இலங்கை அரசாங்கம் IMF ன் சிக்கன கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்குகிறது. By Saman Gunadasa
சர்வதேச நாணய நிதியம் (IMF), கடந்த வாரம் 1.5 பில்லியன் டாலர் பிணையெடுப்பு கடன் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்தது. நாட்டின் ஆபத்தான அந்நிய செலாவணி நெருக்கடியை தடுப்பதற்காக மூன்று ஆண்டுகள் நீடிக்கப்பட்ட நிதிவசதி கடனைப் பெற கொழும்பு முயற்சித்திருந்தது.
ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தர வேண்டிய இந்த உடன்படிக்கை, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் பிரதான சமூக சிக்கன வெட்டுக்களுக்கு கீழ்ப்பட்டதாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குழுவின் தலைவர் டாட் ஸ்னைடர், ஊடகங்களுக்கு கூறும் போது, இந்த உடன்படிக்கை "முன் நடவடிக்கைகளை நிறைவு செய்வதுடன்" பினைந்துள்ளது, என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், சர்வதேச நாணய நிதியத்தின் ஜூன் கூட்டத்திற்கு முன்னதாக வங்கியின் கோரிக்கைகளை செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே கொழும்புக்கு கடன் கிடைக்கும்.
உத்தியோகபூர்வ சர்வதேச நாணய நிதிய ஒப்புதல், "ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன்களில் மேலதிகமாக 650 மில்லியன் டாலர் கடனை கிடைக்கச் செய்யும், இதன் மூலம் சுமார் 2.2 பில்லியன் டாலர்கள் மொத்த உதவி (நடப்பில் உள்ள நிதி ஏற்பாடுகளுக்கு மேலாகவும் அதிகமாகவும்) கிடைக்கும் என்று ஸ்னைடர் கூறினார். "ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன்கள்” உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கையின் உடனடி அந்நிய செலாவணி நெருக்கடி அபாயத்தை எளிதாக்கினாலும் கூட, நாட்டின் B+/ எதிர்மறை தரமிடலில் மாற்றம் இருக்காது என்றும் ஃபிட்ச் தரமிடல் முகவரமைப்பு செவ்வாயன்று எச்சரித்திருந்தது. "வெளி மற்றும் பொது நிதி நடவடிக்கைகளில் நிலவும் நீண்டகால பலவீனங்களை அகற்றுவதற்கு" அரசாங்கத்தின் பக்கம் "நீடித்த அர்ப்பணிப்பு" அவசியப்படுகின்றது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளைப் பற்றி கலந்துரையாட கடந்த மாதம் வாஷிங்டன் சென்ற பிரதிநிதிகளுக்கு தலைமை வகித்தனர். இந்த நடவடிக்கைகளில், பெறுமதி சேர் வரி (VAT); ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை துரிதமாக தனியார்மயப்படுத்துவது உட்பட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்துவது; மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை சந்தையை நிர்ணயிக்க விடுவது; மற்றும் ஒரு நெகிழ்வான நாணய மாற்று விகிதத்தை பராமரிப்பதும் அடங்கும்.
கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.4 சதவீதத்தை எட்டிய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை அரசாங்கம் கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கை ஆகும். அது இந்த ஆண்டு 5.4 சதவீதமாகவும் 2020ம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும் குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.
திங்களன்று அரசாங்கம் பெறுமதி சேர் வரியை (வாட்) 11ல் இருந்து 15 சதவீதம் வரை அதிகரித்த அதே வேளை மின்சாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற சேவைகளுக்கும் அரிசி, பாண், கோதுமை மா, பால், மசாலா மற்றும் மருந்துகளுக்கும் இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது. எனினும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளதும் அதிக விலை உயர்வு, விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைவாசியையும் உயர்த்தும். பெறுமதி சேர் வரியானது தனியார் கல்வி மற்றும் தனியார் மருத்துவ பராமரிப்பின் மீது சுமத்தப்படுவதானது, இலங்கையின் ஏற்கனவே சீரழிந்து தொங்கிப்போயுள்ள சுகாதாரம் மற்றும் கல்வி முறை மீது மேலும் அழுத்தத்தை திணிக்கும்.
அரசாங்கம் 2 சதவீத தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் மசகு எண்ணெய்க்கும் விதிக்கப்படும். பெறுமதி சேர் வரி மற்றும் இதர வரிகளும் அரசாங்க வருவாயை 100 பில்லியன் ரூபாய்கள் (685.6 மில்லியன் டாலர்கள்) வரை அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் கருணாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கொழும்பில் வெளிவரும் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய ஆய்வு குறிப்பிட்டுள்ளதாவது: "தொலைபேசி, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு மேலாக, பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்பதையும் கணக்கில் எடுத்தால், ஒரு சராசரி குறைந்த வருமானம் பெறும் அல்லது மத்தியதர வர்க்க குடும்பத்திற்கு [மாதத்திற்கு] 10,000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அதிகமாக செலவிட நேரும்."
ஞாயிறன்று தனது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் "தனியார் மயமாக்கப்படாமல் இலாபம் தரும்" ஸ்தாபனங்களாக ஆக்கப்படும் என்று அறிவித்தார்.
அரச வங்கிகள் உட்பட இந்த நிறுவனங்கள், ஒரு “பொது சொத்து நம்பிக்கையின்” கீழ் கொண்டுவரப்பட்டு "மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும்" என்று அவர் கூறிக்கொண்டார். விக்கிரமசிங்கவின் "மக்களுக்கே சொந்தமானது" என்ற கூற்று, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மூடிமறைப்பதற்கான மற்றொரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.
சில காலம் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் டாமாசெக் (Tamasek) மாதிரி என்று அழைக்கப்படுவதை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை நிர்வகிக்க பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். டாமாசெக் ஹோல்டிங் லிமிடெட், அரச நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் அவற்றை வணிக அடிப்படையில் இயக்குவதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
பிரமாண்டமான கடன் சுமை மற்றும் வளரும் அந்நிய செலாவனி நெருக்கடியின் கீழேயே கொழும்பு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற முயன்றது. திருப்பி செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்கள் இந்த ஆண்டு 4.56 பில்லியன் டாலர்களாக அதிகரித்ததுடன் கடந்த ஆண்டு அந்நிய செலாவணி பற்றாக்குறை 1.5 பில்லியன் டாலர்களை அடைந்ததோடு 2015ல் வெளிநாட்டுக் கடன்கள் 44.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன. வெளிநாட்டு நாணய இருப்பு, ஜனவரி முதல் 1 பில்லியன் டாலர் கீழிறங்கி 6.3 பில்லியன்களுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
வெளிநாட்டு இருப்புக்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை குறைத்துவிட்ட உக்கிரமடைந்து வரும் உலக பொருளாதார பின்னடைவே ஆகும். ஒரு மில்லியனாக மதிப்பிடப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் வருமானம், மத்திய கிழக்கில் பெருகி வரும் போர் நிலைமை காரணமாக தொடர்ந்து வீழ்ச்சியடைகின்றது. இந்த வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு உயர்ந்த அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டித் தருபவையாக உள்ளன.
மத்திய வங்கியின் சமீபத்தில் வெளியான ஆண்டு அறிக்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2014ல் 4.9 சதவீதமாக இருந்து கடந்த ஆண்டு 4.8 சதவிகிதமாக குறைந்துவிட்டதை காட்டுகிறது. மூலதன பொருளாதாரம் ஆய்வாளர் கிறிஸ்டல் டான், அது இந்த ஆண்டு சுமார் 4.5 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று முன்கணித்துள்ளனர். இந்த "வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் மந்தகதியாகும் வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறினார்.
இலங்கையின் பெரும் வர்த்தகர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு பற்றி களிப்படைந்துள்ளனர். உத்தியோகபூர்வ அறிவிப்பால் கொழும்பு பங்குச் சந்தை 1 சதவீதம் எழுச்சி கண்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அரசாங்க அமைச்சர்கள், கடன் நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இராஜபக்ஷ போன்ற, தற்போதைய அரசாங்கமும் பெருகிவரும் வெளிநாட்டு கடன்கள் சிலவற்றை செலுத்த, கடந்த ஆண்டு நாணய பேரம்பேசல் மூலமும் அரசு இறைமை முறிகளை விற்றும் 6 பில்லியன் டாலர்களை கைமாற்றாகப் பெற்றுள்ளது.
2009 ஆம் ஆண்டில், இராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்த போது, அவரது அரசாங்கம் அந்திய செலாவணி நெருக்கடியை தடுப்பதற்காக 2.6 பில்லியன் டாலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனாகப் பெற்றது. சர்வதேச நாணய நிதியம் கடும் தாக்குதல்களை கோரியது. இதனால் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வை இராஜபக்ஷ முடக்கி வைத்ததோடு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது வரிகளை திணித்தார்.
2015 ஜனவரியில் பதவிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேன, வாஷிங்டன் ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை அடுத்து, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் ஜனநாயக உரிமைகளை மீண்டும் ஸ்தாபிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்து, இராஜபக்ஷவுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொண்டார்.
ஆட்சிக்கு வந்து 16 மாதங்களுக்குள், சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களின் பரந்த தட்டினரின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீது முன்னெப்போதும் இல்லாதளவு தாக்குதலை கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது. இந்த சமூக தாக்குதல்கள், தொழிலாள வர்க்கப் போராட்டங்களும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பும் வெடிப்பதை காணும்.
0 comments :
Post a Comment