Wednesday, February 6, 2019

அடித்தார் மங்கள அந்தர் பல்டி! பிஎஸ்எம் சார்ள்ஸ் இரும்பு பெண்மணியென புகழாரம்.

சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட திருமதி பிஎஸ்எம் சார்ள்ஸ் அவர்களை அப்பதவியிலிருந்து தூக்கி ஓய்வு பெற்ற கடற்படை றியர் அட்மிரல் ஒருவரை பணியில் அமர்த்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றிருந்தார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.

திருமதி சார்ள்ஸ் அவர்கள் அப்பதியிலிருந்து தூக்கப்பட்டமைக்கான காரணம் அவர் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெறும் பகல்கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டமையாகும். இந்நிலையில் குறித்த இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் இறங்கியதுடன் நாட்டிற்கு பில்லியன் கணக்கில் சேதமும் ஏற்பட்டது.

நிலைமையை சமாளிக்க முடியாத மங்கள சமரவீர தற்போது தனது அமைச்சரவை அங்கீகாரப் பத்திரத்தை மீளப்பெற்றுக்கொண்டு மீண்டும் அவரை பணியை தொடர அனுமதித்துள்ளதுடன் இரும்பு பெண்மணி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், சுங்க திணைக்களத்தில் இடம்பெறும் மோசடிகளுக்கு தடுப்பதற்கு பலமான ஒருவரை நியமிப்பது பொருத்தம் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை நியமித்துவிட்டு, சுங்க திணைக்களத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு திருமதி சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் பலமிக்க விசாரணைக் குழு ஒன்றை நிறுவ திட்டமிட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமதி சார்ள்ஸ் அவர்கள் மிகத் திறமையானதோர் அதிகாரி என்பதை தான் சுனாமி அனர்தம் ஏற்பட்டிருந்தபோது அறிந்து கொண்டதாகவும் , பிரபாகரனுக்குக்கூட அடிபணியாது தனது கடமைகளை மேற்கொண்டதோர் அதிகாரி என்றும் கூறிப்பிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திருமதி சார்ள்ஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மோசடி தொடர்பான விசாரணைகளை 2 மாத காலத்தினுள் நிறைவு செய்து தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அதற்கான கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இன்று மீண்டும் கடமையேற்ற அவர் நாட்டிற்கும் அதன் பொருளாதரத்திற்கும் வலுச்சேர்கும் வகையில் கடினமாக உழைப்பேன் என்றும் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com