Saturday, June 20, 2009

கபில் அம்மான் எங்கே? -வன்னிமகள்-


புலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்லை. உலகில் உள்ள முன்னணி புலனாய்வுப் அமைப்பொன்றின் செல்லப்பிள்ளையாக வலம்வரும் கே.பி யின் கழுத்திற்கு தன் எஜெமானர்களால் கயிறு வீசப்படும்போது நாம் அந்த உண்மையை ஏற்க வேண்டும் என்பதை நோர்வே அமைச்சர் எரிக் சொல்கேம் அவர்கள் தனது இராஜதந்திர மொழியில் லண்டன் BBC HARD TALK நிகழ்சியினூடாக சொல்லியிருக்கின்றார் எனக் கொள்ளலாம்.

அதாவது பிரபாகரன் தலமையிலான புலிகள் சரணடைய முற்பட்டார்களாம் .. ஏதோ.. ஏதோ.. எல்லாம் கூறி சகல உண்மைகளும் ஓரிரு வருடங்களில் வெளிவரும் என கூறியிருக்கின்றார். எப்போது அந்த தினம்? சர்வதேச புலனாய்வு வலையில் சிக்கியுள்ள கே.பி நன்றாக புளியப்பட்டு சக்கையாக தெருவில் வீசப்படுவார். அன்று சர்வதேசம் உண்மைகளைக் கக்கும். அந்த தினமே உண்மை புலரும் தினம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த உண்மைகள் உணரப்பட்டனவாக இருக்கின்றபோது அந்த நாள் (ஓரிருவருடம்) வருவதற்குள் எம்மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படப்போகின்றார்கள் என்பதே வேதனைதரும் விடயமாகும்.

ஏமாற மனிதர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபேர்வழிகள் இருக்கத்தான் செய்வார்கள். எனவே உலகில் ஏமாற்றத்தை ஒழிக்க வேண்டுமாயின் மக்கள் எமாறுவதை தவிர்க்க வேண்டும். துண்டுகளாகவும் துகழ்களாகவும் உடைந்து விலாசங்கள் இல்லாமல் அவயக்குரல் எழுப்புகின்ற புலம்பெயர் புலித்தொழிலாளர்கள் மீது தமிழ் மக்கள் தமது கழுகுப்பார்வையைத் திருப்பவேண்டும். விழிப்படையவேண்டும்.

பாதுகாப்புநிதி என்றும் அவசரகாலநிதி என்றும், விமானப்படைக் கட்டுமானநிதி என்றும், ஏவுகணைவாங்க நிதி என்றும் பல விதமான பெயர்களில் வீர வாக்கியங்கள் கூறி தமிழ் மக்களின் குருதியை உறிஞ்சியதற்கு ஒப்பான அப்பணத்தில் பெரும்பகுதியை பதுக்கி கொண்டு ஒரு சிறு தொகுதிக்கு ஆயுதங்களை வாங்கி வன்னிக்கு அனுப்பி புலிகளை அரசியல் ரீதியாக வளர விடாமல் பயங்கரவாத அமைப்பாக வடிவம்பெற முற்று முழுதாக செயற்பட்டவர்கள் இறுதியில் அவ்வியக்கம் பலவீனம் அடைந்தபோது அவர்களுக்கு தேவையான இராணுவ உபகரணங்களை வழங்காமல் திட்டமிட்டவகையில் வன்னியினுள் முடக்கி விடயங்களைக் கச்சிதமாக நிறைவேற்றி விட்டு எஞ்சியுள்ளவற்றையும் முடிப்பதற்கும் தமிழீழ மக்களின் குருதியை தொடர்ந்தும் உறிஞ்சுவதற்கும் எத்தனித்து வருகின்றனர்.

புலிகள் கடந்த 3 தசாப்தங்களாக மக்களை மடையர்களாக்கி யாவும் முடிவுற்ற நிலையிலும் சர்வதேச புலனாய்வு பிரிவினரின் சட்டிக்குள் போட்ட கறியாக கிடக்கும் பலிக் கடாக்கள் சில சேர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசொன்றை நிறுவப்போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் கேபி தரப்பின் இந்த அறிவித்தலானது மக்களில் பலரை விழிப்படையவைத்து புலிகளின் உண்மை முகத்தையும், தமிழீழம் எனும் மாயையை புலிகள் எவ்வாறு தமது பிழைப்புக்காக பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

இவை அனைத்திற்கும் அப்பால் மேற்குலகத்தை தமிழ் மக்கள் மீது ஓர் தவறான அணுகு முறைக்கு தூண்டி விட்டு, அம்மக்களை அந்நாடுகள் சந்தேக கண் கொண்டு பார்க்கும் போது, மக்கள் அவர்களில் வெறுப்பும் சந்தேகமும் கொண்டு புலிகளின் உதவியை நாடுவர் என்பதுவே புலிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேற்குல நாடுகளில் தனிமனித சுதந்திரத்தை மேம்படுத்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அங்கு கிழர்சி, புரட்சி என்பவற்றை அடக்குவதற்கு மிகவும் கடினமான சட்டங்கள் காணப்படுகின்றது. அத்துடன் தம் நாடுகளில் எந்த விதமான கிழர்ச்சி மற்றும் புரட்சிக்கு இடமளிக்காமலே அவர்கள் தத்தம் நாடுகளை ஆட்சி செய்து வருகின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழம் எனும் சொற்பதம் மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறிவருகின்றது.

இவ்விடயம் அனைத்து நாடுகளாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப் படுகின்ற விடயமாக பேசப்படுகின்றது. அவ்வாறானதோர் போலி நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படும்போது அது தமது நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பாக அவர்கள் மிகவும் ஆத்திரமடைந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இனவாதம் என்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் நாடுகளில் தமிழீழம் எனும் இனஉணர்சிகளைத் தூண்டும் சொற்பதம் சர்ச்கைக்குரியது என்பதுடன் ஐரோப்பாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஓர் தேர்தலில் நின்ற தமிழ் வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஆதரவு தேடுதல்களின்போது தமிழர்கள் தமிழருக்கே வாக்களிக்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வாதங்கள் பல நாட்டு அரசாங்கங்களாலும் அவதானிக்கப்பட்டு அதன் விளைவுகள் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இவ்விடயங்களை மக்கள் உணர்ந்துள்ளதுடன் எதிர்காலத்தில் புலிகளினால் ஒருங்கிணைக்கப்படுகின்ற எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்வதற்கு அச்சம்கொண்டுள்ளதை உணர முடிகின்றது. காரணம் இவ்வாறான சட்டத்திற்கு முரணான விடயத்திற்கு துணைபோபவர்கள் நாடொன்றின்: சட்டதிட்டங்களை மீறி அந்நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த குற்றத்திற்காக தண்டிக்கப்படுவர் என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

மக்களின் இந்த நிலையை உணராத கே.பி யுடன் கூடிய பினாமிகள் மக்களின் ஆதரவு கிடைக்காததையிட்டு தமது பழைய பாணியில் புலனாய்வுத் துறை எனும் பெயரில் அறிக்கை ஒன்றை விட்டு மக்களை விரட்டவும் மூளைச்சலவை செய்யவும் முற்பட்டுள்ளனர். அத்துடன் புலனாய்வுத்துறை எனும் பெயரில் வெளிவந்துள்ள அவ்வறிக்கையின் நோக்கம் சாதாரண ஒரு குழந்தைக்கும் புரியும்.

புலிகளின் புலனாய்வுத்துறை எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அவ் அறிக்கை, புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவின் தலைவர் கதிர்காமத்தம்பி அறிவழகன் சார்பாக வெளியிடப்பட்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு யார் இந்த கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பதும், எதற்காக அவர் பெயர் பாவிக்கப்பட்டது என்பதும் யோசிக்க படவேண்டிய விடயங்களாகும். கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பவர் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளிமாவட்ட பொறுப்பாளராக இருந்த கபில் அம்மான் என்பவராகும். பொதுவாக கபில் அம்மான் புலனாய்வு வேலைகளில் பரீட்சயமானவர் என்பது அனைவராலும் அறியப்பட்ட விடயம். எனவே அவரது பெயரில் அறிக்கை ஒன்றை வெளிவிடுகின்றபோது மக்களை மிரள வைக்கலாம் என்பதே கேபி கும்பலின் எதிர்பார்ப்பு.

அவ்வறிக்கைளின் ஒவ்வொரு வசனங்களுடாக செல்கின்றபோது, அது முற்று முழுதாக கே.பி யின் தலைமையை தமிழ் மக்கள் மத்தியில் திணிப்பதாகவும், அவர் இத்தேசத்திற்கு இழைத்துள்ள துரோகங்களை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் புலிகளின் புலனாய்வுத் துறையும் புலித்தலைமையும் பல வரலாற்றுத் தவறுகளை இழைத்துள்ளபோதும் அவ்வியக்கம் இதுவரைகாலமும் எந்த ஒரு தவறிற்கும் உரிமைகோரியோ அன்றில் மன்னிப்பு கோரியோ இராத நிலையில் கேபி என்கின்ற மனிதனின் தவறுக்காக புலனாய்வுத்துறை மன்னிப்பு கோரியுள்ளது என்பதை எடுத்து நோக்குகின்றபோது, இன்று புலிகளியக்கத்தை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர கேபி யினால் வெளியிடப்பட்ட அறிக்கையாகவே இதை கருத முடியும். சொல்வதற்கு பொய்களும் இல்லாமல் அவற்றை வெளிகொணர்வதற்கு ஆட்களும் இல்லாமல் தவிக்கும் கேபி கும்பலின் தொடர் பொய்களே அவர்களை தோலுரித்து காட்டுகின்றது.

தமிழ் மக்களை ஏமாற்ற கே.பி யின் அடுத்த சாதனமாக பயன்படுத்தப்படுவது தமிழர் தரப்பில் இல் உள்ள சிலரது கல்வித் தகைமைகள். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது எனும் பழமொழியை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். உருத்திரகுமாரது கல்வித்தகைமையும் அவரிடமுள்ள பட்டமும் அவர் மனைவி மை கஸ்பன்ட ஸ் எ லாயர் என்று நெஞ்சை நிமிர்த்துவதற்கு ஏதுவாக அமையுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இவரது தகமை உதவியதான வரலாறு இல்லை. மாறாக இவர்கள் தமிழ் மக்களை புலிகள் ஏமாற்றுவதற்கு துணை நின்றவர்கள் என்பது வெளிப்படை உண்மை.

இவர்கள் தமிழ் மக்கள் அல்லது புலிகளியக்கத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டிருந்தவர்களாக இருந்திருந்தால் எத்தனையோ விடயங்களை செய்திருக்கமுடியும். புலிகள் கடைசி நேரத்தில் சரணடைவதற்கு தயாராக எத்தனையோ தரப்பினரிடம் உதவிகோரியதான கதைகள் உண்டு. அவற்றை சில சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றார்கள். அத்தருணத்தில் உருத்திரகுமார் போன்றோர் எங்கிருந்தார்கள். இவர்கள் ஏன் வெளியில் வந்து அவர்களுடைய சரணடைவிற்கு சட்டரீதியாக உதவி புரியவில்லை. சரணடைதலுக்கான அனுமதியை அங்கீகாரத்தை உரியதரப்பிடம் இருந்து உலகறிய எடுக்கவில்லை?

இறுதியாக இலங்கை அரசு பிரபாகரன் உட்பட பல தளபதிகள் இறந்துவிட்டதாக அறிவித்திருந்தது. புலிகளின் ஆலோசகர்கள் என சர்வதேச மட்டத்தில் தம்மை அறிமுகப்படுத்தி கொண்டவர்கள் தமக்கான முகவரி தேடிக்கொண்டவர்கள். ஏன் பிரபாகரனது சடலத்தை தன்னும் சட்ட ரீதியாக பாரம் எடுக்க முயற்சிக்க வில்லை? இவ்வாறு இவர்கள் விட்ட தவறுகள், எடுத்திருக்கக் கூடிய முயற்சிகளை அடிக்கிக்கொண்டே போகலாம். (அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதப்பட்டு வரலாற்றில் பதியப்படும்.) ஆனால் இவற்றை எல்லாம் மக்கள் சிந்திப்பார்கள் என்ற சிந்தனை இல்லாமல் இவர்கள் தொடர்ந்தும் மக்கள் முன்தோன்றி அவர்களை ஏமாற்ற முனைகின்றனர்.

இவர் நாடுகடந்த தமிழீழம் அமைக்கும் முன்னர் ஒரே ஒரு வேலைத்திட்டத்தை செய்து முடிக்கவேண்டும். அது யாதெனில், இத்தனை காலமும் புலம்பெயர் தேசத்திலே மக்களின் பெயரால் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து கறக்கப்பட்ட பணம் எங்கே? யாருடைய இருப்பில் இருக்கின்றது என மக்களுக்கு காட்டப்படவேண்டும். அப்பணம் வன்னித் தலைமைக்கு அனுப்பப்பட்டது அல்லது ஆயுதம் வாங்கப்பட்டது என்றெல்லாம் காதில் பூ சுத்தாமல் வரவு செலவுகளை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

புலிகள் பல தனிநபர்களின் பெயரில் பல முதிலீடுகளைச் செய்திருந்தனர். அவை நியாயமான முறையில் திருப்பி பெறப்படவேண்டும். அடுத்து புலிகளுக்கு வங்கிக்கடன் எடுத்து கொடுத்த பலர் இன்று அக்கடனைச் செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது அந்த சுமையை சுமத்தாமல் அவர்களது கடன்களை புலன்பெயர்ந்த புலிகளின் தலைமை (பணத்தை சுருட்டிய தலைமை) தொடர்ந்து அக்கடன்களை செலுத்தி அம்மக்களை கடன் தொல்லையில் இருந்து விடுவிப்பதற்கு நாடுகடந்த தமிழீழம் அமைக்க புறப்பட்டிருக்கும் கல்கி மான்கள் முன்வர வேண்டும்.

பிரபாகரனது மரணத்தின் பின்னர் புலம்பெயர் புலிகள் 3 க்கு மேற்பட்ட பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர். முடிந்தால் அனைவரையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு தெரியப்படுத்தட்டும் அப்போது கல்வி மான்கள் தமிழீழ அரசொன்றை அமைப்பதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு தகுதியுடையவர்களா என்பதை மக்கள் தீர்மானிப்பர். VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com