Tuesday, February 13, 2024

மாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர். டி.பி.எஸ்.ஜெயராஜ்

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘ சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது.2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார்.

இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை.

தமிழரசு கட்சியின் மகாநாடு

சுமார் ஒரு தசாப்தகாலமாக ” நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது ” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது.

2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே.

ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது.

பொதுச்செயலாளர்

இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது.

தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார்.

மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர்.

பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை ‘ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர்.

பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம் ‘ என்ற வாக்குகளும் ‘ இல்லை ‘ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன.

சண்முகம் குகதாசன்

செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர்.

சேனாதிராஜா அப்போது “விசித்திரமான ” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார்.

சிறிதரனும் சுமந்திரனும் மாவையின் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர்

சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது.

பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல.

சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார்.

சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா ” கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார்.

சட்டரீதியான நிலைப்பாடு

அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஔிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார்.

அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான நற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே.

ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும்.

இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம்.

ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார்.

மகன் கலையமுதன்

மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார்.

இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுைகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன.

மாவையின் கடந்த காலம்

தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன்.

அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார்.

அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை ” சேனாதி அண்ணை ” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com