Friday, December 18, 2015

இலங்கை: வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை எதிர்த்து போராட ஒரு சோசலிச வேலைத் திட்டம். By the Socialist Equality Party (Sri Lanka)

இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இணைந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெட்டுக்கள் வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதிய உரிமைகள் மற்றும் மானியங்களை கடுமையாக பாதிக்கவுள்ளன.

தனியார்துறை, பொதுத்துறை மற்றும் அரை அரசாங்கத் துறைகளையும் சேர்ந்த 50 தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான தொழிற்சங்கங்களின் கூட்டு (TUC), அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் பெருகி வரும் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக தயக்கத்துடன் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தொழிற்சங்கங்களின் கூட்டு, அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் எப்படியாவது திசைதிருப்பிவிட முயல்வதோடு முன்மொழியப்பட்ட 24 மணி நேர வேலைநிறுத்தத்தை கூட அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை ஊடாக நிறுத்திவிடும் கடைசி முயற்சிகளில் இறங்கியுள்ளது என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு தொழிலாளர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

2016ல் இருந்து பொதுத்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை இரத்து செய்து, ஊழியர்கள் பங்களிப்பு செய்யத் தள்ளப்படும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீட்டியுள்ள திட்டத்தை கைவிட வேண்டும் என்பதும் தொழிற்சங்கங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளில் அடங்கும். தனியார்மயமாக்கல், அரசு நிறுவனங்களை வணிகமயப்படுத்தலை நிறுத்துமாறும் மற்றும் தற்போது மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படுகின்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு புதிய முகவரமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

தனியார் துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா மாத சம்பளம் உயர்வு வேண்டும், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் 1,000 ரூபாவால் உயர்த்தப்பட வேண்டும் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா சம்பள கொடுப்பனவை அவர்களது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும் போன்றவை ஏனைய கோரிக்கைகளாகும்.

அரசாங்கம் விவசாயிகளுக்கு மானிய உரங்கள் வழங்கும் தற்போதைய திட்டத்தையும் வெட்டித்தள்ள முன்மொழிந்துள்ளது. இது ஒட்டு மொத்த மானியங்களையும் இல்லாமல் ஆக்குவதற்கான முதல் படியாகும் -இது கிராமப்புற ஏழைகளுக்கு பெரும் அடியாக இருக்கும். கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

எந்தவொரு போராட்டத்தையும் கவிழ்ப்பதற்கு வடிவமைக்கப்பட்ட அரசாங்கத்துடனான அவர்களின் உத்திகளில் ஒன்றாக, தொழிற்சங்கங்களின் கூட்டின் தலைவர்கள் சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். அவர்கள் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தத்தை இரத்து செய்யும் பொருட்டு, சில பயனற்ற வாக்குறுதிகளைப் பெற எதிர்பார்த்தனர். தொழிற்சங்கங்களின் கூட்டின் அழைப்பாளரான அரசாங்க தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, "அரசாங்கம் குறைந்த பட்சம் ஓய்வூதிய திட்டத்தை உள்ளவாறு தொடர்வதைப் பற்றி பரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டால் தொழிற்சங்க நடவடிக்கையை இரத்து செய்ய தயாராக இருப்பதாகக்," கூறினார். மற்றொரு தொழிற்சங்க தலைவர், கலந்துரையாடலின் பின்னர் "கோரிக்கைகள் எதற்கும் [விக்கிரமசிங்கவிடம் இருந்து] சாதகமான பிரதிபலிப்பு எதுவும் கிடைக்கவில்லை" என்று புலம்பினார்.

தொலைக்காட்சி நிகழ்சிகளிலான உரையாடல்களில், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பதாக ரட்னபிரிய தெளிவுபடுத்தினார். இந்த கோரிக்கை மூலம் "நாங்கள் போராடி ஆட்சிக்கு கொண்டுவந்த" அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யு.சி.), துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் மறியல் போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இன்றுடன் முடிவுக்கு வரும் ஒரு எதிர்ப்பு வாரத்துக்கு அழைப்பு விடுப்பதாக அறிவித்தது. ஜே.வி.பி மற்றும் என்.டி.யூ.சி.யும் அரசாங்கத்தை அச்சுறுத்தக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் எதிர்ப்பதோடு, அதற்குப் பதிலாக தொழிலாளர்களின் சீற்றத்தை தடுத்து திசைதிருப்ப முயல்கின்றன.

வரவு-செலவு வெட்டுக்களை எதிர்த்துப் போராட தொழிலாளர்களால் இந்த தொழிற்சங்கங்கள் அல்லது அரசியல் ஸ்தாபனத்தின் கட்சிகளின் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. தொழிலாளர்கள் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தையே எதிர்ப்பதற்கான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

இதே தொழிற்சங்கங்கள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய நிர்வாகத்தினால் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் வறியவர்களின் விரோதத்தை திசை திருப்பிவிடப்பட்டன. ஜனவரி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர உதவிய இந்த தொழிற்சங்கங்கள், இப்போது தொழிலாளர்களின் அதிருப்தி வெடித்து ஆட்சியை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்று பீதியடைந்துள்ளன.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைகளை அமுல்படுத்த தீர்மானித்துள்ளனர். வியாழக்கிழமை, தொழிற்சங்கங்களை விமர்சித்து ஒரு அச்சுறுத்தும் உரையை நிகழ்த்திய விக்கிரமசிங்க, அரசாங்கம் வேலைநிறுத்தங்களை கண்டு அஞ்சாது என்று அறிவித்தார். அவர், டிசம்பர் 3 அன்று ஒரு அடையாள வேலை நிறுத்தம் செய்தமைக்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தை கண்டனம் செய்தார். விக்கிரமசிங்கவின் உண்மையான இலக்கு, தொழிற்சங்கத் தலைவர்கள் அன்றி, யாருடைய எதிர்ப்பை கட்டுப்படுத்த தொழிற்சங்கள் முயற்சித்து வருகின்றனவோ அதே தொழிலாள வர்க்கமாகும்.

தனது கையை வலுப்படுத்தும் முயற்சியில், சிறிசேன வியாழக்கிழமை அதிக பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற எத்தனிக்கின்றார். அவர் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளியான தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) எதிர் போக்கைக் கடைப்பிடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு நெருக்கி வருகின்றார்.

உலகப் பொருளாதார பின்னடைவு மற்றும் நிதி நெருக்கடியினால் உருவாக்கப்பட்டுள்ள ஆழமான பொருளாதார மற்றும் நிதி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசாங்கம், பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான எல்லா சலுகைகளையும் வழங்கும் அதேவேளை, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் நெருக்கடியின் சுமைக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது.

இதே போன்ற வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் வணிக சார்பு நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இலங்கை ஆளும் தட்டின் ஒரு பகுதியினர், கடும் கடன் சுமை காரணமாக நாடு கிரேக்கத்தை ஒத்த ஒரு நெருக்கடியில் மூழ்கிப் போகலாம் என விவாதித்து வருகின்றனர். கிரேக்கத்தில் சிரிசா அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றது.

கொழும்பு பங்கு சந்தை நிகழ்வு ஒன்றில் பேசிய விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் "வரி குறியீட்டை மீண்டும் எழுதுவதற்கு உதவுமாறு" சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதாகவும் அரசாங்கத்துக்கு ஒரு நீண்ட கால கடன் ஒப்பந்தம் தேவை என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இலங்கையை "முதலீடுகளை ஈர்க்கும் ஒரு போட்டி களமாகவும் இடமாற்று மையமாகவும்" ஆக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என அவர் கூறினார். சமூக உரிமைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளையும் வெட்டித்தள்ளுவதன் மூலமாக மட்டுமே அரசாங்கத்தால் நாட்டை ஒரு "போட்டி மையமாக" ஆக்க முடியும்.

அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி, தொழிலாளர்களால் தமது போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அரசாங்கம் ஏற்கனவே அதன் நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பை நசுக்குவதற்கு பலத்தைப் பயன்படுத்தும் என்பதை நிரூபித்துள்ளது. அது இலவசக் கல்வியை பாதுகாக்க போராடிய மாணவர்கள் மீது கொடூரமான பொலிஸ் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது, அதிக வேலைச் சுமையை திணிப்பதை எதிர்த்த தோட்டத் தொழிலாளர்களை கைது செய்தது மற்றும் சுத்தமான குடிநீர் கோரிய ஏழை விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது.

முதலாளித்துவ இலாப அமைப்பை ஒழிக்கும் போராட்டத்தில் மட்டுமே தொழிலாளர்களால் தங்கள் தொழில்கள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக உரிமைகளை பாதுகாக்கவும், ஏழை விவசாயிகளைப் பாதுகாக்கவும் முடியும். முதலாளித்துவ அமைப்பு முறை இந்த அடிப்படை உரிமைகளுடன் இயைந்து இருக்க முடியாது.

வங்கிகள், பெரிய தொழிற்துறைகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் பெருந் தோட்டங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். சகல வெளிநாட்டு கடன்களையும் திருப்பிச் செலுத்துவது நிராகரிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களின் நன்மைக்காக, பொருளாதாரம் சோசலிச வழியில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

தனியார் இலாப அமைப்பை பராமரிக்க உறுதிபூண்டுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் தலைவிதியை நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தமது சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

போராடிப் பெற்ற தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீதான தாக்குதலை இந்த அரசாங்கம் உக்கிரமாக்கும் என, ஜனவரி ஜனாதிபதி தேர்தலிலும் ஆகஸ்ட் பொதுத் தேர்தலிலும் விளக்கியது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சி தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு புதிய புரட்சிகர கட்சி தேவை. இந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை உருவாக்க அதில் இணைந்துகொண்டு உதவுமாறு நாம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com