Thursday, January 24, 2019

அன்ரன் பாலசிங்கம்! அறியாத வரலாறு. பகுதி (02) (By நட்சத்திரன் செவ்விந்தியன்)

பாலசிங்கம் பற்றி மிகத்தவறான மதிப்பீடுகள் பத்திரிகையாளர்களிடமுண்டு. அவர் அசலான சுயாதீனமான இடதுசாரி புத்திஜீவி. ஆனால் தார்மீகமில்லாத மோசமான மனிதர். தன்னை வஞ்சித்த சமூகத்தில் காழ்ப்புகொண்ட பெரும் Ego கொண்ட மனிதன் அதே சமூகத்தில் தன்னை அறத்தை அடகுவைத்து நிலைநிறுத்துவதே அவரை இயக்கிய தத்துவம்.

கரவெட்டியில் அவரை வஞ்சித்த வறுமையையும் பிரதேச ஜாதீய பாரபட்சத்தையும் வென்று 70 களின் ஆரம்பத்தில் லண்டன் சீமையில் பல்கலைக்கழக மாணவனாக கரையேறிய பாலசிங்கம் லண்டனில் மறுபடியும் ஒரு பரம வைரியை காண்கிறார். அவர் வேறுயாருமல்ல. யாழ் வெள்ளாளரும், என்ஜினியரும், கட்டுப்பெட்டி மார்க்சியருமான EROS ரட்ணசபாபதி.

ரட்னா தன் லண்டன் பலஸ்தீன PLO தொடர்புகளால் ஈழப்புலிபோராளிகளையும் தன் EROS போராளிகளையும் லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்புகிறார். ரட்ணா மார்க்சியத்தை வெறும் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக மட்டுமே அறிந்தவர். பாலசிங்கமோ மார்க்சியத்தை தத்துவ வரலாற்றுப்பின்னணியில் மேலும் மேவி அறிந்தவர்.

ரட்னாவுக்கு தன் மேதமையை புரியவைக்கும் அவா பாலாவுக்கு வருவது இயல்புதானே. தானும் ஏதாவது செய்யவேண்டும். இதன் விளைவுதான் 1979ல் பாலாவின் இந்தியபயணம். தன் பூர்வாங்க புலனாய்வுகளின் விளைவாக பிரபாகரன் என்ற புலிகளின் தலைவரையே நேரே அணுகி அவரை protege/சீடன் ஆக்கலாம் என்ற திட்டத்தோடு புதிய ஆஸ்திரேலிய காதல் மனைவியோடு சென்னை வருகிறார்.

இந்த தருணத்தில் பாலா சிறிது பொறுமை காத்திருந்தால் அவசரப்படாமல் தன் கலாநிதிப்பட்ட ஆய்வை செய்துமுடித்து ஒரு தத்துவப்பேராசிரியராக வந்திருந்தால் வரலாற்றில் பாலாவுக்கு நல்ல இடம் வசமாகியிருக்கும். பிரபாகரனதும் புலிகளதும் Hegemony கூட வரலாற்றில் இல்லாமலிருந்திருக்கும். இக்காலத்தில் கொடிகட்டிப்பறந்த சித்தாந்த கைலாசபதியைவிட அசலான புத்திஜீவி கோட்டைவிட்ட துரதிஸ்ட தருணமிது. ஆனால் விதி? பாலா ஏற்கெனவே புகைக்கும் மதுவுக்கும் அடிமை. இடையில் ஜேம்ஸ் பாண்டின் "blonde" காதலிகள் மாதிரியான ஒரு ஓஸ்றேலிய நாட்டுப்புறக்காதலியான அடேல் ஊர்வசி மேனகா ரம்பை போல அவர் தவத்தை கலைக்க வந்திருப்பதையும் பாலா அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

பிரபாகரனை பாலா சந்தித்த முதல் 1979 பயணத்தில் புலிகளிலிருந்து உமாமகேஸ்வரன் அணி பிரிந்து PLOTE உருவாகியிருக்கவில்லை. ஆனால் பாலாவுக்கு உமாவை பிடிக்கவில்லை. ரட்ணாவைப்போல உமா ஒரு மேட்டுக்குடி வெள்ளாளன். ஆங்கிலம் அறிந்த உமா பிரபாகரனைவிட 10 வயது அதிகமான Surveyor. விவாதித்து கேள்வியெழுப்பும் உமா பாலாவின் Protege ஆக வாய்ப்பில்லை. தலமைப்போட்டியில் உமாமீது ஊர்மிளாவின் காதல் தொடர்பு பாவிக்கப்படுகிறபோது பாலா பிரபாகரன் சார்பு எடுப்பதன் காரணம் இதுதான்.

1979 ல் பிரபாகரனை முதலில் பாலா சந்திக்கிறபோது பிரபாகரனுக்கு இருந்த ஒரே மெடல் அவர் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்றது என்பதுதான். இது வலதுசாரி அமிர்தலிங்கம் ஏவி நடந்து கொண்டாடிய விருது. துரையப்பா மேட்டுக்குடி அங்கிலிக்கன்/மெதடிஸ்து வெள்ளாளன் என்றாலும் அவர் ஒடுக்கப்பட்ட தலித் யாழ்நகர மாந்தரின் விருப்பு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி என்பதை நன்கு அறிந்தவர்தான் பாலா.

வரலாற்றில் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையிலான ஒத்த உறவை தேடி ஆராய்ந்தபோது கிடைத்தது ஸ்ராலினுக்கும் போல்செவிக்குகளின் இரண்டாவது உளவுத்தலைவன் Vyacheslav Menzhinsky(படம் 2) க்குமிடையிலான உறவுதான்.

ஸ்ராலின் மண்டையில் போடாத ஒரேயொரு உளவுப்படைத்தலைவனும் மென்சின்ஸிகிதான். பாலாவும் மென்சின்ஸிடகியைப்போல இயற்கை மரணமடைந்தவர். மென்ஸின்ஸிகியின் வரலாற்றைப்படித்தால் இவருக்கும் பாலாவுக்குமான பல ஒற்றுமைகள் புலப்படும். மனிதரைப்பற்றியும் தகவல்களைப்பற்றியும் மிகக் கறாரான மதிப்பீடுகளை செய்யக்கூடியவராக இருந்தமைதான் மென்சின்ஸ்கியின் மிகப்பெரிய பலம். இதுதான் பாலாவின் பலமும்.

பாலசிங்கம் ஏறத்தாழ தன்னை ஒரு Tallyrand ஆகவும் பிரபாகரனை நெப்பொலியன் ஆகவும் உருவகித்து காய் நகர்த்தினார். இது அடிப்படையில் தப்பாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருந்தன. தப்பு எங்கு இருநததென்றால் வரலாற்றில் முறையாக இராணுவனாகப் படித்து வந்த புத்திஜீவித்தன்மைகள் கொண்ட நெப்போலியனையே Tallyrand சுத்தினார். ஈழச்சூழலில் படிக்காத பிரபாகரன் பிச்சைக்காரன் பாலாவை சுத்தினார். பிரபா பாலா முதல் சந்திப்பு நடக்க லண்டன் பாலா தம்பதியர் சென்னை வரும்போது சென்னையில் நல்ல ஓட்டலில் தங்க தாம் வசதியற்றிருந்ததை அடேல் அம்மையார் தன் விடுதலை வேட்கை புத்தகத்தில் பதிந்துள்ளார். பிரபாகரனை மாற்றுவதற்குபதிலாக பிரபாகரன்தான் பாலாவை உருமாற்றினார். பிழைப்புக்காக ஒரு இடதுசாரி தத்துவ அறிஞர் வலதுசாரி பாசிஸ்ட் பிரபாகரனின் Theoretician ஆகவும் பேச்சாளராகவும் மாறினார். உண்மையில் பாலா புலிகளின் அறம்மிகு ஆலோசகர் என்பதைவிட ஒரு உளவுப்படைத்தலைவர் போலவே இருந்தார். கூட்டமைப்பை புலிகளின் ஊதுகுழலாக மாற்றிய திட்டத்தை வகுத்து அதனை உளவுப்படைத்தலைவர் பொட்டனிடம் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை கொடுத்தது பாலாதான்..

Tamil Tigress: The fake memoirs எனும் முகப் புத்தகத்திலிருந்து

அன்ரன் பாலசிங்கம்! அறியாத வரலாறு. பகுதி 01 ஐ வாசிக்க0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com