Saturday, September 29, 2018

கொழும்பில் நடுத்தெருவில் மாணவர்களை விட்டு திரும்பிய புனித மிக்கேல் கலலூரி ஆசிரியர்.

கொழும்பில் டயலொக் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் பங்குபற்ற புனித மிக்கேல் கல்லூரியின் அணி அதற்கு பொறுப்பான ஆசிரியர் தலைமையில் சென்றுள்ளது. குறித்த மாணவர்களை நடுத்தெருவில் விட்டு ஆசிரியர் மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மாணவர்கள் உண்ண உணவின்றி பொருத்தமான தங்குமிடமின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதை அறிந்த கொழுப்பிலுள்ள கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் அங்கு விரைந்து தற்காலிக வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஆசிரியர் அவ்வாறு மாணவர்களை நடுத்தெருவில் விட்டுவந்ததற்கான காரணம் யாது என்று இதுவரை தெரியவில்லை.

இது தொடர்பாக கல்வித்திணைக்களம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது அவதானிக்கப்படவேண்டியதொன்றாகும்.

Read more...

களவுக்கு வயதெல்லை கிடையாது. ஆர்னல்ட் தலைமையிலான களவு மற்றும் மோசடிகள் அம்பலமானது.

களவு மோசடி செய்தவற்காகவே அரசியல்வாதிகள் அரசியலில் நிலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. மோசடிப்பேர்வழிகளான அரசியல்வாதிகளிடமிருந்து விடுதலை பெறவேண்டுமாக இருந்தால் இளைய தலைமுறையினரிடம் அரசியல் தலைமைத்துவம் செல்லவேண்டும் என்றதோர் எதிர்பார்ப்பு சகல இன மக்களிடமும் காணப்படுகின்றது.

அந்த அடிப்படையில் கடந்த தேர்தலில் மக்கள் கணிசமான அளவு இளையோரை தேர்வு செய்தனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான் ஆர்னல்ட். அவர் யாழ் மாநகர மேயராக உள்ளார். அவரது தலைமையில் இயங்குகின்ற யாழ் மாநகரசபை நிர்வாகத்தில், கடந்த ஐந்து மாத நிர்வாகத்தில் பெரும் மோசடிகள் நடைபெற்றதை மாநகரசபையின் இலஞ்ச, ஊழல் குழு கண்டறிந்துள்ளது. நேற்றைய மாநகரசபையின் அமர்வில் அவற்றை பகிரங்கப்படுத்தியமிருக்கிறது.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, மாநகரசபையின் முறையற்ற ஆளணி நியமனம், இலஞ்சம் பெற்றமை, சட்டவிரோத இறைச்சி விற்பனை, முறையற்ற களஞ்சிய பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை யாழ் மாநகரசபையின் இலஞ்ச ஊழல் குழு முன்வைத்தது.

நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் சபை அனுமதியுடன் தற்காலிக தொழிலாளிகள் 40 பேர் மாநகரசபை தொழிலாளர் சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 12 பேரிடம் ஒரு தொகை இலஞ்சம் பெற்றுக்கொண்டே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 12 பேரிடமும் இருந்து சங்க உறுப்பினர்களால் இதுவரை பகுதிபகுதியாக 42 ஆயிரம் ரூபா இலஞ்சப்பணம் செலுத்தியுள்ளனர். இதனை அந்த 12 பேரும் ஒப்புக்கொண்டு எழுத்து மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நல்லூர் திருவிழா காலத்தில் பணிக்கு அமர்த்த சபையால் ஒப்புதல் வழங்கப்பட்ட பணியாளர்களின் தொகையை தவிர மேலதிக பணியாளர்கள் மேயரின் சிபாரிசில் ஆனையாளரால் சபையின் அனுமதியின்றி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேபோல, கோம்பையன் மயானத்தில் மேயரின் ஒப்புதலுடன், ஆணையாளரால் ஒருவர் தற்காலிகமாக- ஒரு மாதத்திற்கு- பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அந்த ஒப்பந்தக்காலம் முடிந்ததும், மேலதிக ஒப்பந்தக்காலம் மேயர், ஆணையாளரின் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளது. மேயர், ஆணையாளரின் ஒப்புதல் இன்றி அவருக்கான ஒப்பந்தக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழா காலங்களில் பணியில் இருந்தவர்கள், அங்கும் கையொப்பம் இட்டுவிட்டு, யாழ் நவீன சந்தை பகுதியிலும் தாம் பணியில் இருந்ததாக கையொப்பமிட்டுள்ளனர்.

மாநகரசபையின் களஞ்சியத்தில் உள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டாவளை மண்ணின் அளவிலும் பார்க்க, 12 கியூப் மண் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல இரும்புக்குழாய் (பொக்ஸ் பார்) 24 காணாமல் போயுள்ளன.

இந்த குற்றங்கள் தொடர்பில் அந்தந்த பகுதிக்கு பொறுப்பானவர்கள் உரிய பதிலை தரவில்லை, தொழிலாளர் சங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் மறுப்பு தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்று இலஞ்ச ஊழல் குழு சபையில் பகிரங்கப்படுத்தியது.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் கூறி, விடயத்தை முடித்து வைத்தார்.


Read more...

ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாதாம் கூறுகிறார் - அநுரகுமார திசாநாயக்க

பிரபல இடதுசாரிக்கட்சியாக அறியப்பட்டதுதான் ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி. தற்போது அக்கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயகக்க சிவப்பு யானைக்குட்டி என பொது எதிரணியினரால் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

ஜேவிபி அரசியல் யாப்பின் 20 திருத்தத்தை தனி நபர் பிரேரணையாக கொண்டுவந்துள்ளது. அது மக்களின் வாக்குரிமையை கேள்விக்குட்படுத்தி அதனை மீறுவதாக விவாதிக்கப்படுகின்ற நிலையில், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது ரூபா மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவை அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளத அவர் 20வது அரசியலமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு வேடிக்கையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க் ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்றும், அவருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருக்கும் ஆலோசகர்கள் என்ன கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்றும் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

ஆனாலும், ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்பதை உணர்ந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை 20 ம் திருத்தத்தின் ஊடாக பிரதம மந்திரிக்கு பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அக்கருமத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமாரவை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

வடக்கிலுள்ள சட்டவிரோத குழுக்களை அடக்க ஜனாதிபதியிடம் அதிகாரம் கோருகிறார் இராணுவத் தளபதி.

வடக்கில் செயற்படுகின்ற சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தினை இராணுவத்திருக்கு குறுகிய காலப்பகுதிக்கேனும் வழங்கப்பட்டால், அவற்றை திறம்படச்செய்து முடிக்க முடியும்மெனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, அக் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி - தலதா மாளிகைக்கு இன்று முற்பகல் சென்றிருந்த இராணுவத் தளபதியிடம், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், அந்த குறித்த அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தளபதி, “இது குறித்து பாதுகாப்பு சபை மற்றும் புலனாய்வு பிரிவின் கலந்துரையாடல்களின் போதும் கலந்துரையாடப்படும்.

குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட சில அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் வழங்கினால் அதனை தம்மால் சரியாக செயற்படுத்த முடியும்” என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்பது அனைத்து மக்களுக்கும் உரித்துடையது. நாட்டின் தேசிய பாதுகாப்பு சிறப்பாகவே உள்ளது. அதை இராணுவத்தினர் கவனித்துக்கொள்வர். வெளியார் அது தொடர்பில் கவலை கொள்ளத்தேவையில்லை.

மேலும் வடக்கிலிருந்து இராணுவத்தினர் வாபஸ்பெறப்படுவதாக தெற்கில் எழும் குற்றச்சாட்டக்கள் தொடர்பில் கருத்துக்கூறிய அவர், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்றும் முகாம்கள் இடம்மாறுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Read more...

கூட்டுவீர் பாராளுமன்றை! சபாநாயகரை கோருகின்றது கூட்டு எதிர்கட்சி.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு அவசர பாராளுமன்ற அமர்வை நடத்துமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அவசர பராளுமன்ற அமர்வை நடத்தும் அதிகாரம் தற்போது பிரதமரிடம் காணப்படுவதால் அவருக்கு இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 ஆவது நிலையியல் கட்டளை சட்டத்திற்கு அமைய இந்த அதிகாரம் பிரதமருக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று முன்தினம் (26) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

Read more...

ஒருவரை கொலை செய்த மூவருக்கும் மரண தண்டனை.

வென்னப்புவையில் நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி வை. பெர்னாண்டோ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வென்னப்புவை, லுணுவில சிறிகம்பல கொலனி பகுதியை சேர்ந்த சுரன் ஹேவகே பியல் இந்திரஜித், கொளையா என்ற ஹிட்டிஹாமி அப்புஹாமிலாகே பிரசாத் பிரியங்க மற்றும் அனுராத என்ற அதாவுத ஆராச்சிலாகே அஜித் பிரியந்த ஆகியோருக்கு இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி சிலாபம் மேல் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட லுணுவில சிறிகம்பள கொலனியை சேர்ந்த ரொக்சி மனோஜ் சுரனிமல என்பவரை கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபர்கள் நாம் நிரபராதிகள் எனக் கூறியதுடன் சாட்சியங்களை விசாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.

அரச சட்டத்தரணி பத்மலால் வீரசிங்க டி சில்வா வழக்கை தொடர்ந்திருந்ததுடன் சட்டத்தரணி திலங்க வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, வழக்கு தீர்ப்பால் அதிர்ச்சியடைந்திருந்த உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளை தள்ளிவிட்டு, தமது உறவினர்களை கட்டித்தழுவி அழுதமை அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Read more...

ஹாட்லிக் கல்லூரிக்கு காணி தேவை இல்லையாம்! கார் பார்க்பண்ண இடம்வேண்டுமாம். யாழ் சட்டத்தரணிகள் சங்கத்தினர்.

பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் ஒரு பகுதி காணியில் 1996ஆம் ஆண்டு முதல் இராணுவ முகாமொன்று அமைந்துள்ளது. உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு தற்போது, அது நீக்கப்பட்டுள்ள காணியை விடுவிக்குமாறு சில காலங்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகவிருந்த இளஞ்செளியன் அவர்கள் யாழ் இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சியிடம் வேண்டுதல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த காணியை அருகிலுள்ள ஹாட்லிக்கல்லூரிக்கு வழங்கவுள்ளதாக கொழும்பு நீதியமைச்சிலிருந்து யாழ் நீதிமன்ற பதிவாளருக்கும், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கும் விசேட தகவலொன்றினுடாக நேற்று அறிவிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது

இதனையடுத்து நேற்று பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கூடிய சட்டத்தரணிகள் பாடசாலைக்கு காணி தேலையில்லை என்றும் தமது கார்களை பார்க்பண்ணுவதற்காக நீதிமன்றுக்கு காணி தேவைப்படுகின்றது என்பதையும் நீதியமைச்சுக்கு தெரியப்படுத்துவோம் என முடிவெடுத்துள்ளார்களாம் என அறியக்கிடைக்கின்றது.

வருங்கால சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பாடசாலைக்கான காணியை தடுத்து, தங்கள் கார்களை பார்க் பண்ண காணி தேடக்கூடிய சுயநலன்கொண்டோர் தமிழ் சமூகத்தில் மாத்திரமே இருக்கக்கூடும் என மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ் சட்டத்தரணிகள் அவ்வாறு செயற்படுவார்களானால் ஹார்ட்லி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

ஜனாதிபதியை இராணுவத்தின் கோப்ரல்களுக்கு ஒப்பிடுகின்றார் பொன்சேகா.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த இறுதி இருவாரங்களிலும் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலார் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் பயத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியே ஓடியிருந்தனர் என்று அமெரிக்காவில் தெரிவித்திருந்தார் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன.

அமெரிக்காவின், நிவ்யோர்க் நகரத்தில் இலங்கையர்களை சந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்திருந்த அவர், இடம்பெற்ற போரின் இறுதி வாரங்கள் இரண்டினுள் அனைத்து விடயங்கள் தொடர்பான தகவல் அறிந்த ஒரே நபர் தானே என்றும் இறுதி வாரங்கள் இரண்டில் நான் தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றினேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நடைபெற்ற யுத்தத்தில் கடைசி இரண்டு வாரங்களும் சார்ஜன்டுகளுக்கும் கோப்பரல்களுக்குமான வாரங்கள். சார்ஜன்டுகளுக்கும் கோப்ரல்களுக்குமே அவ்விரண்டு வாரங்களிலும் வேலைகள் இருந்தது. இந்நிலையில் யாராவது நாம் கடைசி இருவாரங்களும் அங்கிருக்கவில்லை என்று சொல்வார்களாயின் அவர்களும் சார்ஜன்ட் மற்றும் கோப்ரல்கள்போல் சிந்திக்கக்கூடியவர்களாகத்தான் இருக்கவேண்டும் எனச் சாடியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில், யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளை கவனம் செலுத்தவேண்டிய பல விடயங்கள் உள்ளன. இராணுவதளபதி வெறுமனே தாக்குதல் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது.

இந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது சிரேஸ்ட தலைவர்கள் அதிகாரிகளின் கடமை. அவற்றை நாம் செவ்வனே செய்துவிட்டு நான் சீனாவிற்கும் முன்னாள் ஜனாதிபதி பிறிதொரு நாட்டிற்றும் சென்றிருந்தார்.

யுத்தத்தை இரண்டு வாரங்களில் தீர்மானித்து விட முடியாது இறுதி இரண்டு வாரங்களில் மேற்கொள்ள வேண்டியிருந்த தாக்குதல்களை சாதாரண சிப்பாயால் கூட செய்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியோ அன்றில் முன்னாள் பாதுகாப்பு செயலரோ அவ்வாறு பயத்தில் நாட்டை விட்டு ஓடவில்லை என்பதை நான் கூறியேயாகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்ச்கையை கிளப்பியுள்ள மேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளமையாவது:

விடுதலை புலி உறுப்பினர்கள் கொழும்பில் தாக்குதல் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகியிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியமை அடுத் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலார் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் பயத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியே ஓடியிருந்தனர்.

இந்த விடயத்தை பலர் மறந்துவிட்டனர். அந்த நபர்கள் நாட்டை விட்டு சென்றது ஏன் என பலருக்கு தெரியாது. எனினும் எனக்கு தெரியும்.

இறுதி வாரங்கள் இரண்டில் கிடைத்த அறிக்கை தான் அதற்கு காரணமாகும். விடுதலை புலிகள் பின்வாங்கப்போவதில்லை என கூறினார்கள்.. இந்தியாவின் சென்னை அல்லது வேறு ஏதாவது ஒரு நகரில் இருந்து கொழும்பை முழுமையாக அழிப்பதற்கு வானில் இருந்து குண்டு போடுவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனால் தான் இவர்கள் நாட்டை விட்டு சென்றார்கள். இது தான் உண்மை கதையாகும். இறுதி வாரங்கள் இரண்டில் நான் கொழும்பில் இருக்கவில்லை. நான் ஒவ்வொரு இடமாக சென்றேன். நான் இருந்த இடத்தை ஒவ்வொரு முறை கண்டுபிடித்துவிடுவார்கள். இது தான் போர் அனுபவம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ வீரர் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழில் வாண்மையாளர்கள், வியாபாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

யுத்தம் நிலவிய காலகட்டத்திலும் அதற்கு பின்னரும் யுத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் அற்ற பல சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை இராணுவத்தினரின் மீது மேற்கொள்ளப்படும் வேட்டையாக கருதமுடியாது என்று தெரிவித்த ஜனாதிபதி, 2015 ஆம் ஆண்டில் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்கள் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கைகளில் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதும் முக்கியமானதாக அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு அப்பாற்பட்ட மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கு குற்றவாளிகளாக நிரூபணமாகும் சந்தர்ப்பத்தில் அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதானது உண்மையான இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் மரியாதை என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச ரீதியில் எமது இராணுவத்தினர் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள மேற்குறிப்பிட்ட தவறுகளை சரிசெய்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

கண்ணுக்கு புலப்படும், புலப்படாத பல வெற்றிகளை கடந்த மூன்றரை ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இழந்த சர்வதேச ஒத்துழைப்புகளை மீண்டும் தாயகம் பெற்றுக்கொண்டது பாரிய வெற்றியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள அமெரிக்க சுற்றுப் பயணமானது தயாகத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணமாகும் என்றும் தெரிவித்தார்.

இன்று உலகில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதனால் பல பிரச்சினைகளை தோன்றிய போதும் மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கிவருவதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தாயகத்தின் பெருமையை பாதுகாப்பதுடன், மக்களுக்கான நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Read more...

Friday, September 28, 2018

ஜெனிவாவில் சிறிதரன் போட்டோ சூட்டிங்! புலிசார்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

கடந்த 15 ம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் நேற்று ஜெனிவா சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் சி.சிறிதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வளாகத்திற்கு சென்றிருந்தார். அவருடன் தமிழ் வின் செய்தியாளர் அணியொன்றும் சென்றிருந்ததென்றும் அவர்கள் சிறிதரனை ஐ.நா வின் பல இடங்களில் நிறுத்தி புகைப்படம் எடுத்து, லொக்கேஷன் மாற்றி மாற்றி பேட்டிகள் எடுத்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தாக அங்கிருந்து வரும் இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் ஐ.நா வளாகத்தினுள் நின்றுகொண்டிருக்கின்ற புலிகள் சார்பு அமைப்புக்கள் சிறிதரனின் மேற்படி விடயத்தை மிகவும் கண்டிக்கின்றனர். சிறிதரன் தேர் பார்க்கச் சென்றதாக கேலி செய்கின்றனர்.

சிறிதரன் தொடர்பான விமர்சனத்தில் , ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பக்க விவாதங்கள் 15ம் திகியிலிருந்து நடந்து வருகிறது. அங்குதான் இலங்கை அரசு கடுமையான வேலை செய்து, புலிகள் தொடர்பான அப்பிராய மாற்றத்திற்கு முயன்று வருகிறது. இப்பொழுது பக்க நிகழ்வுகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆரம்பத்திலேயே பேரவைக்கு வந்து, பக்க நிகழ்வுகளில் பங்குபற்றியிருக்க வேண்டியவர் சிறிதரன். அப்படி ஏதாவது செய்தால்தான், அபிப்பிராய மாற்றங்களை செய்யலாம்.

பக்க நிகழ்வுகள் முடிந்த பின்னர், புகைப்படகாரர்கள் சூழ வந்து, புகைப்படம் எடுத்து விட்டு சென்றால் எந்த அபிப்ராய மாற்றமும் நிகழாது.

சிறிதரன் இன்று ஐ.நாவிற்கு வந்தபோது, பக்க நிகழ்வுகள் முடிந்து விட்டன. இலங்கை விவகாரங்கள் எங்குமே பேசப்படவில்லை.

ஒருவேளை மக்காவிற்கு தரிசனம் செல்வது போல, ஐ.நா வளாகத்தில் கால் வைத்து விட்டு திரும்பலாமென அவர் நினைத்திருப்பாரோ? எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா வினுள் நுழைந்த சிறிதரன் அங்கு நின்ற வெள்ளைத்தோலுள்ளவர்கள் யாராக இருந்தாலும் வினயமாக வேண்டி அவர்களுடன் படம் பிடித்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

Read more...

ஆசைநாயகிக்கு வேலை கொடுத்த அமைச்சரின் ஊழலை உறுதி செய்யக்கோருகின்றது நீதிமன்று.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அந்த எழுத்துமூல அனுமதியை எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உப தலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்தப் பதவிக்கு நெருங்கிய ஒருவரை நியமித்து சம்பளமாக சுமார் 33 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எழுத்து மூல அனுமதியின்றி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதால் பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும் அது தொடர்பில் எதிர்வரும் 19ம் திகதி உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று அத தெரண செய்தியாளர் கூறினார்.

Read more...

ஊடகங்கள் முன்னால் ஊமையாகிய பிரதி பொலிஸ் மா அதிபர்!

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் முன்னாள் பாதுபாப்பு செயலர் ஆகியோரை கொலை செய்ய பொலிஸ் தகவலாளி ஒருவரை தூண்டினார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர் டிஐஜி நாலக டீ சில்வா. அவர் குறித்த உளவாளியுடன் பேசியதான பல்வேறு சம்பாஷனைகளை வெளியிட்டுள்ளார் நாமல் குமார என்கின்ற அந்த உளவாளி.

இந்நிலையில் குறித்த இருவரதும் குரல் மாதிரிகைகளை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்று குற்ற புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தனது குரல் மாதிரியை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு வழங்க வந்திருந்தார் டிஐஜி நாலக டி சில்வா. குரல் மாதிரியை வழங்கி விட்டு செல்லும் டிஐஜி யிடம் ஊடகங்கள் கருத்து பெற முயன்றபோது அவர் ஊமைமயானார்.

நாலக டி சில்வாவுடனான உரையாடலின் ஒரு பகுதி :


பிரதிப் பொலிஸ் மா அதிபர்: எனக்கு மேலதிக வேலைகள் அதிகம், 14 நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். நான் இறுகிப் போயுள்ளேன்.

நாமல் குமார: நான் பயந்து போனேன். சேர் போனையும் ஓப் செய்துவிட்டிருந்தீர்கள். அமித் வீரசிங்கவின் பிரச்சினையால் உங்களுக்கு ஏதும் பிரச்சினையோ என பயந்து போனேன்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: பிரச்சினைகள் என்றால் வந்துள்ளனர். சிலர் எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர். நான் அவற்றுக்கு அஞ்சவில்லை. நான் அதனை கண்டு கொள்வதுமில்லை. நான் பதினான்கு நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். உனக்கு முடியுமா அவனுக்கு எதிராக பௌத்த துறவிகளை குரல் கொடுக்கச் செய்ய?

நாமல் குமார: எஸ்.ஐ.எஸ் பொறுப்பாளருக்கு எதிராகவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : ஆம்

நாமல் குமார: ஒரு பிரச்சினையும் இல்லை, சேர் எனக்கு சரியான தகவல்கள்தான் தேவை.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நான் தகவல்களைத் தருகின்றேன். எப்படியாவது அவனுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நேரடியாக அவனை பீச்சானாக்க (இழிவுபடுத்துவதற்கான வட்டாரவழக்கு) வேண்டும்.

அமீத் வீரசிங்கவை இவர் சிக்கலில் போட்டார் என்ற வகையில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் இல்லை, அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரே இதற்கு பொறுப்பு என்பதனை வெளிக்காட்ட வேண்டும்.

பௌத்த அமைப்புக்களின் ஊடாக இதனை வெளிப்படுத்த வேண்டும். இவரின் ஆட்கள் அமித்தை சுற்றியிருந்னர் என வெளிக்காட்ட வேண்டும். அமித்தை வன்முறைகளில் ஈடுபடத்தூண்டியவர் எனவும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அமித் வீரசிங்கவை நிர்க்கதியாக்கி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிக்காட்டினால், அனைவரும் கோபித்துக்கொள்வார்கள்.

நாமல் குமார: அவரின் பெயர் என்ன சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நிலந்த ஜயவர்தன

நாமல் குமார: நிலந்த ஜயவர்தன, பிரதமர் நம்புகின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : பிரதமரும், ஜனாதிபதியும் நம்புகின்றனர்.

நாமல் குமார: அந்த இருவரும் நம்புகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ம்ம். இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டால், பிரதமர் டக்கென்று அவரை கைவிடுவார்.

நாமல் குமார: லத்தீப் ஐயா பற்றி அறியக் கிடைத்தது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : அவரை எஸ்.டி.எப்லிருந்து தூக்க வேண்டும்.

நாமல் குமார: அவருக்கு நாகொடிக் பிரிவு உள்ளதல்லவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நாகொடிக் இருப்பது எமக்கு பிரச்சினை கிடையாது. எஸ்.டி.எப்லிருந்து தூக்கினால் அதிகாரங்கள் சிதைந்து போகும். எஸ்.டி.எப்ல் பதவி வகிப்பதனால்தான் அவருக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

நாமல் குமார: நாகொடிக் (போதைப் பொருள் தடுப்புப் பிரிவில்) எனது நண்பர் ஒருவர் இருக்கின்றார். எஸ்.டி.எப். (விசேட அதிரடிப்படை)க்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை பொலிஸ் மா அதிபர் நிறுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அது பொய் கதை, மக்களுக்கு எஸ்.டி.எப். பீதி ஏற்பட்டுள்ளது. நாமே மஹாசோன் அமைப்பை பிடித்தோம். எஸ்.டி.எப். அதனைச் செய்யவில்லையே. எமக்கு முடியும், பொலிஸாரினால் மக்களுக்கு சேவையாற்ற முடியும். எஸ்.டி.எப். எதற்கு பொய்யான பீதியே உருவாக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார: சேர் சொன்னது போன்று முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்கி இவற்றை போட வேண்டும். இன்று முகநூலே சிறந்த ஊடாக அமைந்துள்ளது. ஒரே மணித்தியாலத்தில் நாடே உலகமே தகவல்களை அறிந்து கொள்ள வழியமைக்கும். பஸ்ஸில் ரயிலில் செல்லும் போதும் அதனை பார்க்கின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அதற்கு ஓர் கணக்கு உருவாக்க முடியாதா?

நாமல் குமார: இல்லை சேர். எல்லோருக்கும் தெரியும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: உயிரிழந்த நபர்களின் பெயர்களில் உருவாக்க முடியாதா

நாமல் குமார: முடியும் சேர். அப்படித்தான் பலர் உருவாக்குகின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவதானமாக, தொழில்நுட்பமும் உண்டு சட்டமும் உண்டு. சேறு பூச போய் உள்ளே இருக்க நேரிடும். நான் அடித்தால் ஒரே அடிதான் இவனால் எழும்ப முடியாது. சாலிய ரனவக்க மற்றும் டென் பிரியசாத் இவனுடன் இணைந்துள்ளனர். அதனை புளொக் செய்ய வேண்டும்.

நான் முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கின்றேன், அதற்கு இவர்கள் செய்யும் மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் இருவரையும் பீச்சானாக்க வேண்டும். வரும் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மூன்று பேரை தாக்க வேண்டுமென்றால் முடியும்தானே.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: என்னுடன் தொடர்பு பேணுவேரை தேடுகின்றனர்.

நாமல் குமார: உண்மையில் சேருக்கு அஞ்சுகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் எனக்கு அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

நாமல் குமார: நீங்கள் பொலிஸ் மா அதிபராவீர்கள் என்று அஞ்சுகின்றார்கள் போலும். ஏதேனும் மோசடியான முறையில் தேசியப் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பானர் பணம் சம்பாதித்திருக்க வேண்டும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அவ்வாறு பணம் சம்பாதித்துள்ளார். இவருக்கு இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு உண்டு. பல மில்லியன் ரூபா பெறுமதியான வியாபாரம் செய்கின்றார்கள். ஓய்வு பெற்றுக்கொண்ட பின்னரும் அந்த வியாபாரத்தை முன்னெடுக்க முடியும்.

நாமல் குமார: டி.ஐ.ஜீ நந்தன முனசிங்க என்பவர் பற்றி கேள்வி பட்டேன், அப்படி ஒருவர் இருக்கின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவர்தான் பெரிய பிரச்சினை, பாலியல் தொழில் மையங்கள் ஊடாக பணம் சம்பாதிக்கின்றார், ஊழல் மோசடி குகையென்றே அவரை கூற வேண்டும்.

நாமல் குமார: சீனியர் டி.ஐ.ஜீ ஒருவர்தானே அவர்?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம். ஹக்மீமன தயாரட்ன உள்ளிட்டோருக்கு பிணை வழங்குவதற்கு இவரே நடவடிக்கை எடுத்திருந்தார். நான் உங்களுக்கு பேசினால் தொலைபேசியில் பதிலளிக்கவும்.

நாமல் குமார: என்னுடைய போனுக்கா சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: இந்த மொபிடேல் போனை ஆற்றில் வீசி விடவும். தேடிக்கொள்ள முடியாதவாறு ஆற்றில் வீசவும். அடுத்த வாரம் புதிய போன் ஒன்று கிடைக்கும். எமது காரியாலயத்திற்கு ஐந்து போன் வரும் அதில் ஒன்றை தருகின்றேன். புதிய சிம் ஒன்றை போட்டுக் கொள்ளவும்.

அதில் எனக்கு மட்டும் அழைக்கு எடுக்கவும். வீட்டில் இருந்து அழைப்பு எடுக்க வேண்டாம், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் வந்து என்னுடன் பேசவும். தேசிய புலனாய்வு பிரிவு உங்களை பின்தொடரக்கூடும். நானும் ஓர் தனியான இலக்கத்தை பெற்றுக் கொள்கின்றேன் அதன் ஊடாக இருவரும் தொடர்பு கொள்ள முடியும். அல்பிட்டிய பகுதியில் நிஹால் தலதூ என்ற நபர் இருக்கின்றான் அவன் பௌத்த பிக்குகளுடன் நல்ல சிநேகிதம்.

நாமல் குமார: பொலிஸ் உத்தியோகத்தரா

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அல்பிட்டி எஸ்.ஐ ஒருவர். பெசில், கோதபாய, பொதுபல சேனா உள்ளிட்ட தரப்புக்களுடன் அவனுக்கு தொடர்பு உண்டு. இந்த நபருக்கும் அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய விபரங்கள் தேடித் தாருங்கள். இந்த நபர்கள் வழங்கும் பொலிஸ் மற்றும் சட்ட ஆலோசனைகள் என்ன என்பது பற்றியும் தெரிவியுங்கள். நினைவிருக்கட்டும் பெயர் நிஹால் தல்துவ.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஜனாதிபதி மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. நாம் பிரதமர் மீது நம்பிக்கை வைத்தே செயற்பட வேண்டும். 2020ம் ஆண்டில் கோதபாய ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து கொள்வார்கள்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதியை நம்ப முடியாது. அதனால் முடியாத சந்தர்ப்பம் வந்தால் 2020ம் ஆண்டு அண்மிக்கும் போது கோதபாய ராஜபக்ஸவிற்கோ அல்லது மைத்திரிபால சிறிசேனவிற்கோ மாகந்துரே மதுஸைக் கொண்டு ஏதேனும் செய்யுங்கள். முடிந்த எதையேனும் செய்யுங்கள். ஏனென்றால் கோதபாயவிற்கும் மதுஸிற்கும் முரண்பாடு உண்டு அதேபோன்று மைத்திரிக்கும் மதுஸிற்கும் இடையில் முரண்பாடு உண்டு.

Read more...

Thursday, September 27, 2018

ரட்ணபிரிய பந்து ஐ.நா வில் திரையிடப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 அமர்வு நாளையுடன் முடிவுறுகின்றது. அங்கே தமிழர் தரப்பு சார்பாக பல்வேறு அமைப்புக்கள் தங்கள் பக்க விடயங்களை எடுத்துக்கூறி வருகின்ற அதேநேரத்தில், மறுபக்க விடயங்களை உலக இலங்கையர் பேரவை (Global Sri Lanken Forum) எடுத்துக்கூறி வருகின்றது.

உலக இலங்கையர் பேரவையை சேர்ந்தோர் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் ஐ.நா நோக்கி படையெடுத்துள்ளதுடன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகல மனித உரிமை மீறல்களையும் ஆதாரத்துடன் எடுத்துக்கூறி வருகின்றனர். இச்செயலானது தமிழர் தரப்பிற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த பல வருட காலமாக ஐ.நா வினுள் பல்வேறு தமிழர் அமைப்புக்கள் தனியாகவே தமது தரப்பு சார்பாக எடுத்துரைத்து வந்தனர்.

ஆனால் கடந்த இரு வருடகாலமாக இலங்கையர் என்ற நாமத்துடன் பெரும்பாண்மையினத்தினர் புலிகளின் அத்துமீறல்கள் தொடர்பில் எடுத்துரைப்பது ஐ.நா வின் கண்களை அகலத்திறக்கவைத்துள்ளதை இலங்கைநெட் நேரடியாக அவதானித்தது.

பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்து ஐ.நா வினுள் களமிறங்கியுள்ள உலக இலங்கையர் பேரவையினர் ஐ.நா அமர்வுகளிலும் சாமந்தர நிகழ்வுகளிலும் பங்குபற்றி புலிகள் தரப்பு மேற்கொண்ட கொடுமைகளுக்கு அப்பால் சென்று புலம்பெயர் புலிகள் சார்பு அமைப்புக்கள் இலங்கையின் சமாதானத்திற்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதையும், அவர்கள் ஐ.நா விற்கு எவ்வாறான தவறான மற்றும் மிகையூட்டிய தகவல்களை வழங்கி வருகின்றனர் என்பதையும் போட்டுடைத்து வருகின்றனர்.

மேலும் கடந்த 20 ம் திகதி இடம்பெற்ற சமாந்தர நிகழ்வொன்றில், வடமக்களின் மனமாற்றம் தொடர்பில் எடுத்துரைப்பதற்காக, வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்து, இடமாற்றம் பெற்றுச்சென்றபோது, மக்களால் வழங்கப்பட்ட அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்த பிரியாவிடை நிகழ்வை ஐ.நா வில் திரையிட்டு காட்டியதுடன், அங்;கு தமிழ் மக்கள் அவரை புகழ்ந்து தள்ளிய விதம் மற்றும் அவரது சேவைக்கு நன்றி தெரிவித்த மக்கள் தாம் தமிழ் அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டுள்ளோம் என தெரிவித்த விடயங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

அத்துடன் இவ்வாறன அதிகாரிகள் தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்றார்கள் என்றும் அவர்கள் என்றுமே அம்மக்களால் வெறுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த அவர்கள் புலம்பெயர்ந்துள்ள புலிகளின் எச்சங்களே அவ்வாறு படையினருக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.

மேலும் அங்கு பேசிய குற்றவியல் சட்டத்தரணி ஒருவர் இனவழிப்பு என்றால் :

* குழுவின் உறுப்பினர்களை கொலைசெய்வது
* குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ தீங்கிழைப்பது
* அவர்களின் வாழ்வாதாரங்களை முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்
* குழுவில் குழந்தைப்பிறப்புகளை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
* ஒரு குழுவிலிருந்து வேறொரு குழுவிற்கு குழந்தைகளை வலுக்கட்டாயமாக மாற்றுதல்

என்ற நடவடிக்கைகளை கொண்டதாகும் என்றும் அவ்வாறானதோர் எந்த நிகழ்வும் இலங்கையில் இடம்பெறவில்லை என்று விரிவான சட்டவிளக்கங்களை வழங்கியதுடன், அங்கு இடம்பெற்றது ஒர் மீட்பு யுத்தமே என்றும் தெரிவித்தார்.

பேரவையின் தலைவர் சந்திரகுமார பேசுகையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் எதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருப்பின் அவை தனிமைப்படுத்தி பார்க்கப்படவேண்டியவையாகும் என்றும், இலங்கை இராணுவத்தினர் திட்டமிட்டு அவ்வாறன எந்த தீய செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் அவர்களது நோக்கம் மக்களை மீட்பதே என்றும் தெரிவித்தார்.

கடற்படையின் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் சரத் விரசேகர பேசுகையில், நாம் எமது உயிர்களையும் தசைகைளையும் தியாகம் செய்தே எம் நாட்டு மக்களை மீட்டோம். அவ்வாறு மீட்டது மட்டுமன்றி மீட்டெடுத்தவர்களை பராமரித்தோம். கைது செய்த பன்னீராயிரத்துக்கு மேற்பட்ட புலிகளியக்க உறுப்பினர்களுக்கு புனருத்தாபணம் அளித்து அவர்களை மக்கள் மயப்படுத்தினோம். நாம் இவ்வாறெல்லாம் செய்தபோது இலங்கையிலிருக்கின்ற சம்பந்தனோ , சுமந்திரனோ அன்றில் அவர்களது சகாக்களோ எமக்கு எந்த உதவியும் புரியவில்லை. அவ்வாறுதான் இன்று இங்கு ஐ.நா வளாகத்தில் முதலைக்கண்ணீர் வடிக்கின்ற புலம்பெயர் அமைப்புக்களும் எதுவும் செய்யவில்லை. ஆனால் இவர்கள் எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். சிந்தித்துப்பாருங்கள் இன்று யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகின்றது. நாம் அதை முடித்திருக்கா விட்டால் ஏது நடந்திருக்கும் என்ற கேள்வியும் எழுப்பினார்.

பேச்சாளர்களில் ஒருவரான பா. ஜெயதீஸ்வரன் பேசுகையில், இலங்கையிலே சுமார் மூன்று தசாப்த கால யுத்தம் இடம்பெற்றிருக்கின்றது என்பது யாவரும் அறித்தவிடயம். இடம்பெற்று முடிந்த யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் யுத்தக்குற்றம் புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அவ்வாறு குற்றஞ்செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்

யுத்தத்தில் ஈடுபட்ட இரு குழுவினரில் ஒருகுழுவினரான உலகினால் மிக ஆபத்தான பயங்கரவாதிகள் என்று இனம்காணப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறினார்கள் என்பது இங்கு நான் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. தழிழீழ விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்தார்கள். எமது அரசியல் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கொன்றொழித்தார்கள்.

இத்தனை அழிவுகளுக்கு பின்பும் புலம்பெயர் புலிசார்பு அமைப்புக்கள் நடந்து முடிந்தவற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முன்வருகின்றனர் இல்லை. அவர்கள் மேற்குல நாடுகளிலிருந்தவாறு மேலும் இலங்கையில் ஒரு யுத்தத்தை தூண்டவே முற்படுகின்றனர்.

அதை இரு வழிகளில் நிறைவேற்ற முனைகின்றனர். ஒன்று அரசியல் சிவில் நிர்வாகத்தை முடக்கி, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துதல். அச்செயற்பாட்டுக்காக வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பயங்கரவாதத்தின் போஷகர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதற்கான ஒரு சிறந்த உதாரணத்தை நான் உங்கள் முன் கொணடு வருகின்றேன். வட மாகாண சபையிலே உறுப்பிராக திரு. டெனீஸவ்ரன் என்பவர் உள்ளார். அவர் யுத்தத்தில் ஈடுபட்டு நிரநத்ர அங்கவினர்களான முன்னாள் புலிகளுக்கு ஓர் உதவித்திட்டத்தை முன்னெடுத்து வந்தார். நான் புலிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் அவர்களது அடிப்படைத் தேவைகளை மதிக்கின்றேன். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்காக திரு. டெனீஸவ்ரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக உதவி வேலைத்திட்டத்தை மெச்சுகின்றேன்.

துரதிஷ்டவசமாக வடக்கின் முதலமைச்சர் திரு. டெனீஸ்வரன் அவர்களது வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறு சட்டத்திற்கு முரணாக அவரை பதவி நீக்கம் செய்து பாதிப்புக்குள்ளானவர்களை மேலும் துயரத்திற்குளாக்கியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் நீதியரசரான வடக்கின் முதலமைச்சர், சபையின் உறுப்பினரான டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்றும் அவரது பணிகளை தொடர அனுமதிக்குமாறும் நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் அவர் நீதிமன்ற தீர்ப்பை மதியாது இறுமாப்புடன் செயற்படுகின்றார்.

தற்போது அவர் மீது நீதிமன்றை அவமதித்தார் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் முதல் பிரஜையான முதலமைச்சர் மக்கள் பிரதிநிதி ஒருவரின் உரிமையை நீதிமன்ற ஆணையையும் மீறி மறுக்கின்றார் என்றால் வட மாகாண மக்களின் சிவில் உரிமைகள் அங்கு என்ன நிலைமையில் இருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

இவை இலங்கையிலே அமைதியின்மையை விரும்பும் புலம்பெயர்ந்திருக்கும் பயங்கரவாதிகளின் நிகழ்சி நிரலின்கீழ் நடைபெறுகின்றது என்றே மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இரண்டாவது அமைதியை விரும்பாத பயங்கரவாதிகள் வடக்கிலே இளைஞர்களை வன்செயலுக்கு தூண்டுகின்றனர். அவர்கள் குழுக்குழுக்களாக மோதிக்கொள்கின்றபோது மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பாரிய திட்டமிட்ட குற்றச்செயலாகும். இவற்றுக்கு தூபமிடுகின்றவர்களை இங்குள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் அரசுகளும் இனம்கண்டு அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி மனித உரிமைகளை காக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

இலங்கையிலே அமைதியை விரும்பாத இக்கும்பல் அங்கே அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக பல மில்லியன் கணக்கான பணத்தை தீய வழியில் செலவு செய்கினறனர். அதற்கான பணத்தை பல்வேறு வழிகளில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தை வீண்விரயம் செய்து இச்சபைக்கு வருகின்றவர்களில் வட மாகாண சபையின் உறுப்பினர்களும் அடங்குகின்றனர். அங்கே மாகாண சபை மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாவாறு முடங்கிக்கிடக்கின்றது.

இந்நிலையில் இவர்கள் இங்கே சாதிக்கப்போவது என்ன? அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்களாயின் நீதி கோரும் உரிமை அவர்கட்கு உண்டு. ஆனால் எனது அவதானிப்பின் பிரகாரம் அவர்கள் இங்கே தமது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்காகவே வருகின்றனர்.

எனவே இவர்களது வருகைக்கும் பாராமரிப்புக்கும் செலவிடுகின்ற பணத்தை வன்னியிலே யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக ஒரு நேர உணவிற்கு வழியின்றி இருக்கின்றவர்களின் வாழ்வினை மேம்படுத்தும் பொருடடு செலவிடுமாறு குறித்த அமைப்புக்களை வேண்டுகின்றேன். இதற்கான மத்தியஸ்தர்களாக ஐ.நா வின் சம்பந்தப்பட்ட அமைப்புக்களை செயற்பாட்டில் இறங்குமாறும் வேண்டுகின்றேன்.
Read more...

ஐயோ நானில்லை. கோத்தாவும் கபில ஹெந்தவித்தாரணவும் தான் வெள்ளை வேனில் தூக்கினவர்கள்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் நேற்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்குமூலம் வழங்கிவிட்டு திரும்பும்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்து பொன்சேகா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெள்ளை வான் கடத்தல்களை மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், கீத் நொயார் மீதான தாக்குதல் எனக்குத் தெரிந்து இடம்பெற்றதாக கோத்தபாய ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இந்த விடயம் குறித்தே என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கோத்தபாயவின் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எனது பதில் என்ன என்றே கேட்டனர்.

நான் அன்றும் கூறினேன், இன்றும் கூறுகின்றேன் கொழும்பில் இடம்பெற்ற கடத்தல்கள், தாக்குதல்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் கோத்தபாய ராஜபக்ச, கபில ஹெந்த வித்தாரண (புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர்) மேற்கொண்டனர்.

இந்த இருவரினதும் தலைமையிலான குழுக்களே கடத்தல்கள், தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர்.

கோத்தபாய, நான் சிறையில் இருந்த காலத்திலும் என்னுடன் கடமையாற்றிய அதிகாரிகள் உத்தியோகத்தர்களை கைது செய்தார்.

இராணுவ பிரிகேடியர்கள், கேணல்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளை கைது செய்து தடுத்து வைத்து கடத்தல்கள் காணாமல் போதல்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு என்று வெளிக்காட்ட கோத்தபாய முயற்சித்தார்.

அந்த காலத்திலும் கோத்தபாய ராஜபக்சவினால் அதனை செய்ய முடியவில்லை, இன்னும் அந்த முயற்சியை அவர் கைவிடவில்லை. நான் போரை வழிநடத்தியதைத் தவிர வேறு செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

கொழும்பில் இடம்பெற்ற புலனாய்வு செயற்பாடுகளை கோத்தபாய ராஜபக்ச, கபில ஹெந்தவிரதான ஆகியோரே மேற்கொண்டனர்.

வெள்ளை வான் கடத்தல்களில் கோத்தபாய ராஜபக்ச ஈடுபட்டார் என்பது இந்த நாட்டில் அனைவருக்கும் தெரிந்த விடயம் தானே? போரிற்கு அப்பால் கொழும்பில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் இராணுவத் தளபதி பொறுப்பு கூற வேண்டியதில்லை.

இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நடவடிக்கை எடுக்கவும் கோத்தபாய ராஜபக்சவிற்கே பொறுப்பு காணப்பட்டது. ஊடகவியலாளர்களை தாக்கும் அவசியம் எமக்கு இருக்கவில்லை, அரசாங்கத்திற்கே அவ்வாறான தேவை காணப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அனைத்து விடயங்களும் மறந்து போயுள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Read more...

முதலமைச்சரும் ஐங்கரநேசனும் என்னை களவுக்கு நிர்பந்தித்தனர். பயத்திலேயே கைப்பொமிட்டாராம் செயலாளர்.

பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு காற்றாலை நிறுவனங்களுக்கு சட்டத்திற்கு விரோதமாக அனுமதிவழங்கி, முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து வட மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. விக்கி ஊழலில் நேரடியாக தொடர்பு பட்டிருக்கின்றார் என்பதற்கு ஆதாரமான பல்வேறு ஆவணங்கள் அச்சபையில் சமர்பிக்கப்பட்டு வருகின்றநிலையில் „முன்னாள் நீதியரசர்' சபை விவாதங்களில் கலந்து கொள்ளாமல் ஒழிந்தோடி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் இன்று சபை கூடியபோதும் „முன்னாள் நீதியரசர்' சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் அவைத்தலைவருக்கு „முன்னாள் நீதியரசர்' அனுப்பி வைத்த மின்னஞ்சலில் மிக முக்கிய விடயம் ஒன்றுக்கு சமூகமளிக்கவேண்டியுள்ளதாவும் , தாமதமாகி சபைக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனாலும் „முன்னாள் நீதியரசர்' இன்று இரண்டு மணிக்கு சபை முடியும்வரை அந்தப்பதக்கம் தலைகாட்டவே இல்லை.

வடமாகாண சபையின் அமைச்சரவையை செயலிழக்க செய்ததனூடாக வட மாகாண நிர்வாகத்தையே முடக்கியுள்ள விக்னேஸ்வரனுக்கு, சபையை புறக்கணித்து கலந்து கொள்ளவேண்டிய முக்கிய நிகழ்வு யாதென தேடியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

யாழ் பல்கலைக்கழகத்தில் நான்காவது முறையாக (27.09.2018) நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில், ஆராய்ச்சிகள் தொடர்பான நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நூல்வெளியீட்டு நிகழ்வே „முன்னாள் நீதியரசருக்கு' மாகாண சபை அமர்வுகளிலும் பார்க்க முன்னுருமை வழங்கப்பவேண்டியதாக இருந்துள்ளது என சபை உறுப்பினர்கள் விசனம் கொள்கின்றனர். கடந்த அமர்வினை தவிர்த்து திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த „முன்னாள் நீதியரசர்' , „திருமணம் வாழ்வில் ஒரு நாளே என்றும் சபை அமர்வுகள் தொடர்ந்து வரும்' என்று தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபையை புறக்கணித்து மத்திய அரசின் கல்வி அமைச்சரை வால்பிடிக்கும் காட்சி

இந்நிலையில் மோசடி இடம்பெற்றுள்ள காற்றாலை விடயம்பற்றி பேசப்பட்டபோது, காணிகள் ஆணையாளர் திணைக்களத்தினால் காணிக்கான அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே, முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் காணிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது மோசடியான செயல் என்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுதல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சபைக்கு கடிதம் ஒன்றினூடாக விளக்கமளித்துள்ளார் செயலாளர். அக்கடிதத்தில் „தன்னை முதலமைச்சரும் ஐங்கரநேசனும் நிர்பந்தித்தாகவும், பயத்தின் நிமிர்த்தம் தான் அவ்வாறு கையொப்பம் இட்டதாகவும் தெரிவித்துள்ள பந்தியை சபையில் வாசித்துக்காட்டினார் எதிர்கட்சி தலைவர் தவராசா.

அரச நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய சீமெந்தை தனியாருக்கு விற்பனை செய்து ஐங்கரநேரசன் ஒருகோடிக்கு மேற்பட்ட தொகை மோசடி செய்துள்ளமை தொடர்பில் பொறுமை காக்க முடியாது, சிறந்த அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சபை ஊழல் சபையாகவே இனம்காணப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை என்று காலைத்தை கடத்த முடியாது விடயத்தை நிதிமோசடிப்பிரிவுக்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார் சிவாஜிலிங்கம்.
Read more...

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைச் சந்தேக நபர் நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுதலை.

2012ம் ஆண்டு கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றின்போது அங்கிருந்த சிறைக்கைதிகள் 27 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலைகள் தொடர்பாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 9 மாத காலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவை மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியோமல் ரங்கஜீவவை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.

அதன்படி சந்தேகநபரான நியோமல் ரங்கஜீவவை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு சென்று கையொப்பமிடவும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கவும் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

Read more...

டிஐஜி நாலக டீ சில்வா. மர்மம் தொடர்கின்றது.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சந்தேகிக்கக் கூடிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்து, தொலைபேசி உரையாடல் ஒன்று அண்மையில் வெளியாகியது.

'ஊழலுக்கு எதிரான படையணி' என்ற அமைப்பின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார இதனை வெளியிட்டிருந்தார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவுடன் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும், தான் இதுகுறித்து குறித்த போலிஸ் அதிகாரியுடன் பேசியதாகவும், தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நாமல் குமார குறிப்பட்டிருந்தார்.

இந்திய பிரஜை கைது :

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தொலைபேசி உரையாடல் குறித்த அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நாமல் குமார என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய பிரஜை ஒருவரை தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

தாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜையின் வாக்குமூலத்தின் மூலம், ஜனாதிபதிக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகிக்கக்கூடிய பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையின் வாக்குமூலம் தொடர்பில், குறித்த சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் அறிவித்துள்ளது.

குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் குமார என்பவரை செப்டம்பர் 26ம் தேதி அரச இரசாயனப் பகுப்பாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் காணாமல் போன ஸ்னைபர் துப்பாக்கி :

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்த, ஸ்னைபர் ரக துப்பாக்கியொன்று, காணாமல்போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின்பேரில், சிறப்பு போலிஸ் குழுவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர், ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவலுக்கேற்ப, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறிப்பிட்ட ஸ்னைபர் ரக துப்பாக்கியை கைப்பற்றியிருந்தனர்.

இந்த துப்பாக்கி, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்தபோது, காணாமல் போயுள்ளதாக விசாரணை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார என்ற நபர் ஊடகங்களின் முன்னிலையில் வெளியிட்ட வாக்குமூலம்:

'குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நாலக்க டி சில்வா என்பவர் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிமுகமானார்.

சர்வதேச பயங்கரவாத செயற்பாடு குறித்து எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்தத் தகவலை இலங்கையின் போலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், போலிஸ்மா அதிபரே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி நாலக்க சில்வாவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

கடந்த காலங்களில் பல விடயங்களை நாலக்க சில்வா என்னுடன் பேசியிருந்தார். இதில் முக்கியமாக 2020 இல் மைத்திரி - கோட்டாபய கூட்டணியமைக்கப் போகின்றனர். தற்போதே இவர்கள் நெருங்கியுள்ளனர்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல் இருக்கிறது. 2020 நெருங்கும்போது, நிலைமை கைமீறிச் சென்றால், 'மாகந்துரே மதுஷ்' என்ற (பாதாள கும்பலைச் சேர்ந்த தலைவன் என்றே நான் அறிந்துள்ளேன்) நபரைப் பயன்படுத்தி, முடிந்ததை செய்யுங்கள் என்றே அந்த அதிகாரி எனக்குக் கூறினார்.

என்ன செய்ய வேண்டும் என நான் அப்போது கேட்டேன். எது வேண்டுமானாலும் செய்யுங்கள் எனக் கூறினார்.

அதற்குக் காரணம், மாகந்துரே மதுஷ் - கோட்டாபய இடையே பிரச்சினையொன்று இருக்கிறது. அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மாகந்துரே மதுஷிற்கும் இடையே பிரச்சினையொன்று இருக்கிறது.

போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக ஜனாதிபதி குரல் கொடுத்து, நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதே இதற்குக் காரணம். இவற்றைப் பயன்படுத்தி ஏதாவது செய்யுமாறே நாலக்க சில்வா கூறுகிறார்.

கிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் தொடர்பு அண்மையில் கிடைத்தது. கிழக்கில் தமிழ் கட்சியொன்றில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசியல்வாதி அவர்.

இவர் குறித்தும் பல தகவல்கள் கிடைத்தன. மட்டக்களப்பு அல்லது அம்பாறை பிரதேசத்திற்கு ஜனாதிபதி செல்லும்போது தாக்குவோம் என்றும், இந்தத் தாக்குதல் பழியை குறித்த அரசியல்வாதி மீது சுமத்துவோம் என்றும் போலிஸ் அதிகாரி நாலக்க சில்வா எனக்குக் கூறினார்.

இதனை இன்னும் மறைத்து வைப்பது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றியது. அதனால் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முன்வந்தேன்.

குறித்த போலீஸ் அதிகாரியுடன் இந்த பேச்சுக்கள் ஆரம்பித்து இரண்டு மாதங்கள்கூட இல்லை. சாதாரண நபர் ஒருவர், பிரதி போலிஸ்மா அதிபர் மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட முன்வரமாட்டார்.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அறிந்தும் நான் இதனை செய்ய முன்வந்தேன். இதனை போலிஸில் முறையிட்டால் உரிய விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் ஊடகங்கள் முன்னிலையில் இதனை வெளியிடுகிறேன் என்று நாமல் குமார என்ற நபர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நபரான நாமல் குமாரவைத் தனக்குத் தெரியாது எனவும், இதனால் தெரியாத நபர் குறித்தோ, அவர் கூறும் விடயம் குறித்தோ கருத்து தெரிவிக்க முடியாது எனவும் பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களின் பின்னர் பிரதி போலீஸ்மா அதிபர் நாலக்க சில்வா, குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவில் இருந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தொலைபேசி உரையாடலை உறுதிப்படுத்தும் விசாரணை:

நாமல் குமாரவால் வெளிப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல் யாருடையது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கொழும்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

இதன்படி அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நாமல் குமாரவை இன்று ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகள் தொடர்பிலான மேம்பாட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நாமல் குமாரவுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதும், அந்த நபர் வெளியிட்ட தகவல்கள் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதும் இலங்கை அரசியலில் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது என தென்னிலங்கை அரசியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


Read more...

சிசேரியன், சட்டவிரோத கருக்கலைப்பை இல்லாதொழிப்பதற்கு ஒன்றுபடுங்கள்! பிரதி அமைச்சர் பைசல் காசீம்

சிசேரியனைத் தவிர்த்து இயற்கை பிரசவத்தை ஊக்குவிப்பதற்கும் சட்டவிரோதக் கருக்கலைப்பை நிறுத்துவதற்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.

தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு தினத்தையொட்டி புதன் கிழமை[ 26.09.2018] கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:

குடும்பக் கட்டுப்பாடு தொடர்பில் எம் மத்தியில் பிழையான கருத்துக்கள் நிலவுவதால் இந்த விடயத்தில் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் ஐந்து, ஆறு என குழந்தைகள் இருந்தன.இன்று இரண்டு அல்லது மூன்று எனக் குறைந்துவிட்டன. அன்று குழந்தைகளை வளர்ப்பதற்கு குடும்பத்துக்குள் பூரண ஆதரவு இருந்ததால் அதிகமான குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இன்று அப்படி இல்லை. ஆதரவு குறைந்துவிட்டது. எல்லோரும் தங்களை மாத்திரம் கவனிக்கத் தொடங்கியதால் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன.

சனத்தொகை அதிகரிப்பை குறைக்க வேண்டும் என்று இன்று முழு உலகமும் விரும்புகின்றது. அதற்கான திட்டங்களை சர்வதேசம் வகுக்கின்றது.

இப்போது நாம் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம். அந்தப் பிரச்சினைகளுக்கு ஏற்ப-அந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் நாம் எமது குடும்பத்தை தீர்மானிக்கவேண்டியுள்ளது. குழந்தை வளர்ப்பு இப்போது பெரும் சவாலாக மாறி வருகிறது.

இன்று எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் கல்விக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். விளையாட்டைக் கவனிப்பதில்லை. பாடசாலைகளும் அப்படித்தான். இப்படி இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிக்கலாகிவிடும். முதுமையை அடையும்போது அவர்கள் ஆரோக்கியமாக வாழமுடியாமல் போகும்.

அடுத்ததாக கண்பார்வைப் பிரச்சினையை எமது குழந்தைகள் எதிர்காலத்தில் எதிர்நோக்கப் போகின்றன. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளே இதற்குக் காரணம்.

அடுத்த பிரச்சினைதான் திட்டமிடப்படாத மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பு. இது பெண்கள் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். எமது நாட்டில் இப்போது வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் நிலைமை இல்லை. கடந்த வாரம் நான் கலந்துகொண்ட இந்தோனேசிய மாநாட்டில் இதுபற்றிப் பேசப்பட்டது. இந்த நிலைமை குறித்து அங்கு இலங்கையைப் பாராட்டினார்கள்.

ஆனால், இயற்கை பிரசவம் குறைவடைந்து சிசேரியன் பிரசவம்தான் இலங்கையில் அதிகம் இடம்பெறுகின்றன. இயற்கை பிரசவம் இடம்பெறுவதற்கு ஓரிரு நாட்கள் இருக்கும்போது முந்திக்கொண்டு சிசேரியன் செய்கின்றனர்.

இந்த நிலை மாறவேண்டும். இயற்கை பிரசவத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு எமது பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இயற்கை பிரசவம் இடம்பெற்றால் இரண்டாவது பிரசவம் மிகவும் இலகுவாக இருக்கும்.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் குடும்பக் கட்டுப்பாடு கருத்தில்கொள்கிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் மாத்திரம்தான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டியுள்ளது. -என்றார் .Read more...

Wednesday, September 26, 2018

தற்போதைய அரசாங்கம் பழிவாங்குவதை வேற வேறொன்றும் செய்யவில்லை. மகிந்தர்

தற்போதை அரசாங்கம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்திற் கொள்ளாமல் அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தானும் தன்னுடைய குழுவினரும் இன்னமும் நாட்டின் நீதிக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பம் தொடர்பில் நியாயமான முறையில் விசாரணை இடம்பெறும் என்று நம்புவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நேற்று (25) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தன்னுடன் பணியாற்றிய மிகவும் திறமையான அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சேவையாற்றுவதாகவும், அவர்கள் அதேபோன்றே தற்போதும் இருந்தால் சரியான முறையில் விசாரணை செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களின் எதிர்பார்ப்பு தான் அல்ல என்றும், அவர்களின் எதிர்பார்ப்பு மஹிந்த ராஜபக்ஷவே என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read more...

அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள்

அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அனுமதிப்படி அந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

அரசியலமைப்பு பேரவையின் ஐந்து உறுப்பினர்களது உத்தியோகபூர்வ காலம் அண்மையில் நிறைவடைந்தது.

திலக் மராபான, விஜித ஹேரத், டபிள்யு.டி.ஜே. செனிவிரத்ன மற்றும் சிவில் பிரதிநிதிகள் இருவரது காலம் அண்மையில் நிறைவடைந்ததுடன், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அதன் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள்.

புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது, ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல மேலும் கூறினார்.

Read more...

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க புது சட்டம்: இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரை! வருமா இலங்கையிலும்?

குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அந்த நேரத்தில், நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க அரசியல் சாசனத்திலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ தற்போது வழியில்லாத நிலையில், புதிய தகுதியிழப்புச் சட்டத்தை நாடாளுமன்றம்தான் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதே நேரத்தில், தேர்தலில் நேர்மையை நிலைநாட்ட, ஐந்து யோசனைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1.தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தங்களுக்கு எதிராக எவ்வளவு வழக்குகள் உள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

2.தங்களுக்கு எதிராக உள்ள வழக்குகள் விவரம் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றை தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளிடமும் தெரிவிக்க வேண்டும்.

3.ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக உள்ள வழக்கு விவரங்களை தங்கள் கட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும்.

4.வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரும் தங்கள் மீதான வழக்குகள் குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தேர்தலுக்கு முன்பு மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும்.

5.இந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

தாங்கள் விரும்பும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும். அதனால், அனைத்து நபர்களைப்பற்றிய தகவல்களும் அவர்களுக்கு முழுமையாக அறியத் தரப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஊழல் என்பது புற்றுநோயின் மையமாகிவிட்ட நிலையில், அதைக் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், அதற்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்த நாடு எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (3)-ன் படி, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டிக்கப்பட்டால் தான் வகிக்கும் பதவியை அவர் தகுதியிழப்பதுடன், விடுதலையான பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (4)-ன்படி, மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்பட்டாலும், அவர் மூன்று மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்ய முடியாது. அந்த காலகட்டத்தில் அவர் மேல்முறையீடு செய்தால், அதுபற்றி உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை தகுதியிழப்பு செய்ய முடியாது. பின்னர் இந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

தற்போது ஜனநாயகத்துக்கான கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட மனுதாரதர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (4) ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தற்போதைய நிலவரப்படி 34 சதம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குற்றப்பின்னணி உடையவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 142-வது அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில், குற்றப் பின்னணி உடையவர்கள் முழுமையாக தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

இந் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக ஏடிஆர் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் ஜெகதீப் சொக்கர் தெரிவித்துள்ளார். சட்டத்தின் வார்த்தைகளைப் பின்பற்றியுள்ள உச்சநீதிமன்றம், அதே சட்டத்தின் உயிர்ப்புத் தன்மையை புறக்கணித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்றும், இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more...

இனவாதக் கருத்துக்களுடன் கல்முனைப்பக்கம் வராதே! கோடீஸ்வரனுக்கு கல்முனை பிரதி மேயர் எச்சரிக்கை!

தமிழ், முஸ்லிம் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும் கருத்துக்களோடு கோடீஸ்வரன் எம்.பி கல்முனை எல்லைக்குள் கால்பதிக்க கூடாது என கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையே இனவாத கருத்துக்களை விதைத்து இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமீப காலமாக கோடிஸ்வரன் (பா.உ) கல்முனையில் செயல்பட்டு வருகிறார்.

நான் கல்முனை மாநகரசபையில் கடந்த 2006 ஆண்டு முதல் அங்கம் வகித்த ஒரு பிரநிதியாக தற்சமயம் பிரதி மேயராக பதவியேற்ற காலம் முதல் இன்று வரையில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவிற்கு 100 வீதம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் போன்றவர்கள் இனவாத கருத்துக்களுடனேயே இன்றும் கல்முனை மாநகர மக்களிடம் மட்டுமல்ல அதற்கு வெளியிலும், தொடர்ந்தும் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இனங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் தாங்கள் அரசியலில் நீடித்தது இருக்க முடியுமெனவும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்வதையே விருப்புகின்றார்கள்.

ஆனால், இனவாதத்தை அரசியல் மூலதனமாக கொண்டு இயங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு மாத்திரம் மட்டுமல்ல நாடாளவிய ரீதியில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்க்கும் நோக்கின் அடிப்படையில் செயல்படுவதுடன், தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுத்தருவதாக கூறி தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள்.

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் இவர்களுடைய முகத்திரை கிழிந்து காணப்படுகிறது. அதனால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் குழப்பம்,

Read more...

திலீபனுக்காக இங்கு அழுபவர்கள் அப்பட்டமான தேசவிரோதிகள். தமிழகத்திலிருந்து ஸ்ரான்லி ராஜன்

அந்த வடமாராட்சி தாக்குதலில் புலிகள் கொல்லபடும் நிலையில் இருந்தனர், ஏராளாமன மக்கள் சாகும் நிலை இருந்தது, இனி புலிகள் தமிழரை காக்க முடியாது என்ற நிலை அது. இந்தியா முற்றுகையினை விலக்க சொன்னது, ஜெயவர்ததனே கேட்கவில்லை, ராஜிவ் கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார், இலங்கையோ திருப்பி அனுப்பியது.

ஐ.நா அனுமதி இன்றி விமானம் மூலம் உதவி பொருளையும் பாதுகாப்பிற்காக மிக் விமானத்தையும் அனுப்பி இலங்கையினை மிரட்டியது இந்தியா, அதன் பின்பே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் வந்தது, அமைதியும் வந்தது.

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம்.

ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா போராளி குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்.

புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட அமைதியாக இருக்க‌ மாதாந்திர 50 லட்சத்தையும் வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.

ஆம் புலிகளுக்கு இந்திய ராணுவம் வந்ததோ அமைதி திரும்பியதோ கொஞ்சமும் பிடிக்கவில்லை, நேரம் பார்த்து சண்டை தொடங்கும் முடிவிலே இருந்தனர். ஆனால் இந்திய ராணுவமோ யுத்தம் வெடிக்கும் என நினைக்கவே இல்லை, சும்மா சுற்றுபயணம் போல சென்றிருந்தது

ஆனால் ஜெயவர்த்தனேவோ அனுபவஸ்தர், இந்தியாவினை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் செல்லவே இல்லை. சீரழிந்த வடக்கு மாகாணத்தை சீர் படுத்ததொடங்கினார். புலிகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மறக்க தொடங்கினர், புலிகளின் வசூலும் பாதிக்கபட்டது.

புலிகள் பொறுமை இழந்து மக்களை தூண்டிவிட ஆரம்பித்தனர், இந்திய முகாம்கள் முன்னால் ஈழமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பிண்ணணியில் புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது, இந்திய ராணுவம் முதலில் குழம்பினாலும் பின்னால் சுதாரித்தது, ஏதோ அவர்களுக்கு புரிந்தது. அன்று வரவேற்ற மக்களுக்கு இன்று என்ன ஆனது? ஏதோ துர்போதனை, நடக்கட்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தபடி வடக்கே சீரழிந்திருந்த நிர்வகத்தை ஜெயவர்த்தனே நடத்த தொடங்கினார். அதுவரை காவல் நிலையங்கள் இல்லை, அவர் திறக்கதொடங்கினார். புலிகளுக்கு அழிவுக்கண் திறந்தது, காரணம் காவல்நிலையம் திறப்பது மக்களுக்கு சௌகர்யமோ இல்லையோ, தங்களுக்கு ஆபத்து என கருதினர். அவர்களை பொறுத்தவரை நீதி, காவல் எல்லாம் அவர்கள்தான், ஒரே நோக்கம் வசூல்.

அதற்கு முன்பாக மக்களை தூண்டிவிட்டு காவல்நிலையங்களை அடித்து நொறுக்கிய காட்சியியினை கண்ட இந்திய ராணுவம் அமைதியாகத்தான் இருந்தது, ஆனால் ஏதோ நடக்கபோவதை புரிந்து கொண்டது.

அப்படி அந்நேரம் ஆங்காங்கே மக்கள் இந்தியாவினை எதிர்த்தாலும் பெரும் எதிர்ப்பு இல்லை. இந்தியாவினை மொத்த மக்களும் எதிர்க்க புலிகளுக்கு ஒரு காரணம் தேவைபட்டது, மொத்த ஈழமக்களும் இந்தியாவினை காரி துப்ப ஒரு விஷயம் தேவைபட்டது, தந்திரமாக திட்டமிட்டார்கள்.

சில காரணங்களை உள்ளடக்கி திலிபன எனும் ராசையா பார்த்தீபனை உண்ணாவிரதம் என களமிறக்கினர்.

காரணங்கள் இவைதான், புதிய காவல் நிலையம் திறக்க கூடாது, ஊர்க்காவல் படை கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்வோம், குறிப்பாக வடக்கு கிழக்கில் சிங்களன் வரவே கூடாது, இதனை ஏற்காதவரையில் உண்ணாவிரதம் தொடங்கும் என்றனர்.

இது சிக்கலான விஷயம், இந்தியபடை அமைதிகாக்க சென்றது, ஒருங்கிணைந்த ஈழமாகாணத்து தேர்தலை அமைதியாக நடத்த சென்றது, அங்கே நீதிமன்றம் கூடாது, காவல்நிலையம் கூடாது என்பது ஏற்றுகொள்ளகூடியது அல்ல, சட்டம் ஒழுங்கு வேண்டாமா?

கொழும்பில் ஏராளமான தமிழர்கள் வாழும்போது வடக்கே சிங்களர் நுழைய கூடாது என்பது எப்படி சாத்தியம்? அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஜெயவர்த்தனேவினை ஒப்புகொள்ளசெய்தபின் ஏன் தயக்கம் என ஏகபட்ட கருத்துக்கள் இந்தியாவிற்கு.

முதலில் உண்ணாவிரதத்தினை இந்தியா கண்டுகொள்ளவில்லை, காரணம் அப்படி தன்னை மிரட்டி தான் பணிந்தால் எடுத்தற்கெல்லாம் உண்ணாவிரதம் என கிளம்பிவிடுவார்கள் என்பது இந்தியாவிற்கு தெரியாததல்ல‌

இந்தியாவினை தன் விருப்பத்திற்கு மட்டும் ஆட்டுவிக்கும் விபரீத ஆயுதமாக புலிகள் திலீபனை பயன்படுத்துவதை இந்தியா உணர்ந்தது அமைதி காத்தது. ஆனால் புலிகள் ஈழமெங்கும் மக்களை அழைத்து திலீபனை காண செய்து கொடுங்கோல் இந்தியா எப்படி நம்மை சாகவிடுகின்றது பாரீர் என ஒப்பாரி வைத்தனர்.

மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் சுதந்திரம் கிடைக்கும்வரை இருந்து சாவேன் என அவர் இருக்கவில்லை. ஆனால் சில உரிமைகளை அவ்வப்போது பெற்றுகொடுக்கவும் தவறவில்லை. அந்த உயரிய தியாகத்திற்கும் வீண் பிடிவாததத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரா நாடல்ல இந்தியா, அது அப்படியே இருந்தது.

புலிகளும் திலீபன் செத்தே தீரவேண்டும் என முடிவோடே இருந்தனர், இல்லை என்றால் சாகப்போகும் அவன் தன்னை காப்பாற்றவேண்டாம் என எழுதிகொடுத்ததாக சொன்ன கடிதத்தை காட்டியே அவனுக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்காமல் வதைத்தனர்.

புலிகள் நினைத்திருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம், புலிதலைவர் சொன்னால் சயனைடு கடிக்கும் புலிகள், அவர் கட்டளை இட்டால் நீர் குடிக்கமாட்டார்களா? அவர் காட்டிய பிடிவாதமே திலீபனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது, ஈழ மக்களிடையே இந்திய எதிர்ப்பு அதிகரித்தது.

இறுதியில் அவன் செத்துவிடுவான் என உறுதிசெய்யபட்ட நிலையில் இந்திய தரப்பு அணுகுமுறைகள் அவனை பாதுகாக்க வண்ணம் புலிகளும் ஆடினர், அதாவது தாமதபடுத்தினர். வெளியில் துடித்தனர், உள்ளுக்குள் கடும் திட்டம்

ஏற்றுகொள்ளமுடியாத கோரிக்கைகளுக்கு எப்படி செவிகொடுக்க முடியும் என இந்தியா யோசிக்க, வதைக்கபட்டு செத்தான் திலீபன். அவன் செத்ததும் மொத்த ஈழதமிழரையும் இந்தியா கைவிட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்து, அவன் உடலை பெரும் பேரணியாக்கி ஒருவித பதற்ற நிலையினை உண்டாக்கினர் புலிகள்

அந்த நாள்தான் இதே செப்டம்பர் 26. அதாவது மக்கள் போரினை மறந்து அமைதிவழிக்கு திரும்பிகொண்டிருந்தபொழுது, நிம்மதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி போராளி குழுக்கள் வேண்டாம், இந்திய ராணுவம் எம்மை காக்கும் என் கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை மறக்க நினைத்தபொழுது பெரும் சர்ச்சையாக திலீபனை சாகடித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர் புலிகள்.

ஆக எப்படியும் புலிகள் இந்தியாவுடன் மோதுவர், நாம் ஏன் அவசரபடவேண்டும் என்ற அனுபவஸ்த ஜெயவர்த்தனேவின் நிதானைம் வெற்றிபெற்ற வேளை அது. அதன் பின் நடக்க கூடாதது எல்லாம் நடந்து, இன்று ஈழமக்களுக்கு ஒருங்கிணணைந்த மாநிலம் கூட இன்றி சிங்கள ராணுவ முற்றுகைக்குள்ளே வாழும்படி செய்தாகிவிட்டு அவர்களும் பரலோகம் சென்றாயிற்று.

திலீபனும் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, போராளிகுழுக்கள் ஒழிப்பில் அவர் காட்டிய வெறியும், இன்னபிற அழிச்சாட்டிய கொடுமைகளும் பல இடங்களில் காண கிடக்கின்றன‌.

புலிகளின் இரண்டாம் உண்ணாவிரதம் இது, முதல் உண்ணாவிரதம் சென்னையில் ராமசந்திரன் காலத்தில் நடந்தது. சார்க் மாநாட்டையொட்டி ஜெயவர்த்தனே இந்தியா வரும்பொழுது சென்னையில் இருந்த பிரபாகரனை நிராயுதபாணியாக்கி வீட்டு சிறையில் தள்ளினார் ராமச்சந்திரன். அதாவது மத்திய அரசு சொல்லி, செயலில் இறங்கினார் அவர். செய்தது அந்நாளைய கமிஷனர் மோகன் தாஸ், பழி சுமந்ததும் அவரே
ஒன்றுமறியாத கன்னிபோல கவலையாய் விழித்துகொண்டிருந்தார் ராமசந்திரன், காரணம் அவரின் ஈழ இமேஜை காப்பாற்றும் நாடகம் அப்படி.

அன்றெல்லாம் நெடுமாறன், வைகோ எல்லாம் ஏய் துரோகி ராஜினாமா செய் என்றெல்லாம் சொல்லவே இல்லை. மாநாடு முடிந்ததும் எச்சரிக்கையுடன் கருவிகளை பிரபாகரனிடம் கொடுத்தார் மோகன் தாஸ். ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அடித்து புரண்டு இலங்கை ஓடிய பிரபாகரன அதன்பின் தமிழக பக்கம்வரவே இல்லை. (பின்னாளில் பத்மநாபா, ராஜிவ் என எல்லா கொலைகளையும் தமிழகத்தில் செய்து தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க புலிகள் எடுத்த முயற்சிக்கெல்லாம் உட்கோபம் அதுவேதான். ராமச்சந்திரன் அருமையாக நடித்த அரசியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.)

காரணம் உண்ணாவிரதம் என ஆரம்பித்து சென்னையில் ஒரு பதற்றத்தை அவர் தொடங்கினார், வீரமணி கும்பலின் ஜால்ரா ஒருபக்கம், புலிகளை பற்றிஅறியா தமிழக மக்களின் அப்பாவித்தனம் ஒருபக்கம் என மாநிலம் தடுமாறுவதை மோகன் தாஸ் விரும்பவில்லை. இன்னொன்று இலங்கை தீவிரவாதிகளுக்கு இடமளித்துவிட்டு பஞ்சாப், காஷ்மீர் என பாகிஸ்தானை எப்படி கண்டிக்கமுடியும் என்ற மோகன் தாஸின் பேட்டி பாராட்டதக்கது.

இதெல்லாம் ராமச்சந்திரனுக்கு தெரிந்துதான் நடந்தது, ஆனாலும் இன்றுவரை அவரை ஒருவார்த்தை யாரும் பேசமுடியாது ஜாதகம் அப்படி.

ஆக அன்று எப்படியும் தன்னை தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என உண்ணாவிரதம் தொடங்கிய பிரபாகரன், பின் நிச்சயம் இம்மும்றை சாகத்தான் வேண்டும் என்ற நிலையில் திலீபனை களம் இறக்கினார்.

ஏன் சாகவேண்டிய அந்த உண்ணாவிரதத்தை பிரபாகரன் இருந்தால் என்ன?

முன்பு சிங்கள பலகலைகழகத்திற்கெதிராக மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தபொழுது, இது எல்லாம் வேலைக்கு ஆகாது, வன்முறை ஒன்றே வழி என அம்மாணவியரை புலிகள் கடத்தினர். அவர்களில் ஒருவரை பிரபாகரன் திருமணமும் செய்தார் அவர்தான் மதிவதனி, அவருக்கு அன்று கொடுக்கபட்ட போதனை உண்ணாவிரதம் எல்லாம் சும்மா, தலைவர் பிரபாகரனை நம்பு.

பின்பு திலீபனுக்கு கொடுக்கபட்ட கட்டளை, ஆயுத பலத்தால் இப்போது மக்களை திரட்டமுடியாது, உண்ணாவிரதம் இருந்து செத்துபோ, உணர்ச்சிகளை வைத்து பின் நாங்கள் பார்த்துகொள்கின்றோம்.

அதாவது மதிவதனி இருந்தால் காப்பாற்றுவார்கள், திலீபன் இருந்தால் சாகும் வரை கிட்டே இருந்து கொல்வார்கள்.

அதன்பின் ஈழபிரச்சினை வேறுகோணத்தில் சென்று எல்லாம் நாசமாகிவிட்டது, எனினும் தங்களை மக்களிடம் மறுபடியும் கொண்டு சேர்ததற்காக யாழ்பாணத்தில் அவனுக்கொரு நினைவு தூண் புலிகளால் கட்டபட்டது.

தியாக தீபம் எனும் அடையாளம் காசி ஆனந்தனால் கொடுக்கபட்டது, பின் திலீபன் பெரும் அடையாளம் ஆனார். ஏராளமான பேரினை கொன்றவர்கள் புலிகள், ஒருவனை உலகின் கண்முன் வதைத்து கொன்றனர் என்றால் அது திலீபனை மட்டுமே.

அவன் கடைசிவார்த்தை வரை பிரபாகரன் பின்னால் திரளுங்கள், ஈழத்தில் நமது கொடி நமது ராணுவம் என சொல்லியே செத்தான் என்றால் அவன் யாரால் தூண்டபட்டு, எதற்காக செத்தான் என்பது எளிதில் முடிவுக்கு வரகூடியது,

ஒரே காரணம் இந்திய ராணுவம் வெளியேற மக்கள் சண்டைக்கு வரவேண்டும். அதன் பின்னும் ஈழமக்கள் அமைதிகாக்க, குமாரப்பா போன்றோர் இந்திய கைதுசெய்யபட்டனர், ஆனால் சயனைடு இல்லை. பின்னர் இலங்கை இந்திய அரசு பேசிகொண்டிருக்கும்பொழுது கைதிகளை சந்திக்க வந்த புலிகள் சயனைடை கொடுத்து சாக சொல்ல மறுபடி பற்றி எரிந்தது ஈழம், 2009 வரை எரிந்தது.

அன்று இந்திய முயற்சியில் எல்லாம் மிக நன்றாக நடந்துகொண்டிருந்த பொழுது திலீபனின் வதை சாவு எல்லாவாற்றையும் நாசமாக்கி மக்கள் உணர்ச்சிகள் மீண்டும் புலிகளால் அநியாயமாக தூண்டபட்டு எல்லாம் மண்ணாய் போக மிக முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.

அனுபவஸ்த ஜெயவர்த்தனே நிதானமாக தன் எதிரிகளை மோதவிட்டு ரசிக்க தொடங்கினார், வரலாற்றின் பெரும் தந்திரக்கார வில்லன் அவர். ஆனால் நிதானமிழந்த புலிகள் முட்டாள்தனமாக‌ உதவவந்த இந்தியா மீதே பாய இன்று எல்லாம் சர்வநாசம்.

இன்றும் ஆங்காங்கே தீயாக தீபம், திலீபன், இந்திய கோரமுகம் என சிலர் தமிழகத்திலும் வீரவணக்கம் என இறங்கலாம், புரிந்தவர்களுக்கு புரியும் திலீபன் ஏன் சாகடிக்கபட்டான் என்பது இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவபட்ட ஒரு தற்கொலை படை அவன்.

போகட்டும்

திலீபன் உண்ணாவிரதம் தொடங்கும்பொழுது பிரபாகரன் சொன்னாராம் "திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்" சொன்னபடி உடனே வந்தாரா? இல்லை. அவன் செத்ததும் அவனை வைத்து சீன் போட்டு என்னமோ செய்தார்.

22 ஆண்டுகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு தீலிபனுக்கு சொன்னபடி முள்ளிவாய்க்காலில் அவன் இருக்குமிடம் சென்றார். அவர் சென்றது பிரச்சினை இல்லை, மாறாக எத்தனை லட்சம் தமிழ்மக்களை கூட்டிகொண்டு சென்றுவிட்டார். அதுதான் மகா பரிதாபம், இந்த நூற்றாண்டின் பெரும் கொடுமைகளில் ஒன்று.

இப்படி எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதியாக இவர் சென்றார், சரி இவருக்கு பின் போராட யாரை விட்டு சென்றார்? எதனை மிச்சம் வைத்துவிட்டு சென்றார்? இதனைபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, இன்று தமிழகத்தில் அங்கிள் கோஷ்டியினர் இப்படியும் தொடங்கலாம்.

"திலீபன் சாவுக்கு யார் காரணம் தெரியுமா என் உறவே..?"

ராஜிவ், கலைஞர், சோனியா, மன்மோகன்சிங் மற்றும் இந்தியா என சிலர் முழங்கிகொண்டிருப்பர்,

ஆனால் அப்போது மிக அமைதியாக இருந்த ம.கோ ராமச்சந்திரன் என்பவரை பற்றி மூச்சே வராது.

அமைதிபடை அனுப்பிய இந்திய தளபதி சுந்தர்ஜி (சுந்தர்.சி அல்ல) ஒரு தமிழர் என்பதை பற்றி யாரும் பேசமாட்டார்கள், இதுவும் ஓர் விந்தை. அவரை இனதுரோகி என யாராவது சொல்லி கேள்விபட்டிருக்கின்றீர்களா? கிடையவே கிடையாது.

இதுதான் அரசியல்.

ஆக இதனை தாண்டி யோசியுங்கள் திலீபனை சாக விட்டது யார் என தெரியும், யாரின் தலமைக்கு பணிந்து அவன் செத்தான் என்பதும் தெரியும், யாருக்கு லாபம் என்பதும் புரியும்.

காஷ்மீரிய எல்லையில் செத்த எம் தேசவீரர்களை மறந்துவிட்டு, இப்படி எவன் சொல்லி எங்கோ அந்நிய நாட்டில் செத்தவனுக்காக இங்கு எவனாவது கொடிபிடித்தால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

திலீபனுக்காக இங்கு அழுபவர்கள் அப்பட்டமான தேசவிரோதிகள், ராஜிவோடு செத்த 16 பேரை மறந்துவிட்டு அனுதினமும் இங்கு தீவிரவாதத்திற்கு எதிராக சாவோரை மறந்துவிட்டு கடல்கடந்த தற்கொலைபடை தீவிரவாதியான திலீபனுக்காக அழுபவர்கள் இந்நாட்டின் சாபக்கேடுகள்

இந்த தீலீபன் சாகும்பொழுது இங்கு ராமசந்திரன் முதல்வர், இவ்வளவிற்கும் புலிகள் அனுதாபி. ஆனால் அன்று ஒரு குரல் திலீபனை காக்காத ராமசந்திரன் பதவி விலகட்டும் என்றோ, இல்லை அமைதிபடையினை அனுப்ப அனுமதித்த ராமசந்திரன் ராஜினாமா செய்யட்டும் என்றோ கேட்கவே இல்லை.

ஏன் என்றால் அப்படித்தான். அமைதிபடை சென்றதும், புலிகள் முரண்டு பிடித்ததும், திலீபன் செத்ததும் எல்லாம் தமிழகத்தை உலுக்கிய காலங்கள். ஆனால் ராமசந்திரன் கனத்த அமைதி, கூடவே ராஜிவோடு கைகோர்ப்பு.

ஒரு குரலாவது தமிழினதுரோகி ராமசந்திரன் என்றோ, ராமசந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டதா என்றால் இல்லை. இதை எல்லாம் தமிழகம் மறந்துவிட்டது என பழனிச்சாமி, பன்னிர், தமிழிசை எல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் வரலாற்றில் "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணொம்"

எது பச்சை துரோகம் என்றால் இப்பக்கம் புலிகளுக்கு வாலையும் அப்பக்கம் ராஜிவிற்கு தலையினையும் காட்டி ஈழமக்களுக்கு ராமசந்திரன் செய்தது அப்பட்டமான துரோகம். உண்மையான "தமிழின துரோகம்" அதுதான்

ஒரு வாதத்திற்கு வைத்தாலும், அமைதிபடையினை வரவேற்க மாட்டேன் என பதவி போனாலும் சரி என நின்ற கலைஞர் அமைதிபடை அனுப்பபட்டு அதன் பின் திலீபன் செத்தபின்பும் ராஜிவோடு கைகோர்த்து நின்ற ராமசந்திரனை விட பன்மடங்கு மேலானவரே..

Read more...

Tuesday, September 25, 2018

இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணத அளவில் வீழ்ச்சி. முன்னாள் அதிபர் விசனம்.

அமெரிக்காவின் டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமை இன்று பாரதூரமான நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்மையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தில் குறைப்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2007, 2008 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய நிலை ஏற்பட்டிருந்தாலும் அதன் தாக்கம் இலங்கையை பாதிக்காத வகையில் தமது அரசாங்கம் செயற்பட்டது.

2007 ஆம் ஆண்டு 110 ரூபா 62 சதமாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 2009 ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடி மறறும் இறுதி யுத்தத்தினை எதிர்கொண்டும் 114 ரூபா 92 சதமாகப் பேணப்பட்டது.

2015ம் ஆண்டு பொதுத்தேர்தலை வெற்றிகொள்வதற்காக தற்போதைய அரசாங்கம் எவ்வித கரிசனையும் இன்றி சம்பள அதிகரிப்பு, எரிபொருள் விலை குறைப்பு மற்றும் இறக்குமதிப் பொருட்களின் வரிகள் குறைப்பு போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இதனால், அரசாங்கத்தின் செலவு சடுதியாக அதிகரித்தது. வேறு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிதுள்ளது.

எனினும், அது உண்மையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடு.

எரிபொருள் மற்றும் மோட்டார் வாகன இறக்குமதி அதிகரித்தமை போன்ற காரணங்களினால் ஏற்பட்ட வர்த்தக பற்றாக்குறை மற்றும் வரவு செலவு துண்டு விழும் தொகையை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் பெருமளவில் வெளிநாட்டு வணிகக் கடனை பெற்றுக்கொண்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

தமிழ் தேசியம் என்ற கரும்போர்வையால் மூடி மறைக்கப்படும் போதநாயகியின் (தற்)கொலைக்கு கிடைக்குமா நீதி.

வவுனியாவைச் சேர்ந்த ஓர் உழைப்பாளியின் மகள், போதாநாயகி. (தற்)கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் பத்தோடு ஒன்று பதினொன்றாக செய்திகளை வெளியிட்டன. ஆனால் அவர் தற்கொலைதான் செய்துகொண்டிருந்தாலும் அதற்கான காரணங்களை தேட எவரும் முயற்சிக்கவில்லை மாறாக நம் ஊடகங்கள் தீர்பெழுதிமுடித்து விட்டது.

அத்துடன் போதாநாயகிக்காக நீதிகோருவோரது குரல்வளைகள் தமிழ் தேசிய ஊடகங்கள் என முத்திரை குத்திக்கொண்டவைகள் நெருக்கிக்கொண்டிருக்கின்றது. அதற்கான காரணம் வேறொன்றும் அல்ல. அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அக்கொலை அவரதும் கரத்தை பிடித்தவர், அயோக்கியர்கள் இறுதியா தஞ்சமடையும் „தமிழ் தேசியம்„ என்ற முகாமைச் சேர்ந்தவரென்பதாகும்.

ஆனாலும் போதாநாயகிக்கு நீதி வேண்டும் என்ற குரல்கள் தமிழ் தேசியப் பீரங்கிகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கைநெட் அதன் பாணியில் விடயம் தொடர்பில் தனது புலனாய்வினை மேற்கொண்டு மக்கள் மன்றில் சமர்பணம் செய்யும். அதேநேரம் போதாநாயகிக்காக முகநூலூடாக நீதிகோரும் சுப்ரமணிய பிரபா வின் மனுவினை வாசகர்களின் பரிசீலனைக்கு விடுகின்றோம்.

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் சாவுக்கு இதுவும் காரணம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரும் வன்னியூர் செந்தூரன் என்று அறியப்படுபவரின் மனைவியுமான நடராசா - போதநாயகி அவர்கள் திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவர் எவ்வாறு இறந்தார்?
கொலை செய்யப்பட்டாரா?
அல்லது தற்கொலை செய்துகொண்டாரா?
என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.

எனினும் அவரின் சமீப கால முகநூல் பதிவுகளை பார்க்கும் போது பல கேள்விகளுக்கு விடை இருப்பதுபோல தோன்றுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வன்னியூர் செந்தூரனை திருமணம் முடித்த போதநாயகி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் தந்தை தும்பு மிட்டாய் விற்றும் தாய் கூலி வேலைக்கு சென்றுமே அவரை படிப்பித்தனர். அச்சிறிய கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய முதல் மாணவி போதநாயகி நடராசா ஆவார். பல கனவுகளோடு பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்து பட்டம் பெற்று பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியில் சேர்ந்த போதநாயகியின் வாழ்வு திருமணம் முடித்த ஆறே மாதங்களில் மண்ணோடு மண்ணாகிப்போனமைக்கு யார் காரணம்?

அவரை திருமணம் முடித்த வன்னியூர் செந்தூரனின் கடந்த காலமும் நிகழ்காலமும் பல திடுக்கிடும் அம்சங்களை கொண்டது. வெளியில் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, இன உணர்வாளராக காட்டிக்கொள்ளும் செந்தூரன் தனிப்பட்ட வாழ்வில் படு கேவலமான நடத்தை உடையவர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே வன்னியூர் செந்தூரன் பிரான்ஸ் வதிவிட உரிமை கொண்ட அவரிலும் வயதில் கூடிய ஒரு பெண்ணை முகநூல் ஊடாக காதலித்து இந்தியாவில் வைத்து பதிவுத்திருமணம் செய்தார். அப்பெண்ணிடம் இருந்து பல லட்சம் பணம் விலை கூடிய கைபேசி என ஏராளம் பெற்றுக்கொண்டு ஈற்றில் இவரை நம்பி வந்த அப் பெண்ணை இந்தியாவில் விட்டுவிட்டு நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். அப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்று நண்பர்களால் காப்பாற்றப்பட்டார். தன் ஆற்றாமையையும் ஏமாற்றப்பட்டதையும் செந்தூரனின் உண்மை முகத்தையும் முகநூலில் ஆதாரபூர்வமாக எழுதி தனக்கு நீதி கிடைக்காது போயினும் இன்னொரு பெண் தன்னைப்போல எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடாதென்று போராடினார்.

ஆனால் செந்தூரன் தன் மேல் போர்த்திக்கொண்டிருந்த தேசிய வேசத்தினால் அப்பெண்ணின் குரலை வலுவிழக்க செய்துவிட்டார். கவிஞர் மீதான காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார் மண முறிவு இயல்பானதுதானே இதிலென்ன புதுமை என்றெல்லாம் நியாயம் பேசினார்களேயொழிய அப்பெண்ணுக்கு ஆதரவாய் எவரும் குரல் கொடுக்கவில்லை. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. போராடிப்பயனில்லை அவமானமே மிஞ்சும் என்று நினைத்த அவர் தானாக விழகிப்போனார். செந்தூரன் பொன்னாடை போர்த்திக்கொண்டு அடுத்த பெண் வேட்டைக்கு தயாரானார்.

பிரான்ஸ் பெண்ணை ஏமாற்றிய அடுத்து ஆண்டே (2017) அவர் லண்டனில் வசிக்கும் கணவனை இழந்த பெண் ஒருவரின் மகளை குறிவைத்து தன் நகர்வை மேற்கொண்டார். அப்பெண் இலங்கையிலும் தாய் லண்டனிலும் உள்ளனர். இலங்கையில் உள்ள அவரின் மகளை தான் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தை கூறியிருகிறார். லண்டனில் உள்ள அவர் வன்னியூர் செந்தூரனைப்பற்றி வெளியாட்களிடம் விசாரிக்க அவர் நல்லவர் வல்லவர் என்றே அனைவரும் கூறியிருக்கின்றனர். வெளி உலகுக்கு அவர் பிரான்ஸ் பெண்ணை பதிவுத்திருமணம் செய்த விடயம் தெரியாது முகநூலில் ஒரு சிறுவட்டத்துடனேயே அச்சம்பவம் முடிந்து போனது.

ஏற்கனவே தான் ஒரு பெண்ணை பதிவுத்திருமணம் செய்து கைவிட்டதை செந்தூரனும் அவரிடம் கூறவில்லை எனவே அவரை நம்பி மருமகன் மருமகன் என்று கூப்பிட்டிருகிறார் இவரும் மாமி மாமியென்று தேவை ஏற்படும் போதெல்லாம் போன் செய்து பேசி பணம் வாங்கி இருக்கிறார். அப்பெண் கணவரை இழந்தவர் மிகவும் கஸ்ட்டப்பட்டு சிறுக சிறுக சேமித்த பணத்தை மருமகனாகப்போகிறவர் தானேயென்று இவருக்கு அனுப்பி இருக்கிறார் அதையெல்லாம் வாங்கிக்கொண்டு அவர்களுக்குத்தெரியாமல் தற்போது இறந்து போன நடராசா - போதநாயகியை ஏமாற்றி இவ்வாண்டின் ஆரம்பத்தில் திருமணம் செய்திருக்கிறார்.

இவர்களின் திருமண படத்தை முகநூலில் கண்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை லண்டனில் உள்ள அந்த பெண்மணி உணர்ந்திருக்கிறார். இவருக்கு போன் செய்து ஏன் என்னை நம்பவைத்து ஏமாற்றினாய் என் மகளை கட்டுவாய் என்ற காரணத்தினால்தானே உனக்கு கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பினேன் என்று பேசியிருக்கிறார் இத்திருமணம் திடீரென்று நடைபெற்றதால் எவருக்கும் சொல்லவில்லை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் திருமணம் நடந்துவிட்டது என்று செந்தூரன் கூறி இருக்கிறார். அதற்கு அப்பெண் நான் மகளின் திருமணத்திற்கென சிறுக சிறுக சேர்த்த பணத்தை உனக்கு தந்தேனே அதற்கு பதில் என்ன என்று கேட்டதற்கு யூலை மாதம் வரையும் பொருத்துக்கொள்ளவும் பணத்தை திரும்ப தருகிறேன் என்று கூறியிருக்கிறார். யூலை மாதம் கோல் எடுக்க இவரின் போன் வேலை செய்யவில்லையாம் நம்பரை மாத்தி விட்டார். மூன்று ஆண்டுகளில் உத்தியோகபூர்வமாக மூன்று பெண்களை வெற்றிகரமாய் ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டிய செந்தூரன் ஒரு பெண்ணை இன்று சாகடித்திருக்கிறார்.

இதற்கிடையில் திருநகரைச்சேர்ந்த ஒரு பெண்ணுடனும் இவர் நெருங்கி பழகியிருக்கிறார் அப்பெண்ணை திருகோணமலைக்கு அழைத்துச்சென்று அவருக்கு தெரிந்த கவிதாயினி ஒருவர் வாடகைக்கு பெற்றுக்கொடுத்த வீட்டில் குடித்தனம் நடத்தியும் இருக்கிறார் மேலே குறிப்பிட்ட மூன்று பெண்களை பணம்வாங்கியும் திருமணம் முடித்தும் ஏமாற்றியதற்கும் ஆதாரம் அனைத்தும் இருக்கிறது ஆனால் இப்பெண்ணுடனான தொடர்பிற்கு ஆதாரம் இல்லை முகநூல் நண்பர்கள் கூறியவை இவை.

அத்துடன் தமிழகத்தில் வசிக்கும் Ashroffali Fareed வன்னியூர் செந்தூரன் தொடர்பாக மேலும் ஒரு திடுக்கிடும் தகவலை கூறினார். தமிழகத்திற்கு அடிக்கடி சென்றுவரும் செந்தூரன் சென்னையை சேர்ந்த அழகிய இளம் பெண் ஒருவரையும் திருமணம் முடித்து வடபழனி மற்றும் பல்லாவரம் பகுதியில் சிலகாலம் சேர்ந்து வசித்துவிட்டு கைவிட்டுச்சென்றதாகவும் அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அநாதரவாய் நின்ற அப்பெண்ணை தான் நேரில் சந்தித்து உரையாடியதாகவும் தன் அவுஸ்திரேலிய நண்பர் ஊடாக அப்பெண்ணுக்கு உதவிகள் பெற்றுகொடுத்ததாகவும் முகநூலில் பின்னூட்டம் இட்டிருந்தார்.

இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் பெண் தொடர்பு வைத்துள்ள வன்னியூர் செந்தூரன் திருமணம் முடித்த இரு மாதங்களிலேயே தன் பழைய மன்மத விளையாட்டிற்கு திரும்பியிருக்கிறார். இவற்றை போதநாயகி அறிந்து கண்டித்த போது ஊரில் உலகத்தில் நடக்காததையா நான் செய்துவிட்டேன் என அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அவர் அதை முகநூலில் பதிவாக இட்டு தன் மனவாற்றாமையை தீர்த்திருக்கிறார். அப்பதிவும் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று மாதமாக போதநாயகியின் திருமண வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவரின் முகநூல் பதிவுகள் அனைத்தும் அதைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு கட்டத்தில் இப்படி 'அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் வாழ்வதை விட மடிந்து போவது மேல்" என விரக்தியோடு பதிவொன்றை இட்டிருக்கிறார்.

அத்துடன் கடந்த 20/08/2018 இல் தான் வாழ்வில் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதை ஒரு பெரும் கவிதையாக எழுதி பொதுவில் பகிர்ந்திருக்கிறார். அக்கவிதை அவர் இறப்பதற்கு இரு நாட்களின் முன் (18/08/2018) மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு அடியில் திகதியும் அவர் பெயரும் இடப்பட்டிருக்கிறது அதில் 20/08/2018 என்பதற்கு பதிலாக 20/08/2017 என அவரால் தவறுதலாக பதியப்பட்டிருக்கிறது.

தான் செத்துப்போனால் அக்கவிதை ஒரு மரண வாக்குமூலமாக இருக்கும் என நம்பியே அவர் அதை எடிட் செய்து அடியில் பெயர் திகதி போட்டிருக்கலாம் அல்லது அப்படி ஒரு கவிதையை நீயேன் எழுதினாய் என அவர் கணவரால் அச்சுறுத்தப்பட்டு ஓராண்டுக்கு முன்னர் எழுதியது என்பதுபோல் காட்ட மீண்டும் எடிட் செய்து பெயர் மற்றும் திகதி சேர்க்கப்பட்டிருக்கலாம் எது எப்படியோ அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன் அக்கவிதையை எடிட் செய்து பெயர் திகதி போடவேண்டிய தேவை அல்லது அழுத்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னைப்பொருத்தவரை அவர் திகதியை 2018 என்பதற்கு பதிலாக 2017 என தவறுதலாகவே போட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன் அக்கவிதை அவரின் நிகழ்கால துயர் மிகு வாழ்க்கையினை படம்போட்டு காட்டுகிறது.

அத்துடன் இன்னொரு வேடிக்கையான சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது செந்தூரன் தான் மனைவியை அதிகம் நேசித்ததாக கூறுகிறார் ஆனால் அவர் இறப்பதற்கு இரு நாட்களின் முன் மெசேஜ் மூலம் தான் அவருக்கு போதநாயகி வவுனியாவிற்கு வருவதை தெரிவித்திருக்கிறார். மூன்று மாத கர்ப்பிணியான அப்பெண்ணுடன் போனில் பேசும் அளவுக்கு கூட நேரமில்லாதவராகவும் நெருக்கமில்லாதவராகவும் செந்தூரன் இருந்திருக்கிறார் அவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்படும் வரையில் அவரை தேடாது இருந்திருக்கிறார். தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று தான் நினைத்ததாயும் பின் போன் செய்யும் போது அது வேலை செய்யவில்லை பணி காரணமாக சுவிச் ஓவ் செய்யப்பட்டிருக்கும் என நினைத்ததாயும் கூறுகிறார். இதுவா இருநாட்கள் தொடர்பில்லாமல் இருக்கும் ஒரு மனைவி மீது கணவன் காட்டும் அக்கறை?

அடுத்து அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கு செந்தூரன் பேட்டி வழங்கையில் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எமக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லை இது திட்டமிட்ட கொலை என கூறுகிறார். தற்கொலை என்ற கோணத்தில் எவருமே சிந்திக்காத போது இவருக்கு மாத்திரம் அந்த சிந்தனை எப்படி வந்தது? தமக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லையென்று முந்திக்கொண்டு பேட்டி கொடுத்தது ஏன்? தற்கொலை என்ற கோணத்தில் இம்மரணம் பார்க்கப்பட்டால் தன் கையில் விலங்கு மாட்டப்படும் என்பதை செந்தூரன் நன்கு உணர்ந்ததாலேயே இது தற்கொலை இல்லை கொலையென்று மரண விசாரணை அதிகாரி கூறுவதற்கு முன்பே தீர்ப்புக்கூறி இருக்கிறார்.

தன் மனைவி தற்கொலைசெய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததும் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததும் செந்தூரனுக்கு ஏற்கனவே தெரியும். போதநாயகியின் முகநூலை பார்த்தாலே நமக்கும் அது தெரியும் சந்தோசமாக குடும்பம் நடத்தும் இளம் சோடிகளின் குடும்ப வாழ்க்கையினை வெளிப்படுத்துவதாய் அவர் எப்பதிவுகளையும் கடந்த மூன்று மாதங்களாய் இடவில்லை சோக மயமாகவும் வாழ்கையில் விரக்தியுற்றுமே பதிவுகளை இட்டிருக்கிறார். முதல் சிசுவை கருவில் தாங்கும் ஏனைய பெண்களின் மன மகிழ்ச்சி இவரிடம் இருக்கவில்லை.

போதநாயகி தற்கொலைதான் செய்துகொண்டார் என உறுதியாக தெரியும் பட்சத்தில் அதற்கு காரணம் தான் தான் என்பதை பொலிசாரும் மக்களும் ஊகித்து உணர்ந்துகொள்வார்கள் என்பதை உணர்ந்த செந்தூரன் தாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாய் காட்ட பல்வேறு நாடகங்களில் ஈடுபட்டார். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் எழுதிய கவிதையொன்றை ஊடகங்களுக்கு கொடுத்து இத்தனை அன்பு வைத்திருந்தேன் என் மனைவியில் என மக்களையும் சுற்றத்தையும் நம்ப வைக்க முயற்சித்தார்.

அத்துடன் தான் இன உணர்வு கொண்டு செயற்படுவதால் தன்னை பழிதீர்க்க இலங்கை அரச புலனாய்வாளர்கள் திட்டமிட்டு தன் மனைவியை கொலை செய்து விட்டதாய் தன் நண்பர்களுக்கு கூறி அக்கதைகளை சமூக வலைத்தளங்கள் இணையத்தளங்கள் அனைத்திலும் பரவ விட்டார். தான் எழுதிய புத்தகங்கள் பெற்ற விருதுகள் எல்லாவற்றையும் மனைவியின் உடலின் மீது வைத்து அதை படம் பிடித்து அனுதாபம் தேடினார். மொத்தத்தில் ஒரு மாபெரும் நாடகத்தை அரங்கேற்றம் செய்து பிசிரில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நடிப்புக்குள்ளும் சில பெரிய மனிதர்களின் ஆதரவினாலும் தம் மகளின் தற்கொலைக்கு அவள் கணவனே காரணம் என்ற அந்த ஏழைப்பெற்றோரினதும் உறவினர்களினதும் குரல்கள் அடங்கிப்போய்விட்டன.

என் முகநூலில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கற்றறிந்த பெரியோர் என பலரும் இருக்கின்றீர்கள் உங்கள் அனைவரிடமும் ஒரு பணிவான வேண்டுகோள்

இந்த அப்பாவிப்பெண்ணின் படுகொலைக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள். தேசியம் என்ற பெயரிலும் இன உணர்வு என்ற பெயரிலும் அப்பாவிப்பெண்கள் இனியும் செந்தூரன்களுக்கு இரையாகக்கூடாது. "இருப்பவர்கள் இருந்தால் இதுவெல்லாம் நடக்குமா" என்பவர்களே இருப்பவர்கள் இருந்தால் ஒரு பெண்ணை தன் நடத்தையால் தற்கொலை செய்யவைத்தவனுக்கு என்ன தண்டனை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அவரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பினை இங்கே தருகிறேன் அவற்றை கருணை கூர்ந்து பாருங்கள்! அப்பெண் சிரிப்பதை நிறுத்தி பல மாதமாகிவிட்டதை நீங்கள் உணர்வீர்கள்.

இறப்பதற்கு முன் அவர் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை இறுதியாய் பதிவேற்றி இருக்கிறார்,

அக்குறள்:-

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்:-
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

ஆம் நேற்று உயிருடன் இருந்த போதநாயகி யை இன்று இல்லாமல் செய்துவிட்டோம் என்ற அகந்தையை பெருமையாக கொண்ட செந்தூரன்கள் வாழும் உலகுதான் இது. 😢

அப்பாவிப்பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்:- சு.பிரபாRead more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com