Wednesday, February 6, 2019

சப்ராவின் சரவணபவானின் மகளுக்கு எதற்காக அமெரிக்க தூதரகத்தில் தொழில்? பாராளுமன்றில் டக்ளஸ் கேள்வி

இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஊழல் மோசடிகள் தொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றுக்கு கொண்டுவந்திருந்தது. இந்த பிரேணை தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த ஈபிடிபி யின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அரசியல் பலம் அல்லது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி உற்றார் உறவினர்களுக்கு தகுதி அடிப்படையிலான முறைமை பின்பற்றப்படாது அரச தொழில்வாய்ப்புக்களை பெறுவதும் ஓர் ஊழல் செயற்பாடாகும்.

அந்த வகையில் உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தில் தொழில் செய்துவருவதாக பேசப்படுகின்றது. அத்தொழிலை புரிவதற்கு இலங்கையில் வேறொருவரும் இல்லையா? அத்தொழிலுக்காக விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பதாரர்களில் முதன்மை நிலையில் நின்றா உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் அவ் வேலையை பெற்றார்? உங்கள் பிள்ளைகளுக்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் வேலை எடுப்பதற்காகவா உங்களை பிரதிநிதிகளாக மக்கள் அனுப்பினார்கள்? இது ஊழல் செயற்பாடு என்று உங்களுக்கு புரியவில்லையா? என கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஊழல்கள் மோசடிகள் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

ஆனால் இது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா என நான் வினவ விரும்புகின்றேன்.

இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி மோசடி ரூபா 11 ஆயிரம் மில்லியன் அதாவது 1,100 கோடிக்கும் மேற்பட்ட மோசடி தொடர்பாக எதிர்க் கட்சி தலைவராக இருந்துகொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனியாக இருந்துவிட்டு இன்று ஊழல் மோசடி தொடர்பாக ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவருவது கேலிக்கூத்தாக உள்ளது.

அதுமட்டுமல்ல அது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் விவாதத்றிற்கு வரும் போது தமிழ் மொழியாக்கம் தரப்படவில்லை என்ற விடயத்தை முன்னிறுத்தி அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூட விடாது மூடிமறைத்த பெருமை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் கௌரவ சுமந்திரனையே சாரும்.

அதுமட்டுமல்ல மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக பிரதமர் ஒரு விசாரணைக் குழு அமைத்து அங்கு மோசடி நடைபெறவில்லை என்று விடயங்களை மூடி மறைத்து அறிக்கை வந்தபோது கூட தட்டிக் கேட்காமல் மௌனியாகவே செயற்பட்டீர்கள்.

யாரைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு செயற்பட்டீர்கள்? ஜனநாயகத்தை காப்பாற்றுவதாக மார்தட்டிக் கொள்ளும் உங்களுக்கு பிணைமுறி மோசடி ஒரு ஜனநாயக விரோத செயல் என்று புரியவில்லையா?

அதுமட்டுமல்ல தங்களின் அதிகாரத்தின் கீழ் கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்ட வடக்கு மாகாணசபையின் ஊழல்கள் மோசடிகள் நிரூபிக்கப்பட்டும் மோசடிக்காரர்களான உங்கள் மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிராக ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

முதலமைச்சரினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவே எத்தனையோ மோசடிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்குமாறு பரிந்துரைகள் செய்திருந்தும் அந்த அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளுக்கு எதிராக உங்களது முதலமைச்சரினால் சட்ட நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்பட்டனவா? அங்கும் ஊழலுக்கு விலைபோனவர்களாகவே உங்கள் கட்சி செயற்பட்டிருக்கின்றது.


அண்மையில் பளைப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தபோது பொலிஸ் மேலதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு அவரை விடுவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினரின் கார் சாரதியின் சகோதரர்.

அவர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடன் பிடிபட்ட ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளும் இத்தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் நிரபராதிகளாயின் நீதிமன்றத்தினூடாக அவர்களை விடுவித்திருக்க வேண்டும். இதுவும் ஓர் ஊழல் செயற்பாடு இல்லையா?

இன்று நாட்டையே, குறிப்பாக வடக்கு மாகாணத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை உங்கள் தலையீட்டினால் விடுவித்துவிட்டு இங்கு ஊழலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவதற்கு உங்களுக்கு அருகதை உண்டா என்று சிந்தித்து பாருங்கள்?

'தனக்கொரு நியாயம் பிறருக்கொரு நியாயம்' என்பதுபோல் இலங்கை தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் ஊழலுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு, பாரிய ஊழல்களைக் கூட எதிர்க் கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு பகிரங்கப்படுத்தும் துணிச்சலற்றவர்களாக இருந்துவிட்டு தற்போது இவ் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவருவது எந்த உள் நோக்கத்திற்காக என்று அறிய விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com