Friday, December 25, 2015

கொழும்பின் சதியா? யாழின் விதியா? என கம்பவாரிதி ஜெயராஜுவுக்கு தெரியாதாம்.

வட மாகாண சபைக்கு வேட்பு மனுக்கோரப்பட்டு அதன் வேட்பாளர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றபோது விக்கினேசுவரனை விடச்சிறந்த தெரிவு கிடைக்கவே கிடைக்காது என்றும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்றும் ஒற்றைக்காலில் நின்றவர்களில் முதலாமவர் கம்பவாரிதி.

தற்போது முதலமைச்சர் என்ற பூனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பைக்கு வெளியே பாய்ந்துவிட்டது. கூட நின்ற புனைக்குட்டிகள் கீயா மீயா என கத்துகின்றன. ஆனால் கம்பவாரிதியோ ஒப்பாரியிடுகின்றார். அவரது ஒப்பாரியில் நான் கொண்டுவந்து நிறுத்தியவர் நல்லவர்தான், ஆனால் இது அவருடைய தப்பல்ல யாழின் விதியாக அல்லது கொழும்பின் சதியாக இருக்கவேண்டுமென, இத்தனை காலமும் அத்தனை அரசியல் பித்தலாட்டக்காரரும் தமிழ் மக்கள் காதில் சூட்டி காய்ந்து சருகாகிய பூவைத்தூக்கி மீண்டுமொருமுறை வைக்கப்பார்க்கின்றார்.

கம்பவாரிதியின் இக்கட்டுரைக்கு பதிலுரைக்க நேரத்தை செலவிடுவதிலும் பார்க்க அக்கட்டுரையை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே விட்டு எனது கருத்தை தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.

கொழும்பின் சதியா? யாழின் விதியா? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை, ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான்.

கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன, பேராசிரியர் சிற்றம்பலமும் என, கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து, இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி, இரட்டைவேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில், இரகசியக் கூட்டம் போட்டு, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை, உருவாக்கியிருக்கிறார்கள்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். முதலமைச்சருக்கும் குறுகுறுத்திருக்கிறது. அதனாற்றான் ‘தமிழ்மக்கள் பேரவை’ அரசியல் கட்சியல்ல, மாற்றுத்தலைமைக்கான ஆரம்பமுமல்ல என்று, ‘அப்பா குதிருக்குள் இல்லை’ என்றாற்போல், அறிக்கை விட்டிருக்கிறார் அவர்.

குறுகுறுக்காமல் எப்படி இருக்கமுடியும்? கடந்த மாகாணசபைத் தேர்தலில், கட்சிகளைக் கடந்த, சமூக அந்தஸ்துடைய, தக்க ஒருவரை, தம் சார்பாகத் தேர்தலில் நிறுத்துவதன் மூலம், கூட்டமைப்புக்குள் எழ ஆரம்பித்திருந்த, சிறு சிறு வெடிப்புக்களை நீக்கலாம் என்றும், மக்கள் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பதாய்க் காட்டலாம் என்றும், ஒரு உயர்ந்தவரை வைத்து உலகுக்கு உண்மை உரைக்கலாம் என்றும்,
சமூகப் பிரமுகர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில், சம்பந்தனும் சுமந்திரனும் கணக்குப்போட, விடையாய் வந்தவர்தான் நம் விக்னேஸ்வரன்.

முதலில் மாட்டேன் என்று ‘பிகு’பண்ணி, பிறகு எல்லோரும் சேர்ந்து அழைத்தால், ‘மாட்டுவேன்’ என்று அறிக்கைவிட்டு, இனமானத்தைக் காக்க, தன்மானத்தை உறுதி செய்துகொண்டு, அரசியலுள் நுழைந்தார் விக்னேஸ்வரன்.

இவர் வருகையின் போது, கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட அதிர்வுகள், கட்சியைப் பொறுத்தவரை ‘சுனாமி’க்கு ஒப்பானவை. தமிழ்மக்களுக்குத் ‘தொண்டு’(?) செய்வதற்காய், முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த, கூட்டமைப்புக்குள் இருந்த பெருந்தலைகள் பல, இவருக்குப் பதவி என்றதும், ஆடி, அசைந்து பின் சம்பந்தனின் ஆற்றுகையில் அடங்கிப்போயின. வஞ்சகம் இல்லாமல் வழிவிட்ட, மாவை போன்றோரைப் போற்றி, ‘அவர்கள் ஆலோசனையைப் பெற்றே இயங்குவேன்’ என்று, அப்போது விக்னேஸ்வரன் விட்ட அறிக்கை, இப்போதும் நினைவில் இருக்கிறது. அவ் அறிக்கை சத்தியத்தால் விளைந்தது என நினைந்தோம். அது சாமர்த்தியத்தால் விளைந்தது என இப்போதுதான் புரிகிறது.

கூட்டமைப்புத் தலைவர்கள் விக்னேஸ்வரனை, சந்தி, சந்தை, சத்திரம் என, பல இடங்களிற்கும் அழைத்துச் சென்று, நடத்திய வாக்கு வேட்டைப் புகைப்படங்கள், பல பத்திரிகைகளிலும் அப்போது வெளியாகின. அவரது தேர்தல் செலவுக்கென சம்பந்தனும் சுமந்திரனும், வெளிநாட்டுத் தமிழர்களைச் சந்தித்துத் திரும்பினர். கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் நீக்கி, தமது வாக்காலும், வளத்தாலும், விக்னேஸ்வரனது வெற்றியை உறுதி செய்து, அவரைப் பெருமளவு வாக்குகள் பெறவைத்து, முதலமைச்சராக்கிய பெருமை, கூட்டமைப்புக்கே உரியது என்பதை, எவரும் மறுக்கத் துணியார்.
இவரும் மறுக்கத் துணியார்.

பதவியும், பவுசும் வந்ததும், முதலமைச்சர் மெல்ல மெல்ல மாறத்தொடங்கினார். தனது இயல்பான சண்டைக் குணத்தாலும், நிர்வாகத்திறமையின்மையாலும், மாகாணசபைத் தேரை, அங்குலக் கணக்கிலும் அசைக்க முடியாமல் போக, அதிமானம் கொண்டவரான முதலமைச்சர், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் துணிவின்றி, அனைவர் கவனத்தையும் திசைதிருப்ப, தமிழ்மக்களது உணர்ச்சியைக் கிளப்பி, அரசியல் செய்யும் புதுவழியைக் கண்டுபிடித்தார். அதற்கு எழுந்த ஆதரவு அலையில், அற்புதமாய்த் தனது பலயீனங்களை மூடி மறைத்தார்.

கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும் சிந்தனை வேறாகிவிடும் என்றான் கம்பன். ‘அறம் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்
பெறல் அரும் திரு பெற்றபின் சிந்தனை பிறிதாம்’

கம்பனின் இக்கருத்திற்கு ஏற்ப, முன்னாள் நீதியரசரின் சிந்தையும் சில கூனிகளின் ஆலோசனையால், கைகேயியின் மனம்போல் திரிந்தது. அது தூய சிந்தையா? என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம்.

குறுக்கு வழியில் நடக்கத்தலைப்பட்ட முதலமைச்சர், அதன் உச்சக்கட்டமாக, கடந்த தேர்தலில், கூட்டமைப்பின் எதிரிகளுடன் மறைமுகமாய்க் கைகோர்த்து, கூட்டமைப்பிற்கு எதிராய்ச் செயற்படத் தலைப்பட்டார். அக் கள்ளத்தொடர்பு ஓரளவு பகிரங்கமாக, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் உரைக்க முடியாமல், தான் ஊமையாவதாய்ச் சொல்லி, உறைந்து போனார் முதலமைச்சர்.
அது அப்போது நடந்த செய்தி.

தேர்தல் முடிவில் அவர் மறைமுகமாய் ஆதரித்த கட்சி அடி அறுந்து போக, ‘ஆப்பிழுத்த குரங்கின் கதையாய்’ ஆனது முதலமைச்சரின் கதை. தான் சோரம் போன கதையை வெளிப்படுத்தத் தயங்கி, தனது ஊமைத்தனத்தைத் தொடர்ந்த முதலமைச்சர், மாகாணசபையில் இன அழிப்புப் பிரேரணையை நிறைவேற்றியும், ஐ.நா.சபைத் தீர்வில் முரண்பட்டும், மக்கள் மத்தியில் தன் கற்பினை நிரூபிக்க முனைந்தார்.

ஐ.நா.சபைத்தீர்வில் உலகத்தோடு ஒத்து, யதார்த்த நிலையைக் கடைப்பிடிக்க முனைந்த, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மேல், வெற்றுணர்ச்சியாளர்களால் பகை பரப்பப்பட, அப்பகைத்தீயில் தன்னை மெருகேற்றி வெளிவந்தார் முதலமைச்சர். தேர்தலின் போது குழப்பம் ஏற்படுத்திய தன்மேல், நடவடிக்கை எடுக்காத கட்சித்தலைவரின் தயக்கம், முதலமைச்சருக்கு மேலும் பலம்தர, அந்நேரம் பார்த்து,
முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென கோரியிருப்பதாய், சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட அறிக்கை, முதலமைச்சரை மேலும் பலப்படுத்திற்று. அப்போது சுமந்திரனுக்குப் பதிலுரைத்து, முதலமைச்சர் வெளியிட்ட நீண்ட அறிக்கை, அவர், கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ்மக்களின் தனித்தலைவராய் உருவாக விரும்புகிறார் என்பதை, வெளிச்சம் போட்டுக் காட்டிற்று.

அப்போதும் முதலமைச்சர், தான் சோரம் போகவில்லை என்று கூறியபடியே இருந்தார். ஆனால் அவரது அப்பொய்ப் புலம்பல், நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’க் கூட்டத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டமைப்பின் எதிராளிகளுடன் கைகோர்த்து, கூட்டம் நடத்திவிட்டு வெளி வந்த முதலமைச்சர், குற்றம் செய்த குறுகுறுப்பில் மீண்டும் தான் ஊமையாவதாய் உரைத்து, ஊடகவியலாளரிடமிருந்து ஒதுங்கி ஓடியிருக்கிறார்.

எவர் தூண்டினார்களோ தெரியவில்லை. மறுநாளே அவரது ஊமைத்தனம் உடைந்திருக்கிறது. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும், போருக்குப் பிந்திய தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான, ஓர் உறுதியான செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்குமான செயற்பாடாகும் என, நேற்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நகைப்பைத் தருகிறது.



சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பவர்கள் யார்? தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை, சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாய்க் கொள்ளமுடியாதா? அத்தகையோரைப் புறந்தள்ளி,
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, இக்கூட்டம் நடத்தப்பட்டதன் மர்மம் என்ன? நடந்துமுடிந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று, முதன்மை உறுப்பினராய் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரச்சினையின்போதேல்லாம் முதலமைச்சருக்கு ஆதரவளித்தவருமான, சிறீதரன் (பா.உ.) போன்றோர்கூட, இச்சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பட்டியலில் வரமாட்டார்களா?
அவர்கள் எல்லாம் இவர்தம் செயலால் மனம்நொந்துபோய் இருக்கிறார்கள்.

போருக்குப் பின்னராக, தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகத்தான், அரசியல் அனுபவமே இல்லாத முதலமைச்சர் கையில், வடமாகாணசபை தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை அதை வைத்து, உருப்படியாய் அவர் ஏதும் செய்ததாய்த் தெரியவில்லை. அதுபோலவே அரசியல் தீர்வு சம்பந்தமாக, இதுவரை தன் கட்சித்தலைமைக்கு, இவர் ஏதும் ஆலோசனை வழங்கியதாயும் தெரியவில்லை. இந்நிலையில் சிவில் சமூகத்துடன் சேர்ந்து, இவ்விரண்டையும் செய்யப்போவதாய், அவர் வெளியிட்டிருக்கும் செய்தி, நகைப்புத்தராமல் வேறு என்ன செய்யும்?

பொதுவாக அவரது அறிக்கைகள் பெரும்பாலும் நகைப்புக்குரியவைதான். வடமாகாணசபைக்கென 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அறுபது சதவீதமான தொகையை பாவிக்காமல் திரும்பச் செல்ல விட்டுவிட்டு, 2016 ஆம் ஆண்டு செலவுக்கு தாம் கேட்ட தொகையில், நாற்பது சதவீதத்தையே அரசு ஒதுக்கியிருக்கிறது என்று ஒப்பாரிவைத்து, சில தினங்களுக்கு முன் வந்த அவரது அறிக்கை,
யாருக்குத் தான் நகைப்பை ஏற்படுத்தாது?

தமிழர் பிரச்சினைபற்றி, வடக்கிலிருந்து பார்ப்பதற்கும், தெற்கில் இருந்து பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற, அவரது மற்றொரு அறிக்கை சிரிப்பின் அடுத்த அத்தியாயம். துன்பக் காலத்தில் வடக்கோடு எந்தத் தொடர்புமின்றி சுகித்து வாழ்ந்த, தனது சுயநலத்தை மறைக்க அவர் இட்ட புதிய திரை இது என்பதும், கொழும்பில் வாழும் தலைவர்களைத் தமிழ்மக்களிடம் இருந்து பிரிக்க, அவரது சட்டமூளை செய்த சதி இது என்பதும், அறிவுள்ள எவர்க்கும் புரியக் கூடிய ஒன்றே.

தமிழர் பிரச்சினையை வடக்கிலிருந்து பார்ப்பது, தெற்கிலிருந்து பார்ப்பது என்று தொடங்கினால், அடுத்து மட்டக்களப்பிலிருந்து பார்ப்பது, திருகோணமலையிலிருந்து பார்ப்பது என்றும், கிளிநொச்சியிலிருந்து பார்ப்பது, வவுனியாவிலிருந்து பார்ப்பது என்றும், கனடாவிலிருந்து பார்ப்பது, லண்டனிலிருந்து பார்ப்பது என்றும், பிரிவுகள் பெருகி நீளும். உலகறிந்த ஒட்டுமொத்த தேசிய இனப்பிரச்சினையை, எங்கிருந்து எவர் பார்த்தால் என்ன? விடயம் ஒன்றுதான்.

அதனை, பிராந்தியப்பார்வைகளாய்ப் பிரிக்கும் இவரது புதிய கண்டுபிடிப்பு, உணர்ச்சியாளர்களுக்கு உவப்பாய் இருக்குமேயன்றி, உண்மையாளர்களுக்கு நிச்சயம் உவப்பாய் இருக்க வாய்ப்பில்லை.

மொத்தத்தில், நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’ கூட்ட நிகழ்வோடு, ‘சத்தியவித்தகர்’, சத்தியம் வித்தவராய், தமிழர் மத்தியில் பதிவாகிவிட்டார் என்பது உண்மை. ‘சீசரின் மனைவி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கவேண்டும்’ என்பது, மேலைத்தேயத்து அரசியலார் போற்றும் ஒரு தொடர். இது நம்மவர்க்கும் பொருந்துமாம். முதலமைச்சர் ஐயத்திற்குரியவராகி விட்டார். தமிழின அழிப்பை விரிவாய்ச் செய்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன், இன்றும் கைகோர்த்து நின்று, இலங்கை தனிச் சிங்களநாடாக இருக்கவேண்டும் என்று, பிடிவாதம் பிடித்து நிற்கின்ற, சம்பந்தி வாசுதேவநாணயக்காரவுடனான அவரது நெருக்கமான உறவு, குடும்ப உறுப்பினர்களின் பேரின திருமண உறவுத்தொடர்புகள் என்பவையும், அவ்வுறவுகள் புடைசூழவே முன்னாள் ஜனாதிபதியின்முன்
பதவிப்பிரமாணம் எடுத்த அவரது செய்கையும் முதலமைச்சரின் தனிவாழ்வுப் பின்புலத்தை, ஐயத்திற்கு அப்பாற்பட்டதாய்க் காண இடமளிக்கவில்லை.



தமிழர்தம் உரிமை விடயத்தில், உலகம் தரும் அழுத்தத்தை நிராகரிக்க முடியாது, முழுமனதுடன் அதனை ஏற்கவும் முடியாது, அந்தரிக்கும் பேரினத்தலைவர்கள், தமிழ்த் தலைமைகளின் உடைவை எதிர்நோக்கி, ‘சப்புக்கொட்டிக்’ காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதற்குப் பாதை திறக்க முயலும், முதலமைச்சரின் முன் முயற்சிகள், சீசரின் மனைவியை, சந்தேகத்திற்கு ஆளாக்கவே செய்கின்றன.

முதலமைச்சர் தலைமையில் நடாத்தப்பட்ட, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ க்கூட்டம், தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கும் கேள்விகள் பலப்பல. அவற்றைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

☛ முதலமைச்சர் சொன்னது போன்ற நோக்கங்களுக்காகத்தான் மேற்படி கூட்டம் நடாத்தப்பட்டதெனின் அதனை இவ்வளவு ரகசியமாக பூட்டிய அறைக்குள் ஊடகவியலாளர்கள் இன்றி நடத்தியதன் மர்மம் என்ன?

☛ கூட்டம்முடிந்து வெளிவந்த முதலமைச்சரும் மற்றவர்களும் ஏதோ குற்றம் செய்தவர்கள்போல் ஊடகவியலாளர்களைத்தவிர்த்து ஓட நினைந்ததன் காரணம் என்ன?

☛ கூட்டத்திலிருந்து வெளிவந்த முதலமைச்சர் தான் மீண்டும் ஊமையாவதாய் ஏன் சொன்னார்?

☛ வெளிவந்த அனைவரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ‘ஏற்பாட்டாளர்களைக் கேளுங்கள்’ என்றே பதிலளித்தனர். கடைசிவரை சொல்லப்படாத அவ் ஏற்பாட்டாளர்கள் யார்?

☛ நடந்த கூட்டத்தில் பதவி முதலியவை தெளிவாய் தீர்மானிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அங்ஙனமாயின் அதற்கான முன்னாயத்தங்கள் எங்கு எவரால் செய்யப்பட்டன?

☛ இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் எதிராளிகளாய்க் கருதப்பட்ட முக்கியஸ்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

☛ தேர்தல் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புத் தலைமை தன்னோடு ஆலோசிக்கவில்லை என்று குறைசொன்ன முதலமைச்சர் இக்கூட்டம் பற்றி கூட்டமைப்புத் தலைமையோடு ஆலோசித்தாரா? இக் கூட்டத்தினை முன்னின்று ஒழுங்கு செய்தது யார்?

☛ தேர்தலில் மக்களால் முற்றுமுழுதாய் நிராகரிக்கப்பட்டவர்களே இக்கூட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். அங்ஙனமாயின், ஜனநாயக ரீதியான மக்கள் கருத்துக்கு மதிப்பில்லை என்று முதலமைச்சரும், அவரைச் சார்ந்தோரும் கருதுகின்றனரா?

☛ முதலமைச்சர் பதவிக்கு விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதனைக் கடுமையாய் எதிர்த்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின்னர் மாகாண அமைச்சர்கள் தேர்வின் போது தனது தம்பிக்குப் பதவி வழங்கப்படாமையைக் கடுமையாய்க் கண்டித்து பத்திரிகை மாநாடு நடத்தியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஜனாதிபதியின் முன்பாக முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்ததைக் கடுமையாய் விமர்சித்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இன்று அவரே முதலமைச்சரை ஆதரித்து அறிக்கை விட்டும், அவரோடு ஒன்றிணைந்து கூட்டம் நடத்தியும் உறவு காட்டுகிறார். முதலமைச்சரும் ‘ஆயுதக்குழுக்களோடு தன்னால் ஒன்றிணைந்து இயங்க முடியாது’ என்று முன்பு சொல்லிவிட்டு இன்று அவர்களுடனேயே இணைந்து நிற்கிறார். இந்த உறவுகளின் அடிப்படை சுயநலமன்றி வேறு எதுவாய் இருக்கமுடியும்?

☛ கஜேந்திரகுமாருடனான உறவை முதலமைச்சர் மறுத்து வந்தார். இப்போது அவர்கள் உறவு வெளிப்பட்டிருக்கிறது. இந்த உறவு உண்டானது எப்போது? சென்ற தேர்தலின் முன்னரே இவ்உறவு ஏற்பட்டதா? அதனாற்றான் சென்ற தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்க முதலமைச்சர் மறுத்தாரா? ‘வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’ என்ற முதலமைச்சரின் அப்போதைய அறிக்கைக்குப் பின்னால் சுமந்திரன் சொன்னது போல, இவ் உறவால் விளைந்த வஞ்சகம் இருந்ததா? இருந்தது உண்மையென்று இப்போது தெரிந்திருக்கிறது. அப்படியானால் இல்லை என்று முதலமைச்சர் முன்பு சொன்னது தமிழ்மக்களை ஏமாற்றவா?

☛ உலக வல்லரசான அமெரிக்கா, பிராந்திய வல்லரசான இந்தியா, பேரின அரசான தற்போதைய இலங்கை அரசு என்பவை இன்று கூட்டமைப்பை அங்கீகரித்து இனப்பிரச்சினைத்தீர்வில் அதனோடு இணைந்து செயற்படவே தயாராயிருக்கின்றன. இவற்றை எதிர்த்து அல்லது இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் உரிமை பற்றிய நகர்வுகளில் தமிழ்மக்கள் பேரவையால் எதனை முன்னெடுக்க முடியும்?

ஒரு கட்சியிடம் மட்டுமே தமிழர் தலைமையினை முடக்கிவிட்டால், கேட்பாரின்றி அக்கட்சி நடக்கத்தொடங்கிவிடும் என்பதால், மாற்றுத்தலைமைகளும் உருவாகவேண்டுமென, நடந்து முடிந்த தேர்தலின்போது நானே எழுதியிருக்கிறேன். ஆனால் நான் சொன்னது, மக்களால் தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படவேண்டிய தலைமைகளையே. இன்று மக்கள் கருத்தை மறுத்து, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களோடு கூட்டுச்சேர்ந்து, சதிகள் மூலம் உருவாக்க நினைக்கின்ற மாற்றுத்தலைமையை அன்றாம்.

கடந்த காலங்களில் தமிழ்மக்கள் மத்தியில், புலிகள் பெற்றிருந்த எழுச்சியை உலகம் அறியும். அவர்கள் காட்டும் ஒரு புல்லுக்கும் வாக்களிக்க, தமிழ்மக்கள் தயாராய் இருந்த நிலையிலும், இடைக்காலத்தில் அவசியம் கருதி, அரசியல் தலைமையையும் உருவாக்க நினைந்த புலிகள், தாம் வெறுத்த கூட்டணித்தலைவர்களின் அரசியல் அனுபவத்தை, முற்றாய் நிராகரிக்க நினைக்காமல் தாம் வகுத்த அரசியல் வட்டத்திற்குள், அவர்களையும் ஈர்த்துக் கொண்டனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அஃது அவர்தம் அனுபவச் செறிவின் அடையாளம். ஆனால் இன்று தமிழ்மக்கள் பேரவை அமைத்தவர்கள்,
அனுபவசாலிகளை முற்றாய் நிராகரித்து, தொழிற்தொடர்பின்றி சமூகத்துடன் வேறெந்த தொடர்புமில்லாத, டாக்டர்கள் போன்ற புதியவர்களையும், மக்களால் நிராகரிக்கப்பட்ட சில தலைவர்களையும் உள்வாங்கி, புதிய வழி சமைக்க முயல்கின்றனர். இவர்தம் அறியாமையை என் சொல்வது?

எல்லாம் முடிந்துவிட்டது. கூட்டமைப்பிற்குள் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் கிளம்பும் என்று பார்த்தால், எந்த ‘அசுமாத்தத்தையும்’ காணவில்லை. சம்பந்தன் பழையபடி தூங்கத் தொடங்கிவிட்டார். ஆனந்த சங்கரி ஏதாவது பேசினாற்றான், அவருக்கு உணர்ச்சி வரும்போல, இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. இனம் பிரிவதற்குமுன்னர் ஏதாவது செய்தாகவேண்டும். ஒன்று முதலமைச்சரை அழைத்து விசாரித்து, தவறுகள் திருத்தப்பட்டு அவரைத்தம்மோடு இணைக்க வேண்டும், அல்லது அவரை கட்சியிலிருந்து விலக்கி, அவர் விரும்பும் பாதையில் செல்ல அவரை அனுமதிக்கவேண்டும். ‘வாசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை’ என்றாள் ஒளவை. அன்பில்லாத உறவை விட, பகை நல்லது என்பது அத்தொடருக்காம் அர்த்தம். உறவா? பகையா? என்று உறுதி செய்யும் நாள், வந்துவிட்டது என்றே உலகம் கருதுகிறது. உரியவர்கள் உணருவார்களா?

தமிழ்மக்கள் தெளிவானவர்கள். தமது உண்மைத் தலைவர்களை அவர்களால் இனம் காணமுடியும் என்று, இன்றும் உலகம் நம்புகிறது. முதலில் தந்தை செல்வா. பின்னர் அமிர்தலிங்கம். பின்னர் பிரபாகரன் என, தம் தலைவர்களை ஒருமித்து அங்கீகரித்தவர்கள் நம் தமிழர்கள். மேற்சொன்ன தலைவர்கள், தம் வாழ்நாள் முழுவதையும் இனத்திற்காக அர்ப்பணித்தவர்கள். அவர்கள் பற்றிய சில மாற்று விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், இனவிடுதலை ஈடுபாட்டினையும் எவரும் ஐயுற மாட்டார்கள்.

ஆனால் திடீரென முளைத்து, காகம் கஷ்டப்பட்டுக் கட்டிய கூட்டில், களவாய் முட்டையிட்டு, குஞ்சு பொரித்துப் பயன்பெறும் குயிலின் கதையாய், தமிழ்த்தலைமையை, இதுவரை எந்தத் தியாகமோ, அர்ப்பணிப்போ செய்யாமல், வெறும் பதவிப் பவுசையும்,தோற்றப்பொலிவையும் முதலாய் வைத்து, வஞ்சனை வலைவீசி அபகரிக்க நினைக்கும் ஒருவரை, முன்னைத்தமிழ்த் தலைவர்கள் வரிசையில், தமிழினம் தலைவராய் ஏற்றுக்கொள்ளுமா? விதியின் விளையாட்டை யார் அறிவார்? அத்தவறு நிகழ்ந்தால், அது நம் இனத்தின் தவக்குறைவாகவே அமையும்.

என்னவோ தெரியவில்லை. தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகளின் அவதானிப்பால், சில உண்மைகளை நாம் எதிர்வு கூறவேண்டியிருக்கிறது. காலாகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக் காலங்களில், தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை உடைக்கப்பட்டிருக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில், தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவராய் இருந்து, கிழக்கில் அக்கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரை, கட்சியிலிருந்து விலகி அரசில் அமைச்சுப் பொறுப்பேற்றார். பின்னர் இடையில் சிலகாலம் ரணில் ஆட்சிப்பொறுப்பேற்ற பொழுது, தமது பலத்தால் உலகையே வியக்க வைத்திருந்த புலிகளின், முக்கியத் தலைவர்களில் ஒருவரான, கருணா பிரிக்கப்பட்டு, பின்னர் அவரும் அரசுடன் இணைந்து அமைச்சரானார். இன்று மீண்டும் ரணிலின் ஆட்சி?

வேறு வேறு கொள்கை, வேறு வேறு பாதை என்றிருந்தாலும், இன எழுச்சிக்காய் ஒன்றுபட்டு, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி, ஆயிரம் பிரச்சினைகளைத் தாண்டி ஒன்றுபட்டிருந்து, தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, ஏகத்தலைமையாய் நிமிர்ந்து நின்ற கூட்டமைப்பை, இன்று ஒரு தனிமனிதர் உடைக்கத் தலைப்படுகிறார். சென்ற ரணிலின் ஆட்சியில் புலிகளை உடைக்க ஒரு கருணா. இந்த ரணிலின் ஆட்சியில் கூட்டமைப்பை உடைக்க ?, இது கொழும்பின் சதியா? யாழின் விதியா? யார் அறிவார்?

இக்கட்டுரை தொடர்பில் நான் முதலாவதாக ஜெயராஜுக்கு சொல்ல வருவது யாதெனில், விக்கினேஸ்வரனை முன்மொழிந்ததில் தமிழ் மக்களுக்கு துரோமிழைத்த ஜெயராஜ், தகுந்த ஒருவனை தெரிவு செய்வதற்கு நான் தகுதியற்றவன் என்பதை முதலில் மக்களுக்கு தெரிவித்து, வாழ்நாளில் இன்னொரு தெரிவின்போது எனது மூக்கை நுழைத்து முன்மொழிவுகளை செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டு கொண்டால், அது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பேருதவியாக இருக்கும்.

இயல்பான சண்டைக்குணமும் நிர்வாகத்திறையற்றவர் என்றும் கூறும் ஜெயராஜ் அவர்களே விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்து என்று ஒற்றைக்காலில் நின்றபோது இவர் சண்டைக்குணம் கொண்ட நிர்வாகத்திறனற்றவர் என்பதை அறிந்திருக்கவில்லையா? மேலும் மக்களின் உணர்சியை கிளப்பி, அரசியல் செய்யும் புதுவழியை கண்டு பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டீர்களே? தமிழ் அரசியல் வாதிகள் காலாகாலமாக மேற்கொண்டு வருகின்ற உணர்ச்சியை கிளப்பும் அரசியல்வழியை விக்னேஸ்வரனும் கடைப்பிடிக்கத்தொடங்கினார் என்றால் பொருத்தமற்றதாகுமா?

மேலும் கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும் சிந்தனை வேறாகிவிடும் என்ற கம்பனின் கூற்றுக்கு விதிவிலக்கில்லாமல் தனது சகாவும் மாறிவிட்டார் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் ஜெயராஜ் அதற்கு கூனிகளின் ஆலோசனையால், கைகேயியின் மனம்போல் விக்கினேசுவரனின் மனம் திரிந்தது என்றெல்லாம் பல்வேறு வியாக்கியானங்கள் கூறமுற்படுவது அருவருப்பை உண்டுபண்ணுகின்றது.

தந்தை செல்வா , அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களின் வரிசையில் பிரபாகரன் என்ற உலகப்பயங்கரவாதியும் பாசிஸ்டுவுமான கொலைகாரனை வைத்து மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் என்கின்றார் ஜெயராஜ். இவ்வாக்கியமானது ஜெயராஜ் எதை நோக்கி பயணிக்கின்றார் என்பதை தெளிவுறுத்துகின்றது. கம்பன் கழகம் அமைத்து பணம் சம்பாதித்துக்கொண்டிருந்த ஜெயராஜுக்கு பிரபாகரன் மக்களை கொன்றொழித்தமை, அவர்களது உரிமைகளை அப்பட்டமாக மீறியமை, ஆயுதத்தை காட்டி மிரட்டி மக்களது ஜனநாயக உரிமைகளை அப்படியே சூறையாடியமை எவ்வாறு நினைவிருக்கப்போகின்றது? அமிர்தலிங்கத்தை கொன்ற பிரபாகரனை அவரது வரிசையில் வைத்து தலைவர் எனப்போற்றும் இவரின் போக்கிரித்தனம் தமிழ் மக்களுக்கு அடுத்த தலையிடி ஒன்றை உருவாக்கப்போகின்றது என்பதை தெட்டத்தெளிவாக கூறமுடிகின்றது.

ஜெயராஜ் புத்தகம் ஒன்றை பிரபாகரனுக்கு அனுப்பி அதற்கு பிரபாகரன் அனுப்பிய பதில் தொடர்பில் என்னிடம் நிறைய பேச இருக்கின்றது. அது தொடர்பில் விரைவில் விவாதிக்கப்படும்.

தனது கட்டுரையில் பதவியும் பவுசும் வந்ததும் மெல்ல மெல்ல முதலமைச்சர் மாறத்தொடங்கினார் என்றும் அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்துள்ள இக்கட்டுரையை முடித்துரைத்த ஜெயராஜ், இராஜதுரை மற்றும் கருணா ஆகியோரின் உதாரணங்களை காட்டி, இது சதியா அன்றில் விதியா என்று முடித்துள்ளார்.

இன்று நாம் 21 நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதி என்று சொல்லை உச்சரிப்பதே இயலாமையின் வெளிப்பாடாகும் என்பதுடன் நாகரிகமற்றதுமாகும்.

தமிழ் தலைவர்கள் சுயலாபங்களுக்காக மக்களின் தேவைகளை கிடப்பில்போட்டு எழுந்தமானமாக செயற்பட்டு குட்டு உடைபடுகின்றபோது, சதிவலையில் சிக்கிவிட்டார்கள் என்று அவர்களது விசிறிகள் சாட்டுபோக்கு சொல்வது வழமை. அதே பல்லவியை பாடி ஜெயராஜ் அற்ப ஆசைகளுக்காக சோரம்போவோர்க்கு, நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்றும் மீண்டும் தைரியம் கொடுக்கின்றார்.

ஆகவே ஆன்மீகவாதியாக இனம்காணப்பட்டுள்ள ஜெயராஜ் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெள்ளையடித்தல், நற்சான்றுதல் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தி, நாங்கள் வாழுகின்ற இதே காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு ஒப்பற்ற போராளியான சேகுவேராவின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களையும், அவர் மக்களுக்காக எவ்வாறு உழைத்தார் என்பதையும் தான் சாமரம் வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

ஆஜென்டீனாவில் ஓர் மேட்டுக்குடியில் பிறந்த சேகுவேரா தனது செல்வந்த மற்றும் சுகபோக வாழ்க்கையை கைவிட்டு கியூபா மக்களுக்காக போராடி மாபெரும் வெற்றிகாண்கின்றார். கியுபாவில் புதிய அரசு அமைகின்றது. கீயூபா மக்கள் சேகுவேராவை உன்னதபோராளியாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அவருக்கு கியூபாவில் குடியுரிமை வழங்கி அந்நாட்டின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சுப்பதவியையும் வழங்குகின்றார்கள். வெளியுறவு அமைச்சுக்கு அப்பால் பல்வேறு துறைகளில் தனது நிபுணத்துவங்களை சேகுவேரா வழங்கிக்கொண்டிருந்தார்.
ஆனால் இத்தனை வேலைப்பழுவுக்கும் மத்தியில் அவர் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து தானும் ஒரு பாட்டாளியானர். தனது நாளில் 4 மணித்தியாலயங்களை உடலுழைப்புக்கு ஒதுக்கினார். கட்டுமானப்பணிகளில் சிற்றூழியனாக, கப்பலிலிருந்து மூடையிறக்கும் நாட்டாமையாக உடலால் மேற்கொள்ளப்படும் கடின உழைப்புகள் யாவற்றிலும் பங்காளியானார்.

ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து நெருக்கப்படும் மக்களுக்காக போராடி ஒர் பிரபுவாகவே வாழ்வதற்கு வழியிருந்தும், அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை இப்படம் எடுத்துரைக்கின்றது.





ஆனால் இன்று கள்வர்கள், கடைந்தெடுத்த காவாலிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலைகாரார்கள், நயவஞ்சகர்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானோராக உள்ளதுடன் இவர்கள் பிரபுக்களாகவே இன்றும் வலம்வருகின்றனர். மக்களின் வாக்கில் பிரதிநிதிகளாகி அதற்கு சம்பளம் வாங்கும் பேர்வழிகளை ஊதியத்திற்குரிய உழைப்பை வழங்க கேட்கவேண்டும்.

பீமன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com