Sunday, June 30, 2013

வடக்கும்-தெற்கும் இணைந்தது.....!!!!

இலங்கையின் தென்பகுதியைச்சேர்ந்த ராணுவவீரர் ஒருவர் முல்லைத்தீவைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது

முல்லைத்தீவில் உள்ள இராணுவத்தின் 23வது படைப்பிரிவைச்சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார(22) என்ற படைவீரரும் முல்லைத்தீவு முள்ளியவளையைசேர்ந்த மேரி தெரேசா(20) எனும் தமிழ் யுவதியுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்
இவ்விருவருக்குமிடையே மலர்ந்த காதலை அடுத்தே இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Read more...

அரசிற்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டதாம்! - பசீர் சேகுதாவூத்

அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடை யிலுள்ள உறவு தொடர்பாக உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின் றோம் என அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம் சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையக மான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பசீர், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டன எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசு உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தால் உறுதியாக அரசாங்கத்தோடு இருக்க முடியாது. அரசாங்கத்தோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுதியா இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற முடியாது இது தான் நான் கண்ட அனுபவமாகும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று மாகாணசபை தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. விஷேடமாக வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்றால் அரசிலிருந்து வெளியேறி விட்டு தனித்து போட்டி யிடுவதே இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகும். இவ்வாறில்லாமல் அரசுக்குள் இருந்து கொண்டு தனித்து போட்டியிட்டால் அரசுக்கு குழி பறிக்கும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசு பார்க்கும்.

இதனால், அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் உள்ள இடைவெளி இன்னும் அகலமும் ஆழமுமாகிவிடும். இதனால் கட்சிக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஆபத்துக்கள் ஏற்படாலம் என்ற அச்சமும் எனக்குள் இருக்கின்றது. இது என்னுடைய அரசியல் பார்வையாகும். எல்லோரும் அரசாங்கத்திருந்து வெளியேறுவோம் என்றால் நானும் வெளியேறுவதற்கு தயாரக இருக்கின்றேன்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தோடு இருந்தால் முஸ்லிம் காங்கிரஸில் இருக்க முடியாது. அரசிலும் முஸ்லிம் காங்கிரஸிலும் இருந்தால் முஸ்லிம் மக்களின் தேவைகள் எதையும் செய்யமுடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும். வட மாகாண சபை தேர்தலை மாத்திரம் கொண்டு நான் இதை பேசவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு பேசுகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கமும் ஒன்றாக இருந்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸே எடுக்க வேண்டுமே தவிர அரசு இத்தீர்மானத்தை எடுக்க முடியாது.

ஏனென்றால் அரசு இது தொடர்பாக எடுக்கம் தீர்மானம் முஸ்லிம் காங்கிரசை துரத்துகின்ற அடிப்டையில் அமையும் இருக்கும். இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அதன் போராளிகளினதும் தலைமைத்துவத்தினதும் தன்மான த்திற்கும் கௌரவத்திற்கும் கேடான விடயமாகும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Read more...

நான் ரொம்ப பிஸி-தயா மாஸ்ரர்!!!

ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனத்தை தயார் செய்கின்ற முயற்சியில் தாம் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பதென எல்.ரீ.ரீ.ஈ ன் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் தெரிவித் துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது!!

வடக்கிலுள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பதென்பது தொடர்பாக ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே ஆராய்ந்து வைத்துள்ளதாகவும் அதுவும் அவ்விஞ்ஞாபனத்தில் இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும், தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக தாம் நிச்சயம் இத்தேர்தலில் நிற்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

பெண் சப்-இன்ஸ்பெக்டரை காதலித்து ஏமாற்றிய குன்னூர் நீதிபதி கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொலிஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட நீதிபதி, பல்லடம், குன்னூர் பொலிஸ் துணை சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

வக்கீலாக பணியாற்றிய தங்கராஜ் என்பவர் என்னைக் காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நானும் அதனை நம்பி அவரை காதலித்தேன். இந்த நிலையில் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது.

தற்போது அவர் குன்னூரில் உள்ள கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு கிடைத்ததும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக பல்லடம் பொலிஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், மாஜிஸ்திரேட்டு தங்கராஜூக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்ததும், தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை அவினாசி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தங்கராஜை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, தங்கராஜை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன் அனுமதியின்றி நீதிபதியை கைது செய்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்று முன்னாள் நிதிபதிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read more...

இராணுவ பயிற்சியின் போது அதிபர் மரணம்!

சீதுவ பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் ரன்டம்பே மாணவர் படையணி பயிற்சி முகாமில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது உயிரிழந்துள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. 52 வயதான இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டது.

உடற் தகுதி பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டிருந்தபோதே குறித்த அதிபர் உயிரிழந்ததாக ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்தது.

Read more...

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் -ஹக்கீம்

நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படும் எனவும், இதனால் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவமாகும் என அவர் தெரிவித்தார்.

இருப்பினும் சில வேளைகளில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் எனவும், அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Read more...

யாழில்!!! 'அவளின் கதைகள்'

'அவளின் கதைகள்' என்ற தொனிப்பொருளில் யுத்தத்தினால் பதிக்கப்பட்டு வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம், சிங்களத் தாய்மார்களின் வாய்மூலக் கதையாடல்களின் கண்காட்சி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது..

யுத்தத்தின் பாதிப்புக்களினால் சில குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்களையும் சவாலையும் மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையமும் சர்வதேச இனத்துவக் கற்கை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காடசியை பெருமளவான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Read more...

‘நான் மூத்திரம் குடிக்கவே இல்லை’ என்கிறார் மர்வின்!

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா மருந்தாக சிறுநீர் அருந்துகின்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் மர்வின் சில்வா கருத்துரைக்கிறார்.

அது முற்று முழுதாக பொய்ச் செய்தி என்கிறார் அவர்.

‘எனக்கு எதிரானவர்கள் சோடித்திருக்கின்ற பொய்க் கதை அது. அதற்காக நான் கோபப்படுவதில்லை.

யாரேனும் ஒருவர் என்னைப் பற்றி பொய்க் கதை சோடித்து, அதன் மூலம் ஆனந்தமடைவதாயின் பௌத்தன் என்ற முறையில் நான் மகிழ்ச்சியடைவேன். அது நான் செய்த நன்மையே!

நான் ஏன் மருந்தாக மூத்திரத்தைக் குடிக்க வேண்டும். இது முழுமையாக சோடிக்கப்பட்ட பொய்க்கதை’ என்றும் அமைச்சர் தெளிவுறுத்துகின்றார்.

(கேஎப்)

Read more...

வடமாகாண தமிழ்மொழி தினவிழா!!! (படங்கள் )

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழித் தினவிழா அண்மையில் யாழ் இந்து மகளீர்க் கல்லூரியில் வடமாகாண கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் பிரதம அதீதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்மொழித்தின விழாவை முன்னிட்டு கவின் தமிழ் என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றது.

Read more...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் பொருட்டு ஆகஸ்ட் 2012 நடைபெற்ற க.பொ.த. (உயர் தர ) பரீட்சையில் ஆகக்குறைந்த தேவைகளை பூர்த்தி செய்துள்ள பரீட்சார்த்திகள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பாடங்கள் மூன்றிலும் சாதாரண சித்தி (s) பெற்றிருத்தலுடன் பொதுசாதாரண வினாத்தாளில் ஆகக் குறைந்தது 30% புள்ளிகளை விண்ணப்பிக்கும் பரீட்சார்த்திகள் குறைந்த பட்ச தேவையாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

குறித்த விண்ணப்பபடிவத்துடனான கைநூலை பெற ரூபா 500 யினை செலுத்துவதுடன் கைநூலை தபால் மூலம் பெற விரும்புகிறவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் செயலகம், இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விநியோக முகவர்களிடமிருந்தோ பணம் செலுத்துவதன் மூலம் 30-6-2013 ஆம் திகதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை கையளிப்பதற்கான முடிவுத்திகதி 23-7-2013 ஆகும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை ,

மேலதிக செயலாளர்(கல்வி அலுவல்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள் )
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இல 20 வாட் பிளேஸ் கொழும்பு -7 இல்


நேரிலோ அல்லது முகவரி இட்டு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கலாம்.


மேலும் 23-7-2013 திகதிக்கு பின் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

(பாறூக் சிகான்).

Read more...

முஸ்லிம் வைத்தியர்கள் சிங்கள கர்ப்பிணிகள்மீது அதிகசிரத்தை காட்டுவதில்லை... - துஷார சுவர்ணதிலக

இன, மத வேறுபாடின்றி சிங்கள துறைசார் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சிற்றூழியர்கள் வரை முஸ்லிம் பெண்கள் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுப்பதற்கும், நான்கு ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் பல்வேறு உதவிகளைப் புரிகின்ற போதும், சிங்களப் பெண்கள் குழந்தைப் பேற்றுக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்தால் அவர்களுக்கு அன்பு கலந்த கவனிப்பு வழங்கப்படுவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் துஷார சுவர்ணதிலக குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபையின் பல்லேகல தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி பெரியாஸ்பத்திரியில் முஸ்லிம் பெண்ணொருத்தி ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை முதலானவை சிங்கள துறைசார் விசேட நரம்பியல் வைத்தியர் ஒருவரினாலும், இளம் சிங்கள வைத்தியர்களினால் குழுவினராலுமே செய்யப்பட்டது எனக் குறிப்பிட்ட துஷார சுவர்ணதிலக, சிங்களவர்கள் ஒருபோதும் இனவாதிகளாக செயற்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

ஐந்து குழந்தைகளின் தாய் ஓர் உதாரணம் மட்டுமே என்று குறிப்பிட்ட துஷார, பேராதனை வைத்தியசாலைக்கு குழந்தைப் பேற்றுக்காகச் செல்லக்கூடிய சிங்களப் பெண்கள் முஸ்லிம் வைத்தியர்களால் சரிவரக் கவனிக்கப்படுவதில்லை. அவர்கள் விரும்பாமலேயே அவர்களுக்கு சில அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்னர் பேராதனை வைத்தியசாலையில் அவ்வாறானதொரு சிகிச்சையும், கர்ப்பிணித் தாயொருவர் தாக்கப்பட்டமையும் குறித்து விசாரணை நடாத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்ட கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.

நாளை (01) ஓய்வுபெறவுள்ள கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் இன்றேனும் அந்த அறிக்கையை சமர்ப்பிக்காதுவிட்டால், அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் சுவர்ணதிலக குறிப்பிட்டார்.

-திவயின(கேஎப்)

Read more...

சப்பா!! மனுசன நிம்மதியா பொளைக்க விடமாட்டேங்குறானுங்கடா!!!!!

எங்கட சனங்கள் என்ன பாவம் செய்ததுகளோ தெரியாது முப்பது வருசமா அவங்கட பாடு!! இப்ப இவங்கட பாடு என்டு ஆகீற்று!! என்ன செய்றது எல்லாரும் பந்துபோல பயன்படுத்துறாங்கள் எங்கள!! யுத்தம் முடிஞ்சு இப்ப ஏதோ ஒரு வழயில மக்கள் தாங்களும் தங்கட பாடும் என்று இருக்கேக்க..இப்ப இந்த கூத்தமைப்பு படுத்துறபாடு மக்களை திரும்பவும் எங்கையோ கொண்டு போறதற்குத் தான் போல இருக்கு!

ஒரு விசயத்தில எனக்கு உடன்பாடு இல்லை பாருங்கோ உந்த இயக்கத்ததை அழிச்ச அரசாங்கத்ததை ஏதோ ஒரு எதிரிகாளாக தமிழ் மக்களுக்கு காட்டி தாங்கள் மக்களோடு இருக்கிறம் என்று சொல்லிக்கொண்டு ஓட்டுவாங்கிறதற்கு முயற்சிச்சுக்கொண்டு இருக்கினம்.

இருந்தாலும் தங்கட நாட்டு பிரதமரைக்கொன்றது புலிகள் தான் என்ட கடுப்பில் இந்த யுத்தத்தை நடத்திய இந்தியாவிடம் போய் தான் இவை எல்லா ஆலோசனையளயும் கேட்கீனம் பாருங்கோ!! அதிலையும் எங்கட மாவிட்ட புரத்து ஐயா எல்லோரையும் விட ஒரு படிமேல போய் இந்தியாவின்ர சம்மந்தி யாகிவிட்டார் என்று ஒரு கதையடிபடுது!! ம் ம் இருக்கட்டும் இருக்கட்டும்.

இதுபோக சுரேசண்ணர் அங்கேயே செந்தமா வீட்டயும் வாங்கி தன்ர குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போய் அடிக்கிற கூத்துகள நினக்கேக்க அப்பப்பா முடியல! இப்படி முதுகில குத்திய இந்தியாவோட தாங்கள் கோடிப்பக்கத்தால சொந்தமும் கொண்டாடிக்கொண்டு இஞ்ச தாங்களை விட்ட தேசிய வாதிகள் இல்லை என்று மயக்கம் வரும் வரை பேசியும் தள்ளுகினம். இருந்தாலும் இவரையின்ர விளையாட்டுகளெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை

அரசியல் வாதிகள் எல்லோரும் இப்ப வியாபாரத்தில் இறங்கிவிட்டீனம் குறிப்பாக சாரயக் கடைபோடுறதிலை குறிபாக இருக்கீனம் ஒரு சிலருக்கு மட்டக்களப்பிலும் வவுனியாவில் சாரயக்கடையும் இருக்கென்டால் பாருங்கோவன். இதெல்லாம் என்ன மக்களின் நலன்சார்ந்த திட்டங்களா மக்களுக்கு தாங்கள் ஒன்றும் செய்ய மாட்டீனம் அரசாங்கம் செய்தால் அதையும் ஏதோ ஒரு பெரும் பிரச்சனையாக்கி காட்டுகினம் இவையளால ஒன்றும் கிழிக்க ஏலாது என்பது உண்மை. ஏன் இதை சொல்லுறன் என்டால் இந்த ஜெனீவாவில் போய் எல்லாரும் சேர்ந்து சொப்பீங் செய்தது தான் மிச்சம்.

இது இப்படி இருக்க கிளிநொச்சியில் இருக்கிற எங்கட கரும் சிறுத்தை இப்ப எப்பவுமே கறுப்போடுதான் திரியுது எல்லா இடத்திற்கு போனாலும் ஐயா கறுப்போடு தான் போறாராம்! கொஞ்ச காலத்திற்கு முன்னால் இவர் கக்கூசுக்கு போனாலும் அது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உத்தமற்ற பேப்பர் ஒன்றில் தலைப்புச் செய்தியாய் வரும்!!! எப்ப இவற்றை ஆப்பீசில இருந்து கொஞ்ச வெடிமருந்தும் அவற்றை ஆணுறைகளும்(பாவம் ஜயா தன்ர பாதுகாப்புக்கு வச்சிருப்பார் போல) எடுத்தாங்களோ!!! அதுக்குப்பிறகுதான் இவர் செய்தாலும் செய்திருப்பார் என்று நினைச்சு இவரை இப்ப ஓரம்பட்டிப்போட்டிற்றினம் அந்தப்பேப்பர்கார புண்ணியவான்கள்!!! இருந்தாலும் ஒரேயடியாய் தூக்கி போடாமல் எதோ ஒரு பக்கத்தில போடுவம் என்று போட்டுக்கொண்டிருக்கீனம். அவரும் அதைப் பெரிசு படுத்தலபோல கிடக்கு ஏன் என்றால் அவரும் வின் ஒன்று கைவசம் வைத்திருக்கிறார் தானே அது இருக்கும் போது ஏன் யோசிப்பான் என்று முடிவெடுத்திட்டார் போல சரி பார்ப்பம் எப்படி போகுதென்று!

இவேலெல்லாம் ஒரு பக்கத்தால போட்டுக்குழப்பியடிச்சுக்கொண்டு இருக்க இஞ்சால ஒரு பக்கத்தால தமிழ்தேசிய!!! ஊடகவியலாளர்கள் எண்டு சொல்லிக்கொண்டு இவேலெல்லாருக்கும் வால் புடிச்சுக்கொண்டு கொஞ்சப் பொடியள் திரியினம்!! அந்தப்பொடியளுக்கு இந்த எம்பி மார் குசு விட்டாலும் அதுதான் செய்தி!! வேலவெட்டியள் இல்லாத நேரத்தில இந்த எம்பி மார ஒவ்வொருத்தரா கூப்பிட்டு கூப்பிட்டு பேட்டி எடுத்து பேப்பர்ல போடுறத தவிர வேற உருப்படியா ஒண்டும் செய்யமாட்டினம் இவயள் கேட்டால் இவங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எண்டு அவயளே சொல்லுகினம்!! பாவம் அந்தப்பொடியளுக்குத்தெரியாது! போல இந்த எம்பிமார் தங்கள தங்கட சுயலாபத்துக்குத்தான் பயன்படுத்துகினம் என்டு.. ம் ம் ம் பாப்பம் பாப்பம் என்னதான் நடக்குதெண்டு ஆனா ஒண்டு மட்டும் சொல்லுறன்ரா என்னதான் நீங்க ஆட்டம் போட்டாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்...

Read more...

அசாத்சாலிக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அசாத்சாலி கிழக்கு பிரதேசத்திற்கு வந்திருந்தார். அவருக்கு எதிராக கிழக்கில் முஸ்லிம்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர். அவர் இவ்வாறு ஓட்ட மாவடிக்கு வந்திருந்தபோது, அவர் பேசுவதற்கு தயாராக இருந்த மண்டபத்தினை வழங்க அதன் நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் பிரதேச மக்கள் அசாத்சாலியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியிருந்தனர். அதன் புகைப்படங்கள் இங்கே.




Read more...

Facebook இல் கலக்கும் இன்றைய காதலின் நிலையை பற்றி குறும்படம் என்ன சொல்கின்றதென பார்க்கவேண்டுமா?

காதலைப்பற்றி பல மேதாவிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் "மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுது மாறாதிருப்பதுதான் காதல்" என்று ஷேக்ஸ்பியரும், "என்றும் மாறாத காதல் பார்த்ததும் வருவதில்லை" என்று கிறிஸ்டோர் மார்லோவ்வும், "நம்மை இன்னொருவரிடம் கண்டுபிடிப்பதுதான் காதல்" என்று அலெக்ஸாண்டர் ஸ்மித்தும், 'காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை அந்தக் காரணம்தான் தெரிவதில்லை" என்று பாஸ்கலும், "கடுகளவு நம்பிக்கையே காதல் பிறப்பதற்குப் போதுமானது" என ஸ்டெந்தாலும், 'காதல் எங்கு இருக்கிறதோ அங்குதான் வாழ்க்கை இருக்கிறது' என மகாத்மா காந்தியும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது Facebook இல் கலக்கும் இன்றைய காதலின் நிலையை பற்றி இந்த குறும்படம் என்ன சொல்கின்றது என பார்கின்றீர்களா?

Read more...

யாழ், வன்னி தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்காளர் குறைநிரப்பு பட்டியல்களை பொதுமக்கள் பரிசீலிக்கலாம் - மஹிந்த.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறியவர்களும் தம்மைப் பதிவு செய்வதற்கு நாளை மறுதினம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டுக்கான காலம் ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் 2012ம் ஆண்டிற்காக தமது பெயர்களை வாக்காளர் இடாப்பின் குறைநிரப்புப் பட்டியலில் உட்சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013.06.28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் இதற்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் கருத்திலெடுக்கப்பட்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013 ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப் பதற்காக வழங்கப்படுகின்ற கால எல்லை 2013 ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்குரிய குறைநிரப்புப்பட்டியல்களின் பணிகள் நிறைவு செய்யப் பெற்றுள்ளதாகவும், அப்பட்டியல்கள் அலுவலக நேரங்களில் பொதுமக்களின் பரிசீலனைக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட தேர்தல்கள் அலுவல கங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

தனியார் பஸ் கட்டணம் ஜுலை முதலாம் திகதி அதிகரிப்படமாட்டாது - சி. பி. ரத்நாயக்க.

ஜூலையில் இடம்பெறவிருந்த தனியார் பஸ் கட்டண உயர்வு ஒத்திப் போடப்பட்டுள்ளதாகவும், இதற்கிணங்க தனியார் பஸ் கட்டணத்தை நாளை ஜுலை முதலாம் திகதி அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக, தனியார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் ஜூலை மாதத்தில் தனியார் பஸ் கட்டணங்களில் திருத்தம் ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இம்முறை ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத் தில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இதற்கமைய பஸ் உரிமையாளர் சங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜுலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தை அதிகரிப்பதில்லை என, பஸ் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்ததாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்றுத் தெரிவித்துள்ளார்.

Read more...

அவுஸ்திரேலியா மேலும் 22 இலங்கையர்களை நாடுகடத்தியுள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற மேலும் 22 இலங்கையர்கள் விமானம் மூலம் மீண்டும் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவு சட்டமூலத்தை மீறும் வகையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த 22 பேரே இவ்வாறு நாடு திருப்பியனுப்பப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் இவர்கள் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலான காலப் பகுதியில் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கை யாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்களில் 1057 பேர் பலவந்தமாக அனுப்பப்பட்டவர்கள் என அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

கற்பனையைத் தாண்டிய உண்மை! நாய் மனிதன்! (படங்கள் இணைப்பு)

பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாய்கள் மீது கொண்ட அதிக பாசத்தால் தனது முகத்தை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து நாயாக மாறியுள்ளார். இறந்த நாய் ஒன்றின் மூலமே தனது முகத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார். அறுவை சிகிச்சை முடிவடைந் துள்ள நிலையில் "நாய் மனிதன்" என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

Read more...

Saturday, June 29, 2013

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதாம். - சுரேஷ்

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கலந்துகொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைபின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித் துள்ளார்.

அத்துடன் இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர் எனவும், ஆனந்த சங்கரி கலந்துகொள்ளவில்லை எனவும், இருந்தபோதிலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது முழு ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்தார் என, சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

Read more...

செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 85 வயதுப் பாட்டி!

85 வயதான பாட்டி செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த 85 வயதுடைய சரஸ்வதியின் கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

தற்போது தனிமையில் வசித்து வரும் சரஸ்வதி பாட்டி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது சாப்பாடே செங்கல் மட்டும் தான், இதனால் இவரை செங்கல் பாட்டி என்றே அழைக்கின்றனர்.

தினமும் 1 முதல் 3 வரையிலான செங்கல்லை சாப்பிடுகிறார். சிறுவயதில் செங்கலை சுவைக்க தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட தொடங்கி, தற்போது கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோரும், திருமணத்திற்கு பிறகு எனது கணவரும் என்னை திட்டினர். பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

Read more...

பிக்கு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் பலி!

பிக்கு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய காலி லபுதுவ பகுதி விகாரை யொன்றைச் சேர்ந்த பிக்குவை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபரொருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி இரவு சந்தேக நபரான பிக்குவுக்கும், குறித்த நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த பிக்கு அந்நபரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமளவுக்கு இலங்கை மிகப்பெரிய நாடு கிடையாது! - பீலிக்ஸ்

இலங்கைக்கு தேவையானது காணி பொலிஸ் அதிகாரங்கள் அல்ல எனவும், பொருளாதார நல்லிணக்கமே இலங்கை தேவை எனவும், இலங்கை காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய நாடு கிடையாது என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களை பரவலாக்குவதால் தேவையற்ற சட்டங்கள் மக்கள் மீது சுமத்தப்படும் எனவும், அனைவரும் ஒரே சட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒரு வீட்டின் பிள்ளைகளாகவும் ஒரு தேசிய கீதத்தின் கீழ் இருக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

LLRC யை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற உதவிகளை பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் வழங்கும்.- கமலேஷ்

கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினால் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ற உதவிகளை பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கி வருமென அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். லண்டன் பைனான்ஷியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படாமை குறித்து விமர்சிப்பதா அல்லது கூடிய வேறுபாடொன்றை ஏற்படுத்துவதா என்பதே சர்வதேச சமூகத்தின் கேள்வியாக உள்ளதாகவும், பொதுநலவாய அமைப்பானது இவற்றில் பின்னதையே பார்கின்றது எனவும், பொதுநலவாய அமைப்பின் உதவி கிடைக்கப் போகும் விடயங்களை இலங்கை அரசாங்கம் இப்போதும் கூட இனங்கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் மனித உரிமைகள், ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் சமூகங்களுக்கிடையே அன்னியோன்னிய கண்ணியம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட பொதுநலவாய விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதில் தாங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக ஷர்மா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுநலவாய மென்வலு மற்றும் திரைமறைவுப் பங்களிப்புக்களுக்கு குறுகிய காலத்தில் எதிர்மறை விளைவுகள் அடிக்கடி ஏற்படலாம். ஆயினும் வெற்றியானது உண்மையான முன்னேற்ற வடிவத்தில் நீண்ட காலத் தவணையில் மாறாத தன்மையுடன் சாதகமாகவே ஈட்டப்பட்டு வருகின்றதெனவும், வெளிநடப்புச் செய்வதும் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதும் பொதுநலவாய அமைப்புக்கு நிரந்தர அவமானத்தையே தேடித்தருமென, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

Read more...

பொலிஸாருக்கு கப்பம் கொடுத்து கள்ள மண் அகழும் கள்வன்.

அரச அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அன்றேல் ஜனாதிபதியிடம் முறையிடுவோம். துண்டு பிரசுரம்.

சட்ட விரோத செயற்பாடுகளுக்கு வெல்லாவெளி பொலிசார் துணை போவதாக போரைதீவுப் பற்று வெல்லாவெளி பொது மக்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்தல் என்ற தலைப்புடன் போரைதீவுப் பற்று வெல்லாவெளி பொது மக்கள் என்ற உரிமை கோரலுடன் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு முகவரியிடப்பட்டு வெளியாகி இருக்கும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

எங்கள் பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. ஆற்று மணல் ஏற்றுதல், சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் ஏற்றுதல் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. ஆற்றுமணல் ஏற்றுவதற்கு பிரதேச செயலாளரால் வழங்கப்படுகின்ற அனுமதிபத்திரம் தொடர்ச்சியாக கணேசபுரத்தைச் சேர்ந்த இளஞ்செளியன்(குயில்) என்பவர் EP RC 6440 இந்த இலக்க உழவு இயந்திரத்திற்கே கொடுக்கப்படுகின்றது. இவர் 03 லோட் மணல் ஏற்றுவதற்கு அனுமதியினைப்பெற்று பொலிசாருக்கு பணத்தைக் கொடுத்து இரவு பகலாக தொடர்ச்சியாக நான்கு ஐந்து நாட்களுக்கு மணல் ஏற்றுகின்றார்

இவருக்கு இவ்வாறான சட்டவிரோத செயலை செய்வதற்கு பொலிஸார் காவல் கொடுக்கினறனர். இதே போலத்தான் மரமும் வெட்டுகின்றார். இவரால் மணல் ஏற்றுவது மக்கள் பிரயாணம் செய்யும் இடங்களில் வேளாண்மை செய்யும் வயல்களில் இதை தட்டி கேட்டால் பொது மக்களுக்கு தகாத மிக கேவலமான வாத்தை பிரயேகத்தால் ஏசுகிறார் இவருக்கு வெல்லாவெளி பொலிஸார் பக்கபலமாக இருப்பதால்தான் இத்தனை சட்டவிரோத செயல்களையும் தைரியமாக செய்கின்றார் என அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.

இது தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு பல முறை அறிவித்தும் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவரும் இவ்வாறு நடவடிக்கை எடுக்காது இருப்பது பொது மக்களாகிய எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அதாவது இவரும் இவனிடமிருந்து பணம் பெறுகின்றார் போல. இதனால்தான் பிரதேசசெயலாளர் இச் சட்டவிரோத செயலை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் எனவும் மேலும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.

எனவே இது தொடர்பாக விரிவான விசாரனை செய்து இந்த இலக்கத்தையுடைய உழவு இயந்திரத்திற்கு அனுமதி வழங்குவதை நிறுத்த ஆவண செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். இதற்கு சரியான நியாயம் தங்களால் கிடைக்காத பட்சத்தில் எமது மக்களின் விடியலுக்காக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதைத்தவிர எமது மக்களுக்கு வேறு வழி இல்லை எனவே இந்த கடிதத்தை உதாசீனம் செய்யாது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக்கொள்கினறோம் என மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு போரைதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.

யு.எம்.இஸ்ஹாக்


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com