Friday, December 21, 2018

மலையக இளைஞர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முழுமையான ஆதரவு

மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000/= ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மலையக இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் இளைஞர்களுக்கு மன தைரியத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும, சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சங்க பிரதிநிதிகள் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அங்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள். 200 வருட வரலாற்றைக் கொண்ட மலையக மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்றார்கள். ஆனால் இந்நாட்டை 70 வருடங்களாக ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் மற்றும் மலையக அரசியல் கட்சிகள் இம்மக்களின் வாக்கை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். அத்துடன் அம்மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1000 ரூபா கோரிக்கையானது நியாயமான கோரிக்கை ஆகும். காலம் காலமாக அரசியல் கட்சிகள் முதலில் போராட்டங்களை ஆரம்பித்து பின்பு முதலாளி வர்க்கத்துடன் கைகோர்த்து தொழிலாளர்கள் காட்டி கொடுக்கப்படுவது வழமையாக காணப்பட்டது. ஆனால் இம்முறை இளைஞர்கள் போராட்டத்தை தம் கையில் எடுத்துதிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இந்நாட்டின் அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமைத்துவம் கொடுக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்ற வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு எதிர்வரும் காலங்களில் அனைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் இப்போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com