Wednesday, May 11, 2016

வடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை - டிலிஷா அபேசுந்தர

யுத்த விதவைகள்

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் முல்லைத்தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள war widowsநந்திக்கடலேரியில் உள்ள தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நாங்கள் செல்வராஜியின் இருப்பிடத்துக்குச் சென்றோம். அலங்கோலமான நிலையில் இருந்த அவரது சிறிய வீட்டின் சுவர்களினூடாக, ஒரு சோகமான கடந்தகாலத்தின் இருண்ட நிழல்களை முற்றாக காணக்கூடியதாக இருந்தது. “போரின் உச்சக்கட்டத்தின்போது ஒரு ஷெல் தாக்குதலில் எனது கணவரும் மற்றும் எனது பிள்ளைகளில் மூவரும் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமாக உள்ள மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் எனது வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன.” என்று செல்வராஜி தெரிவித்தாள்.

தனது மூன்று பிள்ளைகளுடன் முல்லைத்தீவு, கோப்புலவில் வாழும் 47 வயதான செல்வராஜி (உண்மைப் பெயரல்ல) போர் முடிவடைந்ததின் பின்னர் இரண்டரை வருடங்களுக்கு மேலாக உள்ளக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களிலேயே (ஐ.டி.பி) வாழ்ந்துள்ளாள். போரின்போது அவளது கணவர் வலியமுள்ளிவாய்க்காலில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் பதுங்கு குழிகளுக்குள் இனிப்பு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினார். துரதிருஷ்டவசமாக 29 மே 2009ல் அவளது கணவருடன் சேர்ந்து மூன்று பிள்ளைகளும் ஒரு ஷெல் தாக்குதலில் அழிந்துபோனார்கள். அந்த தாக்குதலில் உயிர்பிழைத்த மற்ற இரண்டு பிள்ளைகளும் அங்கவீனர்களாகி விட்டார்கள். தற்போது செல்வராஜி இந்த இரண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுடனும் மற்றும் இன்னொரு பிள்ளையுடனும் சேர்ந்து வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளாள். இந்த சுமையான வாழ்க்கையும் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வரப்போவதில்லை.

“எனது பிள்ளைகளில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது. மீன்பிடித் தொழிலின் மூலம் அவன் சிறிது பணம் சம்பாதிக்கிறான். அவனது உழைப்பிலேயே எங்களது முழுக் குடும்பமும் தங்கியுள்ளது. அவன்கூட தனது வேலையை அதற்கான எந்தவித வசதியும் இல்லாமலே செய்து வருகிறான். அரசாங்கம் எங்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குவதாக வாக்களித்துள்ள போதிலும் இதுவரை எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. விசேட தேவையுடைய எனது பிள்ளைகளால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னால் அவர்களை எங்கும் அனுப்பவும் முடியாது. ஒரு இடைநிறுத்தலும் இல்லாமல் செல்வராஜி தனது சோகத்தை கொட்டித் தீர்த்தாள்.

“வாழ்வதற்கு எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. பிள்ளைகளுக்கு மருந்து வாங்க எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. முன்னர் இராணுவம் அவர்களுக்கான சிகிச்சையை வழங்கியது. கிராமத்தவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்து நானும் கூட சிறிதளவு பணம் சம்பாதிக்கிறேன். எங்களை வறுமை வாட்டுவதால் அதைக்கொண்டு தொடர்ந்து வாழ்வதுகூட கடினமாக உள்ளது.”

இந்த அவலநிலை முல்லைத்தீவுக்கு மட்டும் என்று வரையறுக்கப் படவில்லை. பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களால் நடத்தப்பட்ட புலனாய்வில் கிட்டத்தட்ட 40,000 – 60,000 வரையான பெண்கள் வடக்கில் விதவைகளாக மாறியுள்ளார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 50,000 குடும்பங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துவதாக தெரியவந்துள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் 2012 – 13 குடும்ப பிரிவு வருமானம் மற்றும் செலவு அறிக்கையின்படி, பெரும்பான்மையான பெண்கள் தலைமையிலான குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்கள் 49 – 50 வயதைச் சேர்ந்த குழுவினராக உள்ளார்கள். அவர்களில் பாதிப்பேர் விதவைகள்.

30 வருட யுத்தம் வடக்கிலுள்ள விதவைகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. “யுத்தம் முடிவுற்றதின் பின்னரும் யுத்த விதவைகளின் பிரச்சினை ஒரு தீவிரமான விடயமாகிவிட்டது. இப்போதுதான் அதன் உண்மையான தாக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்” இவ்வாறு சொன்னார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. எம். மோகன்தாஸ். இதில் nரும் பிரச்சினையாக இருப்பது இந்தப் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கான போதிய வழிகள் இல்லாமலிருப்பதுதான். யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு சில உட்கட்டமைப்பு முன்னேற்றங்களுக்கு சாட்சியாக இருந்தபோதும், அது செல்வராஜியைப் போல வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. “போரின்போதுகூட எங்களுக்கு வேலைக்கான எந்த வழியும் கிடைக்கவில்லை. அதனால்தான் எனது கணவர் இனிப்பு விற்க முயற்சித்தார். இப்போது கூட பணம் சம்பாதிப்பதற்கு சாதகமாக எந்த நிலையும் இல்லை. அயலவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பதின் மூலமே என்னால் சிறிதளவு பணம் தேட இயலுமாக உள்ளது” என செல்வராஜி சொன்னார். அதேபோல வடக்கிலுள்ள பெண்களின் மத்தியிலுள்ள வேலையில்லா பிரச்சினையை மோகன்தாஸ் அவர்களும் கூட உறுதிப் படுத்தினார்.

விதவைகளுக்கான அரசாங்கத்தின் உதவி போதுமானதா?

2014 அரசாங்க புள்ளிவிபரங்களின்படி ஸ்ரீலங்காவிலுள்ள பெண்களின் மத்தியில் வேலையின்மை 65 விகிதமாக உள்ளது. பெரும்பான்மையான பெண்கள் வேலையற்று இருக்கும் முதல் நான்கு மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே முன்னிலை வகிக்கின்றன. தற்சமயம் இங்குள்ள யுத்த விதவைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான ஒரு திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு யுத்த விதவைகளுக்கு சுய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 5.43 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 181 குடும்பங்களுக்;கு மாதாந்த உதவித் தொகையாக ரூபா 30,000 கிடைக்கக்கூடும். மேலும் யாழ்ப்பாணத்தில் 54,000 குடும்பங்கள் சமுர்த்தி நலன்களை பெற்று வருகின்றன. எனினும் எத்தனை யுத்த விதவைகள் சமுர்த்தி உதவிகளைப் பெறுகிறார்கள் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக அலுவலகத்தில் உள்ள சமுர்த்தி அதிகாரியிடம் விசாரித்தபோது, அந்த எண்ணிக்கை தனக்குத் தெரியாது என அவர் சொன்னார். இதற்கு அப்பால் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்கும் ஒரு திட்டத்தையுமகூட ஆரம்பித்துள்ளது.

எனினும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியது, இந்த திட்டம் யுத்த விதவைகளில் கவனம் செலுத்தப்பட்டதைப் போன்ற ஒன்று அல்ல, மற்றும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்” என்கிற பிரிவின் கீழ் எந்த வகையான குடும்பங்களை அனுமதிப்பது என்று அரசாங்க அதிகாரிகள் மத்தியில் ஒரு தெளிவான யோசனை இல்லாமலுள்ளது என்று.

கையில் போதுமான நிதி இருந்தும் அதிகாரிகள் தேவையானவர்களுக்கு அதை வழங்காமல் உள்ளார்கள். அவர்கள் ஏன் நிதியை கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று வினாவியபோது, பல்வேறு தேவைகள் உள்ள குழுக்களை அவர்கள் இன்னமும் அடையாளம் காணவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். எப்படி அவர்கள் பணத்தை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கேட்டபோது, குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது அவர்களிடம்; மக்கள் ஒருபோதும் அப்படியானவற்றை செய்ய மாட்டார்கள் என அவர்களுக்கு நான் விளக்கினேன்” என விக்னேஸ்வரன் சொன்னார். தான் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தேவையுள்ள குடும்பங்களை கண்டறிவதற்காக களப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதாகச் சொன்னதுடன் அவர் மேலும் தெரிவித்தது, இந்த உதவித் தொகையை 6,000 ருபாவாக அதிகரிக்கும்படி தான் முன்வைத்த கோரிக்கைக்கு பிரதம மந்திரி கூட செவிமடுத்துள்ளார் என்று. “ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எங்களுக்கு கிடைத்துள்ள 6 மில்லியன் ரூபா நிதியையும் யுத்த விதவைகளின் நலன்களுக்காக ஒதுக்கத் தீர்மானித்துள்ளோம். சமீப காலம்வரை வட மாகாண சபையில் பெண்கள் விவகாரங்களுக்காக ஒரு அமைச்சு இருக்கவில்லை. இப்போது நாங்கள் அப்படியான ஒரு அமைச்சை உருவாக்கி உள்ளோம். இதற்காக அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எந்த நிதியையும் பெறவில்லை. சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து இதற்கான நிதியை கோரியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவிக்கும்போது வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே சொன்னது, அரசாங்கமும் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் வடக்கை மீள் கட்டுமானம் செய்வதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டுள்ள போதிலும், அதனால் இன்னமும் போரினால் எற்பட்ட வடுக்களை குணமாக்க முடியவில்லை என்று. “வடக்கிலுள்ள யுத்த விதவைகளின் பிரச்சினையில் இரண்டு பிரதான காரணங்கள் நிலமையை மோசமாக்கி வருகின்றன. முதலாவது இந்த பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை விகிதத்தில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக உள்ளது. யுத்தத்தில் ஏராளமான உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளதால், நிலமை இன்னும் மோசமடைந்துள்ளது.

இரண்டாவது காரணம் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வருமானம் தேடவேண்டிய war-widowsஅதேவேளை பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுதல், கல்வி கற்பித்தல் போன்ற மேலதிக சுமைகளும் விதவைகள் மீது விழுந்துள்ளன. இந்தக் காரணங்கள் பெண்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என ஆளுனர் தெரிவித்தார். இதற்கிடையில் யுத்த விதவைகளுக்கான தேசிய குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி சாந்தா அபிமன்னசிங்கம், சுட்டிக்காட்டுவது, யுத்த விதவைகளின் நலன்களுக்காக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஆரம்பித்துள்ள சிறிய அளவிலான திட்டங்கள், அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க போதுமானதாக இல்லை என்று. “எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியின்போது இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க மற்றும் ஏனைய கைவிடப்பட்ட நிலங்களில் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான நிலங்கள் இராணுவம் மற்றும் அதேபோல நீண்ட காலங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த உரிமையாளர்கள் கைகளுக்கு சென்றது முதல், அவர்களின் வாழும்வழி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தங்கள் வீடுகளைக்கூட இழந்து விட்டார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இன்னும் உயர்வடைந்துள்ளதால், அவர்கள் உயிர்வாழ்வதற்கு பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இது அவர்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை தடுத்துள்ளது. புத்தகங்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவை அவர்களால் கொடுக்க இயலாமல் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கல்வி அறிவற்ற இளைஞர்கள் ஆபத்தான வழிகளில் விழுந்துவிடுவதற்கான ஒரு ஆபத்து ஏற்படுகிறது” என்று அபிமன்னசிங்கம் சொன்னார்.

தற்போது ஒரு பெண் தனியாக சமூகத்தில் வாழ்வது நடுக்கடலில் தவிக்க விடப்பட்டதை போன்ற ஒரு நிலை. விசேடமாக தனது குடும்பத்தை காப்பாற்றும் சுமையை எற்றுக்கொண்டுள்ள பெண்கள் நாதியற்றவர்களாக விடப்பட்டுள்ளார்கள், அநேகமாக அக்கிரமக்காரர்களுக்கு இலகுவான இரையாக அவர்கள் மாறிவிடுகிறார்கள். மறுமணம் புரிவது ஸ்ரீலங்கா கலாச்சாரத்துக்கு, விசேடமாக வட பகுதியில் அவ மரியாதையான செயலாகக் கருதப்படுகிறது. அதனால் வடக்கில் உள்ள விதவைகள் உயிர்வாழ்வதற்கு எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வேலையின்மை, பொருளாதார சிரமங்கள், பிள்ளைகளின் கல்வி, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை இந்தப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கிளிநொச்சியில் மாத்திரம் 1237 யுத்த விதவைகள் உள்ளனர். 4967 விதவைகளில் 1442 பேர்களின் விதி, யுத்தத்தின் காரணமாக பாதிப்பு அடைந்துள்ளது. 40 வயதுக்கு குறைவான பெண்களின் தலைமையில் 985 குடும்பங்கள் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தலைமையிலான 13,000 குடும்பங்கள் உள்ளன.

பரமேஸ்வரியின் கதை

34 வயதான பரமேஸ்வரியின் கணவன் 2009ல் ஒரு கண்ணிவெடியில் அகப்பட்டு மரணமடைந்தார். நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்த அவள் ஒரு கஷ்டமான வாழ்க்கை வாழ்கிறாள்.”எனது கணவர் மரணமானபோது எனது கடைசி மகளுக்கு வயது இரண்டு மாதங்கள் மட்டுமே. எனது கணவர்தான் எனது குடும்பத்தை காப்பாற்றி வந்த ஒரே ஆள். அவர் ஒரு மீனவர். நான் எனது 16ம் வயதில் திருமணம் செய்தேன். எனது தந்தைகூட கடலில்தான் மரணமடைந்தார். எனது கணவரின் மரணத்தின் பின் எப்படி தனியாக உயிர் வாழ்வது என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அப்போது பல பிரச்சினைகள் இருந்தன. எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப நான் விரும்பியபோதிலும் அது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. உயிர்வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் நான் கைவிட்டு விட்டேன் ஆனாலும் எனது பிள்ளைகளுக்காக நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். 2010 ல் ஒரு தொண்டு நிறுவனம் எனது உதவிக்கு வந்தது. இப்போது நான் இனிப்பு விற்று எனது வாழ்க்கையை கொண்டு செல்கிறேன், ஆனால் எனது பிள்ளைகளை காப்பாற்ற அது போதுமானதாக இல்லை. இப்போது எனது மூத்த மகன் ஒரு கூலியாளாக வேலை செய்கிறான்”. பரமேஸ்வரி மன அழுத்தத்துடன் வாழ்கிறாள். அவளது உறவினர்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் கிடைத்த போதிலும் ஒரு தந்தையையும் மற்றும் கணவனையும் இழப்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினை. மறுமணம் செய்வதில் அவளுக்கு உள்ள வெறப்பை அவள் வெளிக்காட்டினாள்.

மறுமணம் செய்வதைப் பற்றி நான் யோசித்தேன் ஆனால் எனது பிள்ளைகள் என்னைச்சுற்றி உள்ளபோது என்னால் அதைச் செய்ய முடியவில்லை. திரும்பவும் திருமணம் செய்த அப்படியான ஒரு பெண் எங்கள் கிராமத்தில் இருக்கிறாள், ஆனால் கிராமத்தவர்கள் அளைப்பற்றி தரக்கறைவாக பேசினார்கள். அத்தகைய அவமானங்களால் பாதிப்படைய நான் விரும்பவில்லை. பிள்ளைகளுக்கு அது நல்லதல்ல. திருமணம் செய்த பின்னர் என்னால் அவர்களைக் கவனிக்க முடியாமல் போனால் அவர்களுக்கு என்ன நடக்கும்?”

மறுமணம் பற்றிய பிரச்சினையை பரமேஸ்வரி இப்படித்தான் பார்க்கிறாள். ஒரு விதவைக்கு மறுமணம் எல்லை தாண்டிய ஒன்றா? வடக்கிலுள்ள பெரும்பாலான விதவைககளுக்கு அது தங்கள் மதக் கலாச்சாரத்தக்கு விரோதமான செயல் மற்றும் அவர்கள் தொடர்ந்து தனியாகவே வாழ்ந்து வாழ்க்கையின் சிரமங்களை தாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு மேல் புதிய கணவர் விசுவாசமானவராக இருப்பாரா மற்றும் பிள்ளைகள் நன்கு கவனிக்கப் படுவார்களா என்கிற சந்தேகங்களும் அவர்களுக்கு உள்ளது.

யாழ்ப்பாண பெண்கள் அபிவிருத்தி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 52 வீதமான பெண்கள் மறுமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் ஆனால் 42 விகிதமானவாகள் அதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்கள். துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவது பற்றி அநேகர் பேசவில்லை. அதனால் தமிழ் சமூகம் இந்த யுத்த விதவைகளிடத்தில் அதிகம் பரிவும் மற்றும் மனிதாபிமானமும் காட்ட வேண்டும்.

சீதனப் பிரச்சினையும் கூட பல விதவைகளை மறுமணம் செய்வதைப்பற்றி சிந்திப்பதிலிருந்து தடுத்துள்ளது என்று மையம் தெரிவிக்கிறது. அழிவுக்குப் பின் எஞ்சியவற்றில் இருந்து தனது வாழ்க்கையை உருவாக்கிய ஒரு பெண்ணுக்கு சீதனத்தை தேடுவது என்பது அடுப்பிலிருந்து நெருப்புக்குள் விழுவதைப் போன்றதாகும். இந்தப் பெண்களுக்கு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான ஆரோக்கிய வசதிகளை வழங்கவேண்டியது அவசரமான ஒரு தேவையாகும். விதவைகள் மட்டுமன்றி அவர்களது உறவினர்களுக்கும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

“பெரும்பான்மையான யுத்த விதவைகள் இளம் பெண்கள். அவாகளது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக கலாச்சார கட்டுப்பாடுகளில் தளர்வு காட்ட வேண்டும்” என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும் மற்றும் சமூக விஞ்ஞ}ன துறையின் தலைவருமான பேராசிரியர் ஆர். சிவச்சந்திரன் கூறுகிறார். ரி.என்.ஏ உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், இந்த விதவைகள் மறுமணம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்கிற ஒரு வேண்டுகோளை பொதுமக்களிடம் விடுக்கவேண்டும். “ போரின் உச்சத்தின் போதுகூட இந்தப் பெண்களுக்கு வருமானத்திற்கான ஒரு வழி இருந்தது. தங்கள் உறவினர்கள் எல்.ரீ.ரீ.ஈ யில் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கூட சிலர் பெருமைப்பட்டார்கள், மற்றும் அப்படியான எல்லா விடயமும் இப்போது துடைத்தழிக்கப்பட்டு வருவதினால் அவர்கள் தீவிரமான மனக்குழப்பத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். இவை வெளிக்காட்டப் படாவிட்டாலும் கூட சில விதவைகள் விபச்சாரம், போதைமருந்து பாவனை மற்றும் தற்கொலையில்கூட ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதற்கு இவைகள்தான் காரணமாக உள்ளன”.

“யுத்தம் காரணமாக சிறு வயதில் திருமணம் செய்தது, துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவது, மற்றும் கலாச்சாரத் தடைகள் என்பன இந்தப் பெண்கள் மத்தியில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று சொல்கிறார் முல்லைத்தீவு வைத்திய சாலையின் உளவியல் நிபுணர் மருத்துவர். சி.விஜேந்திரன். பல அரசியற் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்பன இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் விபச்சாரத்தைப் பற்றி தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளார்கள். இதுவரை இதபற்றிய துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை. இந்த முடமான சமூக அமைப்பின் கீழ், இந்தப் பெண்கள் ஏன் இந்த இருண்ட வழிக்கு திரும்பினார்கள் என்பதில் அதிசயம் எதுவுமில்லை. வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான விதவைகள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோரின் வாழ்க்கையை வெறும் பணப் பைகளினால் மட்டும் குணமாக்க முடியாது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com