Sunday, March 13, 2022

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்.

“தேசியம்”, “தாயகம்”, “சுயநிர்ணயஉரிமை” என்பவற்றை ஏற்காதவர்களெல்லாம் துரோகிகள், ஒட்டுக் குழுக்கள் எனகடந்த 35 ஆண்டுகளாக பட்டமளித்து துள்ளிக் குதிப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்ததோடு, 13வது திருத்தத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனுமில்லை. அது தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு உரியவகையில் அதில் எந்தவித அதிகாரமும் இல்லை” எனவும், “13வது திருத்தத்தின் மூலம் அமைந்த மாகாணசபையை ஏற்கமாட்டோம், அனுமதிக்கமாட்டோம், தும்புக் கட்டையாலும் தொடமாட்டோம்” எனவும், “13வது திருத்தமும் அதன் மூலமான மாகாணசபையும் தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆக்கிரமிப்பு இந்தியாவால் தமிழர்கள் மீதுதிணிக்கப்பட்டஒன்று” எனவும், மேடை மேடையாக முழக்கங்கள் இட்டும், பத்திரிகைகளில் தலையகங்களாக வரும் வகைகளில் அறிக்கைகள் விட்டும் “எவடம் எவடம் புளியடிபுளியடி என தமது தேர்தல் அரசியல் தளத்தில் தமிழ் மக்களை அழைத்துச் சென்றவர்கள் இப்போது:-

13வது திருத்தத்தை இல்லாமற் செய்வதற்கோ அல்லது அதனை கரைத்து விடுவதற்கோ இடமளித்துவிடக் கூடாது என்கிறார்கள்.

13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நிறைவேற்ற வைப்பதற்கும், மாகாணசபையை தற்போதுள்ள அரசாங்கம் இல்லாமற் செய்துவிடாமல் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் துணை மிகவும் அவசியமானது என்கிறார்கள். அதற்கு இந்தியாவுடன் நட்பை – நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் – எவ்வகையிலும் தொடர்ந்து பேணவேண்டும் என்கிறார்கள்.

இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்கிறார்கள். இந்தியாவை மீறி வேறு எந்த நாடும் தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வரமாட்டாது என்கிறார்கள். 13வதில் இருக்கின்ற காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபை செயற்படுத்தியிருந்தால் ஜனநாயக வழிகளில் போராட்டங்களை நடத்தி அதற்கும் மேலாக அதிகாரங்களை கோரி பெற்றிருக்க முடியுமாம்.

மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் அதற்கு உள்ள குறைந்த பட்ச அதிகாரங்களைப் பாவித்து அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மட்டுப்படுத்தலாம், மேலும் அடிப்படையான பொருளாதாரத் துறைகளில் ஓரளவு அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்று தமது அறிக்கைகள் மூலம் 13வது திருத்தத்தினதும் மாகாண சபை முறையினதும் பயன்பாடுகளையும் அவசியத்தையும் அடுத்தடுத்து அடுக்கிறார்கள்.

இவற்றை உணர்வதற்கு இவர்களுக்கு 35 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றதா? இவர்கள் 35 ஆண்டுகளை வீணடித்து கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தெரிந்தே தவறவிட்டவர்கள். 5 ஆண்டுகள் மிகப் பெரும்பான்மையாகக் கொண்டவர்களாக மாகாணசபையின் ஆட்சியை வைத்திருந்தவர்கள். அது மட்டுமல்லாது 5 ஆண்டுகள் நல்லாட்சி என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தையே தமது செல்வாக்கின் கீழ் வைத்திருந்தவர்கள்.

அந்தவேளை, தமிழர்களுக்கான அரசியற் தீர்வைப் பெறுவதற்கு இந்தியா தேவையில்லை என்றவாறாக வீறாப்பு காட்டி செயற்பட்டவர்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத பெரும் சாதனைகளை நிகழ்த்துபவர்கள் போல கூச்சநாச்சமின்றி புலிகேசி வடிவேலு மாதிரி வேடம் கட்டி நாடகங்கள் நடத்திவிட்டு இப்போது ஒன்றும் தெரியாத பாப்பாக்களை ஊரார் ஏமாற்றிவிட்டார்கள் என்பதாகபாவனைகாட்டுகிறார்கள்.

35 ஆண்டுகளாககைகளுக்குஎட்டிய தூரத்தில் இருந்தஉண்மைகள் இப்போதுதானா இவர்கள் கண்ணுக்கும் அறிவுக்கும் பட்டிருக்கிறது? இவற்றை இவர்கள் இப்போது கூறுவதைப் பார்க்கையில் கோமாளிகள் வேடிக்கைகாட்டுகிறார்கள் என்றுகருதுவதா? இவர்களது இப்போதையபேச்சுக்களையும் அறிக்கைகளையும் பார்க்கையில் மீண்டும் தமதுவாக்குவேட்டைக்கு மக்கள் இன்றையநிலையில் விழுங்கக் கூடிய இரைகளை தமது பிரச்சாரத் தூண்டில்களில் கோர்த்திருத்திருக்கிறார்கள் என்றஎண்ணமே தூக்கலாகநிற்கின்றது.

இவர்களின் வேடிக்கையான நாடகங்களைப் பார்க்கையில் இன உணர்ச்சி உசுப்பேத்தலால் தமது மூளை கரள் கட்டிகல்லாகிப் போதலும் தெரியாத அப்பாவித் தமிழ்ச் சனத்தைநினைக்கையில் தான் “கடவுளாலும் இவர்களைக் காப்பாற்றமுடியாது” என்று வேதனைப்படவேண்டியுள்ளது. தமிழர்கள் மத்தியிலுள்ள சமூகப் பெரியவர்களும், படித்ததமிழ்ப் பிரமுகர்களும், தமிழ்ப் பத்திரிகைகளும் இந்தவாக்குவேட்டைஅரசியல் நடத்தும் போலித் தேசியக்காரர்களைப் பற்றி என்னதான் அவ்வப்போதுவிமர்சித்தாலும், அவர்களையே தமிழ் மக்களின் தகுதிவாய்ந்த அரசியற் பிரதிநிதிகளாகவும் தவிர்க்கமுடியாத தலைவர்களாகவும் தொடர்ந்து தூக்கிநிறுத்திவிடுகிறார்கள். மாற்று இல்லை என்பார்கள், ஆனால் மாற்றுக்கள் இங்குவேரூன்றுவதற்குக் கூட விடுவதில்லையே, பின்னர் எப்படிஅவைதலையெடுக்கமுடியும்.

இவைஒருபுறமிருக்க, இப்போது இந்தியாவைநோக்கிபாமாலைகள் சூட்டும் தமிழ்த் தேசியங்கள் அண்மைக்காலம் வரை – “இந்தியா ஓர் ஆக்கிரமிப்புநாடு”: “இந்தியா தனது நலன்களுக்காகதமிழர்களின் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டஒருநாடு”

இந்திய இராணுவத்தை அனுப்பிதமிழ்ப் பெண்களைக் கற்பழித்து பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைப் படுகொலைசெய்தஒருநாடு”

புலிகள் தமிழீழ விடுதலையை சாதித்துக் கொண்டிருந்தவேளையில் இலங்கை அரசுக்கு உதவிசெய்து தமிழர்களின் போராட்டத்தை அழித்த ஒருநாடு”

என தமது உள்ளுர் மக்கள் மன்றங்களில் குற்றச் சாட்டுப் பத்திரங்களை வாசித்துவந்தவர்கள் – தமதுபத்திரிகைகளில் கட்டுரை கட்டுரையாக எழுதவைத்து வெளியிட்டவர்கள்; – தமக்கிடையிலானகலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் கொந்தளித்தவர்கள் – முகநூல்களில் தொடர்ந்து அடுக்கிவந்தவர்கள்;. – “இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடு என்ற எண்ணத்தை தமிழ் மக்கள் மனங்களில் பதிவுசெய்யும் எண்ணம் கொண்டவிளம்பரப் பலகைகள் யாழ்ப்பாணத்துவீதிகளின் பலசந்திகளில் இன்னமும் உள்ளன. அப்போது இந்தியஆமிக்காரன் விருந்துகளுக்கு அழைத்தபோதுமட்டுமல்ல இந்த “தமிழ்த் தேசிய” சிற்பிகள் இப்போது இந்திய தூதுவராலயம் அவரகளது கொண்டாங்களுக்கு அழைக்கிறபோதும் முழங்காலில் ஓடிப்போய் முன் வரிசைகளில் அமர்ந்துகொள்கிறார்கள். இன்னமும் இவர்கள் இரட்டைமுகமும் இரண்டுகுணமும் கொண்டவினோதங்கள்.

இப்போது:- இந்தியா தொப்புள்குடிஉறவு கொண்ட தாய்நாடாம். இந்தியாவுக்கு சிங்களவர்கள் நண்பர்களாக இருக்கமாட்டார்களாம் – தமிழர்கள் தான் உண்மையான நண்பர்களாக இருப்பார்களாம்; இந்தியாவின் தேசியநலன்கள்மீது தமிழர்கள் தான் எப்போதும் அக்கறையாக இருப்பார்களாம்.

எனவே, 1987ம் ஆண்டுகைச் சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவற்றை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளைமேற் கொள்வதோடு, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் மாகாணசபைத் தேர்தல்களைஉடனடியாகநடத்துவதற்கும் இந்தியஅரசாங்கம் அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டுமாம். அது இந்தியாவின் வரலாற்றுக் கடமையும் பொறுப்புமாம்.

விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல இவர்களின் வெங்காயவீறாப்புகள் வேற. தாங்கள் சொல்கிறபடி இந்தியா தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையாக செயற்பட்டால், இவர்கள் சீனாவிடமிருந்து இந்தியாவின் தேசியபாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையெல்லாம் நிறுத்திவிடுவார்களாம். இவர்கள்தானாம் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடுமற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கேடயங்களாம். கேட்பவன் கேணையனாக இருந்தால் இவர்கள் எருமைக் கடாவின் கொம்பிலிருந்தும் நெய் வடித்துவிடுவதாககதையளந்துவிடுவார்கள். பாவம் தமிழ் மக்கள்.

“இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் முழுமையாக, இந்தியா அன்று அளித்த வாக்குதிகளை அர்த்தமுள்ளவைகளாக ஆக்கும் வகையில், நிறைவேற்றுவதை இந்திய அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும். அது இந்தியாவின் வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் ஆகும்” என்று கூறுவதற்கும் இந்தியாவை நோக்கி கேட்பதற்கும், இந்தியா இலங்கை அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்தபோது, அதுபற்றி எவ்வளவுதான் சந்தேகமும் விமர்சனங்களும் இருந்தபோதிலும், அதனைஏற்று, இந்தியாவின் நட்புதேவை – இந்தியாவின் உதவிதேவை – இந்தியாவின் உறவுதேவை என்ற ுதாங்கள் எதிர் நோக்கிய இழிவுபடுத்தல்களை, அவமானங்களை, ஆபத்துக்களை, இழப்புகளை, துரோகிப் பட்டங்களைபொருட்படுத்தாது, செயற்பட்டவர்களுக்கே உரிமையுண்டு. இந்தபோலித் தேசியங்களுக்கு எங்கே இருந்து அந்த உரிமைவருகின்றது.

ஓ! தோட்டக்காட்டான் – வடக்கத்தையான் மேட்டுக்குடி யாழ்ப்பாணத்தானின் வீட்டுவேலைக்காரன் என்ற எண்ணத்தில் இருந்துதான் அதுவருகிறதோ! தங்களது வீட்டுவேலைகளை தங்களுக்கு ஏற்றபடி தாங்கள் சொல்லுகிறநேரத்தில் இந்தியா செய்யவேண்டும் என்றநினைப்பில் இப்போதும் மிதக்கிறார்கள் போலிருக்கின்றது!

ஈழநாடு பத்திரிகைக்காக வரதராஜ பெருமாளால் எழுதப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com