Monday, January 28, 2019

அன்று ஒன்றை கூறிய தொண்டமான், இன்று ஒன்றை கூறி விட்டார்- மீண்டும் கானல்நீராகிய பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

ஆரம்பத்தில் தமக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத் தருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், தற்போது தமது வாக்குறுதியை மீறி விட்டதாக பெருந்தோட்ட மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த தினத்தில், பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா அடிப்படை வேதனைத்தை பெற்றுத்தர முடியாவிட்டால் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக தெரிவித்த தொண்டமான், அதன் பின்னர் அமைச்சு பதவியை பொறுப்பேற்றார்.

பின்னர் ஆட்சி அதிகாரம் மாறியதை அடுத்து மீண்டும் மக்களுக்கு 1000 ரூபாய் வேதனத்தை பெற்றுத் தருவதாக தெரிவித்த தொண்டமான், அதற்காக பொது மக்களை பல போராட்டங்களில் ஈடுபடுத்தினார். எனினும் அன்று ஒன்றைக் கூறிய, ஆறுமுகன் தொண்டமான், இன்று ஒன்றை கூறி வருவதாக பெருந்தோட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன்  பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம், இன்று கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, மக்கள் பல்வேறு கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என் பெருந்தோட்ட மக்கள், தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் வடிவேல் சுரேஷ்  உள்ளிட்டவர்கள் கைச்சாத்திட்டனர்.

அலரி மாளிகையில் வைத்து இந்த ஒப்பந்தம் தொழில் அமைச்சரின் முன்னிலையில்,  இன்று கைச்சாத்திடப்பட்டது. இதன் பின்னர் அந்த ஆவணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

அவர் அதனை தொழில் அமைச்சரிடம் கையளித்தார்.

எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான கூட்டுக் குழு இந்த முறை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் புதிய சரத்துக்கள் சிலவற்றை உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்து, ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளதாக அந்தக்குழுவின் தலைவர் இராமநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்யில் இன்று கைச்சாத்திட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட மலையக மக்கள், இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டன் - பொகவந்தலாவ, நோர்வூட், சாமிமலை, மற்றும் மஸ்கெலிய பகுதிகளில் 90 சதவீதமான மக்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலவாக்கலை, லிந்துலை, மன்றாசி மற்றும் டயகம பகுதிகளின் சில தோட்ட மக்கள் பணிக்கு சென்றிருந்த போதிலும் அநேகமான மக்கள் பணிக்கு செல்லவில்லை.

ஹப்புத்தளை பகுதியிலும் மக்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் பதுளையின் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com