Sunday, December 20, 2015

தமிழ் மக்கள் பேரவை: 'மாற்றுத் தலைமையை உருவாக்கும் நோக்கம் இல்லை'

'ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது'

இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மருத்துவ நிபுணர் டாக்டர் லக்ஸ்மன், மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் வசந்தராஜா ஆகியோர் இந்த அமைப்பின் இணைத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரையில் தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் எல்லையைக் கடந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் துணைத் தலைவருமான பேராசிரியர் சிற்றம்பலம், புளொட் அமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன, நல்லை ஆதீன முதல்வர், கிறிஸ்தவ மத குருமார்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த அமைப்பின் ஆரம்ப கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

'மாற்றுத் தலைமையினை ஏற்படுத்தும் கூட்டம் இல்லை'


'ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது'

'இந்தப் பேரவை அரசியல் கட்சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே அகும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருக்கின்றார்.

'தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ்மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். இத்தகையதொரு நிலைமையில், தனிமனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது' என்று தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கை கூறுகின்றது.

'ஒரு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுகின்ற தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற தீர்வுகளே தேவையானவையாகும். எனினும் இத்தகைய தீர்வை வழங்குவதில் இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமோ, பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சிகளோ முன்வரவில்லை' என்றும் 'இத்தகையதொரு நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லையை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுகிறது' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'அந்த இலக்கை ஈடு செய்யக்கூடியது என்ற நம்பிக்கையோடு மதபீடங்கள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது' என்று அந்த அறிக்கை விபரித்துள்ளது.

'தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை- வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com