ஜனநாயக ரீதியில் போராடுபவர்களுக்கு, இம்சை ரீதியாகவே பதில் வழங்கப்படுகிறது - ஞா.ஸ்ரீநேசன்.
இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களுக்கு வழங்கப்பட்ட பதில், இம்சை ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினை தொடர்பாக, நாடாளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை இன்றைய தினம் கொண்டு வந்தது. இந்த பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் இதனை கூறினார்.
இதன்போது மலையக மக்களின் உரிமைகளையும் மறுத்து மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதிகார வர்க்கம் தமது பாதுகாப்பிற்காக இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என பேசிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றது. ஆனால் மலையக மக்கள் இன்னும் அந்நியர்கள் காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகளில் வாழ்கின்றனர் என சிறிநேசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்காக உழைக்கும் மக்களின் உரிமையை உதாசீனப்படுத்துவதை எந்த ரீதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென சிறிநேசன் கூறினார்.
கம்பனிகள் மிகையான லாபத்தை உழைப்பதற்காக, உழைப்பின் பெரும் பகுதியை சுரண்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த அவர், அந்த மக்களின் சம்பளத்தை அதிகாரிப்பதற்கு காலத்தை இழுத்தடிப்பது, அநியாயமான செயல் எனவும் தெரிவித்தார்.
இந்த நாட்டில் சட்டம், நீதி என சகல விடயங்களும் சகல மக்களுக்கும் பொதுவானது என்றால், மலையக மக்கள் கோரும் நியாயமான சம்பளத்தை உடன் அதிகரிக்க வேண்டுமென சிறிநேசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
0 comments :
Post a Comment