Thursday, December 31, 2015

வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! நக்கீரன் கனடா

பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற வித்தையை யாராவது பழக விரும்பினால் திரு சிறிதரன், நா.உ அவர்களிடம் பாடம் கேட்க வேண்டும். சிறிதரனின் சில இணையங்கள் வெளியிட்டுள்ளது. கேட்டுப் பாருங்கள்.

தலைவர் பிரபாகரனே பல இயக்கங்களை ஒன்று சேர்த்து கட்சி அமைத்தார் என்கிறார். அது உண்மை. அதே சமயம் சேர்த்தார் என்பதை விட சேர்ந்தபோது அதற்கு ஒப்புதல் அளித்தார் என்பதுதான் சரி. ஆனால் தலைவர் பிரபாகரன் கூட புளட், இபிடிபி இயக்கங்களைச் சேர்க்கவில்லை. காரணம் இந்தக் குழுக்கள் அரசோடு சேர்ந்து விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள். போர் முடிந்த போது "வி.புலிகளைத் தோற்கடித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு உண்டு" என்று சித்தார்த்தன் மார்தட்டிக் கொண்டவர்.

"ததேகூ உம் ஒரு தீர்வினை முன்வைக்கலாம் தமிழ் மக்கள் பேரவையும் ஒரு தீர்வினையைத் தயாரிக்கட்டும். எங்களுடைய கட்சியும் தீர்வுத் திட்டங்ளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதே போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சியாக எல்லோரும் ஒரே புள்ளியில் சந்தித்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்வதுதான் மிக முக்கியமானது" என சிறிதரன் சொல்கிறார். அதன் பொருள் என்ன?

அப்படியென்றால் சென்ற தேர்தலில் ததேகூ க்கு மக்கள் கொடுத்த ஆணை என்னாகிறது? ஒரு நாடு இரு தேசம் கேட்கும் ததேமமு, தமிழீழமே முடிந்த முடிவு என்று நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படி ஒரு புள்ளியில் வருவது? ஒரு நாடு இரு தேசக் கோட்பாட்டை, தமிழீழக் கோரிக்கையை சர்வதேசம் ஆதரிக்குமா? சர்வதேச நாடுகளது ஆதரவு இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமா?

பெரும்பான்மைத் தமிழ்மக்கள் தங்கள் சார்பாக பேசுவதற்கு ததேகூ க்கு மட்டுமே ஆணை கொடுத்துள்ளார்கள். ஏனைய அமைப்புகளையும் அவற்றின் கொள்கை கோட்பாட்டுக்களையும் அவர்கள் நிராகரித்துள்ளார்கள். இனச் சிக்கலுக்கான தீர்வுத் திட்டத்தை ததேகூ தான் முன்வைக்க வேண்டும்.

நிற்க. இந்த தமிழ் மக்கள் பேரவை யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது? அதற்கான விடையை ரெலோ கட்சித் தலைவர் மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தமிழ் மக்கள பேரவை என்பது கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியிருக்கிறார். (பின்னர் யாரோ கொடுத்த நெருக்கடி காரணமாக தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்துள்ளார்)

அரசோடும் சர்வதேச சமூகத்தோடும் ஒரே குரலில் பேசுவது நல்லதா அல்லது ஆளுக்கொரு குரலில் பேசுவது நல்லதா?


கடந்த தேர்தலில் ஒரு நாடு இரு தேசம் என்ற மலட்டு முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளார்கள். அதே சமயம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைப்பாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு என்ற கோட்பாட்டுக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் (70 விழுக்காடு) வாக்களித்தார்கள். அப்படியிருக்க பதவி ஆசை பிடித்தவர்களும் அதிருப்தியாளர்களும் குடைச்சல்காரர்களும் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை இன் தேவை என்ன? மக்களை குழப்ப நினைப்பதன் நோக்கம் என்ன?

சிறிதரன் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் எல்லாம் எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகச் சொன்னார். அவரது அறியாமை கண்டு நான் வருந்துகிறேன்.

சென்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை (ததேமமு) அவர் குறிப்பிடும் தேசிய மக்கள் அவைகள் ஆதரித்தன. அதன் குடை அமைப்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (International Council of Eelam Tamils (ICET) ததேமமு யை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தது. அதில் "தமிழர் தாயகமே, எமது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அடித்தளம். ஆதலால், அனைத்துலகளவில் நாம் தொடரும் போராட்டங்கள் வெற்றியடைவதற்கு, தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓங்கி ஒலிக்கின்ற உறுதியான குரலொன்று எமக்குத் தேவை. அந்தக் குரல் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதே எமது நிலைப்பாடு.

‘நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம், சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும், தமிழின அழிப்புக்கு நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வல்லமை பொருந்திய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதனால், உங்களுடைய வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

"புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்."

இந்த அறிக்கையோடு நில்லாமல் 5 1/2 கோடி பணமும் திரட்டிக் கொடுத்தார்கள். ஆனால் எமது மக்கள் புத்திசாலிகள். அவர்களை பகட்டு வார்த்தைகளாலும் மலட்டு கோட்பாடுகளாலும் ஏமாற்ற முடியாது. மக்கள் ததேமமு முற்றாக நிராகரித்தார்கள். அதற்கு வாக்களிக்குமாறு கேட்ட அனைத்துல ஈழத்தமிழர் மக்களவையின் (அஈதம) முகத்தில் கரி பூசினார்கள். மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு புள்ளடி போட்டார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எல்லாம் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்கின்றன என சிறிதரன் பேசுவது சரியா? ததேமமு க்கு ஆதரவாகவும் ததேகூ க்கு எதிராகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (அஈதம) படாது பாடு பட்டது என்பது சிறிதரனுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று?

இப்போது முளைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையை அஈதம அமைப்பு வரவேற்றிருக்கிறது. இது எதிர்பார்த்ததே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் / அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் இன்னொரு முகம்தான் இந்த அஈதம அமைப்பு. இந்த அமைப்பு வன்னியின் எச்சங்கள் மே 2009 க்குப் பின்னர் உருவாக்கிய அமைப்பு. முன்னைய உலகத் தமிழர் அமைப்புகளுக்கு ஈடாக உருவாக்கப்பட்டவை.

அஈதம அமைப்பு ததேமமு இன் இன்னொரு முகம் என்பதற்குச் சான்றாக தமிழ் மக்கள் பேரவையை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை வரவேற்கும் அதே வேளை சிறிலங்கா அரசும் வேறு சில சுயநல சர்வதேச அரசியல் சக்திகளும் தங்கள் நலத்துக்காக எமது மக்களின் வேட்கைகளையும் அவர்களது உரிமைகளையும் கணக்கில் எடுத்து அவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அரசியல் தீர்வினை எட்டுவதற்குப் பதில் தமிழ்மக்களைக் கட்டாயப்படுத்தி ஒரு அரசியல்தீர்வை திணிக்கப் பார்க்கிறார்கள். (While welcoming the formation of the Tamil Peoples Council, Sri Lankan State and some international powers with vested interest are actively seeking to force a compromised political solution on Tamils instead of finding a sustainable political solution based on the aspirations and inalienable rights of our people) என ஒப்பாரி வைத்துள்ளது.

சர்வதேச அரசியல் சக்திகள் என இந்த அமைப்பு குறிப்பிடுவது அமெரிக்க, கனடா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைத்தான். இந்த நாடுகள் தங்களது நலனுக்காக ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழ்மக்கள் மீது திணிக்கின்றனவாம். தெரியாமல்தான் கேட்கிறோம்? இந்த நாடுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு வேறு எந்த நாடுகளது உதவியோடு தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர அஈதம யோ வேறு அவையோ நினைக்கிறது?

இதே அமைப்பு ஐநாமஉபேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானமானது நீதியைப் படுகொலை செய்து மானுட தர்மத்தை குழிதோண்டிப் புதைத்து அந்தக் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்று பாமரத்தன்மையோடு விமர்ச்சித்திருந்தது. மேலே கூறியவாறு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2010 இல் கட்டுக்காசை இழந்த காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு எதிராக புள்ளடி போடுமாறு அறிக்கை மூலம் கேட்டது. ஆனால் எமது மக்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் முகத்தில் பென்னாம் பெரிய நாமத்தைப் போட்டார்கள்.

வேதாளத்தை பிடிக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மறுபடியும் முருக்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை தனது உடைவாளால் வீழ்த்திய கதை மாதிரி சல்லிக்காசுக்குப் பெறுமதியில்லாத அறிக்கைகளை அஈதம என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

உண்மையில் தமிழர்களை ஒன்றுபடுத்த என்று சொல்லிக் கொண்டு உருவாக்கப் பட்ட தமபே யை புலம்பெயர் நாடுகளில் உள்ள அஈதம, தமிழ்நெட் போன்ற அமைப்புகளே பின்னால் இருந்து கொண்டு பொம்மலாட்டம் நடத்துகின்றன. இந்த அமைப்புகளே ததேமமு மற்றும் தமபே இன் சூத்திரதாரிகளாகவும் நிதியுதவி செய்யும் வள்ளல்களாகவும் இயங்குகின்றன. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் தமபே க்கு ஆன அத்திவாரம் 3 மாதங்களுக்கு முன்னர், தேர்தல் தோல்வியை அடுத்து ஜெனிவாவிலும் சுவிசிலும் போடப்பட்டது. அதில் முக்கியமானவர்களில் தமிழ்நெட் ஜெயச்சந்திரன் ஒருவர். மற்றவர் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற கடிதத் தலைப்பை வைத்திருக்கும் குமாரவடிவேல் குருபரன்.

ஜெயச்சந்திரன் என்பவர் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு திரட்டுமுகமாக நோர்வேயில் கூட்டம் நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி மக்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

எனவே இந்த அமைப்புகள் எல்லாம் ததேகூ எதிராக சர்வதேச மட்டத்தில் ஒரு வலைப் பின்னலை உருவாக்கி செயற்பட்டு வருகின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. அர்தத்தோடுதான் ஆடுகின்றது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த அமைப்புக்கள் திரு சம்பந்தரையும் திரு சுமந்திரனையும் பரம விரோதிகளாகவும் துரோகிகளாகவும் பார்க்கும் போது சிறிதரனை நேசத்தோடும் பாசத்தோடும் பார்க்கின்றன. அவரது காணொளி நேர்காணல் அந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. மரத்தை வளர்க்கிறவனையும் மரத்தை வெட்டுகிறவனையும் ஒன்றாக பார்க்க முடியாது.

உண்மையில் தமபே அரசியல் அமைப்பு அல்ல அது ஒரு சமூக அமைப்பு என முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது சரியென்றால் அரசியல்வாதிகள் ஏன் அழைக்கப்பட்டார்கள்? தமிழ் அரசுக் கட்சி ஏன் அழைக்கப்படவில்லை? மூடிய கட்டிடத்துக்குள் ஏன் கூட்டம் நடந்தது? இந்த அமைப்புக்கு ஒன்றுக்கு மூன்று இணைத் தலைவர்களை நியமித்தது ஏன்? அது சொல்லும் செய்தி என்ன? அதற்குள் ஒற்றுமை இல்லை, தலைமைப் பதவிக்கு சிலர் நாயாய் பேயாய் அலைகிறார்கள் என்பதுதானே?

அதிதீவிர தமிழ்த் தேசியம் பேசுகிற இந்த அமைப்புக்களைச் சார்ந்தவர்களே ஜெனிவாவில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானங்களை எரித்தார்கள். அமெரிக்காவின் தேசியக் கொடியை வீதியில் போட்டு எரித்தார்கள். நொவெம்பர் 2013 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய இராஜ்சியத்தின் பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக நூல் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சுமந்திரனின் உருவப் பொம்மையை தனது வண்டியில் கொண்டுவந்த அனந்தி அதனை நிலத்தில் போட்டு எரித்தார். பின்னர் இலண்டனில் திரு சம்பந்தர், திரு சுமந்திரன் உருவப் பொம்மைகளை எரித்தார்கள். திரு சுமந்திரன் மீது அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ் கனடா போன்ற நாடுகளில் வன்முறையை கட்டவுழ்த்து விட்டார்கள்.

கனடா ஐயப்பன் கோயில் அரங்கில் ததேகூ (கனடா) ஒழுங்கு செய்த கூட்டத்தில் சுமந்திரன் பேசுவதை விரும்பாத ஒரு மாபியா கூட்டம் ஐயப்பன் ஆலய அறங்காவலர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது. பயந்து போன கோயில் முதலாளிகள், கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரமிருக்க எந்த வெட்கமோ துக்கமோ இன்றி மண்டபத்தைத் தரமுடியாது என்று கையை விரித்தார்கள்.

இங்குள்ள ஒரு சமூக வானொலி, ஊரார் வீட்டுச் சேலையில் கொய்யகம் கட்டும் வானொலி ஒன்று சுமந்திரனின் பெயர் இருப்பதால் கூட்டம் பற்றிய அறிவித்தலை ஒலிபரப்ப மறுத்தது. இவை என்னத்தைக் காட்டுகிறது? யதார்த்த அரசியல்வாதி திரு சுமந்திரனைக் கண்டு இந்த மாபியாக் கூட்டம் அச்சம் அடைகிறதைக் காட்டுகிறது. சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என இந்த மாபியாக் கூட்டம் நினைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கனடா நாட்டின் சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தங்களது அடாவடித்தனத்துக்கு தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஓகஸ்ட் 17 இல் நடந்த தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு ததேமமு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் என்ற முக மூடிகளுக்கு அப்பால் தமபே என்ற முகமூடி தேவைப்படுகிறது. இதே போல் விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் தனக்குப் போற்றி பாடவும் தன்னை பல்லக்கில் வைத்துத் தூக்கித் திரியவும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.

வட மாகாணசபை தேர்தலைப் புறக்கணித்தவர்கள்தான் இப்போது விக்னேஸ்வரனை பல்லக்கில் வைத்து ஊர்வலம் வருகிறார்கள். மாகாண சபையா? அது அதிகாரம் அற்ற அலங்கார மாநகர சபைக்குச் சமம், 13ஏ திருத்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, வட - கிழக்கு மாகாணங்களைப் பிரித்ததை ஏற்றுக் கொள்வில்லை என எள்ளி நகையாடியவர்கள் அவரை தமபே இன் இணைத் தலைவராக நியமித்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் காலத்தில் ஒரே தலைமை ஒரே கொடி ஒரே இயக்கம் என்று முழங்கியவர்கள் இப்போது தமிழ் அரசுக் கட்சியின் முதன்மை (ஏக அல்ல) இடத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மொத்தம் 10 இடங்களில் ஆறு இடங்களில் 1 - 3 மற்றும் 5 - 6 இடங்களை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே கைப்பற்றினார்கள். தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு மொத்தம் 288,890 (70.70%) விருப்பு வாக்குகளும் புளட்டுக்கு 53,740 (13.15%) வாக்குகளும் இரண்டு இடங்களுக்குப் போட்டியிட்ட இபிஎல்ஆர்எவ் க்கு 45,314 (11.09%) வாக்குகளும் ரெலோவுக்கு 20,684 (5.06%) வாக்குகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் 207,577 (69.12%) வாக்குகளும் இபிடிபி க்கு 30,232 (10.07%) வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 20,025 வாக்குகளும் (6.67%) ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் முன்னணிக்கு 17,309 (5.76%) வாக்குகளும் கிடைத்தன. ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ததேமமு 15,022 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எண்ணி 6 வாக்குகளால் கட்டுக்காசை காப்பாற்றிக் கொண்டது. அந்த 6 வாக்குகள் ததேகூ க்கு விழுந்திருந்தால் ததேகூ மேலும் ஒரு இருக்கை கிடைத்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் விஜயகலா வெறுங்கையோடு வெளியேறியிருப்பார்.

இவை சொல்லித்தரும் பாடம் என்னவென்றால் தமிழ்மக்களில் பெரும்பான்மையோர் ஒவ்வொரு தேர்தலிலும் ததேகூ க்கு வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.

இப்போது முளைவிட்டுள்ள தமபே ஒரு சமூக அமைப்பு என்று சொல்லிக் கொண்டாலும் இந்த அமைப்பு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புத்தான். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திரு செல்வம் அடைக்கலநாதனுக்கு இருக்கிற இருக்கின்ற அரசியல் அறிவை சிறிதரனிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். சம்பாதிப்பதற்கென்றே அரசியலுக்கு வந்தவர். அதுவும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் ஊடாக த.தே.கூ வினுள் நுழைந்து கொண்டவர். இவரது சகோரர்களின் ஊடகங்களின் மாயாஜாலங்களால் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார். எவ்வளவு காலத்திற்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர் இரண்டு தோணிகளில் கால் வைக்கப் பார்க்கிறார். அரசனை நம்பி புருசனை கைவிட நினைக்கிறார். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்.

இன்றைய புவிசார் அரசியல் ஒழுங்கில் இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர, நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய, வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் பேசும் மக்களது வரலாற்று வாழ்விடத்தில் அவர்களுக்கு உள்ள உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு இணைப்பாட்சியை உருவாக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராஜ்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஒரு கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டுகின்றன. அமெரிக்க இராஜதந்திரிகள், ஐநாமஉ பேரவை இராஜதந்திரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். ஐநாமஉ அவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம் ஒரு வாள் போல் சிறிலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு சனவரி 9, 2016 அன்று பிரதமர் விக்கிரமசிங்கா நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் யாப்பு அவையாக மாற்றுவதற்கும் 24 பேர் கொண்ட நடவடிக்கைக் குழுவை நியமிக்கவும் கோரும் தீர்மானத்தை முன்மொழிகிறார். இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 உறுப்பினர் வீதம் சென்று மக்களது எண்ணங்களை கேட்டறிவார்கள். அதன்பின் புதிய யாப்பு ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதையிட்டு ஒரு பொது வாக்கெடுப்பும் நடத்தப் படவேண்டும்.

எனவே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்க தமஅ மெத்தப் பாடுபடுகிறது. தமிழ் மக்கள் பேரவை போன்ற காளான் அமைப்புக்களினால் எந்தப் பலனும் இல்லை. ததேகூ யும் அதன் தலைவர் திரு சம்பந்தரையுமே அனைத்துலக சமூகம் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய தரப்பாக அங்கீகரித்துள்ளது.

2016 இல் இனச் சிக்கலுக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு முறைக்குப் பலமுறை தெரிவித்துள்ளார். எனவே அவருக்குக் கால்தடம் போட்டு விழுத்த எண்ணாமல் தேசியத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் ததேகூ யும் தலைவர் சம்பந்தனின் கைகளைப் பலப்படுத்த முன்வரவேண்டும்.

வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

Read more...

Friday, December 25, 2015

கொழும்பின் சதியா? யாழின் விதியா? என கம்பவாரிதி ஜெயராஜுவுக்கு தெரியாதாம்.

வட மாகாண சபைக்கு வேட்பு மனுக்கோரப்பட்டு அதன் வேட்பாளர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றபோது விக்கினேசுவரனை விடச்சிறந்த தெரிவு கிடைக்கவே கிடைக்காது என்றும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்றும் ஒற்றைக்காலில் நின்றவர்களில் முதலாமவர் கம்பவாரிதி.

தற்போது முதலமைச்சர் என்ற பூனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பைக்கு வெளியே பாய்ந்துவிட்டது. கூட நின்ற புனைக்குட்டிகள் கீயா மீயா என கத்துகின்றன. ஆனால் கம்பவாரிதியோ ஒப்பாரியிடுகின்றார். அவரது ஒப்பாரியில் நான் கொண்டுவந்து நிறுத்தியவர் நல்லவர்தான், ஆனால் இது அவருடைய தப்பல்ல யாழின் விதியாக அல்லது கொழும்பின் சதியாக இருக்கவேண்டுமென, இத்தனை காலமும் அத்தனை அரசியல் பித்தலாட்டக்காரரும் தமிழ் மக்கள் காதில் சூட்டி காய்ந்து சருகாகிய பூவைத்தூக்கி மீண்டுமொருமுறை வைக்கப்பார்க்கின்றார்.

கம்பவாரிதியின் இக்கட்டுரைக்கு பதிலுரைக்க நேரத்தை செலவிடுவதிலும் பார்க்க அக்கட்டுரையை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே விட்டு எனது கருத்தை தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.

கொழும்பின் சதியா? யாழின் விதியா? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை, ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான்.

கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன, பேராசிரியர் சிற்றம்பலமும் என, கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து, இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி, இரட்டைவேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில், இரகசியக் கூட்டம் போட்டு, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை, உருவாக்கியிருக்கிறார்கள்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். முதலமைச்சருக்கும் குறுகுறுத்திருக்கிறது. அதனாற்றான் ‘தமிழ்மக்கள் பேரவை’ அரசியல் கட்சியல்ல, மாற்றுத்தலைமைக்கான ஆரம்பமுமல்ல என்று, ‘அப்பா குதிருக்குள் இல்லை’ என்றாற்போல், அறிக்கை விட்டிருக்கிறார் அவர்.

குறுகுறுக்காமல் எப்படி இருக்கமுடியும்? கடந்த மாகாணசபைத் தேர்தலில், கட்சிகளைக் கடந்த, சமூக அந்தஸ்துடைய, தக்க ஒருவரை, தம் சார்பாகத் தேர்தலில் நிறுத்துவதன் மூலம், கூட்டமைப்புக்குள் எழ ஆரம்பித்திருந்த, சிறு சிறு வெடிப்புக்களை நீக்கலாம் என்றும், மக்கள் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பதாய்க் காட்டலாம் என்றும், ஒரு உயர்ந்தவரை வைத்து உலகுக்கு உண்மை உரைக்கலாம் என்றும்,
சமூகப் பிரமுகர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில், சம்பந்தனும் சுமந்திரனும் கணக்குப்போட, விடையாய் வந்தவர்தான் நம் விக்னேஸ்வரன்.

முதலில் மாட்டேன் என்று ‘பிகு’பண்ணி, பிறகு எல்லோரும் சேர்ந்து அழைத்தால், ‘மாட்டுவேன்’ என்று அறிக்கைவிட்டு, இனமானத்தைக் காக்க, தன்மானத்தை உறுதி செய்துகொண்டு, அரசியலுள் நுழைந்தார் விக்னேஸ்வரன்.

இவர் வருகையின் போது, கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட அதிர்வுகள், கட்சியைப் பொறுத்தவரை ‘சுனாமி’க்கு ஒப்பானவை. தமிழ்மக்களுக்குத் ‘தொண்டு’(?) செய்வதற்காய், முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த, கூட்டமைப்புக்குள் இருந்த பெருந்தலைகள் பல, இவருக்குப் பதவி என்றதும், ஆடி, அசைந்து பின் சம்பந்தனின் ஆற்றுகையில் அடங்கிப்போயின. வஞ்சகம் இல்லாமல் வழிவிட்ட, மாவை போன்றோரைப் போற்றி, ‘அவர்கள் ஆலோசனையைப் பெற்றே இயங்குவேன்’ என்று, அப்போது விக்னேஸ்வரன் விட்ட அறிக்கை, இப்போதும் நினைவில் இருக்கிறது. அவ் அறிக்கை சத்தியத்தால் விளைந்தது என நினைந்தோம். அது சாமர்த்தியத்தால் விளைந்தது என இப்போதுதான் புரிகிறது.

கூட்டமைப்புத் தலைவர்கள் விக்னேஸ்வரனை, சந்தி, சந்தை, சத்திரம் என, பல இடங்களிற்கும் அழைத்துச் சென்று, நடத்திய வாக்கு வேட்டைப் புகைப்படங்கள், பல பத்திரிகைகளிலும் அப்போது வெளியாகின. அவரது தேர்தல் செலவுக்கென சம்பந்தனும் சுமந்திரனும், வெளிநாட்டுத் தமிழர்களைச் சந்தித்துத் திரும்பினர். கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் நீக்கி, தமது வாக்காலும், வளத்தாலும், விக்னேஸ்வரனது வெற்றியை உறுதி செய்து, அவரைப் பெருமளவு வாக்குகள் பெறவைத்து, முதலமைச்சராக்கிய பெருமை, கூட்டமைப்புக்கே உரியது என்பதை, எவரும் மறுக்கத் துணியார்.
இவரும் மறுக்கத் துணியார்.

பதவியும், பவுசும் வந்ததும், முதலமைச்சர் மெல்ல மெல்ல மாறத்தொடங்கினார். தனது இயல்பான சண்டைக் குணத்தாலும், நிர்வாகத்திறமையின்மையாலும், மாகாணசபைத் தேரை, அங்குலக் கணக்கிலும் அசைக்க முடியாமல் போக, அதிமானம் கொண்டவரான முதலமைச்சர், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் துணிவின்றி, அனைவர் கவனத்தையும் திசைதிருப்ப, தமிழ்மக்களது உணர்ச்சியைக் கிளப்பி, அரசியல் செய்யும் புதுவழியைக் கண்டுபிடித்தார். அதற்கு எழுந்த ஆதரவு அலையில், அற்புதமாய்த் தனது பலயீனங்களை மூடி மறைத்தார்.

கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும் சிந்தனை வேறாகிவிடும் என்றான் கம்பன். ‘அறம் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்
பெறல் அரும் திரு பெற்றபின் சிந்தனை பிறிதாம்’

கம்பனின் இக்கருத்திற்கு ஏற்ப, முன்னாள் நீதியரசரின் சிந்தையும் சில கூனிகளின் ஆலோசனையால், கைகேயியின் மனம்போல் திரிந்தது. அது தூய சிந்தையா? என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம்.

குறுக்கு வழியில் நடக்கத்தலைப்பட்ட முதலமைச்சர், அதன் உச்சக்கட்டமாக, கடந்த தேர்தலில், கூட்டமைப்பின் எதிரிகளுடன் மறைமுகமாய்க் கைகோர்த்து, கூட்டமைப்பிற்கு எதிராய்ச் செயற்படத் தலைப்பட்டார். அக் கள்ளத்தொடர்பு ஓரளவு பகிரங்கமாக, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் உரைக்க முடியாமல், தான் ஊமையாவதாய்ச் சொல்லி, உறைந்து போனார் முதலமைச்சர்.
அது அப்போது நடந்த செய்தி.

தேர்தல் முடிவில் அவர் மறைமுகமாய் ஆதரித்த கட்சி அடி அறுந்து போக, ‘ஆப்பிழுத்த குரங்கின் கதையாய்’ ஆனது முதலமைச்சரின் கதை. தான் சோரம் போன கதையை வெளிப்படுத்தத் தயங்கி, தனது ஊமைத்தனத்தைத் தொடர்ந்த முதலமைச்சர், மாகாணசபையில் இன அழிப்புப் பிரேரணையை நிறைவேற்றியும், ஐ.நா.சபைத் தீர்வில் முரண்பட்டும், மக்கள் மத்தியில் தன் கற்பினை நிரூபிக்க முனைந்தார்.

ஐ.நா.சபைத்தீர்வில் உலகத்தோடு ஒத்து, யதார்த்த நிலையைக் கடைப்பிடிக்க முனைந்த, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மேல், வெற்றுணர்ச்சியாளர்களால் பகை பரப்பப்பட, அப்பகைத்தீயில் தன்னை மெருகேற்றி வெளிவந்தார் முதலமைச்சர். தேர்தலின் போது குழப்பம் ஏற்படுத்திய தன்மேல், நடவடிக்கை எடுக்காத கட்சித்தலைவரின் தயக்கம், முதலமைச்சருக்கு மேலும் பலம்தர, அந்நேரம் பார்த்து,
முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென கோரியிருப்பதாய், சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட அறிக்கை, முதலமைச்சரை மேலும் பலப்படுத்திற்று. அப்போது சுமந்திரனுக்குப் பதிலுரைத்து, முதலமைச்சர் வெளியிட்ட நீண்ட அறிக்கை, அவர், கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ்மக்களின் தனித்தலைவராய் உருவாக விரும்புகிறார் என்பதை, வெளிச்சம் போட்டுக் காட்டிற்று.

அப்போதும் முதலமைச்சர், தான் சோரம் போகவில்லை என்று கூறியபடியே இருந்தார். ஆனால் அவரது அப்பொய்ப் புலம்பல், நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’க் கூட்டத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டமைப்பின் எதிராளிகளுடன் கைகோர்த்து, கூட்டம் நடத்திவிட்டு வெளி வந்த முதலமைச்சர், குற்றம் செய்த குறுகுறுப்பில் மீண்டும் தான் ஊமையாவதாய் உரைத்து, ஊடகவியலாளரிடமிருந்து ஒதுங்கி ஓடியிருக்கிறார்.

எவர் தூண்டினார்களோ தெரியவில்லை. மறுநாளே அவரது ஊமைத்தனம் உடைந்திருக்கிறது. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும், போருக்குப் பிந்திய தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான, ஓர் உறுதியான செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்குமான செயற்பாடாகும் என, நேற்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நகைப்பைத் தருகிறது.சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பவர்கள் யார்? தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை, சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாய்க் கொள்ளமுடியாதா? அத்தகையோரைப் புறந்தள்ளி,
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, இக்கூட்டம் நடத்தப்பட்டதன் மர்மம் என்ன? நடந்துமுடிந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று, முதன்மை உறுப்பினராய் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரச்சினையின்போதேல்லாம் முதலமைச்சருக்கு ஆதரவளித்தவருமான, சிறீதரன் (பா.உ.) போன்றோர்கூட, இச்சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பட்டியலில் வரமாட்டார்களா?
அவர்கள் எல்லாம் இவர்தம் செயலால் மனம்நொந்துபோய் இருக்கிறார்கள்.

போருக்குப் பின்னராக, தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகத்தான், அரசியல் அனுபவமே இல்லாத முதலமைச்சர் கையில், வடமாகாணசபை தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை அதை வைத்து, உருப்படியாய் அவர் ஏதும் செய்ததாய்த் தெரியவில்லை. அதுபோலவே அரசியல் தீர்வு சம்பந்தமாக, இதுவரை தன் கட்சித்தலைமைக்கு, இவர் ஏதும் ஆலோசனை வழங்கியதாயும் தெரியவில்லை. இந்நிலையில் சிவில் சமூகத்துடன் சேர்ந்து, இவ்விரண்டையும் செய்யப்போவதாய், அவர் வெளியிட்டிருக்கும் செய்தி, நகைப்புத்தராமல் வேறு என்ன செய்யும்?

பொதுவாக அவரது அறிக்கைகள் பெரும்பாலும் நகைப்புக்குரியவைதான். வடமாகாணசபைக்கென 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அறுபது சதவீதமான தொகையை பாவிக்காமல் திரும்பச் செல்ல விட்டுவிட்டு, 2016 ஆம் ஆண்டு செலவுக்கு தாம் கேட்ட தொகையில், நாற்பது சதவீதத்தையே அரசு ஒதுக்கியிருக்கிறது என்று ஒப்பாரிவைத்து, சில தினங்களுக்கு முன் வந்த அவரது அறிக்கை,
யாருக்குத் தான் நகைப்பை ஏற்படுத்தாது?

தமிழர் பிரச்சினைபற்றி, வடக்கிலிருந்து பார்ப்பதற்கும், தெற்கில் இருந்து பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற, அவரது மற்றொரு அறிக்கை சிரிப்பின் அடுத்த அத்தியாயம். துன்பக் காலத்தில் வடக்கோடு எந்தத் தொடர்புமின்றி சுகித்து வாழ்ந்த, தனது சுயநலத்தை மறைக்க அவர் இட்ட புதிய திரை இது என்பதும், கொழும்பில் வாழும் தலைவர்களைத் தமிழ்மக்களிடம் இருந்து பிரிக்க, அவரது சட்டமூளை செய்த சதி இது என்பதும், அறிவுள்ள எவர்க்கும் புரியக் கூடிய ஒன்றே.

தமிழர் பிரச்சினையை வடக்கிலிருந்து பார்ப்பது, தெற்கிலிருந்து பார்ப்பது என்று தொடங்கினால், அடுத்து மட்டக்களப்பிலிருந்து பார்ப்பது, திருகோணமலையிலிருந்து பார்ப்பது என்றும், கிளிநொச்சியிலிருந்து பார்ப்பது, வவுனியாவிலிருந்து பார்ப்பது என்றும், கனடாவிலிருந்து பார்ப்பது, லண்டனிலிருந்து பார்ப்பது என்றும், பிரிவுகள் பெருகி நீளும். உலகறிந்த ஒட்டுமொத்த தேசிய இனப்பிரச்சினையை, எங்கிருந்து எவர் பார்த்தால் என்ன? விடயம் ஒன்றுதான்.

அதனை, பிராந்தியப்பார்வைகளாய்ப் பிரிக்கும் இவரது புதிய கண்டுபிடிப்பு, உணர்ச்சியாளர்களுக்கு உவப்பாய் இருக்குமேயன்றி, உண்மையாளர்களுக்கு நிச்சயம் உவப்பாய் இருக்க வாய்ப்பில்லை.

மொத்தத்தில், நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’ கூட்ட நிகழ்வோடு, ‘சத்தியவித்தகர்’, சத்தியம் வித்தவராய், தமிழர் மத்தியில் பதிவாகிவிட்டார் என்பது உண்மை. ‘சீசரின் மனைவி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கவேண்டும்’ என்பது, மேலைத்தேயத்து அரசியலார் போற்றும் ஒரு தொடர். இது நம்மவர்க்கும் பொருந்துமாம். முதலமைச்சர் ஐயத்திற்குரியவராகி விட்டார். தமிழின அழிப்பை விரிவாய்ச் செய்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன், இன்றும் கைகோர்த்து நின்று, இலங்கை தனிச் சிங்களநாடாக இருக்கவேண்டும் என்று, பிடிவாதம் பிடித்து நிற்கின்ற, சம்பந்தி வாசுதேவநாணயக்காரவுடனான அவரது நெருக்கமான உறவு, குடும்ப உறுப்பினர்களின் பேரின திருமண உறவுத்தொடர்புகள் என்பவையும், அவ்வுறவுகள் புடைசூழவே முன்னாள் ஜனாதிபதியின்முன்
பதவிப்பிரமாணம் எடுத்த அவரது செய்கையும் முதலமைச்சரின் தனிவாழ்வுப் பின்புலத்தை, ஐயத்திற்கு அப்பாற்பட்டதாய்க் காண இடமளிக்கவில்லை.தமிழர்தம் உரிமை விடயத்தில், உலகம் தரும் அழுத்தத்தை நிராகரிக்க முடியாது, முழுமனதுடன் அதனை ஏற்கவும் முடியாது, அந்தரிக்கும் பேரினத்தலைவர்கள், தமிழ்த் தலைமைகளின் உடைவை எதிர்நோக்கி, ‘சப்புக்கொட்டிக்’ காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதற்குப் பாதை திறக்க முயலும், முதலமைச்சரின் முன் முயற்சிகள், சீசரின் மனைவியை, சந்தேகத்திற்கு ஆளாக்கவே செய்கின்றன.

முதலமைச்சர் தலைமையில் நடாத்தப்பட்ட, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ க்கூட்டம், தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கும் கேள்விகள் பலப்பல. அவற்றைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

☛ முதலமைச்சர் சொன்னது போன்ற நோக்கங்களுக்காகத்தான் மேற்படி கூட்டம் நடாத்தப்பட்டதெனின் அதனை இவ்வளவு ரகசியமாக பூட்டிய அறைக்குள் ஊடகவியலாளர்கள் இன்றி நடத்தியதன் மர்மம் என்ன?

☛ கூட்டம்முடிந்து வெளிவந்த முதலமைச்சரும் மற்றவர்களும் ஏதோ குற்றம் செய்தவர்கள்போல் ஊடகவியலாளர்களைத்தவிர்த்து ஓட நினைந்ததன் காரணம் என்ன?

☛ கூட்டத்திலிருந்து வெளிவந்த முதலமைச்சர் தான் மீண்டும் ஊமையாவதாய் ஏன் சொன்னார்?

☛ வெளிவந்த அனைவரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ‘ஏற்பாட்டாளர்களைக் கேளுங்கள்’ என்றே பதிலளித்தனர். கடைசிவரை சொல்லப்படாத அவ் ஏற்பாட்டாளர்கள் யார்?

☛ நடந்த கூட்டத்தில் பதவி முதலியவை தெளிவாய் தீர்மானிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அங்ஙனமாயின் அதற்கான முன்னாயத்தங்கள் எங்கு எவரால் செய்யப்பட்டன?

☛ இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் எதிராளிகளாய்க் கருதப்பட்ட முக்கியஸ்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

☛ தேர்தல் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புத் தலைமை தன்னோடு ஆலோசிக்கவில்லை என்று குறைசொன்ன முதலமைச்சர் இக்கூட்டம் பற்றி கூட்டமைப்புத் தலைமையோடு ஆலோசித்தாரா? இக் கூட்டத்தினை முன்னின்று ஒழுங்கு செய்தது யார்?

☛ தேர்தலில் மக்களால் முற்றுமுழுதாய் நிராகரிக்கப்பட்டவர்களே இக்கூட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். அங்ஙனமாயின், ஜனநாயக ரீதியான மக்கள் கருத்துக்கு மதிப்பில்லை என்று முதலமைச்சரும், அவரைச் சார்ந்தோரும் கருதுகின்றனரா?

☛ முதலமைச்சர் பதவிக்கு விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதனைக் கடுமையாய் எதிர்த்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின்னர் மாகாண அமைச்சர்கள் தேர்வின் போது தனது தம்பிக்குப் பதவி வழங்கப்படாமையைக் கடுமையாய்க் கண்டித்து பத்திரிகை மாநாடு நடத்தியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஜனாதிபதியின் முன்பாக முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்ததைக் கடுமையாய் விமர்சித்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இன்று அவரே முதலமைச்சரை ஆதரித்து அறிக்கை விட்டும், அவரோடு ஒன்றிணைந்து கூட்டம் நடத்தியும் உறவு காட்டுகிறார். முதலமைச்சரும் ‘ஆயுதக்குழுக்களோடு தன்னால் ஒன்றிணைந்து இயங்க முடியாது’ என்று முன்பு சொல்லிவிட்டு இன்று அவர்களுடனேயே இணைந்து நிற்கிறார். இந்த உறவுகளின் அடிப்படை சுயநலமன்றி வேறு எதுவாய் இருக்கமுடியும்?

☛ கஜேந்திரகுமாருடனான உறவை முதலமைச்சர் மறுத்து வந்தார். இப்போது அவர்கள் உறவு வெளிப்பட்டிருக்கிறது. இந்த உறவு உண்டானது எப்போது? சென்ற தேர்தலின் முன்னரே இவ்உறவு ஏற்பட்டதா? அதனாற்றான் சென்ற தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்க முதலமைச்சர் மறுத்தாரா? ‘வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’ என்ற முதலமைச்சரின் அப்போதைய அறிக்கைக்குப் பின்னால் சுமந்திரன் சொன்னது போல, இவ் உறவால் விளைந்த வஞ்சகம் இருந்ததா? இருந்தது உண்மையென்று இப்போது தெரிந்திருக்கிறது. அப்படியானால் இல்லை என்று முதலமைச்சர் முன்பு சொன்னது தமிழ்மக்களை ஏமாற்றவா?

☛ உலக வல்லரசான அமெரிக்கா, பிராந்திய வல்லரசான இந்தியா, பேரின அரசான தற்போதைய இலங்கை அரசு என்பவை இன்று கூட்டமைப்பை அங்கீகரித்து இனப்பிரச்சினைத்தீர்வில் அதனோடு இணைந்து செயற்படவே தயாராயிருக்கின்றன. இவற்றை எதிர்த்து அல்லது இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் உரிமை பற்றிய நகர்வுகளில் தமிழ்மக்கள் பேரவையால் எதனை முன்னெடுக்க முடியும்?

ஒரு கட்சியிடம் மட்டுமே தமிழர் தலைமையினை முடக்கிவிட்டால், கேட்பாரின்றி அக்கட்சி நடக்கத்தொடங்கிவிடும் என்பதால், மாற்றுத்தலைமைகளும் உருவாகவேண்டுமென, நடந்து முடிந்த தேர்தலின்போது நானே எழுதியிருக்கிறேன். ஆனால் நான் சொன்னது, மக்களால் தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படவேண்டிய தலைமைகளையே. இன்று மக்கள் கருத்தை மறுத்து, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களோடு கூட்டுச்சேர்ந்து, சதிகள் மூலம் உருவாக்க நினைக்கின்ற மாற்றுத்தலைமையை அன்றாம்.

கடந்த காலங்களில் தமிழ்மக்கள் மத்தியில், புலிகள் பெற்றிருந்த எழுச்சியை உலகம் அறியும். அவர்கள் காட்டும் ஒரு புல்லுக்கும் வாக்களிக்க, தமிழ்மக்கள் தயாராய் இருந்த நிலையிலும், இடைக்காலத்தில் அவசியம் கருதி, அரசியல் தலைமையையும் உருவாக்க நினைந்த புலிகள், தாம் வெறுத்த கூட்டணித்தலைவர்களின் அரசியல் அனுபவத்தை, முற்றாய் நிராகரிக்க நினைக்காமல் தாம் வகுத்த அரசியல் வட்டத்திற்குள், அவர்களையும் ஈர்த்துக் கொண்டனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அஃது அவர்தம் அனுபவச் செறிவின் அடையாளம். ஆனால் இன்று தமிழ்மக்கள் பேரவை அமைத்தவர்கள்,
அனுபவசாலிகளை முற்றாய் நிராகரித்து, தொழிற்தொடர்பின்றி சமூகத்துடன் வேறெந்த தொடர்புமில்லாத, டாக்டர்கள் போன்ற புதியவர்களையும், மக்களால் நிராகரிக்கப்பட்ட சில தலைவர்களையும் உள்வாங்கி, புதிய வழி சமைக்க முயல்கின்றனர். இவர்தம் அறியாமையை என் சொல்வது?

எல்லாம் முடிந்துவிட்டது. கூட்டமைப்பிற்குள் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் கிளம்பும் என்று பார்த்தால், எந்த ‘அசுமாத்தத்தையும்’ காணவில்லை. சம்பந்தன் பழையபடி தூங்கத் தொடங்கிவிட்டார். ஆனந்த சங்கரி ஏதாவது பேசினாற்றான், அவருக்கு உணர்ச்சி வரும்போல, இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. இனம் பிரிவதற்குமுன்னர் ஏதாவது செய்தாகவேண்டும். ஒன்று முதலமைச்சரை அழைத்து விசாரித்து, தவறுகள் திருத்தப்பட்டு அவரைத்தம்மோடு இணைக்க வேண்டும், அல்லது அவரை கட்சியிலிருந்து விலக்கி, அவர் விரும்பும் பாதையில் செல்ல அவரை அனுமதிக்கவேண்டும். ‘வாசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை’ என்றாள் ஒளவை. அன்பில்லாத உறவை விட, பகை நல்லது என்பது அத்தொடருக்காம் அர்த்தம். உறவா? பகையா? என்று உறுதி செய்யும் நாள், வந்துவிட்டது என்றே உலகம் கருதுகிறது. உரியவர்கள் உணருவார்களா?

தமிழ்மக்கள் தெளிவானவர்கள். தமது உண்மைத் தலைவர்களை அவர்களால் இனம் காணமுடியும் என்று, இன்றும் உலகம் நம்புகிறது. முதலில் தந்தை செல்வா. பின்னர் அமிர்தலிங்கம். பின்னர் பிரபாகரன் என, தம் தலைவர்களை ஒருமித்து அங்கீகரித்தவர்கள் நம் தமிழர்கள். மேற்சொன்ன தலைவர்கள், தம் வாழ்நாள் முழுவதையும் இனத்திற்காக அர்ப்பணித்தவர்கள். அவர்கள் பற்றிய சில மாற்று விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், இனவிடுதலை ஈடுபாட்டினையும் எவரும் ஐயுற மாட்டார்கள்.

ஆனால் திடீரென முளைத்து, காகம் கஷ்டப்பட்டுக் கட்டிய கூட்டில், களவாய் முட்டையிட்டு, குஞ்சு பொரித்துப் பயன்பெறும் குயிலின் கதையாய், தமிழ்த்தலைமையை, இதுவரை எந்தத் தியாகமோ, அர்ப்பணிப்போ செய்யாமல், வெறும் பதவிப் பவுசையும்,தோற்றப்பொலிவையும் முதலாய் வைத்து, வஞ்சனை வலைவீசி அபகரிக்க நினைக்கும் ஒருவரை, முன்னைத்தமிழ்த் தலைவர்கள் வரிசையில், தமிழினம் தலைவராய் ஏற்றுக்கொள்ளுமா? விதியின் விளையாட்டை யார் அறிவார்? அத்தவறு நிகழ்ந்தால், அது நம் இனத்தின் தவக்குறைவாகவே அமையும்.

என்னவோ தெரியவில்லை. தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகளின் அவதானிப்பால், சில உண்மைகளை நாம் எதிர்வு கூறவேண்டியிருக்கிறது. காலாகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக் காலங்களில், தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை உடைக்கப்பட்டிருக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில், தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவராய் இருந்து, கிழக்கில் அக்கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரை, கட்சியிலிருந்து விலகி அரசில் அமைச்சுப் பொறுப்பேற்றார். பின்னர் இடையில் சிலகாலம் ரணில் ஆட்சிப்பொறுப்பேற்ற பொழுது, தமது பலத்தால் உலகையே வியக்க வைத்திருந்த புலிகளின், முக்கியத் தலைவர்களில் ஒருவரான, கருணா பிரிக்கப்பட்டு, பின்னர் அவரும் அரசுடன் இணைந்து அமைச்சரானார். இன்று மீண்டும் ரணிலின் ஆட்சி?

வேறு வேறு கொள்கை, வேறு வேறு பாதை என்றிருந்தாலும், இன எழுச்சிக்காய் ஒன்றுபட்டு, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி, ஆயிரம் பிரச்சினைகளைத் தாண்டி ஒன்றுபட்டிருந்து, தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, ஏகத்தலைமையாய் நிமிர்ந்து நின்ற கூட்டமைப்பை, இன்று ஒரு தனிமனிதர் உடைக்கத் தலைப்படுகிறார். சென்ற ரணிலின் ஆட்சியில் புலிகளை உடைக்க ஒரு கருணா. இந்த ரணிலின் ஆட்சியில் கூட்டமைப்பை உடைக்க ?, இது கொழும்பின் சதியா? யாழின் விதியா? யார் அறிவார்?

இக்கட்டுரை தொடர்பில் நான் முதலாவதாக ஜெயராஜுக்கு சொல்ல வருவது யாதெனில், விக்கினேஸ்வரனை முன்மொழிந்ததில் தமிழ் மக்களுக்கு துரோமிழைத்த ஜெயராஜ், தகுந்த ஒருவனை தெரிவு செய்வதற்கு நான் தகுதியற்றவன் என்பதை முதலில் மக்களுக்கு தெரிவித்து, வாழ்நாளில் இன்னொரு தெரிவின்போது எனது மூக்கை நுழைத்து முன்மொழிவுகளை செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டு கொண்டால், அது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பேருதவியாக இருக்கும்.

இயல்பான சண்டைக்குணமும் நிர்வாகத்திறையற்றவர் என்றும் கூறும் ஜெயராஜ் அவர்களே விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்து என்று ஒற்றைக்காலில் நின்றபோது இவர் சண்டைக்குணம் கொண்ட நிர்வாகத்திறனற்றவர் என்பதை அறிந்திருக்கவில்லையா? மேலும் மக்களின் உணர்சியை கிளப்பி, அரசியல் செய்யும் புதுவழியை கண்டு பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டீர்களே? தமிழ் அரசியல் வாதிகள் காலாகாலமாக மேற்கொண்டு வருகின்ற உணர்ச்சியை கிளப்பும் அரசியல்வழியை விக்னேஸ்வரனும் கடைப்பிடிக்கத்தொடங்கினார் என்றால் பொருத்தமற்றதாகுமா?

மேலும் கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும் சிந்தனை வேறாகிவிடும் என்ற கம்பனின் கூற்றுக்கு விதிவிலக்கில்லாமல் தனது சகாவும் மாறிவிட்டார் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் ஜெயராஜ் அதற்கு கூனிகளின் ஆலோசனையால், கைகேயியின் மனம்போல் விக்கினேசுவரனின் மனம் திரிந்தது என்றெல்லாம் பல்வேறு வியாக்கியானங்கள் கூறமுற்படுவது அருவருப்பை உண்டுபண்ணுகின்றது.

தந்தை செல்வா , அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களின் வரிசையில் பிரபாகரன் என்ற உலகப்பயங்கரவாதியும் பாசிஸ்டுவுமான கொலைகாரனை வைத்து மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் என்கின்றார் ஜெயராஜ். இவ்வாக்கியமானது ஜெயராஜ் எதை நோக்கி பயணிக்கின்றார் என்பதை தெளிவுறுத்துகின்றது. கம்பன் கழகம் அமைத்து பணம் சம்பாதித்துக்கொண்டிருந்த ஜெயராஜுக்கு பிரபாகரன் மக்களை கொன்றொழித்தமை, அவர்களது உரிமைகளை அப்பட்டமாக மீறியமை, ஆயுதத்தை காட்டி மிரட்டி மக்களது ஜனநாயக உரிமைகளை அப்படியே சூறையாடியமை எவ்வாறு நினைவிருக்கப்போகின்றது? அமிர்தலிங்கத்தை கொன்ற பிரபாகரனை அவரது வரிசையில் வைத்து தலைவர் எனப்போற்றும் இவரின் போக்கிரித்தனம் தமிழ் மக்களுக்கு அடுத்த தலையிடி ஒன்றை உருவாக்கப்போகின்றது என்பதை தெட்டத்தெளிவாக கூறமுடிகின்றது.

ஜெயராஜ் புத்தகம் ஒன்றை பிரபாகரனுக்கு அனுப்பி அதற்கு பிரபாகரன் அனுப்பிய பதில் தொடர்பில் என்னிடம் நிறைய பேச இருக்கின்றது. அது தொடர்பில் விரைவில் விவாதிக்கப்படும்.

தனது கட்டுரையில் பதவியும் பவுசும் வந்ததும் மெல்ல மெல்ல முதலமைச்சர் மாறத்தொடங்கினார் என்றும் அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்துள்ள இக்கட்டுரையை முடித்துரைத்த ஜெயராஜ், இராஜதுரை மற்றும் கருணா ஆகியோரின் உதாரணங்களை காட்டி, இது சதியா அன்றில் விதியா என்று முடித்துள்ளார்.

இன்று நாம் 21 நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதி என்று சொல்லை உச்சரிப்பதே இயலாமையின் வெளிப்பாடாகும் என்பதுடன் நாகரிகமற்றதுமாகும்.

தமிழ் தலைவர்கள் சுயலாபங்களுக்காக மக்களின் தேவைகளை கிடப்பில்போட்டு எழுந்தமானமாக செயற்பட்டு குட்டு உடைபடுகின்றபோது, சதிவலையில் சிக்கிவிட்டார்கள் என்று அவர்களது விசிறிகள் சாட்டுபோக்கு சொல்வது வழமை. அதே பல்லவியை பாடி ஜெயராஜ் அற்ப ஆசைகளுக்காக சோரம்போவோர்க்கு, நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்றும் மீண்டும் தைரியம் கொடுக்கின்றார்.

ஆகவே ஆன்மீகவாதியாக இனம்காணப்பட்டுள்ள ஜெயராஜ் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெள்ளையடித்தல், நற்சான்றுதல் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தி, நாங்கள் வாழுகின்ற இதே காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு ஒப்பற்ற போராளியான சேகுவேராவின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களையும், அவர் மக்களுக்காக எவ்வாறு உழைத்தார் என்பதையும் தான் சாமரம் வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

ஆஜென்டீனாவில் ஓர் மேட்டுக்குடியில் பிறந்த சேகுவேரா தனது செல்வந்த மற்றும் சுகபோக வாழ்க்கையை கைவிட்டு கியூபா மக்களுக்காக போராடி மாபெரும் வெற்றிகாண்கின்றார். கியுபாவில் புதிய அரசு அமைகின்றது. கீயூபா மக்கள் சேகுவேராவை உன்னதபோராளியாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அவருக்கு கியூபாவில் குடியுரிமை வழங்கி அந்நாட்டின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சுப்பதவியையும் வழங்குகின்றார்கள். வெளியுறவு அமைச்சுக்கு அப்பால் பல்வேறு துறைகளில் தனது நிபுணத்துவங்களை சேகுவேரா வழங்கிக்கொண்டிருந்தார்.
ஆனால் இத்தனை வேலைப்பழுவுக்கும் மத்தியில் அவர் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து தானும் ஒரு பாட்டாளியானர். தனது நாளில் 4 மணித்தியாலயங்களை உடலுழைப்புக்கு ஒதுக்கினார். கட்டுமானப்பணிகளில் சிற்றூழியனாக, கப்பலிலிருந்து மூடையிறக்கும் நாட்டாமையாக உடலால் மேற்கொள்ளப்படும் கடின உழைப்புகள் யாவற்றிலும் பங்காளியானார்.

ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து நெருக்கப்படும் மக்களுக்காக போராடி ஒர் பிரபுவாகவே வாழ்வதற்கு வழியிருந்தும், அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை இப்படம் எடுத்துரைக்கின்றது.

ஆனால் இன்று கள்வர்கள், கடைந்தெடுத்த காவாலிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலைகாரார்கள், நயவஞ்சகர்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானோராக உள்ளதுடன் இவர்கள் பிரபுக்களாகவே இன்றும் வலம்வருகின்றனர். மக்களின் வாக்கில் பிரதிநிதிகளாகி அதற்கு சம்பளம் வாங்கும் பேர்வழிகளை ஊதியத்திற்குரிய உழைப்பை வழங்க கேட்கவேண்டும்.

பீமன்

Read more...

Sunday, December 20, 2015

தமிழ் மக்கள் பேரவை: 'மாற்றுத் தலைமையை உருவாக்கும் நோக்கம் இல்லை'

'ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது'

இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மருத்துவ நிபுணர் டாக்டர் லக்ஸ்மன், மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் வசந்தராஜா ஆகியோர் இந்த அமைப்பின் இணைத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரையில் தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் எல்லையைக் கடந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் துணைத் தலைவருமான பேராசிரியர் சிற்றம்பலம், புளொட் அமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன, நல்லை ஆதீன முதல்வர், கிறிஸ்தவ மத குருமார்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த அமைப்பின் ஆரம்ப கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

'மாற்றுத் தலைமையினை ஏற்படுத்தும் கூட்டம் இல்லை'


'ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது'

'இந்தப் பேரவை அரசியல் கட்சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே அகும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருக்கின்றார்.

'தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ்மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். இத்தகையதொரு நிலைமையில், தனிமனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது' என்று தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கை கூறுகின்றது.

'ஒரு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுகின்ற தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற தீர்வுகளே தேவையானவையாகும். எனினும் இத்தகைய தீர்வை வழங்குவதில் இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமோ, பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சிகளோ முன்வரவில்லை' என்றும் 'இத்தகையதொரு நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லையை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுகிறது' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'அந்த இலக்கை ஈடு செய்யக்கூடியது என்ற நம்பிக்கையோடு மதபீடங்கள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது' என்று அந்த அறிக்கை விபரித்துள்ளது.

'தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை- வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Thanks BBC

Read more...

Friday, December 18, 2015

இலங்கை: வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை எதிர்த்து போராட ஒரு சோசலிச வேலைத் திட்டம். By the Socialist Equality Party (Sri Lanka)

இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இணைந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெட்டுக்கள் வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதிய உரிமைகள் மற்றும் மானியங்களை கடுமையாக பாதிக்கவுள்ளன.

தனியார்துறை, பொதுத்துறை மற்றும் அரை அரசாங்கத் துறைகளையும் சேர்ந்த 50 தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான தொழிற்சங்கங்களின் கூட்டு (TUC), அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் பெருகி வரும் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக தயக்கத்துடன் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தொழிற்சங்கங்களின் கூட்டு, அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் எப்படியாவது திசைதிருப்பிவிட முயல்வதோடு முன்மொழியப்பட்ட 24 மணி நேர வேலைநிறுத்தத்தை கூட அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை ஊடாக நிறுத்திவிடும் கடைசி முயற்சிகளில் இறங்கியுள்ளது என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு தொழிலாளர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

2016ல் இருந்து பொதுத்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை இரத்து செய்து, ஊழியர்கள் பங்களிப்பு செய்யத் தள்ளப்படும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீட்டியுள்ள திட்டத்தை கைவிட வேண்டும் என்பதும் தொழிற்சங்கங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளில் அடங்கும். தனியார்மயமாக்கல், அரசு நிறுவனங்களை வணிகமயப்படுத்தலை நிறுத்துமாறும் மற்றும் தற்போது மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படுகின்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு புதிய முகவரமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

தனியார் துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா மாத சம்பளம் உயர்வு வேண்டும், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் 1,000 ரூபாவால் உயர்த்தப்பட வேண்டும் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா சம்பள கொடுப்பனவை அவர்களது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும் போன்றவை ஏனைய கோரிக்கைகளாகும்.

அரசாங்கம் விவசாயிகளுக்கு மானிய உரங்கள் வழங்கும் தற்போதைய திட்டத்தையும் வெட்டித்தள்ள முன்மொழிந்துள்ளது. இது ஒட்டு மொத்த மானியங்களையும் இல்லாமல் ஆக்குவதற்கான முதல் படியாகும் -இது கிராமப்புற ஏழைகளுக்கு பெரும் அடியாக இருக்கும். கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

எந்தவொரு போராட்டத்தையும் கவிழ்ப்பதற்கு வடிவமைக்கப்பட்ட அரசாங்கத்துடனான அவர்களின் உத்திகளில் ஒன்றாக, தொழிற்சங்கங்களின் கூட்டின் தலைவர்கள் சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். அவர்கள் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தத்தை இரத்து செய்யும் பொருட்டு, சில பயனற்ற வாக்குறுதிகளைப் பெற எதிர்பார்த்தனர். தொழிற்சங்கங்களின் கூட்டின் அழைப்பாளரான அரசாங்க தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, "அரசாங்கம் குறைந்த பட்சம் ஓய்வூதிய திட்டத்தை உள்ளவாறு தொடர்வதைப் பற்றி பரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டால் தொழிற்சங்க நடவடிக்கையை இரத்து செய்ய தயாராக இருப்பதாகக்," கூறினார். மற்றொரு தொழிற்சங்க தலைவர், கலந்துரையாடலின் பின்னர் "கோரிக்கைகள் எதற்கும் [விக்கிரமசிங்கவிடம் இருந்து] சாதகமான பிரதிபலிப்பு எதுவும் கிடைக்கவில்லை" என்று புலம்பினார்.

தொலைக்காட்சி நிகழ்சிகளிலான உரையாடல்களில், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பதாக ரட்னபிரிய தெளிவுபடுத்தினார். இந்த கோரிக்கை மூலம் "நாங்கள் போராடி ஆட்சிக்கு கொண்டுவந்த" அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யு.சி.), துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் மறியல் போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இன்றுடன் முடிவுக்கு வரும் ஒரு எதிர்ப்பு வாரத்துக்கு அழைப்பு விடுப்பதாக அறிவித்தது. ஜே.வி.பி மற்றும் என்.டி.யூ.சி.யும் அரசாங்கத்தை அச்சுறுத்தக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் எதிர்ப்பதோடு, அதற்குப் பதிலாக தொழிலாளர்களின் சீற்றத்தை தடுத்து திசைதிருப்ப முயல்கின்றன.

வரவு-செலவு வெட்டுக்களை எதிர்த்துப் போராட தொழிலாளர்களால் இந்த தொழிற்சங்கங்கள் அல்லது அரசியல் ஸ்தாபனத்தின் கட்சிகளின் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. தொழிலாளர்கள் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தையே எதிர்ப்பதற்கான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

இதே தொழிற்சங்கங்கள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய நிர்வாகத்தினால் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் வறியவர்களின் விரோதத்தை திசை திருப்பிவிடப்பட்டன. ஜனவரி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர உதவிய இந்த தொழிற்சங்கங்கள், இப்போது தொழிலாளர்களின் அதிருப்தி வெடித்து ஆட்சியை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்று பீதியடைந்துள்ளன.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைகளை அமுல்படுத்த தீர்மானித்துள்ளனர். வியாழக்கிழமை, தொழிற்சங்கங்களை விமர்சித்து ஒரு அச்சுறுத்தும் உரையை நிகழ்த்திய விக்கிரமசிங்க, அரசாங்கம் வேலைநிறுத்தங்களை கண்டு அஞ்சாது என்று அறிவித்தார். அவர், டிசம்பர் 3 அன்று ஒரு அடையாள வேலை நிறுத்தம் செய்தமைக்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தை கண்டனம் செய்தார். விக்கிரமசிங்கவின் உண்மையான இலக்கு, தொழிற்சங்கத் தலைவர்கள் அன்றி, யாருடைய எதிர்ப்பை கட்டுப்படுத்த தொழிற்சங்கள் முயற்சித்து வருகின்றனவோ அதே தொழிலாள வர்க்கமாகும்.

தனது கையை வலுப்படுத்தும் முயற்சியில், சிறிசேன வியாழக்கிழமை அதிக பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற எத்தனிக்கின்றார். அவர் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளியான தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) எதிர் போக்கைக் கடைப்பிடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு நெருக்கி வருகின்றார்.

உலகப் பொருளாதார பின்னடைவு மற்றும் நிதி நெருக்கடியினால் உருவாக்கப்பட்டுள்ள ஆழமான பொருளாதார மற்றும் நிதி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசாங்கம், பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான எல்லா சலுகைகளையும் வழங்கும் அதேவேளை, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் நெருக்கடியின் சுமைக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது.

இதே போன்ற வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் வணிக சார்பு நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இலங்கை ஆளும் தட்டின் ஒரு பகுதியினர், கடும் கடன் சுமை காரணமாக நாடு கிரேக்கத்தை ஒத்த ஒரு நெருக்கடியில் மூழ்கிப் போகலாம் என விவாதித்து வருகின்றனர். கிரேக்கத்தில் சிரிசா அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றது.

கொழும்பு பங்கு சந்தை நிகழ்வு ஒன்றில் பேசிய விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் "வரி குறியீட்டை மீண்டும் எழுதுவதற்கு உதவுமாறு" சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதாகவும் அரசாங்கத்துக்கு ஒரு நீண்ட கால கடன் ஒப்பந்தம் தேவை என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இலங்கையை "முதலீடுகளை ஈர்க்கும் ஒரு போட்டி களமாகவும் இடமாற்று மையமாகவும்" ஆக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என அவர் கூறினார். சமூக உரிமைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளையும் வெட்டித்தள்ளுவதன் மூலமாக மட்டுமே அரசாங்கத்தால் நாட்டை ஒரு "போட்டி மையமாக" ஆக்க முடியும்.

அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி, தொழிலாளர்களால் தமது போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அரசாங்கம் ஏற்கனவே அதன் நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பை நசுக்குவதற்கு பலத்தைப் பயன்படுத்தும் என்பதை நிரூபித்துள்ளது. அது இலவசக் கல்வியை பாதுகாக்க போராடிய மாணவர்கள் மீது கொடூரமான பொலிஸ் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது, அதிக வேலைச் சுமையை திணிப்பதை எதிர்த்த தோட்டத் தொழிலாளர்களை கைது செய்தது மற்றும் சுத்தமான குடிநீர் கோரிய ஏழை விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது.

முதலாளித்துவ இலாப அமைப்பை ஒழிக்கும் போராட்டத்தில் மட்டுமே தொழிலாளர்களால் தங்கள் தொழில்கள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக உரிமைகளை பாதுகாக்கவும், ஏழை விவசாயிகளைப் பாதுகாக்கவும் முடியும். முதலாளித்துவ அமைப்பு முறை இந்த அடிப்படை உரிமைகளுடன் இயைந்து இருக்க முடியாது.

வங்கிகள், பெரிய தொழிற்துறைகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் பெருந் தோட்டங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். சகல வெளிநாட்டு கடன்களையும் திருப்பிச் செலுத்துவது நிராகரிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களின் நன்மைக்காக, பொருளாதாரம் சோசலிச வழியில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

தனியார் இலாப அமைப்பை பராமரிக்க உறுதிபூண்டுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் தலைவிதியை நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தமது சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

போராடிப் பெற்ற தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீதான தாக்குதலை இந்த அரசாங்கம் உக்கிரமாக்கும் என, ஜனவரி ஜனாதிபதி தேர்தலிலும் ஆகஸ்ட் பொதுத் தேர்தலிலும் விளக்கியது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சி தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு புதிய புரட்சிகர கட்சி தேவை. இந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை உருவாக்க அதில் இணைந்துகொண்டு உதவுமாறு நாம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Read more...

சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களின் தியாகத்தை நம்மவர்களாலும் செய்ய முடியுமா?

காணமல் போனதாக தேடப்படுகின்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள சில இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இராணுவ வீரர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டால் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகளின் குடும்ப அங்கத்தவர்கள் அநாதராவாக்கப்பட்டுள்ளதாக உணரும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்குடும்பங்களுக்கு தமது சம்பளங்களை தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் மாதம் முதல் தங்களது சம்பளங்களை குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் போரை இல்லாமல் செ;யய புலனாய்வுப் பிரிவினர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

அன்று மிலேனியம் சிட்டி சம்பவ காட்டிக் கொடுப்பினால் 97 புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களில் சிலரும் இதில் அடங்குகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது நகைப்பிற்குரியது.

இவ்வாறு வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் மனித வேட்டை நிறுத்தப்படும் வரையில் நாம் போராடுவோம்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் சுருட்டிக்கொண்டு வடகிழக்கிலிருந்து 16 ஆசனங்களை பெற்று பாராளுமன்று சென்றுள்ள உறுப்பினர்கள் இதுவரை தமிழ் மக்களுக்கு செய்தது யாதெனக்கேட்டால்? மக்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்து இனவாத வெறியையூட்டி வாக்குகளை பெற்று அதனூடாக கிடைக்கும் வரப்பிரசாதங்களை தங்களது குடும்பங்களுடன் பகிர்ந்து கொண்டதை தவிர ஏதுமில்லை என்று அச்சமறக்கூறமுடியும்.

இந்நிலையிலேயே இந்நாட்டில் அமைதியை கொண்டுவர போராடிய இராணுவ வீரர்களது குடும்பங்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றார்கள் என்றபோது அவர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தமது சம்பளத்தை தியாகம் செய்ய முன்வந்துள்ளனர்.

ஆனால் இன்றும் வன்னியில் மக்கள்படும் அவலங்களை பிச்சைகாரன் புண்ணாக வைத்து அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் மேற்படி சிங்கள அரசியல் தலைவர்களை முன்னுதாரணமாக கொண்டு முழுச்சம்பளத்தையும் வழங்காவிட்டாலும் ஒரு தொகையையாவது தியாகம் செய்து ஒரு தொகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவேனும் உதவ முன்வருவார்களா?

16 பராளுமன்ற உறுப்பினர்களும் மாதாந்தம் 25000 ரூபா பணத்தினை ஒருக்கினால் மாதமொன்றுக்கு நான்கு குடும்பங்களுக்கு சுயதொழிலை ஆரம்பிக்க உதவ முடியும்.

இவ்வாறான உதவியை வேண்டி நிற்கும் நபர்களின் அவலங்களை இங்குள்ள இணைப்பை சொடுக்கி அறிந்து கொள்ள முடியும்.

Read more...

Thursday, December 17, 2015

மறந்துபோன மனிதர்கள் இவர்கள்…! by Selvaraja Rajasegar

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போது காணாமல்போனோரின், உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் – அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவேண்டும் என்றும் – குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பாக போரால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிவில் மக்கள் குறித்தோ அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சமூக சேவைகள் திணைக்களத்தின் படி வட மாகாணத்தில் நிரந்த காயங்களுக்கு உள்ளானவர்கள் 19,826 பேர் வாழ்ந்துவருகின்றனர்.

19,826 பேர்தான் வட மாகாணத்தில் இருக்கின்றனர் என திணைக்களம் தெரிவித்தாலும், இது இருமடங்காக இருக்கலாம் என்கிறது வவுனியாவில் இயங்கும் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம்.

“கிட்டத்தட்ட நிரந்தர காயத்திற்குள்ளான 40,000 பேர் வட மாகாணத்தில் இருக்கின்ற அதேவேளை, அதில் 80 வீதமானோர் போரினால் காயத்திற்குள்ளானர்வர்கள்” என்று கூறுகிறார் வவுனியா வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வெள்ளையன் சுப்ரமணியம்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் வெள்ளையன் சுப்ரமணியம் கண்பார்வையை இழந்திருக்கிறார்.

போர் முடிவடைந்த காலப்பகுதியில் அதிகப்படியான உதவிகள் கிடைத்தபோதிலும் இப்போது சொல்லிக்கொள்ளும் படி அவ்வாறு கிடைப்பதில்லை என்கிறார் வெள்ளையன்.

இருந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, பொருட்களைக் கொண்டு நேர்மையான முறையில் சேவை செய்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.

இருப்பினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியில்லாம் கஷ்டப்பட்டுவருகின்றனர்.

ஒரு சிலர் வசதியோடு வாழ்ந்தாலும் அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் சிலர், நல்லுள்ளம் கொண்டவர்களால் ஒரு தொகை பணம் செலுத்தி வாங்கிக்கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சிலர், தாங்கள் வருடக்கணக்கில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் தருவாயில் இருக்கின்றனர்.

முன்னாள் போராளியான ஒருவர் – இடுப்புக்குக் கீழ் இயங்காதவர் – புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டவர், 5 வருடங்களுப் பின் ‘மாற்றம்’ அரசின் கீழ் இயங்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

இன்னுமொரு முன்னாள் பெண் போராளி, அவருக்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் இடுப்புகுக் கீழ் இயங்காது. தடுப்பிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ள கணவரின் தொலைப்பேசி இலக்கத்தைக் கேட்டு, அங்கவீனமானவர் என்று பார்க்காமல் இனந்தெரியாத மூவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே, தெற்கில் போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றபோது, அதே போரில் காயமடைந்த தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்; தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் மாதம் 10) முன்னிட்டு ‘மாற்றம்’ தளம் போரில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிலரின் குரல்களை இங்கு பதிவு செய்கிறது.பதவியா, பொரளை, குருணாகல், மீண்டும் பதவியா, கண்டி, வவுனியா, கொழும்பு காசல், மீண்டும் பொரளைக்கு, ராகம…

சுமார் 3 வருடங்கள் மதிவாணன் தயாகினி சிகிச்சைக்காக இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளே மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கும்போது தயாகினியின் கழுத்துப் பகுதியை துப்பாகி ரவை துளைத்துச் சென்றுள்ளது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக வரிசையாக அனுப்பப்பட்டிருக்கிறார்.

சிகிச்சைகள் முடிந்து திருகோணமலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தயாகினி தனது கணவர் மதிவாணனுடன் குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் சென்ற பின்னர்தான் பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

“இன்டக்கு வரைக்கும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கல்ல. வீட்டுத்திட்டமோ, அரச உதவிகளோ அல்லது தனியார் நிறுவன உதவிகளோ எதுவும் கிடைக்கல்ல. போய் கேட்டா, யாழ்ப்பாணத்தில யுத்தம் நடக்கேல்ல, அதனால உதவிகள் செய்ய ஏழாது என்டு சொல்லினம்” என்று கூறுகிறார் தயாகினி.“ஆனால், இந்த அரசாங்கம் மாறுனதிலிருந்து மருத்துவ கொடுப்பனவு என்டு சொல்லி மாதம் மூவாயிரம் டி.எஸ். ஒபிஸால தருவினம். அதவிட சமுர்த்தி முத்திரையும் இந்த வருஷம்தான் தந்தவ” என்கிறார் தயாகினி.

தயாகினியால் அவருடைய வேலைகளையே செய்துகொள்ள முடியாத நிலை. கணவன் மதிவாணன்தான் அவருடைய, மகனுடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

“தொடர்ந்து என்னைப் பராமரிக்க வீட்டிலேயே ஒரு ஆள் தேவை. அவர் வெளி வேலை ஒன்டுக்கும் போறதில்ல. வயரின் வேலையும் செய்தவர். இப்ப வெளியால போக ஏலாத நிலமையால போறதில்ல. அப்படி வேலைக்குப் போனாலும் முழு நேரமும் இருந்து வேலை செய்ய முடியாது. காலையில எங்கட வேலைய முடிச்சி, மதியம் சாப்பாடு தாரத்துக்கு திருப்பி வரனும். திருப்பி இரவுக்கு வரனும். அதால வெளி வேலைக்கு ஒன்னும் போறதில்ல. என்ன விட்டுட்டும் போக ஏலாது. அதால போறதில்ல” என்று உருக்கமாக கூறுகிறார்.
“நாங்க இப்ப எங்கட அக்காட வீட்டுல ஒரு ரூம்லதான் இருக்கிறம். எங்களுக்குச் சொந்தமா வீடு இல்ல. காணியிருந்தும் வீடு கட்ட முடியாம இருக்கிறம். தற்காலிக வீடு கூட எங்களுக்குத் தரேல்ல. எங்களுக்கு இப்போதைக்கு டொய்லட் வசதியோட வீடொன்டுதான் அவசரமா தேவைப்படுது” என்று கூறுகிறார் தயாகினி.

பக்கத்து காணியில் அடுத்த வருடம் ஜனவரிக்கு குடியேறுவதற்காக நான்கு மரங்களை நாட்டி தகரங்கள் போட்டுள்ள கொட்டிலொன்றை மதிவாணன் காட்டுகிறார். தொடர்ந்து வீட்டாருக்கு கஷ்டத்தை கொடுக்காமல் தனியாகச் சென்று வாழ இருவரும் முடிவெடுத்து விட்டனர்.

“எங்கள மாதிரி யாழ். மாவட்டத்தில நிறைய பேர் இருக்கினம். எனக்குத் தெரிய 18, 19 பேர் இருக்கினம். அவைகளுக்கு இப்படி உதவியென்டு எதுவும் கிடைக்கிறதில்ல. அவைகளுக்கும் உதவி கிடைச்சா நல்லா இருக்கும்” – என்கிறார் தயாகினி.
நான்: காலையில என்ன சாப்பாடு?

நவீந்திரன்: மரவள்ளி,

நான்: மத்தியானம்?

நவிந்திரன்: ஒன்டுமில்ல…

இடம்: வட்டக்கச்சி, சம்புக்குளம்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் படுத்திருந்த நவீந்திரனுக்கும் எனக்குமான உரையாடலே மேலிருப்பது.

அனேகமானோரின் நிலை இதுதான்.

வைத்தியர் ஒருவரின் மூலமாக இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவீந்திரனுக்கு தவணை முறையில் செலுத்தக்கூடிய வகையில் ஆட்டோ ஒன்று கிடைத்திருக்கிறது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவே இது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தைக் கொண்டுநடத்துகிறார் நவீந்திரன். ஆனால், கடன் கொடுக்க வேண்டியிருந்ததாலும், தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட காய்ச்சலினாலும் ஆட்டோவுக்கான புத்தகத்தை அடகுவைத்துள்ளார் நவீந்திரன். மாதம் 13,000 கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார் அவர்.
“மாதம் 13,000 கட்டனும். இப்போ அரியஸா 60,000 கிட்ட வந்திருக்கு. சிலநேரம் அரியஸ்னால தூக்கினமோ தெரியாது. ஆட்டோ கைவிட்டுப் போயிருச்சென்டா வாழ்க்கையே சரி… அது இருக்கிறதாலதான் ஹொஸ்பிட்டலுக்கு எல்லாம் பொய்ட்டு வாறன். திருப்பி எடுக்கக்கூடிய வல்லமையும் எங்ககிட்ட இல்ல. சாப்பாடு இல்லையென்டா பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம். வருத்தமென்டா கிளிநொச்சிக்குதான் போகனும். ஆட்டோ இல்லாம கஷ்டம்” – என்று கூறுகிறார் நவீந்திரன்.

நவீந்திரனின் மனைவி, 6ஆம் தரத்தில் படிக்கும் மூத்த மகளுடன் உதவி பெறுவதற்காக உறவினர் வீடொன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறுகிறார் நவீந்திரன்.
“கோழியும் வளர்த்து பார்த்தனான்…. அடுத்தடுத்து விடக்கூடிய மாதிரி காசு இல்லதானே. ரெண்டு செட் வளர்த்தன். அதில வந்த காச கடனுக்கும், ஆட்டோ லீசிங்கிங்கும் கொடுத்து முடிஞ்சிருச்சி. கோழி வாங்கித்தந்தா வீட்டோட இருந்து பார்த்துக்கலாம்” என்கிறார் அவர்.

4ஆம் தரத்தில் படிக்கும் இளையவன் நவீந்திரனினுடன் அவருக்கு உதவியாக, துணையாக அருகிலேயே அமர்ந்திருக்கிறான்.கிளிநொச்சியில் பிள்ளைகள் இருவருடன் இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் வாழ்ந்துவரும் முன்னாள் இளம் பெண் போராளி ஒருவரை சந்திக்கச் சென்றேன்.

2000ஆம் ஆண்டு முகமாலையில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின்போது ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி இடது காலை இழந்தவர் இவர். அத்தோடு, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் இடுப்புக்குக்கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிரந்தரமாக உட்கார்ந்து விட்டார்.

“தலையில் இருந்து உள்ளங்கால் வரை பீஸ் (இரும்புத் துண்டுகள்) இருக்கிறது. அதனால், மழை என்றாலும் வெயில் என்றாலும் அடிக்கடி உடல் ரீதியான பிரச்சினைகள். தலைவலி தொடங்கினால் கை, கால்கள் எல்லாம் வீங்கத் தொடங்கும். 6 வருஷமா படுக்கைப் புண் இருக்குது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் போராளி.

கணவனுடன் இருக்கும் படங்கள் டிவியின் மேலும், உடைந்த சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணவர் வீட்டில் இல்லையா என்று கேட்டேன்?

“அவர் வௌியில இருக்கார். அவரும் என்னைப் போல முன்னாள் போராளி ஒருவர்தான். இயக்கத்தில இருந்து விலத்தி வந்துதான் என்னைத் திருமணம் செய்தவர். இடம்பெயர்ந்து முகாமுக்கு வந்தபோது கணவர பிடிச்சுக்கொண்டு பொயிட்டினம். பிறகு சித்திரவதை செய்த பிறகுதான் விட்டினம். ஒரு நாள் அவர் வேலைக்குப் போய் திரும்பி வரல்ல. திடீரென்று காணாமல்போயிட்டார். அவரைத் தேடாத இடமில்ல. சில மாதங்களுக்குப் பிறகுதான் ஒஸ்ரேலியாவில இருக்கிறதா கோல் பண்ணார். பிறகு அங்கயும் கஷ்டமென்டு ப்ரெண்ட் ஒருத்தர்ட உதவியோட பிரான்ஸ் போயிட்டார். அங்க இதுவர அவருக்கு ‘கார்ட்’ கிடைக்கல்ல. இடைக்கிட காசு அனுப்புவார். அதுக்குப் பிறகு நானும் பிள்ளைகளும் அம்மாவும்தான் வாழ்ந்து வந்தோம். அம்மா இரத்தப் புற்றுநோய் வந்து 2012 மோசம் போயிட்டா. இப்ப நாங்க மூன்று பேருதான் இருக்கிறம்”.

கண்களில் கண்ணீர் வலியவில்லை. குரலில் நடுகமும் இல்லை. திடமாகப் பேசுகிறார்.

“2014.6.3ஆம் திகதி இனந்தெரியாத 3 பேர் வந்து கணவர்ட போன் நம்பர கேட்டு என்ன அடிச்சதோட, வீல் செயாரயும் வெளியில தள்ளிவிட்டு பொயிட்டினம். தலையில, கையில, கால்ல காயமென்டதால ஒரு மாசமா ஹொஸ்பிட்டல்ல இருந்தன். பொலிஸில, மனித உரிமைகள் ஆணைக்குழுவுல என்ரி போட்டனான். ஆனா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கல்ல. இனந்தெரியாத ஆக்கள் என்டதால கண்டுபிடிக்க முடியாது என்று பொலிஸால சொல்லினம்”.

மகளை அழைத்து டிவியின் கீழ் இருக்கும் பையொன்றை எடுத்துவருமாறு கூறுகிறார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த வெளியான பத்திரிகை, இணையத்தள செய்திகளின் பிரதிகள் அடங்கிய பை அது. 5, 6 தாள்களைத் தந்தார். இணையதளங்கள் முந்திக்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தன, “முன்னாள் பெண் போராளி மீது இனந்தெரியாதோர் தாக்குதல்”.

காயப்பட்ட நாளில் இருந்து அரசாங்கம் உதவி எதுவும் செய்யவில்லையா என்று கேட்க?

“நான் காயப்பட்டு 15 வருஷமாகிட்டு. அரசாங்கமோ, இல்ல வேறு யாரோ எந்த உதவியும் செய்யல்ல. இருந்த சமுர்த்தியையும் புதுசா வந்த அரசாங்கம் வெட்டிட்டது. வட மாகாண சபையால மாதத்துக்கு 1,500 ரூபா கொடுக்குறாங்க. அந்தக் காச மட்டும்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறன்.

“நாங்க ஏழாத ஆக்கள் என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. இவைக்கு கொமட் வசதி இருக்குதா? பாத்ரூம் வசதி இருக்குதா? கிணறு இருக்குதா? இருக்க வீடு இருக்குதா? என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. எந்த நிறுவனமும் வந்து பார்க்கல்ல. ஒரே ஒரு நாள் ஜி.எஸ். வந்தார். அதுவும், நாங்கள் என்ன மரக்கன்று வச்சிருக்கம், எவ்வளவு வருமானம் என்டு கேட்டுப் போனார். அவ்வளவுதான்”.“நாங்களா உழைச்சாதான் சாப்பிடலாம். ஏழாதென்டு சொல்லி எந்த நிறுவனமும், எந்த அரசாங்கமும் உதவ வராது. கட்டில் கூட நான்தான் காசு குடுத்து வாங்கினன்”.

தான் யாரையும் நம்பியிருக்கவில்லை என்பது அவரது வார்த்தைகளால் தெரிகிறது. இடையிடையே வந்துபோகும் அம்மாவின், தந்தையின் உதவியுடன் அன்றாட தேவைக்கென்று தோட்டம் செய்வதாகக் கூறுகிறார் அவர். நான் சென்றிருந்த அன்றும் வயதான ஒருவர் அரைக் காற்சட்டையுடன் மண்வெட்டியுடன் தோட்டத்தில் நின்றிருந்ததைக் கண்டேன்.

தற்போது தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சக்கர நாற்காலியின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், அதன் பின்னர் தான் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார் என்றும் அவர் கூறுகிறார்.

“நான் தனியாத்தான் வீட்டு வேலைகள செய்றன், அதோட டவுனுக்குப் போகனும், ஹொஸ்பிட்டல் போகனும். உடுப்பு கழுவனும்… இதெல்லாம் இந்த வீல் செயார்ல இருந்து கொண்டுதான் செய்றன். இதுக்கும் காலம் சரி. ஒரு வருஷமாகப் போகுது. இதுதான் கடைசியென்டு தந்தவங்க. நானும் கிறீஸ் எல்லாம் போட்டு, ரேஸர் மாத்தி பாவிச்சிக் கொண்டுதான் இருக்கிறன். இது பழுதாப் போனா அடுத்தக்கட்டமா இன்னொரு வீல்செயார் கிடைக்குமா கிடைக்காதா என்டு கூட தெரியாது” என்கிறார் அவர்.“நான் மருத்துவத்திலதான் தங்கியிருக்கிறன். அடிக்கடி ஹொஸ்பிட்டலுக்குப் போகனும். மினரல் வோட்டரதான் குடிக்கச் சொல்றாங்க. ஆனா அந்த வசதி ஒன்டும் எங்ளிட்ட இல்ல” என்கிறார் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக்கீழ் செயலிழந்த யோகராஜன்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த யோகராஜனுக்கு பாடசாலை செல்லும் வயதில் மூன்று பெண் பிள்ளைகள். முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவை இவர் செலுத்தி வருகிறார். ஆட்டோ செலுத்தி அதில் கிடைக்கும் கொஞ்ச பணத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

“2009 யுத்தம் நடந்த காலப்பகுதியில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது. முள்ளந்தண்டில் இன்னும் பீஸ் இருக்குது. அத எடுத்தா இன்னும் பாதிப்பு என்டு எடுக்காமல் இருக்கன். இது இருக்கிறதால நிறைய பிரச்சின. உடம்பு வலிக்கும், வீங்கும்” என்கிறார் யோகராஜன்.

அவரது மூன்று மகள்களும் வந்து என் பின்னால் நின்று சிரிக்க, யோகராஜன் பார்வையாலேயே அதட்டுகிறார்.“வாழ்வாதார உதவியாக அரசாங்கம் 36,000 தந்தது. அத எவ்வளவு காலத்துக்குத்தான் வச்சுக் கொண்டு இருக்கிறது. அதோட, சித்திர மாதத்தில் இருந்து 3,000 கொடுப்பனவு தாராங்க. முதல்ல 4 மாதத்தையும் சேர்த்து தந்தாங்க. பிறகு ஒரு மாதத்துக்கான கொடுப்பனவ தந்தாங்க. மீதிய இன்னம் தரல்ல. ஆனா போய் சைன் வச்சிக்கொண்டுதான் இருக்கிறம்” என்று கூறுகிறார் அவர்.

அது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரது வார்த்தைகளில் காணமுடியவில்லை. மூன்று மாதங்களாக அந்த உதவித் தொகை இல்லாமல் சமாளித்துவிட்டோம், இனி வந்தாலென்ன, வராவிட்டாலென்ன, சமாளித்துவிடலாம் என்று அவர் எண்ணுவது போல எனக்குத் தோன்றியது.

“நிரந்தரமாக ஒரு தொழில் இல்ல. ஓட்டோ ஓடுறன். கச்சான் விக்கிறன். அதுவும் சீஸனுக்குத்தான் விக்கலாம்” என்கிறார் எதிர்காலம் குறித்து நிச்சயமில்லாமல்.I

“சீவல் தவிர, வேற தொழில் என்டா இவர் செய்யமாட்டார். கண்பார்வை தெரியாதுதானே” என்கிறார் முன்னாள் பெண் போராளியான நகுலேஷ்வரன் அருள்மீரா.

1997ஆம் ஆண்டும் இடம்பெற்ற மோதலின்போது இடது கையை இழந்துள்ள அருள்மீரா 2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வின் பின்னரே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

பிறவியிலேயே கண்பார்வையை இழந்த நகுலேஷ்வரனை அருள்மீரா திருமணம் செய்திருக்கிறார். இருவரும் 2014ஆம் ஆண்டு முதல் முள்ளியவலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

“வீட்டுத்திட்டத்திற்கான காணி தந்திருக்கினம். வீடு கட்டித் தருவினம் என்டு சொல்லியிருக்கினம். ஆனா இன்னும் கிடைக்கல்ல. கிடைக்கும் என்டு நம்பிக்கொண்டிருக்கிறம்” என்கிறார் அருள்மீரா.வாழ்கைய கொண்டு நடத்த என்ன செய்றீங்க என்று கேட்டேன், “பாக்கு சீவி கொடுக்கிறோம்” என்றார் நகுலேஷ்வரன். யார் சீவுவது? “நான்தான்” என்றார் அவர். கண்பார்வை தெரியாதவர் எப்படி என்று திகைத்துப் போனேன். நான் உட்கார்ந்திருந்த அறையின் ஓரத்தில் பெரிய பாக்கு வெட்டியொன்று பொருத்தப்பட்டிருந்த மேசையொன்று இருந்தது. அருள்மீராவைப் பார்த்து, “ரெண்டு பாக்கு எடுத்திட்டு வா” என்று கூறியவாறு சுவரை தடவிக்கொண்டு பாக்கு வெட்டி மேசையை நோக்கி நகர்ந்தார். கண் பார்வை உள்ள எங்களால் கூட அவ்வாறு பாக்கை சீவ முடியாது. அவ்வளவு நேர்த்தி.

இந்தத் தொழிலை எப்படி ஆரம்பித்தீர்கள் என்று அருள்மீராவிடம் கேட்டேன்?

“வெளிநாட்டில இருந்து ஒருத்தர் நாற்பதாயிரம் காசு தந்து உதவினார். அத கொண்டுதான் சின்னதா பாக்கு சீவல் வேலைய தொடங்கினம். பாக்கு சீவி ஒரு கிலோ குடுத்தா 40 ரூபா கிடைக்கும். இன்னும் கொஞ்சம் காசு உதவி கிடைச்சா இந்தத் தொழில நல்லா செய்துகொண்டு போகலாம்” என்கிறார் அருள்மீரா.“அரசாங்கம் இதுவர எந்த உதவியும் செய்யல்ல. கூலி வேலையோ, கடற்தொழில் வேலையோ இவரால செய்ய முடியாது. சீவல தவிர இவரால வேற எதுவும் செய்யமுடியாது. வீட்டுலயே இருந்து இந்தத் தொழிலதான் செய்யலாம். இந்தத் தொழில செஞ்சு கொண்டு போக உதவினா நல்லா இருக்கும்” என்று உதவிகோருகிறார் அருள்மீரா.“2009இல நான் அனுபவப்பட்ட மாதிரி வேறு யாரும் அனுபவப்பட்டிருக்க மாட்டாங்க. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலை. எங்க பார்த்தாலும் மனிதப் பிணங்கள். கொத்துக் கொத்தாக சனம் கொல்லப்பட்ட கிடந்தாங்க. அதையும் கடந்து வரும்போதுதான் எனக்கு துப்பாக்கிச் சூடு பட்டது. 2009.2.4ஆம் திகதிதான் நான் காயப்பட்டன்”.

இவ்வாறு கூறுகிறார் வட்டக்கச்சியைச் சேர்ந்த பிரபாகரன். பிரபாகரனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டதால் நிரந்தரமாக சக்கர நாற்காலியில் உட்காரவேண்டி ஏற்பட்டுவிட்டது.

இருப்பினும், மன உறுதி மிக்கவர். தானாக அத்தனை வேலைகளையும் செய்துகொள்கிறார்.

“ஒரு கால் இல்லாதவர் எப்படியும் சமாளித்துக் கொள்வார். ஆனால், ஸ்பெஷலா முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் வீல் செயாரில் இருப்பதால் நிறைய கஷ்டத்த எதிர்கொள்றம். எங்களுக்கு இன்னொருத்தர்ட உதவி கட்டாயமா தேவைப்படுது. அரச கட்டடங்கள்ல, பஸ்ல எல்லாம் இன்னொருத்தர்ட உதவியோட ஏறவேண்டியிருக்கு. இது எனக்கு மனக்கஷ்டத்த தரக்கூடியதா இருக்கு.

உளவியல் ரீதியாக பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. தனக்கு யாரிடமும் கையேந்த விருப்பமில்லை என்ற வார்த்தை அடிக்கடி அவர் வாயிலிருந்து வந்து கொண்டே இருந்தது.“சாதாரணமான கூலி வேலைக்குப் போய் 1,000 ரூபா உழைக்கிறவர் கிட்ட கேட்டா, கஷ்டமென்டுதான் சொல்வார். 24 மணித்தியாலமும் இதுல இருக்கிற எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். வாழ்வாதார ரீதியா முற்றுமுழுதா பாதிக்கப்படுறம்” என்று கூற எம்மிடம் பதில் இல்லை.

தான் போன்றவர்களுக்கு இருக்கும் திறமையை பரீட்சித்து தொழில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கூறும் பிரபாகரன், ஆனால், தன்னை விட தகுதி குறைந்தவர்கள் அரச, தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.

“கொம்பியூட்டர் பக்கம் எல்லாம் நான் செய்வன். ஹார்ட்வெயார் புல்லா செய்வன், சொப்ட்வெயார் இன்ஸ்டொலேஷன் எல்லாம் செய்வன். எனக்கு உள்ள திறமைய செக் பண்ணலாம். வேலை செய்யாத கொம்யூட்டர தந்திட்டு திருத்தித் தரச்சொன்னா இரண்டு நிமிஷத்தில என்ன பிரச்சின என்டு கண்டுபிடிப்பன்” – ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அவர்.“இந்த அரசாங்கம் மாறியும் எந்தவித பயனும் எங்களுக்கு இல்லை. 2016ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில எங்களுக்கென்று ஏன் காசு ஒதுக்க முடியாது? வட மாகாண சபையால 1,500 ரூபா தாராங்க. அத வச்சிக்கொண்டு என்னத்த செய்யலாம்? அதக்கொண்டு சந்தைக்குப் போனா 100 ரூபா காசுதான் மிஞ்சும். ஏன் எங்கள மாதிரி ஆக்களுக்கு அரசாங்கத்தால உதவி செய்ய முடியாதா?”

“சாராரணமாக படை வீரர்களுக்கு 55,000 சம்பளம் கொடுக்குறாங்க. அதுக்காக அத அப்படியே எங்களுக்கு தா என்டு கேக்கல்ல. எங்களயும் இந்த நாட்டின் பிரஜைகளாக கருத்தில் கொண்டு வாழவிடுங்க” – பிரபாகரனின் இந்தக் கருத்தை ‘மாற்றம்’ அரசு செவிமடுக்குமா?“எனக்கு மகன படிக்க வைக்கோனும் என்டு ஆசை இருக்குது. படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” முள்ளியவலையைச் சேர்ந்த நகுலேஸ்வரி தனது மகனின் எதிர்காலம் குறித்த தனது கனவை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

முன்னாள் போராளியான நகுலேஸ்வரி ஆயுதப் பயிற்சியின்போது தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவர்.

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வின் பின் விடுதலையாகி 2011ஆம் திருமணம் செய்துள்ளார். ஒரு மகனுடன் வாழ்ந்துவரும் இவர்களுக்கு ஒரு சில உதவிகள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவை முழுமையாக கிடைக்கப் பெறாததால் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.“மூன்று குடும்பங்கள் சேர்ந்து இந்த ஓட்டோவ வாங்கித் தந்தவ. உடனே நாங்க அறுபதினாயிரம் கட்டினனாங்கள். அதுக்குப் பிறகு மாதம் மாதம் ஏழாயிரம் கட்டிக் கொண்டிருக்கிறம். ஓட்டம் பெரிசா வாரதில்ல. பார்க்ல நிறுத்த பத்தாயிரம் வேணும். சாப்பிடறமோ இல்லையோ காசு கட்டியே ஆகனும். வீடும் கட்டி குறையாதான் இருக்கு” என்கிறார் நகுலேஸ்வரி.

நகுலேஸ்வரியால் ஒருவேலையும் செய்ய முடியாததால் அவருடைய கணவர்தான் அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.

“இவரு கூலி வேலை செஞ்சிதான் என்னயும் பிள்ளயையும் பார்த்து வரார். காலையில எழும்பி முற்றத்த கூட்டி, சட்டி பானை கழுவி, காலை – பகல் சாப்பாடு செஞ்சி வச்ச பிறகுதான் வேலைக்குப் போரார். ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போறதில்ல. சந்தர்ப்பம் கிடைக்காது. எங்களுக்கு எல்லா வேலையும் செய்து முடியும்போதே நேரம் போயிடும். இப்ப மழைக்காலம் என்டதால இன்னும் கஷ்டமாக இருக்கு” என்று கூறுகிறார் அவர்.

என்ன உதவி எதிர்பார்க்குறீங்க என்று கேட்டதற்கு?

“பசு மாடு எடுத்துத் தந்தா பால் கறந்து விக்கலாம். கோழி வாங்கித் தந்தா வளர்க்கலாம்” என்கிறார் நகுலேஸ்வரி.

மகன் படிக்கிறாரா என்று கேட்டேன்?

“எனக்கு மகன படிக்க வைக்ககோனும் என்டு ஆசை இருக்குது; ஒரு உத்தியோகம் செய்யவைக்க ஆசையா இருக்குது. இங்கிலீஸ் எல்லாம் படிக்க வைக்க ஆசை. எனக்கும் கூட இங்கிலீஸ் படிக்க, பேச ஆசை. எனக்கு இன்னும் படிக்க விருப்பம். ஆனா முடியாது. அதனால என்ட மகன இங்கிலீஸ் படிக்கவைக்கனும். படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” – நகுலேஸ்வரியின் கனவு கனவாக இல்லாமல் நனவாகட்டும்.
Read more...

டக்ளஸ் இந்தியா வந்தால் தரும அடிவிழுமாம்! காப்பாற்றட்டாம்! ஆடு நனையுதென ஓநாயாக அழுகின்றார் ராம்!

இந்தியாவில் சூளைமேட்டு பிரதேசத்தில் கொள்ளையடிக்கச் சென்றபோது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றும் இலங்கை சிறுவன் ஒருவனை கடத்தி பெற்றோரிடம் கப்பம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானத்தாவிற்கு எதிராக இந்திய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ள இவ்வழக்கில் டக்ளஸை நேரடியாக சென்னை நீதிமன்றில் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ராம் என்பவர் டக்ளஸ் களுத்துறை சிறையில் வாங்கிக்கட்டியதுபோல் இந்தியாவிற்கு வந்தால் சென்னையிலும் தருமஅடி வாங்க நேரிடுமென அச்சம் வெளியிட்டுள்ளதுடன் விடியோ கொண்பரஸ் மூலம் சாட்சியமளிக்க அவருக்கு அவகாசம் வழங்கவேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.

ராமின் கட்டுரையின் முழுவடிவம் :

சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது துரத்துகிறது தேவானந்தாவை சூளைமேடு திருdeva-chennaiநாவுகரசு கொலை வழக்கு. 1986ல் நடந்த சம்பவத்தின் பொலிஸ் தரப்பு சாட்சிகள் 18 பேரும் 2016 ஜனவரி 18ல் நீதிமன்றில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி கூடுதல் செசன் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார். பலத்த வாத பிரதிவாதங்கள் கொண்டதே இந்த வழக்கு என்பது என் வாதம்.

நீதிமன்றத்தில் இருக்கும் விடயம் பற்றி எழுதுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என கூறும், வாதிடும் எவரும் தகவல் அறியும் உரிமை பொது மக்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் காலம் தாழ்த்திய நீதி கூட மறுக்கப்பட்ட நீதியாக தான் கொள்ளப்படும். இங்கு பாதிக்கப் பட்டவர் மட்டுமல்ல குற்றம் சுமத்தப்பட்டவரும் தனக்கான நீதி கிடைக்கவில்லை என கூறலாம்.

நடந்த சம்பவம் பற்றிய நினைவு, மற்றும் பதிவுகள் மாற்றத்துக்கு உட்படாத வகையில் வருடக் கணக்காக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரங்கள் அழிக்கப்பட்ட, புதிதாக இணைக்கப்பட்ட எத்தனையோ நிகழ்வுகள் நாம் அறிந்தவை. இலங்கையில் நடந்த ஒரு பிரபல அபின் எனும் போதை பொருள் வழக்கில் வாதாடிய வக்கீல், பிடிபட்டது பழப்புளி என வாதத்தால் நிரூபித்தார்.

பிடிபட்டது அபின். ஆனால் அதற்கு சீல் வைத்து பாதுகாத்த அதிகாரியை குழப்பியது வக்கீல். எப்படி ? மதுப் பிரியரான காவல்துறை அதிகாரிக்கு மது விருந்து வக்கீலின் கையாளால் கொடுக்கப்பட்டது. நிறை போதையில் இருந்தவரிடம் பிரபல வக்கீல் ஆஜராவதால் நீ தோற்று விடுவாய், அந்த பெட்டிக்குள் இருப்பது வெறும் பழப்புளி என புரளி கூற, தடுமாறிய அதிகாரி சீல் வைத்த பெட்டியை உடைத்தார்.

உள்ளே அபின் தான் இருந்தது. ஆனால் நீதிமன்றில் சீல் உடைக்கப்பட்டதை நிரூபித்து, காவல் துறை பழப் புளிக்கு பதிலாக அபினை வைத்து வேண்டுமென்றே தன் கட்சிக் காரருக்கு எதிராக சோடித்த வழக்கு என வக்கீல் வாதிட்டு விடுதலை பெற்று கொடுத்தார். இன்னொரு கொலை வழக்கில் பனை மரத்தில் இருந்த கள் முட்டியை தான் மாற்றும் போது எதிரி சுடுவதை பார்த்தேன் என சாட்சி கூறினார்.

சம்பவ இடத்தை பார்க்க போனபோது அங்கு பனை மரம் இருந்த அடையாளம் கூட இல்லாமல் அந்த இடம் வயலாக மாறி நன்கு உழுது நெல் விதைக்கப்பட்டிருந்தது. அயலவர்கள் அங்கு பனைமரம் இருக்கவில்லை காலா காலமாக அது விளை பூமிதான் என நீதிவானிடம் கூறினர். பணம் பாதாளம் வரை மட்டுமல்ல பனை மரம் வரை சென்றது கூட, அந்த கெட்டிக்கார வக்கீலின் புத்திசாலித்தனம்.

சூளைமேடு சம்பவத்தில் தேவானந்தா உடன் சேர்த்து 9 பேரின் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது காலம் முன்பு தான் தேவானந்தா யாழில் இருந்து சென்னை வந்திருந்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும் இராணுவ தளபதியாகவும் அப்போது அவர் இருந்தார்.

ஆனால் உட்கட்சி முரண்பாடு உச்சநிலையில் இருந்ததால் அவரும் அவரது தோழர்களும் தனியான இடத்தில் தங்கி இருந்தனர். அப்போது தேவானந்தாவின் சகோதரர் நடவடிக்கை காரணமாக பொருள் கைமாற்றும் செயலில் ஏற்பட்ட, கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட பிரச்சனை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு பெரிதானதால் இடையில் அகப்பட்ட திருநாவுகரசு என்பவர் பலியானார்.

இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்க படவேண்டியவை. ஒன்று சம்பவ இடத்திற்கு தேவானந்தா பின்பு தான் வந்தார். இரண்டாவது திருநாவுகரசை குறிவைத்து சூடு நடத்தப்படவில்லை. தம்மை பாதுகாக்க துப்பாக்கி சூடு நடத்தியிராவிட்டால் அங்கு கூடிய கூட்டம் தம்மை அடித்தே கொன்றிருக்கும் என பின்பு சரணடைந்தவர்கள் கூறினர். சென்னையில் தர்மஅடி கொடுக்க என்றே ஒரு கூட்டம் உள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பு ஆட்சியில் இருந்த எம் ஜி ஆர் அவர்களை நடவடிக்கை எடுக்க தூண்டியது. ஏற்கனவே அமெரிக்கரான அலன் தம்பதியினரை சி ஐ ஏ ஏஜண்டுகள் என யாழில் கடத்தி அவர்களை விடுவிக்க தமிழ் நாடு முதல்வரிடம் கோடிக்காணக்கான தங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க, அந்த நேரம் அமெரிக்க உயர்மட்ட விஜயம் டெல்கியில் நிகழ இருந்ததால் இந்திரா காந்தி தலையிட்டு எம் ஜி ஆர் உத்தரவில் அலன் தம்பதி விடுவிக்க பட்டனர்.

ஏற்கனவே தன்னை நோண்டிய கடுப்பில் இருந்த எம் ஜி ஆர் தம்மீது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகித்த ஈ பி ஆர் எல் எப் தலைமை பீடம் தேவானந்தாவை இயக்கத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவித்து தம்மை பாதுகாத்து கொண்டது. இயக்க உள்முரண்பாட்டுக்கு தேவானந்தாவின் தென்மராட்சி உட்பட பெருமாள் கோவில் சம்பவங்களும் காரணமாகும்.

அதையே சென்னையிலும் தொடர அது இயக்கத்தின் இருப்பு நிலைக்கு ஆபத்தாகும் என்பதனால், அவரை இயக்கத்தை விட்டு வெளியேற்றும் நிலை ஏற்ப்பட்டது. சென்னை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தேவானந்தா இலங்கை சிறுவன் ஒருவனை கப்பம் கேட்டு கடத்தியதாக கைது செய்யப்பட்டு மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கபட்டு சிறிது காலத்தில் பிணையில் வந்தார்.

1990ல் கொழும்பு திரும்பிய அவர் அதன் பின் இந்தியா சென்று திரும்பி உள்ளார். மகிந்த அரசின் மந்திரியாக அவர் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது தான் அவர் மீதான சூளைமேடு பூதம் புகழேந்தி என்ற வழக்கறிஞரால் மீண்டும் வெளியே வந்தது. ஜாமீனில் வந்த தேவானந்தா வழக்கு தவணைகளுக்கு ஆஜராகாததால் அவர் மீது பிடிவிறாந்து பிற ப்பிக்கபட்டது.

தேடப்படும் நபர் பாரதப் பிரதமரை எவ்வாறு சந்திக்கலாம் என்ற கேள்விக்கு அவருக்கான அமைச்சர் என்ற ராஜதந்திர பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டது. ஆனால் அதன் பின் தேவானாந்தாவின் இந்திய விஜயத்துக்கு கால்கட்டு போடப்பட்டது. தேவானந்தா தான் எங்கும் ஓடி ஒளிக்கவில்லை என்றும், தன் மீது பிறப்பிக்க பட்டுள்ள பிடிவிறாந்து நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

மேலதிகமாக தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாக தன்னால் சென்னை நீதிமன்றில் ஆஜராக முடியாது என்றும் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகர் பணிமனையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் தன்னை விசாரிக்கும் படியும் அவர் வைத்த கோரிக்கை ஏற்க்கப்பட்டது. ஆனால் அவை எதுவும் இடம் பெறாமல் கால இழுத்தடிப்பு ஏற்பட்டதை காரணம் காட்டியே இன்று அது தூசு தட்டப்படுகிறது.


இங்கு கவனிக்க வேண்டியது கொலை குற்றம் சாட்டப்பட்ட தேவானந்தா ஒரு இலங்கை பிரஜை. அவர் எவ்வாறு விசாரணை காலத்தில் விமான நிலையம் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப முடிந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களோடு தொடர்பு பட்டவர்களுக்கு தான் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார்.

தென்னிலங்கையில் லலித் அத்துலத் முதலியை கடத்தும் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈ பி ஆர் எல் எப் இயக்க தலைவர் பத்மநாபா சட்டப்படி கொழும்பு செல்ல முடியாமல் போனது அதனால் தான். ஒரே ஒரு தடவை மட்டுமே அப்போது இந்திய அமைதி படை தளபதியாக இருந்த ஜெனரல் கல்கட் தன்னுடன் திருகோணமலையில் இருந்து நாபாவை கொழும்பு கூட்டி சென்றார். எனவே பொது மன்னிப்பு தேவானந்தாவுக்கு பொருந்தாது.

அதே வேளை அவர் தலைமறை வாகவும் இல்லை. 1990 முதல் அவர் பகிரங்கமாக இலங்கையில் செயல் படுகிறார். களுத்துறை சிறையில் கூட அவருக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் சென்னையில் சர்வ சாதாராணமாக நடக்கலாம். குற்றம் சாட்டப் பட்டவரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கனவே கொடுத்த வீடியோ கான்பரன்சிங் மூலமான விசாரணையை தொடங்குவதே சாலச்சிறந்தது.

அன்று அவர் அமைச்சராக இருந்தவர். அதனால் பாதுகாப்பிற்காக அவ்வாறான ஒழுங்கிற்கு உத்தரவிடப்பட்டது ஆனால் இன்று அவர் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே எனவே அவருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு தேவை இல்லை என வாதிட முடியாது. சென்னைக்கே உரித்தான தர்மஅடி கொடுக்கும் புண்ணியவான்களின் செயல்களில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை காப்பாற்றுவது சுலபமல்ல.

Read more...

Wednesday, December 16, 2015

ராஜபச்சவின் கிச்சின் கபினட்டில் முக்கிய அமைச்சரான மின்னல் ரங்காவின் புதிய புரளி.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் கை கட்டி, வாய் பொத்தி நின்றார்களே ஒழிய தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக் கொடுத்து இருக்கவில்லை என்று சக்தி ரி. வியின் மின்னல் நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா.

குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மஹிந்தவின் தமிழ் அமைச்சர்கள் உருப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை என்று இவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றார்.

ஆனால் மற்றவர்களை விமர்சனம் செய்கின்றமைக்கு முன்பாக ஸ்ரீரங்கா சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியவர் ரங்கா. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிக நெருக்கமானவராக காணப்பட்டார்.

இதனால்தான் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இருந்த காலத்தை விட ஸ்ரீரங்கா அலரி மாளிகையில் இருந்த காலம் மிக அதிகம் என்று சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நக்கல் அடிக்கின்றமை வழக்கமாக இருந்தது.

ஸ்ரீரங்காவின் திருமணத்துக்கு சாட்சிக் கையொப்பம் இட்டவர் யார் தெரியுமா? சாட்சாத் மஹிந்த ராஜபக்ஸதான். அப்போது இடம்பெற்ற ஒரு சம்பவம் மிகவும் சுவாரஷியம் ஆனது. மஹிந்த ராஜபக்ஸ மறிக்க மறிக்க திருமண ஒப்பந்த பிரகடனத்தை சிங்களத்தில் வாசித்து முடித்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் ரங்கா.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டு இருந்த 500 சொகுசு வாகனங்களில் 03 வாகனங்கள் அலரி மாளிகையால் ரங்கா எம். பிக்கு வழங்கப்பட்டு இருந்தன. இப்புள்ளிவிபரத்தை ஜே. வி. பி எம். பிகள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். கான்செட்டிலும் இது பதிவானது.

மஹிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணங்கள் பலவற்றின் போது ஸ்ரீரங்காவும், நாமல் ராஜபக்ஸவும் உடன் சென்றும் உள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு மாத்திரம் அன்றி நாமல் ராஜபக்ஸவுக்கும், ராஜபக்ஸ குடும்பத்துக்கும் மிக வேண்டியவராக இவர் காணப்பட்டார். இதனால்தான் ரிசாத் பதியுதீன் மின்னல் ரங்காவின் கன்னத்தில் பளார் விட பதிலுக்கு ரிசாத் மீது தாக்குதல் நடத்தினார் நாமல். நாமலின் நாளைய இளைஞர் அமைப்பிலும் ரங்கா முக்கிய பிரமுகர்.

மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டுப் பிள்ளையாக ரங்கா விளங்கினார். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இரு அமைச்சரவை காணப்படும். ஒன்று வெளிப்படையாக தெரிகின்ற அமைச்சரவை. மற்றையது கிச்சின் கபினெட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் கிச்சின் அமைச்சரவையில்தான் எடுக்கப்படுவது வழக்கம்.

மஹிந்த ராஜபக்ஸவின் கிச்சின் அமைச்சரவையில் ரங்கா ஒரு முக்கிய அமைச்சராக இருந்தார். கிச்சின் அமைச்சராக இருந்துதான் ஏராளம் சலுகைகளை பெற்றுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த தமிழ் அமைச்சர்கள் செய்யத் தவறிய விடயங்களை கிச்சின் அமைச்சர் ரங்கா நிச்சயம் செய்து கொடுத்து இருக்கலாமே? அப்போது பேசாமடந்தையாக இருந்து விட்டு இப்போது இவர் மற்றவர்களை பேசித் திரிவது எவ்வகையில் நியாயம் என்று அரசியல் அவதானிகள் வினவுகின்றார்கள்.

ரங்கா கடந்த சுமார் 20 வருடங்களாக சக்தியின் மின்னலில் மின்னி வருகின்றார். ஆனால் இன்றுவரை தமிழ் ஒழுங்காக பேசத்தெரியாது. அஃறிணை உயர்திணை வரவே வராது. இவன் தமிழை கொல்கின்றான் என பலர் கிளிமகாராஜாவிற்கு முறையிட்டிருக்கின்றனர். அனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. அதற்கு காரணம் என்வென்பது வெளிப்படையான ரகசியம்.

இந்த வெளிப்படையான இரகசியத்தினாலேயே கிளிமகாராஜாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது அரசியல் வட்டத்திற்கு பரகசியம் என்றாலும் மக்களுக்கு தெரியாது.

ஐக்கிய தேசியக் கட்சியில் நுவரேலிய மாவட்த்தில் ரங்காவிற்கு சீட் கொடுக்குமாறு ரணிலை கேட்டார் கிளி மகாராஜா. ரணிலும் சீட்டை கொடுத்தார். அத்துடன் நின்றுவிடவில்லை கிளி. ரங்காவின் அம்மாவிற்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கசொல்லியும் கேட்டாராம். கெட் லொஸ்ட் என்றாரம் ரணில். இப்போது விளங்குகின்றதா ஏன் ரங்காவை கிளியின் கொறசொட் என்று சிங்களத்தில் பாராளுமன்றில் கிண்டலடிப்பார்கள் என்று.

Read more...

31ஆவது வருடாந்த கலாபூசணம் அரச விருது வழங்கல் விழா-2015 . ந.அனந்தராஜ் அவர்கட்கு 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூசணம் விருது!

கலாசார அலுவல்கள் திணைக்களம், உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடத்திய 31ஆவது, வருடாந்த கலாபூசணம் அரச விருது வழங்கல் விழா-2015 அண்மையில் மகாரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஸ்ரீலங்கா யுத் மண்டபத்தில் கடந்த டிசெம்பர மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

கடந்த காலத்தில் கலைத்துறைக்கு உன்னதமான சேவையை ஆற்றிய கலைஞர்களைக் கௌரவிக்கும் முகமாக நடத்தப்பட்ட மேற்படி அரச வைபவத்தில் இலங்கை முழுவதும் இருந்து 70 தமிழ் கலைஞர்களுக்கும், 25 முஸ்லிம் கலைஞர்களுக்கும், 206 சிங்கள கலைஞர்களுக்குமாக 301 கலைஞர்கள் “கலாபூசணம்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணி ஆற்றி, சிறுகதை, கல்வி, நாட்டார் இலக்கியம், அறிவியல், ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாறு மற்றும் முகாமைத்துவம், நூலகம், ஊடகத்துறை என 19 நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரை களையும், பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து கலை இலக்கியத் துறைக்குச் சேவையாற்றிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ந.அனந்தராஜ் அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வல்வை.ந.அனந்தராஜ், ஆனந்தி, ஆனந்தன், அன்ன பூரணன், வல்வை ஆனந்தன் என்ற புனைபெயர்களில் இலக்கிய ஆக்கங்களைப் படைத்து வந்த திரு.ந.அனந்தராஜ் அவர்கள் ஒரு முதுமாணிப் பட்டதாரியும், இலங்கை அதிபர் சேவையையும், இலங்கைகல்வி நிர்வாகசேவையையும் சேர்ந்தவருமாவார். வடமாகாணக் கல்வி அமைச்சில் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும், உலக வங்கியின் நிபுணத்வ ஆலோசகருமாகக் கடமையாற்றிய இவர் தற்போது, ஆறுதல் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகராகவும், யாழ் பல்கலைக் கழகத்தின் ஊடகத்துறை வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

ஏற்கனவே இவரது கலைச் சேவையைப் பாராட்டி வல்வை கவிக்குயில்கள் கலா மன்றத்தினர் “அழகிய கண்ணே” விருதினையும், வடமராட்சி வடக்குப் பிரதேச சபை “கலைப் பரிதி” விருதினையும், வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு “முதலமைச்சர்” விருதினையும் வழங்கிக் கௌரவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, December 14, 2015

“முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” வருக! வருக!

தமிழ் மாமன்றம் நடாத்தும் இம் மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு, வவுனியா பொதுசனநூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது. இக் கலந்துரையாடல் நிகழ்வில், சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளைக் கிழிந்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்துகின்ற, மிக அரிதாக காணக்கிடைக்கின்ற ஒரு புத்தகமும், 1997ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசுபெற்ற நாவலும் ஆகிய அருந்ததி ராய் அவர்கள் எழுதிய முதல் புதினமான “The God of Small Things” இன் தமிழ் மொழி பெயர்ப்பான “ சின்ன விஷயங்களின் கடவுள்” எனும் ஜி.குப்புசாமி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் ஜே. சாள்ஸ் அவர்களாலும்,

அருங்கவிஞர் ஆனந்தரவி அவர்களால் எழுதப்பட்ட, “முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” எனும் கவிதை தொகுதி தெ.மிதிலைமாறன் அவர்களாலும் பகிரப்படவிருக்கின்றன. முதியோர் இல்லங்களின் பெருக்கம், முதியோர்கள் கவனிக்கப்பட வேண்டிய விதம், முதியோர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் என்பவற்றை மையப்படுத்திய ஓர் கலந்துரையாடல் நிகழ்வாகவும், அந் நூலின் பகிர்வாகவும் இந் நிகழ்வு அமையவிருக்கின்றது.

நல்ல படைப்புக்களை அறிமுகம் செய்தல், அதனூடக எமது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்தல், வாசிப்புப் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதிகரிக்கச் செய்தல் போன்ற நல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இவ் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வானது, தொடர்ச்சியாக மாதம் இருமுறை வவுனியா பொது நூலகத்தில், தமிழ் மாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இடம்பெறவிருக்கின்ற நிகழ்வுகளில், எழுத்தாளர்களை அழைத்து வந்த, அவர்களின் படைப்புக்கள் பற்றி கலந்துரையாட இருப்பதோடு, அவர்களின் எழுத்துலக அனுபவங்கள், இச் சமூகம் மீதான அவர்களின் பார்வைகள் என்ற ரீதியிலும், இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்களாகவும் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தமிழ் மாமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படைப்புகளை பகிர மற்றும் நுகர ஆர்வமுள்ள அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு தமிழ்மாமன்றம் அழைக்கின்றது.
Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com