Monday, May 9, 2016

இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் நடேசனின் பகிரங்க மடல்.

என்னை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நீங்கள் வந்தசமயம் சந்தித்த போது, கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைக்க 65 வீதமான இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள்; ஆதாரிக்காத போது எப்படி 77இல் வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தை தமிழ் ஈழம் எனக் காண்பித்து எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்?; என்று கேட்டபோது, தாங்கள் “48ஆம் ஆண்டில் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள்” என்றீர்கள். அப்பொழுது நான், “அப்படியானால் இறந்த ஆவிகளிடம்தான் நாங்கள் சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றேன். நீங்கள் என்னை சிங்களவர் போல் பேசுவதாக குறிப்பிட்டுவிட்டு முகத்தை திருப்பி கொண்டீர்கள். உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகளுக்கப்பால் அறிவுசார்ந்த தர்க்கத்துக்கும் உங்களுக்கும் வெகு தூரம் என்றாலும் மக்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துகளை பரிமாற வேண்டிய வரலாற்றுக் காலத்தில் நாம் இருக்கிறோம். இதைத்தான் பிரபல இலங்கைத் தமிழ் ஏடும் வலியுறுத்துகிறது.
விடயத்துக்கு வருகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் தெரிவுக் குழுவின் அறிக்கையை வரவேற்று நீங்கள் விட்ட பதில் அறிக்கையைப் பார்த்தேன்.

இலங்கை அரசபடைகளும் விடுதலைப்புலிகளும் போர் குற்றங்கள் புரிந்தார்கள் என இந்த அறிக்கையில் இருக்கிறது. இதை நம்மவர்களுக்குத் தெரிவிக்க ஐக்கிய நாடுகள் தெரிவுக் குழுதான் வேண்டுமா?
இலங்கையில் உள்ள சுப்பனும் கந்தனும் சொல்வார்களே. பண்டா, சில்வா இஸ்மயிலைக் கேட்டாலும் தெரியும்.

போர்க் குற்றம் புரிந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். மற்றைய தரப்பான இலங்கை இராணுவமும் அதன் தலைவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுதான் உங்களதும் இந்த அறிக்கையை ஆதரிப்பவர்களதும் கருத்தும் அல்லவா?

கடந்த முப்பது வருடங்களாக விட்டு விட்டு நடந்த போரையும் இறுதியாக மூன்று வருடகாலம் தொடர்ந்து நடந்த போரையும் சிறிது திரும்பிப் பார்ப்போம்.

தமிழ்த் தலைவர்களான செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரின் கனவுகள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற பெயரில் தனிநாட்டுத் தீர்மானமாக தமிழ் இளைஞர்கள் தலையில் சுமத்தப்பட்டது. அந்தக் கனவுகளை சுமந்து வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன். இளைஞர்கள் ஆயுதத்தால் இலங்கை இராணுவத்தை விரட்டி விட்டு உங்களை ஆட்சி பீடத்தில் அமர்த்துவார்கள் என கனவு கண்டீர்கள்.
ஆனால் நடந்துது என்ன?

தான் கஷ்டப்பட்டு ஏன் அமிர் அண்ணைக்கு கிரீடம் கொடுக்க வேண்டும் என பிரபாகரன் நினைத்ததால் அமிர் அண்ணையையும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரையும் கொலை செய்தார்கள். அத்துடன் தனக்கு எதிராக வேறு போட்டி வரக்கூடாது என நினைத்து அக்காலத்தில் மேலும் பலரையும் வைகுண்டம் அனுப்பிவிட்டார். நீங்களும் உங்கள் தலைவர்களும் வைத்த நெருப்பு உங்களை மட்டுமல்ல எல்லோரையும் எரித்தது. முடிவில் உங்கள் கதவை தட்டும்போது அதாவது போர்நிறுத்த காலத்தில் உயிர்தப்பிய எல்லோரும் துப்பாக்கி முனையில் ஒன்று சேர்க்கப்பட்ட போது பிரபாகரனை மேதகு தலைவராக்கி விட்டு பாராளுமன்ற அங்கத்தவராகிவிட்டீர்கள்.

இப்படியே போனால் எதிர்காலத்தில் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன நடக்கும் என எண்ணிப்பார்க்கும் தூரப்பார்வை அல்லது துணிவு உங்களுக்கு 2002இல் இல்லை. மாவிலாறில் விடுதலைப்புலிகள் போரைத் துவங்கிய போதும் இல்லை. அல்லது தம்பி போனால் திண்ணை காலியாகும் என மனதுக்குள் கணக்கு போட்டீர்களா?

அதன்பின்பு உலகத்திலேயே பெரிய மோசடியான தேர்தல் நடந்தது. அதில் விழுந்த கள்ள வாக்குகளில் பலர் தெரிவு செய்யப்பட்டார்கள். (நீங்கள் இல்லை) அதன் பின் நீங்கள் எல்லோரும் போருக்கு ஆதரவாக உலகம்பூராவும் விமானத்தில் பறந்து ஆதரவு தேடியதை மறந்து விட்டிர்களா?

பொங்கு தமிழ்காலத்தில் போரை ஆதரித்து புறநானுறு படைத்த புலவர்கள் அல்லவா உங்கள் பாராளுமன்ற அங்கத்தவர்கள். அவர்களுக்கு நீங்கள் தலைவர். அதாவது இலங்கை இராணுவத்திற்கு ஜனாதிபதி மாதிரி இல்லையா?

குறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்தில் இராணுவம் வெற்றிபெற்ற போது உங்களுக்கு போரின் விளைவை ஊகிக்க முடியவில்லை. அப்பொழுதும் மேதகு பிரபாகரனின் தலைமையை நம்பியிருந்தீர்கள். சரி, வடக்கில் போர் தொடங்கிய போது மன்னார் புளியங்குளம் முதலிய இடங்களில் இருந்து மக்களை மந்தைகள் போல் விடுதலைப்புலிகள் கொண்டுவந்த போது மக்களைப் பாதுகாக்க கொண்டு வருகிறார் என மவுனமாக இருந்தீர்கள். ஆனந்தசங்கரி, டீ.பிஎஸ். ஜெயராஜ் மற்றும் என்னைப் போன்றவர்கள் அதற்கு எதிராக குரல்கொடுத்த போது நீங்கள் போருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தீர்கள்.

உங்களுக்கு சில சம்பவங்களை பிரத்தியேகமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வன்னியில் நடந்த போரில் மக்கள் உயிரிழப்பு தொடங்கியது. முல்லைத்தீவு மாவட்டத்தில், அதாவது A9 பதையின் கிழக்குப் பகுதியில் புதுக்குடியிருப்புக்கு அண்டிய பிரதேசத்தில். அப்பொழுது இராணுவம் சுதந்திரபுரத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய போது அங்கு மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அங்கே செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நலன் அமைப்பினரும் சென்றார்கள். அந்த இடத்தில் அரசாங்க சேவை அமைப்புகள் சென்றபோது 200 மீட்டர் தூரத்தில் புலிகளின் குரல் வானொலியின் (container) கொள்கலத்துடன் சென்றனர் . இவர்களது முயற்சியை முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் பார்த்திபனும் ஐக்கிய நாடுகள் அகதி அமைப்பின் பிரதிநிதியும் ஆட்சேபித்தபோது வானொலிக்கு பொறுப்பாக இருந்த தமிழன்பன் நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று கூறினார். இதன்பின் விடுதலைப்புலிகளின் ஆட்டிலரி அணியும் சுதந்திர புரத்திற்கு இடம் பெயர்ந்தது. அங்கிருந்து இராணுவத்தை தாக்கினார்கள். அந்தத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவம் என்ன செய்யும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இன்னுமொரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு:
2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளிடம் இருந்து ஈரோஸ் பாலகுமார் குடும்பத்துடன் கடல்மார்க்கமாக வள்ளத்தில் முல்லைத்தீவில் இருந்து தப்பி ஓட முற்பட்டபோது விடுதலைப்புலிகளால் சுடப்பட்டார் . அப்பொழுது பாலகுமாரின் மகள் காயமடைந்தார். இன்னும் அந்த பிள்ளையின் எலும்புகள் குணமடையவில்லை.

பாலகுமாரின் குடும்பத்தை தாக்கிய விடுதலைப்புலிகள் எத்தனை தமிழ்மக்களின் இறப்புக்கு நேரடியாக காரணமாக இருந்தார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கடைசியாக ஒரு சம்பவம். உங்களுக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை.
உக்கிரமான போர் நடந்த போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் நானும் ஒருவன். 2008 மார்ச் மாதம் 28ஆம் திகதி என்னுடன் வந்த மெல்பன் சட்டத்தரணி ரவீந்திரனிடம் ‘உங்களிடம் சம்பந்தரின் தொலைபேசி இலக்கம் இருந்தால் யுத்தத்தில் அகப்பட்ட மக்களைப் பற்றி அரசாங்கத்திடம் வந்து பேசச் சொல்லுங்கள’ என்றேன். அவர் தொலைபேசியில் பேசி விட்டு வந்து சொன்னார் ‘சம்பந்தர் இந்தியாவுக்கு போவதால் தனக்கு நேரமில்லை என்கிறார்’.

பெரும்பாலான மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் இறந்த போது அரசாங்கத்தோடு அல்லது புலிகளோடு பேச முற்பட்டீர்களா? அந்தவேளையில் நீங்கள் இந்தியாவுக்கு பிரயாணம் செய்தீர்கள்.
நான் கூறிய சம்பவங்கள் உண்மையானவை. இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி உறுதிப்படுத்தலாம்.

இந்த வயதில் சுய விமர்சனம் செய்யவிட்டால் வேறு எக்காலத்தில் செய்யமுடியும்? அரசியலை விலக்கிப் பார்த்தால் விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தில் மட்டுமல்ல அப்பாவி மக்களின் இரத்தம் உங்களது கைகளிலும் படிந்துள்ளது.

இனி நீங்கள் வரவேற்றது ஐக்கிய நாடுகள் செயலாளரின் அறிக்கையை மட்டுமே. இது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அறிக்கையாக மாற பலபடிகள் உள்ளன.

இந்த அறிக்கையின் எதிர்காலத்தைப் பார்ப்போம்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் எந்த ஒரு நாடும் முக்கியமாக சீனா அல்லது ரஷ்ஷியா வீட்டோ பண்ணாமல் இருந்தால் மட்டுமே மேற்கு நாடுகளின் ஆதரவில் வரையப்பட்ட அறிக்கையின் படி இலங்கையில் போர்க் குற்ற விசாரணைக் கமிஷன் வருவது சாத்தியம். சீனாவுக்கு தீபெத்திலும் ரஷ்ஷியாவுக்கு செச்செனியாவிலும் இதே போன்ற விசாரணையை தொடங்குவதற்கான சகல சாத்தியம் உண்டு. இதை விட அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கில் ஏற்படுத்திய போர் அழிவுகள் குறைந்தவையல்ல. நமது பக்கத்து நாடான இந்தியாவின் இராணுவத்தால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட காஸ்மீரிகள் கடந்த சில வருடங்களில் இறந்து விட்டார்கள். அது இன்னும் முடிவடையாத தொடர்கதை.

இப்படியாக எல்லோர் உடம்பிலும் சிரங்குப் படை உள்ளது. யாருக்கு யார் தைலம் போடுவது? இந்த நிலையில் இந்த நாடுகள் இலங்கை மீது எங்வளவு தாக்கத்தை பிரயோகிக்கும் என்பது கேள்விக்குரியது.
மறுபுறத்தில் அதிக தாக்கத்தை பிரயோகிக்கும் போது இலங்கை அரசாங்கம் இரண்டு வகையாக செயற்படலாம்.

ஒருவிதத்தில் விசாரணைக்கு அனுமதித்து விட்டு உள்நாட்டில் பல முட்டுக்கட்டைகளை போடமுடியும். இதைவிட இலங்கை இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகாவின் தலைமையில் தான் போர் நடந்தது. போரியல் சட்டப்படி மனிதாபிமனமற்ற உத்தரவை அரசியல் தலைமை இட்டாலும் இராணுவத் தலைவர் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. கடைசிப் போரின் நடவடிக்கைகள் மட்டுமல்ல கொழும்பில் நடந்த கொலைச் சம்பவங்களைக் கூட வேறு பலர் பொறுப்பேற்க வேண்டி வரும். அது மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் விசாரணையில் எத்தனை தமிழர்களால் துணிந்து சாட்சியம் அளிக்கமுடியும்?

மறுபுறத்தில் இந்தக் கமிசன் இலங்கை இறைமைக்கு எதிரானது என சொல்லி விட்டு எதிர்த்து நிற்கலாம். கியூபா 60 வருடங்கள் அமெரிக்காவையும் உலகத்தையும் எதிர்த்து நிற்கவில்லையா?

இந்த இருநிலையிலும் நட்டமடையப் போவது தமிழர்கள்தான். சிங்கள அரசியல்வாதிகளை புறந்தள்ளிவிட்டாலும் இலங்கையின் பதினைந்து மில்லியன் சிங்கள மக்களது நட்புறவு இல்லாமல் தமிழர்கள் வாழ்வது கடினமானது.

இதைவிட முக்கியமான விடயம் போர் நடக்கும் போது பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையும் மேற்குலகமும் தற்போது விழித்தெழுந்து இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் குற்றம் சாட்டினால் இதன்மூலம் இலங்கைத்தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தமிழீழம் கிடைக்கும் என முப்பது வருடம் நம்பியதை விட படு முட்டாள்தனமானது. தமிழர்கள் எதைப் பெற்றாலும் சக இலங்கை மக்களோடுதான் சேர்ந்து பெறமுடியும். இந்த போர்க் குற்றசாட்டில் இலங்கைக்கு மிகவும் அதிக பட்ச தாக்கம் வருவதாகில் அது இலங்கையில் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடைகளாகும். இதனால் நிச்சயமாக முழு இலங்கை மக்களும் துன்பப்படலாம் ஆனால் சமூகத்தில் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கூடிய அளவில் இதன் சுமையை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

இதை விட இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் தான் இனவாதம் உண்டு தமிழ் இஸ்லாமிய மக்களிடம் இல்லை என ஒருவராலும் கூறமுடியாது. ஆனால் இந்தியாவில் இந்து-முஸ்லீம் மக்கள் இடையே உள்ள பிளவையோ பாகிஸ்தானில் ஷியா- சுன்னி மக்களிடம் இருக்கும் வேறுபாடுகள் ஏன் பாலஸ்தின- யூத மக்களது உறவுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்தது. இலங்கை இனவாதம் இரு பக்கத்து அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் சிங்கள மக்கள் மத்தியில் மேலும் இனத்துவேசத்தை உருவாக்க வழிவகுக்கும். 83 ஜுலை காலங்கள் எமது மனதில் இருந்து இன்னும் அகலவில்லை. இன வெறுப்பு இரு பக்கத்து அரசியல்வாதிகளுக்கும் வாக்குகளை அதிகரிக்க உதவும். ஆனால் சாதாரண கந்தையாவுக்கும் சில்வாவுக்கு நன்மை பயக்காது.

இந்த அறிக்கையில் அதிக புளகாங்கிதம் அடைவது வெளிநாட்டு புலி ஆதரவாளர்கள்தான். ஆனால் இந்த அறிக்கை திட்டவட்டமாக வெளிநாட்டுத் தமிழரின் கனவான தமிழீழத்தை நிராகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த நிபந்தனையற்ற ஆதரவை கண்டிக்கிறது. இதைவிட விடுதலைப்புலிகளுக்காக இவர்கள் சேர்த்த பணத்தை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிட பரிந்துரைக்கிறது.

ஆனால் ஆனைக்கால் வியாதிக்காரன் தனது வீங்கிய காலை பலமென்று நினைப்பது போல்தான் இவர்களும் எதிரியின் சகுனப் பிழைக்கு சந்தோசப்படும் பிரகிருதிகள்.

இறுதி யுத்தகாலத்தில் வெளிநாட்டு தமிழனை நம்பி விடுதலைப்புலிகள் மோசம் போனார்கள். அமெரிக்கத் தமிழன் பராக் ஒபமாவின் கப்பல் வரும் என்றான். அவுஸ்திரேலிய தமிழன் பசுபிக்நாடுகள் தமிழீழத்தை ஆதரிக்கிறது என்று கயிறு கொடுத்தான். நோர்வேத்தமிழன் போரை நிறுத்தாமல் போரிடுங்கள். இந்தியாவில் காங்கிரஸ் அரசு தோற்று மத்தியில் ஆட்சிமாறும் என கூறினான்.

ஐயா சம்பந்தனே தமிழனுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர் பக்கம் தலைவையாதீங்கோ.

பிற்குறிப்பு:
பேச்சுவார்தைகளை எப்படி நடத்துவது என்ற பயிற்சி எடுக்க சிங்கப்பூர் போனீர்கள் என தகவல் வந்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகத்தின் அறிக்கையை வரவேற்றுவிட்டு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என நினைக்கிறீர்களா?

நடேசன் – அவுஸ்திரேலியா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com