Friday, April 8, 2022

திமுக வின் மாய சுவரை கிழித்தெறிந்த, புலிகள் அனாதைகளாக அழிவார்கள் என்பதை இடித்துரைத்த எழுத்துலக பீஷ்மருக்கு இன்று நினைவு நாள்..ஸ்ரான்லி ராஜன்

இந்த கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் சேறுதான் ஆனால் அந்த சேற்றில் இருந்து சில செந்தாமரைகள் எப்பொழுதாவது வரும், ஒருமாதிரி மனப்பான்மை கொண்ட அந்த கம்யூனிஸ்டுகளில் இருந்து ஒரு சில உன்னதமான தேசாபிமானிகளும் கலைஞர்களும் வருவார்கள் அப்படி தமிழகம் கண்ட உன்னதமானவர்கள் இருவர் ஒருவர் இளையராஜா இன்னொருவர் ஜெயகாந்தன்.

தேசியம் எழுதிய எழுத்தாளர்களில் சோ.ராமசாமிக்கு கொஞ்சமும் குறைவில்லாத எழுத்து ஜெயகாந்தனுடையது ஒரு வகையில் சோவுக்கு அவர்தான் முன்னோடி. பாரத கண்டத்தின் தாத்பரியங்களிலும் அதன் நாகரீகங்களிலும் முதிர்ச்சியிலும் அதன் பல்வகை சிறப்புகளிலும் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையினை திறம்பட விளக்கும் அறிவுடன் ஒருவன் இருந்தான் என்றால் ஜெயகாந்தன் முதலிடத்தில் இருப்பார்.

திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் மாய சுவரை தன் ஜெயபேரிகை எனும் இதழால் கிழித்தெறிந்தவன் ஜெயகாந்தன். ஈரோட்டு ராம்சாமியினை மேடையில் வைத்து கொண்டே "பிராமணர் தமிழர் எதிரியுமல்ல, சமஸ்கிருதம் இங்கு ஒழிக்கபட வேண்டிய விஷயமுமல்ல, திராவிடம் என்பதை போல் விஷம் வேறேதுமல்ல" என சிங்கமென சீறியவன் ஜெயகாந்தன். அந்த வரிகள் ஒவ்வொன்றும் ராம்சாமிக்கு கன்னத்தில் அடியாய் விழுந்தவை, ஜெயகாந்தன் பிராமணன் இல்லை என்பதால் ராம்சாமியால் ஒன்றையும் சொல்லவும் முடியவில்லை.

காலமெல்லாம் திமுகவின் பொய் முகத்தை, திருட்டு பிரிவினைவாதத்தை அவர்போல் கிழித்தெறிந்தவர் எவருமில்லை, திராவிட பெரும் பிம்பங்கள் என சொல்லபட்டவர்களை தன் கால்தூசுக்கு கூட மதிக்காத சத்தியம் அவரிடம் இருந்தது. அண்ணா இறந்து உலகின் அதிகமக்கள் கூடிய அஞ்சலி என திமுக சொன்ன நேரம், தமிழகமெங்கும் பெரும் அச்சம் சூழ்ந்த நேரம் "மடையர்களால் அறிஞர் என்றும், பெரு முட்டாள்களால் பேரரிஞன் என்றும் அழைக்கபட்ட ஒரு மூடனின் மரணத்துக்கு ஊளையிடும் கும்பல் அது கும்பல் என்பது கூடி அழிக்கும், கூட்டம் என்பது கூடி செதுக்கும்..." என மிக பெரும் உரையினை அறச்சீற்றத்துடன் ஆற்றிய ஜெயகாந்தன் தனித்து நின்றார்.

எந்த கொம்பனும் பதில் பேசமுடியா விளக்கம் அது, கருணாநிதியிடமே பதில் இல்லை. 1960களில் அப்படி நெருப்பென இருந்தார் ஜெயகாந்தன், அப்படி ஒரு இந்தியனை இனி எக்காலமும் இத்தேசம் காணுதல் அரிது. மானிடம் மானிடமாக வாழ அவன் எழுதினான், சமூக சீர்கேடுகளை சாடி எழுதினான், அந்த எழுத்தில் மானிட நேயம் இருந்தது அப்படியே இந்திய கலாச்சாரத்தின் மாண்பும் பெருமையும் குடிகொண்டிருந்தது. பாரதிக்கு பின் தமிழகம் கண்ட தனிப்பெரும் சிந்தனையாளன் அவன். இந்த பாழ்பட்ட தமிழகத்தில் பிறக்காமல் மேல்நாட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் டாஸ்டாய் அளவு அவன் பேசபட்டிருப்பான். தமிழ்சினிமா தமிழகத்தை எந்த அளவு கெடுத்தது என முதலில் சொன்னது அவனே, மிக தைரியமாக சாடியதும் அவனே ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டை விட்டு காமராஜர் கட்சிக்கு வந்தார், அந்த மேதைக்கு தெரிந்திருகின்றது, லெனின் வேறு காமராஜர் வேறு அல்ல.

அதன்பின் எழுத்தில் தீவிரம் கூடிற்று, நாவல்கள், கட்டுரைகள், தொடர்கள், சிறுகதைகள் என அணல் பறக்க எழுதினார். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் அவரின் தொடருக்காகவே விற்ற காலமும் உண்டு. 100க்கும் மேற்பட்ட கதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் என அவர் அள்ளி வீசிய படைப்புக்கள் ஏராளம், அவற்றில் ஒன்றிற்கு மிக உயர்ந்த ஞானபீடவிருதும் கிடைத்தது, சில கதைகள் படமாக கூட வந்தன, பாடலும் எழுதினார்.

ஞானபீட விருதென்றால் முகநூலில் வழங்கபடும் விருதுகள் அல்ல, அது இந்திய இலக்கியத்தின் நோபல் அல்லது பாரதரத்னா அவர் படைப்புகளின் மக்கள் சிந்தனை, சமூக நலன், சொல்லாடல் என சிறப்புக்களை விளக்க எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள், இன்று இன்னமும் எழுதுவார்கள், படியுங்கள் தெரியும்.

ஆனால் நாம் ஆச்சரியமாக பார்ப்பது எல்லாம் பாரதியாருக்கு பின் ஒரு தமிழனுக்கு இருந்த முற்போக்கும், மக்கள் நலனும், எளிய பாமர சொல்லாடலும், தீர்க்கமான கருத்துக்களும். அவைதான் அவரை மகாவித்தியாசபடுத்தி, ,”ஞான செறுக்கன்” என அழைக்கபடும் அளவிற்கு உயர்த்திற்று. இப்படி சமூக சீர்கேட்டை, பத்திரிகையின் தவறுகளை கண்டித்த எழுத்தாளன் எங்காவது இன்று தமிழகத்தில் உண்டா? இனி வருவானா?

சிங்கம்போல எதற்கும் பயபடாமல் தமிழகத்தில் ஒரு எழுத்தாளர் இருந்தார் என்றால் நிச்சயம் அது ஜெயகாந்தன் ஒருவரே. முன் நவீனத்துவம்,பின் நவினத்துவம், கவித்துவம், கவிதானுபவம், பிரக்ஞை என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. அடிதட்டு மக்கள் உழைப்பாளிகள், சாமானியர்கள் என அவர்களில் ஒருவராக மாறி எழுதினார், அதனாலதான் பிச்சைகாரி பாத்திரத்தில் கூட அவர் எழுத்து ஜெயித்தது.

புகழின் உச்சத்தில் இருக்கும்பொழுது எழுத்தை நிறுத்தினார், முழு ஞானம் அவரிடம் குடிகொண்டது. இந்திய அமைதிபடை திரும்பிய நேரம், தமிழகத்தில் யாருமே புலிகளை விமர்சிக்க அஞ்சிய நேரம் (அவர்கள் வெல்லவே முடியாதவர்கள் என உலகம் நம்பவைக்கபட்ட நேரம்), புலிகள் பத்மநாபாவை சென்னையில் கோரமாக கொன்ற நிசப்தம் கலந்தநேரம், மிக தைரியமாக புலிகளின் அழிவையும், அவர்கள் எப்படி இல்லாமல் போவார்கள் என்பதையும், அனாதைகளாக அழிவார்கள் என்பதையும் ஆனித்தரமாக பேசியவர் ஜெயகாந்தன் மட்டுமே. (உண்மையில் பத்மநாபா கொலையோடு பெரும் நடவடிக்கை எடுக்கபட்டிருந்தால் திருப்பெரும்புதூர் சம்பவத்திற்கு வாய்ப்பு குறைவு)

தமிழகத்தின் பெரும் எழுத்தாளருக்க்கு, சிந்தனை சிற்பிக்கு, ஒரு சிங்கத்திற்கு, எழுத்துலக பீஷ்மருக்கு இன்று நினைவு நாள் தமிழகத்து மாபெரும் சிந்தனையாளாரான அவரை நிச்சயம் நினைவு கூறலாம். குறுகிய வட்டத்தில் சிக்காமல், இந்திய கலாச்சார மாண்பினை மாபெரும் பரந்த மனமுடைய எழுத்தாளர் அவர், பொதுவுடமைவாதியாக , இந்திய தேசியவாதியாக உயர்ந்து நின்றவர் திராவிடத்தின் பொய்முகம் தெரிய வேண்டுமா? ஜெயகாந்தனை படியுங்கள். திராவிட கோஷ்டியின் அசிங்கமான அவனகரமான அரசியல் தெரிய வேண்டுமா? ஜெயகாந்தனை படியுங்கள். தமிழ்தேசிய இம்சைகளை கிழிக்க வேண்டுமா ? ஜெயகாந்தனை படியுங்கள்.

தமிழென பிழைக்கவும், திராவிடம் என ஏய்க்கவும், பாரத கண்டத்தில் இருந்து தமிழகத்தை பிரிக்க நினைத்து செயலாற்றும் திராட கும்பல்களை சாடவும் அன்னை காளியே உருவெடுத்து வந்த பிறப்பு அவர். பழைய துர்வாச ரிஷியின் மறுபிறப்பு அவர், அப்படி ஒரு அறச்சீற்றம் இருந்தது, அவர் சபித்த‌தெல்லாம் நடந்தது, காரணம் சத்தியம் அவரிடம் இருந்தது. அவரின் வழியிலே இன்று பலர் திராவிடத்தை குத்தி குதறி உண்மை முகத்தை உரித்து கொண்டிருக்கின்றனர்.

இந்நாட்டையும் தமிழத்தின் நலனையும் நேசிக்கின்ற, தமிழர் பாரம்பரியத்தையும் அதன் பெருமையினையும் காக்க முயல்கின்ற ஒவ்வொருவரும் படிக்க வேண்டியர் ஜெயகாந்தன். சமூகத்திற்கான எழுத்து என்பது என்ன? தைரியமான எழுத்து என்றால் என்ன? தேசத்துக்கான, தமிழகத்தில் தேசியத்துகான எழுத்து எது என்பதை தமிழகத்திற்கு முதலில் சொல்லி தந்த மாபெரும் சிந்தனையாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

நாம் பாரதியினை கண்டதில்லை ஆனால் அவன் இப்படித்தான் ஞான செறுக்கில் வாழ்ந்திருப்பான், அதிகாரங்களுக்கு அஞ்சாமல் கடைசிவரை சிங்கமென உறுமியிருப்பான் என்பதை ஜெயகாந்தனில்தான் கண்டோம். பாரதிக்கு ஒரு சீடன், பாரதிக்கு தாசன் என சொல்லபடும் தகுதி ஜெயகாந்தனுக்குத்தான் உண்டு.

அன்றே வலுவான மத்திய தலமை இருந்திருக்குமானால் மாபெரும் உயரத்துக்கு அவர் கொண்டாடபட்டிருப்பார், அந்த ஞானமேகத்தின் மழை காலத்தினால் முந்தியது என்பதால் பெரும்பங்கு கடலிலே கொட்டியிருக்கலாம். ஆனால் சில துளிகள் உரிய நேரம் நிலத்திலும் விழுந்தன, அதிலிருந்துதான் ஏராளமான தேசியவாதிகள் உருவாகி வருகின்றார்கள், அவ்வகையில் காலத்தால் அனுப்பட்ட கருணை மேகம் அந்த ஜெயகாந்தன்.

வரும்காலத்தில் அவனின் சிந்தையும் அறிவும் தீர்க்கமும் வீரமும் ஞானமும் போற்றபடும், பெரும் அடையாளம் அந்த ஞானசிறுக்கனுக்கு நிறுவபடும், சத்தியம் அதை ஒரு நாளில் நிச்சயம் செய்யும்.

பத்மநாபாவின் நினைவஞ்சலியின்போது ஜெயகாந்தனின் முழக்கம்.0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com