Friday, September 28, 2018

ஆசைநாயகிக்கு வேலை கொடுத்த அமைச்சரின் ஊழலை உறுதி செய்யக்கோருகின்றது நீதிமன்று.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அந்த எழுத்துமூல அனுமதியை எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உப தலைவர் என்ற பதவியை உருவாக்கி அந்தப் பதவிக்கு நெருங்கிய ஒருவரை நியமித்து சம்பளமாக சுமார் 33 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எழுத்து மூல அனுமதியின்றி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதால் பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும் அது தொடர்பில் எதிர்வரும் 19ம் திகதி உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று அத தெரண செய்தியாளர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com