Tuesday, February 20, 2018

அமைச்சரவையை ஜனாதிபதி கலைக்க முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

அமைச்சரவை தொழில்படும் காலம்வரைதான் பிரதமர் பதவி வகிக்க முடியும். எனவே பிரதமர் பதவி விலகாவிட்டால் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பார் என்று அமைச்சரொருவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

சரத்து 46(2) இன் பிரகாரம் அமைச்சரவை தொழிற்படும் காலம்வரைதான் பிரதமர் பதவிவகிக்க முடியும்; ஆனால் இங்கு கேள்வி ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைக்க முடியுமா? அவ்வாறு கலைத்துவிட்டு அமைச்சரவை கலைந்து விட்டது. எனவே பிரதமரும் வீட்டுக்குச் செல்லுங்கள்; என்று கூறலாமா?

உண்மையில் அரசியலமைப்பில் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பதற்கென்று எதுவித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. எனவே ‘அமைச்சரவையைக் ஜனாதிபதி கலைத்தல்’ என்ற சொற்பதமே தவறாகும்.

“ அமைச்சரவை தொழிற்படும் காலம்வரை” என்ற ஒன்று இருப்பதால் ‘அமைச்சரவையைக் கலைத்தல் அல்லது அமைச்சரவை கலைதல்’ என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். அது தொடர்பாக பார்ப்போம்.

அமைச்சரவை கலைதல்

சரத்து 48 இது பற்றிக் கூறுகின்றது.
48(1): பிரதமர் பதவி இழத்தல். இதன்படி பிரதமர் பதவி இழந்தால் அமைச்சரவை கலைந்துவிடும்.

48(2): அரசின் கொள்கைத் தீர்மானம்
வரவு செலவு மதிப்பீடு
அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
ஆகியன தோற்றால் அமைச்சரவை கலைந்துவிடும்

எனவே மேற்சொன்ன இரு சந்தர்ப்பங்களிலும் அமைச்சரவை தானாகவே கலைந்துவிடும். இங்கு அமைச்சரவையைக் கலைப்பது, என்ற ஒன்று இல்லை; என்பதை அவதானிக்கலாம்.

இந்த அமைச்சர்களிடம் பெரும்பான்மை இருந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மூலம் அரசைத் தோற்கடித்தால் அமைச்சரவையும் கலைந்துவிடும், பிரதமரும் பதவியிழந்து விடுவார். அதைவிடுத்து ஏன் ஜனாதிபதியின் பின்னால் அலைகின்றார்கள்?

அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைத்தால் பிரதமர் பதவியிழப்பாரா?

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய அவர்கள் ஜனாபதிக்கு அமைச்சரவையை முற்றாக வேண்டிய நேரத்தில் கலைக்கின்ற அதிகாரம் இருப்பதாக நியூஸ் பெர்ஸ்ட் இற்கு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக அவர் சரத்து 44(3) ஐ மேற்கோள் காட்டி ஜனாதிபதிக்கு அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்க முடியும்; என்றும் அவ்வாறு முழுமையாக மாற்றியமைக்கும்போது பிரதமர் பதவி இழப்பார்; என்று குறிப்பிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையில் 19வது திருத்தத்திற்கு முன் குறித்த சரத்து 44(3), தற்போது அது 43(3). இலக்கம் தவறுதலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது பிரச்சினை இல்லை. இப்பொழுது குறித்த சரத்திற்கு வருவோம்.

குறித்த சரத்து 43(3), ஜனாதிபதி விரும்பிய நேரம் அமைச்சர்களுக்குரிய விடயதானங்களையும் ( subjects and functions) அமைச்சரவையையும் (composition of the Cabinet of Ministers) மாற்றியமைக்க முடியும், ஆனால் அவ்வாறான மாற்றம் ‘ அமைச்சரவையின் தொடர்ச்சியை’ ( continuity of the Cabinet of Ministers) பாதிக்காது; என்றும் கூறுகின்றது.

இங்கு அவதானிக்க வேண்டியவை:
1) ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் விடயதானங்களை மாற்றியமைக்க முடியும். அதாவது நிதி அமைச்சருக்கு நீதி அமைச்சை வழங்க முடியும். பிரதமரிடம் ஆலோசனை கோரத்தேவையில்லை.

2) அமைச்சரவையை மாற்றியமைக்க முடியும். அது அதன் தொடர்ச்சியை அதாவது தொடர் தொழிற்படுதன்மையைப் பாதிக்காது. அமைச்சரவை தொடர்ந்தும் இயங்கும்.

இதன்பொருள் குறித்த சரத்தின் பிரகாரம் அமைச்சரவை மாற்றப்படுகின்றபோது அமைச்சரவை கலையாது. அது தொடர்ந்தும் இயங்கும். எனவே, ஜனாதிபதி சட்டத்தரணி வர்ணகுலசூரிய கூறியதாக கூறப்படுகின்ற அமைச்சரவைக் கலைப்பு இந்த சரத்தின்கீழ் எவ்வாறு இடம்பெற முடியும். அமைச்சரவை இயங்கும்வரை சரத்து 46(2) பிரகாரம் பிரதமரும் தொடர்ந்தும் இயங்க முடியுமே!

இதனுடைய சுருக்கம், ஜனாதிபதியால் ஒருபோதும் அமைச்சரவையைக் கலைக்கமுடியாது என்பதுமட்டுமல்ல, அமைச்சரவையைக் கலைத்தல் என்ற ஒன்றே அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. மாறாக, அமைச்சரவை கலைதல் இருக்கின்றது மேற்சொன்ன சந்தர்ப்பங்களில்.

இங்கு இருக்கின்ற ஒரேயொரு கேள்வி ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்கமுடியுமா? என்பது மாத்திரம்தான். இது தொடர்பாக ஏற்கனவே ஓர் ஆக்கத்தை வெளியிட்டிருக்கின்றேன். இன்ஷாஅல்லா, மேலும் ஒரு ஆக்கத்தையும் வெளியிட முயற்சிக்கின்றேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com