Saturday, March 9, 2024

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.
புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தமது பலமிக்க கோட்டையாக இருந்த வடமராட்சியில் இருந்து, படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டு, இறுதியாக குறிகட்டுவான் கடலடி மட்டும் வந்து இந்தியாவுக்குப் படகேற காத்திருந்தார்கள். விட்டால் யாழ் குடாநாடு முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலை. புலிகளின் கதை முடியும் நேரம்.

அதே நேரம் குடாநாடெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. இந்தியா படகுகள் மூலம் உணவு எடுத்துவர முயற்சி செய்தது. இந்தியப் படகுகள் உணவுப் பொருட்களுடன் இலங்கையின் கடல் எல்லைக்கு வந்து காத்துக்கிடக்கின்றன. உள்ளே வர இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை. இலங்கை அரசு இந்தியாவின் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. இந்தியா விமானம் மூலம் உணவு போட முடிவு செய்தது. இந்திய போர் விமானங்கள் அத்துமீறி இலங்கையின் வான் பரப்புக்குள் நுழைந்தன.

இந்தியா "ஒப்பிரேசன் பூமாலை" என்ற பெயரில் குடாநாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொட்டலங்களைப் போட்டு இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஜே.ஆர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் பிரவேசித்தது.

இந்திய இராணுவ வாகனங்களில் தமது கொடிகளைக் கட்டி, புலிகள் தாமும் அவற்றின் மீது ஏறி வீதிகளில் வலம்வந்தார்கள். பூரண கும்ப மரியாதை செய்து இந்திய இராணுவத்தினரை புலிகள் வரவேற்றார்கள். எல்லாம் சிலகாலம் தான். புலிகள், ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தேடித்தேடி கொலை செய்தார்கள்.

உத்தேச மாகாணசபை அமைப்பதில் பல சிக்கல்களை உருவாக்கினார்கள். இந்திய அமைதிப்படையை சினமூட்டும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்தார்கள். இந்திய அனுசரணையுடன் , தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற மேற்குலகின் அபிலாசைக்கு அமைய புலிகள் இந்தியாவுடன் முரண்படத் தொடங்கினார்கள்.

1987 ஐப்பசி மாதம் இந்திய அமைதிப்படை மீது புலிகள் தாக்குதல் தொடுத்தார்கள். அன்றிலிருந்து அமைதிப்படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களால் மக்கள் இந்தியா மீது வெறுப்புக் காட்டத் தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையைப் புலிகள் தமக்கு சாதகமாக்க, மக்கள் செறிவாக இருக்கும் இடங்களில், அமைதிப்படை மீது பல தாக்குதல்களை நடத்தினார்கள். அந்த சமயங்களில் அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு யாழ் பொது வைத்தியசாலை சம்பவத்தைக் குறிப்பிடலாம். வைத்தியசாலைக்குள் மக்கள் தாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே, உள்ளிருந்து புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள்.இப்படியாகத்தான் இந்திய எதிர்ப்பு மனநிலை படிப்படியாக மக்களுக்கு ஊட்டப்பட்டது.

இவ்வளவு வருடங்கள் ஓடி முடிந்த பின்னும், மக்கள் மனங்களில் இருந்து இந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் நச்சுச் சூழலுக்குள் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டாலும், சில புலி சார் அமைப்புக்களும், புலம் பெயர்ந்து வாழும் புலிப் பினாமிகளும், அரசியல்வாதிகள் சிலரும், தமிழ் பத்திரிகைகளும் மக்களை மாறவே விடமாட்டார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே புலிகளுடன் சேர்ந்து, சயனற் என்னும் நஞ்சை காவித் திரிந்த, அப்பாவி மாணவன், பல கொடூரக் கொலைகளின் பங்குதாரி சாந்தனின் இறுதி நிகழ்வுகளில் மக்களை உணர்ச்சியூட்டி, அதில் குளிர்காய பலரும் முயற்சி செய்தார்கள். பல இடங்களுக்கு சாந்தனின் உடலத்தைக் காவித் திரிந்து அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்கள். உச்சக்கட்டமாக வல்வெட்டித்துறை பிரபாகரன் வாழ்ந்த இடத்திலும் சாந்தனின் உடலை வைத்து படம் காட்டினார்கள். இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம், சாந்தன் சாமானியனல்ல. அவன் புலிகளின் முக்கிய உறுப்பினன் என்பதை உலகத்துக்கு குறிப்பாக இந்தியாவுக்கு முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது.

இவ்வளவு காலமும் சாந்தன் ஒரு அப்பாவி. படிப்பதற்காக இந்தியா சென்ற சாதாரண மாணவன் என்ற புலித் தேசியங்களின் சுத்துக்கள் எல்லாம் போலி என்று நிரூபணமாகிவிட்டது. சாந்தனின் இளைய சகோதரன், அண்ணனின் புலிச் செயற்பாடுகள் பற்றி தனது முகநூலில் பதிவுகள் போட்டுள்ளார். அவர்கள் குடும்பமே அதிதீவிர புலிகளாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், இவர்களின் எச்சரிக்கையால் இந்தியா வெலவெலத்துப் போய் நிற்கிறது. எவை இந்த புற்றீசல் சிவில் அமைப்புக்கள். இந்த அமைப்புக்களின் பெயர் விபரங்களை யாழ்ப்பாண உதயன் பத்திரிகையிடம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சிறிதரன், சாந்தனின் உடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த தேர்தல் ஒன்றில் தனக்குத்தானே 75க்கு மேற்பட்ட கள்ள வாக்குகள் போட்டதாகப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட சாதனைத் தலைவர், சாந்தனைப் பெரிய தியாகியாக்கி அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை இலங்கை அழைத்து வர பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கிறார் தமிழரசுத் தலைவர். பொன்னம்பலம் கட்சி கஜேந்திரன் உட்பட சிலரும் ஓர் ஓரமாக நின்று அஞ்சலியை செலுத்தி ஒரு சில ஓட்டுக்களுக்கு.....

ஜே.வி.பி கட்சியினரும், கூடவே இலங்கையின் புலனாய்வுப் பிரிவுடன் கூடி இயங்கும் முன்னாள் புலிகளும் இந்தப் பயங்கரவாதியின் உடலுக்கு அஞ்சலி செய்கிறார்கள். ஒன்றுமே புரியலே, இங்கே என்னமோ நடக்குது. ராஜீவ்காந்தியை துவக்கால் அடித்து கொல்ல முயன்ற கட்சியினர், அவரைக் கொன்றவனுக்கு அஞ்சலி செய்வது ஒன்றும் ஆச்சரியமல்ல.

இவ்வளவுக்கும் இந்த சாந்தன் ஈவிரக்கமற்ற பயங்கரக் கொலையாளி. பத்மநாபா உட்பட 12 பேரை கொலை செய்து விட்டு, இலங்கைக்கு தப்பிச் சென்றான். அங்கு தனது தாய் கையால் சாப்பிட்டு உடலைத் தேற்றிக்கொண்டு அடுத்த கொலைக்கான திட்டத்துடன் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறான். அங்கு புலிகளின் கொலைக்குழுவுடன் ஒன்றிணைந்து ராஜீவ்காந்தி மற்றும் 12 பேரை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்கின்றான். இந்தியாவின் ஒப்பற்ற இளம் தலைவனைக் கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு இலங்கைத் தமிழர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்தியாவைத் தூற்றுகிறார்கள். இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள்.

புலிகளின் அழிவுக்குப் பின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு இந்தியத் தயவை வேண்டி நின்ற தமிழர் தரப்பு, ஒரு நொடி தோன்றிய உணர்ச்சி வேகத்தில், இந்திய கனிவை தலைகீழாக மாற்றி வைத்துக்கொண்டுள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்காக இந்தியாவுக்கு கடிதம் எழுதுவது, இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு புதுடில்லி போவது, அடிக்கடி இந்திய தூதுவர் அலுவலுகத்துக்கு காவடி எடுப்பது, இந்தியாவுக்குப் போவது மகஜர் கொடுப்பது, இந்தியத் தூதுவரிடம் கொடுப்பது என்றிருந்த தமிழ் கட்சித் தலைவர்கள், சாந்தன் என்ற கொலைகாரனுக்காக இந்திய எதிர்பாளர்களாக மாறிக் கொண்டுள்ளார்கள்.

இந்த தமிழ்க் கட்சித் தலைவர்களின் இந்திய விரோத மனப்போக்கு ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனியும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிடம் போய் நிற்கப் போகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்தும் ஆள் மாறி ஆள் மாறி கருத்துத் தெரிவித்துக்கொண்டு, இந்தியா உதவி செய்யவில்லை என எவ்விதம் நீங்கள் ஒப்பாரி வைக்கலாம். இதற்குள் இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை வேறு. இது எப்படி இருக்கிறதென்றால், இந்திய அமைதிப்படை தானாக இலங்கையை விட்டு வெளியேறிய பின், உலகின் நான்காவது பெரிய இராணுவத்தையே அடித்துக் கலைத்து விட்டோம் என்று புலிகள் பீத்திக்கொண்டது போலத்தான்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த இந்திய எதிர்ப்பு மனநிலை நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவே நான் அனுமானிக்கிறேன். போராட்ட ஆரம்ப காலங்களிலேயே (1970 – 1980) இடதுசாரி எண்ணம் கொண்ட பலரும் தமது இந்திய எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வந்து இருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு தமிழீழத்துக்குப் பாதகம் என வகுப்பெடுத்தவர்கள் பலர். காலப்போக்கில் எல்லோருமே இந்தியாவே கதி என அங்கேயே அடைக்கலமானார்கள்.

1983 இனக் கலவரத்துடன் தமிழ் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோருமே இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் தான். இந்தியா வழங்கிய சகல சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான். இந்திய எதிர்ப்பை பலமாக எடுத்துவந்த புலிகள் முதல் அனைவரும், இந்தியாவிடம் பணம் உட்பட பலவிதமான உதவிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் தான். பிராந்திய அரசியல் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாத, அறிவுகெட்ட ஜடங்களின் சமூகவலைத்தள பதிவுகள், கருத்தாடல்கள், எமது இனத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கடந்து, எமது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

யூலியன். 08 03 24.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com