Sunday, March 13, 2022

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ பிரச்சாரம் உலகெங்கிலும் தீவிரப்பட்டு வரும் வர்க்கப் போராட்டத்தை அதிகரிக்கும்.

ரஷ்யாவுக்கு எதிராக பொறுப்பற்ற முறையில் அமெரிக்காவும் நேட்டோவும் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரிப்பது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மிகப் பெரிய உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு விரைவாக இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

ரஷ்யாவை உலகப் பொருளாதாரத்தில் இருந்து ஏறக்குறைய முழுமையாக துண்டித்து, ரஷ்ய மக்களைப் பட்டினியில் விடுவதை இலக்காகக் கொண்ட, ஒரு முடக்கும் விதமான பொருளாதாரத் தடைகளை உள்ளடக்கிய, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகள், அந்த நாட்டை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக மாற்றுவதையும் அதன் இயற்கை ஆதார வளங்களைச் சூறையாடுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பு, அது பிற்போக்குத்தனமானது மற்றும் எதிர்க்கப்பட வேண்டியது என்கின்ற அதேவேளையில், உக்ரேனைத் தூண்டில் புழுவாக பயன்படுத்தி, ரஷ்யாவுக்கு எதிராக பல ஆண்டுகளாக நேட்டோ தீவிரப்படுத்தி வந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் விளைவாகும்.

கிழக்கு ஐரோப்பாவில் கட்டவிழ்ந்து வரும் நிகழ்வுகள் விரைவிலேயே அணுசக்தி யுத்தமாக விரிவடையுமோ என்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் அதை கவலையுடனும் அச்சத்துடனும் பார்க்கிறார்கள். ஆனால் இந்த நெருக்கடி ஒரு மிகப் பெரிய வர்க்க மோதலின் வெடிப்பை நோக்கி இட்டுச் செல்லும் வகையில் அளப்பரிய பொருளாதார சீர்கேட்டையும் தூண்டிவிட்டு வருகிறது. மூன்றாம் உலகப் போருக்கான முனைவை எதிர்க்க விரும்புபவர்களின் நோக்குநிலை, 1934 இல் லியோன் ட்ரொட்ஸ்கி உய்த்துணர்ந்ததைப் போல, போர் வரைபடத்தை நோக்கி அல்ல, மாறாக வர்க்கப் போராட்ட வரைபடத்தை நோக்கி இருக்க வேண்டும்.

ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதார தடைகள் மற்றும் போரின் பொருளாதார தாக்கம் குறித்த கடந்த வார அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் பின்வருமாறு கணித்தது, 'விலை அதிர்வுகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக ஏழை குடும்பங்களின் மீது அவர்களுக்கு உணவு மற்றும் எரிபொருள் செலவுகளில் அதிக விகிதத்தில் இருக்கும். இந்த மோதல் தீவிரமடைந்தால், பொருளாதார சேதம் இன்னும் பேரழிவை ஏற்படுத்தும். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் கணிசமான அளவுக்கு உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், மற்ற நாடுகளுக்கும் கணிசமான அளவு பரவும்.

ஏற்கனவே இது ஆரம்பித்து விட்டது. எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 130 டாலரை எட்டியுள்ளது, அமெரிக்காவில், எரிவாயு நிரப்பும் நிலையங்களில் எரிவாயு விலைகள் இதுவரையில் இல்லாத அவற்றின் அதிகபட்ச விலையாக ஒரு கேலன் 4 டாலரை தாண்டி உயர்ந்துள்ளது. பிரான்சில், கடந்தாண்டு இறுதியில் லிட்டருக்கு 1.65 யூரோவாக இருந்த எரிவாயு விலை லிட்டருக்கு 2.20 யூரோவாக அல்லது கேலன் ஒன்றுக்கு 9.16 டாலருக்குச் சென்றுள்ளது. கோதுமை முன்பேரங்கள் இந்தாண்டு ஏற்கனவே 70 சதவீதம் உயர்ந்துவிட்டது — இதில் ரஷ்யாவும் உக்ரேனும் சேர்ந்து மொத்த தானிய ஏற்றுமதியில் கால் பங்கைக் கணக்கில் கொண்டுள்ளன. ஐரோப்பாவில், எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால் தொழில்துறை உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறது.

பெப்ரவரி மாதத்தில், அமெரிக்க பணவீக்கம் 7.9 சதவீதத்தை எட்டியது, யூரோ மண்டலத்தில் அது 5.8 சதவீதத்தை எட்டியது, இது 1997 இல் ஒரே நாணயம் உருவாக்கப்பட்டதற்குப் பிந்தைய மிக அதிகபட்ச அளவாகும். பொருளாதாரத் தடைகளின் விளைவுகள் உலக பொருளாதாரம் எங்கிலும் எதிரொலிக்கும் போது மார்ச்சில் பணவீக்கம் இன்னும் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இருக்கும். உலகின் இந்த பிராந்தியத்தில் பட்டினி மற்றும் பஞ்சம் ஏற்பட நிஜமான சாத்தியக்கூறு உள்ளது. எகிப்தில் எண்பது சதவீத தானியங்கள் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. துருக்கி, பங்களதேஷ், நைஜீரியா மற்றும் யேமன் ஆகியவை ரஷ்ய தானியத்தின் பிற முக்கிய இறக்குமதியாளர்களில் உள்ளடங்கும்.

தொழிலாள வர்க்கம் மீதான தாக்கம் மிகப் பெரியளவில் இருக்கும். உலக விநியோகச் சங்கிலிகளில் இந்த பெருந்தொற்று ஏற்படுத்திய குழப்பம் காரணமாக உண்டான பணவீக்கத்தால் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை தரங்கள் குறைந்துள்ளதுடன் இந்த பெருந்தொற்றால் மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏற்கனவே தொழிலாள வர்க்கம் இரண்டாண்டுகளுக்கு மேலாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சமூக அதிர்ச்சியானது உலக அரசாங்கங்களால், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவால், “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குகிறோம்' என்ற பெயரிலும், அல்லது இலாபத்திற்காக உயிர்களைத் தியாகம் செய்வதற்காகவும், தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை வேண்டுமென்றே நிராகரித்ததால் ஏற்பட்டதாகும்.

இந்த பெருந்தொற்றுக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய போரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கங்கள் உக்ரேனைப் பயன்படுத்துகின்றன, இந்த பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை என்பதோடு, ஏற்கனவே அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பொருளாதார கவலையை ஒரு வெளிநாட்டு எதிரி மீதான வெறுப்பாக திருப்புவதற்கான்ன ஒரு முயற்சியில், ஏற்கனவே பல தசாப்தங்களுக்கு முன்பிருந்த அதன் அதிகபட்ச மட்டங்களை எட்டியுள்ள பணவீக்கத்தை, அவர்கள் முற்றிலும் ரஷ்யாவின் தவறால் ஏற்பட்ட 'புட்டின் விலை உயர்வு' என்பதாக வேறுவிதமாக சித்தரிக்க பயன்படுத்துகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தின் மிகவும் தனிச்சலுகை கொண்ட அடுக்குகள் உட்பட சமூகத்தின் செல்வந்த அடுக்குகளுக்குப் போர் வெறி பிடித்துள்ள அதேவேளையில், இந்த பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்திற்குள் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

ரஷ்யாவிலிருந்து அமெரிக்க எண்ணெய் இறக்குமதிக்கான தடையை அறிவித்து கடந்த வாரம் ஜனாதிபதி பைடென் பேசுகையில், அமெரிக்காவில் இத்தகைய நடவடிக்கைகளின் பொருளாதார பாதிப்பை 'சுதந்திரத்தைப் பாதுகாக்கும்' பெயரில் ஓர் அவசியமான தியாகமாக முன்வைத்தார். ஆனால் பைடெனோ அல்லது வேறு எவருமோ, ஆபிரிக்கா மற்றும் வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களிடம் இல்லையென்றாலும், அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களிடம், மூன்றாம் உலகப் போர் ஆபத்தை எழுப்பும் ஒரு பொறுப்பற்ற நடவடிக்கைக்காக இத்தகைய தியாகங்களைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேட்க நினைக்கவில்லை.

தியாகம் செய்யுமாறு பெருநிறுவன தன்னலக்குழுவிடம் எதுவும் கோரப்படவில்லை, அது இந்த பெருந்தொற்றின் போது குவித்துக் கொண்டதை விட அதிகமாக இந்த போரிலிருந்தும் பணம் சம்பாதிக்கும். உண்மையில், Northrup Grumman மற்றும் Raytheon போன்ற முக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களின் பங்கு விலைகள் சமீபத்திய வாரங்களில் கூர்மையாக உயர்ந்துள்ளன. மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களும் வேளாண்துறை வணிகங்களும் அவற்றின் ரஷ்ய போட்டியாளர்களை அகற்றுவதன் மூலம் உலகெங்கிலுமான பற்றாக்குறையிலிருந்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளுக்காக நாக்கில் எச்சில் ஊற காத்துக் கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்திற்கு நன்மையளிக்கும் சமூகத் திட்டங்களில் இருந்து, பில்லியன் கணக்கான வளங்களைப் போரை நோக்கி திருப்பிவிட ஒரு மூடுமறைப்பாக இந்த உக்ரேன் போர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்திய செலவின மசோதா காங்கிரஸ் சபை மூலமாக இதற்கான பாதையை அமைக்கிறது, இராணுவத்திற்கான சுமார் 800 பில்லியன் டாலர்கள், உக்ரேனில் செலவிடுவதற்கான 15 பில்லியன் டாலர்களும் இதில் உள்ளடங்கும், அதேவேளையில் பெருந்தொற்று சம்பந்தமான நிதி ஒதுக்கீட்டில் இருந்து 15 பில்லியன் டாலரை நீக்கிவிடுகிறது. பிரிட்டன் பெருநிறுவன ஊடகங்கள் இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதற்காக போருக்குப் பிந்தைய சமூகநல செலவுகளை வெட்ட அழைப்பு விடுக்கின்றன. மிகவும் அச்சுறுத்தும் வகையில், ஜேர்மனி இந்த ஆண்டுக்கான இராணுவ வரவு செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது, இது அடால்ஃப் ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் மிகவும் குரூரமாகவும் அப்பட்டமாகவும் தொகுத்தளிக்கப்பட்டது, “நேட்டோவுக்கு அதிக துப்பாக்கிகளும் குறைந்த வெண்ணெய்யும் தேவை” என்று அதன் தலைப்பு அறிவித்தது. இந்த வரிகள், 'இரும்பு எப்போதும் ஒரு பேரரசை வலிமையாக்கும், அதிகபட்ச வெண்ணெய் மற்றும் பன்றிக்கொழுப்பு மக்களைக் கொழுக்கச் செய்யும்' என்று ஹெர்மன் கோரிங்கின் இழிவான கூற்றை நினைவுபடுத்துகிறது.

இந்த பொறுப்பற்ற நடவடிக்கையின் சமூக விளைவுகள், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே ஒரு பலப்பரீட்சைக்கான தயாரிப்புகளாக அமைகின்றன, இதில் வெகுஜன கோபம் இந்த பெருந்தொற்றின் ஒரு விளைவாக ஏற்கனவே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதிகரித்து வரும் தீவிரமயப்படலைச் சந்திக்கும். அமெரிக்க தொழில்துறை தொழிலாளர்களின் மிகப் பெரும் வேலைநிறுத்தங்கள், துருக்கி முழுவதும் தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தங்கள், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் மருத்துவத் துறை பணியாளர்கள் வேலைநிறுத்த-விரோத உத்தரவுகளை மீறியமை மற்றும் பிற குறிப்பிடத்தக்க சமூக எதிர்ப்பின் வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் கடந்த இரண்டாண்டுகள் கண்டுள்ளன.

ஆளும் வர்க்கமே இந்த சாத்தியக்கூறு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், தொழில்துறைமயப்பட்ட நாடுகளில் ஒரு மிகப் பெரிய வேலைநிறுத்த அலையில் மூழ்கடித்த 1970 களின் எண்ணெய் அதிர்வுகளையும், துனிசியா மற்றும் எகிப்தில் புரட்சிகளுக்கு எரியூட்டிய வாழ்வாதார செலவு மீதான வெகுஜன கோபம் நிலவிய 2011 அரபு வசந்தத்துடனும் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டு பத்திரிகைகளில் பதட்டமான கருத்துக்கள் காணப்படுகின்றன.

உக்ரேனில் 'சுதந்திரத்தை பாதுகாப்பதாக' கூறும் முதலாளித்துவ அரசாங்கங்களின் விடையிறுப்பானது, தடையாணைகள், வேலைநிறுத்த தடுப்புச் சட்டம், நிர்வாகத்துறை உத்தரவுகள் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கான பிற நடவடிக்கைகள் உட்பட, தவிர்க்கவியலாமல் அரசு அடக்குமுறை அதிகளவில் பயன்படுத்துவதை உள்ளடக்கி இருக்கும். ஏற்கனவே, அமெரிக்காவில் 17,000 BNSF இரயில்வே தொழிலாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்திற்கு எதிரான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது தேசிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்காக என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது. இதுபோன்ற இன்னும் பல நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

இந்த அடக்குமுறை நடவடிக்கையில் நேரடியாக பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பும் உள்ளடங்குகிறது. அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்புத்துறையின் 30,000 தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை 3 சதவீதமாகக் கட்டுப்படுத்தும் விற்றுத் தள்ளப்பட்ட 'பணவீக்கம் சாராத' ஒப்பந்தத்தை ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கம் பகிரங்கமாக பெருமைபீற்றுகிறது, இந்த ஒப்பந்தம் USW தலைவர் டாம் கான்வே மற்றும் பைடெனுக்கு இடையே திரைக்குப் பின்னால் நேரடியாகவே தனிப்பட்டரீதியில் நடந்த விவாதங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் ரஷ்ய நாசவேலையின் விளைவு என்றும், சமீபத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் இலண்டன் சுரங்கப் பாதை இரயில்வே தொழிலாளர்களைப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் முத்திரை குத்தியதைப் போல தொழிலாளர்கள் 'புட்டினின் கைப்பாவைகளாக' செயல்படுவதாகவும் முத்திரை குத்துவதற்குப் பெருநிறுவனப் பத்திரிகைகள் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச தொழிலாள வர்க்கமே போருக்கு எதிரான போராட்டத்திற்கான சமூக அடித்தளமாகும். முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மிகவும் சலுகை பெற்ற அடுக்குகளுக்கு எதிர்முரணாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் சமரசத்திற்கிடமின்றி போரை எதிர்க்கின்றன. போரால் தொழிலாளர்களுக்கு எந்த ஆதாயம் ஏதும் இல்லை, ஆனால் எப்போதும் போல தொழிலாளர்கள் தான் விலை கொடுக்கப்படுவார்கள்.

பைடெனும் மற்ற தலைவர்களும் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுகிறோம் என்ற பெயரில் 'தேசிய ஒற்றுமையை' போதிக்கையில், போர் முனைவின் விளைவுகளும் சமூகத்தில் பல்வேறு அடுக்குகளின் மாறுபட்ட விடையிறுப்புகளும், உலக சமுதாயத்தில் நிஜமான பிளவுக் கோடு நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இல்லை, மாறாக எல்லா நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே உள்ளது என்பதை இன்னும் அதிகமாக பகிரங்கமாக அம்பலப்படுத்தும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக ஆதார வளங்களைப் போருக்காக வீணடிப்பது, தனியார் இலாபத் திரட்சி மற்றும் தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்லும் தேசிய எதிர்விரோதங்களின் அடிப்படையில் அமைந்த இந்த முதலாளித்துவ அமைப்புக்கும் மற்றும் ஒரு நவீன தொழில்துறை சமூகத்தின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கும் இடையே அடிப்படை முரண்பாட்டை எழுப்புகிறது. ஆகவே போருக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டு வர தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும்.0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com