Monday, February 12, 2018

எதிர்வு கூறப்பட்ட அம்பாறை மாவட்ட அரசியல் களமும், தேர்தல் பெறுபேறுகள் கூறியுள்ள செய்திகளும்

“அம்பாறை மாவட்ட தேர்தல் களம் எவ்வாறு உள்ளது? சாய்ந்தமருது எழுட்சி மு.காங்கிரசுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமா” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை தேர்தலுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன்.

அதில் இந்தமுறை முஸ்லிம் காங்கிரசினை அழிக்க நினைத்தவர்களுக்கு அவர்கள் நினைத்ததுபோன்று நடைபெறாது என்றும், அதிகப்படியான வாக்குகளை மு.கா பெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எந்தவொரு கணிப்பினையும் ஓர் அண்ணளவாக குறிப்பிடலாமே தவிர, துல்லியமாக கூற முடியாது. ஓரிரு மணித்தியாலங்களில் மனிதர்களின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புக்கள் உள்ளதே அதற்கு காரணமாகும்.

இருந்தாலும் பெரும்பாலும் எதிர்வு கூறப்பட்டது போன்றே பெறுபேறுகள் அமைந்துள்ளது. அதாவது அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆட்சி அமைத்த சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பெற்றும் என்பதே அதுவாகும்.

அதுபோலவே கல்முனை மாநகரசபை மற்றும் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளிலும் மு.கா ஏனைய கட்சிகளைவிட அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொண்டது.

பழைய முறைபோன்று தேர்தல் நடைபெற்றிருந்தால் கூட்டு சேராமல் தனித்து ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால் இந்த புதிய முறை மு. காங்கிரசுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் அதிகப்படியான வாக்குகளை பெற்றிருந்தும் தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நிலைமை பல இடங்களில் காணப்படுகின்றது.

சம்மாந்துறையில் கடந்த பிரதேசசபை தேர்தலில் 10,078 வாக்குகளை பெற்ற மு.கா, இம்முறை 13,034 வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோன்று அக்கரைப்பற்று, இறக்காமம் ஆகிய சபைகளிலும் கடந்த தேர்தலையும் விட அதிகமான வாக்குகளை இம்முறை மு.கா பெற்றுள்ளது.

அத்துடன் மருதமுனையில் மு. காங்கிரசின் ஐந்தாம் வட்டார வேட்பாளரின் செயற்பாடு போதாமல் உள்ளது என்ற விடயம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த வட்டாரத்தில் மு.கா தோல்வியடைந்துள்ளது.

இம்முறை மு.கா யானை சின்னத்தில் போட்டியிட்டாலும், ஐ.தே கட்சி காரர்களின் ஆதரவு மு.கா இருக்கவில்லை. ஆனால் மறுபுறத்தில் மு. காங்கிரசை தோற்கடிக்க பெரும் பண பலத்துடனும், செல்வாக்குள்ளவர்களை கொண்டும் பல கூட்டணிகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தது.

சம்மாந்துறையில் ஐ.தேக அமைப்பாளர் ஹசனலி கடைசி நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் கட்சி மாறியதுடன், வீ.சீ. இஸ்மாயில், மு.பா. உறுப்பினர் நௌசாத், அமீர் டீ.ஏ ஆகிய பலம்பொருந்திய கூட்டணியையும், நிந்தவூரில் ஹசன் அலி, முன்னாள் .தவிசாளர் தாஹிர் போன்றோரயும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கல்முனை மாநகரில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான சுயட்சை குழுவினர்களின் பாரிய எதிர்ப்புக்கள் ஒருபுறம் சாய்ந்தமருதில் இருந்தபோது, மறுபுறத்தில் மு.மா. உறுப்பினர் ஜவாத், மு.மா.உறுப்பினர் ஜமீல், மு. மேயர் சிராஸ் மீராசாஹிபு ஆகியோரின் பாரிய பிரச்சாரங்களுக்கு மத்தியில் மு.காங்கிரஸ் கல்முனை மாநகரில் களம் இறங்கியது.

அதுபோன்றே அட்டளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் பல சவால்களை மு.கா எதிர்கொண்டதுடன், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பண மூட்டைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலைமையை இந்த தேர்தல் தோற்றுவித்தது.

இருந்தும் கடந்த 2௦11 இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு சுமார் எழுபதாயிரம் வாக்குகளை மு. கா பெற்றுக்கொண்டது. அந்த தேர்தலில் இன்று உள்ளதுபோன்று பாரிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை.

ஆனால் இந்த தேர்தலில் மேற்கூறப்பட்ட பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், முழு சாய்ந்தமருது ஊரையே இழந்த நிலையிலும், முஸ்லிம் காங்கிரஸ் கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இது ஒரு பாரிய வெற்றி என்று கூறுவதுடன் மு.காங்கிரசை அழிக்க முடியாது என்ற செய்தியையும் உரியவர்களுக்கு இந்த தேர்தல் கூறியுள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com