Friday, April 10, 2009

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

தோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன்

காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீணாகத் தொலைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கு இந்தப்பணிவான வேண்டுகோளை விடுப்பதில் எனக்கு முழு உரிமையும் இருக்கின்றது என நான் நம்புகின்றேன்.

கனேடியன் தமிழ் வானொலிக்கு தாங்கள் வழங்கிய செவ்வி கேட்டு ஒரு கணம் திகைத்துவிட்டேன்.

உங்களின் உணர்ச்சிகரமான பேச்சினாலும் பாராளுமன்ற ஆசையினாலும் நீங்கள் தமிழினத்திற்கு செய்துதொலைத்த அநியாயங்களை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன். ஆனாலும் நீங்கள் சொல்கின்றீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

1980 காலப்பகுதியில் வீறுகொண்டெழுந்த விடுதலைப்போராட்டம், இன்று முற்று முழுதாக சிதைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்து, மக்களை அநியாயமாக இழந்து, உன்னதமான பல தலைமைகளை இழந்து, கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து பரிதவிக்கும் தமிழினத்திற்கு இத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்?

மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்கப் புறப்பட்ட மாற்றியக்க இளைஞர்களை தெருக்களிலும் காடுகளிலும் சுட்டும் வெட்டியும் கொலை செய்துவிட்டு சகல அமைப்புக்களையும் தடைசெய்து, ஜனநாயகத்தலைவர்களை படுகொலை செய்து, மாற்றியக்கங்களை ஆதரித்தவர்கள், உணவு கொடுத்தவர்கள் அனைவரையும் துரோகிகளாக்கி தமக்குத்தாமே மகுடம் சூட்டி இன்று மறைந்து வாழ்வதற்கே காடுகள் கூட இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்?

உங்களைப்போன்ற ஒருசில சுயநல சந்தர்ப்பவாதிகளினால் அன்று தமிழர் விடுதலைக்கூட்டணி உடைக்கப்பட்டது. ஒற்றுமையாக இருந்த மட்டக்களப்பு மக்கள் பிரிக்கப்பட்டார்கள்.

காசி அண்ணா! உங்களின் வீர வசனங்களை சிறுவயது முதல் கேட்டுவந்தவர்களில் நானும் ஒருவன். கிழக்கிலங்கையில் மக்களின் உண்மையான செல்வாக்கை தன்னகத்தேகொண்டு வளர்த்து நிமிர்ந்து நின்ற இராஜதுரையை அகற்றி நீங்கள் அந்த இடத்திற்கு வரமுயன்றதும்,
மட்டக்களப்பு இளைஞர்களை வீதிக்கு இறக்கி சிங்கக்கொடியை எரிக்க வைத்து கைது செய்யப்பட்டு வாழ் நாளில் இலங்கையில் எந்த ஒரு பாடசாலையிலும் கல்விகற்க தடைவிதிக்கப்பட்டு மட்டக்களப்பில் ஒரு சிறந்த மாணவனாகத் திகழ்ந்த எனது தாய் மாமன் இரா. பரமதேவாவின் வாழ்க்கையை புதை குழிக்குள் தள்ளியதன் மூலம் கல்வியழிப்பினை நீங்கள் ஆரம்பித்து வைத்ததும். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் மஹற சிறையில் எட்டாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவாவை ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் மட்டக்களப்பு சிறைக்கு கொண்டுவந்தபோதெல்லாம் நீங்களும் மட்டக்களப்பில்தான் இருந்தீர்கள் என்பதும் எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். ஆனால் ஒரேயொரு தடவை நீங்களும் சறோ அக்காவும் உங்கள் கைக்குழந்தியுடன் வந்து அந்த சிறைக்குள்ளும் தாடி மாமா வாழ்க என்று உங்கள் மகளுக்கு சொல்லி உங்களின் வீரவசன நாடகத்தை அரங்கேற்றிய நீங்கள் அதன் பின்னர் தமிழகம் சென்றீர்கள். அங்கு உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தினீர்கள்.

இன்றும் அதே தமிழ் நாட்டில் இருந்துகொண்டு எல்லாமே முடிந்த பின்பும் சொல்லுகிறீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

காசி அண்ணா நீங்களோ அல்லது மற்றவர்களோ சிந்திக்கலாம் பரமதேவா எனது மாமன் என்ற வகையில் நான் உங்கள் மீது பழிசுமத்த முனைகின்றேன் என்று! ஆனால் பரமதேவா ஒரு உதாரணம் மட்டுமே! உங்களினால் வாழ்க்கையை தொலைத்தவர்களின் நீண்ட பெயர்ப்பட்டியல் என்னிடம் உண்டு.

உங்களின் சுயநலத்திற்காக எத்தனை இளைஞர்களை தவறான வழிக்கு நீங்கள் அழைத்துச்சென்று அவர்களின் வாழ்க்கையையே அநியாயமாக அழித்துவிட்டு வன்னிக்குள் புலிகளினால் பலாத்காரமாக மனிதக் கேடயங்களாக தவித்துக்கொண்டிருக்கும் மக்களை ஒரு கணமாவது சிந்திக்காமல் புலம் பெயர் தமிழர்களுக்கு சொல்கின்றீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

கிழக்கை இழந்த போது அது முக்கிய தளமல்ல என்றீர்கள், கிளிநொச்சி பறிக்கப்பட்டபோது அது ஒரு தற்போதைய பின்னகர்வு என்றீர்கள். இப்போ முழுமையாக வன்னி உட்பட தமிழ மக்களின் பூர்வீக பிரதேசங்களான அனைத்தும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலையத்திற்குள் வந்து நின்றுகொண்டு அந்த மக்களையும் வெளியேறவிடாமல் உங்களின் தலைவர்களைப் பாதுகாக்க எந்த மக்களின் விடுதலைக்காக புறப்பட்டீர்கள் என்று கூறிய நீங்களே அந்த மக்களை மனிதக் கேடயங்களாக பணயம் வைத்துக்கொண்டு நன்றாகக் கதை சொல்கின்றீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்


நீங்கள் ஒரு சிறந்த கவிஞன், பாடலாசிரியர், எழுத்தாளன் என்பதில் எனக்கு எந்த விதமான மாறான கருத்தும் இல்லை. உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. அனால் மிகவும் தயவாக உங்களிடம் கேட்கின்றேன். பொங்கலுக்கு தமிழீழம்... தீபாவளிக்கு தமிழீழம்... நத்தாருக்குத் தமிழீழம்... றம்ஸானுக்குத் தமிழீழம்... என்ற கதைகள் எல்லாம் கேட்டு தமிழ் மக்களின் செவிப்பறைகள் எப்போவோ இறந்துவிட்டன.

நீங்கள் என்ன? கடவுளே நேரே வந்து சொன்னாலும் இனிமேலும் தமிழ் மக்கள் இன்றென்ன நாளையென்ன எப்போதுமே தமிழீழம் பிறக்காது என்பதை மிகத்தெளிவா புரிந்துவைத்துள்ளனர்.

எனவே உங்கள் வாழ்க்கையில் மிஞ்சியுள்ள காலத்தில் தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், உங்களின் எழுதாற்றல் திறமையை வெளிப்படுத்துங்கள்.

அதில் நீங்கள் சொல்லும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உன்னதமான சொல்லையே அழித்தவர்கள் நீங்கள் இன்னும் இன்னும் ஆதரிக்கும் புலிகள் தான் என்பதையும் தயக்கமின்றி வெளியே சொல்லுங்கள்.

அப்படியான ஒரு மாற்றம் உங்களில் வந்தால் நிச்சயமாக உங்களை மக்கள் போற்றுவார்கள். மீண்டும் நீங்கள் மட்டக்களப்புக்கு வந்து தேர்தலிலும் போட்டியிடலாம்.

வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிப்பார்கள்.

VIII

9 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com