Wednesday, April 16, 2014

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு புகைப்படக் கலைஞர் கடலில் மூழ்கி மரணம்!

தங்கல்ல மெடில்ல கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவின் புகைப்படக் கலைஞரான 27 வயதுடைய திலங்க அமரக்கோன் இயற்கையெய்தியுள்ளார்.

நேற்று (15) கடலில் மூழ்கியுள்ளதுடன், அவசரமாக அவரைக் காப்பாற்றி தங்கல்ல வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். அதன்பின்னரே அவர் காலமாகியுள்ளார்.

குறித்த புகைப்படக் கலைஞர் மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

Tuesday, April 15, 2014

சுட்டுக்கொல்லப்பட்ட கோபி , அப்பன் ஆகியோரின் தாய்மார் விடுதலை. மீண்டுமொரு யுத்தத்திற்கு இடமளியோம். அஜித் ரோஹண

தாய்நாட்டில் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்றம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுவதை ஒரு போதும் விரும்புவதில்லையென்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன. அண்மையில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் பலர் கைதாகியுள்ளமை தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சிக்கு கருத்து தெருவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நாட்டில் பயங்கரவாதத்தை தலைதூக்க செய்வதற்கு முயற்சி செய்த சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களில் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் கோபி மற்றும் அப்பன் ஆகியோரின் தயாரும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலைமை தொடர்பில் விபரிக்கையில், அண்மையில் பளை பிரதேசத்தில் சுவரொட்டிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டி விட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேக நபர்களான கோபி, தேவயென், அப்பன் ஆகியோரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இவர்கள் மூவரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும் போது, கைது செய்யப்பட்ட 60 |பேரில் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நான்கு பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த பெண்களில் கோபி மற்றும் அப்பனின் தாயாரும் அடங்குகின்றனர். ஏனைய சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசேடமாக எமது தாயகத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று எற்படுவதை தடுப்பதற்கு பயங்கரவாதம் தலை தூக்காமல் இருப்பதையும் நோக்காக கொண்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் சகல இன மக்களும் இந்நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதை விரும்பவில்லை. பயங்கரவாதத்திற்கு புத்துயிரளிப்பதற்கு முயற்சிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Read more...

BBS பயங்கரவாத அமைப்பாக பெயர்பெற்றுவிட்டது...!

இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பதாகக் கூறும் பொது பல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அரசியல் வன்முறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ‘பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ Terrorism Research & Analysis Consortium (TRAC) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

TRAC – Terrorism Research & Analysis Consortium -’ பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ என்பது உலக நாடுகளில் அரசியல் வன்முறை தொடர்பில் ஆராச்சி மற்றும் பகுப்பாய்வு செய்யும் சர்வதேச நிபுணர்களை கொண்ட ஒரு ஆய்வு மையமாகும்.

பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமைகான காரணத்தை விளக்கியுள்ள அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் TRAC என்ற அமைப்பு “அவர்களின் நடவடிக்கைகள் மென்மையான இலக்குகள் மீது பயங்கரவாத செயல்களை ஒத்ததாக இருக்கிறது என தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களையும் TRAC என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Terrorism Research & Analysis Consortium (TRAC) இன் அறிவிப்பு (AD)

Read more...

இந்திய - இலங்கை மீனவர் நெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி! - தமிழ்நாடு அரசு காரணம்!!

இந்திய இலங்கை மீனவர் நெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கு தமிழ்நாடு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென இந்திய கடற்றொழில் அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டின் பேரில் மீனவர் நெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அங்கு பல தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன் தீர்வுகளுக்கு 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்தனர்.

எனினும், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததுடன் இதற்கு இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெலலிதா ஜெயராமின் அரசாங்கம் நேரடியாக பொறுப்பு கூற வேண்டுமென குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளத. இஅத்துடன் இச் செயற்பாடுகள் காரணமாக முக்கிய பிரச்சினைகளுக்கு நட்புறவு ரீதியிலான தீர்வுகளை எட்டமுடியாமல்போய் விட்டதாக இந்திய கடற்றொழில் அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தீர்வுகளை எட்டமுடியவில்லை. தீர்வினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருந்தது.

Read more...

சித்திரைப் புத்தாண்டு கொண்டாடச் சென்றவர் வாகன விபத்தில்!

மட்டு - வாகறைப் பொலிஸ் பிரிவில் சம்பவம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகறை பொலிஸ் பிரிவில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

கதிரவேலி பால்ச்சேனையை சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கல்லடியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சித்திரை புத்தாண்டு கொண்டாடச் சென்று திரும்பும் வேளையில் வீதி சமிக்ஞைக்காக நடப்பட்டிருந்த கம்பத்தில் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் சிக்குண்டுதாக வாகறை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வாகறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 18 வயதுடைய நாகராசா மோகன்ராஜா என்பவர் உயிரிழந்ததுடன் அவரது நண்பர் கதிர்காம தம்பி ஜீவேந்திரன் எனும் 18 வயது இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Read more...

எல்லோருக்கும் சுயமரியாதையும், கௌரவமும் உள்ளது.. புரிந்தால் வெற்றி நிச்சயம்! - குணசேக்கர

சிங்கள மக்களுக்கு மாத்திரம் இன்றி, ஏனைய மக்களுக்கும் சுயமரியாதையும், கௌரவமும் காணப்படுவதாக, சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு.குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னர் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியேனும் இருக்கவில்லை. ஆனால் தற்போது 10க்கும் மேற்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.

அதேபோன்று பௌத்த, சிங்கள கட்சிகளும் அதிகரித்துள்ளன. அனைத்து இன மக்களுக்கும் அவரவர்களின் இனங்களை பெருமையாக கருதுகிறார்கள்.

இலங்கைக்கு ஆதரவளிக்கின்ற சீனா, ரஷ்யா, கியுபா, வியட்னாம் போன்ற நாடுகள் இடதுசாரிகளாக காணப்படுகின்றன.

இந்த நிலையில் ஏனைய இனங்களை மதித்து நடக்கக்கூடிய மனிதத்துவத்தை பெற முடியாவிட்டால், இலங்கையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் சி.இ.டபிள்யு.குணசேகர தெரிவித்துள்ளார்

Read more...

Monday, April 14, 2014

புலிகளுடனான ஊடக யுத்தத்தில் இலங்கை அரசு வெற்றிபெற முனைய வேண்டும்! - பேராசியர் ரொஹான் குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் அரசாங்கம் தோற்கடித்த போதிலும் ஊடக கள முனையில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதிலிருந்து பாரியளவிலான பிரசாரப் போராட்ட இயக்கமாக பரிணமித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், போலியான தகவல்களின் அடிப்படையில் புலிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசார போராட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை இராஜதந்திரிகள் கூடுதல் முனைப்பு காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் காத்திரமான தொடர்புகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ள அவர், தமிழ் ஊடகங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இனவாதிகள் அல்லாத இளம் அரசியல் தலைவர்களை இலங்கை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அதிகளவான தமிழ், முஸ்லிம்களை பாதுகாப்புப் படையில் அரசாங்கம் இணைத்துக்கொள்ள வேண்டுமெனவும், போலியான செய்திகளை முறியடித்து உண்மையான தகவல்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், மேற்குலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நந்தகோபன் என்ற புலித் தலைவரை கைது செய்தமை புலிகளுக்கு எதிரான முக்கிய திருப்பு முனையாக அமையும் எனத் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் மாற்றம் செய்யக் கூடாது எனவும், தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்தினால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் மீள யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து SMS

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மலர்ந்துள்ள தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு, தனது வாழ்த்துச் செய்தியை குறுஞ்செய்தியாக சகல தொலைபேசி எண்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

"Oba Samata Suba Aluth Avuruddak Weva! Ungal Anaivarukkum Puththandu Nalvalthukkal! Wish You All a Very Happy New Year! - President Mahinda Rajapaksa

Read more...

எனக்கும் கீதாவுக்குமிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை! -சான் விஜயலால்

தனக்கு தென் மாகாண சபை உறுப்பினர் கீதா குமாரசிங்கவுடன் எவ்வித தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை என, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் சில்வா குறிப்பிடுகிறார்.

“நான் தென் மாகாண சபைக்கு ஆறு முறை தெரிவாகியுள்ளேன். மூன்று முறை முதலமைச்சராகியுள்ளேன். முதற்றடவையில் எனக்கு 21,000 வாக்குகள் கிடைத்தன. இம்முறை 96,000 வாக்குகள் கிடைத்துள்ளன.

நான் என்றும் மக்களுடன் ஒன்றிணைந்தே இருந்தேன். மக்களின் தேவைகளை இயலுமான முறையில் நிறைவு செய்தேன். மக்களுக்குத் தேவையான சேவையை தொடர்ந்தும் நான் செய்வேன்.

எனக்கு கீதா குமாரசிங்கவுடன் ஒருபோதும் தனிப்பட்ட பிரச்சினை இருக்கவில்லை. வாக்காளர்கள்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். எங்கள் எல்லோரைப் பற்றியும் அவர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

பொதுவாக சகல வேட்பாளர்களும் தங்களுக்கான தங்களுக்காக தாங்கள்தான் தேர்தலுக்காக முன்னின்று உழைப்பார்கள். விருப்பு வாக்கு முறைக்கேற்ப நாங்கள்தான் அதில் வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.

பொதுமக்கள் எனக்கு அளித்த ஒத்துழைப்புக்காக நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் என்றும் அவர்களுடன் கை கோத்திருப்பேன்” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

மாகாண சபை வரவு - செலவில் தோற்றவர்களுக்காக ஒழுக்காற்று விசாரணை வேண்டாம்! - வாசு

மாகாண நிருவாகங்களின் வரவு - செலவினைத் தோற்கடிப்பதற்காக முன்னணி வகிக்கின்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வது முழுமையாக தவறான செயல் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கிறார்.

அது முழுமையாக அவ்வவ் மாகாண நிருவாகங்களுக்கான பிரச்சினையாக இருப்பதால், அந் நிருவாகங்களில் இருக்கின்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை நடாத்துவது தேவையற்ற விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

எனக்குத் தெரியாத சந்திரிக்காவா? வாயைத் திறந்தால் பொய்!

தான் இறக்கும் வரையில் ஜனாதிபதியாக இருக்குமாறு தான் யாப்பை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க குறிப்பிட்டுள்ளதானது மிகப் பெரிய பொய்யே என முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க குறிப்பிடுகிறார்.

உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி, இரண்டு முறைகளுக்கு மேலாக நான் ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்க மாட்டேன் எனச் சொல்லியிருந்தார். அது மிகப் பெரிய பொய்யாகும். நான் அவரை இலங்கைக்கு அழைத்துவந்த, அவரது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர். அவர் இறக்கும்வரை ஜனாதிபதியாக இருப்பதற்கான யாப்பை அமைப்பதற்கு எவ்வளவோ முயன்றார். இறைவன் துணையால் அவருக்கு அது முடியவில்லை. காரணம் அவருக்கு அவ்வளவாக வாக்குகள் கிடைக்கவில்லை.

எதிர்க்கட்சியினராகிய எங்களைச் சேர்த்துக் கொள்வது எப்படிப் போனாலும், இருக்கின்றவர்களைச் சரியாக வைத்துக் கொள்ளவும் தெரியவில்லை. 11 ஆண்டு ஆட்சி செய்தார்.. செய்தது ஒன்றுமில்லை. சிறியதொரு இடமேனும் கிடைத்திருந்தால் அவர் யாப்பை மாற்றி இறக்கும் வரை அரசியலில் இருந்திருப்பார். அவருக்கு அதற்கு அக்கால ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இடம்கொடுக்கவில்லை.”

(கேஎப்)

Read more...

இனிதாக வந்திட்டாள் சித்திரைப் பெண்ணாள்!

-கவிஞர் கலைமகன் பைரூஸ்

இளவேனில் காலத்தே இனிதாய் பூத்து
இந்துவுக்கும் பௌத்தனுக்கும் மகிழ்வீந்து
இளமுகத்தொடு நாளும் மகிழ்ந்திருக்க
இனிதாக வந்திட்டாள் சித்திரைப் பெண்ணாள்!

அதிகாலை துயிலெழுந்து இறையைப் போற்றி
அழகான ஆடைகள் எடுப்பா யணிந்து
சித்திரைப் புத்தாண்டீதில் சுற்றம் சூழ
சேர்ந்தே மகிழ்ந்திருக்க வந்தாள் சித்திரையாள்!

பட்டாசு பலவாக கொளுத்தி யின்று
பணியாரம் கொக்கீசொடு பழப்பாகும்
முட்டுகின்ற மணத்தோடு பண்டம்பலவும்
முனியாமல் வழங்கிட வந்தாள் சித்திரையாள்!

கோயில் விகாரையெங்ஙனும் மணியோசை
கேட்டே விரைந்து செல்வர் மனம்மகிழ்வர்
போயிடுமே துன்பமெங்கும் பண்டிகையீதில்
பந்தமாய் எல்லோரும் மகிழ்ந்திட சித்திரையாள்!

எத்திக்கும் புகழ்மணக்க வந்ததுகாண் சித்திரையாள்
எங்களுக்குள் இல்லை பிரிவினைதான் என்றிடத்தான்
நித்திலத்து இந்து - பௌத்தன் கைகோக்க
நலமாக வந்ததுகாண் சித்திரைப் பெண்ணாள்!

காவிதாவும் கமலாவும் கைகோத்துச் செல்கின்றார்
கமலனும் விமலதாசவும் மனம்மகழ்ந்து செல்கின்றார்
புவியினிலே மலர்ந்திட்ட இப்புத்தாண்டீது -நற்
பண்பினையே வளர்த்திட ஆசிப்போமே நாம்!

Read more...

Sunday, April 13, 2014

இன்று மெல்போர்ணில் இடம்பெற்ற அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள் இணைப்பு)

இன்று (13) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.

குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை நல்கி பெருமளவு திரண்டிருந்தன. சரியாக 1.45 மணிக்கு பெருமளவான தேவாலயங்களில் அகதிகளுக்கு ஆதரவாக மணியொலிகள் எழுப்பப்பட்டன.

கிறிஸ்தவ அமைப்புக்கள் அகதிகள் தொடர்பில் தமது கரிசனையையும் அவுஸ்திரேலிய அரசின் அகதிகள் மீதான அணுகுமுறை தொடர்பாக தமது விமர்சனத்தையும் வெளிப்படையாக அறிவித்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டன. வழமைபோல் அகதிகள் விடயத்தில் தீவிரமாகப் போராடிவரும் இடதுசாரி அமைப்புக்கள், பொதுநல அமைப்புக்கள், மனிதவுரிமை அமைப்புக்கள் என்பனவும் இப்பேரணியிற் கலந்துகொண்டன.

அவுஸ்திரேலியாவின் மூன்றாவது பெருங்கட்சியான கிறீன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தமது உரையை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் நகரிலிருந்து முதன்மை வீதி வழியாகச் சென்ற இப்பேரணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதாகைகளை ஏந்திவந்ததோடு அகதிகளுக்கு ஆதரவாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு வந்தனர்.

Read more...

இலங்கையைக் குழப்பியடிக்க வடக்கில் இரகசியப் பேச்சில் இங்கிலாந்து புலிகளின் முகவர்...!

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள புலிகளின் முகவர் ஒருவர் இரகசியமாக வடக்கில் சுற்றுலாப் பயணத்தில் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவின் உளவுத் துறை குறிப்பிடுகின்றது.

குறித்த நபர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பேச்சுவார்த்தை நடாத்திவருவதுடன், அதற்காக பண உதவி வழங்குவதற்காகவே இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐ.ரீ. சம்பந்தன் எனக் குறிப்பிடப்படும் குறித்த சந்தேகநபர், 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் பிரசாவுரிமை பெற்றிருப்பதுடன், இலண்டனிலுள்ள புலி ஆதாரவாளர்களுடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் நீண்டகாலமாக இரகசிய தொடர்பு வைத்துவந்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் அரசியல் விடயங்களுக்குப் பொறுப்பாக ஐ.ரீ. சம்பந்தன் இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிற்பதற்கு சோபித்த தேரர் இரகசியப் பேச்சு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியிலிருந்து நிறுத்தப்படும் பொது வேட்பாளர் தொடர்பில் மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் அரசாங்கத்தின் சிறுபான்மைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், அமைச்சர்கள் பலரிடையே இரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அறியவருகின்றது.

மிக விரைவில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அதற்கு இப்பொழுதே முன்னாயத்தப்பட வேண்டும் என தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை அரசாங்கத்தின் மேல்மட்டத்திற்கும் சென்றுள்ளதெனத் மேலும் தெரியவருகின்றது.

(கேஎப்)

Read more...

கல்முனைக்குடி பள்ளிவாயலுக்கு முன்னால் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதின! இஸ்ஹாக்

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இன்று அதிகாலை (13) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் பாரிய வீதிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த தமீம் என்பவரின் மனைவி உட்பட அக்கரைப்பற்ரை சேர்ந்த பெண் ஒருவரும் ஸ்தலத்திலேயே மரணித்ததாகவும் கொழும்பை சேர்ந்த ஒருவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் சுமார் 20 க்கு மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்றும், கல்முனை வவுனியா லேலன்ட் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

மேற்படி விபத்தில் இரு பஸ்களும் முன்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளதுடன் கல்முனை வவுனியா லேலன்ட் பஸ்ஸில் சாரதியின் இருக்கைக்கு அருகில் மதுபானத்துடனான போத்தலும் காணப்பட்டது. மதுபோதையில் அந்த பஸ் சாரதி பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கல்முனை பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.எம். கப்பார் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Read more...

கணக்குத் தெரியாத ரணில் “தோல்வியுறுவது எவ்வாறு?” என பாடம் நடாத்த வெளிநாடு சென்றுள்ளார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இருவரும் தென் மற்றும் மேல் மாகாண தேர்தலில் கணக்குப் பாடத்தில் சித்தியடையவில்லை என, துறைமுக, பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில் -

“இவர்கள் இருவரும் கணக்குப் பாடத்தை நன்கு கற்றுத் தேரியதன் பின்னரே தேர்தல் முடிவுகள் பற்றி அலச வர வேண்டும். கணக்கில் பிழைத்தவர்களுக்கு மேலே செல்ல முடியாத என்பதை இந்த இருவரும் இன்னும் தெரியவில்லை.

ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுக்குப் பயணமாகியுள்ளார். அமெரிக்காவில் பல்கலைக் கழகமொன்றில் விரிவுரையாளராக கடமையாற்ற அவரால் இயலும். அங்கு, தொடர்ந்து தோல்வியுறும் நிலைபற்றி அவரால் விளக்கமுடியும். தோல்வியுறும் வழிபற்றித் தெரியுமா? என வெளிநாட்டவருக்குப் பாடம் கற்பிக்க அவரால் இயலும். வெற்றிபெறும் முறை பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்ல எங்களால் இயலும்.

அரசாங்கம் எனும் மரத்தின் வேர் ஆட்டம் காண்பதாகவும், அதனால் இலகுவில் மரத்தைச் சாய்த்துவிட முடியும் எனவும் முழங்குகின்றார் ரணிலார். அவர் அரசாங்கத்தை வாடிப் போன வாழை மரமாக கருதுகின்றார் போலும்…

எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் மிகச் சிறப்பான வெற்றியை அரசாங்கம் தனதாக்கிக் கொள்ளும் என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஊவா மாகாண சபை வெற்றி கண்டதன்பின் ரணிலும், அநுரவும் கணக்குப் பார்க்கப் போகாமல் இருந்தால் போதும்”

(கேஎப்)

Read more...

Saturday, April 12, 2014

ஞானசாரரின் அடாவடித்தனத்தின் பின்புலத்தில் அதிகாரவர்க்கம் நிற்கின்றது! - ரவூப் ஹக்கீம்

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசாரர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம், ஜாதிக்க பல சேனா அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த ஊடகச் சந்திப்பை சீர்குலைத்தமைக்கு ஏதேனும் ஓர் அதிகார வர்க்கத்தினரின் உதவி கிடைத்திருக்கின்றது என்று சொல்வதற்குக் காரணம் அங்கு பொலிஸார் நடந்துகொண்ட முறையே என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற அமைச்சர் ரவூப் குறிப்பிடுகிறார்.

அண்மைக் காலமாக நடந்துவருகின்ற இவ்வாறான விடயங்களை எடுத்துநோக்கும்போது, இந்நாட்டு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிராக சில பௌத்த மதகுருமார் தம் மார்க்கத்திற்கு இழிவு உண்டுபண்ணும் வகையில் நடந்துகொள்கின்றமை கோடிட்டுக் காட்ட வேண்டியதொரு விடயமாகும் என அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த குழுவினர் நடந்துகொண்ட முறைபற்றி முழு நாடும் தற்போது தெரிந்துகொண்டுள்ளது. அதுமட்டுமன்றி குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தை சரிவர நிறைவேற்ற வேண்டியவர்கள் நடந்துகொண்ட முறைபற்றியும், அந்நிகழ்வு நடைபெறும்வேளை கொம்பனித் தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸார் இதனை சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டதும், புதுமையாக இருக்கிறது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com