Friday, December 21, 2018

ஐந்தறிவுள்ள நாய்க்கும் புலிகள் மீது காழ்ப்புணர்ச்சியா? பீமன்

கடந்த மாதம் மட்டக்களப்பில் இரு பொலிஸாரில் ஒருவர் அரைநித்திரையிலும் ஒருவர் கடமையிலும் இருந்தபோது கோழைத்தனமாக கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்தின்பேரில் இருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை உறுப்பினனான அஜந்தன் என்பவனின் மனைவி ஓரிரு தினங்களுக்கு முன்னர் தனது கணவனை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணா விரதமொன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விபச்சாரிகள் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் பேசுவதாக கொலையை அரசியலாக்கியிருந்தமையையும் அவதானிக்க கூடியதாகவிருந்தது. அதேநேரம் இரு அப்பாவி இளைஞர்கள் கண்மூடி திறப்பதற்குள் எவ்வித காரணங்களும் இன்றி தீய நோக்குடன் கொல்லப்பட்டமையின் பின்னணி, அது இலங்கையின் எதிர்காலத்திற்கு உருவாக்ககூடிய அச்சுறுத்தல் தொடர்பாக எவ்வித கரிசனையும் அற்றோர் "கைது செய்யப்பட்டுள்ளோர் வெறும் அப்பாவிகள்" என்ற பொறுப்புணர்வற்ர கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதையும் காண முடிகின்றது.

இக்கருத்துக்களின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளோர் போதிய ஆதாரம் இன்றித்தான் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பதை அறியும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனருடன் பேசியதிலிருந்து குறித்த நபர்கள் எழுந்தமானமாக கைது செய்யப்படவில்லை என்ற ஒரே ஒரு தகவலை மாத்திரம் தற்போதைக்கு வெளியிடமுடியும். கொலை இடம்பெற்ற சுற்றுவட்டத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற ஒரு பையும் ஜக்கட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பையையும் ஜக்கட்டையும் பின்தொடர்ந்து சென்ற மோப்பநாயின் அடையாளம் காட்டலுடனேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை சம்பவம் இடம்பெற்ற சுற்றுவட்டத்திலுள்ளவர்களும் அஜந்தனின் கிராமத்தவர்களும் நன்கறிவர். ஆனாலும், மோப்ப நாயின் அடையாளம் காட்டுதலில்தான் அவன் கைது செய்யப்பட்டான் என்பதை நன்கறிந்திருந்த ஊடகங்களோ அன்றில் சமூகவலைத்தளத்தினரோ இந்த நியாயமான கைதின் பின்னணியை வெளிப்படுத்தாமை அவர்களது நயவஞ்சகத்தனத்தை காண்பிக்கின்றது.

இவ்விரு கொலைகளும் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பதனை நாட்டு மக்கள் உணரவேண்டும். வெளிப்படையாக சொல்வதானால்: இனவாதத்தையும் யுத்தத்தையும் வைத்து சுகபோகமும் ராஜயோகமும் அனுபவிக்க விரும்பும் தரப்புக்களின் கூட்டுச்சதியே இக்கொலையாகும். இன்னும் தெளிவாக சொல்வதானால் தெற்கிலே ஒரு தரப்பிற்கு மீண்டும் இலங்கையிலே புலிப்படை அல்லது புலிசார் வன்செயல் தேவைப்படுகின்றது மறுபுறத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கும் புலம்பெயர் புலி எச்சங்களுக்கும் தாங்கள் செயற்பாட்டில் உள்ளோம் என புலம்பெயர் தேசமெங்கும் தமது பைகளை நிரப்ப இலங்கையில் யுத்தம் தேவைப்படுகின்றது.

மேற்குறித்த இரு தரப்பினரதும் தேவைகளை நிறைவேற்ற முன்னாள் புலிகள் கூலிப்படையாக செயற்படுகின்றனர். இக்கூலிப்படைகள் இரண்டு அப்பாவி உயிர்களை பலியெடுத்திருக்கின்றார்கள். அந்த அப்பாவி உயிர்கள் தொடர்பாக அடிமனதிலிருந்து எவரும் கவலை வெளியிடுவதாக இல்லை மாறாக கொலைஞர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

முள்ளிவாய்காலில் பிரபாகரன் மண்டியிட்டதன் பின்னர் புலிகளின் ஒரு தொகுதியினர் எவ்வாறு இலங்கை இராணுவத்தினருக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் கூலிப்படையாக செயற்படுகின்றார்கள் என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஊதியம் பெறும் புலிகள்

புனர்வாழ்வு முகாம்களிலிருந்தபோது தமது தேவைகளுக்காக பயன்படக்கூடியவர்கள் என படையினர் இனம்கண்ட சிலரை இன்றும் குறித்த அரசியல்தரப்பு பயன்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்க கடந்த காலங்களில் பகிரங்க மேடைகளில் தெரிவித்த விடயங்கள் பிரதானமானவை. சம்பிக்க ரணவக்க பகிரங்க மேடை ஒன்றில் பேசும்போது இவ்வாறு கூறினார்:

" புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதிகளான ராம் , நகுலன் போன்றோருக்கு கோத்தபாய ராஜபக்ச பாதுபாப்பு அமைச்சின் நிதியத்திலிருந்து மாதந்தம் ஊதியம் வழங்கினார். கிழக்கில் எமது குழந்தை தேரர்களை கொன்ற கொலைகாரர்களுக்கு நாம் பணம் வழங்குவது எவ்வாறு நியாமாகும் என்பதை நான் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டேன், அப்போது மஹிந்த கூறினார், அவர்கள் எமக்கு கிழக்கில் தேர்தல்காலங்களில் உதவுவார்கள் அதற்காக நாம் அவர்களை பயன்படுத்தவுள்ளோம் என்றார். அவ்வாறே வடக்கிலும் முன்னாள் புலிகளுக்கு பாதுகாப்பு நிதியிலிருந்து நிதி வழங்குகின்றனர். மறுபுறத்தில் சிவில் பாதுகாப்பு பிரிவு என்ற ஒன்றை உருவாக்கி பாதுகாப்பு அமைச்சினூடாக அவர்களுக்கு தொழில்களை வழங்கி சம்பளம் வழங்குகின்றனர். இது தொடர்பாகவும் மஹிந்தவுடன் பேசியபோது, அவர்கள் வடக்கில் தேர்தல்வரும்போது எமக்கு வேலை செய்வார்கள் என்றார் மஹிந்த"

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் போலிப்புலிகள் அமைப்பு

புனர்வாழ்விலிருந்து வெளியேறிய புலி உறுப்பினர்களை கொண்டு புலனாய்வுப் பிரிவினர் ஒரு போலிப் புலிகள் அமைப்பை உருவாக்கினர் என்றும் அவ்வாறானதோர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொடர்ந்தும் புலிக்காச்சல் இருக்கின்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதாகும் என்றும் களனிப்பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச-

அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக புலிகள் மீண்டும் சக்திபெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட உள்ளநாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ளவர்களை புலனாய்வுப் பிரிவினர் இனம்கண்டு கொண்டார்கள். அவ்வாறே புலம்பெயர் தேசத்தலிருந்து கொண்டு இங்கு புலிகளமைப்பை உருவாக்க நினைக்கின்றவர்களையும் இனம் கண்டு கொண்டார்கள்.

அத்துடன் எமது அதிகாரிகள் மேற்படி போலிப்புலிகள் அமைப்பை வைத்து கண்டறிந்தவற்றை பாதுகாப்பு சபைக்கு அறிக்கையிட்டனர். தூரதிஷ்டவசமாக பாதுகாப்பு சபையிலிருந்த யாரோ ஒருவர் ஊடாக மேற்படி போலிப்புலிகள் அமைப்பை இயக்கிய எமது புலனாய்வுத்துறை அதிகாரிகளின் விபரங்கள் பத்திரிகைக்காரர்களது கைகளில் கிடைக்கப்பெற்று அவை பிரசுரமாகியுள்ளதன் ஊடாக அந்த அதிகாரிகளின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச கவலை தெரிவித்திருந்தார்.

சம்பிக்க மற்றும் வீரவன்ச ஆகியோரது வெளிப்படுத்தல்களிலிருந்து புலிகள் எவ்வாறான கூலிப்படைகள் என்பதையும் அவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக எந்த குற்றச்செயல்களையும் புரிந்துவிடுவார்கள் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். புலிகள் அமைப்பு அதன் வரலாறு முழுவதும் கூலிப்படையாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. யாழ்பாணத்தில் அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து கொழும்பில் லலித் அத்துலத்முதலி இந்தியாவில் ரஜீவ் காந்தி என புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கொலையையும் கூலிக்கு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பது நிருபணமகியுள்ளபோதும் தமிழ் மக்கள் அதை நம்ப மறுப்பது பேராபத்தானது. புலிகள் பேசுகின்ற விடுதலைப்போராட்டம் தமிழ் தேசியம், தமிழ் உணர்வு என்பன வெறும் போர்வையாகும். தமிழ் மக்கள் இந்த உண்மைகளை ஏற்க மறுக்கும் வரை புலிகளும் புலிசார் பினாமிகளும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டே இருப்பர்.

புலம் பெயர் புலிகளுக்கான கூலிப்படை

புலம்பெயர் புலிகளின் கட்டமைப்பில் 2002 ல் தான் வெடிப்பு விழுந்தது. ஆனாலும் புலிகளின் தலைமையகம் வன்னியில் பலமாக இருந்ததனால் அவர்கள் வெடிப்புக்களை பிளவு நிலைக்கு செல்லாமல் இரும்புக்கரம்கொண்டு அடக்கி காத்தார்கள். 2009 மே க்கு பின்னர் உள்ளிருந்த ஒவ்வொரு வெடிப்பும் நிரந்தரமானது பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். அந்த மோதல் ஒன்றும் கொள்கை ரீதியானது அல்ல ஒவ்வொரு தரப்பிடமுமிருந்த மக்கள் சொத்தை எவ்வாறு தங்கள் பைகளுக்குள் அமுக்குவது என்பதில்தான்.

மக்களின் சொத்தை முழுசாக விழுங்கி உழைக்காமல் இத்தனை சொத்துசேர்த்தவர்களுக்கு அந்த ருசி விடவில்லை. தொடர்ந்தும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் எவ்வாறு பிடுங்கலாம் என்ற வியூகங்களைத்தான் வகுத்தார்கள். அதற்காக போர்குற்ற விசாரணை, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல்கொடுத்தல், நாட்டிலுள்ள முன்னாள் புலிகளுக்கு உதவுதல் போன்ற போலித் திட்டங்களை வகுத்தார்கள். இத்திட்டங்களைக் காட்டி இலங்கைலுள்ள முன்னாள் புலிகளை வளைத்துப்போட்டார்கள்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு புலிகள் இன்னும் உள்ளார்கள் எனக் காண்பித்து அவர்களிடமிருந்து தொடர்ந்தும் பணம் பறிப்பதற்குமான திட்டத்துடனே இன்றும் செயற்பட்டு வருகின்றனர். இதன் பிரகாரமே இலங்கையிலுள்ள முன்னாள் புலிகளுக்கு பணத்தினை கொடுத்து பல்வேறுபட்ட தீய செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவித்தல், அசாதாரண நிலைமைகளை ஆங்காங்கே உருவாக்கல், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் அமைப்புக்களை உருவாக்கி செயற்படுதல். அதனூடாக புலிகளின் செயற்பாடுகள் இலங்கையில் உள்ளதாக புலம்பெயர் தமிழரின் காதில் பூ சூடுதல் போன்றனவே அந்த செயற்பாடுகள்.

புலம்பெயர் தேசத்தில் புலனாய்வு முகமூடிகள்.

இது இலங்கையில் செயற்பட்ட ஆழ ஊடுருவும் படையணியிலும் ஆபத்தான கட்டமைப்பு. யார் ? எங்கு ? எந்த வேஷத்திலிருக்கின்றார்கள் என்பது அவர் அவர்களுக்கு மாத்திரமே தெரியும். 2009 மே யில் சரணடைந்தவர்கள்தான் இன்று அவ்வாறு புலம்பெயர் தேசமெங்கும் ஆழ ஊடுருவியிருக்கின்றார்கள்.

இது எவ்வாறு சாத்தியம் என்று யாரும் கேட்கலாம். முக்கிய புள்ளிகள் பலர் 2009 க்கு பின்னர் வெளிநாடுகளில் மிதந்தனர். எவ்வாறு இவர்கள் வெளியே வந்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் இராணுத்தினருக்கு ஐப்பது லட்சத்திலிருந்து 1 கோடி ரூபா வரை பணம் கொடுத்து வந்தார்களாம் என்று சொல்லப்படுகின்றது. இங்குதான் அந்த சமாச்சாரமே இருக்கின்றது, இலங்கை இராணுவக் கட்டமைப்பு 2009 இல் அவ்வளவு ஓட்டைகள் உள்ள கட்டமைப்பாக இருக்கவில்லை. சிலவேளைகளில் தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை அவ்வாறிருந்திருக்கலாம். ஆனால் 2009 மே யில் புலனாய்வுத்துறை அவ்வாறானதோர் ஓட்டையை உருவாக்கியது. பணம் படைத்தவர்கள் ஒருசிலரை பணம்வாங்கிக்கொண்டு விடுவதுபோல் பாசாங்கு செய்து விடுவித்ததுடன் அதே ஓட்டையினூடு அதேவேஷத்துடன் தங்களது முகமூடிகளையும் அவ்வாறே விட்டுவிட்டது. அத்துடன் புனர்வாழ்வின் பின்னரும் விசுவாசிகள் சிலரை அனுப்பி தனது முகமூடிப்படையணியை புலம்பெயர் தேசத்தில் பலப்படுத்தி கொண்டுள்ளது.

தற்போது இவர்கள் பல்வேறு பணிகளை செய்கின்றனர். புலம்பெயர் தேசத்திலுள்ள புலிசெயற்பாட்டாளர்களை இனம்காணுதல், நாட்டிலுள்ள புலிச்செயற்பாட்டுக்கு தயாரானவர்களை இனம் காணுதல், அவர்களை கொண்டு தமது ஏஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றுதல் என்பனவே அவர்களது பிரதான பணி. (மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டைக்கொலையும் அவ்வாறானதாக இருக்கலாம்)

இவ்வாறானதோர் சூழ்நிலையில் புலம்பெயர் தேசத்திலிருந்து வருகின்ற கொந்தராத்துக்களை நிறைவேற்றுபவர்களின் நிலைமை கைத்தீன் போட்டு வளர்க்கப்படுகின்ற சேவலின் கதையாக முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.

கையாலாகா காவல்துறை.

2009 ல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 2015 தை மாதம் எட்டாம் திகதி வரை பயங்கரவாதிகளின் மீள்எழுகை அன்றில் ஒருங்கிணைவு தொடர்பாக எந்த கேள்வியும் இருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். ஆனாலும் 2015 தை மாதம் எட்டாம் திகதிக்கு பின்னர் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வோருக்கான தளத்தை வழங்கவில்லை என்று வாதிடமுடியாது. உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம் புலிகளின் அநியாயங்களை நியாயப்படுத்துவதற்கும், பேச்சு சுதந்திரம் மீண்டும் புலிகள் ஒன்றுகூடுவதற்கு பகிரங்க அழைப்பு விடுப்பதற்கும் , எழுத்துச் சுதந்திரம் புலிகளின் புகழ் பாடுவதற்கும் , ஒன்றுகூடும் சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூறுவதற்கும், கொண்டாடுவதற்கும் பயன்பட்டது.

மேற்படி செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை கொடுக்கும் என்றும் இச்செயற்பாடுகளுக்கு எதிராக நிச்சயமாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாயவேண்டும் என்றும் காவல்துறையினரை கேட்டபோது அவர்கள் அச்சட்டத்தை பயன்படுத்த முடியாதவர்களாக அரசியல்வாதிகளின் ஆணைக்கு கட்டுப்பட்டு நின்றனர். மைத்திரபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்கான கைமாறாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு கட்டுப்போடப்பட்டுள்ளது.

கிட்லரின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டிய தம்பதியினருக்கு சிறைத்தண்டனை.


உலகிலே பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகள் பொதுவான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை.

அண்மையில் பிரித்தானியாவில் தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லரின் பெயரை வைத்த தம்பதியினரில் மனைவிக்கு 5 ஆண்டுகளும் கணவனுக்கு 6 ஆண்டுகளும் சிறைவிதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்த கிட்லரை மேற்குல நாடுகள் இன்றும் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாகவே பார்கின்றனர். அவர் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் உருவாவது அல்லது அவரை நினைவு கூறுவது கிட்லரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக அமையும் எனக் கருதும் அவ்வரசுகள் கிட்லர் சார்பு அமைப்புக்கள் யாவற்றையும் தடை செய்து மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகின்றது. அந்த வரிசையில் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லர் என்ற பெயரை சூட்டியமைக்காகவே தம்பதியினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

இவ்வாறான நடைமுறையை செயற்படுத்துவதற்கு இலங்கை பொலிஸாருக்கு போதியளவு சட்டத்தில் அனுமதி உள்ளபோதும், அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளின் அனுமதியை நாடி நிற்பார்களாயின் பயங்கரவாதத்தை ஒருபோதும் துடைத்தெறிய முடியாது.

கொலை மிரட்டல்

கனடாவிலுள்ள வானொலி ஒன்றிற்கு தகவல் வழங்கிய அஜந்தனின் மனைவி ஒருசில நாட்களில் தனது கணவன் விடுதலை செய்யப்படாவிட்டால், பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்கொலை என்பது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் ஒருவர் தற்கொலை செய்து இறந்துவிட்டால் அத்துடன் அந்த கதை முடிகின்றது. உயிர் தப்பினால் அபராதம் செலுத்தவேண்டும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அதற்கு அப்பாலும் இங்குள்ள பாரதூரமான விடயம் யாதெனில் அவர் நான்கு சிறார்களை கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றார். எனவே உயிராபத்துக்குள்ளாகி நிற்கும் சிறார்களை முதலில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு தாயிடமிருந்து பிரித்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன், தாய் இலங்கை பிரஜையாக நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டிருக்கின்றார் என்பதையும் அவர் அதற்கு கட்டுப்பட மறுத்தால் அதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதன் ஊடாகவே நற்பிரஜைகள் உள்ள நாடு ஒன்றை எம்மால் காண முடியும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com