Saturday, April 16, 2022

கடன் தவணைகளை செலுத்துவதை நிறுத்தி, இலங்கை தன்னைத்தானே திவால் என அறிவித்துக்கொண்டதா?

இலங்கை தனது வெளிநாட்டுக்கடன்களை செலுத்துவதற்குபோதுமான வெளிநாட்டு நாணய இருப்பை இழந்துள்ளது. இந்நிலையில் தவணைகளை செலுத்துவதற்கான பணத்தை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம், இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நட்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுவருகின்ற நிலையில், மறுசீரமமைப்பு முறையொன்றை தீவிரமாக ஆராய்ந்து நட்பு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு 'திவால்' என்ற நிலைக்கு செல்வதை தவிர்பதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக கடன்களை திருப்பிச்செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளமையானது ஆட்டினை அறுப்பதற்கு முதல் அதனை அறுத்த செயலா என லங்காநியூஸ் வெப் என்ற இணையத்தளம் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் மத்திய வங்கியின் புதிய ஆளுநரின் இச்செயற்பாட்டினை பொருளாதார நிபுணரும் எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ச த சில்வா பல மாதங்களுக்கு முன்னரே முன்மொழிந்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள குறித்த இணையத்தளம், இக்கட்டான இந்த நிலையில் குறைபாடுகளை சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பதை விட ஹர்ச த சில்வா நிதியமைச்சர் பதவியை எடுத்து தனது கற்றறிந்தவற்றை பிரயோகிக்க முன்வரவேண்டுமென அழுத்துகின்றது.

இலங்கை ஒருதலைப்பட்சமாக கடன் தவணைகளை செலுத்துவதை நிறுத்திக்கொண்டமை தொடர்பில் அவ்விணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் அவற்றுக்கான வட்டித் தவணைகளை செலுத்துவதை ஒருதலைப்பட்சமாக நிறுத்துவதாகவும் இலங்கை (ஏப்ரல் 12) அறிவித்துள்ளது. இத்தகைய நிகழ்வு இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனை இலங்கை இழந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இவ்வருடம் ஏப்ரல் 18ஆம் தேதி செலுத்த வேண்டிய கடன் பாக்கி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கடன்களை முன்னறிவிப்பின்றி நாம் திருப்பிச் செலுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாகும் என்பதால், கடனை செலுத்தாமல் நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக அறிவிப்பைச் செய்ததாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி மேலும் ஆராய்ந்து பார்த்ததில் எமக்கு தெரிய வந்தது யாதெனில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று செலுத்தப்படுவதற்காக நிலுவையில் 78 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமேயுள்ளது. அதிலிருந்து ஜூலை 18 வரையான 5 தவணைகளிலும் செலுத்தப்பட வேண்டியிருக்கும் தொகைகள் இதை விடவும் குறைவானதாகும். ஆனால் பெரிய தொகையான 1029.38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜூலை 25 அன்று செலுத்தப்பட வேண்டியுள்ளது.

ஜூலை வரை செலுத்ததப்படவேண்டியுள்ள தவணைக்கட்டணங்கள். 


78 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது பெரிய தொகை என்பது உண்மைதான். ஆனால் நாம் இங்கு இலங்கை என்ற நாட்டைப் பற்றியே பேசுகிறோம், ஒரு தனிப்பட்ட வணிகம் தொடர்பாக அல்ல. எனவேதான் 78 மில்லியன் டொலர் தொகை என்பது இலங்கையானது உத்தியோகப்பூர்வமற்ற முறையில் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட போதுமான பாரிய தொகையல்ல என்றே நாங்கள் கருதுகிறோம். இத்தொகையானது இலங்கைக்கு ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளுக்கு கூட போதுமானதல்ல.

கடந்த காலங்களில், நாங்கள் தொடர்ச்சியாக கடன்களை வாங்கியதுடன் அக்கடன்கள் மற்றும் அவ்ற்றுக்கான வட்டி தவணைகளை ஏதோ ஒரு வகையில் திருப்பிச் செலுத்தியே வந்துள்ளோம். ஆனால் தற்போது இந்த அதிகாரபூர்வமற்ற திவால் அறிவிப்பால் ' நாம் கடனை கட்ட மாட்டோம் - கடன் கிடைக்கவும் மாட்டாது ' என்ற நிலைமையே உருவாகியுள்ளது. இது ஒரு நாடாக நாம் அதால பாதாளத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம் என்பதையே காட்டுகின்றது.

கடந்து சென்ற நாட்ட்களில் , எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உட்பட பொருளாதார நிபுணர்கள் கடனை அடைப்பதற்கு பதிலாக அப்பணத்தை எமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்தனர். இது ஒரு ஜனரஞ்சக கருத்தாகவும்கூட மாறியது. மத்திய வங்கியின் புதிய ஆளுநரும் இந்த ஜனர்ஞ்சக கருத்துக்கு அடிபணிந்து உள்ளதாகவே தெரிகிறது. மறுபுறம், எங்காவது இருந்து பணத்தைத் தேடுவதை விடவும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு பணம் இல்லை என்று சொல்வது எளிதானது.

ஆனால் இந்த 78 மில்லியன் டாலர் தொகையையும், மற்றும் ஜூலை மாத இறுதிக்குள் செலுத்த வேண்டிய ஏனைய தவணைகளுக்கான தொகையையும் எப்படியாவது இலங்கையின் நட்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவுடன் செலுத்திக்கொண்டு நகர்ந்திருந்தால் - நாடு 'திவால்' என்கின்ற வகையில் அவசரப்பட்டு அறிவிக்காமல் - சீனாவிடம் இருந்து 2200 மில்லியன் டாலர் கடனை ஜூலை 25க்குள் பெற்றுக்கொள்வதற்கு ஒப்புதலை பெற்றிருக்க முடியும்.

சிரமப்பட்டோ அல்லது வேறுவிதமாகவோ, இலங்கை இனியும் வங்குரோத்து இல்லாத நாடாக சர்வதேச அளவில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடிந்திருக்கும். எவ்வாறாயினும், அரசாங்கம் நேற்று வெளியிட்ட திடீர் அறிவிப்பின் விளைவாக, இலங்கையில் உள்ள 13 பொது மற்றும் தனியார் வங்கிகள் தரமிறக்கப்படுவதை தாம் அவதானித்து வருவதாக Fitch Ratings International தெரிவித்துள்ளது. இது எப்படி இருக்கிறதென்றால் வெற்றிலையும் பாக்கும் காலியான பிறகு சுண்ணாம்புச் சூளைக்கு என்னாச்சு? என்று கேட்பது போல் உள்ளது. . ஆனால் இன்று நாடு ஒரு பயங்கரமான பொருளாதார தலைவிதியை எதிர்கொண்டுள்ளது.

ஒருதலைப்பட்சமாக கடனைத் திருப்பிச் செலுத்த மாட்டோம் என்று அறிவிக்கும் முன் IMF உடன் ஒருவித திட்டவட்டமான புரிந்துணர்வை எட்ட முடிந்திருந்தால், கடன் கொடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதேனும் மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடங்கியிருந்தால் நிலைமை ஓரளவு சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நடந்திருப்பதோ அதுவல்ல.

மறுபுறம், புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் நடவடிக்கையை எதிர்க்கட்சி பொருளாதார நிபுணர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் பாராட்டியுள்ளார். உண்மையில் கடந்த இரண்டு மாதங்களாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறுவதையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. எனவே, தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு இந்தப் பிரச்சினைகளின் குறைபாடுகளைப் போதிக்காமல், நாடாளுமன்றத்தில் ஏதாவது உடன்படிக்கை மூலம் நிதியமைச்சுப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நாட்டுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இந்த செயல்களுக்கான பொறுப்பை அவற்றை பிரேரித்த நிபுணர்களே பொறுப்பேற்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com