Thursday, January 31, 2019

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு மட்டும் மாதமொன்றுக்கு வழங்கிய கொடுப்பனவு!

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவைத் தலைவர், பிரதி அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்காக மாதமொன்றிற்கு சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் அடங்கலாக சுமார் 34 இலட்சத்து 898 ரூபாய் மாதமொன்றுக்கு செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக வடக்கு மாகாண பேரவை செயலகத்திடமிருந்து இது குறித்த தகவலை வழங்கியுள்ளது. எனினும் முதலமைச்சர் உள்ளடங்கலாக அமைச்சர் வாரியத்தில் அங்கம் வகித்த 5 உறுப்பினர்களின் சம்பள விபரங்களை வெளியிட மாகாண பேரவைச் செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் அமைச்சுக்கள் ஊடாகவே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாக தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண அவைத் தலைவருக்கான சம்பள கொடுப்பனவாக 63 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.

அவைத் தலைவருக்கான உபசரணை கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாயும், எரிபொருள் கொடுப்பனவாக 10 ஆயிரத்து 1 ரூபாவும், வாடகைப் பணமாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவைத் தலைவருக்கு மாதமொன்றிற்கு ஒரு இலட்சத்து 501 ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.

வடக்கு மாகாண பிரதி அவைத் தலைவரின் மாதச் சம்பளமாக 31 ஆயிரத்து 750 ரூபாவும், உபசரனை படியாக ஆயிரம் ரூபாவும் எரிபொருள் படியாக 4 ஆயிரத்து ஒரு ரூபாவும் வழங்கப்பட்டது.

அதேபோன்று எதிர்க்கட்சி தலைவரது மாதச் சம்பளமாக 31 ஆயிரத்து 750 ரூபாயும், உபசரணை படியாக ஆயிரம் ரூபாயும், வாகனப் படியாக 40 ஆயிரம் ரூபாயும் எரிபொருள் படியாக 3 ஆயிரத்து ஒரு ரூபாயும் செலவு செய்யப்பட்டது.

உறுப்பினர்களது மாதச் சம்பளமாக 27 ஆயிரத்து 145 ரூபாயும், அவர்களது உபசரணைக்காக 500 ரூபாவும், வாகனப் படியாக 18 ஆயிரம் ரூபாயும், தொலைப்பேசி படியாக 25 ஆயிரம் ரூபாயும், அலுவலகபடியாக 50 ஆயிரம் ரூபாயும், எரிபொருள்படியாக 10 ஆயிரம் ரூபாயும், சாரதிப்படியாக 3 ஆயிரத்து 750 ரூபாயும், குழு கூட்டப்படி ஒன்றுக்கானது ஆயிரத்து 250 ரூபாயும், காகிதப்படி ஆயிரத்து 250 ரூபாயுமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மாகாண சபையின் அமர்வொன்றிக்கு 38 உறுப்பினர்களுக்குமாக 47 ஆயிரத்து 500 ரூபாயும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 16 உறுப்பினர்களின் பிரயாணப் படியாக ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாயும், வன்னித் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களின் பிரயாணப்படியாக ஒருவருக்கு 7 ஆயிரம் ரூபாய் வீதம் 98 ஆயிரம் ரூபாயும் செலவளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நால்வரது சம்பளக் கொடுப்பனவு, சபை அமர்வுக்கு வருகைக்கான கொடுப்பனவு என்பன தொடர்பாகவும் தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக மாகாண பேரவைச் செயலகத்திடம் கோரப்பட்டது.

எனினும் முதலமைச்சர், அமைச்சர்களது தகவல்களினை வழங்குவதற்கு வடக்கு மாகாண பேரவைச் செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com