Sunday, January 5, 2020

வெட்டுப்புள்ளி வீதம் உயர்த்தப்படல். வை எல் எஸ் ஹமீட்

மாவட்ட வெட்டுப்புள்ளி வீதம் 5 இலிருந்து 12.5 ஆக உயர்த்துவதற்கு விஜேதாச ராஜபக்ச பிரேரணை கொண்டுவந்துள்ளார். 5 ஆசனங்களைப்பெற்று 100 ஆசனங்கள் பெறுகின்ற கட்சியை ஆட்டிப்படைத்து அதிக அமைச்சுக்களைப் பெறுவது நிறுத்தப்பட வேண்டும். ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக சிறுபான்மைகள் இருப்பதைத் தடுக்கவேண்டும்; என்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் (03/01/2020) தேர்தல் முறைமை கட்டாயம் மாற்றியமைக்கப்படவேண்டும்; எனத் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலிலும் 70% இருக்கின்ற பெரும்பான்மையினர் சிறுபான்மையின் தயவின்றி தாமே ஜனாதிபதியைத் தெரிவுசெய்யவேண்டும்; என்ற அவர்களின் இலக்கு 2015இல் தோல்வியுற்றபோதும் இத்தேர்தலில் ஓரளவு வெற்றிபெற்றுவிட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் இதே இலக்கை அடைவதற்கான திட்டமாகவே இம்முயற்சி அமைகின்றது.

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களாக வருவது இயல்பானதே! ஜனநாயகத் தத்துவம் அதுவாக இல்லாதபோதிலும்கூட. ஆனால் அந்த ஆட்சியாளரைத் தீர்மானிப்பதில்கூட சிறுபான்மைக்கு பங்கு தரமாட்டோம்; என்பதுதான் இந்த வெட்டுப்புள்ளி உயர்த்தல் திட்டத்தின் பின்னணியாகும்.

சிறுபான்மை கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு


இந்நாட்டில் இதுவரை இரு பிரதான தேசியக்கட்சிகள் இருந்து வந்திருக்கின்றன. தற்போது அது மூன்றாகியபோதிலும் இன்னும் யதார்த்தத்தில் இரண்டுதான். இந்த இரண்டையும் பெருவாரியாக பெரும்பான்மை மக்களே தெரிவுசெய்கிறார்கள். ஆனாலும் விகிதாசாரத் தேர்தல்முறையின்கீழ் அதிகமான சந்தர்ப்பங்களில் அவற்றிற்கு அறுதிப்பெரும்பான்மைக்கு சற்று குறைவு ஏற்படுகின்றது. அந்தக்குறையை நிரப்புகின்ற பணியைத்தான் சிறுபான்மைக் கட்சிகள் செய்கின்றன.

இக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விடயம் சிறுபான்மைக் கட்சிகள் சுயமாக ஆட்சியைத் தீர்மானிப்பதில்லை; என்பதாகும். உதாரணமாக, சிறுபான்மைக்கட்சிகள் விரும்பினால் ஜே வி பி யை ஆட்சிக்கு கொண்டுவரமுடியுமா? அவ்வாறு முடியுமென்றால் பெரும்பான்மை சமூகம் நிராகரித்த ஒரு கட்சியை சிறுபான்மைக் கட்சிகள் ஆட்சிக்கு கொண்டுவருகிறார்கள்; அதனை ஏற்றுக்கொள்ள முடியாது; எனக்கூறலாம்.

மாறாக பெரும்பான்மை சமூகம் அண்ணளவாக சமமான முறையில் இருபிரதான கட்சிகளுக்கும் வாக்களிக்கின்றபோது அவற்றில் ஒன்றிற்குத்தான் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கி ஆட்சிபீடமேற்றுகிறார்கள். உதாரணமாக, ஒரு கட்சி 105 ஆசனங்களையும் இன்னுமொரு கட்சி 95 ஆசனங்களையும் பெறும்போது அவற்றில் ஒன்றிற்குத்தான் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன.

இவை இரண்டும் பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சிகள் இல்லையா? பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப்பெற்ற ஒரு கட்சிக்கு சிறுபான்மைக்கட்சிகளும் ஆதரவு வழங்குவதன்மூலம் அவ்வாட்சியில் அவர்கள் பங்காளர்களாகக்கூடாதா?

இந்த உரிமைகூட சிறுபான்மைகளுக்கு இல்லையென்றால் , அரசு என்பது “மக்களுக்காக மக்களால் தெரிவுசெய்யப்படும் மக்களாட்சி” என்பதற்குப் பதிலாக “ பெரும்பான்மை சமூகத்திற்காக, பெரும்பான்மை சமூகத்தால் தெரிவுசெய்யப்படும் பெரும்பான்மை சமூகத்தின் ஆட்சி” என்றா வரைவிலக்கணப்படுத்துவது?

ஒரு நாட்டின் அரசைத் தீர்மானிப்பது; என்பதே “இறைமை” என்ற தத்துவத்தில் இருந்துதான் பிறக்கிறது. இல்லையெனில் பலம் கூடிய நாடு பலம் குறைந்த நாட்டை வரித்துக்கொள்வதில் தடையேது? ஐ நா சபையே இறைமைத் தத்துவத்தின் அடிப்படையில்தானே கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. அதற்குமுன் பலம் பொருந்திய நாடுகள் பலம்குன்றிய நாடுகளை கையகப்படுத்தவில்லையா?

அந்த இறைமை மக்களுடையது; என்பது சரியா? அல்லது பெரும்பான்மை சமூகத்தினதுடையது; என்பது சரியா?

மக்களுடையது; எனில் அங்கு சிறுபான்மையும்தானே இருக்கிறார்கள். அந்த இறைமையுடைய சிறுபான்மைக்கு அரசை தீர்மானிப்பதில் பங்கு இருக்கக்கூடாதா? விஜேதாச ராஜபக்ச போன்ற படித்தவர்களும் ஏன் இவ்வாறு பிழையாக சிந்திக்கின்றார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம் ஒரு கட்சி 105 உம் இன்னுமொரு கட்டி 95ம் பெறும்போது சிறுபான்மைக்கட்சிகள் ஒருபோதும் 95 ஆசனங்களைப் பெற்ற கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரவில்லை. மாறாக 105 பெற்ற கட்சியையே வரலாற்றில் எப்போதும் ஆட்சிக்கு கொண்டிவந்திருக்கின்றார்கள்.

விகிதாசாரப் பொதுத்தேர்தல் முதலாவது நடைபெற்றது 1989 இல்.

1989- UNP தனிப்பெரும்பான்மை, தனியாட்சி
1994- அதிகூடிய ஆனால் 113 இற்கு குறைந்த ஆசனம்பெற்ற PA ஆட்சி
2000- மீண்டும் அதிகூடிய ஆனால் 113 இற்கு குறைவான ஆசனம்பெற்ற PA ஆட்சி
2001- அதிகூடிய ஆனால் 113 இலும் குறைவான ஆசனம்பெற்ற UNP ஆட்சி
2004- அதிகூடிய ஆனால் 113 இலும் குறைந்த UPFA ஆட்சி
2010 UPFA, தனிப்பெரும்பான்மை, தனியாட்சி
2015- அதிகூடிய ஆனால் 113 குறைந்த UNP ஆட்சி

இங்கு தெளிவாவது, பெரும்பான்மை சமூகம் முதலாவதாக தெரிவுசெய்த தேசியக்கட்சிதான் எப்போதும் ஆட்சியமைத்திருக்கிறது. சிறுபான்மைக் கட்சிகள் ஒருபோதும் ஆட்சியைத் தெரிவுசெய்யவில்லை. மாறாக, அவ்வாறு பெரும்பான்மை சமூகம் முதலாவதாக தெரிவுசெய்த கட்சிக்கு ஏற்பட்ட ஆசனக்குறைவை நிவர்த்திசெய்யவே சிறுபான்மைக் கட்சிகள் உதவிசெய்திருக்கின்றன. இது குற்றமா?

பேரம் பேசுதல்

அவ்வாறு சிறுபான்மைக்கட்சிகள் செய்கின்ற உதவிக்கு பகரமாக தான் சார்ந்த சமூகத்தின் சில நியாயமான குறைபாடுகளை முன்வைத்து தீர்வினை வேண்டுவது குற்றமா? துரதிஷ்டவசமாக மறைந்த தலைவருக்குப்பின் முஸ்லிம்கட்சிகள் சமூகத்திற்காக பேரம்பேசவுமில்லை, அவ்வாறு பேசி எதையும் சாதிக்கவுமில்லை. ஆயினும் அவ்வாறு பேரம்பேசுவது தவறா?

தேசியக்கட்சிகள் சிறுபான்மைகளை நியாயமாக நடாத்தியிருந்தால், அவர்களது பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கியிருந்தால் ஏன் பேரம்பேச வேண்டும்?

முஸ்லிம்களுக்காக அரசியல்வானில் ஓர் முஸ்லிம்கட்சி கால்பதிப்பதற்கு பல ஆண்டுகளுக்குமுன், தமது சமூகத்தில் சகலருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு முன் அமரர் தொண்டமான் கட்சி தொடங்கியிருந்தாரே! ஏன்? அவரது சமூகம் நியாமாக நடாத்தப்பட்டிருந்தால் தொடங்கியிருப்பாரா?

வடகிழக்கு பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுடன் பேசியபோது முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டார்களா? ஏன் உள்வாங்கப்படவில்லை? வட்டமேசை மாநாட்டில் முஸ்லிம்கள் ஒரு தனிக்கட்சி இல்லை என்பதால் அவர்களுக்கு இடம் மறுக்கப்படவில்லையா?

இந்நாட்டில் சமூக விகிதாசாரத்திற்கேற்ப அரச உத்தியோகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றனவா? மறைந்த தலைவரின் முயற்சியால் சந்திரிக்காவின் ஆட்சியில் இன விகிதாசாரத்திற்கேற்ப தொழில் வழங்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவரின் மறைவிற்குப்பின் அத்தீர்மானம் காற்றில் பறக்கவிடப்படவில்லையா? ஏன்?

இவை தொடர்பாக பேரம்பேசுவது தவறா? ஒரு சமூகம் தனது குறைகளை அரசிடம்பேசி நிவர்த்தி செய்யமுற்படுவது தவறா? அதற்காக அவர்களுக்கு கட்சிகள் இருக்கக்கூடாதா? கட்சிகள் இருக்கும்போதே இத்தனை குறைபாடுகள்; என்றால் கட்சிகள் இல்லாதபோது ஆட்சியாளர்களே சிறுபான்மைகளின் குறைபாடுகளை சுயமாக தீர்த்துவைப்பார்களா?

சிறுபான்மை கட்சிகள் குறைவான ஆசனங்களை வைத்துக்கொண்டு கூடுதலான அமைச்சுக்களைப் பெறுவது நிறுத்தப்படவேண்டும்; என்கின்றார் விஜேதாச ராஜபக்ச. இதன்மூலம் முஸ்லிம்கட்சிகள் சமூகத்திற்காக எந்தப்பேரம்பேசலையும் செய்யவில்லை; அரசும் அமைச்சுப் பதவிகளைத்தவிர முஸ்லிம்களுக்கு வேறு எதையும் செய்யவில்லை; என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார்.

மாறாக சமூகத்திற்காக பேரம்பேசி எதையாவது அவர்கள் சாதித்திருந்தால் அமைச்சுப் பதவிகளையே பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவற்றை பொறுத்திருப்பார்களா? அவ்வாறாயின் சிறுபான்மை சமூகங்களது எதிர்கால நிலையென்ன?

இந்நாட்டில் சகல சமூகங்களும் நியாயமாக நடாத்தப்படவேண்டும்; அவர்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டும்; என நினைக்கின்ற எவரும் அவர்களது கட்சிகளை இன்னும் எவ்வாறு பலப்படுத்த உதவமுடியும்? அதன்மூலம் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்? அவர்களின் குறைபாடுகளைப்பற்றி பேசித் தீர்வு வழங்கப்படுகின்றபோது சகல சமூகங்களும் இந்நாட்டில் சந்தோசமாக வாழும் நிலை உருவாகும்.

அவ்வாறான சூழ்நிலையில் யாரும் பிழையான வழியில் போகமாட்டார்கள். நாடு ஸ்த்திரமாக இருக்கும்; என்றுதான் சிந்திப்பார்கள். மாறாக, அவர்களது பிரதிநிதித்துவங்களை இல்லமலாக்கி அவர்களின் குரல்களை நசுக்க முனையமாட்டார்கள்.

வட கிழக்கிற்கு வெளியே சிறுபான்மைக் கட்சிகள்
தேசியக்கட்சிகளிலேயே போட்டியிடுவதால்
வெட்டுப்புள்ளி உயர்த்தல் பாதிப்பதில்லை; என்பது
சரியா?

விகிதாசாரத் தேர்தல்முறையின்கீழ் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசியக்கட்சிகள் அறுதிப்பெரும்பான்மை பெறத்தவறுவதேன்?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com