Wednesday, August 28, 2019

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆப்பு வைக்க தயாராகும் மைதிரி பிணைமுறி விசாரணை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

ஜக்கிய தேசிய கட்சியை இலக்கு வைத்து பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, இவ்விசாரணைகள் தாமதமடைதல் நீதி நிலைநாட்டப்படுவதற்கு தடையாகும் எனக் குறிப்பிட்டார். பிணைமுறி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பிலான நான்கு இடைக்கால அறிக்கைகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஏனைய அறிக்கைகளையும் முன்வைக்க முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது. பணச்சலவை தொடர்பான 05 வருட ஆவணங்களை வங்கிகளிடம் கோரியுள்ளபோதிலும் அவ்வறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறாமையினால் விசாரணைகளை முன்னெடுப்பதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை சட்டக்கோவையின் கீழ் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ்விடயம் தொடர்பான சாட்சியங்கள் சத்தியப் பிரகடனங்களினூடாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் முன்வைக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டது.

விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக தமது தரப்பில் வழங்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளும் பெற்றுத்தரப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பதில் கடமை பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com