உதயத்துள் உதயம் : கிழக்கிலங்கை இளையோர் அமைப்பு.
கிழக்கிலங்கையை மையப்படுத்தி கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக உதயம் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவினை தொடர்ந்து உதயமாகிய உதயம் அமைப்பு கிழக்கிலங்கை மக்களின் துயர்துடைப்பதில் ஒர் குறிப்பிடத்தக்கதும் குறைகாணமுடியாததுமான பங்காற்றியிருக்கின்றது.
உதயம் அமைப்பின் வளர்ச்சி ஓர் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 01.05.2016 தொழிலாளர் தினமன்று கிழக்கின் இளையோரை ஒர் குடையின்கீழ் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்த அமைப்பு , இளையோரிடம் அதன் பணிகளை கையளித்துள்ளது.
இந்நிகழ்வு நேற்று பிற்பகல் Telli, Girixweg 12, 5000 Aarau எனும் விலாசத்திலுள்ள சனசமூக நிலையத்தில் திரு.சுந்தரலிங்கம், திரு.பரமேஸ்வரமூர்த்தி மற்றும் திருமதி இந்திரா ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
வரலாறு கண்டிராதவகையில் மண்டபத்தில் ஒன்று திரண்டிருந்த கிழக்கிலங்கை இளையோர் முன்னிலையில் தலைமையுரையாற்றிய திரு. தேவசகாயம் அவர்கள், உதயம் ஆரம்பித்து ஓர் யுகத்திற்கு பின்னர் ஓர் புதிய அத்தியாயமாக இளையோர் அமைப்பினை உருவாக்கியுள்ளோம். உங்கள் பணியினை நீங்கள் முன்னெடுத்துச்செல்ல நாம் பின்னிருப்போம் என உறுதியளித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய உதயத்தின் மூத்த உறுப்பினர் திரு. சுந்தரலிங்கம் பேசுகையில், மட்டு-அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்திய சேவையினையே உதயம் செய்து வந்தது. காலப்போக்கில் திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை விஸ்தரித்ததன் ஊடாக கிழக்கிலங்கைக்கானதோர் தனி அமைப்பு என்ற பரிணாம வளர்ச்சியை கண்டது. அவ்வளர்ச்சியின் வரலாற்றில் ஓர் புதிய பக்கமாக இன்று கிழக்கின் இளையோராகிய உங்கள் கைகளில் உங்களுக்கான பணிகளை கையளிப்பதில் உதயம் மட்டற்ற மகிழ்சி அடைகின்றது என்றார்.
மேலும் அங்கு உரையாற்றிய செயலாளர் திரு.வே.ஜெயக்குமார் உதயத்தின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் இளையோருக்கு விளக்கமளித்ததுடன் கிழக்கிலுள்ள தேவைகளையும் இளையோர் செய்யவேண்டிய சேவைகளையும் பட்டியலிட்டுக் கூறினார். மேலும் அத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வளங்களை இளையோர் அமைப்பு எவ்வாறு திரட்டிக்கொள்ள முடியும் என்ற ஆலோசனையை வழங்கியதுடன், இளையோர் அமைப்பு சுயாதீனமாக செயற்பட்டு நவீன அறிவு மற்றும் ஆற்றல்களை ஒன்றுகுவித்து கிழக்கு மக்களின் குறைகளை தீர்க்கும் ஆற்றல்மிகு கருவியாக உருப்பெறவேண்டும் என்றும் கிழக்கு மண்ணின் மைந்தர்களின் பெருமையை காக்கவேண்டும் என்றும் வேண்டுதல் விடுத்தார்.
அங்கு அவதானிக்கப்பட்ட உதயத்திற்கே உரித்தான பணியாதெனில், பொருலாளர் அவர்களால் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுக் கணக்கறிக்கை இளையோரிடம் கையளிக்கப்பட்டது.
நேற்றைய நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் பிரபல இசைக்குழுவொன்றின் இசைக்கச்சேரியும் அங்கு திரண்டிருந்த இளையோர் பெற்றோரை மகிழ்வூட்டின.
இளையோர்கள் குழுக்கள் குழுக்களாக எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நாடாத்திக்கொண்டிருந்தமை அவர்களது ஆர்வத்தை எடுத்தியம்பியது.
உதயம் அமைப்பானது அரசியல் கட்சிகளின் ஆழுகையில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி வந்திருக்கின்றது என்பது அதன் தனிச்சிறப்பம்சமாகும்.
0 comments :
Post a Comment