Monday, May 16, 2016

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...

இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத் தமிழகத்துக் கலை வடிவங்களிலிருந்து கணித்துவிடவும் முடியும். அவை, கட்டியமைக்கும் போலிப் பிரமாண்டகள், வர்ணங்கள் , மனிதர்கள் யாவும் நமக்கு அந்நியப்பட்டவர்கள். ஆனால் , புலத்தின் இரண்டாம் தலைமுறைக்கேற்ற மாதிரி மனிதர்கள் அவர்கள்.

இன்று, கனேடியத் தமிழர்களைக் குறித்து நோக்குவோமானால் அவர்கள் இந்தப் பிரமாண்டங்களது சாட்சியான போலி மனிதர்களாக வாழ்வதும் , நுகர்வதும் - அதைத் தேடுவதிலும் , திணிப்பதிலும் கோடம்பாக்கப் போலிப் பிரமாண்டத்துக்கு நிகராய் நகர்வது கண்கூடு!

தமிழ் வாழ்வு , அவ் மொழிசார்ந்த வாழ்வு எவருக்கு ? "தமிழ் இன" விடுதலை , தேசம் என்பதெல்லாம் எவருக்கானது?

புலத்து வாழ்வானது அந்தத்தத் தேசத்து மொழிகளோடு சங்கமித்த பின் நினைவுக் கோலமாக "மாதிரி மனிதர்களை" உருவாக்கி வைப்பதற்கும் , சடங்குகள் செய்வதற்கும் கோடம்பாக்கப் பிரமாண்ட மாதிரிகள் மிகப் பெரும் கருத்தியல் மனதை புலத்து மனிதர்களுக்கு ஏற்படுத்தி விட்டது.

எனக்குத் தெரிந்தவொரு பெண்மணி கூறினார் : தற்போது, ஒரு விழாவுக்கு வேண்டிய புதிய சாறியை ஒரு முறை அணிந்துவிட்டு நாம் அதை எறிந்து விடுவோம். அடுத்த முறை, அதைக் கட்ட முடியாது. புதிய டிசையின் வரும். அதைத்தாம் கட்ட வேண்டும். " எனக்கு, இது முற்றிலும் புதிய விடையமாத் தெரிந்தது. பின்புதாம் நம் போலிப் பிரமாண்டத்தின் கோடம்பாக்கச் சூழ்ச்சி புரிந்தது. இதுதாம் இன்றைய யதார்த்தம்.

போராட்டம் , விடுதலை என்பதெல்லாம் வந்தடைந்த கோலமும் இப்படித்தாம் பிழைப்புவாதமாச்சு.

"தமிழீழ விடுதலை" சொல்லி , இலட்சக் கணக்கான பிணங்களாக மக்களை ஆக்கிவைத்து நிதி சேகரித்தவர்கள் எல்லோரும் தற்போது புலத்தில் பெரும் வணிகக் குடும்பங்களாக வலம் வருகிறார்கள். பிரமாண்ட மனிதர்களாகத் தம்மை உருவாக்கி வைத்து, நம்மை மனோவியல் ரீதியாகத் தாக்கி அழிக்கின்றார்கள்! தமக்கு முன் நம்மைச் செல்லாக் காசாக்கியும் விட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் , ஒரு தோற்பையோடு விமானம் ஏறி, அகதியாகப் பிழைக்கப்பட்ட வாழ்வு மக்களிடம் கொள்ளையிட்ட பணத்தின் மூலம் தொடைத்தெறியப்பட்டுப் பிரமாண்ட போலி மனிதர்களை -தனிநபர்வாத உச்சக் கொம்பர்களை ; கொம்பிகளை உருவாக்கியதுள் தமிழீழவிடுதலைப் போராட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது.அதையொட்டி இன்றைய இரண்டாந் தலைமுறை மகிழ்ந்துவிடலாம்!
அவர்கள் , கனடாவில் வைத்தியக்கும் நிதியானது மட்டும் பல இலட்சம் கோடி அமெரிக்க டொலாராக இருக்கிறது.

இவையெல்லாம் அப்பாவிகளிடம் "தமிழீழ விடுதலை" சொல்லித் தட்டிப்பறித்தவை என்பதுள் சந்தேகமில்லை!

இவர்களது விளம்பரப் பிரமாண்டங்கள் உருவாக்கும் கருத்தியலும் ( Tamil Entertainment Television (TET) )அதுசார்ந்த மனித மாதிரிகளும் மிக அற்பத்தனமான மனிதர்களை நமக்குள் உலாவிட்டுள்ளது.

"போராட்டம் -விடுதலை " என்பதெல்லாம் இந்த மனித மாதிரிகளுக்கு அவசியமற்றது. இவர்களது நாவில் போலித்தனமாக உறவாடும் இந்தக் கோசங்களைக் கடந்து, நிலத்தில் மனிதர்கள் இலங்கைத் தேசத்தின் வாழ்வுக்குள் நுழைந்தே தீருவார்கள்.

அவர்கள் , இலங்கையின் இறைமைக்குட்பட்ட வாழ்வையும் , அத்தேசத்துக்குள் பொருண்மிய வாழ்வுக்கானவொரு பொது மொழியாகச் சிங்களத்தையும் பேசித் தம்மை இலங்கையராக்கியே தீருவார்கள். இதுதாம் 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத் தேவையும் கூட.

பேர்லின் (Berlin) கணேச மூர்த்தி அவர்கள் கூறியமாதிரி :" இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் குடியேறிகளாகச் சென்ற தமிழ்தேசியவாதிகள் ,அந்த நாட்டுப் "பிரசைகளாக" ஆகிவிட்ட கொழுப்பெடுத்த யாழ்.மத்தியதர வர்க்கத் தமிழர்கள் , சோத்துக்கு வழி தேடக் கிழக்கில் குடியேறிய ஏழைச் சிங்கள மக்களை தமிழர்களின் நிலத்தைப் பறிக்க வந்தவர்களாகக் கற்பித்தனர். புகலிடத் தமிழர்கள் தாம் குடியேறிய நாடுகளில் ஐரோப்பியர், ஆபிரிக்கர், ஆசியர், லத்தீன் அமெரிக்கர் என்று உலகெல்லாம் உள்ள முன் பின் கேட்டுக் கண்டறியாத மக்களுடன் எல்லாம் வாழ்வார்கள். பல்லினக் கலாச்சாரத்துக்கு ஆட்படுவார்கள் ஆனால் , இலங்கையுள் சொந்த நாட்டுக்குள் மட்டும் சிங்களவர்களுடன் வாழ மறுக்கின்றார்கள். தொட்டால் , பட்டால் தீட்டு என்கிறார்கள். இந்த அநாகரீகர்களை மனித நாகரீகம் திருத்தியெடுக்க இன்னமும் எத்தனை சகாப்தங்கள் தேவை? ; "நாம் இலங்கையர் " என்று சிந்திப்பது என்ன , அத்தனை பெரிய துரோகமா? தமிழர், முஸ்லிம், சிங்களவர், பறங்கியர், வேடர் என்று எல்லா மக்களும் இலங்கையர் என்ற கூட்டுள் ஐக்கியப்படாமல் எப்படி சோசலிசம் வரும்? "

நிலத்து மக்கள் இலங்கைத் தேசியவின உருவாக்கத்துக் கேற்ப வாழ்வைத் தெரிவார்கள் -இனிப் போராட்டம் , விடுதலை என்பது இலங்கையில் தொழிலாளரது உரிமை சார்ந்த பொருளாதார வாதமாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye சொல்லிச் சிங்களச் சமுதாயத்தோடு கலந்து -இசைந்து ,இணைந்து இலங்கைத் தேசிய இனமாகவும் , பொதுமொழியான சிங்களத்தை முதன்மை மொழியாகவும் ஏற்றுக் கொள்வர். இது. ஒரு வகையில் சரியானதும் , நேர்மையானதும் -அவசியமானதுங்கூட இந்தப் புலத்துத் "தமிழர்கள்" தம் போலிப் பிரமாண்டத்தின் முன்!

ப.வி.ஶ்ரீரங்கன்
16.05.2016


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com