Saturday, September 29, 2018

ஜனாதிபதியை இராணுவத்தின் கோப்ரல்களுக்கு ஒப்பிடுகின்றார் பொன்சேகா.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த இறுதி இருவாரங்களிலும் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலார் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் பயத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியே ஓடியிருந்தனர் என்று அமெரிக்காவில் தெரிவித்திருந்தார் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன.

அமெரிக்காவின், நிவ்யோர்க் நகரத்தில் இலங்கையர்களை சந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்திருந்த அவர், இடம்பெற்ற போரின் இறுதி வாரங்கள் இரண்டினுள் அனைத்து விடயங்கள் தொடர்பான தகவல் அறிந்த ஒரே நபர் தானே என்றும் இறுதி வாரங்கள் இரண்டில் நான் தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றினேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நடைபெற்ற யுத்தத்தில் கடைசி இரண்டு வாரங்களும் சார்ஜன்டுகளுக்கும் கோப்பரல்களுக்குமான வாரங்கள். சார்ஜன்டுகளுக்கும் கோப்ரல்களுக்குமே அவ்விரண்டு வாரங்களிலும் வேலைகள் இருந்தது. இந்நிலையில் யாராவது நாம் கடைசி இருவாரங்களும் அங்கிருக்கவில்லை என்று சொல்வார்களாயின் அவர்களும் சார்ஜன்ட் மற்றும் கோப்ரல்கள்போல் சிந்திக்கக்கூடியவர்களாகத்தான் இருக்கவேண்டும் எனச் சாடியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில், யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளை கவனம் செலுத்தவேண்டிய பல விடயங்கள் உள்ளன. இராணுவதளபதி வெறுமனே தாக்குதல் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது.

இந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது சிரேஸ்ட தலைவர்கள் அதிகாரிகளின் கடமை. அவற்றை நாம் செவ்வனே செய்துவிட்டு நான் சீனாவிற்கும் முன்னாள் ஜனாதிபதி பிறிதொரு நாட்டிற்றும் சென்றிருந்தார்.

யுத்தத்தை இரண்டு வாரங்களில் தீர்மானித்து விட முடியாது இறுதி இரண்டு வாரங்களில் மேற்கொள்ள வேண்டியிருந்த தாக்குதல்களை சாதாரண சிப்பாயால் கூட செய்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியோ அன்றில் முன்னாள் பாதுகாப்பு செயலரோ அவ்வாறு பயத்தில் நாட்டை விட்டு ஓடவில்லை என்பதை நான் கூறியேயாகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்ச்கையை கிளப்பியுள்ள மேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளமையாவது:

விடுதலை புலி உறுப்பினர்கள் கொழும்பில் தாக்குதல் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகியிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியமை அடுத் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலார் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் பயத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியே ஓடியிருந்தனர்.

இந்த விடயத்தை பலர் மறந்துவிட்டனர். அந்த நபர்கள் நாட்டை விட்டு சென்றது ஏன் என பலருக்கு தெரியாது. எனினும் எனக்கு தெரியும்.

இறுதி வாரங்கள் இரண்டில் கிடைத்த அறிக்கை தான் அதற்கு காரணமாகும். விடுதலை புலிகள் பின்வாங்கப்போவதில்லை என கூறினார்கள்.. இந்தியாவின் சென்னை அல்லது வேறு ஏதாவது ஒரு நகரில் இருந்து கொழும்பை முழுமையாக அழிப்பதற்கு வானில் இருந்து குண்டு போடுவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனால் தான் இவர்கள் நாட்டை விட்டு சென்றார்கள். இது தான் உண்மை கதையாகும். இறுதி வாரங்கள் இரண்டில் நான் கொழும்பில் இருக்கவில்லை. நான் ஒவ்வொரு இடமாக சென்றேன். நான் இருந்த இடத்தை ஒவ்வொரு முறை கண்டுபிடித்துவிடுவார்கள். இது தான் போர் அனுபவம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ வீரர் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழில் வாண்மையாளர்கள், வியாபாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

யுத்தம் நிலவிய காலகட்டத்திலும் அதற்கு பின்னரும் யுத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் அற்ற பல சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை இராணுவத்தினரின் மீது மேற்கொள்ளப்படும் வேட்டையாக கருதமுடியாது என்று தெரிவித்த ஜனாதிபதி, 2015 ஆம் ஆண்டில் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்கள் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கைகளில் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதும் முக்கியமானதாக அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு அப்பாற்பட்ட மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கு குற்றவாளிகளாக நிரூபணமாகும் சந்தர்ப்பத்தில் அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதானது உண்மையான இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் மரியாதை என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச ரீதியில் எமது இராணுவத்தினர் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள மேற்குறிப்பிட்ட தவறுகளை சரிசெய்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

கண்ணுக்கு புலப்படும், புலப்படாத பல வெற்றிகளை கடந்த மூன்றரை ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இழந்த சர்வதேச ஒத்துழைப்புகளை மீண்டும் தாயகம் பெற்றுக்கொண்டது பாரிய வெற்றியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள அமெரிக்க சுற்றுப் பயணமானது தயாகத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணமாகும் என்றும் தெரிவித்தார்.

இன்று உலகில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதனால் பல பிரச்சினைகளை தோன்றிய போதும் மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கிவருவதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தாயகத்தின் பெருமையை பாதுகாப்பதுடன், மக்களுக்கான நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்தனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com