Thursday, September 27, 2018

ஐயோ நானில்லை. கோத்தாவும் கபில ஹெந்தவித்தாரணவும் தான் வெள்ளை வேனில் தூக்கினவர்கள்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் நேற்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்குமூலம் வழங்கிவிட்டு திரும்பும்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்து பொன்சேகா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெள்ளை வான் கடத்தல்களை மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும் என அமைச்சர், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், கீத் நொயார் மீதான தாக்குதல் எனக்குத் தெரிந்து இடம்பெற்றதாக கோத்தபாய ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இந்த விடயம் குறித்தே என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கோத்தபாயவின் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எனது பதில் என்ன என்றே கேட்டனர்.

நான் அன்றும் கூறினேன், இன்றும் கூறுகின்றேன் கொழும்பில் இடம்பெற்ற கடத்தல்கள், தாக்குதல்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் கோத்தபாய ராஜபக்ச, கபில ஹெந்த வித்தாரண (புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர்) மேற்கொண்டனர்.

இந்த இருவரினதும் தலைமையிலான குழுக்களே கடத்தல்கள், தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர்.

கோத்தபாய, நான் சிறையில் இருந்த காலத்திலும் என்னுடன் கடமையாற்றிய அதிகாரிகள் உத்தியோகத்தர்களை கைது செய்தார்.

இராணுவ பிரிகேடியர்கள், கேணல்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளை கைது செய்து தடுத்து வைத்து கடத்தல்கள் காணாமல் போதல்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு என்று வெளிக்காட்ட கோத்தபாய முயற்சித்தார்.

அந்த காலத்திலும் கோத்தபாய ராஜபக்சவினால் அதனை செய்ய முடியவில்லை, இன்னும் அந்த முயற்சியை அவர் கைவிடவில்லை. நான் போரை வழிநடத்தியதைத் தவிர வேறு செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

கொழும்பில் இடம்பெற்ற புலனாய்வு செயற்பாடுகளை கோத்தபாய ராஜபக்ச, கபில ஹெந்தவிரதான ஆகியோரே மேற்கொண்டனர்.

வெள்ளை வான் கடத்தல்களில் கோத்தபாய ராஜபக்ச ஈடுபட்டார் என்பது இந்த நாட்டில் அனைவருக்கும் தெரிந்த விடயம் தானே? போரிற்கு அப்பால் கொழும்பில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் இராணுவத் தளபதி பொறுப்பு கூற வேண்டியதில்லை.

இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நடவடிக்கை எடுக்கவும் கோத்தபாய ராஜபக்சவிற்கே பொறுப்பு காணப்பட்டது. ஊடகவியலாளர்களை தாக்கும் அவசியம் எமக்கு இருக்கவில்லை, அரசாங்கத்திற்கே அவ்வாறான தேவை காணப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அனைத்து விடயங்களும் மறந்து போயுள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com