Wednesday, February 15, 2012

புலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்

ரவிராஜ் புலிகளின் பெரும் விசுவாசி, அவ்வியக்கத்தினை நேசித்தவர் மட்டுமல்ல மரணத்தின் பின்னர் பிரபாகரனால் மாவீரல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். ஆனால் வித்தியாசமான மனிதராக இருந்துள்ளார். புலிகளின் வழர்சி மக்களை வாட்டி வதைக்கின்றது என்ற உண்மையையும் மக்கள் அவ்வியக்கத்தை வெறுக்கின்றனர் என்ற உண்மையையும் அமெரிக்க அதிகாரிகளிடம், தனியாக அல்ல தான் சந்தித்த தமிழ் பிரதிநிதிகளுடனிருந்தே சொல்லியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலம் பெற்று வந்த சூழல் யாழ். மக்களுக்கு பாரிய அச்சத்தை கொடுத்தது என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எடுத்திருந்த முடிவுக்கு ரவிராஜின் வெளிப்படையான கருத்தும் வலுச்சேர்த்திருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவதானிகள் பலரும் பொதுமக்களின் அச்சத்தை தூதரகத்துக்கு வெளிப்படுத்தி இருந்தனர்.

2003 ஆம் ஆண்டு மே 28-29 களில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார் அமெரிக்க பிரதித் தூதுவர்.

இவரை ரவிராஜ் உட்பட அவதானிகள் பலரும் நேரில் சந்தித்து பேசி இருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கம் பலம் பெற்று வருகின்ற சூழல் யாழ். மக்களுக்கு பேரச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது, பயமுறுத்தி மக்கள் அனைவரையும் அடக்கி ஆள்வது என்பது யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னெடுப்பாக உள்ளது, ஆயினும் புலிகளின் வரி வசூலிப்பு, கட்டாய ஆட்சேர்ப்பு போன்றவற்றால் இம்மக்கள் கோபம் அடைந்து இருக்கின்றனர் என்று இவ்வதிகாரிக்கு நிலைமையை விளக்கி இருக்கின்றார் ரவிராஜ்.

புலிகள் இயக்கத்துக்கு எதிரான அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அடிக்கடி மிரட்டப்படுகின்றமையுடன் தனியாகவோ, கூட்டமாகவோ தனி இடங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி கருத்துக் கூற விடாமல் மறிக்கப்படுகின்றனர் என்றும் ரவிராஜ் சொல்லி இருக்கின்றார்.

தூதரகத்தில் இருந்து 2003 ஜூன் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு காபிள் மூலம் அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் காணப்பட்டதாக விக்கிலீக்ஸ் தெரியப்படுத்தியுள்ளது.

ரவிராஜ் புலிகள் இயக்கத்துக்கு எதிரானவர் அல்லர் என்றும் ஆனால் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக மிகுந்த அக்கறையை வெளிப்படுத்துபவர் என்றும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்ததையும் அது கோடிட்டுக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com