Saturday, February 24, 2018

நம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 4) வ.அழகலிங்கம்.

ஒரு நாட்டில் அரசன் இல்லாவிட்டால் — அதாவது அராஜகம் — ஏற்பட்டால் என்ன நடக்கும்?

வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஸர்கம் 67ல் இது பற்றிக் கூறப்படுவதாவது:

1.தேவையான அளவு மழை பெய்யாது

2.கைப்பிடி விதை கூட கிடைக்காது

3.தந்தை சொல்லை மகன் கேட்கமாட்டான்

4.கணவன் சொற்படி மனைவி நடக்கமாட்டாள்

5.நியாய சபைகள், பூந்தோட்டங்கள், சத்திரங்களை மக்கள் கட்டமாட்டார்கள்

6.பிராமணர்களுக்கு பெரிய வேள்விகளில் கிடைக்கும் தட்சிணைகள் கிடைக்காது.

7.விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கமாட்டார்கள்.
8.யானைகள் மணிகளுடனும், தந்தங்களுடனும் சாலைகளில் போகாது.

9.அம்புப் பயிற்சியால் எழும் சப்தம் எங்கும் கேட்காது

10.மக்கள் விரதங்களைப் பின்பற்றார். கடவுளுக்குப் படைப்பதற்கு மோதகம், மாலைகள் செய்யப்பட மாட்டா.

11.அரச குமாரர்கள் சந்தனம், அகிலுடன் பூசித் திரியமாட்டார்கள்.

12.சாஸ்திரப் பயிற்சி உடையார் வனங்களிலும் உப வனங்களிலும் அமர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
நீரில்லாத நதிகள் போல புல்லற்ற காடுபோல இடையரற்ற பசுக்கள் போல அரசனற்ற ராஜ்யம் இருக்கும்

தேர் இருப்பதைக் காட்டுவது அதன் கொடி.
தீ இருப்பதைக் காட்டுவது அதன் புகை.
தெய்வத் தன்மை இருப்பதைக் காட்டுவது அரசர்.


அப்பேற்பட்ட அரசர் (தசரதர்) தெய்வத் தன்மை அடைந்து விட்டார்.
அரசனற்ற ராஜ்யத்தில் யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை. பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவது போல ஒருவர் ஒருவரை அழிப்பார்கள்.

நாஸ்தீகர்கள், தர்ம விதிகளை மீறுவோர், தண்டனைக்குப் பயந்து சும்மா இருந்தவர்கள் எல்லோரும் துணிந்து நடப்பார்கள். நாஸ்தீகர் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்தத் துணிவார்கள்.

அரசன்தான் தாயும் தந்தையும்.
அரசந்தான் தர்மமும் சத்தியமும்.
அவனே நற்குடிப் பிறந்தோருக்குத் தலைவன.;
அரசன் இல்லாத நாடு இருளில் மூழ்கும்.

எவ்வாறு கடல் அதன் எல்லையைத் தாண்டாதோ அவ்வாறே நாங்கள் உங்கள் உத்தரவை சிரமேற் கொண்டு நடந்தோம். பிராமண உத்தமரே ! உடனே இட்சுவாகு குலத்தவன் ஒருவனை அரசனாக நியமியுங்கள் என்கிறது வால்மீகி ராமாயணம்.

அரசனே தந்தை என்று புற நானூறும் கூறும். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்றும் சங்க இலக்கியம் செப்பும்.

சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கும் உவமையை மஹாபாரதமும், கௌடில்யரின் — சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் கூறுகிறது

வால்மீகி சொன்னதை அப்படியே திருவள்ளுவரும் சொல்வதைக் கேளுங்கள்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்
— குறள் 388

பொருள்: –நல்ல ஆட்சி நடத்தும் மன்னன் கடவுள் போன்றவன்

அரசன் முறை செய்யாவிடில்

பசு பால் தராது. பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவார்கள்:
உலகம் மழையை நம்பி இருப்பது போல மக்கள் மன்னன் பாதுகாப்பை நம்பி வாழ்வர்.
பிராமணர்கள் ஒழுங்காக வேதம் ஓதுவதற்கு மன்னன் ஆட்சியே காரணம்.
கொலைகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்க அரசன் வேண்டும்.

வள்ளுவர் தனது குறளில் அராஜகம் என்ற சொல்லைக் கூறாமல் அரசன் இருந்தால் என்ன என்ன கிடைக்கும் என்று சொல்கிறார்.

'மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம்|| – என்கிறது புற நானூறு 55- 9

'குடி புறம் காத்து ஓம்பும் செங்கோலான் – என்கிறது கலித்தொகை 130-19

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
மணிமேகலை.
'நீணிலம் ஆளும்

அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ, பிறபுரை தீர்த்தற்கு!
'அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள், மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்
||எனக் (மணி 24-225-230)

நெடிதான நிலத்தினை ஆளும் பொறுப்புடைய அரசர் தாமே அருள் அற வொழுக்கத்தினை மேற்கொண்டால், உலகின் பிற குறைபாடுகள் போவதற்கு ஏற்றன செய்யுமோர் வேறு பொருளும் உளதாமோ. அறம் என்று சொல்லப்படுவது தான் யாதோவெனக் கேட்பாயாயின், மறந்துவிடாமல் யான் சொல்லும் இதனைக் கேட்பாயாக:

செறிந்துள்ள உயிரினங்கட்கு எல்லாம் உணவும் உடையும் தங்கும் இடங்களும் அளிப்பதன்றி, வேறு அறமென எதனையும் ஆன்றோர்கள் கண்டதில்லை!,, என்றனள். மணிமேகலைக் காப்பியம் படைத்த புலவர் வழியில், பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று ஒளவையார் கூறுகிறாரே!

'மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப் பத்தும் பறந்து போம்
.

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்; மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி
(மணி 11-76)

Food, Shelter and clothing are three essential things for Economy..

உணவு, உடை, உறைவிடம் என்று இன்று பொருளியல் அறிஞர்கள் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார் சாத்தனார்.

தேசங்களின் செல்வம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில் ஆடம் ஸ்மித் 1776 இல் முதல் முதலில் எழுதினார். தேசங்களின் செல்வத்தின் இயற்கை மற்றும் செயற்கையான உற்பத்திக் காரணங்கள் பற்றிய ஒரு விசாரணை, பொதுவாக அதன் சுருக்கப்பட்ட தலைப்பு தேசங்களின் செல்வம் என்பதாகும். இந்தப் புத்தகம் உலகின் முதன்முதலாகச் சேகரிக்கப்பட்ட எது ஒரு தேசத்தின் செல்வத்தை வழங்குகிறது என்பதற்கான விளக்கங்களைக் கொடுத்துள்ளது. இன்று இது பாரம்பரிய பொருளாதாரத்தில் அடிப்படையை விளக்குகிறது. இதுவே இன்றய பொருளியலின் அத்திவாரமாக அமைந்துள்ளது. இதை றிக்காடோ மல்த்தூஸ் கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் போன்றோர் பின்பற்றித் தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை வகுத்தார்கள். இது பொருளாதாரம் பற்றிய நவீன பட்டப் படிப்புக்கு முன்னோடியாக இருக்கிறது.

ஞானமும் கல்வியும் நாழி அரிசியின் பின். என்பது பழமொழி
ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

கைம்மாறு செய்யும் சக்தி உடையவர்களுக்குப் பிரதிஉபகாரமாக ஒரு பொருளைக் கொடுப்பவர் அறத்தின விலைகூறி விற்பவராவார். கைம்மாறு செய்வதற்கும் வக்கில்லாத ஏழைகளின் பெரும் பசியினைப் போக்குபவரே உண்மையாக அறம் செய்பவர்கள். மெய்ந்நெறியோடு கூடிய வாழ்க்கை என்பதும் கொடுத்து மகிழும் அத்தகையோரின் வாழ்க்கையேயாகும். அணுசெறிந்த இந்த உலகத்திலே வாழ்பவர்களுக்கு எல்லாம் உணவு கொடுத்தவர் எவரோ, அவரே உயிர் கொடுத்தவரும் ஆவார்.

இவைகள்தான் தமிழின் ஜனநாயகக் கருத்துக்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு நறுக்காக்காக்கப்பட்ட மனித சிந்தனையின் மாண்புகளை நம்முன்னோர்கள் கூறியுள்ளார்கள். பல நவீன ஜனநாயகக் கொள்கைகளைப் போதித்தார்கள். இது நவீன காலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய அர்த்தமுள்ள பயன்பாட்டை வழங்குகிறது.

ஜனநாயகம் பற்றி நம் முன்னோர்கள் ஒரு பாரபட்சமற்ற, தர்க்கரீதியான பகுப்பாய்வை வழங்குகினார்கள். அவர்கள் ஜனநாயகம் பற்றிய ஒரு மேம்பட்ட மற்றும் துல்லியமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர்களது காலத்தய முடியாட்சியில் பல்வேறு ஜனநாயகக் கோட்பாடுகள் நடைமுறையில் இருந்ததைக் காட்டியுள்ளார் திருவள்ளுவர். இப்படியான கோட்பாடுகளைக் குறிப்பிட்டதோடு நில்லாமல் அந்த ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், அரசின் உயர்ந்த, ஆளும் அதிகாரத்தின் முன்னிலையில் தமது சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்த முழு சுதந்திரத்தையும் பெற்றிருந்தனர். பொறுப்பும் கடமையுணர்வும் உள்ள அரசன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டும். சகிப்புத் தன்மையும், திறந்த மனப்பான்மையும், அரசியலமைப்பின் பகுதியாக ஆரோக்கியமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் ஜனநாயக அரசாங்கத்தின் அடிப்படையாகும்.

'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
.--(389)

தன்னோடு துணையாக இருப்போர் செவியாற் பொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைப் பேசினாலும் ஆட்சியின் நன்மையைக் கருத்தாகக் கொண்டு அதைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும். அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக இருந்தபோதும் அவர்கள் மக்களைப் பிரநிதித்துவப் படுத்தும் உண்மையான அரசஅலுவலர் ஆதலால் யதார்த்த நடைமுறையில் செயல்படுவது அவர்களது கடமையாகும் என்பதால் அரசின் மிகுந்த துல்லியத்தில் அரசாங்கத்தின் குறுகிய செயற்பாட்டையும் கூடாத கூட்டினையும் பற்றாக்குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் அளவிற்கு செல்ல வேண்டும். கடுமையான, ஆக்கபூர்வமான விமர்சனத்தைச் சொல்வதற்கான முழு சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு. இப்படியான மந்திரிகளின் அமைச்சரவை அல்லது ஆலோசகர்களின் குழு இல்லாத ஒரு அரசர் காலப்போக்கில் தன்னைத்தானே அழிப்பார்.

'இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்
.-(447)

தீயன கண்டால் இடித்துச் சொல்லும் துணையுள்ளவர்களைக் கொண்டிருந்தால் அந்த அரசைக் கெடுக்கக் கூடிய பகைவர்கள் யார்?

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
-(448)

தக்க நேரத்தில் இடித்துப் புத்தி சொல்லுபவர்களைத் துணையாகக் கொள்ளாத பாதுகாவலற்ற அரசு பகையாய்க் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானே கெட்டுவிடும்.

ஈழ வேந்தன் ஏன் அழிந்தான் என்று சொல்ல வந்த கம்பன் வீடுகொளுத்திற இராசாவுக்கு நெருப்பெடுக்கிற மந்திரிகளால் அழிந்தான் என்கிறான்.

'கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் கவிக்கின்றோயை
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்றபோது முடிவு அன்றி முடிவது உண்டோ?


'கண்டாரைக் கடித்துக் கொல்லும் பாம்பும் மந்திரம் கேட்டு அடங்கி நடக்கும். செருக்குற்று நிற்கின்ற உன்னை, ஷஇது தக்கது, இது தகாதது| என்று இடித்துச் சொல்லித் திருத்துபவர் உன் அமைச்சர் அவையில் ஒருவரும் இல்லை. உன்னைக் கெடுப்பவரே உன் அமைச்சர் அவையில் அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். இவ்வாறு இருக்கும்போது, நீ அழிவதைத் தவிர வேறு வழி உனக்கு உண்டோ? இல்லை!

-சுந்தர காண்டம், நிந்தனைப் படலம்-(464)

கடிந்து பேசிய சீதை நயமொழிகளாலும் அறநெறி கூறல்.-

எனவே, எதிர்க்கட்சியின் அத்தியாவசியத்தின் கரு திருக்குறளிலிம் கம்பராமயணத்திலும்; காணப்படுகிறது என்பது தெளிவானது.

இன்றய தமிழர் உலகில் ஒரு தலைவனை உருவாகத் தமிழ்சமுதாயம் விடுவதில்லை. பந்தம் பிடிப்பதும் லஞ்சம் கொடுப்பதும் தலைவனைப் புழுகு புழுகொன்று புழுகிக் கெடுத்துவிடுவார்கள். இது இன்றய தமிழ் உலகத்தின் கலாச்சாரமாகப் படிமமாகி விட்டது. ஒரு மனிதனின் இயற்கையான வளர்ச்சி புகழ்ச்சியாலும் தடைப் பட்டு விடும்.

இகழ்ச்சியாலும் தடைப்பட்டு விடும் என்பதை அறிய வேண்டும். ஆனால் அதீத புகழ்ச்சி அவனைக் கொல்வதாகிவிடும். ஸ்டாலினோடு இருப்பவர்கள் ஸ்டாலினக்கு ஆமாம்போட்டு ஸ்டாலினையே கெடுக்கிறார்கள் என்று லியொன் ரொக்ஸ்சி சோவியத் யூனியனின் மத்திய குழுவில் பேசியது பதிவாகி உள்ளது. தமிழ் மக்களுக்குள் ஒரு மூலதர்மமுள்ள தலைமை தோன்ற இந்த ஆமாம் சாமிக் கூட்டம் இன்றுவரை விடவில்லை என்பதுதான் நவீன தமிழர் வரலாறு.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com