Tuesday, November 29, 2011

பாக்கிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கவேண்டும். சீனா கடும் கண்டனம்.


பாகிஸ்தானில் நேட்டோ படைகள் தாக்குதலில் 24 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது நேட்டோ படைகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் பொறுப்பற்ற செயல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கர், சீன வெளியுறவுத் துறையுடன் விளக்கினார். இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திரம், இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும். நேட்டோ படைகளின் அத்துமீறல் குறித்து உண்மையான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது. பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதற்கிடையில் தவறுதலாக தாக்குதல் நடந்து விட்டது என்று நேட்டோ படைகள் மன்னிப்பு கேட்டது. அதை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் பாகிஸ்தான் & அமெரிக்கா உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com