக்களுக்கு போதிய அளவு நிதி எதுவும் தரவில்லை எனவும் மாகாணசபையின் செயலாளர்களும் மற்றும் அதிகாரிகளும் ஆளுநரின் சொற்படி மட்டுமே நடக்கிறார்கள். அவர்கள் அமைச்சர்களின் கட்டளைகளுக்கு உட்பட்டவர்களாக செயற்படுகிறார்கள் இல்லை எனவும் கூறுவதோடு வாளாவிருந்து விடலாமா?

மாகாண சபையின் ஐந்து வருடங்கள் முடிந்த பின்பும் இதைத்தான் மக்களுக்குச் சொல்லப் போகின்றார்களா? இங்கு நான் யாரையும் விமர்சிக்கவோ அல்லது யாருக்கும் வழிகாட்டவோ அல்லது புத்தி சொல்லவோ முயலவில்லை. மாறாக இலங்கையில் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்த அரசியல் யாப்பு ஆகியன தொடர்பாக எனக்குள் எழுந்துள்ள சில கேள்விகளையே இங்கு முன் வைக்கிறேன். அவற்றிற்கு விடை கிடைத்தால் அவை தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு பயன்படும் என்று கருதியே இக்கேள்விகளை எழுப்புகிறேன்.

நான் தமிழர்களின் அரசியற் தலைவன் அல்ல. தமிழர்களின் அரசியலில் ஒரு சிறிய தலைவனாக இருப்பதற்கு வேண்டிய தகுதியோ திறமையோ கூட எனக்குக் கிடையாது. அதிலும் இப்போது தமிழர்களின் அரசியலில் பங்காளனாக இருக்கும் வாய்ப்பற்றவனாக என்னை நானே ஆக்கிக் கொண்டுள்ளேன். இது என்னுடைய நிலை மட்டுமல்ல வெளிநாடுகளில் இருக்கிற பல லட்சக்கணக்கானவர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. எவ்வாறாயினும் தமிழ் மக்களின் பொதுநலனில் எனக்குள்ள அக்கறையில் சந்தேகம் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். மேலும் மாகாண சபைகள், அதிகாரப் பகிர்வு தொடர்பாக சில அனுபவங்களைப் பெறும் வாய்ப்பை அதிஷ்டவசமாக எனக்கு வரலாறு தந்தது. அந்த அக்கறையிலும் அனுபவத்திலுமிருந்தே இதனை எழுதுகிறேன்.

கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லாமல் பிடிவாதமாக இருக்கின்றது என்பதிலும்; மாகாண சபைகளுக்கு போதிய அளவு அதிகாரங்களை வழங்கவில்லை என்பதிலும் எனக்கு மறுப்புக் கருத்துக்கள் எதுவுமில்லை. இருப்பினும், கொழும்பு அரசாங்கத்தின் தயவில் தங்கி இருக்காமல், நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வமாக இப்போதுள்ள மாகாணசபை பயனுடையதாக அமைவதற்கு ஏதாவது முயற்சித்துப் பார்க்க வாய்ப்பு உள்ளதா? அல்லது இல்லவே இல்லையா? 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களுக்கும் அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் பயனுள்ளவற்றை சுயமாகச் செய்வதற்கு ஏதாவது அதிகாரங்கள் மற்றும் வாய்ப்புக்கள் உள்ளனவா இல்லையா? என்பனவற்றை கேள்விக்கு உள்ளாக்கி விடை காண முற்படுவதே இங்கு எனது நோக்கமாகும்.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் தமிழர்களின் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகியுள்ள திரு விக்கினேஸ்வரனின் அறிவாற்றல் பற்றியோ அனுபவ ஆழம் பற்றியோ கேள்வி எழுப்பும் அளவுக்கு நான் அறிவோ அனுபவமோ உடையவன் அல்ல.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13வது அரசியல் யாப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான அவர்களது பாத்திரத்தை – சரியாக முழுமையாக – கடமை தவறாமல் -பொறுப்போடும் அக்கறையோடும் – ஆற்றுகிறார்களா? என்ற கேள்விகளின் அடிப்படையிலான ஆதங்கமே என்னை ஆண்டு கொண்டிருக்கின்றது. அதன் விளைவாகவே இங்கு 13து திருத்தம் மற்றும் மாகாண சபை பற்றிய பல கேள்விகள் எழுகின்றன அவற்றிற்கான பதில்களைத் தேடுகின்றன.

அவை அடுத்த கடிதத்தில் தொடரும்

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com