Wednesday, February 28, 2018

யார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா ?

அம்பாறை நகரில் முஸ்லிம்களை இலக்குவைத்து (27.02.2018) நல்லிரவு நேரத்தில் தாக்குதல்கள் நடைபெற்றதானது எதிர்பாராத ஓர் விடயமல்ல.

முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட வன்முறையானது வழக்கமாக ஹோட்டல்களில் இருந்தே ஆரம்பமாவது கடந்தகால வரலாறாகும்.


2௦௦1 ஆம் ஆண்டில் சந்திரிக்காவின் அரசாங்கத்தில் நடைபெற்ற மாவனல்லை கலவரம் உட்பட பல அசம்பாவிதங்கள் ஹோட்டலில் இருந்தே உருவானது. அதுபோல் அம்பாறை சம்பவமும் ஹோட்டலில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இனவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைக்கும்போது ஏதோ ஒரு காரணத்தினை கூறுவார்கள். அந்தவகையில் அம்பாறையில் முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் கருத்தடை மாத்திரை உணவில் கலந்து கொடுக்கப்பட்டிருந்தால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஏன் பள்ளிவாசலை உடைக்க வேண்டும்?

இஸ்லாமியர்களின் வேத நூலை ஏன் எரிக்க வேண்டும் ? சம்பவத்துடன் தொடர்பில்லாத ஏனைய கடைகளையும், வாகனங்களையும் ஏன் தாக்கி அழிக்க வேண்டும் ?

உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவது என்பது நடைமுறை சாத்தியமாகுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, குறித்த உணவினை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி கடைக்காரருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முற்படவில்லை ?

இனவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கடைக்காரர் பயத்தினால் ஏதோ வாய் தடமாருவதனை ஒளிப்பதிவு செய்துகொண்டு அதனை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும், உலகத்துக்கும் தங்களது இனவாத செயல்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முட்படலாமா ?

நூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்ற உணவில் இவ்வாறான மாத்திரைகள் கலப்பதன் மூலம் இலாபமீட்ட முடியுமா ? என்ற நியாயமான கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் விடை தேட முடியாது.

அமெரிக்கா உட்பட உலகின் பல வல்லரசு நாடுகளில் எந்த தலைவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது வெளியுறவு கொள்கைகளில் மாற்றத்தினை காண முடியாது. அதுபோல் இந்தயாவில் ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் இலங்கை விவகாரத்தில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வருகின்றது.

எமது நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்ற பச்சை, நீலம் என யார் ஆட்சி செய்தாலும் சிறுபான்மை சமூகம் சார்ந்த கொள்கைகளில் ஒரே நிலைப்பாட்டினையே கடைப்பிடித்து வருகின்றார்கள்.

முஸ்லிம்களின் விடயத்தில் ஆட்சி தலைவர்கள் நல்லதையே செய்கின்றாகள் என்று வெளிப்பார்வையில் தென்பட்டாலும், சிங்கள பௌத்த மேலாதிக்கவாத கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்துக்கு மாறாக ஆட்சி தலைவர்களால் செயல்பட முடியாது.

அவ்வாறு அவர்களை எதிர்த்து ஆட்சி தலைவர்கள் செயல்பட்டால், தெற்கில் உள்ள சிங்கள மக்களின் வாக்குகளை தாங்கள் இழக்க வேண்டி ஏற்படும் என்ற அச்சமே அதற்கு காரணமாகும்.

எனவே இவ்வாறான இனவாத செயல்பாடுகள் இத்துடன் முற்றுப்பெற போவதில்லை. சில காலங்களுக்கு அமைதியாக இருப்பதும், பின்பு மீண்டும் அது அரசியல் தேவைக்காக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் வழக்கமாகும்.

அது வெவ்வேறு கோணத்தில் எதிர்காலத்தில் நாட்டின் பல பிரதேசங்களிலும் உருவாகிக்கொண்டே இருக்கும். தூர நோக்கில் இதற்காக என்ன நடவடிக்கை எடுப்பது ? இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? என்றெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாத வரையில், மியன்மாரில் நடைபெற்றது போன்று எதிர்காலத்தில் எமது சமூகத்துக்கு ஏற்பட இருக்கின்ற அவல நிலையினை யாராலும் தடுத்துவிட முடியாது.



Read more...

Saturday, February 24, 2018

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 4) வ.அழகலிங்கம்.

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால் — அதாவது அராஜகம் — ஏற்பட்டால் என்ன நடக்கும்?

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது:

1.தேவையான அளவு மழை பெய்யாது

2.கைப்பிடி விதை கூட கிடைக்காது

3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான்

4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள்

5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள்

6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது.

7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள்.
8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது.

9.அம்புப் பயிற்சியால் எழும் சப்தம் எங்கும் கேட்காது

10.மக்கள் விரதங்களைப் பின்பற்றார். கடவுளுக்குப் படைப்பதற்கு மோதகம், மாலைகள் செய்யப்பட மாட்டா.

11.அரச குமாரர்கள் சந்தனம், அகிலுடன் பூசித் திரியமாட்டார்கள்.

12.சாஸ்திரப் பயிற்சி உடையார் வனங்களிலும் உப வனங்களிலும் அமர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
நீரில்லாத நதிகள் போல புல்லற்ற காடுபோல இடையரற்ற பசுக்கள் போல அரசனற்ற ராஜ்யம் இருக்கும்

தேர் இருப்பதைக் காட்டுவது அதன் கொடி.
தீ இருப்பதைக் காட்டுவது அதன் புகை.
தெய்வத் தன்மை இருப்பதைக் காட்டுவது அரசர்.


அப்பேற்பட்ட அரசர் (தசரதர்) தெய்வத் தன்மை அடைந்து விட்டார்.
அரசனற்ற ராஜ்யத்தில் யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை. பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவது போல ஒருவர் ஒருவரை அழிப்பார்கள்.

நாஸ்தீகர்கள், தர்ம விதிகளை மீறுவோர், தண்டனைக்குப் பயந்து சும்மா இருந்தவர்கள் எல்லோரும் துணிந்து நடப்பார்கள். நாஸ்தீகர் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தத் துணிவார்கள்.

அரசன்தான் தாயும் தந்தையும்.
அரசந்தான் தர்மமும் சத்தியமும்.
அவனே நற்குடிப் பிறந்தோருக்குத் தலைவன.;
அரசன் இல்லாத நாடு இருளில் மூழ்கும்.

எவ்வாறு கடல் அதன் எல்லையைத் தாண்டாதோ அவ்வாறே நாங்கள் உங்கள் உத்தரவை சிரமேற் கொண்டு நடந்தோம். பிராமண உத்தமரே ! உடனே இட்சுவாகு குலத்தவன் ஒருவனை அரசனாக நியமியுங்கள் என்கிறது வால்மீகி ராமாயணம்.

அரசனே தந்தை என்று புற நானூறும் கூறும். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்றும் சங்க இலக்கியம் செப்பும்.

சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கும் உவமையை மஹாபாரதமும், கௌடில்யரின் — சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் கூறுகிறது

வால்மீகி சொன்னதை அப்படியே திருவள்ளுவரும் சொல்வதைக் கேளுங்கள்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்
— குறள் 388

பொருள்: –நல்ல ஆட்சி நடத்தும் மன்னன் கடவுள் போன்றவன்

அரசன் முறை செய்யாவிடில்

பசு பால் தராது. பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவார்கள்:
உலகம் மழையை நம்பி இருப்பது போல மக்கள் மன்னன் பாதுகாப்பை நம்பி வாழ்வர்.
பிராமணர்கள் ஒழுங்காக வேதம் ஓதுவதற்கு மன்னன் ஆட்சியே காரணம்.
கொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க அரசன் வேண்டும்.

வள்ளுவர் தனது குறளில் அராஜகம் என்ற சொல்லைக் கூறாமல் அரசன் இருந்தால் என்ன என்ன கிடைக்கும் என்று சொல்கிறார்.

'மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம்|| – என்கிறது புற நானூறு 55- 9

'குடி புறம் காத்து ஓம்பும் செங்கோலான் – என்கிறது கலித்தொகை 130-19

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
மணிமேகலை.
'நீணிலம் ஆளும்

அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு!
'அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள், மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்
||எனக் (மணி 24-225-230)

நெடிதான நிலத்தினை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருள் அற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு பொருளும் உளதாமோ. அறம் என்று சொல்லப்படுவது தான் யாதோவெனக் கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக:

செறிந்துள்ள உயிரினங்கட்கு எல்லாம் உணவும் உடையும் தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை!,, என்றனள். மணிமேகலைக் காப்பியம் படைத்த புலவர் வழியில், பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று ஒளவையார் கூறுகிறாரே!

'மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப் பத்தும் பறந்து போம்
.

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்; மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி
(மணி 11-76)

Food, Shelter and clothing are three essential things for Economy..

உணவு, உடை, உறைவிடம் என்று இன்று பொருளியல் அறிஞர்கள் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார் சாத்தனார்.

தேசங்களின் செல்வம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில் ஆடம் ஸ்மித் 1776 இல் முதல் முதலில் எழுதினார். தேசங்களின் செல்வத்தின் இயற்கை மற்றும் செயற்கையான உற்பத்திக் காரணங்கள் பற்றிய ஒரு விசாரணை, பொதுவாக அதன் சுருக்கப்பட்ட தலைப்பு தேசங்களின் செல்வம் என்பதாகும். இந்தப் புத்தகம் உலகின் முதன்முதலாகச் சேகரிக்கப்பட்ட எது ஒரு தேசத்தின் செல்வத்தை வழங்குகிறது என்பதற்கான விளக்கங்களைக் கொடுத்துள்ளது. இன்று இது பாரம்பரிய பொருளாதாரத்தில் அடிப்படையை விளக்குகிறது. இதுவே இன்றய பொருளியலின் அத்திவாரமாக அமைந்துள்ளது. இதை றிக்காடோ மல்த்தூஸ் கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் போன்றோர் பின்பற்றித் தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை வகுத்தார்கள். இது பொருளாதாரம் பற்றிய நவீன பட்டப் படிப்புக்கு முன்னோடியாக இருக்கிறது.

ஞானமும் கல்வியும் நாழி அரிசியின் பின். என்பது பழமொழி
ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

கைம்மாறு செய்யும் சக்தி உடையவர்களுக்குப் பிரதிஉபகாரமாக ஒரு பொருளைக் கொடுப்பவர் அறத்தின விலைகூறி விற்பவராவார். கைம்மாறு செய்வதற்கும் வக்கில்லாத ஏழைகளின் பெரும் பசியினைப் போக்குபவரே உண்மையாக அறம் செய்பவர்கள். மெய்ந்நெறியோடு கூடிய வாழ்க்கை என்பதும் கொடுத்து மகிழும் அத்தகையோரின் வாழ்க்கையேயாகும். அணுசெறிந்த இந்த உலகத்திலே வாழ்பவர்களுக்கு எல்லாம் உணவு கொடுத்தவர் எவரோ, அவரே உயிர் கொடுத்தவரும் ஆவார்.

இவைகள்தான் தமிழின் ஜனநாயகக் கருத்துக்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு நறுக்காக்காக்கப்பட்ட மனித சிந்தனையின் மாண்புகளை நம்முன்னோர்கள் கூறியுள்ளார்கள். பல நவீன ஜனநாயகக் கொள்கைகளைப் போதித்தார்கள். இது நவீன காலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய அர்த்தமுள்ள பயன்பாட்டை வழங்குகிறது.

ஜனநாயகம் பற்றி நம் முன்னோர்கள் ஒரு பாரபட்சமற்ற, தர்க்கரீதியான பகுப்பாய்வை வழங்குகினார்கள். அவர்கள் ஜனநாயகம் பற்றிய ஒரு மேம்பட்ட மற்றும் துல்லியமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர்களது காலத்தய முடியாட்சியில் பல்வேறு ஜனநாயகக் கோட்பாடுகள் நடைமுறையில் இருந்ததைக் காட்டியுள்ளார் திருவள்ளுவர். இப்படியான கோட்பாடுகளைக் குறிப்பிட்டதோடு நில்லாமல் அந்த ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், அரசின் உயர்ந்த, ஆளும் அதிகாரத்தின் முன்னிலையில் தமது சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்த முழு சுதந்திரத்தையும் பெற்றிருந்தனர். பொறுப்பும் கடமையுணர்வும் உள்ள அரசன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டும். சகிப்புத் தன்மையும், திறந்த மனப்பான்மையும், அரசியலமைப்பின் பகுதியாக ஆரோக்கியமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் ஜனநாயக அரசாங்கத்தின் அடிப்படையாகும்.

'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
.--(389)

தன்னோடு துணையாக இருப்போர் செவியாற் பொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைப் பேசினாலும் ஆட்சியின் நன்மையைக் கருத்தாகக் கொண்டு அதைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும். அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களைப் பிரநிதித்துவப் படுத்தும் உண்மையான அரசஅலுவலர் ஆதலால் யதார்த்த நடைமுறையில் செயல்படுவது அவர்களது கடமையாகும் என்பதால் அரசின் மிகுந்த துல்லியத்தில் அரசாங்கத்தின் குறுகிய செயற்பாட்டையும் கூடாத கூட்டினையும் பற்றாக்குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் அளவிற்கு செல்ல வேண்டும். கடுமையான, ஆக்கபூர்வமான விமர்சனத்தைச் சொல்வதற்கான முழு சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு. இப்படியான மந்திரிகளின் அமைச்சரவை அல்லது ஆலோசகர்களின் குழு இல்லாத ஒரு அரசர் காலப்போக்கில் தன்னைத்தானே அழிப்பார்.

'இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்
.-(447)

தீயன கண்டால் இடித்துச் சொல்லும் துணையுள்ளவர்களைக் கொண்டிருந்தால் அந்த அரசைக் கெடுக்கக் கூடிய பகைவர்கள் யார்?

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
-(448)

தக்க நேரத்தில் இடித்துப் புத்தி சொல்லுபவர்களைத் துணையாகக் கொள்ளாத பாதுகாவலற்ற அரசு பகையாய்க் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டுவிடும்.

ஈழ வேந்தன் ஏன் அழிந்தான் என்று சொல்ல வந்த கம்பன் வீடுகொளுத்திற இராசாவுக்கு நெருப்பெடுக்கிற மந்திரிகளால் அழிந்தான் என்கிறான்.

'கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் கவிக்கின்றோயை
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்றபோது முடிவு அன்றி முடிவது உண்டோ?


'கண்டாரைக் கடித்துக் கொல்லும் பாம்பும் மந்திரம் கேட்டு அடங்கி நடக்கும். செருக்குற்று நிற்கின்ற உன்னை, ஷஇது தக்கது, இது தகாதது| என்று இடித்துச் சொல்லித் திருத்துபவர் உன் அமைச்சர் அவையில் ஒருவரும் இல்லை. உன்னைக் கெடுப்பவரே உன் அமைச்சர் அவையில் அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். இவ்வாறு இருக்கும்போது, நீ அழிவதைத் தவிர வேறு வழி உனக்கு உண்டோ? இல்லை!

-சுந்தர காண்டம், நிந்தனைப் படலம்-(464)

கடிந்து பேசிய சீதை நயமொழிகளாலும் அறநெறி கூறல்.-

எனவே, எதிர்க்கட்சியின் அத்தியாவசியத்தின் கரு திருக்குறளிலிம் கம்பராமயணத்திலும்; காணப்படுகிறது என்பது தெளிவானது.

இன்றய தமிழர் உலகில் ஒரு தலைவனை உருவாகத் தமிழ்சமுதாயம் விடுவதில்லை. பந்தம் பிடிப்பதும் லஞ்சம் கொடுப்பதும் தலைவனைப் புழுகு புழுகொன்று புழுகிக் கெடுத்துவிடுவார்கள். இது இன்றய தமிழ் உலகத்தின் கலாச்சாரமாகப் படிமமாகி விட்டது. ஒரு மனிதனின் இயற்கையான வளர்ச்சி புகழ்ச்சியாலும் தடைப் பட்டு விடும்.

இகழ்ச்சியாலும் தடைப்பட்டு விடும் என்பதை அறிய வேண்டும். ஆனால் அதீத புகழ்ச்சி அவனைக் கொல்வதாகிவிடும். ஸ்டாலினோடு இருப்பவர்கள் ஸ்டாலினக்கு ஆமாம்போட்டு ஸ்டாலினையே கெடுக்கிறார்கள் என்று லியொன் ரொக்ஸ்சி சோவியத் யூனியனின் மத்திய குழுவில் பேசியது பதிவாகி உள்ளது. தமிழ் மக்களுக்குள் ஒரு மூலதர்மமுள்ள தலைமை தோன்ற இந்த ஆமாம் சாமிக் கூட்டம் இன்றுவரை விடவில்லை என்பதுதான் நவீன தமிழர் வரலாறு.


Read more...

விஜய குமாரதுங்க, (1945-1988) கொலை . ஹேமந்த வர்ணகுலசூரிய

1988 பெப்ரவரி 12ல் விஜய குமாரதுங்க, எச்.ஆர்.ஜோதிபால நினைவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் பங்கேற்றார், அதில் அவர் எச்.ஆர்.ஜோதிபால மாவத்தயை திறப்பதாக அறிவித்தார். நான் ஒருபோதும் கேட்டிராத அவரது உணர்ச்சிமிக்க உரைகளில் ஒன்றை அவர் அதில் ஆற்றினார். ஜோதிபாலவுடனான தனது நட்பினைப்பற்றி அவர் மிக நீண்ட நேரம் பேசினார், மற்றும் ஒரு நடிகராக தான் ஜோதிபாலவின் குரல் வளத்தால் எப்படி ஆதாயம் அடைந்தார் என்பதை அவர் வெளிப்படுத்தினார். ஜோதிபாலவின் பின்னணிப் பாடல்கள் மூலமாக தான் பெரிதும் பிரபலம் அடைந்த உண்மையையும் அவர் ஏற்றுக்கொண்டார். பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்த அங்கத்தவர்களில் பலரும் அது கேட்டு கண்ணீர் விட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கூட பாதுகாப்பு பணியாளர்கள் பார்வையாளர்கள்மீது ஒரு அவதானமான கண் வைத்திருந்தார்கள். விஜய உடன் வந்திருந்த ஸ்ரீலங்கா மகாஜனக் கட்சியின் செயலாளர் பிரேமசிறி பெரேராவிடம் நான் ஏன் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறது என்று விசாரித்தபோது, ஜேவிபியின் ஆயுதக் குழுவான தேசப்பிரேமி ஜனதா விமுக்தி பெரமுனவினால் (டி.ஜே.வி) விஜயின் உயிருக்கு பயங்கர அச்சுறுத்தல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிரேமசிரியின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் விஜயவைப் போன்ற ஒரு அப்பாவி மனிதருக்கு தீங்கிழைக்க ஜேவிபி விரும்பும் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை. ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு விஜய கொலை செய்யப்பட்டார். முழு நாடுமே அவரது மரணத்துக்காக துக்கம் அனுட்டித்தது. அவரது மரணச்சடங்கில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். மகாஜனக் கட்சியில் இருந்த ஒவ்வொருவரும் அந்தக் கொலை ஜேவிபியின் ஆயுதக் குழுவான டி.ஜே.வியானால்தான் நடத்தப்பட்டது என நம்பினார்கள். ஆயுதக் குழுக்களை வைத்திருந்த சில இடதுசாரி அமைப்புக்கள் கொலைகள் மூலமாக பழிவாங்கல்களை மேற்கொண்டன.

மக்கள் புரட்சிகர சிவப்பு இராணுவம் (பி.ஆர்.ஆர்.ஏ) ஜேவிபிக்கு எதிராக ஆயுதத்தை தூக்கியபோது எனது உயிரும் ஆபத்தின் கீழ் இருந்தது, எனது பெயர் அவர்களது பட்டியலில் காலஞ்சென்ற ரஞ்சித் அபேசூரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்தது, ஏனென்றால் விஜேதாஸ லியனாராய்ச்சி என்கிற இளம் சட்டத்தரணியின் கொலைக்கு எதிராக நான் பிரச்சாரம் மேற்கொண்டதினால்தான். நான் ஒரு ஜேவிபி அனுதாபி என்று தவறாகக் கருதப்பட்டேன். விஜேயின் கொலைக்கு சில மாதங்களுக்குப் பின்னர் அவரைக் கொன்றதாகக் கருதப்படும் கொலையாளி கைது செய்யப்பட்டான். அப்போது ஐஜிபி ஆக இருந்த ஏணஸ்ற் பெரேராவை நான் சந்தித்தேன், அவர் அந்தக் கைதை உறுதிப்படுத்தினார். அந்த சந்தேக நபர் விஜய குமாரதுங்காவை மட்டுமல் மேலும் பலரையும் கொன்றிருப்பதாக அவன் ஒப்புக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அந்தக் கொலையாளி தெருவிலே வசித்து வந்ததாகவும் அதனால் அவன் ஜேவிபிக்கு ஒரு தாக்குதலாளியாக வேலை செய்துள்ளான் என்று அவர் சொன்னார். சந்தேக நபர் ஒரு நாட்குறிப்பு புத்தகத்தை பாவித்து வந்ததாகவும் அதில் தான் கொலை செய்தவர்களின் பெயரை அவன் குறித்து வைத்திருப்பதாகவும் மற்றும் அதில் விஜே என்று எழுதப்பட்டிருப்பது விஜய குமாரதுங்கவைத்தான் என்று என்னிடம் சொல்லப்பட்டது. சந்தேகநபரைக் கொல்வதற்கு பி.ஆர்.ஆர்.ஏ பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சிஐடி உருவாக்கிய சிறந்த புலனாய்வாளர்களில் ஒருவர் என்று பெயர் பெற்ற சிஐடி பணிப்பாளர் சந்திரா ஜயவர்தனாவிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார். சந்திரா ஜயவர்தனா ஒரு தூய்மையான குணாதிசயம் கொண்டவர்.

கொலையாளி என்று சந்தேகிக்கப் படுபவரிடமிருந்து சந்திரா ஜயவாதனா ஒரு விரிவான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார் மற்றும் அது தட்டச்சு செய்யப்பட்ட 179 பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதின் பின்னர், விஜயின் கொலையில் ஐதேக ஒரு தொடர்பைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தார். மகாஜனக் கட்சி, சந்தேக நபரான பலமுலகே லயனல் ரணசிங்காதான் டி.ஜே.விக்காக இந்தக் கொலையை செய்ததாக நம்பியபோதிலும், சந்திரிகா இதனைச் செய்தார்.

விஜயின் கொலையை ஆராய்வதற்காக சந்திரிகா ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கத் தலைவரான டெஸ்மண்ட் பெர்ணாண்டோ சொன்னதைப்போல “இலக்கு அடையாளப்படுத்தப்பட்டு இலக்கைச் சுற்றி ஒரு வட்டம் வரையப்பட்டுள்ளது, எனவே ஆணைக்குழுவின் முழு முயற்சியும் ஐக்கிய தேசியக் கட்சியையும் மற்றும் ஐதேகவில் உள்ள பிரேமதாஸ குழுவினரையும் சிக்கவைத்து ஜேவிபியினை பழியில் இருந்து நீக்குவதாகவே இருந்தது”. விஜயவின் நண்பர்கள் என்னைச் சந்தித்து இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக ஆஜராகும்படி என்னை வற்புறுத்தினார்கள். “நான் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவே தோன்றவேண்டும்” என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன். அதிகம் பாதிக்கப்பட்டவராக நான் கருதியது விஜய அதிகம் நேசித்த அவரது தாயான பற்ரீஸ் குமாரதுங்கா என்று. தனது பரபரப்பான வேலைப் பளுவின் இடையில் கூட விஜய ஒவ்வொருநாளும் அவரது தாயைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிலநேரங்களில் அவருக்கு நேரம் கிடைத்தால் அவரது தாயிடம் வந்து அவருக்கு உணவு ஊட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது அவரது தாயின் மீது அவர் கொண்டிருந்த ஒரு அசாதாரணமான உறவாகும்.

நாங்கள் விஜயின் தாயாரான திருமதி. குமாரதுங்கவைச் சந்திப்பது என்று முடிவு செய்து அப்போது அவர் வசித்துவந்த பொல்ஹேன்கொடவுக்குச் சென்றோம். அப்போது என்னுடன் வந்திருந்த சரத் ஹோன்கககே மற்றும் தயான் ஜயதிலக ஆகியோரைக் கண்டதும் அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்கள் ஏன் ஜேவிபியை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்கள்? எனதருமை மகனைக் கொன்றது ஜேவிபி தான் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியுமே என்று அவர் சொன்னார். நீங்கள் சாட்சியமளிக்க விரும்புகிறீர்களா என்று நாங்கள் கேட்டபோது, ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளிக்கச் சிறந்த நபர் பிரேமசிறி பெரேராதான் என்று தெரிவித்த அவர் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், ஆனால் ஆணையாளர்கள் அவரது வீட்டுக்கு வந்தால் தான் பதில் சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் கிறுக்கலான எழுத்தில் ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதினார். அந்த குறுகிய கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தது, “ எனது மகன் உயிரோடிருந்தபோது ஜேவிபிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், மற்றும் அவர் கொல்லப்படுவார் என்று பலமுறை அவருக்கு கடிதங்கள் கிடைத்திருந்தன” என்று. ஆணைக்குழு பிரேமசிறி பெரேராவுக்கும் அழைப்பு விடுத்தது. பிரேமசிறி ஒரு கொலையாளியைப் போலவே நடத்தப்பட்டார், அவர் அணிந்திருந்த ஆடைகளைப்பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள், அவர் அணிந்திருந்த செருப்புக்களைப் பார்த்து இகழ்ச்சியாகப் பேசினார்கள். அவர் பரிகசிக்கப்பட்டார் மற்றும் கேள்விகள் கேட்கப்பட்ட விதத்தினால் அவரால் பல கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை, இதனால் கடினமான சாட்சியை கூடத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிட்டது. முன்னாள் சிஐடி பிரிவின் டிஐஜியான சந்திரா ஜயவர்தனா சாட்சிக் கூண்டில் ஏறியபோது அவருக்கு இன்னும் மோசமானது காத்திருந்தது. ஆணைக்குழு அவரை ஒரு பொதுவான குற்றவாளியைப் போலவே நடத்தியது மற்றும் கொலையாளியிடம் இருந்து அவர் பதிவு செய்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் முட்டாள்தனமானதும் நடைமுறைக்கு ஒவ்வாததும் என கருதப்பட்டது.

ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் யாவும் பிரேமதாஸ குழுவினருக்கு எதிரானதாகவே இருந்தன. அது நீதித்துறைக்கு ஒரு துக்கமான நாளாக இருந்தது. சந்திரா ஜெயவர்தனாவினால் பதிவு செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏராளமான விபரங்களைக் கொண்டிருந்தது மற்றும் அவை சாட்சியங்களால் உறுதி செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஆணைக்குழு அவை எதையும் கொடுக்கவில்லை. அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் 60ம் பக்கத்தில் விஜய எப்படிக் கொல்லப்பட்டார் என்று சந்தேகநபர் ரணசிங்கா பின்வருமாறு விளக்கியுள்ளார்: நாங்கள் பையை எடுத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு கடைக்கு அருகில் வந்தோம். மோட்டார் சைக்கிளை நிறுத்திய பின்னர், நாங்கள் வீதியை அவதானித்துக் கொண்டிருந்தோம், சுமார் ஐந்து அல்லது ஆறு நிமிடங்களின் பின்னர், விஜய குமாரதுங்க வீட்டுக்கு வெளியில் வருவதை நாங்கள் கண்டோம். அவர் தனியாக வந்து வாசலுக்கு அருகில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அந்த நபர் ஒரு சாரமும் சேர்ட்டும் அணிந்திருந்தார். அதன் பின்னர், ஹேரத்தும் நானும் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டோம். நான் பின் ஆசனத்தில் அமர்ந்தவாறே, அந்தப் பையை மடியில் வைத்து அதைத் திறந்து துப்பாக்கியை வெளியே எடுத்து அதன் பாதுகாப்பு ஆழியை விடுவித்தேன். நாங்கள் நிற்கும் இடத்துக்கு சுமார் இருபது யார் தூரத்தில் நாங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தினோம். விஜய குமாரதுங்க அவரது வெளி வாசலுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். அவர் சில ஆவணங்களையும் ஒரு கோப்பினையும் கையில் வைத்திருந்தார். அவர் அங்கு நின்றுகொண்டிருந்த நபருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நான் ரி 56 ரக துப்பாக்pயை எடுத்து அவரது பின்புறத்தில் இரண்டுமுறை சுட்டேன். அவர் எனக்கு எதிராக நேரே நிற்கவில்லை. துப்பாக்கிச் சூடு அவர்மீது பட்டதும் அவர் நிலத்தில் விழுந்துவிட்டார். பின்னர் நான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிச் சென்று அவரது தலையில் இரண்டுமுறை சுட்டேன். நான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கியதும் விஜய குமாரதுங்கவுடன் பேசிக்கொண்டிருந்த நபர் வீட்டை நோக்கி ஓடினார். அப்போது அவரையும் நான் சுட்டேன். அங்கு ஒரு இரட்டை ஆசனம் கொண்ட வண்டி ஒன்று வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது அந்த வண்டியின் பின் பகுதியில் ஒரு மனிதன் அமர்ந்து இருந்தான். அவனையும் நான் சுட்டேன், மற்றும் ஒரு கோப்பில் இருந்த அவணங்கள் சில விஜய குமாரதுங்காவின் அருகில் கிடப்பதை நான் கண்டேன். அந்தக் கோப்பை நான் எடுத்து நிலத்தில் போட்டேன். பின்னர் நான் அங்கிருந்த நான் துப்பாக்கி கொண்டுவந்த பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் ஏறிக்கொண்டேன். நாங்கள் பொல்ஹேன்கொட நோக்கி மோட்டார் சைக்கிளைச் செலுத்தினோம்.

அந்த மனிதன் தெரிவித்த கிட்டத்தட்ட அனைத்தையும் சிஐடியினரால் உறுதிப்படுத்த இயலுமாக இருந்தது. அவர்கள் விஜயவின் கொலை தொடர்பான ஆதாரங்களை மட்டுமல்ல ஆனால் வேறு 14 கொலைகள் தொடர்பான ஆதாரங்களையும் கண்டுபிடித்திருந்தார்கள்.

பெப்ரவரி 16 2018ல் விஜயவின் 30வது மரண நிறைவு வருடத்தை நாம் அனுட்டிக்கிறோம், ஒருவேளை இந்த முழு நாடும் எப்போதும் மிகவும் உணாச்சிபூர்வமாக நேசித்த ஒரே அரசியல் தலைவர் அவராகத்தான் இருப்பார்.

தேனீ மொழிபெயர்ப்பு:எஸ்.குமார்

Read more...

Tuesday, February 20, 2018

அமைச்சரவையை ஜனாதிபதி கலைக்க முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

அமைச்சரவை தொழில்படும் காலம்வரைதான் பிரதமர் பதவி வகிக்க முடியும். எனவே பிரதமர் பதவி விலகாவிட்டால் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பார் என்று அமைச்சரொருவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

சரத்து 46(2) இன் பிரகாரம் அமைச்சரவை தொழிற்படும் காலம்வரைதான் பிரதமர் பதவிவகிக்க முடியும்; ஆனால் இங்கு கேள்வி ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைக்க முடியுமா? அவ்வாறு கலைத்துவிட்டு அமைச்சரவை கலைந்து விட்டது. எனவே பிரதமரும் வீட்டுக்குச் செல்லுங்கள்; என்று கூறலாமா?

உண்மையில் அரசியலமைப்பில் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பதற்கென்று எதுவித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. எனவே ‘அமைச்சரவையைக் ஜனாதிபதி கலைத்தல்’ என்ற சொற்பதமே தவறாகும்.

“ அமைச்சரவை தொழிற்படும் காலம்வரை” என்ற ஒன்று இருப்பதால் ‘அமைச்சரவையைக் கலைத்தல் அல்லது அமைச்சரவை கலைதல்’ என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். அது தொடர்பாக பார்ப்போம்.

அமைச்சரவை கலைதல்

சரத்து 48 இது பற்றிக் கூறுகின்றது.
48(1): பிரதமர் பதவி இழத்தல். இதன்படி பிரதமர் பதவி இழந்தால் அமைச்சரவை கலைந்துவிடும்.

48(2): அரசின் கொள்கைத் தீர்மானம்
வரவு செலவு மதிப்பீடு
அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
ஆகியன தோற்றால் அமைச்சரவை கலைந்துவிடும்

எனவே மேற்சொன்ன இரு சந்தர்ப்பங்களிலும் அமைச்சரவை தானாகவே கலைந்துவிடும். இங்கு அமைச்சரவையைக் கலைப்பது, என்ற ஒன்று இல்லை; என்பதை அவதானிக்கலாம்.

இந்த அமைச்சர்களிடம் பெரும்பான்மை இருந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மூலம் அரசைத் தோற்கடித்தால் அமைச்சரவையும் கலைந்துவிடும், பிரதமரும் பதவியிழந்து விடுவார். அதைவிடுத்து ஏன் ஜனாதிபதியின் பின்னால் அலைகின்றார்கள்?

அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைத்தால் பிரதமர் பதவியிழப்பாரா?

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய அவர்கள் ஜனாபதிக்கு அமைச்சரவையை முற்றாக வேண்டிய நேரத்தில் கலைக்கின்ற அதிகாரம் இருப்பதாக நியூஸ் பெர்ஸ்ட் இற்கு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக அவர் சரத்து 44(3) ஐ மேற்கோள் காட்டி ஜனாதிபதிக்கு அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்க முடியும்; என்றும் அவ்வாறு முழுமையாக மாற்றியமைக்கும்போது பிரதமர் பதவி இழப்பார்; என்று குறிப்பிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையில் 19வது திருத்தத்திற்கு முன் குறித்த சரத்து 44(3), தற்போது அது 43(3). இலக்கம் தவறுதலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது பிரச்சினை இல்லை. இப்பொழுது குறித்த சரத்திற்கு வருவோம்.

குறித்த சரத்து 43(3), ஜனாதிபதி விரும்பிய நேரம் அமைச்சர்களுக்குரிய விடயதானங்களையும் ( subjects and functions) அமைச்சரவையையும் (composition of the Cabinet of Ministers) மாற்றியமைக்க முடியும், ஆனால் அவ்வாறான மாற்றம் ‘ அமைச்சரவையின் தொடர்ச்சியை’ ( continuity of the Cabinet of Ministers) பாதிக்காது; என்றும் கூறுகின்றது.

இங்கு அவதானிக்க வேண்டியவை:
1) ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் விடயதானங்களை மாற்றியமைக்க முடியும். அதாவது நிதி அமைச்சருக்கு நீதி அமைச்சை வழங்க முடியும். பிரதமரிடம் ஆலோசனை கோரத்தேவையில்லை.

2) அமைச்சரவையை மாற்றியமைக்க முடியும். அது அதன் தொடர்ச்சியை அதாவது தொடர் தொழிற்படுதன்மையைப் பாதிக்காது. அமைச்சரவை தொடர்ந்தும் இயங்கும்.

இதன்பொருள் குறித்த சரத்தின் பிரகாரம் அமைச்சரவை மாற்றப்படுகின்றபோது அமைச்சரவை கலையாது. அது தொடர்ந்தும் இயங்கும். எனவே, ஜனாதிபதி சட்டத்தரணி வர்ணகுலசூரிய கூறியதாக கூறப்படுகின்ற அமைச்சரவைக் கலைப்பு இந்த சரத்தின்கீழ் எவ்வாறு இடம்பெற முடியும். அமைச்சரவை இயங்கும்வரை சரத்து 46(2) பிரகாரம் பிரதமரும் தொடர்ந்தும் இயங்க முடியுமே!

இதனுடைய சுருக்கம், ஜனாதிபதியால் ஒருபோதும் அமைச்சரவையைக் கலைக்கமுடியாது என்பதுமட்டுமல்ல, அமைச்சரவையைக் கலைத்தல் என்ற ஒன்றே அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. மாறாக, அமைச்சரவை கலைதல் இருக்கின்றது மேற்சொன்ன சந்தர்ப்பங்களில்.

இங்கு இருக்கின்ற ஒரேயொரு கேள்வி ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்கமுடியுமா? என்பது மாத்திரம்தான். இது தொடர்பாக ஏற்கனவே ஓர் ஆக்கத்தை வெளியிட்டிருக்கின்றேன். இன்ஷாஅல்லா, மேலும் ஒரு ஆக்கத்தையும் வெளியிட முயற்சிக்கின்றேன்.

Read more...

Sunday, February 18, 2018

இனப்பிரசனையை தீர்க்க சுலபமான படி முறைகள். சிவா குருபரன்

வெளிநாட்டு தமிழருக்கு தொடர்ந்து தடையை வைத்த படி அவர்களை தமிழீழம் என்று கூவுதலை தூண்டுதல்.

இலங்கையில் முன்னாள் போராளிகள் மற்றும் ஏனையோருக்கு தனித்தனியே புலிகளின் ஒவ்வொரு கொள்ளகையை முன்னிறுத்தி ஒவ்வொரு அரசியல் கட்சிகளை பதிவு செய்தல்.

பழைய அரசியல் கட்சிகளுக்கும் அவர்களுடைய கோரிக்கைகளுடனேயே வைத்திருத்தல்.

ஒவ்வொரு கட்சிகளுக்கும் அல்லது ஒவ்வொரு கூட்டமைப்பிலும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் பாராளுமன்றம் வருமாறு பார்த்துக்கொள்ளல்.

ஒவ்வொரு தனிக்கட்சிகளுக்குமிடையே அல்லது ஒவ்வொரு கூட்டமைப்புக்கிமிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளல்.

பாராளுமன்றம் வந்தவர்களையும் ஒவ்வொரு தனிக் கட்சிகளையும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயலாற்ற வைத்து அவற்றின் ஆதாரங்களை இரகசியமாக பதிவு செய்து வைத்தல்.

கருத்தொற்றுமை வந்து அவர்கள் சேரும் நிலை வரும் தருணங்களில் ஒவொருவரும் செய்த பிழைகளை மக்களிடையே கசியவிடுதல்.
ஒவ்வொரு பிரிவினை சதிகளை அல்லது பதவி விடயங்களை சலுகைகளை ஒருவருக்கு மட்டும் கொடுத்து சேரவிடாமல் பார்த்துக்கொள்ளல்.

அடிமட்ட மக்களிடையே தென்னிந்திய சினிமாவை போதியளவில் எடுத்துச் செல்லல்.

கல்வியை சாதாரண தரம் கூட அடைய முடியாதளவு கலாசார சீர்கேடுகள் போதைப்பாவனைகள் நவீன விடயங்கள் என்ற போர்வையில் புகுத்தி கல்வியை சிதறடிப்பதன் மூலம் சிந்திக்கும் திறனை அழித்தல்.

குறைந்த வயதில் பணத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தி சிறிய கூலிக்கு பெரியளவு வேலைவாய்ப்புக்களை ஏற்படுதல்.

அவர்கள் உழைக்கும் பணத்தை ஆடம்பர செலவுகளை சினிமா மூலம் சமூக வலைத்தளங்கள் மூலம் புகுத்தி மீண்டும் ஒரே நிறுவன வியாபார நிலையங்கள் மூலம் புடுங்குதல்.

இளையோர்களை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அடியாட்களாக மாற்றுதல்.

முற்றுமுழுதாக கல்வி மற்றும் ஏனைய முன்னேற்றகரமான சிந்தனைகளை தோன்றவிடாது கவனக் கலைப்பான்களை தொடர்ந்து செலுத்துதல்.

ஏழைகுடும்பங்களை ஒவ்வொரு மதத்திலுமிருந்து வேற்று மதத்துக்கு வீடு உணவு ஆடம்பரம் கவர்ச்சி பேச்சுக்கள் மூலம் மாற்றுதல்.

சம நேரத்தில் நாகரிகம் உலக வளர்ச்சி நவீனம் என்ற போர்வையில் இனக்கலப்பை காதல் மூலமும் வசதி வாய்ப்பு ஏழ்மையை போக்கவும் தந்திரமாக இனிமையான வழிகளில் நிறைவேற்றல்.

இவ்வளவு செயன்முறைகளை தாண்டியும் கற்றோர் எவராவது இருந்தால் அவர்களை புலமை பரிசில் மேற்படிப்பு தகுதி சார் புலம் பெயரல் போன்றவற்றால் வெளியக்கற்றல்.

காலப்போக்கில் பிரிவினை மூலம் தமிழ் கட்சிகளை சிதைத்து ஆட்சியாளரால் உருவாக்கப்பட்ட விசுவாசித் தமிழர்களை வைத்து ஆட்சியாளர்களின் கட்சிகளை சலுகைகள் மற்றும் ஏனைய கவர்ச்சிகள் வெகுமதிகள் மூலம் மக்களை ஆட்சியாளர் கட்சிகளை நோக்கி கவருத்தல்.

ஒவ்வொரு படிமுறைகளையும் கிராம மட்டதில் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி கிராம மட்டத்தில் போலி role model களை உருவாக்கி முகமூடியாக்கி மக்களுக்கு விருப்பத்துக்குரிய கோசமான தனி நாடு சமஸ்டி என்ற தொனிகளோடு நிறைவேற்றல்.

இந்த படிமுறையில் செயலாற்றினால் இன்னும் 20-25 வருடங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நாடு தேசியம் என்ற கொள்கைகள் கோரிக்கைகள் இல்லாமல் போய்விடும்.

வெளிநாடுகளில் தற்போது வாழும் ஈழத்தமிழர்கள் இன்னும் 25வருடங்களில் சரிபாதியாக குறைந்துவிடுவர்.

அவர்களின் பிள்ளைகள் வாழும் ஒவ்வொரு நாட்டு கலாசாரம் நாகரிகம் சொந்த வாழ்வில் நாட்டம் கொண்டு அங்கே ஊறிவிடுவதால் அவர்களுக்கு தனிநாடு தேசியம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். அப்படி இருந்தாலும் தாங்கள் வாழும் நாட்டு மொழிகளில் புத்தகங்களை எழுதி மகிழ்ந்து படித்து பெருமைப்பட்டு இருப்பர்.

மேற் கூறிய அனைத்தும் கோவம் கொள்ள அல்ல... எங்கள் இனம் காணமல் போய்க் கொண்டிருக்கும் வழிமுறைகளின் நிகழ் கால உதாரணங்கள்.

நான் தமிழர்க்கு எதிர்தரப்பாக இருந்தால் இதனை சுலபமாக செய்து முடிப்பேன். காரணம் இலங்கை தமிழினத்தில் இவ்வளவும் கொண்டு செல்வது மிக சுலபம். ஒற்றுமையில்லாதவர்கள், இலகுவாக இடம்மாறக் கூடியவர்கள். வேற்றுக் கோசத்தோடு மன அமைதி கொண்டு மகிழ்ந்திருப்பவர்கள்.

Read more...

Saturday, February 17, 2018

சாய்ந்தமருதுக்கான சமாதானத் தூதுவர்! ஆடு நனைவதாக கண்ணீர் விட்டதாம் ஓநாய்! - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சாய்ந்தமருதுவில் சுயேச்சையாகப் (தோடம்பழச் சின்னம்) போட்டியிட்டு வெற்றியீட்டிய அணியினரை இணைத்து கல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைக்க வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கான பதிலை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கியிருந்தது. அதாவது, அமைச்சரின் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது நடந்து முடிந்த விடயம்.

ஆனால், இப்போது, அதே கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் இருதரப்பு சமரசவாதியாக செயற்பட்டு சாய்ந்தமருது சயேச்சைக் குழுவுடன் கலந்துரையாடி இந்த விடயத்தில் இணக்கப்பாட்டைக் கொண்டுவர அவர் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காமடி பண்ணுவதிலும் மற்றவர்களுக்கு நகைச்சுவை விருந்து படைப்பதிலும் மிகச் சிறந்த ஆளுமை கொண்டவர் அலிசாகிர் மௌலானா அவர்கள்.

கட்சியின் தலைமையின் கோரிக்கையையே சாய்ந்தமருது மக்கள் நிராகரித்துள்ள நிலையில் இவரது சமரசம் என்பது திண்டுக்கல் லியோனியின் நகைச் சுவையையும் மிஞ்சி விட்டதாகவே கருதலாம்

அலிசாகிர் மௌலானாவின் இந்த அறிவிப்பானது, எனக்கு பாசிக்குடா ஹோட்டலில் இடம்பெற்ற வாக்குவாதத்தையும் ஏறாவூரில் இரண்டாகப் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டதனையுமே நினைவுக்கு கொண்டு வந்தது.

ஆசனங்கள் அல்லது வட்டாரங்களில் அதிக ஒதுக்கீடு தேவை என்பதற்காக ஒரே கட்சியை சேர்ந்த இருவர், யானை, தராசு சின்னங்களில் வேட்பாளர்களை நிறுத்தி குறித்த கட்சியின் மொத்தப் பலத்தையும் இரண்டாகக் கூறு போட்டு பலவீனப்படுத்துவதில் ஒருவராகத் திகழ்ந்த அலி சாகிர் மௌலானா இப்போது முஸ்லிம் காங்கிரஸையும் சாய்ந்தமருது மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை முன்னெடுக்கப் போவதாக கூறியிருப்பதானது கடி ஜோக்.

எங்களது சாய்ந்தமருது மக்கள் ஏற்கனவே தங்களது நிலைப்பாட்டை அறிவித்து விட்டனர். ஆகவே, எவரது மத்தியஸ்தமோ சமரசமோ அந்த மக்களுக்குத் தேவையில்லை என நான் கருதுகிறேன்.

எங்களது மண்ணின் மைந்தர்களான அப்பாவிச் சிறுவர்கள் கூட கிரிமினல்களாகக் காட்டப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்ட போது கூட, தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு சரணாகதி அரசியலுக்குச் செல்லாதவர்கள் அந்த மக்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் கூட தங்களது பிள்ளைகளைப் பிடித்து விட்டார்களே என்று ஏக்கமடைந்து துயரம் கொள்ளாது, எங்களது பிள்ளைகள் சிறைப்பிடிக்கப்பட்டதால் எங்கள் மண்ணுக்கான போராட்டம் மங்கிவிடுமோ என்ற கவலையை மட்டுமே அவர்கள் சுமந்திருந்தார்.

கடைகளை மூடியும் தொழில்களைக் கைவிட்டும் சுட்டெரிக்கும் வெயிலில் சுடு மணலிலும் வீதிகளிலும் குந்திக் கிடந்து போராட்டம் நடத்திய எங்கள் தியாகச் செம்மல்கள் மேயர் பதவிக்காகவோ ஆட்சி அதிகார அந்தஸ்துக்காகவோ சோரம் போகமாட்டார்கள் என்பதனை அலி சாகிர் மௌலானா புரிந்து கொள்ள வேண்டும்.

எனது மண்ணின் மைந்தர்கள் நடத்திய போராட்டங்கள் வெறும் அரசியலுக்கு மட்டுமானதல்ல… அது அவர்களின் உரிமைக்கான ஒற்றுமைப் போராட்டம். தியாகத்தால் வென்றெடுக்கப்பட்ட ஜனநாயகத்தை ஒரு போதும் அவர்கள் யாருக்கும் தாரை வார்க்கப் போவதில்லை.

எங்களுக்குத் தேவை எங்களை நாங்களே ஆளும் உள்ளூராட்சி சபை ஒன்றே. அதற்காகவே பேராடினோம்... போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்கான எங்களது ஒற்றுமையின் வலிமையை எங்களது வலிகளை இன்று உலகறியச் செய்து விட்டோம். எங்களது கோரிக்கை நியாயமானது என்பதனைப் பலரும் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், உங்களுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றைப் பெற்றுத் தருகிறோம், மேயர் பதவி தருகிறோம் என்றெல்லாம் கூறினாலும் அதனை ஏற்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஏனெனில், எதிர்காலத்தில் எங்களுக்கென்று ஓர் உள்ளூராட்சி சபை கிடைத்தால் அது எங்களது போராட்டத்தால், தியாகத்தால் கிடைத்ததாகவே கருதப்படுமே தவிர, எந்த அரசியல் கட்சியாலும் கிடைக்கப் பெற்றதாக கூற முடியாது.

எங்களுக்கான உள்ளூராட்சி மன்றத்தை தங்கத் தட்டில் வைத்துத் தர வேண்டுமே தவிர, தகரத் தட்டில் வைத்து அல்ல என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

அலிசாகிர் மௌலானா அவர்களே!, எங்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் கடந்த காலத்தில், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கவிருந்த நிலையில், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் வெளிப்பைடையாகவே முன்னெடுக்கப்பட்ட போது நீங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு சமரசம் செய்திருக்க வேண்டுமல்லவா? எங்களது உரிமைகளை மதித்து அதனைப் பெற்றுத்த தர முயற்சித்திருக்கலாம் அல்லவா? ஏன் அன்று மௌனம் சாதித்தீர்கள்? இதற்கான பதிலை முதலில் நீங்கள் கூறுங்கள்.

இறுதியாக “எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை“ என லியோ டால்ஸ்டாய் கூறியதனை உங்களுக்கு இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

ஆடு நனைவதாக ஓநாய் கண்ணீர் விடும் கதைதான் போங்க……
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Read more...

சோழர் நிர்மாணித்த பொலன்னறுவை சிவாலயத்தில் மகாசிவராத்திரி விழா

கடந்த செவ்வாய்க்கிழமை சிவராத்திரி விழா பொலன்னறுவை சிவன் கோயிலில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வேளையில் பொலன்னறுவை சிவன் கோயில் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வது இங்கே முக்கியம்.

பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை மீது படையெடுத்த இராஜராஜ சோழன் தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தைக் கைப்பற்றினான். இதன் மூலம் இலங்கையின் வட பகுதி சோழரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயருடன் சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆனது.

போரில் அழிந்து போன அநுராதபுரத்தைக் கைவிடப்பட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவை தலைநகரம் ஆக்கப்பட்டது. 1017 ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் 1070 ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது.

சோழர் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்புப் படை என்பதாலும், சிங்கள மக்களுக்கும், சோழர்களுக்கும் இடையே நீண்ட காலப் பகை இருந்ததாலும், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சோழர் ஏராளமான தமிழ்நாட்டுப் படைகளையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் இலங்கையில் வைத்திருக்க வேண்டி இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருந்தனர். எனவே சோழர் ஆட்சிக்காலத்தில் பல இந்துக் கோயில்கள் பொலன்னறுவையில் அமைக்கப்பட்டன.

இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலன்னறுவை. சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில் அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காகக் கட்டப்பட்டனவே பொலன்னறுவை இந்துக் கோயில்கள். இங்கே பத்துச் சிவன் கோயில்களும், ஐந்து விஷ்ணு கோயில்களும், ஒரு காளி கோயிலுமாகப் பதினாறு இந்துக் கோயில்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டவை என்பதற்கில்லை. ஒன்றிரண்டு கோயில்கள் மட்டுமே அவ்வாறு கூறத்தக்கவை. பாண்டியர் காலத்திலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

கலிங்க மாகனின் காலத்திலும் இவற்றுட் சில கட்டப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.

முன்குறிப்பிடப்பட்ட பதினாறு கோயில்களுக்கும், பெயர்கள் இருந்திருக்கும். எனினும், இவை அனைத்தும் அறியப்படவில்லை. இலங்கைத் தொல்பொருள் துறையினர் இவற்றை எண்கள் மூலம் அடையாளம் காண்கின்றனர். சிவ தேவாலயங்களுக்கு முதலாம் சிவ தேவாலயம், இரண்டாம் சிவ தேவாலயம் என்றவாறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் சோழர் காலத்தில் வானவன் மாதேவி ஈச்வரம் என அழைக்கப்பட்ட இரண்டாம் சிவ தேவாலயமே முழுமையாகப் பேணப்பட்ட நிலையில் உள்ளது. இது தவிர ஐந்தாம் சிவ தேவாலயமும் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது. ஏனையவற்றுள் பெரும்பாலானவை அடித்தளம் முதலான குறைந்தளவு தடயங்களையே கொண்டுள்ளன.

முழுமையாகப் பேணப்பட்டுள்ள வானவன் மாதேவி ஈஸ்வரமும், குறிப்பிடத்தக்க கட்டடப்பகுதிகள் எஞ்சியுள்ள வேறு சில கோயில்களும், அவற்றின் கட்டடக்கலைப் பாணியை ஆதாரமாக வைத்துச் சோழர் காலக் கோயில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் காணப்பட்ட கல்வெட்டின் துணை கொண்டு அது முதலாவது இராஜேந்திர சோழனின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முதலாவது சிவ தேவாலயம் பாண்டியர் கட்டடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்டது. இது பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. போதிய சான்றுகள் காணப்படாமையால் ஏனையவற்றின் காலத்தை சரிவர அறியக் கிடைக்கவில்லை.

இங்கே கட்டப்பட்ட பெரும்பாலான இந்துக் கோயில்கள் அளவிற் சிறியன. இங்கே வாழ்ந்த இந்துக்களிற் பலர் இவ்விடங்களில் நிரந்தரமான ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்க முடியாது. அத்துடன், உள்ளூர் மக்களை மதம் மாற்றும் முயற்சியிலும் சோழர்கள் ஈடுபடவில்லை இதனால், தமிழ்நாட்டில் கட்டப்பட்டது போன்ற பெரிய கோயில்கள் இலங்கையில் சோழர்களால் கட்டப்படவில்லை.

வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர் காலத் திராவிடக் கட்டடக்கலைப் பாணியைச் சேர்ந்தது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும், இப்பாணியையே பின்பற்றியிருக்கும் எனலாம்.

வானவன் மாதேவி ஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய சோழர்கள் அமைத்தகோயில்களுள் முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.

இக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டு சான்றைக் கொண்டு, இக்கோயில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் தாயின் பெயர் வானவன் மாதேவி என அறியப்படுகின்றது. எனவே தனது தாயின் பெயராலேயே இந்தக் கோயிலை அவன் அமைத்திருக்கக் கூடும்.

வானவன் மாதேவி ஈஸ்வரம், திராவிடக் கட்டடக்கலையின், சோழர் பாணியின் ஆரம்பகாலத்தைப் பிரதிபலிக்கின்றது. சோழர்களின் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைப் படைப்புகளில் இக்கோயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இக்கட்டடம் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட கோயில்களைப் போலன்றி அளவில் சிறியதாகக் காணப்படுகின்றது. கருவறையையும், அதன் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்ட இக்கோயிலின் கருவறையின் வெளிப்புறம், 20 அடி 6 அங்குல அளவு கொண்ட சதுர வடிவமானது. உட்புறம், 9 அடி 4 அங்குல சதுரம் ஆகும். இதிலிருந்து அதன் கருவறைச் சுவர் 5 அடி 6 அங்குலத் தடிப்புக் கொண்டது என அறிய முடிகின்றது. இதன் முன் மண்டபம் 16 அடி நீளமும், 9 அடி 4 அங்குல அகலமும் கொண்டது. கருவறையின் மீது அமைந்துள்ள விமானம், நிலத்திலிருந்து 31 அடி 9 அங்குல உயரம் கொண்டதாக உள்ளது.

மனோ

நன்றி தினகரன்





Read more...

Friday, February 16, 2018

தேசிய பாரிசவாத சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம் இம்முறை மட்டக்களப்பில்

கிழக்கின் சகல பாகங்களிலும் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாரியபாதநடை, பாரிசவாதத்தடை என்ற தொனிப்பொருளில் 2018 தேசிய நடைபவனி நடைபெறவுள்ளது. இலங்கையில் பாரிசவாத அமைப்பின் ஏற்பாட்டில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய பாரிசவாத நடை பவனி மட்டக்களப்பில் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


இந்த நடைபவனி கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நிறைவுபெறவுள்ளதுடன், இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்வாரெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்பாக StrokeWalk 18 ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தேசிய பாரிசவாத சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம்

உலகலாவிய ரீதியில் உயிர்கொல்லும் அல்லது ஊனமாக்கும் நோய்களில் பாரிசவாதம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆறுபேரில் ஒருவருக்கு பாரிசவாதம் தாக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இலங்கை தேசிய பாரிசவாத சங்கமானது இலங்கையில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகளையூம் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பாரிசவாத நோயாளர்களின் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளையூம் நடாத்துவதனூடாக பாரிசவாத பராமரிப்பையூம், பாரிசவாத தடுப்பிற்குரிய நடவடிக்கைகளையூம் ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது.

பாரிசவாத நடைப்பயணமானது கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய மாநகரங்களில் நடைபெற்ற போதிலும் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்வாரொன எதிர்பார்க்கப்படும் இந்த தேசிய பாரிசவாத நடைபயணம் 24ம் திகதி மாசி மாதம், 2018 ம் ஆண்டு கல்லடி, பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பித்து வெபர் மைதானத்தில் முடிவூபெறும். நடைபயணத்தின் இறுதியில் குருதியமுக்கம், குருதியில் சீனியின் அளவு என்பன இலவசமாக பரிசோதிக்கப்படும். இம்மாபெரும் நிகழ்வை முன்னிட்டு பாடசாலைகளிடையே சுவரொட்டிப்போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இறுதிநிகழ்வில் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் இந்நிகழ்வில் தாங்களும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைத்து நிற்பதோடு இந்நிகழ்வு சிறப்புடன் நிறைவேற தங்கள் ஒத்துழைப்பையூம் வேண்டிநிற்கின்றோம்.

நன்றி,
இவ்வண்ணம்,
வைத்தியர் க. மரியானோரூபராஜன்,
செயலாளர்,
StrokeWalk 18 ஏற்பாட்டுக்குழு



Read more...

ஆசியாவில் போர் அபாயம் கட்டமைந்து வருகையில், அமெரிக்கா இராணுவ நிலைநிறுத்தல்களை விரிவாக்குகிறது. James Cogan

கடந்த மாதம் ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயம், சீனா மற்றும் ரஷ்யாவை அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டிருக்கும் தலையாய "மூலோபாய போட்டியாளர்களாக" வரையறுத்தது. அவ்விரு அணுஆயுத நாடுகளையும், உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்துவதில் இருந்து தடுக்கப்பட வேண்டிய "திரித்தல்வாத நாடுகளாக" அது முத்திரை குத்தியது. அமெரிக்கா "போருக்கான தயார் நிலையை முன்னுரிமைப்படுத்த" வேண்டியிருப்பதாக அந்த ஆவணம் அறிவித்தது.

ஒபாமா நிர்வாகம் நவம்பர் 2011 இல் அப்பிராந்தியத்தில் அதன் ஆத்திரமூட்டும் "முன்னெடுப்பை" அறிவித்ததில் இருந்து, கடந்த ஆறு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இதை தான் ஆசியாவில் செய்து கொண்டிருக்கிறது. அது சீனாவுக்கு எதிராக பிராந்தியந்தழுவிய போர் தொடுக்க பல்வேறு மேற்பரப்பு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுவீசிகள், அதிவேக போர்-விமானங்கள், தரைப்படை பிரிவுகள் மற்றும் கடற்படை பிரிவுகளை நிலைநிறுத்தி தயாரிப்பு செய்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் அமெரிக்க படைகளின் புதிய தளங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு எதிராக ஒரு "மூலோபாய பங்காளியாக" அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தியா, இப்போது அமெரிக்க இராணுவத்திற்கு இடமளிப்பதுடன், பராமரிப்பு மற்றும் வினியோக ஏற்பாடுகளையும் வழங்குகிறது.

ஜப்பானின் ஒக்கினாவா மற்றும் ஏனைய இடங்களிலும், அமெரிக்கா, 18,000 கப்பற்படை துருப்புகள், ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பல் படைப்பிரிவு மற்றும் விமானப்படை அதிவேக போர்விமானங்களின் படைப்பிரிவுகள் உள்ளடங்கலாக, சுமார் 50,000 இராணுவப் படையினரைக் கொண்டுள்ளது. வட கொரியா உடனான எந்தவொரு மோதலுக்கும் தாக்குமுகப்பாக, அது தென் கொரியாவில் சுமார் 29,500 படையினரைக் கொண்டுள்ளது. குவாமில் 7,000 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர், அத்துடன் அணுஆயுதங்கள் தாங்கிச் செல்லக்கூடிய B-52 மற்றும் B2 ரக மூலோபாய குண்டுவீசிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆசியாவில் அமெரிக்க பலத்தைத் திரட்டுவதற்கான அடுத்த கட்டத்தைக் குறித்து பெப்ரவரி 9 இல் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது. பென்டகன், கடந்த தசாப்தத்திலும் அதற்கு முன்னர் இருந்தும் ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் பிரதானமாக பயன்படுத்திய மேற்கு கடற்படையை மையமாக கொண்ட மூன்று சாகச கடற்படை பிரிவுகளை (Marine Expeditionary Units - MEUs) அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்த பரிசீலித்து வருகிறது.

இந்த சாகச கடற்படை பிரிவுகளில், 2,200 கடற்படையினரும், அதிவிரைவு போர்விமானங்களும் மற்றும் நீரிலும் நிலத்திலும் தாக்கும் போர்க்கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர்களும் உள்ளன, அத்துடன் சேர்ந்து வழிநடத்தத்தக்க ஏவுகணைகள் தாங்கிய விரைவு போர்க்கப்பல்கள் மற்றும் அழிக்கும் நடுத்தர போர்க்கப்பல்கள், ஒத்துழைப்பு வாகனங்கள் மற்றும் பெரும்பாலும் ஒரு தாக்கும் நீர்மூழ்கிக்கப்பல் ஆகியவையும் உள்ளன. துப்பாக்கி தாங்கிய கப்பல் இராஜதந்திரத்தின் இருபத்தோராம் நூற்றாண்டு பதிப்பில், இந்த சாகச கடற்படை பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டால், அவை சீனாவுக்கு எதிராக "அமெரிக்காவுடன் நிலைநிற்குமாறு பசிபிக் நாடுகளை இணங்குவிக்க" அப்பிராந்தியம் முழுவதிலும் ஒரேநேரத்தில் ஏழு மாதங்களுக்கு ரோந்து மேற்கொள்ளும்.

இந்த சாகச கடற்படை பிரிவுகள் (MEUs) “ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்" மற்றும் "கூட்டாளிகளுக்கு பயிற்சியளிக்கும்" என்றும், “ஒரு மோதல் வெடித்தால் விடையிறுக்கும்" என்றும் பென்டகன் அதிகாரிகள் ஜேர்னல் பத்திரிகைக்கு தெரிவித்தனர். மேலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்க கடற்படைக்கு எதிராக சீன இராணுவம் அபிவிருத்தி செய்து வரும் முன்னோக்கிய தளங்கள் அமைந்துள்ள தென் சீன கடலில், சீன வசமிருக்கும் தீவுதிட்டுக்கள் மற்றும் கடல்குன்றுகளைத் தாக்குவதிலும் கைப்பற்றுவதிலும் இந்த நிலத்திலும் நீரிலுமான தாக்கும் படைகள் பாத்திரம் வகிக்கும்.

முப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட், கடந்த வாரம் வட ஆஸ்திரேலிய நகரமான டார்வினில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட போது, பத்திரிகையாளர்களுக்கு கூறுகையில், “நாங்கள் இங்கே நீண்டகால நலன்களைக் கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் நீண்டகால பொறுப்புறுதி ஏற்றுள்ளோம், நாங்கள் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறோம்,” என்றார். இந்தாண்டின் ஆறு மாதங்களுக்கு டார்வினில் இருந்து செயல்படுவதற்காக ஒக்கினாவாவிலிருந்து அனுப்பப்படும் கடற்படையினரின் எண்ணிக்கை, இந்த மார்ச் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்கப்படும் என்பதை பென்டகன் அதிகாரிகள் முன்னறிவிப்பாக தெரிவித்தனர்.

அமெரிக்க இராணுவம், குறுகிய-கால ஓட்டத்தில், வட கொரியாவுக்கு எதிரான ஒரு பாரிய தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து அதன் ஆட்சியை தூக்கியெறிவதற்கான ஒரு படையெடுப்பு மற்றும் வட கிழக்கு ஆசியாவில் அதிகார சமநிலையை விரைவாக மாற்றுவதற்கும் தயாரிப்பு செய்து வருகிறது. இது, வெறும் 25 மில்லியன் மக்களுடன் பொருளாதாரரீதியில் ஆதரவற்ற அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள சீனா மற்றும் ரஷ்யாவின் மூலோபாயத்திற்கு நேரடியாக கேடு விளைவிக்கும்.

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடங்கிய நாட்களின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக்கல் பென்ஸ் இன் வாரயிறுதி நடவடிக்கை, மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.

தென் கொரிய அரசாங்கம் வட கொரிய விளையாட்டுக் குழு பங்கெடுப்பதை அதன் வழியில் வரவேற்க சென்றதுடன், வட கொரிய தலைவர் தலைவர் கிம் ஜோங்-யுன் இன் சகோதரி கிம் யொ-ஜொங்கிற்கும் மற்றும் அந்த தனிமைப்பட்ட நாட்டின் பெயரளவிற்கான அரசு தலைவர் கிம் யொங்-நம்மிற்கும் இராஜாங்க மரியாதை அளிக்குமளவுக்கு சென்றது. இப்போதைய பதட்ட நிலை போராக விளைந்தால், தீபகற்பத்தின் இரண்டு தரப்பிலும் நூறாயிரக் கணக்கானவர்கள் காயப்படுவார்கள் என்பதுடன், பொருளாதார மற்றும் சமூக சீரழிவு ஏற்படும் என்ற நிலையில், அத்தகைய பதட்ட நிலையைத் தணிப்பதற்காக இரண்டு தரப்பு கொரியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நோக்கி தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

தென் கொரியா மற்றும் வட கொரியா இரண்டையும் அவமதித்து ஒரு கணக்கிட்ட ஏகாதிபத்திய இறுமாப்புடன், அமெரிக்காவுக்கு ஒரு சமாதானமான தீர்வு காணும் ஆர்வமில்லை என்பதை பென்ஸ் தெளிவுபடுத்தினார். அவர் வட கொரிய தலைவர்களுடன் பேசவும் கூட மறுத்து, அரசின் இரவு உணவு விருந்தில் இருந்து வெளியேறினார், பின்னர் தொடக்க விழாவின் போது இரண்டு தரப்பு கொரியர்களின் ஒருங்கிணைந்த குழு அணிவகுத்த போது எழுந்திராமல் தொடர்ந்து அமர்ந்திருந்தார்.

இத்தகைய இராஜாங்கரீதியிலான அவமதிப்புகள் ஒரேயொரு நோக்கத்திற்கே சேவையாற்றுகின்றன: அதாவது, வட கொரியாவை அமெரிக்காவின் ஒரு வாடிக்கையாளர் அரசாக மாற்றும் ஒரு விளைவை மட்டுமே ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கும் என்ற தவறுக்கிடமற்ற சேதியை அனுப்புவதற்கே சேவையாற்றுகின்றன. வாஷிங்டன், கிம் ஜோங்-யுன்னின் ஆட்சியின் முழுமையான அடிபணிவைக் கோரி வருகிறது. இதற்கு மாற்றீடு திட்டங்கள் ஏற்கனவே நடந்து வருகின்ற நிலையில்,"நெருப்பு கக்கும் சீற்றத்துடன்" வட கொரியாவை "முழுமையாக அழிப்பதென்ற" ட்ரம்பின் அச்சுறுத்தலை நடைமுறைப்படுத்துவதாகும்.

டார்வினில் அமெரிக்க கடற்படையினர் இடையே கூறிய உறைய வைக்கும் கருத்துக்களில், தளபதி டன்ஃபோர்ட் கூறினார்: “[இ]தன் இறுதியில், கொரிய தீபகற்பத்தில் நாம் சண்டையிட்டால் அது மிகவும் மோசமான ஒரு போராக இருக்கும். அதில், நிச்சயமாக நமது கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் சேர்ந்து, அம்மண்ணில் கடற்படையினர் மற்றும் சிப்பாய்கள் களமிறங்குவார்கள். நீங்கள் ஒரு கடற்படையினராக இருந்தால், வெளிப்படையாக கூறுவதானால் நீங்கள் சீருடையில் இருந்தால், எப்போதும் காலையில் இதுவே சமாதானத்தின் எனது கடைசி நாள் என்று நம்பியவாறு எழுகிறீர் என்றால், நீங்கள் சரியான இடத்தில் நிறுத்தப்படுவீர்கள்,” என்றார்.

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிற அமெரிக்க "கூட்டாளிகளும் பங்காளிகளும்" குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை அடுத்து போருக்கு தயாராகி வருகின்றனர் என்பதைத் தவிர, இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளில் இருந்து வட கொரியா வேறென்ன முடிவுக்கு வர முடியும்?

முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், உலகை இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அனேகமாக மிகவும் கொடூரமாக விலை கொடுக்க செய்யக்கூடிய மோதலின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம், அதன் உள்நெருக்கடிகளாலும் மற்றும் ஒரு காலத்தில் அது செய்ததைப் போல உலகிற்கு கட்டளையிட தகைமையற்றும், அதன் வசப்படுத்த முடியாத வீழ்ச்சியைத் தடுக்க 25 ஆண்டு கால இராணுவவாத வன்முறையைத் தீவிரப்படுத்துவது மட்டுமே ஒரே வழியென்ற முடிவுக்கு வந்துள்ளது.

கொரிய தீபகற்பம் மீதான ஒரு போரில் இருந்து சீனாவும் ரஷ்யாவும் விலகி நின்றாலும் கூட, அதுபோன்றவொரு மோதல் அணுஆயுதங்களுடன் சண்டையிடப்படும் "வல்லரசு" போர்களின் அபாயத்தையே உயர்த்தும். அதைப் போலவே, நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவ செல்வந்த குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ ஆட்சிகளும், அமெரிக்காவுடன் தவிர்க்கவியலாத ஓர் இராணுவ மோதலுக்கு செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வருகின்றன. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் சிந்தனை குழாம்கள் மற்றும் இராணுவங்களிலும், வாஷிங்டன் உடனான மோதல் இறுதியில் தவிர்க்கவியலாதது என்ற கணக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

1915 இல், ரஷ்ய புரட்சியாளர் தலைவர் விளாடிமீர் லெனின், சுவிஸ் கிராமம் சிம்மர்வால்டில் நடந்த போர்-எதிர்ப்பு மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானத்தில் எழுதினார்:

“சமீபத்திய காலத்தின் அனைத்து புறநிலைமைகளும், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜன போராட்டங்களை நாளின் நடப்பாக ஆக்கியுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சட்டபூர்வ போராட்டத்தின் ஒவ்வொரு வழிவகைகளையும் பயன்படுத்தி, அதேவேளையில் இந்த உடனடியான மற்றும் மிகவும் முக்கியமான பணிக்கு அந்த ஒவ்வொரு வழிவகைகளையும் அடிபணிய செய்து, தொழிலாளர்களின் புரட்சிகர நனவை அபிவிருத்தி செய்யவும், அவர்களை சர்வதேச புரட்சிகர போராட்டத்தில் அணிதிரட்டவும், எந்தவொரு புரட்சிகர நடவடிக்கையையும் ஊக்குவிக்கவும் முன்னெடுக்கவும், ஏகாதிபத்திய போரை ஒடுக்குவோருக்கு எதிராக ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஒரு உள்நாட்டு போருக்குள், முதலாளித்துவவாதிகளின் வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு போருக்குள், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப்படுவதற்கும் மற்றும் சோசலிசத்தை அடைவதற்குமான ஒரு போருக்குள் மக்களை திருப்புவதற்கும், சாத்தியமான ஒவ்வொன்றையும் செய்வதே, சோசலிஸ்டுகளின் கடமையாகும்.”

இன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதே முன்னோக்கிற்காக போராடுகிறது, அதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக கட்டமைக்க வேண்டும்.

Read more...

Thursday, February 15, 2018

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 3) வ.அழகலிங்கம்.

நாட்டின் செல்வம் யாருக்கு உடைமை என்பதே அரசாங்கத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்று அரசியல் அறிக்கைகள் கூறுகின்றன. நாடு ஒரு தனிமனிதனின் உடமை என்றால் அது முடியாட்சி. நாடு பிரபுக்களுக்குச் சொந்தமானதென்றால் என்றால் அது பிரபுத்துவ ஆட்சி. ஆளும் சிறிய நிர்வாகக்குழு நாட்டின்பெரும்பான்மைச் செல்வங்களை அபகரித்து வைத்திருந்தால் அது ஒரு குறுங்குழு ஆட்சி(ஒலிகாய்ச்சி). மக்கள் அனைவருக்கும் உடமை என்றால் அது மக்கள் பொது உரிமை ஆட்சி. இந்த விளக்கத்தின் படி கம்பன் காட்டிய அரசை முடியாட்சி என்று கூறமுடியாது. பூவலயம் இன்று தனி அன்று, பொது என்று அவன் நாட்டையும், அதன்செல்வங்களையும் மக்களின் பொதுவுரிமையாக்குகிறான். இதனை மக்கள் பொதுவுரிமை அரசு என்று கூறுவதே பொருத்மானதாகும்.

இராமன் முடிசூடுவான் என்று கேட்ட மக்களின் மகிழ்ச்சி:

'பாவமும் அருந் துயரும் வேர் பறியும் என்பார்;
பூவலயம் இன்று தனி அன்று பொது என்பார்;
தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும் என்பார்;
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?',, என்பார்.

இராமன் ஆட்சி செய்தால் தீவினைகளும் பெரிய துன்பங்களும் வேரோடு அழியும் என்பார் சிலர். இனிமேல் இந்தப் பூமி சிலருக்கு மட்டுமே தனியுரிமை அல்ல, எல்லார்க்கும் பொதுவானதாகும் என்பார் சிலர் (இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர்). தேவர்களுக்குப் பகையான அரக்கர் கூட்டங்களை வள்ளல் இராமன் அழிப்பான் என்பார் சிலர். இவனுக்குப் பணிபுரியும் அரசர்கள் அந்த பாக்கியத்தைப் பெற எப்பேர்ப்பட்ட தவம் செய்தார்களோ என்பார் சிலர்.

பூவலயம் இன்று தனி அன்று பொது(1592) என்று கம்பன் கூறி மகிழ்ந்த இந்த வாக்கியம் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டியது போல அக்காலத் தமிழரின் அரசியற் கோட்பாடு அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதுவே அவன் கோட்பாடு அனைத்துக்கும் அடிப்படை. இதுவே அவன் கோட்பாட்டின் மூல வாக்கியம். இந்த மூலத்திற்கே நாம் மீண்டும் போக வேண்டும். அப்பொழுதுதான் விமோசனமோ விடுதலையோ கிடைத்ததாகும். பொது உடைமை விரோதிகள் கடைகெட்ட மக்கள் விரோதிகள். ஊரைக் கொள்ளையடித்து உலைமூடியால் மூடுபவர்கள். அரசியல்வாதிகளின் கொள்ளையடித்த காசுகளைப் போடுவதற்கென்றே வங்கிளை உருவாக்கி வைத்திருப்பது ஷபனாமாப்| பத்திரம் ஷபரடைஸ்| பத்திரம் என்று நாளாந்தம் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜேர்மனியைப் பிஸ்மார்க் ஆட்சி செய்த காலத்தில் ஜேர்மனி ஒன்றிணைக்கப்டாமல் சிறு சிறு சிற்றரசுகளாக இருந்தது. சிற்றரசர்கள் இடையிடையே கூடி மனங்கலப்பார்கள். ஒருமுறை இந்த ஒன்றுகூடலின்போது ஓர் அரசன் சொன்னான் நான் 25 அறைகளையுடைய ஒரு மாளிகையை வைத்திருக்கிறேன். மற்றொருவன் சொன்னான் நான் எதிரகளால் உடைக்க முடியாத கோட்டையை வைத்துள்ளேன். மற்றொரு அரசன் சொன்னான் நான் எந்தக் கோட்டையையும் உடைக்கைக் கூடிய பீரங்கிகளை வைத்திருக்கிறேன். இப்படியே எல்லாரும் தாங்கள் வைத்திருப்பவைகளைப் கூறிமுடிந்தபின் தென்மாநிலத்தைச் சேர்ந்த ஷசுவாபன|; என்ற வறிய நாட்டைச் சேர்ந்த சிற்றரசன் ஒன்றும் பேசாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டிருந்தான். நீயும் ஏதாவது சொல்லேன். நீயும் உன் நாட்டைப்போல் ஏழையாகி விட்டாயோ என்று நக்கலும் நையாண்டியும் செய்து கல கலவென்று சிரித்தார்கள். அந்தச் சிற்றரசன் எழுந்து நிதானமாக அடிக்குரலில் 'நான் எந்நாட்டிலுள்ள எந்த வீட்டிற்குப் போனாலும் என்னை அவர்கள் தங்கள் மடியிலே உறங்க வைப்பார்கள். அவர்களது உரிமையின் பாத்திரவாளி நான். நான் என்னை இழந்து அவர்களின் இதயத்தை வென்று வைத்திருக்கிறேன். அவர்களது கண்ணீரைப் பாராது நான் சாகவேண்டும். இதுதான் எனது இலட்சியம்||

இந்தக் கதை ஷசுவாபன்| நாட்டுப் பாடப் புத்தகங்களில் இப்பொழுதும் வந்து கொண்டிருக்கின்றது. இதன் பலாபலானால் இந்த மாநிலம் ஜேர்மனியின் முக்கிய தொழில் நகரமாக இன்று திகழ்கிறது. இங்கேதான் ஜன்ஸ்டையின் பிறந்தார்.

நாடு தனியொருவனுக்கு உடைமையான தல்ல. மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்து குடியாட்சிக் கொள்கை பரவிய இக்காலத்தில் சாதாரணமாகத் தெரியலாம். கம்பன் இதைக் கூறிய காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் மகத்துவம் புரியும்.

ஆள்பவன் ஆண்டவனுடைய அம்சம். நாடும் மக்களும் அவனுடைய உடைமைகள் என்ற கோட்பாடு கோலோச்சிய நாட்டிலும் காலத்திலும் அவன் இதைக் கூறினான்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெகுடை நிழற்றிய ஒருமையோர்
(புறநாநூறு.189)
என்றும்
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொது சொல் பொறாஅது
கடந்தடு தானைச் சேரலாதன்
( புறநாநூறு.8)
என்றும்
தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்(புறநாநூறு.51)
என்றும் 'பொது|| என்ற சொல்லைப் பொறுக்க முடியாத மாமன்னர்களின் ஏகாதிபத்தியத்தைப் புலவர்கள் புகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஷபூவலயம் இன்று தனி அன்று, பொது| என்ற கருத்து உதிப்பது வியப்பக்குரியது மட்டுமல்ல, புரட்சிகரமானது. காலவுணர்வுக்கு மாறாக இப்படிக் கூற வேண்டுமென்றால் ஒருவனுக்கு மனிதாபிமானமமும், உண்மை அறிவும், பரஞானமும, தூரப்பார்வையும், தீர்க்கதரிசனமும், புரட்சி மனப்பான்மையும் வேண்டும். கம்பனுக்கு இவை எல்லாம் இருந்தன. கம்பனுக்குப் பின்னாலும் கூட இந்தக் கருத்தையாரும் எடுத்தாளாதது அவனது தனித்துவத்தையே காட்டுகிறது. இது கவிதை ஆவேசத்தில் தெறித்த தற்செயலான கருத்து எனக் கூற முடியாதவாறு கம்பன் மீண்டும் மீண்டும் பல இடங்களில் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றான்.

'கம்பன் கோன் நிகர் குடிகள்,,(126) என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். இதன் மூலம் மக்கள் இறையாண்மையில் சமமான பங்குடையவர் என்பதைத் தெரிவிக்கிறான்.

'காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்,,
(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:386)

காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்திக் கூறுவர்.
இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆகிய அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்திக் கூறும். உலகில் முறை வேண்டியவர்களும் வலியவரால் நலிவு எய்தினவர்களும், குறைகூற வேண்டியவர்களும், வறுமையுற்று இருந்தவர்களும் காண்டற்கு இலகுவாக ஆட்சியாளன் இருக்க வேண்டும்.

குடிமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாடாள்வோன் அக்கறை செலுத்தவேண்டும். நாட்டுத்தலைவன் என்ற எண்ணத்தால் செருக்குற்று குடிகளிடமிருந்து விலகி இருக்கும் தலைவனிடம் அவர்கள் குறைகளைக் கூறமுடியாத நிலை இருந்தால் அவனால் நாட்டின் உண்மையான நிலையை அறிய முடியாமல் போய்விடும். சிடுசிடுக்கும் குணம் கொண்டவர்களிடம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்துவதில் எவருக்கும் பயம் ஏற்படும். அந்த அச்சத்தால் சொல்ல வந்த கருத்தையும் சொல்லாமலே விரைந்து வெளியேறி விடுவார்கள். அதனால் தலைவனுக்கும் நாட்டுக்குமே கூட நெருக்கடி ஏற்படலாம்.

மக்களுக்குப் பயப்படுகிற அரசாட்சியே ஜனநாயகம். மக்கள் அரசுக்குப் பயந்து வாழ்வார்களேயானால் அது ஒரு சர்வாதிகார ஆட்சியாகும். இதுவே ஆதிகால றோமர்களின் அரசியற்கோட்பாடு.

'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு...


மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்ததன்று. அந்நிலத்தில் வாழும் மக்களைப் பொறுத்தது. நற்பண்பும், நற்செயலும் கொண்ட மக்கள் நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக அமைகின்றனர்.

நல்லோர் இருப்பின் அது நல்ல நிலம்.
தீயோர் இருப்பின் அது தீய நிலம்.


ஒளவை நிலத்தை நோக்கிக் கூறுகிறார்..

ஏ! நிலமே..!
நீ ஒன்றில் நாடாகவும்!
ஒன்றில் காடாகவும்!
ஒன்றில் பள்ளமாகவும்!
ஒன்றில் மேடாகவும்!
எப்படி இருந்தாலும்,
மக்கள் எவ்விடத்தில் நல்லவராக இருக்கிறார்களோ அவ்விடத்து நீயும் நன்மையுடையதாக இருக்கிறாய்.


பசியும்,பிணியும், பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
என்கிறது சிலம்பு.

பசியால் வாடாமல் இருக்க அறம் தழைத்து, மழை பொய்க்காது, உழவு சிறந்து, விளைச்சல் பெருகியிருக்கவேண்டும். முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோய்கள் மக்களின் தீய பழக்கவழக்கங்களால் ஏற்படுவது. அத்தகைய தீய வழக்கங்களைக் கொண்டோர் வாழாத நாடாக இருக்கவேண்டும். நல்ல அமைச்சர்களும், அரசனும், அரசனுக்குப் பின்னால் வரும் சிறந்த குடிமக்களும், உறுதியுடன் உடனிருப்பதால் கொல்லுகின்ற எத்தகைய பகையும் வெல்லமுடியாததாக இருக்கவேண்டும். இதையே சிலப்பதிகார வரிகளும் 'பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' (சிலம்பு:5:72-3) என்கிறது. சீவக சிந்தாமணியும், 'பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையுமென்ன' (சீவக:2375) என்கிறது.

'ஒன்றுடன் பதினை யாண்டைக்கு உறுகடன் இசைவன் விட்டான்
இன்றுளீர் உலகத் தென்றும் உடனுளீ ராகி வாழ்மின்
பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையும் என்ன
மன்றல மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்த தன்றே,,.
-(2375)
மன்னன் சீவகன் இன்று முதல் பதினாறு ஆண்டுகளுக்கு உரிய வரிகளை நீக்கிவிட்டான். இன்றுபோல் நீங்கள் என்றும் உலகத்துடன் ஒட்டி வாழ்வீராக. மக்களைத் துன்புறுத்தும் பசியும், பிணியும், பொருந்தாத பகையும் நீங்குக என்று அப்பொழுது மணம் கமழும் இராசமாபுரத்தின் வீதிகள் தோறும் அழகிய முரசம் முழங்கியது.

'நோக்கொழிந்து ஒடுங்கின் ஈர்க்கும் நோய்கொளச் சாம்பின் ஈர்க்கும்
பூக்குழல் மகளிர் கொண்டான் புறக்கணித் தடப்பட் டீக்கம்
கோத்தரு நிதியம் வாழக் கொற்றவன் நகரோடு என்ன
வீக்குவார் முரசம் கொட்டி விழுநகர் அறைவித்தானே.
-(2376)
மேலும், 'கண்பார்வை இழந்து மெலிந்தவர்க்கும், நோயுற்று மனம் தளர்ந்வர்க்கும், மலர்க் கூந்தலுடைய பரத்தையிரிடம் கொண்ட வேட்கையாலே கணவனால் புறக்கணிக்கப்பட்ட மனைவியர்க்கும் வாழ்வுக்குரிய வீடும், இடையறாப் பெருஞ்செல்வமும் மன்னவன் நல்குவான்.. என்று அந்தச் சிறந்த நகரிலே இழுத்துக் கட்டப்பட்ட வாரையுடைய முரசினை அறைந்து அறிவித்தான்.

மக்கள் இன்பத்தோடு வாழ்தல்
'திருமகன் அருளப் பெற்றுத் திருநிலத்து உறையும் மாந்தர்
ஒருவனுக்கு ஒருத்தி போல உளமகிழ்ந்து ஒளியின் வைகிப்
பருவரு பகையும் நோயும் பசியும்கெட்டு ஒழிய இப்பால்
பெருவிறல் வேந்தர் வேந்தற் குற்றது பேச லுற்றேன்...
-(2377)

இவ்வாறு மாமன்னன் அருள, அவன் நாட்டு மக்கள் துன்பத்தைத் தரும் பகை, நோய், பசி ஆகியன தொலைய, ஒருவனுக்கு ஒருத்தி என மனமகிழ்ந்து புகழுடன் வாழ்ந்து வந்தனர். இனி, பேராற்றல் மிக்க மன்னர் மன்னனான சீவனுக்கு நேர்ந்ததைக் கூறத் தொடங்கினான்.

சமூகநலம் பேணும் ஆட்சியின் இன்றியமையாத தன்மையைத் தமிழர் தொன்று தொட்டே உணர்ந்து இருந்தனர்.

'பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
,, (குறள் 732: நாடு அதிகாரம்)
நல்ல நாடு என மதிக்கப்பெறும் நாடொன்று மிகுந்த செல்வ வளம் பெற்று, அதனால் பிறநாட்டு மக்களும் புலம் பெயர்ந்து குடியமர வருவதற்கு விழையும் நாடாகவும், கேடு என்பதே அரிதாகி இல்லாமல் ஒழிந்து, உற்பத்திப் பொருட்களால் நிரம்பி சிறந்ததாகவும் இருப்பதேயாம்.

'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.,,

(குறள் 738: நாடு அதிகாரம்)

பிணியின்மை – நோயின்மை
செல்வம் – ஆக்கம், பொருளுடைமை
விளைவு – செழிப்பான விவசாயமும், விளைச்சலும்
இன்பம் – மகிழ்ச்சி
ஏமம் – பாதுகாப்பான காவல்
அணியென்ப – அணிகலம் போன்றன
நாட்டிவ் வைந்து –
ஒரு நாட்டுக்கு இந்த ஐந்தும்

நோயற்ற மக்களும், ஆக்கமாகியச் செல்வச் செழிப்பும், மக்களின் உணவுத் தேவைகளை நிறைவுசெய்யும் மிகுந்த விளைச்சலும், மக்கள் பொதுவாக மகிழ்ச்சியுடன் இருப்பதும், பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதும் ஆகிய இவ்வைந்துமே ஒரு நாட்டுக்கு அணி அல்லது அழகு செய்வதாக நூல் வல்லோர்கள் கருதுவர் என்கிறது இவ்வெளிய குறள்.

'சர்வாதிகாரிகள் படைப்பாளிகள் அல்ல. அவர்களே படைக்கப் பட்டவர்கள். பற்றாக்குறைப் பொருளாதாரம்தான் சர்வாதிகாரிகளைப் படைக்கிறது என்று கார்ல் மாக்ஸ் 18 ஆம் புறுமேயர் என்ற புத்தக்த்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். பற்றாக்குறைப் பொருளாதாரம் நிலவினால் மக்களின் ஒரு பகுதியனருக்கு வஞ்சகம் செய்ய வேண்டிவரும். அவர்களைத் திருப்திப்படுத்தி ஆளமுடியாது. அவர்கள் தேவைப் பொருட்கள் போதும் போதுமென்ற அளவுக்கு உற்பத்தி செய்யும் மட்டத்திற்குத் தொழில் நுட்பமும் விஞ்ஞானமும் வளாந்தால் மாத்திரம்தான் பொதுஉடைமைச் சமுதாயம் வரும் என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனப் படுத்தியுள்ளார். அதுவும் உலகமேடையில் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதை அடித்துக் கூறியுள்ளார். குண்டான் சட்டிக்குள் குதிரைவிட்டுக்கொண்டு பொதுவுடமை பேச இயலாது.

பொருளியல் என்பது பற்றாமையை நிர்வகிப்பது, பற்றாப் பயன்பொருள்களைப் பகிர்வது, பரிவர்த்தனை செய்வது என்றே அர்த்தப் படுத்தும். மறக்குல மகளிர் மன்னனை வாழ்த்தும்போது பெருநில மன்னன் ஆளும் நாடு முழுவதும் பசியும் பிணியும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரப்பதாக என்று சாமியாடிக்கொண்டு கூறுவதாக ' பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' என்று நாட்டு வளத்தையும் மக்கள் நலனையும் இணைத்துக் குறிப்பிட்டுப் பாடுகிறார், இளங்கோவடிகள். இந்தப் பாடல் அடிகள், இளங்கோவடிகளின் மிக உயர்ந்த மனிதாபிமான தத்துவஞானக் கருத்தைக் குறிக்கிறது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பசி நீங்க வேண்டும். வயிறார அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும். பிணிகள் நீங்கி மனித சமுதாயம் நல்வாழ்வு பெறவேண்டும். போர்கள் ஒழிந்து, பகைகள் நீங்கி, நாடுகளும் மக்களும் அமைதியான சேதமில்லாத வாழ்க்கையைப் பெறவேண்டும். மழை பொழிந்து, நீர்வளம் பெருகி, நாடு அனைத்து வளங்களையும் பெறவேண்டும் என்பது இளங்கோவடிகளின் சீரிய சிந்தனைகளாகும்.

ஒரு நாட்டில் இருக்க வேண்டுவனவற்றுள் தலையாயது தள்ளா விளையுள் ஆகும் எனக் கூறியதற்கு ஏற்ப, ஒரு நாட்டில் இருக்கக் கூடாதன வற்றுள் தலையாயது பசித்துன்பம் என்று கூறியுள்ளார்;. பசி வந்திடின் பகை வந்திடும். பகைக்குக் காரணம் பசியே ஆதலின், நாடு பகைப்பயம் அற்று வாழ வேண்டுமாயின் பசிநோய் அற்று வாழ வேண்டும்;. ஆகவே, முதற்கண் அகற்றப்பட வேண்டுவது பசிப் பேயே. ஆகவேதான்,

'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு'

என நாட்டிற்கு நலிவு தரும் நோய்களுள் பசி நோயை முதற்கண் கூறியுள்ளார் வள்ளுவர். 'பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி' என வாழ்த்துக் கூறும் போதும், பசி நீங்கி வாழும் வாழ்வினையே முதற்கண் வைத்து வாழ்த்தியுள்ளார்கள் சிலம்பாசிரியர் அடிகளாரும், மேகலை ஆசிரியர் சாத்தனாரும். ஆகவே, பகை வளரக் காரணமாவது பசியே. பற்றாமையால் வந்துற்ற பசித் துன்பத்தைப் போக்கவே, பொருளென்னும் பிரிவில் அரசியலைத் திருவள்ளுவர் அமைத்திருக்கின்றார். அரசர்கள் தமக்குக் கிடைத்த அதிகாரம் பிறருக்கு நன்மைசெய்யும் பொருட்டே என்பதை அறிந்திருந்தார்கள். குடிகளுடைய நலத்தைத் தம் நலமாகக் கொண்டிருந்தார்கள். காவலன் கோல் கோடின் உலகு அழிந்துவிடும் என்பது அவர்கள் கொள்கை.
,,குடிபழி தூற்றுங் கோலோனாகுக.' என்கிறது புறநாநூறு.

'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
கவலன் காவான் எனின்.,,
-(560)
காத்தற்குரிய காவலானான அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட உயிர்களைக் காப்பாற்றானாகில் அறம் இல்லாத அவன் நாட்டு உற்பத்தி சொய்யும் தொழிலைச் செய்பவர்கள் தங்களது தொழிற்கலையை மறந்து விடுவர்.
ஓர் அராஜக நாட்டில் பரம்பரம்பரையாக, வாழையடி வாழையாக வளர்ந்து வந்த உற்பத்தி நுட்பங்பளை மக்கள் மறந்துவிடுவர். நிர்வாகம் சீரற்ற நாட்டிலே முதலில் அழிவது தொழில்களாகும்.
அது என்ன 'அராஜகம்'?

அராஜகம் என்பது வடமொழிச் சொல். இந்தச் சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் அ-ராஜகம:; அதாவது அரசன் அற்ற நாடு அல்லது ஆட்சி அற்ற நிலமை. பிற்காலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெடும்போது ஏற்படும் குழப்ப நிலைக்கும் இதைப் பயன்படுத்தத் துவங்கினர்.

ஒரு நாட்டிற்கு அரசாட்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், அரசன் இல்லாத நாடு எப்படிச் சீரழியும் என்றும் இந்தியர்கள் நன்கு கணக்குப் போட்டு வைத்தனர். வால்மீகி ராமயணத்தில் தசரதன் இறந்தவுடன் பரதனுக்கோ அல்லது இட்சவாகு வம்சத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருக்கோ உடனே முடிசூட்ட வேண்டும் என்று சொல்லும் இடத்து, அராஜகம் பற்றி நீண்ட சொற்பொழிவு வருகிறது..

இது மிகவும் படித்துச் சுவைக்க வேண்டிய பகுதி — .காரணம் என்னவென்னில் இதையே திருப்பிப் பார்த்தால், அரசன் நேர்மையாக ஆண்டால், என்ன என்ன கிடைக்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

தொடரும்...

முன்னைய பகுதிகளை தொடர்கட்டுரைகள் பகுதியில் காணலாம்...


Read more...

ஹிஸ்புல்லாவின் கருத்து விஷமத்தனமானதாம்! கண்டிக்கிறார்களாம் NFGG! தாங்கள் குண்டு வைக்கவே இல்லையாம்

(NFGG ஊடக அறிக்கை) “NFGG அலுவலக்கதின் மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முடிவுறாத நிலையில் இதில் தனது ஆதரவாளர்களுக்கு எதுவித தொடர்பில்லையெனவும், இது NFGG க்கு உள்ளிருந்தே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கிறார். விசமத்தனமான நோக்கத்தோடு விசாரணைகளை திசை திருப்பும் வகையில் அவர் தெரிவித்திருக்கும் இந்த கருத்தை NFGG வன்மையாகக் கண்டிக்கிறது” என NFGG யின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFGG வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது அவரை இலக்கு வைத்து ஒரு குண்டுத் தாக்குதல் கடந்த மாதம் 6 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மற்றுமொரு குண்டுத் தாக்குதல் ஒன்று கடந்த 12.02.2018 அதிகாலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி பிரதேச தலைமைக்காரியாலயத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது இரண்டு குண்டுகள் வெடித்துள்ள நிலையிலும் மேலும் சில குண்டுகள் வெடிக்காத நிலையிலும் மீட்கப்பட்டன. நேரம் குறித்து வெடிக்க வைக்கப்படும் வையில் வைக்கப்பட்டிருந்த இக்குண்டுத் தாக்குதல் மிக நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த விசாரணைகளை திசை திருப்பும் வகையில் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘கடந்த மாதம் 6ஆம் திகதி இடம் பெற்ற குண்டு தாக்குதலில் அக்குண்டு வெளியிலிருந்து வீசப்படவில்லை யெனவும் உள்ளேயிருந்தே அது வேண்டுமென்றே வைக்கப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்ததாக’ அவர் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு, ‘அதே வகையில் கடந்த 12 ஆம் திகதி நடந்துள்ள குண்டுத்தாக்குதலும் தன்மீது பழி சுமத்துவதற்காக அல்லது வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணுவதற்காக அவர்களுக்குள்ளாலேயே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’ என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பொலிஸாரின் விசாரணைகளையே இவர் மேற்கோள்காட்டியிருந்ததனால் இது தொடர்பான விளக்கத்தை காத்தான்குடி போலிஸாரிடம் நாம் கோரினோம். தமது விசாரணைகளில் அவ்வாறான எதுவும் தெரிய வரவில்லை எனவும் இன்னமும் தாம் விசாரணைகளை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதிலிருந்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து அப்பட்டமான மற்றுமொரு பொய் எனத் தெரிய வருகிறது.

மேலும், NFGG யினையும் அதன் உறுப்பினர்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களே இவை என்பது தெட்டத் தெளிவானதாகும். மேலும், இது NFGG யை பழிவாங்கும் நோக்கம் கொண்டவர்களால் அல்லது அவ்வாறானவர்களால் தூண்டப்பட்டவர்களினாலேயேமேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெளிவான ஒரு உண்மையாகும்.

இந்நிலையில் விஷமத்தனமான நோக்கத்தோடும் விசாரணைகளை திசை திருப்பும் வகையிலும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்தை NFGG வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இந்த வன்முறைகளோடு தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளை மறைத்து , அதனோடு NFGG ‘கோர்த்து’ விடுவதற்கான மறைமுகமான சில சதிகளை அவர் செய்ய தொடங்கியிருக்கிறாரா என்ற சந்தேகமும் தற்போது எழுகின்றது.

காத்தான்குடியை பொறுத்தளவில் தேர்தல் கால வன்முறைகளில் பெரும் பாலானவை ஹிஸ்புல்லாஹ்வை எதிர்த்து தேர்தல் கேட்பவர்கள் மீதே மேற்கொள்ளப்படடிருக்கின்றன என்பதே வரலாறாகும். மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் மீதான கொலை முயற்சி சம்பவங்கள், தீவைப்பு சம்பவங்கள், அவர்களின் வீடுகள் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் போன்ற பராதூரமான வன்முறைகளோடு ஹிஸ்புல்லாஹ் தரப்புக்கு தொடர்பிருந்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது

இந்த வரலாற்றுத் தொடரிலேயே NFGG யின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கப்பட்ட வேண்டிய ஒன்றாகும்.

இந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே தனது ஆதரவாளர்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருப்பது நம்பக்கூடியதாக இல்லை.

பொலிஸாரின் விசாரணைகளை மேற்கோள் காட்டி பொய்யான அறிக்கைகளை அவசர அவசரமாக வெளியிடுவதற்கு ஏன் அவர் முயற்சிக்கிறார் என்பது பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. மட்டுமின்றி தனது மனச்சாட்சியை உறுத்துகின்ற ஏதோ ஒரு உண்மை வெளிவந்து விடுமோ என அச்சம் கொண்டுள்ளதன் காரணமாகவே இவ்வாறு விசாரணைகளை திசை திருப்பும் அறிக்கைகளை அவர் வெளியிடுகிறாரா எனவும் சந்தேகிக்க வைக்கிறது.

எனவே, நீதியான விசாரணைகளை திசை திருப்பும் விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் NFGG கேட்டுக் கொள்கிறது. அத்தோடு, சட்டத்தையும் ஒழுங்கையும் எப்போதும் மதித்து நடக்கின்ற கட்சி என்கின்ற வகையில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”

Read more...

Monday, February 12, 2018

எதிர்வு கூறப்பட்ட அம்பாறை மாவட்ட அரசியல் களமும், தேர்தல் பெறுபேறுகள் கூறியுள்ள செய்திகளும்

“அம்பாறை மாவட்ட தேர்தல் களம் எவ்வாறு உள்ளது? சாய்ந்தமருது எழுட்சி மு.காங்கிரசுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமா” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை தேர்தலுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன்.

அதில் இந்தமுறை முஸ்லிம் காங்கிரசினை அழிக்க நினைத்தவர்களுக்கு அவர்கள் நினைத்ததுபோன்று நடைபெறாது என்றும், அதிகப்படியான வாக்குகளை மு.கா பெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எந்தவொரு கணிப்பினையும் ஓர் அண்ணளவாக குறிப்பிடலாமே தவிர, துல்லியமாக கூற முடியாது. ஓரிரு மணித்தியாலங்களில் மனிதர்களின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புக்கள் உள்ளதே அதற்கு காரணமாகும்.

இருந்தாலும் பெரும்பாலும் எதிர்வு கூறப்பட்டது போன்றே பெறுபேறுகள் அமைந்துள்ளது. அதாவது அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆட்சி அமைத்த சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பெற்றும் என்பதே அதுவாகும்.

அதுபோலவே கல்முனை மாநகரசபை மற்றும் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளிலும் மு.கா ஏனைய கட்சிகளைவிட அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொண்டது.

பழைய முறைபோன்று தேர்தல் நடைபெற்றிருந்தால் கூட்டு சேராமல் தனித்து ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால் இந்த புதிய முறை மு. காங்கிரசுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் அதிகப்படியான வாக்குகளை பெற்றிருந்தும் தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நிலைமை பல இடங்களில் காணப்படுகின்றது.

சம்மாந்துறையில் கடந்த பிரதேசசபை தேர்தலில் 10,078 வாக்குகளை பெற்ற மு.கா, இம்முறை 13,034 வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோன்று அக்கரைப்பற்று, இறக்காமம் ஆகிய சபைகளிலும் கடந்த தேர்தலையும் விட அதிகமான வாக்குகளை இம்முறை மு.கா பெற்றுள்ளது.

அத்துடன் மருதமுனையில் மு. காங்கிரசின் ஐந்தாம் வட்டார வேட்பாளரின் செயற்பாடு போதாமல் உள்ளது என்ற விடயம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த வட்டாரத்தில் மு.கா தோல்வியடைந்துள்ளது.

இம்முறை மு.கா யானை சின்னத்தில் போட்டியிட்டாலும், ஐ.தே கட்சி காரர்களின் ஆதரவு மு.கா இருக்கவில்லை. ஆனால் மறுபுறத்தில் மு. காங்கிரசை தோற்கடிக்க பெரும் பண பலத்துடனும், செல்வாக்குள்ளவர்களை கொண்டும் பல கூட்டணிகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தது.

சம்மாந்துறையில் ஐ.தேக அமைப்பாளர் ஹசனலி கடைசி நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் கட்சி மாறியதுடன், வீ.சீ. இஸ்மாயில், மு.பா. உறுப்பினர் நௌசாத், அமீர் டீ.ஏ ஆகிய பலம்பொருந்திய கூட்டணியையும், நிந்தவூரில் ஹசன் அலி, முன்னாள் .தவிசாளர் தாஹிர் போன்றோரயும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கல்முனை மாநகரில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான சுயட்சை குழுவினர்களின் பாரிய எதிர்ப்புக்கள் ஒருபுறம் சாய்ந்தமருதில் இருந்தபோது, மறுபுறத்தில் மு.மா. உறுப்பினர் ஜவாத், மு.மா.உறுப்பினர் ஜமீல், மு. மேயர் சிராஸ் மீராசாஹிபு ஆகியோரின் பாரிய பிரச்சாரங்களுக்கு மத்தியில் மு.காங்கிரஸ் கல்முனை மாநகரில் களம் இறங்கியது.

அதுபோன்றே அட்டளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் பல சவால்களை மு.கா எதிர்கொண்டதுடன், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பண மூட்டைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலைமையை இந்த தேர்தல் தோற்றுவித்தது.

இருந்தும் கடந்த 2௦11 இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு சுமார் எழுபதாயிரம் வாக்குகளை மு. கா பெற்றுக்கொண்டது. அந்த தேர்தலில் இன்று உள்ளதுபோன்று பாரிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை.

ஆனால் இந்த தேர்தலில் மேற்கூறப்பட்ட பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், முழு சாய்ந்தமருது ஊரையே இழந்த நிலையிலும், முஸ்லிம் காங்கிரஸ் கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இது ஒரு பாரிய வெற்றி என்று கூறுவதுடன் மு.காங்கிரசை அழிக்க முடியாது என்ற செய்தியையும் உரியவர்களுக்கு இந்த தேர்தல் கூறியுள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Read more...

Friday, February 9, 2018

காந்தி இறக்கவில்லை, கொல்லப்பட்டார்! விஷ்ணு வரதராஜன்

ஜனவரி 30ம் நாளை காந்தியின் நினைவு தினம் என்று சொல்லிக் கடந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காந்தி கொல்லப்பட்ட தினம் என்றே அதை நாம் வலியுறுத்தி சொல்லவேண்டும்.

வேறுபட்ட அடையாளங்களும் முக்கியத்துவங்களும் முன்னே துருத்திக்கொண்டு மோதல் களமாகி பிணக்காடு ஆகியிருக்க வேண்டிய ஒரு மிகப்பெரும் நிலப்பரப்பு இது. அதில் உயிர்பிழைத்தவர்களின் வாரிசுகள் காந்தியைக் கண்டடைவது மிகவும் முக்கியம். அவர்களிடம் நாம் காந்தி இறக்கவில்லை, சுடப்பட்டார், கொலை செய்யப்பட்டார் என்று மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. முக்கியமாக மதவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தலைதூக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில்.

அதென்ன எதற்கெடுத்தாலும் மதவாதம் என்கிறீர்கள், என்ற குரல்கள் இன்றும் உண்டு. மதவாதம் எங்கே இல்லை? என்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் என் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படுகிறார் என்பதற்காக எனக்கு நண்பராக இருக்கும் மாற்று மதத்தவரோடு என்னால் பகையுணர்ச்சியை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற நிலையை ஒரு இயக்கம் தன் மத அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஏற்படுத்துகிறது என்றால், அதன் பெயர் மதவாதம் இல்லாமல் வேறு என்ன? மதவாதம் இருக்கிறது என்று அதை ஒரு பிரச்னையாக முதலில் ஏற்றுக்கொண்டால்தால் அதற்கான தீர்வு குறித்து விவாதிக்க முடியும். மதவாதம் இருக்கிறது என்பதை உணர மறுப்பவர்களோடு மதவாதத்திற்கெதிரான தீர்வுகளை விவாதிக்க முடியாது. அதற்காக அவர்களை விவாதத் தளத்தில் நிராகரித்துவிட்டு அரசியல் பேசுவதென்பதும் ஒரு உள்ளடக்கிய அரசியலாக இருக்காது. அது காந்தியத்திற்கும் எதிரானது. இந்தியா அடிமைப்பட்டிருக்கிறது என்ற பிரச்னையை ஏற்க மறுத்த ஆங்கிலேயர்களிடம்தான் காந்தி உரையாடினார். பிரச்னை இருக்கிறது என்பதை மாற்றுத்தரப்பினரை அங்கீகரிக்க வைப்பதே தீர்விற்கான முதல்படி. அதன் விவாதங்களில் ஏன் என் தரப்பு நியாயமானது என்பது முன்னே நிற்கக்கூடாது. மாறாக உன் தரப்பு ஏன் நியாயமற்றது என்று புரிய வைக்க முயலவேண்டும். ஏன் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவிற்குத் தேவையில்லை என்ற திசையிலேயே காந்தியின் உரையாடல் சென்றது. இந்துத்துவ அணுகுமுறை இதில் வேறுபடுகிறது. ஏன் இந்து தேசம் அமைய வேண்டும் என்ற லட்சியவாத நோக்குடனே அதன் குறிப்புகள் செல்லுமே தவிர, மாற்றுத் தரப்பினரின் குரல்களுக்கு அது செவிமடுக்காது. அது தன்னை மட்டுமே பாதிக்கப்பட்ட தரப்பாகக் கருதிக்கொள்ளும். எதிர்கருத்துகளை எதிர்கொள்ள அச்சப்படும், அதனால் முடிந்தவரை அக்குரல்களை அமைதிப்படுத்தவே முயலும்.

அனைத்து கருத்தியல்களும் அவரவருக்கான ஏதோவொரு தேவையின் பொருட்டே எழுகின்றன, அது அறத்தின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் சரி. இன்று காந்தியைத் துணைக்கழைப்பது என்பது அவர் எழுத்துகளின் லட்சியவாதக் கூறுகளைப் பரப்புவது மட்டுமல்ல. இந்த சமூகம் இன்று மதவாத நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அதன் தீர்வாக காந்தியை முன்னிறுத்துவது என்பது மருந்தின் மகிமையைச் சொல்வது மட்டுமல்ல. அதோடு நிறுத்திவிட்டால் நோய் நீங்கியதும் மருந்து மறக்கப்பட்டுவிடும். மாறாக, காந்தியைத் துணைக்கழைப்பது என்பது, காந்தியத்தின் எதிர்ப்புறத்தில் இருக்கும் மதவாதத்தின் ஆபத்துகளை உணர்த்துவதும்தான். அகிம்சையை போதிப்பது மட்டும் காந்தியம் அல்ல, இப்புறத்திலிருந்து மதவாதத்தையும் அதன் வன்முறையையும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருப்பதும்தான்.

ஏன் காந்தி கொல்லப்பட்டார்? காந்தியின் இந்தியாவிற்கும் இந்து தேசத்திற்கும் இடையேயான ஒரு முக்கியமான வேறுபாடு, இந்து தேசியம் அடிப்படையிலேயே ஒரு இறுக்கமான லட்சியவாதம். ஐரோப்பிய தேசியவாதங்களிலிருந்து நேரடியாக ஈர்க்கப்பட்டு மதம் சார்ந்த தேசியத்தை அது முன்வைத்தது. ஐரோப்பிய தேசங்கள் போன்று ஒற்றை அடையாளத்தை இந்தியாவிற்கு எளிதாக ஏற்படுத்த முடியாது. விளைவு, தத்துவத்தின் இறுக்கத்தினால் ‘மத எதிரிகள்’ உருவாக்கப்பட்டார்கள். இந்த மத எதிரிகளால் இந்து மதம் ‘திட்டமிட்டு அழிக்கப்பட்டது’ என்ற வரலாற்றுப் புனைவு கட்டப்பட்டது. இந்திய நிலப்பரப்பில் நூற்றாண்டு காலமாக ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை ஒரு பரிணாமமாக இந்துத்துவம் பார்க்க மறுத்தது. மாறாக, பண்டைய நூற்றாண்டுகளை ஒற்றைப் பண்பாட்டுத் தொடர்ச்சியாகக் கட்டமைத்து, அதில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை இந்து தர்மத்தின் அப்போதைய உச்சமாக வரையறுத்து, அதன் பிறகு நடந்தவைகளைப் பண்பாட்டு சீரழிவாக முன்மொழிந்தது. அந்த நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைத்தது.

எந்த ஒரு தேசியத்திற்கும் வரலாற்று அங்கீகாரம் வேண்டுமே? இந்து தேசியம் சிவாஜிக்கும் அவுரங்கசீப்பிற்கும் இடையே நிகழ்ந்த அதிகார மோதலை மதச்சண்டையாக மாற்றியது. அக்பருக்கும் ராணா பிரதாப்புக்கும் இடையே நடந்த சண்டையில் ராணா பிரதாப்பைத் ‘தியாகி’ ஆக்கியது. அனைத்து மன்னர்களுக்கும் எதேச்சதிகாரம் என்பது பொதுப்பண்பு. அதில் திப்பு சுல்தானும் விதிவிலக்கல்ல, ஆனால் அவர் இந்துக்களைத் திட்டமிட்டுக் கொன்றார் என்ற பிம்பத்தை இந்துத்துவம் ஏற்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய நிலப்பரப்பின் வரலாற்றை இந்து மதம் எதிர்கொண்ட சவால்கள் என்று ஒற்றைப்படையாக சுருக்கியது.

காந்தியின் இந்தியம் அடிப்படையில் லட்சியவாதமல்ல. காந்தியின் உள்ளடக்கிய தேசியவாதம் ஏதோ இந்திய தத்துவ ஞான மரபில் ஊறியவருக்குத்தான் தோன்றும் என்றும், உலகில் வேறெங்குமே அது சாத்தியமல்ல என்றுமெல்லாம் இல்லை. ஒரு தேசம் எவ்வாறு உருவாகும் என்று காந்தி சிந்தித்தார். ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், இவற்றை வைத்து என்ன நாட்டை உருவாக்குவது? மொழி சார்ந்தும் மதம் சார்ந்தும் இங்கு தேசியவாதம் கட்டமைக்கப்பட்டால் அது நிச்சயமாக ஏதேனும் ஒரு சாராரை விலக்கிய தேசியவாதமாகவே அமையும். இங்குள்ள அனைவருக்கும் இங்கு வாழ சம உரிமை உள்ளது, ஒரு சாராரை விட மற்றொருவர் எந்த விதத்திலும் உரிமைக்குப் பாத்தியதையற்று இருக்க முடியாது என்று காந்தி புரிந்துவைத்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றாக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தனர், எனவே சுதந்திர இந்தியா அனைவருக்குமானது என்ற முடிவுக்கு வந்தார். இல்லாத இந்தியா எதையும் காந்தி உருவாக்கவில்லை. இந்த நிலப்பரப்பு என்றுமே கலவையான பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது, எனவே அதில் வசிக்கும் அனைத்து பண்பாட்டினருக்கும் அது உரிமையானது என்று நிலம் சார்ந்த, நெகிழ்வுத்தன்மையுள்ள தேசியவாதத்தை அவர் முன்வைத்தார், அவ்வளவே.

ஆனால் காந்தியின் இந்த உள்ளடக்கிய தேசியம் இரண்டு முக்கிய கட்டங்களில் ஒரு உயரிய லட்சியமாக மாறுகிறது. ஒன்று நமக்கான பொறுப்பு, மற்றொன்று இந்த உலகத்திற்கான செய்தி. பிரிவினை காலத்தில் பாகிஸ்தானில் இந்துக்கள் விரட்டப்பட்டபோது இங்கு இஸ்லாமியரை விரட்டவேண்டும் என்று குரல்கள் வலுத்தன. இந்தியா ஒரு இந்து பாகிஸ்தானாக மாறக்கூடாது என்று காந்தியும் நேருவும் உறுதியாக நின்றனர். நவகாளியிலும் தில்லியிலும் காந்தி ஒற்றை ஆளாக மனிதம் போதித்து, அடையாளங்களைக் கடந்த அரவணைப்பே இந்தியா என்ற கருத்தை ஒரு உயரிய பண்பாக மக்களிடம் முன்வைத்தார். ‘இங்கு அனைவரும் வாழ்கிறார்கள், எனவே இந்நாடு அனைவருக்கும் சொந்தம்’ என்று காந்தி யதார்த்தத்துடன் முன்வைத்த தேசியம், இவ்வாறு பிரிவினை காலத்தில் மனிதத்தை வலியுறுத்தும் லட்சியமாக மாறியது. காந்தியின் மரணத்தால் மனசாட்சிகள் உலுக்கப்பட்டு, பன்முகத்தன்மையும் சிறுபான்மை நலனும் பெரும்பான்மையின் அடிப்படைப் பொறுப்பானது.

இரண்டாவது முக்கியக் கட்டம், இரண்டாம் உலகப்போர். ஃபிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக அரசியல்மயமான தேசியவாதம், சிறிது சிறிதாக ஐரோப்பா முழுவதும் பரவியது. மன்னரின் குடிகள் என்பதிலிருந்து விடுபட்டு, பொது அடையாளங்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். அது மொழி சார்ந்தும், மதம் சார்ந்தும், இனம் சார்ந்தும் நாட்டுக்கு நாடு கட்டமைக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எல்லைக்கோடுகளின் அரசியலாக வந்து நின்றது. தேசியவாதம் மக்களை ஒருபுறம் ஒன்றிணைத்தது என்றால் மறுபுறம் அது சக மக்கள் மீது வெறுப்புணர்வையும் கொள்ளச் செய்தது. போட்டிகள் சூழ் உலகில் அந்தக் கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோட்டைப் புனிதப்படுத்தி ‘தன்னுடைய நாட்டுக்காக’ சக மனிதனைக் கொல்வது நடந்தது. இரண்டாம் உலகப்போர் மனித நாகரிகத்தின் இருண்ட அத்தியாயம். இந்த உலகத்திற்கு விடிவே கிடையாதா, அமைதியே வராதா, ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழவே முடியாதா என்று கேள்விகள் அலைக்கழிக்க, மொத்த உலகமும் விக்கித்துப்போய் நின்ற காலகட்டம் அது. அப்பொழுது அகிம்சை வழியில் அனைவரையும் உள்ளடக்கி அடைந்த இந்திய சுதந்திரம் மானுடவியலாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது என்கிறார் வரலாற்றாசிரியர் மனு பகவான். உலகம் புத்தருக்கும் இயேசுவுக்கும் அடுத்தபடியாக காந்தியை வைப்பது அதனால்தான்.

மனித நாகரிகம் சண்டைச் சுழலில் சிக்கி அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்து நிற்கும்போது, இதோ ஒரு வழி இருக்கிறது என்று கைப்பிடித்து காந்தி அழைத்துச் செல்ல முற்பட்ட அந்த கணம் இருக்கிறதே, அந்தக் கணத்தில் இந்திய தேசியம் ஒரு உயர்ந்த லட்சியமாக மாறியது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா சுக்குநூறாக நொறுங்கிவிடும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். அத்தனை பேரின் கணிப்புகளையும் பொய்யாக்கி இன்றுவரை உடையாமல், பன்முகத்தன்மையைப் பெரும்பாலும் அனுமதிக்கும் தேசமாகவே இந்தியா உயிர்த்திருக்கிறது. ஒன்றுபட்ட உலகின் மாதிரி வடிவமாக இன்று இருக்கும் இந்தியா, ஒரு மகத்தான மானுடவியல் பரிசோதனை. வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை ஏற்படுத்த முனைந்த தேசங்களுக்கு மத்தியில், இந்தியா வேற்றுமைகளை அங்கீகரித்தது. ஒருமித்த கருத்தில் எதிர்காலம் தேடிய தேசங்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை இந்தியா தொடராமல், வேறுபட்ட கருத்துகள் இணையும் புள்ளிகளில் தன் எதிர்காலத்தைத் தேடியது. புண்ணிய பூமிக்காகப் போரிடாமல், புண்ணிய மனிதர்களை உருவாக்க முனையும் பெருந்தவத்தை காந்தி சுமந்து சாதித்தார். வெவ்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள், உடைகள், உணவுகள், அடையாளங்கள், இவையனைத்தும் ஒரு இடத்தில் ஒன்றாக இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டுவது எளிதான காரியமல்ல. ஆனால் அதன் செய்தி, பல்வேறு அடையாளங்களைக் கொண்ட 120 கோடி மக்கள் ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணையும்போது, உலக மக்களாலும் ஒருவரோடு ஒருவர் போரிடாமல் ஒற்றுமையாக வாழ முடியும், என்பதே.

ஒரு புதிய நாட்டின் உருவாக்கத்தில் இருப்பதிலேயே வன்முறை குறைவாக நிகழ்ந்து உருவான நாடு இந்தியா. பிரிவினையில் இறந்து போன பஞ்சாபி மற்றும் வங்காளக் குடும்பங்களின் முகத்தைப் பார்த்து மனிதாபிமானம் இல்லாமல் சொல்வதற்காக அல்ல இந்தக் கருத்து. மாறாக மானுட வரலாற்றின் கோரங்களை நாம் மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்திக்கொண்டு, சகோதரத்துவத்தின் மீது இந்தியாவின் உருவாக்கம் எத்தகைய நம்பிக்கையை விதைக்க முயல்கிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதற்காகவே இது.

இவையாவும் இந்து தேசியத்திற்கு முரணானவை. காந்தி தொடர்ந்து தன் அற விழுமியங்களை சுயபரிசோதனை செய்துகொண்டே இருந்தார். அமைப்பிற்குள் இருந்துகொண்டே சாதி குறித்து சங்கடமான கேள்விகளை எழுப்பினார். சிறுபான்மையினரின் பக்கம் நின்றார். விளைவு, காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஏனோ தெரியவில்லை, தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்கக் கொலை செய்பவர்கள் நல்ல பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள். கோட்சேவும் அப்படித்தான்.

இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜெர்மனி தோற்றபோது கார்ல் பாப்பர் என்னும் தத்துவ அறிஞர் ‘சகிப்புத்தன்மையின் முரண்பாடு’ என்றொரு கருத்தை முன்வைத்தார். அதாவது, சகிப்பின்மையோடு இருப்பவர்களிடம் சகிப்புத்தன்மையோடு இருக்கக்கூடாது என்றார். சகிப்பின்மையை சகித்துக்கொண்டால் அது சகிப்புத்தன்மையை அழித்துவிடும். எனவே சகிப்புத்தன்மைக்குக் குரல் கொடுப்போர் சகிப்பின்மையை சகித்துக்கொள்ளக்கூடாது என்றார். இந்திய சமூகம் அத்தகையதொரு கட்டத்தை இன்று அடைந்திருக்கிறது. வளர்ந்துவரும் மதவாதத்திற்கு எதிராக நாம் காந்தியை வலுவாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கோட்சேக்கள் மிக எளிதாக உருவாகிவிடுவார்கள். காந்தியின் கொலை நமது மனசாட்சியைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கவேண்டும். அதை இயல்பானது என்று கடந்து போகும் கணத்தில் காந்தியம் தோற்றுப்போகும். கோட்சேக்களிடம் தோற்பதில் காந்திக்கு சிக்கலே இல்ல. நாம் அவரைக் கைவிடுவதைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.

ஜனவரி 30 நாள் Tamil.Thehindu வில் பிரசுரமாகியது

Read more...

Sunday, February 4, 2018

அதிபர் ட்ரம்ப்- எப்பிஐ மோதல் முற்றுகிறது.

அமெரிக்க புலனாய்வு போலீஸ் பிரிவான எப்பிஐ அமைப்புக்கு எதிராக அந்த நாட்டு அரசு தரப்பில் குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப், எப்பிஐ அமைப்பு இடையிலான மோதல் முற்றியுள்ளது.

கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்பை வெற்றி பெறச் செய்ய ரஷ்ய உளவு நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து எப்பிஐ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பிறகும் இவ் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்த விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய அரசு தரப்பு தீவிர முயற்சி செய்வதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாணை வெளியீடு

அமெரிக்க உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டி கண்காணித்து வருகிறது. இதன் தலைவராக ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டெவின் நூன்ஸ் உள்ளார். எப்பிஐ போலீஸாருக்கு எதிராக நேற்றுமுன்தினம் அவர் குறிப்பாணையை (மெமோ) வெளியிட்டார்.

அதில், “டொனால்டு ட்ரம்பின் பிரச்சார குழுத் தலைவர் கார்ட்டர் பேஜை எப்பிஐ உளவு பார்த்தது. அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. இதற்காக ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தை ‘எப்ஐஎஸ்ஏ’ நடைமுறை பறிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணை மூலம் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசன்டைன், ரஷ்ய தலையீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் எப்பிஐ முன்னாள் இயக்குநரும் சிறப்பு அதிகாரியுமான ராபர்ட் முல்லர் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறிப்பாணை வெளியிட்டதற்கு எப்பிஐ மற்றும் நீதித்துறை வட்டாரங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. எப்பிஐ போலீஸாரின் நம்பகத்தன்மையை அரசு கேலிக்கூத்தாக்கி இருப்பது வேதனையளிக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டியில் உறுப்பினராக உள்ள ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஆடம் கூறியிருப்பதாவது: எப்பிஐ விசாரணை விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை.

அந்த மரபை மீறி அரசு செயல்படுகிறது. குறிப்பாணையை வெளியிட்டு எப்பிஐ அமைப்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. மக்களை குழப்ப அரசு முயற்சி செய்கிறது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பான விசாரணையை முடக்க சதி செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

Read more...

இன, மத, பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டுமாம்!!

இன, மத, பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன மோதல்கள் அற்றவகையிலும் மக்கள் வாழக் கூடிய வகையிலும் நாம் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 70ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவத்தில் நாட்டுமக்களுக்காக கொழும்பு காலிமுகத்திடலில் இன்று ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் ,

இன, மத, பேதமற்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் சமதானம் சகவாழ்வை மக்களுக்கு உறுதி செய்வதுடன் மத நல்லிணக்கத்தையும் நம்பகத்தன்மையுடன் வாழும் சூழ்நிலை உறுதிசெய்யப்படவேண்டும் இவை அத்தியாவசியமானது என்று நாம் கருதவேண்டும். இதனை கருத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள புத்திஜீவிகள் கல்விமான்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் செயற்படவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் நான் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

எல்.ரீ.ரீ பயங்கரவாதத்தின் காரணமாக 30 வருட காலத்திற்கு பல்வேறு துன்பங்களுக்கு மக்கள் உள்ளானார்கள் . இதன்காரணமாக நாட்டின் முன்னேற்றத்திலே ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

எல். ரீ. ரீ. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து படைவீரர்கள் பொலிசார் மற்றும் சிவில் இராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்கள் யுத்தத்தின்போது பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பலர் கைகால்களை இழந்து ஊனமுற்ற நிலையில் குடும்ப வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர். இன்றைய 70ஆவது ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் நாளில் இவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவர்களது குடும்பங்களின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும்குறிப்பிட்டார்.

எமது நாட்டின் அபிமானத்தை எமது நாட்டின் பெருமையை எமது கடந்தகால அனுபவங்களை பாடமாக வைத்து நாங்கள் செயற்படவேண்டும். படித்தவர்கள் புத்திஜீவிகள் முக்கியமாக தமது பங்களிப்பை இதற்காக வழங்க வேண்டும் . இன்று எங்களுக்கு இருக்க கூடிய முக்கியமான சவால் என்ன? நாம் செய்யவேண்டியது என்ன ? எதிர்காலத்தில் நன்மைக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். அதுதான் முக்கியமான சவாலாக இருக்கின்றது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ரீதியிலே எதிர்நோக்குகின்ற எல்லா பிரச்சனைகளுக்கும் நாங்கள் சிறப்பாக முகங்கொடுக்கவேண்டும். ஏழ்மை எங்களுக்கு இருக்க கூடிய பெரிய சவாலாக இருக்கின்றது. அந்த ஏழ்மையை , வறுமையை போக்க கடந்த காலத்தில் பணியாற்றிய போதிலும் நாம் நம் கடமைகளை இன்னும் இன்னும் சரியாக செயற்படுத்தவேண்டும். ஏழ்மை வறுமை இவற்றிலிருந்து நாம் விடுதலைபெறவேண்டும் .அதேபோன்று இங்கே இருக்க கூடிய நமது நாட்டு மக்கள் தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.

சில செயற்பாடுகள் எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேசிய ரீதியான முக்கிய பிரச்சனைகளை அறிந்து தெரிந்து நாம் சரியாக செயலாற்ற வேண்டும். எங்களுடைய கல்வித்துறையில் இருக்கக்கூடிய கல்விமான்கள் புத்திஜீவிகளை இன்னும் இன்னும் அதிகரிக்கவேண்டும்.எமது கல்விமுறையிலே இன்னும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். தொழில்நுட்பம் , இயற்கை வளங்கள் இவை எல்லாம் மேம்படுத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டிலே ஒரு அபிவிருத்தியை நாம் இன்னும் காணக்கூடியதாக இருக்கும்.

எமது நாட்டின் பல நிதிப்பிரமாணங்கள் பழைய நிதி தொடர்பான விதிகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். காலத்திற்கேற்ற வகையில் இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். ஒழுக்க விதிமறைகளுக்கு முக்கியத்துவமளித்து நாம் செயற்படவேண்டும். தூய்மையான அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். அபிவிருத்தி வேலைகள் சிறப்பாக செய்யப்படவேண்டும். அபிவிருத்திக்கு அரசியல்வாதிகள் மக்களோடு இணைந்து நேர்மையாக செயற்படவேண்டும். அர்ப்பணிப்பு நம்பிக்கை இவைதான் காலத்தின் தேவை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com