Thursday, January 31, 2019

கல்முனை நீதிமன்றினால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உட்பட பொருட்கள் 2ம் திகதி ஏல விற்பனையில்..

நீதிமன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவையும், உரிமை கோரப்படாதவையுமான ஒரு தொகை பொருட்கள் எதிர்வரும் 02 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

இப்பொருட்கள் தொடர்பான விபரக் கோவை நீதிமன்ற அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கு உரிமை கோருபவர்கள் எவராவது இருந்தால் ஏல விற்பனை தொடங்குவதற்கு முன்னர் அவர்களின் உரிமை கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்முனை நீதிவான் ஐ.என். ரிஸ்வான் கோரியுள்ளார்.

ஏல விற்பனை தொடங்குவதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னதாக நீதிமன்ற பதிவாளரின் அனுமதியுடன் பொதுமக்கள் எவரேனும் பொருட்களை பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொருட்களை விலை வைத்து வாங்குவோர் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் உடனடியாக பணத்தை செலுத்தி உரிய பொருட்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளார்கள்.

சகல கொடுப்பனவுகளும் பணமாகவே செலுத்தப்பட வேண்டும் என்றும் காசோலைகள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என்றும் விலைகள் ஒவ்வாத பட்சத்தில் எந்த பொருளையும் விற்பனையில் இருந்து மீள பெற நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என்றும் அறிய தரப்பட்டு உள்ளது.

14 வழக்குகளோடு சம்பந்தப்பட்டு பகிரங்க ஏல விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இப்பொருட்களில் கையடக்க தொலைபேசி, சைக்கிள்கள், தங்க நகைகள் ஆகியனவும் அடங்குகின்றன.

(எஸ்.அஷ்ரப்கான்).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com