Thursday, September 27, 2018

ரட்ணபிரிய பந்து ஐ.நா வில் திரையிடப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 அமர்வு நாளையுடன் முடிவுறுகின்றது. அங்கே தமிழர் தரப்பு சார்பாக பல்வேறு அமைப்புக்கள் தங்கள் பக்க விடயங்களை எடுத்துக்கூறி வருகின்ற அதேநேரத்தில், மறுபக்க விடயங்களை உலக இலங்கையர் பேரவை (Global Sri Lanken Forum) எடுத்துக்கூறி வருகின்றது.

உலக இலங்கையர் பேரவையை சேர்ந்தோர் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் ஐ.நா நோக்கி படையெடுத்துள்ளதுடன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகல மனித உரிமை மீறல்களையும் ஆதாரத்துடன் எடுத்துக்கூறி வருகின்றனர். இச்செயலானது தமிழர் தரப்பிற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த பல வருட காலமாக ஐ.நா வினுள் பல்வேறு தமிழர் அமைப்புக்கள் தனியாகவே தமது தரப்பு சார்பாக எடுத்துரைத்து வந்தனர்.

ஆனால் கடந்த இரு வருடகாலமாக இலங்கையர் என்ற நாமத்துடன் பெரும்பாண்மையினத்தினர் புலிகளின் அத்துமீறல்கள் தொடர்பில் எடுத்துரைப்பது ஐ.நா வின் கண்களை அகலத்திறக்கவைத்துள்ளதை இலங்கைநெட் நேரடியாக அவதானித்தது.

பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்து ஐ.நா வினுள் களமிறங்கியுள்ள உலக இலங்கையர் பேரவையினர் ஐ.நா அமர்வுகளிலும் சாமந்தர நிகழ்வுகளிலும் பங்குபற்றி புலிகள் தரப்பு மேற்கொண்ட கொடுமைகளுக்கு அப்பால் சென்று புலம்பெயர் புலிகள் சார்பு அமைப்புக்கள் இலங்கையின் சமாதானத்திற்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதையும், அவர்கள் ஐ.நா விற்கு எவ்வாறான தவறான மற்றும் மிகையூட்டிய தகவல்களை வழங்கி வருகின்றனர் என்பதையும் போட்டுடைத்து வருகின்றனர்.

மேலும் கடந்த 20 ம் திகதி இடம்பெற்ற சமாந்தர நிகழ்வொன்றில், வடமக்களின் மனமாற்றம் தொடர்பில் எடுத்துரைப்பதற்காக, வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்து, இடமாற்றம் பெற்றுச்சென்றபோது, மக்களால் வழங்கப்பட்ட அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்த பிரியாவிடை நிகழ்வை ஐ.நா வில் திரையிட்டு காட்டியதுடன், அங்;கு தமிழ் மக்கள் அவரை புகழ்ந்து தள்ளிய விதம் மற்றும் அவரது சேவைக்கு நன்றி தெரிவித்த மக்கள் தாம் தமிழ் அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டுள்ளோம் என தெரிவித்த விடயங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

அத்துடன் இவ்வாறன அதிகாரிகள் தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்றார்கள் என்றும் அவர்கள் என்றுமே அம்மக்களால் வெறுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த அவர்கள் புலம்பெயர்ந்துள்ள புலிகளின் எச்சங்களே அவ்வாறு படையினருக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.

மேலும் அங்கு பேசிய குற்றவியல் சட்டத்தரணி ஒருவர் இனவழிப்பு என்றால் :

* குழுவின் உறுப்பினர்களை கொலைசெய்வது
* குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ தீங்கிழைப்பது
* அவர்களின் வாழ்வாதாரங்களை முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்
* குழுவில் குழந்தைப்பிறப்புகளை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
* ஒரு குழுவிலிருந்து வேறொரு குழுவிற்கு குழந்தைகளை வலுக்கட்டாயமாக மாற்றுதல்

என்ற நடவடிக்கைகளை கொண்டதாகும் என்றும் அவ்வாறானதோர் எந்த நிகழ்வும் இலங்கையில் இடம்பெறவில்லை என்று விரிவான சட்டவிளக்கங்களை வழங்கியதுடன், அங்கு இடம்பெற்றது ஒர் மீட்பு யுத்தமே என்றும் தெரிவித்தார்.

பேரவையின் தலைவர் சந்திரகுமார பேசுகையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் எதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருப்பின் அவை தனிமைப்படுத்தி பார்க்கப்படவேண்டியவையாகும் என்றும், இலங்கை இராணுவத்தினர் திட்டமிட்டு அவ்வாறன எந்த தீய செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் அவர்களது நோக்கம் மக்களை மீட்பதே என்றும் தெரிவித்தார்.

கடற்படையின் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் சரத் விரசேகர பேசுகையில், நாம் எமது உயிர்களையும் தசைகைளையும் தியாகம் செய்தே எம் நாட்டு மக்களை மீட்டோம். அவ்வாறு மீட்டது மட்டுமன்றி மீட்டெடுத்தவர்களை பராமரித்தோம். கைது செய்த பன்னீராயிரத்துக்கு மேற்பட்ட புலிகளியக்க உறுப்பினர்களுக்கு புனருத்தாபணம் அளித்து அவர்களை மக்கள் மயப்படுத்தினோம். நாம் இவ்வாறெல்லாம் செய்தபோது இலங்கையிலிருக்கின்ற சம்பந்தனோ , சுமந்திரனோ அன்றில் அவர்களது சகாக்களோ எமக்கு எந்த உதவியும் புரியவில்லை. அவ்வாறுதான் இன்று இங்கு ஐ.நா வளாகத்தில் முதலைக்கண்ணீர் வடிக்கின்ற புலம்பெயர் அமைப்புக்களும் எதுவும் செய்யவில்லை. ஆனால் இவர்கள் எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். சிந்தித்துப்பாருங்கள் இன்று யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகின்றது. நாம் அதை முடித்திருக்கா விட்டால் ஏது நடந்திருக்கும் என்ற கேள்வியும் எழுப்பினார்.

பேச்சாளர்களில் ஒருவரான பா. ஜெயதீஸ்வரன் பேசுகையில், இலங்கையிலே சுமார் மூன்று தசாப்த கால யுத்தம் இடம்பெற்றிருக்கின்றது என்பது யாவரும் அறித்தவிடயம். இடம்பெற்று முடிந்த யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் யுத்தக்குற்றம் புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அவ்வாறு குற்றஞ்செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்

யுத்தத்தில் ஈடுபட்ட இரு குழுவினரில் ஒருகுழுவினரான உலகினால் மிக ஆபத்தான பயங்கரவாதிகள் என்று இனம்காணப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறினார்கள் என்பது இங்கு நான் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. தழிழீழ விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்தார்கள். எமது அரசியல் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கொன்றொழித்தார்கள்.

இத்தனை அழிவுகளுக்கு பின்பும் புலம்பெயர் புலிசார்பு அமைப்புக்கள் நடந்து முடிந்தவற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முன்வருகின்றனர் இல்லை. அவர்கள் மேற்குல நாடுகளிலிருந்தவாறு மேலும் இலங்கையில் ஒரு யுத்தத்தை தூண்டவே முற்படுகின்றனர்.

அதை இரு வழிகளில் நிறைவேற்ற முனைகின்றனர். ஒன்று அரசியல் சிவில் நிர்வாகத்தை முடக்கி, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துதல். அச்செயற்பாட்டுக்காக வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பயங்கரவாதத்தின் போஷகர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதற்கான ஒரு சிறந்த உதாரணத்தை நான் உங்கள் முன் கொணடு வருகின்றேன். வட மாகாண சபையிலே உறுப்பிராக திரு. டெனீஸவ்ரன் என்பவர் உள்ளார். அவர் யுத்தத்தில் ஈடுபட்டு நிரநத்ர அங்கவினர்களான முன்னாள் புலிகளுக்கு ஓர் உதவித்திட்டத்தை முன்னெடுத்து வந்தார். நான் புலிகளால் நேரடியாக பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் அவர்களது அடிப்படைத் தேவைகளை மதிக்கின்றேன். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்காக திரு. டெனீஸவ்ரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக உதவி வேலைத்திட்டத்தை மெச்சுகின்றேன்.

துரதிஷ்டவசமாக வடக்கின் முதலமைச்சர் திரு. டெனீஸ்வரன் அவர்களது வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறு சட்டத்திற்கு முரணாக அவரை பதவி நீக்கம் செய்து பாதிப்புக்குள்ளானவர்களை மேலும் துயரத்திற்குளாக்கியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் நீதியரசரான வடக்கின் முதலமைச்சர், சபையின் உறுப்பினரான டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்றும் அவரது பணிகளை தொடர அனுமதிக்குமாறும் நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் அவர் நீதிமன்ற தீர்ப்பை மதியாது இறுமாப்புடன் செயற்படுகின்றார்.

தற்போது அவர் மீது நீதிமன்றை அவமதித்தார் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் முதல் பிரஜையான முதலமைச்சர் மக்கள் பிரதிநிதி ஒருவரின் உரிமையை நீதிமன்ற ஆணையையும் மீறி மறுக்கின்றார் என்றால் வட மாகாண மக்களின் சிவில் உரிமைகள் அங்கு என்ன நிலைமையில் இருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

இவை இலங்கையிலே அமைதியின்மையை விரும்பும் புலம்பெயர்ந்திருக்கும் பயங்கரவாதிகளின் நிகழ்சி நிரலின்கீழ் நடைபெறுகின்றது என்றே மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இரண்டாவது அமைதியை விரும்பாத பயங்கரவாதிகள் வடக்கிலே இளைஞர்களை வன்செயலுக்கு தூண்டுகின்றனர். அவர்கள் குழுக்குழுக்களாக மோதிக்கொள்கின்றபோது மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பாரிய திட்டமிட்ட குற்றச்செயலாகும். இவற்றுக்கு தூபமிடுகின்றவர்களை இங்குள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் அரசுகளும் இனம்கண்டு அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி மனித உரிமைகளை காக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

இலங்கையிலே அமைதியை விரும்பாத இக்கும்பல் அங்கே அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக பல மில்லியன் கணக்கான பணத்தை தீய வழியில் செலவு செய்கினறனர். அதற்கான பணத்தை பல்வேறு வழிகளில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தை வீண்விரயம் செய்து இச்சபைக்கு வருகின்றவர்களில் வட மாகாண சபையின் உறுப்பினர்களும் அடங்குகின்றனர். அங்கே மாகாண சபை மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாவாறு முடங்கிக்கிடக்கின்றது.

இந்நிலையில் இவர்கள் இங்கே சாதிக்கப்போவது என்ன? அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்களாயின் நீதி கோரும் உரிமை அவர்கட்கு உண்டு. ஆனால் எனது அவதானிப்பின் பிரகாரம் அவர்கள் இங்கே தமது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்காகவே வருகின்றனர்.

எனவே இவர்களது வருகைக்கும் பாராமரிப்புக்கும் செலவிடுகின்ற பணத்தை வன்னியிலே யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக ஒரு நேர உணவிற்கு வழியின்றி இருக்கின்றவர்களின் வாழ்வினை மேம்படுத்தும் பொருடடு செலவிடுமாறு குறித்த அமைப்புக்களை வேண்டுகின்றேன். இதற்கான மத்தியஸ்தர்களாக ஐ.நா வின் சம்பந்தப்பட்ட அமைப்புக்களை செயற்பாட்டில் இறங்குமாறும் வேண்டுகின்றேன்.
0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com