Friday, December 21, 2018

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் மோதல். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜினாமா!

சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்று அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டதன் எதிரொலியாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் இன்று அதிரடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை கொள்கைகளை கையாள்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும், மதிக்கப்படுபவருமாக ஜேம்ஸ் மேட்டிஸ் கருதப்பட்டார்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அதிபர் ட்ரம்பின் பலவேறுவிதமான கொள்கைகளுடன் முரண்பட்ட நிலையில் மேட்டிஸ் இருந்துவந்தார். இந்நிலையில், உச்சக்கட்டமாக சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறும் விவகாரத்தில் மேட்டிஸ் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

ராஜினாமா கடிதத்தை அதிபர் ட்ரம்பிடம் அளித்தபோதிலும்கூட, அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அந்தப் பதவியில் நீடிப்பார்.

தனது ராஜினாமா கடிதத்தில் அமைச்சர் மேட்டிஸ் கூறுகையில் “ நான் எனது பதவியில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். ஏனென்றால் அதிபர் ட்ரம்ப்தான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கச் சரியானவர்.

என்னுடைய பதவிக்காலம் 2019, பிப்ரவரி 28-ம் தேதி வரை இருக்கிறது. அதுவரை நான் பதவியில் இருக்கிறேன். பாதுகாப்புத் துறைக்கு தகுதிவாய்ந்த நபரை தேர்வு செய்யும் வரை, பாதுகாப்புத்துறையின் நலனுக்காக நான் நீடிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதால் அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு காரணமாக தான் பதவி விலகுகிறேன் என்று அவர் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

ஆனால், சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்ற அதிபர் ட்ரம்பின் உத்தரவு என்பது, சிரியாவில் இருக்கும் பஷார் அல் அசாத் அரசுக்கு ஆதரவாக அமைந்துவிடும், அமெரிக்க எதிரிகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மேட்டிஸின் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொண்டபின் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கூறுகையில் “ பாதுகாப்புத் துறை அமைச்சர் மேட்டிஸ் பிப்ரவரி மாதம் பதவி விலகுகிறார். கருத்துவேறுபாட்டுடன் அவர் பதவியில் இருந்து செல்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய அரசியல் மேட்டிஸ் பணியாற்றியுள்ளார். அவரின் பதவிக்காலத்தில் பாதுகாப்புத்துறை பல்வேறு வளர்ச்சி அடைந்தது, குறிப்பாக புதிய விமானங்கள் கொள்முதல் சிறப்பாக இருந்து. விரைவில் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் ” எனத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்தியா, அமெரிக்கா நட்புறவு சிறப்பாக அமைவதற்கு மேட்டிஸ் முக்கியக் காரணமாக அமைந்தார்.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் 2-வது முக்கிய நிர்வாகி மேட்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com