Sunday, December 30, 2018

சுமந்திரனும் - ஹக்கீமும் நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் செயற்படுகின்றனர். சாடுகின்றார் ரம்புக்கல

நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் செயல்பட்டு வருவதாக, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையை பிளவுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவர்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் தற்போது நாட்டு மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். இவர்களது அமைச்சரவை தனிப்பட்ட தேவைக்காக அமைக்கப்பட்டது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நாட்டின் அரசியல் குழப்பத்தின் போது, உயர்நீதிமன்றம் அரசியலமைப்புக்கு அமைய தீர்ப்பை அறிவித்திருந்தாலும், நாடாளுமன்றில் இன்று வரை பிரச்சினை நிலவி வருகிறது என்று, அவர் கூறினார்.

இந்த அரசாங்கம் அரச சொத்துக்களை சர்வதேசத்துக்கு விற்றுக்கொண்டிருப்பதோடு, இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அத்தோடு, சுமந்திரன்,ஹக்கீம் முதலான அரசியல் தலைவர்கள், சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவர தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினாலும், அரசமைப்பில் அவ்வாறு இடம்பெறப்போவதில்லை என்பதுவே, மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு தமிழ்- சிங்கள- முஸ்லிம்களை பிரச்சினைக்குள்ளாக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

இந்த செயல்பாடுகளுக்கு சுமந்திரன் மற்றும் ஹக்கீம் ஆகியோர் பாரியளவில் துணை புரிவதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com