Tuesday, January 22, 2019

திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி வேட்பாளர் ? - ஆச்சரியத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடும் எண்ணத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக செயற்படுவதற்கான அனைத்து அனுபவங்களும் தனக்கு இருப்பதாகவும், இதனால் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை தான் மனப்பூர்வமாக ஏற்கத்தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஆனபோதிலும், மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு ஆதரவு வழங்கிய ஒருவராக அறியப்படும் திஸ்ஸ அத்தநாயக்க, எப்படி தற்போதைய சூழலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் வெற்றி பெறுவார் என்ற கேள்வி நிலவுகின்றது? மஹிந்த கட்சியினர் பலர் தாமே ஜனாதிபதி வேட்பாளர் அன்று அடிக்கடி அறிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு அல்லாமல் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி வாக்காளர் அதிகாரத்தை வழங்க மாட்டாது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோன்று, ஐ.தே.கட்சியிலும் ஜனாதிபதி வேட்பாளர் பலர் எதிர்பார்த்துள்ளனர். மறுபக்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தற்போதைய ஜனாதிபதிக்குத் தவிர, வேறு யாருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படமாட்டாது என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உறுதியாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தனது அவாவை வெளிப்படுத்தியமை ஆச்சரியம் நிறைந்த விடயமே!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com