Sunday, January 13, 2019

கல்முனையில் Smart City - பாரிய வேலைத்திட்டம் மிக விரைவில்

கல்முனை மாநகர பிரதேசத்தை ஸ்மார்ட் சிட்டியாக (Smart City) அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் இவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் நடைபெற்றது. இதில், இரண்டாம் நிலை நகரங்களை அபிவிருத்தி செய்யும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டில் கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற கல்முனை மாநகர பிரதேசத்தில் 16 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தில் 5 தளங்களைக் கொண்ட கல்முனை மாநகர சபைக் கட்டடம், கல்முனை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய சொப்பிங் கொம்லக்ஸ் உள்ளிட்ட புதிய பஸ்தரிப்பு நிலையம், சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் பல தேவைகளை பூர்த்தி செய்யும் பல்தேவைக்கூடம் போன்றன அமைக்கப்படவுள்ளன.

மேலும், கல்முனை நகர மண்டபத்தை மீள் நிர்மாணம் செய்தல், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பகுதியளவான காணியில் பல்தேவைக் கட்டம், கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் பழவகை மற்றும் மரக்கறி விற்பனைத் தொகுதி, சேனைக் குடியிருப்பில் கலாசார மண்டபம், நற்பிட்டிமுனையில் கடைத்தொகுதி, நற்பிட்டிமுனை மயானத்தின் சுற்றுமதில் அமைத்து அழகுபடுத்தும் வேலைத்திட்டம், பாண்டிருப்பு விளையாட்டு மைதான அபிவிருத்தி, மருதமுனை மக்கள் மண்டப அமைவிடத்தில் கடைத்தொகுதியுடன் கூடிய கேட்போர்கூடம், பாண்டிருப்பில் சனசமூக நிலையம், பெரியநீலவணையில் கலாசார மண்டபம், பாண்டிருப்பு மயான சுற்றுமதில் மற்றும் இறுதிக் கிரியை மேற்கொள்வதற்கான மண்டபம், பெரியநீலாவணையில் பூங்கா, கல்முனை குறுந்தையடி மைதான அபிவிருத்தி மற்றும் வீட்டுத்திட்ட வளாகத்திலுள்ள பல்தேவைக்கட்டடத்தை புனரமைத்தல், கல்முனை வாடி வீட்டு பிரசேத்தில் கடற்கரை பூங்கா அமைத்தல் போன்ற விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக குறித்த பிரதேசங்களுக்கு இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான குறித்த குழுவினர் கள விஜயம் மேற்கொண்டனர். இந்த வேலைத்திட்டத்தின் மூலம், கல்முனை மாநகரம் 30 வருடங்கள் முன்னோக்கிய அபிவிருத்தியினை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கல்முனை மாநகர பிரதேசத்தில் பௌதீக அபிவிருத்தியுடன் கூடிய தொழில்நுட்ப விருத்தியும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com