Saturday, May 7, 2016

கௌரவ பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்

தவிசாளர் பசீர் சேகுதாவூத் சேருக்கு....- A.W.M. ஹிஷாம் சம்மாந்துறை-
அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு..


வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ். எமது கட்சிக்கும் இந்த சமூகத்தும் நீங்கள் புரிந்து வரும் மகத்தான சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்தவனாக இதை எழுதுகிறேன்.

நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களுக்கு எழுதிய திறந்த மடலை படிக்க கிடைத்தது. தாங்கள் எழுதிய மடலுக்கு பதில் மடல் எழுதும் அளவு நான் பெரியவனல்ல. உங்கள் அனுபவத்தின் அரைவாசி தான் எனது வயதாகும். நீங்கள் இந்த சமூகத்திற்காக சிந்திய ஒரு வியர்வைத் துளிக்கேனும் நான் ஈடாகுவேனா என்று கூடத்தெரியாது. இருந்தாலும் எனது சிந்தனைக்கு பட்டதையும் எனது ஞாபகங்களின் அடிப்படையிலும் இந்தக்கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவனாக உங்களிடம் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

உங்களது திறந்த மடலில் இக்கட்சியில் கடந்த காலங்களில் எழுந்த பல முரண்பாடுகளையும் அந்த பிரச்சினைகளின் போது நீங்கள் தலைவர் றஊப் ஹகீம் இன் பக்கமே நியாயம் இருந்ததனால் தலைவருக்கு ஆதரவாக நின்றதனையும் நினைவு கூர்ந்தீர்கள். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் உயிரைக்கூட பணயம் வைத்து போராடியதாக கூறி இருந்தீர்கள். அது நிச்சயமான, மறுக்க முடியாத உண்மையாகும். அந்தந்த உட்பூசல்களின் போது தலைவரின் பக்கம் நியாயம் இருந்ததனாலும் கட்சியைப் பாதுகாக்க வேண்டியதற்காகவும் அவ்வாறு நியாயமாக நடந்து கொண்டதாக கூறி இருந்தீர்கள். ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினையில் செயலாளரின் நீதிக்காக செயலாளருக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக கூறுகிறீர்கள்.

இங்கு நீங்கள் கூறவரும் விடயத்தின் மூலம் மற்றவர்கள் எதைப் புரிந்துகொள்வார்கள் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஒரே ஒரு விடயம் புரிகிறது. நீங்கள் தலைவரையும், செயலாளரயும் மட்டுமே பிரச்சனைக்குரியவர்களாக காட்ட முனைகிறீர்கள். நீங்கள் எப்போதும் பிரச்சினைளுடன் சம்பந்தப் படாதவராகவும், முரண்பட்டுகொள்ளும் இருவரில் நியாயம் யார் பக்கம் உள்ளதோ அவருக்கு ஆதரவாக நின்று நியாயத்திற்காக குரல் கொடுப்பதாய் கூறி இருக்கிறீர்கள். இம்முறையும் அதைத்தான் செய்கிறேன் எனக்கூறி உங்களுக்குள்ள பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டீர்கள். மேலும் கட்சியில் இதுவரை காலமும் இடம்பெற்ற முரண்பாடுகளை ஒவ்வொன்றாக கூறிய நீங்கள், கட்சிக்குள் நீங்கள் முரண்பட்ட எந்தவொரு சம்பவத்தையும் கூறாது இருட்டடிப்பு செய்து விட்டீர்கள். இதன் மூலம், ஒரு போதும் முரண்பாடுகளில் சிக்கிகொள்ளாத உத்தமராக உங்களை நீங்களே காட்டிக்கொள்வதாய் அறிகிறேன்.

உண்மையில் நீங்கள் கூறுவது போன்று கடந்த காலங்களில் தலைவருக்கு ஆதரவாக செயற்பட்டதற்கு காரணம் தலைவரின் பக்கம் நீதி இருந்தது மட்டும் தானா? அவ்வாறு நீதிக்காக மட்டும் செயற்பட்டிருந்தால் இதை ஏன் அப்போதே கூறவில்லை? அதே போல இம்முறை செயலாளரின் நீதிக்காக செயலாளருக்காக குரல் கொடுப்பதாக கூறுகிறீர்கள். உண்மையில் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? செயலாளருக்கு ஆதரவாக என்றா? அல்லது தலைவருக்கு எதிராக என்றா? ஆனால் தேர்தல் முடிந்த கையோடு ஒரு தேசியப்பட்டியல் உங்களுக்கும் வழங்கப் பட்டிருந்தால் நீங்கள் எதற்காக, யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பீர்கள் என்பது தெரிய வந்திருக்கும்.

மேற்படி மடலில், செயளாரின் அதிகாரம் குறைக்கப்பட்டதனை குறையாகக் கொள்ளும் நீங்கள், பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் செயலாளராக இருந்த தற்போதைய தலைவர் அவர்களுக்கும் இவ்வாறு அதிகாரக்குறைப்பு செய்யப்பட்டிருந்தால் தற்போதைய தலைவரின் நிலை என்னவாகியிருக்கும்? என்று கேட்டிருந்தீர்கள். ஆனால் இப்படியான ஒரு தலைவனை பெற்றுக் கொள்ளாத இந்த சமூகத்தின் நிலை எங்கே சென்றிருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? பெருந்தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின் ரவூப் ஹகீம் அவர்களைத் தவிர வேறு யாரவது ஒருவரது கைக்குச் சென்றிருந்தால் இக்கட்சியின் நிலை என்னவாயிருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா ?? கட்சி இன்று உயிரோடு இருந்திருக்குமா?? கட்சியை விற்றுத் தின்றிருப்பார்கள். அவ்வாறுதான் கட்சி உயிரோடு இருந்தாலும், இந்தக்கட்சிக்கு ரவூப் ஹகீம் அல்லாத வேறு ஒருவர் தலைவராக இருந்திருந்தால் உங்களுக்கு மூன்று முறை தேசியப்பட்டியல் கிடைத்திருக்குமா ?? அவ்வாறு மூன்று முறை தேசியப்பட்டியல் கிடைக்காமல் போயிருந்தால் உங்களது நிலை இப்போது என்னவாயிருக்கும்?? நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா?

அதேபோல மேற்படி பேராளர்களுக்கான உங்களது மடலில் கட்சியில் இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பேசியிருந்தீர்கள். கட்சிக்குள் உங்களுக்கு இத்தனை பிரச்சினைகள், உட்பூசல்கள் இருந்த போதிலும் கட்சியினதும் சமூகத்தினதும் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் உங்கள் பெரிய மனதை இந்த இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும். மேற்படி இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதற்காவே உங்களுக்கு கடந்த வருடம் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் படவில்லை என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக உங்களின் இதற்கு முந்தைய அறிக்கை ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். நீங்கள் கட்சியின் முடிவை மதிக்கும் ஜனநாயக அரசியல்வாதியாக இருந்தால்; நீங்கள் சுயநலமற்ற ஒரு அரசியல்வாதியாக இருந்தால் கட்சியால் நிறுத்தபட்ட எந்த வேட்பாளருக்காக களத்தில் இறங்கி வேலை செய்தீர்கள் ? மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியின் வெற்றிக்காக என்னென்ன பங்களிப்புக்கள் செய்தீர்கள்...?? அதைவிட கடந்த பொதுத்தேர்தலில் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் உங்களது பங்களிப்பு எவ்வ்வாறாக இருந்தது என்பதனை விளக்க முடியுமா..??எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டும் செயல்படுவதாக கூறும் நீங்கள் இதில் உள்ள நியாத் தன்மையை கூறுங்கள்.

மேலும் எப்போதும் நீதிக்காக மட்டும் போராடி வருவதாக கூறும் உங்களிடம் இன்னொரு விடயம் பற்றிப் பேசுவதிலும் தப்பில்லை என்று நினைக்கிறேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நமது கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவினையும் தாண்டி மகிந்த ராஜபக்சவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கி பிரார்த்தனை செய்து அறிக்கைகள் விட்டிருந்தீர்கள். இவ்வாறு மகிந்தவுக்கு ஆதரவு வழங்கியதில் என்ன நியாயம் இருந்தது என்பதனை அறிய ஆவலாக உள்ளேன். எப்போதும் நியாயத்தின் பக்கமே ஆதரவு வழங்குவதாக கூறும் நீங்கள் மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் நடந்த தேர்தலில் எந்த நியாயத்தின் அடிப்படையில் மகிந்தவை ஆதரிக்க முன்வந்தீர்கள்.?

அதிலும் அல்லாஹ்வுக்கு அடுத்ததாக இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மகிந்தவை மட்டுமே நம்புவதாக கூறியிருந்தீர்கள். இவ்வாறு கூறியதின் அடிப்படை நியாயம் என்ன என்பதை தெளிவு படுத்தக்கோருகின்றேன். இவ்வாறு கூறுவதன் மூலம் யாரை சந்தோசப் படுத்த முனைந்தீர்கள்? மகிந்தவின் கடந்தகால நடவடிக்கைகளில் எதை காரணமாக வைத்து இப்படியொரு நம்பிக்கை உங்களுக்கு வந்தது? எப்போதும் கட்சியின் நலனை மட்டும் முன்னிறுத்தியே முடிவெடுப்பதாக கூறும் நீங்கள் அத்தேர்தலில் இவ்வாறு முடிவெடுத்ததில் கட்சிக்கும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் என்ன நன்மை இருந்தது என்பதனை நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள்.

அதேபோல் கடந்த முறை உங்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் ஒரு சாதனையே செய்தீர்கள். கட்சியின் தவிசாளராக இருந்து கொண்டு தலைவருக்குத் தெரியாமல் கேபினட் அமைச்சர் பதவியொன்றினை பெற்றிருந்தீர்கள். இதில் என்ன நியாயம் உள்ளது ?

மன்னிக்கவும்; இக்கேள்வி ஏற்கனவே உங்களிடம் ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளரினால் கேட்கப்பட்டு அதற்கு நீங்கள் வழங்கிய பதில் இப்போது தான் ஞாபகத்துக்கு வருகிறது. “ஒரு மனிதன் தனது வாழ்விலே எப்போதும் வளர்ச்சியை எதிர்பார்ப்பான். அதே அடிப்படையில் தான் நானும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக இருந்து, இன்று இந்த அமைச்சர் பதவியை ஒரு வளர்ச்சியாகவே காண்கிறேன்” என்று அப்போது காரணம் கூறி இருந்தீர்கள் (எனது ஞாபகம் சரியாக இருக்கும் என நம்புகிறேன்)

அவ்வாறு தான் நீங்கள் அந்த அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதென்றாலும் தலைவருக்கு தெரியாமல் பெற்றுக் கொண்டதன் நியாயம் என்ன? காரணம் என்ன? எமது கட்சிக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதை அன்று நீங்களே மறந்து போயிருந்தீர்கள். அன்று இந்தக் கட்சியை விட இந்த தலைவனை விட நீங்கள் அமைச்சுப் பதவியை பெரிதாக நினைத்ததன் நியாயம் என்ன? நீங்கள் தான் எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டுமே இருப்பவராச்சே... ஒரு சிறுபான்மை கட்சியின் முக்கிய பதவியை வகிக்கும் நீங்கள் மக்களின் பாரிய பொறுப்புக்களை உங்களின் தோள்களில் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள் இவ்வாறான தீர்க்கமான முடிவுகள் எடுக்கின்ற போது, உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் தான் கவனத்தில் எடுப்பீர்களா? அல்லது அதுவும் நியாயம் தான் என்று கூறப்போகிறீர்களா??

காட்டிக்கொடுப்பும், கழுத்தறுப்புகளும் மிக மலிவாகவே காணப்படும் இலங்கை அரசியல் களத்தில் உங்களது அந்த அமைச்சுப்பதவிக்கும் பேரம் பேசப்பட்டிருக்கும் என்பதனை சாதாரண அரசியல் அவதானியால் கூட அப்போது ஊகிக்க முடிந்திருந்தது.

தவிசாளர் அவர்களே நீங்கள் இக்கட்சிக்கும் இச் சமூகத்துக்கும் செய்த, செய்து கொண்டு வரும் அளப்பரிய பணிகளை குறைத்து மதிப்பிடுதல் இம்மடலின் நோக்கமல்ல. ஆனாலும் ஒரு ஜனநாயக அரசியல் வாதியாக இதுவரை உங்களைக்காணும் நான், தொடர்ந்தும் அதே நிலையிலே உங்களைக் காணவேண்டும் என்று ஆசைபடுவதாலேயே இவ்வாறு எழுதினேன்.

நன்றி.
இப்படிக்கு A.W.M. ஹிஷாம் சம்மாந்துறை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com