Sunday, June 2, 2013

மஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்! - பீமன்

‘புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி. இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமது சுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால், புலிகள் பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

‘கடைசிவரை விலைபோக மாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீர வசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால், பிரபாகரன் கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர் மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள் புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை.

புலிகள் இலங்கைக்குச் செல்வதும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுடன் உறவாடுவதும் தவறான விடயம் அல்ல. ஆனால், புலிகள் பின்கதவால் சென்று அரசிடம் பெறவேண்டியதை தங்களது சுயலாபங்களுக்காக பெற்றுக்கொண்டு, தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக்க முயல்வதும் அவர்களை அரசுக்கு எதிரான மாயையினுள் வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்குண்டிருந்த இலங்கை, பல்லாயிரக்கணக்கான உயிர்த்தியாகங்களால் விடுபட்டிருக்கின்றது. அதாவது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தாம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றோம் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களின் இந்த மன மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர் புலிகள் தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தமது பிரச்சாரப் பீரங்கியை இயக்கிக்கொண்டே இருக்கின்றனர்.

இவ்வாறான அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்சீஎன்என் எனப்படும் தளத்தை இயக்கிக்கொண்டிந்தவர் அல்லது தொடர்ந்தும் இயக்கிக்கொண்டிருப்பவர் கண்ணன் என அழைக்கப்படுபவர். இவர், தற்போது மஹிந்தரின் கோடிக்குள் நுழைந்துள்ளார். இவரை தொடர்பு கொண்டு இலங்கை நிலவரங்கள் தொடர்பாக கேட்டேன்.

இலங்கை உலகிலே சொர்க்கம் என்று சொல்லப்பட்டதை உணர்ந்துள்ளேன், இது ஒரு சொர்க்காபுரிதான் என்றார் தமிழ்சீஎன்என் கண்ணன்.

நீங்கள் இந்த நாட்டுக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள் தொடர்பாக என்ன கருத்து எனக்கேட்டேன், நான் செய்த தவறுக்காக வருந்துகின்றேன் என்றார்.

வடக்கிலே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரச்சாரம் செய்துள்ளீர்கள், நிலைமைகள் எவ்வாறுள்ளது என்றேன் : நாவற்குளி பிரதேசத்தில் சுமார் 35 சிங்கள மக்கள் உள்ளனர். அவர்கள் இப்பிரதேசத்திலே முன்னர் வாழ்ந்தவர்கள் அது தவிர இங்கு எந்த குடியேற்றமும் இல்லை. பௌத்த கோவிலும் இல்லை. அவ்வாறு இருந்தால்தான் அதில் என்ன தப்பு என்றும் கேட்டார். இவையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும், புலம்பெயர் தேசத்தில் தொடர்ந்தும் மக்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலிப்பினாமிகளின் பொய்பிரச்சாரங்கள் என்றார்.

மேலும் தலதா மாளிகைக்கு சென்று சங்கைக்குரிய தேரரை சந்தித்ததாகவும் அவரது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் கூறிய கண்ணன், பௌத்த பிக்குகள் கருணை உள்ளம் கொண்ட அன்பான மனிதர்கள் என்றும் அவர்களிடமுள்ள அன்பும் கருணையும் தமிழ் பூசகர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், நீங்கள் தமிழ் மக்களிடம் விதைத்த விஷம் இன்னும் அகற்றப்படவில்லை அதிதுடன் இலங்கை அரசு தொடர்பாக தமிழ் மக்களுக்கு சொன்ன அவதூறான செய்திகள் தமிழ் மக்களின் மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. எனவே, நீங்கள் எனக்கு கூறுகின்ற இந்தக்கருத்துக்களை மக்களுக்கு எப்போது தெரிவிக்கின்றீர்கள் என்றேன். தலையை சொறிய ஆரம்பித்து விட்டார். ஏன் இந்த தயக்கம் என்றேன். இல்லை இல்லை இதை மக்களுக்கு பெரியதாக சொல்ல வேண்டும் என்றார்.

பெரியதாக என்றால் என்ன? என்றேன். உலகத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் அச்செய்தி சென்றடையக்கூடியவாறு சொல்லவேண்டும் என்றார்.

அதற்குரிய ஏற்பாடுகளை செய்யவா எனக்கேட்டபோது வேண்டாம்.. வேண்டாம்.. என்னை இங்கு அழைத்து வந்தவர்களிடம் நான் கேட்கவேண்டும் என்றார் கண்ணன்.

தமிழ் மக்களை தாங்கள் தவறாக வழிநாடாத்தினோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் கண்ணன் , மக்களுக்கு காலம்கடந்தேனும் உண்மையை சொல்வதற்கு தயங்குவதை அவதானிக்க முடிகின்றது. கண்ணனின் இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவே திட்டமிட்டுள்ளனர் என்பதுடன் கண்ணன் தீய நோக்கோடு இலங்கையினுள் நுழைந்துள்ளான் என்ற முடிவுக்கு வரவிடுகின்றது.

இவ்வாறான தீயநோக்கோடு செயற்படுகின்றவர்கள் விடயத்தில் இலங்கை அரசு அவதானமாக இருக்கத் தவறும் பட்சத்தில் 30 வருடங்கள் பயங்கரவாதத்தின் பிடியில் மக்கள் அனுபவித்த அதே அவலங்களை மீண்டுமொருமுறை அனுபவிக்க நேரிடலாம்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுடன் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை முடக்குவதற்கு புலம்பெயர் புலிகள் பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வுத்திகளில் பிரதானமானது தமது முகவர்களை குறித்த திட்டங்களுள் நுழைப்பது. காரணம் புலிகள் ,இந்திருக்கின்ற ஒரு செயற்றிட்டத்தில் சாதாரண பொதுமக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்பது புலிகளுக்கு தெரிந்த விடயம்.

எனவே புலிகளையும் மக்களையும் இணைத்து நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர்ந்து கொண்டு புலிகளை தனிமைப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

புலிகளின் மேற்படி வியுகத்தை முறியடிக்கும் விடயத்தில் இலங்கைப் புலனாய்வுத் துறையின் சேவை மிக அத்தியாவசியமாகின்றது. இலங்கையினுள் நுழைகின்ற புலம்பெயர் தமிழர்களின் கடந்தகால மற்றும் தற்காலச் செயற்பாடுகள் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். புலம்பெயர் தேசத்திலில் புலிச்செயற்பாட்டாளர்களாக இருந்து ​இலங்கையின் இன நல்லிணக்க செயற்பாடுகளினுள் இணைய விரும்புகின்றோம் என வருகின்றவர்களை முதலில் புனர்வாழ்வு நடைமுறைக்கு உட்படுத்திய பின்னரே சாதரண மக்களுடன் இணைய அனுமதிப்பது சிறந்தது.

புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசினால் இன நல்லிணக்க இணைப்பாளர்களாக, செயற்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிலர் தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றனர் அல்லது ஏமாறுகின்றனர்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, புலிகள் என்றுமே தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும் அவர்கள் மரபுவழி படையணியையும், கடற்படையுடன் கூடிய விமானப்படையையும், பயங்கரமானதோர் தற்கொலைப்படையணியையும் வைத்திருக்கின்றார்கள் என இலங்கை இராணுவ வீரர்களை உளரீதியாக நலிவடைச் செய்து , புலிகள் தோற்கடிக்கப்படமுடியாதவர்கள் என்ற புலிகளின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்த சிங்கப்பூரினைத் தளமாக கொண்டுள்ள புளுகுமூட்டைக்கு புலிகள் ஓர் பப்படம் என்பதும் பப்படத்தை இறுகப்பிடித்தால் அது நொருங்கிவிடும், நொருங்கினால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தளம் அற்றுப்போய்விடும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த கால ஆட்சியாளர்கள் புலிப்பப்படத்தை மென்மையாக கையாண்டார்கள் என்பது தெரியாமல் போயிருந்தது கவலைக்குரியதே.

குறிப்பிட்ட புளுகுமூட்டையே கண்ணனை இலங்கைக்கு கொண்டுவந்தாக அறியக்கிடைக்கின்றது. இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் கண்ணில் மண்ணைத்தூவி கணணனை நேரடியாக ஜனாதிபதியின் இன நல்லிணக்க பிரிவினருடன் இணைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கண்ணனின் பின்புலம் தெரியாமல் கண்ணன் புலிகளுடன் எந்த தொடர்பும் அற்றவர் என்ற நம்பிக்கையில் நேரடியாக ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டாரா? அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவது லாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா? அவ்வாறாயின் அந்த லாபங்கள் தனிப்பட்டவையா ? தேசிய நலன் சார்ந்ததா?

கண்ணன் புலிகள் இயக்கத்தில் தான் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டவர் என்கின்றார். புலிகள் இயக்கத்தில் தான் இருந்தபோது அவ்வியக்கத்தினர் மேற்கொண்ட மனித விரோத செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிச் சென்றேன் என்கின்றார். ஆனால், அவர் சுமார் 1995 களிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளில் புலிகளின் ஆட்கடத்தல் காரர்களுடன் இணைத்து செயற்பட்டு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அக்காலகட்டத்தில் புலிகளின் விநாயகம் அணியின் முக்கியஸ்தரான பாண்டியனுக்கு சுமார் இரண்டரைக்கோடி பணம் கொடுத்ததாகவும் அந்தப்பணத்தை கொண்டு பாண்டியன் கனடாவில் தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் பலரிடம் தெரிவித்துள்ளார். பாண்டியனிடம் இந்த பாரிய தொகை கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு பண்டியனுடன் கண்ணன் வைத்திருந்த உறவு என்ன? குறித்த பணம் புலிகளுடையது என்றும் புலிகளின் பணத்தை தென்கிழக்காசியாவில்; கையாண்டவர்களில் கண்ணனும் ஒருவர் என்றும் பேசப்படுகின்றது.

மேலும், கண்ணன் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பிரயாண முகவர் நிலையம் ஒன்றை நடாத்திவந்தாகவும், அந்நிலையத்தில் புலிகளுக்கான புலனாய்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக பேசப்படுகின்றது.

2004ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ‘கப்டன்’ தர அதிகாரி ஒருவர் , புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழைய முற்பட்டபோது, ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவத் கப்படனை கையாண்டது கண்ணன் என்றும் அவரை புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டுவை சந்திக்க அழைத்துச் சென்றபோதே கப்படன் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கப்டனின் கோப்பை புரட்டினால் கண்ணனுக்கு புலிகளுடனான தொடர்பு தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரே தமிழ்சீஎன்என் எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னணி நெடியவன் குழு என நம்பப்படுகின்றது. இணையத்தளைத்தினை மக்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதற்கு கண்ணன் அயராது உழைத்தார். தமிழ் இளைஞர் யுவதிகளின் முகப்புத்தகங்களினுள் சென்று மில்லியன்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்தார். இம்மின்னஞ்சல் சேகரிப்புக்கு புலம்பெயர் தேசத்தில் நெடியவன் கட்டுப்பாட்டிலுள்ள இளையோர் அமைப்புக்கள் உதவியதாகவும் அறியக்கிடைக்கின்றது. குறித்த மின்னஞ்சல்முகவரிகளுக்கு நாளாந்தம் தமது பொய்பரப்புரைகளை அனுப்பிவந்தார் கண்ணன். அத்துடன் தமிழ்சீஎன்என் இணையதத்தின் நடாத்துனராக தன்னை அறிமுகப்படுத்திய அவர் பல்வேறு தொடர்புகளை உருவாக்கி கொண்டதுடன் அத்தொடர்புகள் ஊடாக அரசுக்கு எதிரானது மாத்திரமல்ல நெடியவன் குழுவிற்கு எதிராளிகளான விநாயகம் குழுவிற்கும் எதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் கண்ணன் புலிகளின் ஊடுருவலாளனாக அல்லாமல் நல்ல நோக்கத்துடன் இலங்கை வந்துள்ளாராகவிருந்தால், அவர் தனது தமிழ்சீஎன்என் இணையத்தளம் ஊடாக இலங்கையில் தனது அனுபவங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அத்துடன் , தான் எத்தனை மின்னஞ்சல் முகவரிகளுக்கு போலிப்பிரச்சாரங்களை அனுப்பி வந்தாரோ அத்தனை முகவரிகளுக்கும் தனது தற்போதைய மனமாற்றத்தையும் தான் கண்டுகொண்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துக்களையும் உண்மைகளையும் தொடர்ச்சியாக தெரியப்படுத்தவேண்டும்.6 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com