'அமைச்சர் முரளிதரனுடன் இணைந்தே செயற்படுகிறேன்' கிழக்கு முதலமைச்சர்
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென்பதே ஒரே இலக்கு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென்பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார்.
இருவரும் வௌவேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க முதலமைச்சர் சந்திரகாந்தன் பணிப்புரை
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக்கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் வெள்ளப்பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிக்கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைசச்ர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரையில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும், உலக உணவுத்திட்டத்தின் உதவியுடன் தாழ்ந்த பிரதேசங்களில் வடிகான்களைச் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 10 ஆந் திகதியிலிருந்து வெள்ளப் பாதிப்பு இடைக்கிடை ஏற்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் சுமார் 35 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment